Tuesday, May 28, 2024
முகப்புஉலகம்இதர நாடுகள்மண்டேலாவின் மறுபக்கம் !

மண்டேலாவின் மறுபக்கம் !

-

ருப்பினப் போராளியாகச் சித்தரிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா, கடந்த டிசம்பர் 5-ஆம் நாளன்று மறைந்துவிட்டார். நிறவெறிக்கு எதிராகவும் கருப்பின மக்களின் விடுதலைக்காகவும் அறவழியில் போராடி, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிய பெரும் தலைவர்” என்றும், கருப்பின மக்களின் உணர்வுபூர்வமான தலைவர்” என்றும் ஏகாதிபத்தியவாதிகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவராலும் அவர் போற்றப்படுகிறார்.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா : போராளியா? ஏகாதிபத்திய விசுவாசியா?

நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பினத் தலைவர் என்பதை வைத்து அவரது தியாகத்தைப் பலரும் போற்றுகின்றனர். எனில், எல்லோராலும் உன்னதமான மனிதராகப் போற்றப்படும் மண்டேலாவை எவ்வாறு மதிப்பிடுவது? மண்டேலா விடுதலையான சமயத்திலும் அதன் பின்னரும் வரலாறு எதைக் கோரியது, அதற்கு அவர் என்ன பங்காற்றினார், அதில் அவர் சாதித்தது என்ன என்பதை வைத்து அவரை மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும். மாறாக, ஒருவரது கடந்தகால சேவையையும் தியாகத்தையும் மட்டுமே வைத்து மதிப்பிடுவதென்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

1980-களின் இறுதியில் நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கருப்பின மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு உலக அளவில் அம்பலப்பட்டதோடு, சோவியத் ஒன்றியமும் அதன் ஆதரவு நாடுகளும் அணிசேரா நாடுகளும் தென்னாப்பிரிக்காவைத் தனிமைப்படுத்திப் பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தன. இந்நிலையில், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தையும் மண்டேலா அங்கம் வகித்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசையும் ஆதரித்து வந்த சோவியத் ஒன்றியம் 1990-களின் தொடக்கத்தில் வீழ்ச்சியடைந்து, அங்கே முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டது.

சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர், உலக மேலாதிக்கப் போட்டியில் முன்னிலைக்கு வந்த அமெரிக்க வல்லரசு, சோவியத் பாணி ஜனநாயகத்துக்கு மாற்றாக தனது பிராண்டு ‘ஜனநாயகத்தை’ முன்னிறுத்தி, தனது மேலாதிக்கத் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் வேகமாகக் காய்களை நகர்த்தியது. அதன்படியே, தென்னாப்பிரிக்க நிறவெறி பாசிச போத்தாவின் ஆட்சியை அகற்றி விட்டு, ‘ஜனநாயகம் – மனித உரிமை’ என்ற முற்போக்கு முகமூடியணிந்த டி கிளார்க் ஆட்சியை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் ஏற்படுத்தினர். கிரிஸ் கனி போன்ற கம்யூனிசத் தலைவர்களைப் படுகொலை செய்தும், சோவியத் சார்பிலிருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை கம்யூனிஸ்டுகளிடமிருந்து பிரித்தும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடன் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் சமரச உடன்பாட்டுக்கு வந்தனர். ஏகாதிபத்திய உலகிலும்கூட சமத்துவமும் ஜனநாயகமும் சாத்தியம்தான் என்ற மாயையை உருவாக்கும் திட்டத்துடன் காய்களை நகர்த்தினர். அதற்கான அடையாளமாக மண்டேலாவை முன்தள்ளினர்.

மரிக்கானா படுகொலை
கூலி உயர்வுக்காகப் போராடியதால், கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பினச் சுரங்கத் தொழிலாளர்கள். (கோப்புப்படம்).

