Saturday, August 20, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் !

அன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் !

-

மீண்டுமொரு விடுதலைப் போரை முன்னெடுப்போம்!
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்!
துரோகிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம்!

ன்பார்ந்த மாணவ நண்பரே,

உங்கள் படிப்புக்கு நடுவே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். மிக மிக அவசரமான, அவசியமான விசயத்தைப் பேச வேண்டியுள்ளதால் ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த பிரசுரத்தைப் படிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தன் உயிரைக் கருவாக்கி, ரத்தத்தைப் பாலாக்கி நமக்கு உயிரும், உருவமும் கொடுத்த தாயின் முக்கியத்துவம் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பெற்ற தாயை விட மேலாக நமது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, கருவறை முதல் கல்லறை வரை நமக்கு ஆதாரமாக தாங்கிப் பிடிக்கும் தாய்த்திருநாடு, நமக்கு எந்தளவு அவசியமென தெரியுமா?

தாய்த்திருநாட்டின் காற்று, நீர், மண், கனிமங்கள் ஆகியவை நாம் மனிதர்களாக வாழ்வதற்கு அவசியமானவை. இந்த பூவுலகில் நாம் தலை நிமிர்ந்து கவுரவமான மனிதர்களாக வாழ ஓரிடத்தைக் கொடுத்தது நம் தாய்த்திருநாடு தானே. இது இல்லாமல் போனால் நமது நிலை என்ன? தாயற்றவன், அனாதை; நாடற்றவன், அகதி.

உலகத்தில் நடப்பவைகளை சற்று உற்றுப் பாருங்கள். முள்கம்பி முகாமில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஈழ மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டை இழந்து அடிமைகளாக, சொந்த நாட்டில் இராக் மக்கள் வதைக்கப்படுகிறார்கள். உலக நாடுகளின் வளங்களை கைப்பற்றி அவற்றை தன் அடிமை நாடுகளாக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறிதான் இவற்றுக்கெல்லாம் காரணம். ஈழ மக்களைப் போல், ஈராக் மக்களைப் போல் நாமும் படிப்படியாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட வேண்டுமா? நம் நாடு ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்ற அதிர்வு உங்கள் மனதில் சிறிதளவாவது ஏற்படுமானால் தொடர்ந்து படியுங்கள்.

நம் நாட்டின் இயற்கை வளங்கள் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் முதலாளிகளாலும் அவர்களின் கூட்டாளிகளான அம்பானி, அதானி, டாடா, போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளாலும் வரைமுறையின்றி சூறையாடப்படுகின்றன. இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்ல, நமது வரிப்பணம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு மானியம், வரிச்சலுகையாக ஆண்டுக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் வாரி இறைக்கப்படுகிறது. ஆனால், இந்நாட்டின் குடிமக்களாகிய நமக்கு செய்யவேண்டிய சேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு கஜானா காலி என்று கையை விரிக்கிறது இந்திய அரசு. மக்களுக்குச் செய்யும் செலவைக் குறைக்க வேண்டும் என்று கட்டளை போடுகிறது உலகவங்கி, மறுப்பே இன்றி கல்விக்கும், விவசாயத்திற்கும், சிறு தொழிலுக்கும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டருக்குமான மானியங்களையும், சலுகைகளையும் வெட்டிச் சுருக்குகிறது; நமது உழைப்பை உறிஞ்சி எடுத்து அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு படையல் வைக்கிறது ஊதாரி அரசு.

கல்வி தனியார்மயம்
நமது இலவசக் கல்வி உரிமை பறிபோகிறதே அதற்கு யார் காரணம்?

