privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?

பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?

-

ந்த நாட்டின் மொத்த ஆண்டு வருமானம் $2.68 லட்சம் கோடி (ரூ 53 லட்சம் கோடி). அதாவது நாட்டு மக்கள் தொகையான 5 கோடி பேருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக $50,000 (ரூ 12 லட்சம்) வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, அந்த நாடு உலகிலேயே 7-வது பணக்கார நாடு.

அந்த ஊரில் டிசம்பர் மாதம் குளிர் -7 டிகிரி வரை சென்று நடுங்க வைத்து விடும். வீடு ஒன்று இருந்தால், அந்த நடுக்கும் குளிரில் வீட்டை சூடுபடுத்தும் கணப்புகள் இருந்தே தீர வேண்டும்.

அந்நாட்டு மக்களுக்கு அது பெரிய கவலையாக இருக்க வேண்டியதில்லைதான். வயிற்றுக்கு உணவிடும் கவலையை விட குளிர் மோசமில்லை. மிகவும் முன்னேறிய நாடு; முதலாளித்துவத்தின் பிறப்பிடம்; 400 ஆண்டுகளாக முதலாளித்துவத்தை பயின்று, வளர்த்து; உலகெங்கும் பரப்பிய நாடு. தன் சொந்த நாட்டில் ஒரு 5 கோடி மக்களுக்கு சோறு போடுவதும், தங்க இடம் கொடுப்பதுமா பிரச்சனை!

16 வயதானதும் சுயசார்புடன், “மேல்படிப்பு படிக்க வேண்டுமா, வேலைக்குப் போக வேண்டுமா” என்று தாமே முடிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் சமூகம். வயிற்றுக்குச் சோறும், குளிர் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வீடும், நண்பர்களுடன் வெளியில் போகும் போது செலவை பகிர்ந்து கொள்ளவும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.

ஜேக் மன்ரோ
ஜேக் மன்ரோ

இத்தகைய சிறப்புடைய இங்கிலாந்து நாட்டில் ஒரு தீயணைப்பு வீரருக்கு மகளாக பிறந்தார் மெலிசா மன்ரோ. சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மெலிசா (தேனீ) என்ற பெயருக்கும் தனது வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போய் விட அந்தப் பெயரை துறந்து ஜேக் மன்ரோ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மெலிசா உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று படிக்கப் போனாலும் படிப்பை முடிக்க முடியாமல் 16 வயதிலேயே வேலைக்குப் போகிறார். உணவு விடுதிகளிலும், கடைகளிலும் பணியாளராக வேலை செய்த பிறகு அவசர உதவித் துறையின் (தீயணைப்பு, விபத்து, மருத்துவம்) ஒருங்கிணைப்பாளராக அவருக்கு வேலை கிடைக்கிறது. ஆண்டுக்கு $44,000 சம்பளத்தில் நடுத்தர வாழ்க்கையின் பாதுகாப்பை அடைந்திருந்தார்.

மேற்கத்திய நடுத்தர வாழ்க்கையின் வசதிகள் அனைத்தும் அவரிடம் இருந்தன. இரண்டு அறை கொண்ட வாடகை வீடு, ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி என்று நவீன வாழ்க்கையை வரையறுக்கும் பொருட்கள் அனைத்தும் குவிந்திருந்தன.

நவம்பர் 2011-ல் குழந்தை பேறுக்கான விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய அவர், சிறு குழந்தையை பராமரிக்க வேண்டியிருப்பதால் இரவு நேர பணியில் இருந்து விலக்கு கோரினார். அது நிராகரிக்கப்பட்டதால், வேறு வழியின்றி அந்த வேலையை விட்டு விலகி வேறு பகல் நேர வேலை தேடத் தொடங்கினார்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை 2012-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அவர் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.

========

இன்றைக்கு 14 வேலை விண்ணப்பங்களை அனுப்பி வைத்தேன். வீட்டு வேலைக்கு, கடை வேலைக்கு, தொழிற்சாலை வேலைக்கு என்று எதுவாக இருந்தாலும் ஒரு ஜூராசிக் கால புராதன மொபைல் போனில் விண்ணப்பங்களை டைப் செய்து அனுப்பி வைத்தேன். குறைந்தபட்ச ஊதியம்தான் கிடைக்கிறதா, எந்த வகை வேலை என்றெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றுக்கும் அனுப்பி வைத்தேன். ஏனென்றால், இப்போதைய நிலைமையில் இப்படியே தொடர்வது வேலைக்கு ஆகப் போவதில்லை.