1990 பிப்ரவரியில் மண்டேலாவை விடுதலை செய்தும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் மீதான தடையை நீக்கியும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அழைத்தார், அன்றைய தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் அதிபரான டி கிளார்க். அதன்படி, ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஒப்புக்கொண்டு நிறவெறி அரசுடன் சமரச ஒப்பந்தம் போட்டார் மண்டேலா. அதைப் பயன்படுத்திக் கொண்டு அங்கே ஒரு தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ அடிவருடி அரசை நிறுவிக் கொள்ள முயன்ற மேலை ஏகாதிபத்தியங்கள் அதில் வெற்றியும் பெற்றன.

1947-இல் இந்தியாவில் நடந்ததைப் போன்றே, முந்தைய நிறவெறி அரசால் கட்டியமைக்கப்பட்ட அரசு எந்திரமும், ஆட்சியும் அப்படியே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் கரங்களுக்கு மாற்றப்பட்டது. நம்நாட்டில் தீண்டாமைக் கொடுமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டதைப் போலவே, தென்னாப்பிரிக்காவிலும் நிறவெறிக் கொடுமை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம்,தென்னாப்பிரிக்காவின் தங்க – வைரச் சுரங்கம் முதல் இதர கனிம வளச் சுரங்கங்களும், வங்கி, வர்த்தகம் முதலான அனைத்தும் வெள்ளை முதலாளிகளின் இரும்புப் பிடியிலேயே இருந்தன.

சிறையிலிருந்து விடுதலையான மண்டேலா, “வெள்ளையின ஆதிக்கம், கருப்பின ஆதிக்கம் – எனும் இரண்டுவகை ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்! கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான தென்னாப்பிரிக்காவைக் கட்டியமைப்போம்!” என்ற கொள்கையை அறிவித்தார். தென்னாப்பிரிக்காவில் யார் ஆதிக்கம் செய்தார்கள், செய்கிறார்கள் என்பதையே மூடிமறைத்து, கருப்பின மக்களின் அரசியல் உரிமையை மறுத்து, வெள்ளையினச் சிறுபான்மையைத் தாஜா செய்யும் வகையில் இம்மோசடிக் கொள்கையை அவர் பிரகடனப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடன் அவர் பூரிப்புடன் கைகோர்த்துக் கொண்டார். இல்லையானால், அவர் தென்னாப்பிரிக்க அதிபராகியிருக்கவே முடியாது. இந்த ஏகாதிபத்திய விசுவாசத்திற்காகவே அவருக்கும் அன்றைய தென்னாப்பிரிக்க அதிபர் டி கிளார்க்குக்கும் ஏகாதிபத்திய உலகம் நோபல் பரிசைப் பகிர்ந்தளித்தது. திட்டமிட்டே அவர் மீதான வழிபாடு ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டது.

1994 முதல் 1999 வரை அதிபராக இருந்த மண்டேலா, வெள்ளையின பெருமுதலாளிகளின் ஆலைகளையும் வங்கிகளையும் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. நிறவெறி ஆட்சிக் காலத்தில் தங்கள் நிலங்களை இழந்திருந்த கருப்பின மக்கள், மண்டேலா ஆட்சிக்காலத்தில் கூட அவற்றை மீட்கவும் முடியவில்லை. “நிலமும் கனிம வளமும் இந்நாட்டின் கருப்பின மக்களுக்கே சொந்தம்” என்ற முழக்கத்தோடு, ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான ராபர்ட் முகாபே மேற்கொண்ட மேலோட்டமான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூட மண்டேலா தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.

மண்டேலா ஆட்சியின் மகிமை
மண்டேலா ஆட்சியின் மகிமை

நிறவெறிக் கொடுமையால் கருப்பின மக்கள் கொடூர சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளான தென்னாப்பிரிக்காவில், ‘வெள்ளை நிறவெறிக் கொடுங்கோலர்களுடன் இனி சமாதானத்துடன் அமைதியாக வாழ்வோம்’ என்பதே மண்டேலாவின் மோசடிக் கொள்கையாக இருந்தது. அவரது ஆட்சியில், நிறவெறி பாசிசக் கொடுங்கோலர்களுக்குத் தண்டனை ஏதும் கிடையாது என்பதை முன்நிபந்தனையாகக் கொண்ட “உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான விசாரணை மன்றம்” அமைக்கப்பட்டது. இதனால், போத்தா போன்ற நிறவெறி அரசு பயங்கரவாதிகள் முதல் படுகொலைகளை அரங்கேற்றிய வெள்ளையின நிறவெறிக் காட்டுமிராண்டிகள் வரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவுமில்லை.