நமது இலவசக் கல்வி உரிமை பறிபோகிறதே அதற்கு யார் காரணம்? கல்வியில் தனியார்மயத்தை புகுத்தி கல்வி ஒரு சேவை என்பதற்கு பதிலாக விற்பனை பண்டமாக்கிய இந்த அரசுதான். ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுக் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டே சீர்குலைப்படுகின்றன. கொள்ளைக் கூடாரமான தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்போல பெருகுகின்றன. இந்த அரசின் துணையோடு சாராய ரவுடி ஜேப்பியார், மோசடி மன்னன் எஸ்.ஆர்.எம் பச்சைமுத்து, வேல்டெக் ரங்கராஜன், வி,ஐ.டி விஸ்வநாதன் போன்ற கல்விக்கொள்ளையர்கள் புதிய ரக குட்டித் தரகுமுதலாளிகளாக வளர்ந்துள்ளார்கள். போதாக்குறைக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் எதிர்காலத் தலைவர்களான நம்மை தற்குறியாக்க ஒட்டுமொத்த கல்வித்துறையுமே ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கல்வித்துறை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இயற்கைச் செல்வங்களில் ஒன்றான, நிலக்கரி பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இரும்பை உருக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் இது அவசியம். இரும்பும், மின்சாரமுமின்றி தொழில்துறை இயங்க முடியாது. இவ்வளவு முக்கியத்துவமுள்ள நிலக்கரி நம் நாட்டில் அதிகளவில் உள்ளது. மண்ணுக்கு அடியில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான இந்த இயற்கையின் கொடையை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்த முடியுமென ஒரு காலத்தில் விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர்.

நிலக்கரி ஊழல்
நம் நாட்டின் நிலக்கரி வளம் இன்னும் 40 ஆண்டுகளில் முழுமையாக காலியாகி விடுமாம்.

ஆனால், தற்போதைய உண்மை நிலை என்ன தெரியுமா? நம் நாட்டின் நிலக்கரி வளம் இன்னும் 40 ஆண்டுகளில் முழுமையாக காலியாகி விடுமாம். பன்னாட்டு கம்பெனிகளும், அவற்றின் உள்நாட்டு கூட்டாளிகளான தரகு முதலாளிகளும் இந்த தாது வளத்தை வரைமுறையின்றி வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்து அழித்து வருகின்றனர். சமீபத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதில் ரூ 2 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஈரக்குலையை அறுத்தெறியும் இந்த தேச துரோக்கத்திற்கு இந்திய அரசுதான் பாதை போட்டுக் கொடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட தாது மணல் கொள்ளையை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். சாதாரண லஞ்ச ஊழல் பிரச்சனையைப் போல சித்தரிக்கப்படும் இந்த விசயம், உண்மையில் தேச துரோகம். தாது மணல் என்பது சாதாரண மணல் கிடையாது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையால் சேகரிக்கப்பட்டுள்ள அரிய செல்வம். உலகிலுள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் நமது நாட்டு கடற்கரைகளில் கிடைக்கிறது. இதிலும் பெரும் பகுதி தமிழ் நாட்டில்தான் உள்ளது. இதிலுள்ள கர்னெட் தனிமத்தைக் கொண்டு சாதாரண அழகு சாதன பொருட்கள் முதல் அணுசக்தி கப்பல் வரை செய்யலாம். இந்த இயற்கையின் கொடை வைகுண்டராஜன் என்ற தரகன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு விருந்தாக்கப்படுகிறது. அரசின் சட்டங்களும், காக்கிச் சட்டை ரவுடிகளும் இக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுக்கின்றன. இது போதாதென்று வைகுண்டராஜன் ஒரு அடியாள்படையே வைத்திருக்கிறான். இந்த அயோக்கியனுக்குத் தான் சிறந்த ஏற்றுமதியாளன் என்ற விருதை வழங்குகிறது மானங்கெட்ட அரசு.

தாது மணல் கொள்ளை
இயற்கையின் கொடை வைகுண்டராஜன் என்ற தரகன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு விருந்தாக்கப்படுகிறது.