ஜேக் மன்ரோ மகனுடன்
ஜேக் மன்ரோ மகனுடன்

புரியாத ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த மாத வீட்டு வசதி உதவித் தொகை 100 பவுண்டுகள் குறைக்கப்பட்டிருந்தது. இது குறித்து எந்த கடிதமும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், மார்ச்சிலிருந்து மே வரை மூன்று மாதங்களுக்கு நான் தற்காலிகமாக கிடைத்த வேலைக்குப் போனதை ஒட்டி நிவாரண உதவி வழங்கும் பல அலுவலகங்களில் ஏதோ ஒன்றில் நடந்த குளறுபடியாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் 438 பவுண்டு வீட்டு உதவித் தொகையிலிருந்து 670 பவுண்ட் வாடகை கொடுக்க முடியாதுதான். அதனால், ஒரு வாரம் வாடகை பாக்கி. வியாழக்கிழமை வந்தால் அடுத்த வார வாடகை 167.31 பவுண்டு கொடுக்க வேண்டிய கெடுவும் வந்து விடும். ஆனால் பணம் வர வேண்டியது ஒன்றும் இல்லை.

வேலை இல்லாதோர் வருமான உதவித் தொகை சிறிது காலத்துக்கு வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது, குழந்தை வளர்ப்புக்கான உதவித் தொகையும் உதவுகிறது.

இப்போது பிரச்சினை வாடகை பாக்கி மட்டுமில்லை. நேற்று இரவு ஃபிரிட்ஜை திறந்தால் முந்தைய நாள் செய்த கொஞ்சம் தக்காளி பாஸ்தாவும், ஒரு வெங்காயமும், ஒரு துண்டு இஞ்சியும் மட்டும்தான் மீந்திருந்தன. மகனுக்கு பாஸ்தாவைக் கொடுத்து விட்டு, பசி வதையை மறப்பதற்கு இஞ்சி டீ குடித்து விட்டு தூங்கப் போனேன். .

இன்று காலை, குட்டிப் பையனுக்கு சாப்பிட வீட்டாபிக்சின் கடைசித் துண்டை தண்ணீரில் கரைத்து கொடுத்து குடிக்க ஒரு டம்ளரில் வைத்தேன். ‘மம்மிக்கு சாப்பாடு எங்கே?” என்று தன பெரிய நீல நிறக் கண்களை உயர்த்தி இரண்டு வயது குழந்தையின் கரிசனத்தோடு அவன் கேட்கிறான். “பசியில்லை” என்று நான் சொல்லும் பொய்யை வயிற்றிலிருந்து கேட்கும் கட முடா சத்தம் காட்டிக் கொடுக்கிறது. ஆனால், இது போன்ற பொய்களை சொல்லத்தான் நாம் பழகியிருக்கிறோம்.

உணவு மேசையில் உட்கார்ந்து, பேப்பரும் பென்சிலும் வைத்து பட்டியல் போட ஆரம்பிக்கிறேன். இப்போது இருப்பவை எல்லாமே, ஆண்டுக்கு 27,000 பவுண்டுகள் ($42,000) சம்பாதித்த போது, செலவழிப்பதற்கு கையில் காசு இருந்ததாக நினைவில் எஞ்சியிருக்கும் காலத்தில் வாங்கியவை அல்லது அதற்குப் பிறகு கருணை உள்ளமும் தாராள மனமும் படைத்த நண்பர்களால் தரப்பட்டவை. அவற்றில் பெரும்பகுதி ஏற்கனவே மறைந்து விட்டிருக்கின்றன. தீயணைப்புத் துறை வேலையை விட்டு நின்ற பிறகு முதலில் கையை விட்டுப் போனது 21-வது பிறந்த நாள் பரிசான ஒமேகா கைக்கடிகாரம். ‘கையில் ஒமேகா கடிகாரம் கட்டிக் கொண்டு ஏழ்மை பற்றி பேச முடியாது’ என்று அப்போது நினைத்தது இப்போது கைவசம் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் பொருந்துகிறது.

ஜேக் மன்ரோ மகனுடன்
கடைசியில் 2 தட்டுகள், 2 கிண்ணங்கள், 2 டம்ளர்கள், 2 கப்புகள், 2 கத்திகள், 2 முள் கரண்டிகள், 2 கரண்டிகள் மட்டும் மிஞ்சுகின்றன.