“கருப்புச் சிங்கம்” என்று சித்தரிக்கப்பட்ட மண்டேலா, தனியார்மய – தாராளமயமாக்கலை விசுவாசத்துடன் செயல்படுத்தி, அவரது ஆட்சிக் காலத்திலேயே சாயம் வெளுத்துப் போனார். பொதுப் போக்குவரத்து, மின்சாரம் முதலான அரசுத்துறைகளைக்கூட அவர் தனியார்மயமாக்கினார். உலக வங்கித் திட்டப்படி தண்ணீரைக்கூட அவர் தனியாருக்குத் தாரை வார்த்து, கருப்பின மக்களின் தலையில் கொள்ளி வைத்தார். அவரது ஆட்சியில், முன்பணம் கட்டி மீட்டர் பொருத்தினால்தான் தண்ணீர் தரப்படும் என்று “சூயஸ்” முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் பகற்கொள்ளையில் இறங்கியதால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் காலரா பரவி கொத்துக்கொத்தாக மக்கள் மாண்டு போயினர்.

தனியார் முதலாளித்துவக் கொள்ளையர்களால் ஆப்பிரிக்க மக்கள் சூறையாடப்பட்டனர். தனியார்மயத்தால் அரசாங்கமே ஊழல்மயமாகிப் போனது; வேலையின்மை தீவிரமானது. குறிப்பாக, சுரங்கத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வேலையிழந்தனர். மறுபுறம், மண்டேலா புகுத்திய தனியார்மய – தாராளமயக் கொள்கையால் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து பொறுக்கித் தின்னும் புதியவகை கருப்பின தரகு முதலாளிகள் உருவாகி வளர்ந்தனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் கோடீசுவரத் தலைவர்களாகவும், ஏகாதிபத்தியக் கைக்கூலிகளுமான தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, துணை அதிபர் சிரில் ராமபோசா முதலானோரே இதற்குச் சாட்சியமாக உள்ளனர்.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை விலையிலான மருந்துகளை வாங்க முடியாமல் எய்ட்ஸ் நோயால் தென்னாப்பிரிக்கா பரிதவித்தபோது, இந்தியா போன்ற நாடுகள் மலிவு விலையில் மருந்து கொடுக்க முன்வந்த நிலையில், அதை ஏகாதிபத்தியவாதிகள் “காட்” ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை விதிகளைக் காட்டித் தடுத்தபோது கூட, மனிதாபிமானமற்ற இக்கொள்ளையர்களை மண்டேலா எதிர்க்கவில்லை. எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கியதோடு, அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட பன்னாட்டு ஏகபோக “ஷெல்” எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய பிரபல கருப்பின மனித உரிமைப் போராளியும் கவிஞருமான கென் சரோ விவாவை நைஜீரிய சர்வாதிகார அரசு 1995-இல் தூக்கிலிட்டுக் கொன்றபோது, அதற்கெதிராகக் கண்டனம் தெரிவிக்கக்கூட மண்டேலா முன்வரவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டில் மரிக்கானா சுரங்கத்தில் கூலியுயர்வுக்காகப் போராடிய கருப்பின மக்கள், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசின் போலீசுப் படைகளால் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது கூட, அவர் வாய் திறக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவில், நிறவெறி ஆதிக்கத்தின் ஊடாகத்தான் வர்க்க ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வர்க்க ஒடுக்குமுறையின் ஊடாகத்தான் நிறவெறி ஆதிக்கமும் சாதிய ஆதிக்கமும் இயங்குகிறது. இருப்பினும், வர்க்க அரசியலால் நிறவெறிக் கொடுமைக்குத் தீர்வு காண முடியாது என்று கூறிக் கொண்டு, நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தை அடையாள அரசியலாக்கி, வர்க்கப் போராட்ட அரசியலை எதிர்க்கும் திருப்பணியை ஏகாதிபத்தியவாதிகளும் தன்னார்வக் குழுக்களும் மேற்கொண்டபோது, அதற்கான அடையாளமாக மண்டேலா தூக்கி நிறுத்தப்பட்டார். வர்க்க ஒடுக்குமுறையைத் தீவிரமாக்கியதுதான் அவரது பங்களிப்பாகிப் போனதோடு, இத்தகைய அடையாள அரசியலின் படுதோல்விக்கு மண்டேலாவே முன்னுதாரணமாகி நிற்கிறார்.