வெறும் 1500 கோடி ரூபாய்களை மட்டும் கொண்டு வந்து தொழில் தொடங்கிய நோக்கியா, சுமார் 40,000 கோடிகளை லாபமாக அள்ளிச் சென்றுள்ளது. இந்த லாபம், நமது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்ததுதான். இதைக் கேட்கும் போது நமது ரத்தம் கொதிக்கிறதல்லவா?. ஆனால் ஆட்சியாளர்களோ, இதைத்தான் வல்லரசு, வளர்ச்சி, சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று ஊதிப்பெருக்குகிறார்கள்; நம்மையும் ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வறுமையில் வாடும் போது, பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளான ஒரு சிறு கும்பல் இந்நாட்டைக் கூறுபோட்டு கொள்ளையடித்து செல்வங்களை குவித்துக் கொள்வதை வளர்ச்சி என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கதவை எப்போதும் திறந்து வைத்து குஜராத்தை வேட்டைக்காடாக மாற்றியிருப்பதை; இக்கொடுமையை எதிர்த்துப் போராட முடியாத அளவுக்கு பாசிச சட்டங்கள் மூலம் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வருவதை மோடியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று வர்ணிக்க முடியுமா? கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டில் புகுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் இதைத்தான் சாதித்துள்ளன.

நோக்கியா தொழிலாளர் போராட்டம்
வெறும் 1500 கோடி ரூபாய்களை மட்டும் கொண்டு வந்து தொழில் தொடங்கிய நோக்கியா, சுமார் 40,000 கோடிகளை லாபமாக அள்ளிச் சென்றுள்ளது.

இப்படி நாட்டின் ஆணி வேரையே பிடுங்கி எறியும் இந்த சுரண்டலை அனுமதிக்க முடியுமா? முடியாது என்று இக்கொள்ளையால் நேரடியாக பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரங்களை இழக்கும் உழைக்கும் மக்கள் இதற்கெதிராக வட்டார அளவில் வீரம் செறிந்த போராட்டங்களை நாடு முழுவதும் நடத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் பன்னாட்டு கார் கம்பெனிக்கு விவசாய விளைநிலங்கள் தாரை வார்க்கப்படுவதற்கு எதிராக அரசின் துப்பாக்கி குண்டுகளை எதிர் கொண்டு போராடிய நந்திகிராம் விவசாயிகள் முதல் தமிழகத்தில் தாது மணல் கொள்ளைக்கெதிராக போராடி வரும் தூத்துக்குடி மீனவர்கள் வரை இதற்கு சிறந்த உதாரணங்கள்.

ஆனால், இக்கொள்ளைக்கெதிராக போராடும் விவசாயிகளையும், தொழிலாளிகளையும், மீனவர்களையும், பழங்குடி மக்களையும் அடக்கி ஒடுக்குகிறது இந்த அரசு. அவர்கள் மீது போலீசையும், ராணுவத்தையும் ஏவி வதைக்கிறது. மக்களை கொன்று குவிக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க பழங்குடி மக்கள் நடத்தும் போராட்டத்தை நசுக்க, மத்திய, மாநில அரசுகள் காட்டு வேட்டை என்ற பெயரில் ஒரு உள்நாட்டு யுத்தத்தையே நடத்தி வருகிறது. இந்த அரசின் வேலையே மக்கள் மீது அடக்குமுறை செலுத்தி அமெரிக்கா போன்ற வல்லரசுகள் நம் நாட்டின் வளங்களை கைப்பற்றிக் கொள்ள அடியாள் வேலை செய்வதுதான்.

சற்று கூர்மையாக பார்த்தால் இந்திய அரசின் சதிகள் புரியும். காட்சிகள்தான் மாறியுள்ளனவே யொழிய அடிமைத்தனம் மாறவில்லையென தெரியும். அன்று கவர்னர் ஜெனரல், இன்று பிரதமர். அன்று வெள்ளைத்தோல், இன்று கறுப்புத்தோல். ஆள்பவர்களின் நிறம் மாறியுள்ளது. ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை.

பகத்சிங்
மாணவர்கள், இளைஞர்கள் உணர்வைத் தட்டியெழுப்பி போராடினானே ஒரு இளைஞன், பகத் சிங். அவரைப் போல போராட வேண்டும்.