ஒருவரை அவரது பணியைச் சொல்லி (இது சூசன், அவர் ஒரு வழக்கறிஞர், இவர் மேக்ஸ், ஒரு கட்டிட வடிவமைப்பாளர்) அல்லது அவரது கார் எண் அல்லது கார் பிராண்ட் அல்லது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியின் திரை அளவு அல்லது அது 3Dயா அல்லது எச்டியா அல்லது ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி உள்ளதா என்பதன் அடிப்படையில் மதிப்பிடும் இந்த உலகில் நான் நண்பர்களின் அன்பினாலும், தாராள மனத்தினாலும் மதிப்பிடப்படுகிறேன். யாரோ கொடுத்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு யாரோ கொடுத்த பியானோவை பார்த்துக் கொண்டே, யாரோ கொடுத்த ரேடியோவை கேட்டுக் கொண்டு, யாரோ கொடுத்த அலமாரியில் சார்ந்து கொண்டிருக்கிறேன்.

எந்த நேரத்திலும், காரணம் எதுவும் சொல்லாமல் கூட வீட்டை காலி செய்யச் சொல்லலாம் என்பதுதான் ஒப்பந்தம் என்று வாடகைக்கு வீடு கொடுத்த ஏஜென்ட் கவனமாக நினைவூட்டியிருக்கிறார். ஐ-போனை வாங்கிய விலையில் நான்கில் ஒரு பங்கு தொகைக்கு விற்று விட்டு, மேசை டிராயரிலிருந்து ஒதுக்கிப் போட்டிருந்த இந்த ஜூராசிக் காலத்து நோக்கியாவில் சிம் அட்டையை போட்டுக் கொண்டேன்.

நாளை முதல் எனது குட்டிப் பையன் அடகுக் கடை உலகத்தைப் பார்க்கப் போகிறான். அவனது அம்மா அற்பமான விலைக்கு தொலைக்காட்சிப் பெட்டியையும், கிதாரையும்   தூக்கிக் கொடுப்பதை பார்க்கப் போகிறான். வீட்டை இழந்து தெருவில் நிற்கும் நிலையை தள்ளிப் போடுவதற்கு, ஓரிரு வாரம் தாக்குப் பிடிப்பதற்கு அதுதான் வழி. கடன் பாக்கிகளை ஒன்று திரட்டுவது, கடன் வசூலிக்கும் ஓலைகளாக சிவப்பு முனை கடிதங்கள், கடன் வசூலிக்க நேரில் வரும் ஈட்டிக்காரர்கள் போன்றவை தினசரி நிகழ்வுகளாகியிருக்கின்றன.

ஜேக் மன்ரோ மகனுடன்
“பசியில்லை” என்று நான் சொல்லும் பொய்யை வயிற்றிலிருந்து கேட்கும் கட முடா சத்தம் காட்டிக் கொடுக்கிறது.

எனக்குச் சொந்தமானது என்று சொல்லக் கூடியவை ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மைக்ரோவேவ் உண்மையிலேயே தேவைதானா? தொலைக்காட்சி பெட்டி உண்மையிலேயே தேவைதானா? ஃபிரிட்ஜை ஆன் செய்து வைப்பது உண்மையிலேயே தேவைதானா? குடியிருக்க ஒரு வீடு தேவை என்பதற்கு மேலாக இவை எதுவுமே தேவையில்லை. முக்கியமாக என்னுடைய 2 வயது குட்டிப் பையனுக்கு தலைக்கு மேல் ஒரு கூரை வேண்டும் என்பதற்கு முன்பு இவை எதுவுமே தேவையில்லை.

என்னால் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்க முடிகிறது என்று பலர் கேட்கிறார்கள். என்னுடைய மன உறுதியை பாராட்டுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல் எனது மகனின் சிறு படுக்கையில் உறைந்து போய் உட்கார்ந்திருக்கும் போது எனக்கு எந்த மன உறுதியும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

முதலில் வீட்டை சூடுபடுத்தலை நிறுத்திக் கொண்டேன். அது டிசம்பரில். சூடுபடுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அவற்றை ஓட்டும் சபலம் வந்து விடாமல் தவிர்க்க அவற்றுக்கு முன்பு நாற்காலிகளையும், அலமாரிகளையும் போட்டு மறைத்திருக்கிறேன். எல்லாக் கருவிகளையும் இணைத்திருக்கும் புள்ளியிலேயே அணைத்து வைக்கப் பழகுகிறேன். மின்சார அடுப்பின் எல்சிடி மின்னுவதற்குக் கூட சிறிதளவு மின்சாரத்தையும் வீணாக்கி விடக் கூடாது.