அவரது விடுதலைக்காகப் போராடிய உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், அமெரிக்காவின் ஆப்கான், இராக் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும் போராடினர். ஐந்தாண்டு காலம் அதிபராகப் பதவியில் நீடித்த மண்டேலா, அடுத்து வந்த தேர்தலில் போட்டியிடாமல் பொது வாழ்விலிருந்தும் ஒதுங்கிக் கொண்ட காலத்தில்தான் அமெரிக்காவின் இம்மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போர்கள் நடந்தன. ஆனால், மண்டேலா ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்காமல், ஏகாதிபத்தியவாதிகளின் பக்கம் நின்றதோடு, இக்கொடிய ஆக்கிரமிப்புப் போர்களின்போது செயலற்ற வெறும் பார்வையாளராகவே இருந்தார்.

1960-களில் காங்கோவில் பெல்ஜிய காலனியாதிக்கத்தை எதிர்த்து பாட்ரீஸ் லுமும்பாவும், கென்யாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து ஜோமோ கென்யட்டாவும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வெற்றியை ஈட்டிய வரலாறு அவரது கண்ணெதிரே இருந்தது. அவர் சிறையிலிருந்த காலத்திலும், விடுதலையான காலத்திலும் கினியா பிசாவ், அங்கோலா, மொசாம்பிக் முதலான நாடுகளில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்று, ஆயுதப் போராட்டப் பாதையில் முன்னேறி, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய சாதகமான நிலைமையும் இருந்தது. ஒரு தலைவர் என்ற முறையில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பும் கடமையும் இருந்தபோதிலும், அவர் உணர்வுப் பூர்வமாக அறிந்தே அவற்றைத் தவிர்த்தார்.

அவர் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் அதற்குப் பலியாகி விட்டார் என்றும் கூற முடியாது. தெரிந்தேதான் அவர் ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை விசுவாசத்துடன் ஆதரித்தார். இதனால்தான், ஸ்டீவ் பிகோ போன்ற கருப்பினப் போராளிகள் கொல்லப்பட்டும் சிறையிடப்பட்டும் மாண்டுள்ள போதிலும், மண்டேலாவை மட்டுமே ஏகாதிபத்திய உலகம் போற்றிப் புகழ் பாடுகிறது. அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்தியாவின் காந்தியைப் போல, இன்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளுக்கு அகிம்சாமூர்த்தியாக மண்டேலா விளங்குகிறார். எவ்வாறு பாசிச எம்.ஜி.ஆரை வள்ளலாகவும் மனித நேயராகவும் சித்தரிக்கின்றனரோ, அவ்வாறே எல்லோருக்கும் நல்லவராகவும், வர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைதி வழியிலான போராளியாகவும் அவர் சித்தரிக்கப்படுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தமது ஆதிக்க நோக்கங்களுக்காக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டதற்கு மேல், மண்டேலாவின் நீண்டகால சிறைவாசமும் தியாகமும் வேறொன்றையும் சாதிக்கவில்லை. ஏகாதிபத்தியங்களால் நிறுவனமயமாக்கப்பட்டு அதற்கு தன்னைத்தானே ஒப்புக்கொடுத்ததற்கு மேல் மண்டேலா எதையும் சாதிக்கவுமில்லை. கசப்பானதாக இருந்தாலும் இதுதான் உண்மை!

– பாலன்
_________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_________________________________

 1. இந்தியாவின் துரோகி காந்தி
  தென்னாப்பிரிகாவின் துரோகி நெல்சன் மண்டேலா

 2. என்னாது எமஜியாரு வள்ளலா…………………..கொக்கா…மக்கா… மனித நேயமிக்கவரா……..அய்யோ அம்மா……….