அன்று, நம் நாட்டைப் பிடிக்க வெள்ளைக்காரனுக்கு துப்பாக்கியும், தோட்டாவும், போரும் தேவைப்பட்டது. இன்று அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு பேனா, மை, ஒப்பந்தமே போதுமானது. அமெரிக்காவின் கந்துவட்டி கம்பெனிகளான உலக வங்கி .ஐ.எம்.எஃப் மற்றும் அதன் அடியாளான உலக வர்த்தகக் கழகமும் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு காட்( GATT) காட்ஸ் (GATS) ஆகிய ஒப்பந்தங்கள் மூலம் நம் தாய்த்திரு நாட்டை மீண்டும் அடிமையாக்கி, அதாவது மறுகாலனியாக்கி வருகிறது இந்திய அரசு. நம் நாட்டின் பொருளாதாரமே இவர்களுக்காகத் தான் கட்டி அமைக்கப்படுகிறதே யொழிய நமக்காக அல்ல. நாட்டின் அரசியலும், பொருளாதாரமும், பண்பாடும் அமெரிக்க எஜமானுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் தனக்கு விசுவாசமான, சிறந்த அடியாள்படையாக இந்தியாவை வைத்துக்கொள்ள 123 எனப்படும் இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை போட்டு நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் பறித்து வருகிறது.

மாணவ நண்பரே, கண்ணுக்குத் தெரியாமல் ஒப்பந்தங்கள் மூலம் நிறைவேற்றப்படும் இந்த புதிய அடிமைத்தனத்தைதான் மறுகாலனியாக்கம் என்கிறோம். இது நேரடி காலனியாக்கத்தை விட கொடூரமானது. சற்று சிந்தித்து பாருங்கள். கோடிக் கணக்கான ஆண்டுகளாக இயற்கை உருவாக்கி வைத்த நமது வளங்கள் வெட்டுக்கிளி கூட்டம் போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் அழிக்கப்படுகின்றன. நமது உழைப்பு, நமக்கும் நாட்டுக்கும் பயன்படாதபடி ஏகாதிபத்தியங்களால் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. நமக்காகவும், நமது நாட்டுக்காகவும் நாம் செலுத்தும் வரிப் பணம் முழுவதும் ஏகாதிபத்தியங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. நாட்டின் வளங்களையும், உழைப்பையும், வரிப்பணத்தையும் ஒட்டச் சுரண்டுவதன் மூலம் நம் நாடு எதிர் காலத்தில் எல்லா வளங்களையும் இழந்து மனிதர்கள் வாழ லாயக்கற்ற பாலை வனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் பெற்றெடுத்த கட்சியான காங்கிரசு மட்டுமல்ல, எல்லா ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும் மறுபேச்சின்றி தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. ஏகாதிபத்தியங்களிடம் இந்த நாட்டை அடகு வைக்கும் எட்டப்பர்கள்தான் ஓட்டுக்கட்சியினர் என்பது இப்போது புரிகிறதா? இவர்கள் நம்மை ஆள்வது சரியா? கார்ப்பரேட் முதலாளிகள் யாரை நோக்கி கை நீட்டுகிறார்களோ, அவர்களே எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்களாக அமர்ந்திருக்கும் சட்டமன்றத்தாலும், பாராளுமன்றத்தாலும் நமது பிரச்சனைகளை தீர்க்கத்தான் முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்கு வெளியில் இளைஞர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து மீண்டுமொரு தேசவிடுதலைப் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

வெள்ளையரிடமிருந்து நாட்டை விடுவிக்க 80 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்கள், இளைஞர்கள் உணர்வைத் தட்டியெழுப்பி போராடினானே ஒரு இளைஞன், பகத் சிங். அவரைப் போல போராட வேண்டும். அவரைப் போலவே, நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போல போராட வேண்டும். அந்த வீரர்களின் மரபை வரித்துக் கொண்டு, நாட்டை மறுகாலனியாக்கத்திலிருந்து விடுவிக்கவே மாணவராகிய உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

சீனா - மே 4 இயக்கம்
அடிமைச் சாசனத்தினை கேள்விபட்ட மாணவர் வர்க்கம் எரிமலையென குமுறியெழுந்தது