அதன் பிறகு முடி வெட்டுவதை நிறுத்தினேன். மாதாந்திர அடிப்படைத் தேவையாக இருந்த அது இப்போது ஒரு ஆடம்பர நடவடிக்கையாக மாறி விட்டிருக்கிறது. ஒரு ரப்பர் பேண்டில் முடியை முடிந்து கொண்டு, “முடி வெட்டக் காசில்லை” என்று சொல்லாமல் “முடியை நீளமாக வளர்க்கப் போகிறேன்” என்று நண்பர்களிடம் சொல்கிறேன். தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் சூப்பர்மார்க்கெட்டின் மலிவான பிராண்ட் வெள்ளையும், ஆரஞ்சும் கலந்த நிறத்திலானவையாக மாற்றிக் கொள்கிறேன். எதையும் சுத்தம் செய்வதற்கு 24 பென்ஸ் விலையிலான பிளீச்சை பழைய பாட்டில்களில் ஊற்றி வைத்து பயன்படுத்துகிறேன்.

கன்டெய்னர் வீடுகள்
இங்கிலாந்தில் தொண்டு நிறுவனங்கள் ஏழைகள் வசிக்க ஏற்பாடு செய்யும் கன்டெய்னர் வீடுகள்.

பலவற்றை தியாகம் செய்யக் கற்றுக் கொண்டேன். நண்பர்கள் யாராவது வெளியில் அழைத்தால், எனது பங்கு செலவை கொடுக்க முடியாத நிலையில் சுயகௌரவத்தை எல்லாம் ஒதுக்கி வைக்கக் கற்றுக் கொண்டேன். எனக்கு ஒரு வேலை கிடைத்ததும் எல்லோருக்கும் ஒரு சுற்று டிரீட் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிரந்தர ஜோக் நண்பர்கள் வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற நண்பர்கள் இருப்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு லைட் பல்புகளை கழற்றி வைத்தேன். மாட்டி இருந்தால்தானே அவற்றைப் போட முடியும், மின்சாரம் செலவாகும்! வராந்தா, தூங்கும் அறை, குட்டிப் பையனின் அறை, அங்கெல்லாம் வெளிச்சம் தேவையில்லை என்று முடிவு செய்தேன். இவ்வளவு சிக்கனம் பிடிக்கும் திட்டத்துக்கு மத்தியில் குரூரமான நகைச்சுவையாக மின்சார நிறுவன ஆள் அழைப்பு மணியை அழுத்தி (மின்சாரத்தை செலவழித்து), 390 பவுண்டுகள் கட்டண பாக்கி இருப்பதால், கீ மீட்டரை (பிரீ பெய்ட் மின்சார சேவை) பொருத்துவதாக சொல்கிறார். இனிமேல் மின்சாரக் கட்டணம் அதிகமாகப்  போகிறது. சுடு தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டேன். முன்பு இருந்த வீட்டில் குளிர்ந்த நீர் குளியல்தான், அதே நடைமுறைக்குத் திரும்பிப் போனேன்.

சொற்ப அளவு டிவிடி தொகுப்பை அதை விட சொற்ப தொகைக்கு விற்றேன். அடுத்து நெட்புக், கேமரா விலை போகின்றன. சருமத்தை அரிக்கும் மலிவான சோப்பில் துணிகளை துவைக்க ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குறைத்து குறைத்து கடைசியில் 2 தட்டுகள், 2 கிண்ணங்கள், 2 டம்ளர்கள், 2 கப்புகள், 2 கத்திகள், 2 முள் கரண்டிகள், 2 கரண்டிகள் மட்டும் மிஞ்சுகின்றன. மற்ற எல்லாமே ஆடம்பரங்கள் போல தோன்றுகின்றன. வாடகை பாக்கிக்கு முன்பு ஆடம்பரங்கள் எல்லாம் போக வேண்டியதுதான்.

ஏழ்மை என்பது வீட்டுக்குள் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பது மட்டுமில்லை, சாப்பிட போதுமான உணவு இல்லாதது மட்டுமில்லை, ஃபிரிட்ஜை அணைத்து வைப்பதோ அல்லது சுடுநீர் இல்லாமல் இருப்பதோ மட்டும் இல்லை. அது ஒரு சுற்றுலா பயணம் இல்லை, அது பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை, ஆண்டுக்கு 65,000 பவுண்டுகள் சம்பளமும் கூடுதலாக படிகளும் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரியக் கூடியது இல்லை அது. “நாம் எல்லோரும் இதில் ஒரு சேர சிக்கியிருக்கிறோம்” என்று சொல்லும் நம் நாட்டு பிரதமர் டேவிட் காமரூனுக்கு அது நிச்சயமாக புரியப் போவதில்லை.