 3. பரவாயில்ல வினவு… ஒங்க சர்டிபிகேட் தேவையில்லைன்னு நெனச்சிருக்கலாம்… அதுவுமில்லாம ஒங்க product பெரிய அளவு மேற்படி நாட்டில sales ஆவுல… அதனால ஒங்க விமர்சனம் ரொம்ப சீரியசா எடுத்துக்க முடியல… சாரி.. (அது சரி இத வெளியிடுவிங்களா.. இல்ல அநாகரீக பின்னூட்டம்னு தூக்கிருவிங்களா…?

 4. சார் லெனின், மார்க்ஸ், ஸ்டாலின் போன்றவர்களின் மறுபக்கத்தை எழுதலாமே.. அவர்களின் மறுபக்கம் அறிந்துதான் அந்த ஊருமக்களே அவர்களை தூக்கி போட்டுவிட்டார்கள்.. நீங்க மட்டும் தான்லெனின் ஸ்டாலின்னு தொங்கிகிட்டு இருக்கிங்க…

  • /லெனின், மார்க்ஸ், ஸ்டாலின் போன்றவர்களின் மறுபக்கத்தை எழுதலாமே/
   அப்படியா! சரி அவர்களின் மறுபக்கத்தை கூறுங்களே, நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

   /அவர்களின் மறுபக்கம் அறிந்துதான் அந்த ஊருமக்களே அவர்களை தூக்கி போட்டுவிட்டார்கள்/

   என்னது தூக்கி போட்டு விட்டார்களா? வரலாறு கொஞ்சமாவது தெரியுமா, தெரியாத?

   / நீங்க மட்டும் தான்லெனின் ஸ்டாலின்னு தொங்கிகிட்டு இருக்கிங்க…/

   உலகில் எல்லா மக்களும், விடுதைகாக ஏங்குகிறார்கள், எங்கும் போராட்டம் தான் அதற்கான தீர்வு, காரணம் என்ன ராசா?

   வேறெங்கும் போக வேண்டாம் இங்குள்ள ஒரு முதலாளித்துவ பத்திரிகை எழுதியதையாவது படிங்க…

   லெனின் உலகை வலம் வருகிறார். / கருப்பு, வெள்ளை, பழுப்பு / எல்லா நிறத்தவரும் அவரை வரவேற்கின்றனர். / மொழி தடையே அல்ல. / அவரை அரிதினும் அரிதான மொழியைப் பேசுபவர்களும் நம்புகின்றனர்…….
   http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/article5599763.ece

 5. R Chandrasekaran,

  உங்க பின்னூட்டத் கூட அப்படி அவிங்க நினைக்கலாமில்லயா?

  மற்றபடி அவர பத்துன விமர்சனுத்துதல உங்க கருத்து என்ன?

 6. உலக உழைக்கும் மக்களை உருகுலைத்த கொடுங்கோலன் ‘பாசிச இட்லரை’ வீழ்த்தியது யார்? முதலாளித்துவமா? கம்யூனிசமா?
  உலகமே அறியும் பாசிச இட்லரிடமிருந்து உலகை காத்தது சோவியத் ரஷ்யாவின் செம்படை என்று … தோழர் ஸடாலினை
  தூற்றி கம்யூனிச
  எதிர் முதலாளித்துவ கருத்துக்களுக்கு பழியாகும் தோழர்களே புரிந்து கொள்ளுங்கள்.

 7. அதுசரி நீங்கள் யாரையேனும் புகழ்ந்தால் தான் அது தலைப்புசெய்தி

  • நாம் யாரையும் புகழவும் கூடாது, திட்டவும் கூடாது இது இரண்டும் முட்டாள் தனம். எதையும் விமர்சனமாக மட்டும் தான் பார்க்க வேண்டும். விமர்சனமாக பார்க்கும் பொது உண்மை என்னவோ அதை தான் சொல்ல முடியும்.

   நான் சொல்லுவது புரியவில்லை என்றால் இந்த குறளை உங்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கிறேன்…

   எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க