அன்பார்ந்த மாணவ நண்பரே, மாணவர்களின் வீரம் மகத்தானது. இது உலக வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இன்று நம் நாட்டை ஒப்பந்தங்கள் மூலம் அடிமைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முயற்சிப்பதைப் போலவே, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டை அடிமைப்படுத்த முயன்றன. 1919 –ல் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தும் ஒப்பந்தமொன்றில் சீன அரசு கையொப்பமிட்டது. இந்த அடிமைச் சாசனத்தினை கேள்விப்பட்ட மாணவர் வர்க்கம் எரிமலையென குமுறியெழுந்தது. நாட்டையே அடமானம் வைத்த அரசின் அலுவலகங்கள் 1919 மே 4-ம் நாள் அன்று மாணவர்களால் தாக்கப்பட்டன. தேசத் துரோக அமைச்சர்கள், அதிகாரிகள் அடித்து துவைக்கப்பட்டனர். குறிப்பாக, அடிமைச் சாசனத்தில் கையொப்பமிட்ட அமைச்சரின் வீட்டை மாணவர்கள் தாக்கினர். நாட்டை அடிமைப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அந்த தேசத் துரோகியின் கை உடைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சீன மாணவர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டுக்காக தங்களின் சுகங்களை தூக்கியெறிந்து தேச விடுதலைப் போரை தொடங்கி வைத்தனர். பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டு விடுதலை என்ற லட்சியத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தனர். விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தட்டியெழுப்பி விடுதலை போரை நடத்தி முடித்தனர். 1949 –ம் ஆண்டு ஏகாதிபத்தியங்களையும், அவற்றுக்கு தரகு வேலை பார்த்த தரகு முதலாளிகளையும் அவர்களை பாதுகாத்து நின்ற தேச துரோக அரசையும் முறியடித்து, சீன நாட்டை விடுவித்தனர். உலகிற்கே வழிகாட்டிகளாக மாறினர்.

நம் நாடு மீண்டும் அடிமைப்படுத்தப்படும் அதாவது, மறுகாலனியாக்கப்படும் சூழலில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கல்வி, வேலைக்கான உரிமையின்றி, தலை நிமிர்ந்து வாழும் உரிமையின்றி அடிமைகளாக அடங்கி, ஒடுங்கி மடியப் போகிறீர்களா? அல்லது சீன மாணவர்களைப் போல அடிமைத்தனத்தை தூக்கியெறிய நாட்டுப்பற்றுடன் போராடப் போகிறீர்களா? கோழைகளாக நடுங்கி சாகப் போகிறீர்களா? அல்லது நாட்டுப் பற்றாளர்களாக போராடி மக்கள் மனதில் வாழப் போகிறீர்களா?

நாடிழந்து அடிமையாக வாழ்வது அவமானம். விடுதலைக்கு போராடுவதே தன்மானம். சீன மாணவர்களைப் போல நாமும் விடுதலை போராட்டத்தின் கரு மையமாக மாறுவோம். மக்களை தட்டி எழுப்புவோம். மீண்டுமொரு விடுதலைப் போரை தொடங்கி வைப்போம். காட், காட்ஸ் ஆகிய அடிமைச் சாசனங்களைக் கிழித்தெறிவோம். மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம். அந்நியனிடமிருந்து,அவர்கள் கூட்டாளிகளிடமிருந்து, இவர்களின் கைக்கூலிகளிடமிருந்து நாட்டை விடுவித்து உலகிற்கே விடிவெள்ளியாக மாறுவோம்.

இது தாய்திருநாட்டின் விடுதலைக்கான அறைகூவல்; விடுதலைக்கான சாவி. இது உங்களின் உணர்வைத் தூண்டியிருந்தால், உடனடியாக கீழ்க்காணும் முகவரியை அல்லது தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். காத்திருக்கிறோம். உங்களோடு சேர்ந்து நாட்டின் அடிமைத்தனத்தை உடைத்தெறிய! மறுகாலனியாக்கத்தை முறியடிக்க.

இவண்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
944511 2675

 1. நாட்டை மீட் க மறுகாலனியாக்கத்தை ஒழிக்க ஓய்வின்றி போராடினால் மட்டுமே நாட்டை மீட் க்க முடியும்.மாணவர்களே! புறப்படு புரட்சிக்கு.கரம் நீட்டி காத்திருக்கிறோம் இணைந்து போரிட மறுகாலனியை முறியடிக்க வா….வா….தாய் நாட்டை கூறுபோடும் அரசையும் முதலாளிகளையும் கூறுபோட உனது இரத்தம் கொதிக்கவில்லையா? எழுந்து வா…மாணவ சமுதாயமே……….

 2. மாணவர்களை போராட அழைக்கும் முன்னால், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் தோழர்களை வேலையை விட்டு வர தூண்டவேண்டியது தானே???? நோக்கியா இங்கு சம்மாதிப்பது தான் தெரியுதா??? சுமார் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு 12 வருடங்களாக வேலை குடுத்தது தெரியவில்லையா? அல்லது சுமார் இருபத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் வரியாக செலுத்தியது தெரியவில்லையா, அல்லது அவர்களிடம் இன்னும் ஏழாயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது தெரியாதா??? முதல்ல கிராமங்களுக்கு பொய் அவனுங்கள பட்டணம் பக்கம் வரவேண்டாம்னு போராடு…..

  • நீ என்ன பட்டணத்திற்குப் பொறந்தவனா? கிராமப்புற மக்கள் உழைப்பையும் அவர்கள் விளைவிக்கும் பொருளையும் வக்கனையாக வாங்கித் தின்று, ஆனால் நவீன வசதிகள் அனைத்தையும் நீங்கள் மட்டுமே சுகமாக அனுபவித்து வாழும் நீ என்ன திமிரிருந்தால் எங்களைப் பட்டணம் வரவேண்டாம் என்று சொல்வாய்? உங்கப்பன் நோக்கியாவே கிராமத்திற்குத்தானடா வருகிறான். நீ தான் அமெரிக்காவிற்குப்போய் அங்கே பிச்சையெடுப்பியே, அதைச் செய்யவேண்டியதுதானே?

 3. அடங்கி ஒடுங்கி ஒதுங்கி வாழ்வதா மாணவர்களின் இயல்பு,
  வெள்ளையனை எதிர்த்து போராடி தூக்கு மேடை எறிய பகத்சிங்கின் வாரிசுகளல்லவா? நாம்…

  இயற்கைக்கு,மனித குலத்திற்கு
  எதிரான முதலாளித்துவ ஏகாதிபத்யத்தை
  தனியார்மயம்-தாராளமயம்
  உலகமயம் என்ற பெயரில்
  ஊட்டி வளர்கும் இந்த தேச துரோக அரசை எதிர்த்து போராட ஒன்றாக இணைவோம்!

 4. கல்வி வியபாரம்!
  குடிநீர் வியபாரம் !
  மருத்துவம் வியபாரம்!
  நிலங்கள் பரிக்கப்பட்டு நகரத்திர்க்கு விரட்டினார்கள் ஓடினோம்
  வீடுகளை பரித்துக்கொண்டு நகரத்தைவிட்டு விரட்டுகிறர்கள் இனி எங்கு ஓடுவது ஓடினாலும் ஒண்டுவதர்க்கு இடமில்லை ஓடுவதை நிறுத்து திரும்பிபார் மாணவர் சமூதாயம் பு.மா.இ.மு உடன் இணைந்து அணிவகுத்து வருகிறது உன்னை இணைத்துக்கொள் உண் பிறச்சனை மட்டும்மின்றி இந்த சமூகத்திர்க்கும் தீர்வு கிடைக்கும் .

 5. பகத்சிங் வாரிசுகளே..!
  மருத்துவ நூல் மருந்துகளின் நன்மைக்காக இல்லை,உடலின் நன்மைக்காக உள்ளது.
  அதுபோலவே ஆட்சி புரியும் கலை ஆள்பவர்களின் நன்மைக்காகவே இல்லை, ஆளப்படுகின்ற மக்களின் நன்மைக்காகவே இருக்கவேண்டும்…

  இந்த உலகம் கம்யூனிசத்திற்க்காக ஏங்குகிறது மாணவர்களே, வாருங்கள் பு.மா.இ.முடன் ஒருங்கினைந்து மீண்டும் ஒரு சுதந்திரப்போரை தொடருவோம்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க