எனது 2 வயது மகன் ஒரு வீட்டாபிக்சை சாப்பிட்டு முடித்த பிறகு, “இன்னும் வேணும் மம்மி, பிரெட்டும் ஜாமும் தா மம்மி” என்று கேட்கும் போது நான் வயிற்றில் உணரும் கலக்கம்தான் ஏழ்மை. அடகுக் கடைக்கு அடுத்ததாக தொலைக்காட்சியை  எடுத்துச் செல்வதா அல்லது கித்தாரை  எடுத்துச் செல்வதா என்று குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில் பிரெட்-ஜாம் இல்லை என்று அவனிடம் சொல்ல முடியாமல் தவிப்பதுதான் ஏழ்மை.

செல்வி ஜேக் மன்ரோ, சௌத்என்ட் ஆன் சீ.

=====================

2008-09ல் ஏற்பட்ட முதலாளித்துவ நிதிச் சந்தை நெருக்கடியை சமாளிக்க முதலாளிகளுக்கு $850 பில்லியன் நிதி உதவி கொடுத்து கை தூக்கி விட்டது அப்போது இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்த லேபர் கட்சி.

உணவு வங்கிகள் (கஞ்சித் தொட்டிகள்)
உணவு வங்கிகள் (கஞ்சித் தொட்டிகள்)

2010-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டேவிட் காமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி கூட்டணி அரசாங்கம், மக்களுக்கான உதவித் தொகைகளை வெட்டும் பணியை  ஆரம்பித்து வைத்தது. இதுவரை $100 பில்லியன் மதிப்பிலான உதவித் திட்டங்களை வெட்டி பெரும் எண்ணிக்கையிலான மக்களை நிர்க்கதியாய் விட்ட பிறகும் தாகம் அடங்கமல் நிதி நிறுவனங்களுக்கு இரை போட இன்னும் கூடுதல் வெட்டுகளை திட்டமிட்டிருக்கிறார் டேவிட் காமரூன்.

2013-ன் கடைசி 8 மாதங்களில் இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் உணவுக்காக தரும நிறுவனங்களைச் சார்ந்திருந்தார்கள் என்று டிரசஸ் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. இது 2012-ஐ விட மூன்று மடங்கு அதிகம். அந்தப் பட்டியலில் தானும் குழந்தையும் சேர்ந்து விடுவதை தவிர்க்கும் போராட்டம்தான் மேலே சொன்ன ஜேக் மன்ரோவின் கடந்த 2 ஆண்டுகள் வாழ்க்கை.

வேலையின்மைக்கும்,  ஏழ்மைக்கும் எதிரான தனது போராட்டத்தைப் பற்றி அவரது வலைப்பதிவில் எழுதிய பிறகு ஜேக் மன்ரோவின் வறுமையை விளம்பரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடத் தொடங்கியது எதிர்க்கட்சியான லேபர் கட்சி. ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் அவரை தான்சானியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு தான் செய்யும் பணியை பார்வையிட வைத்தது. ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை விட தனது நிலைமை பரவாயில்லை என்று ஜேக் சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

கிருஸ்துமசில் மீந்து போன உணவுகளை பயன்படுத்தி சமைப்பது எப்படி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு அவரை சேன்ஸ்பரி என்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது. எதையும் வணிகமாக்குவது, வறுமையையும் வேடிக்கையாக்கினால்தான் சோறு என்பதுதான் முதலாளித்துவத்தின் அறம். இத்தகைய சந்தை ‘செயல்திறனால்’, தனது பரிதாப நிலையிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறார் ஜேக். தனது குழந்தைக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடும் அளவுக்கு வசதி அடைந்திருக்கிறார் அவர்.

ஆனால், மூன்று வயதாகும் ஜேக்கின் மகன் இப்போது உணவை பதுக்க ஆரம்பித்திருக்கிறான். சென்ற வாரம் மதிய உணவுக்கு அவன் அம்மா செய்து கொடுத்த மீன் கேக்கை பாதி சாப்பிட்டு விட்டு, மீதியை இரவு உணவுக்கு வைத்திருக்கச் சொல்லியிருக்கிறான். “இப்போதே முழுசையும் சாப்பிடலாம்” என்று அம்மா சொன்னாலும், அவன் ஏற்றுக்  கொள்ளவில்லை. அம்மாவுக்கு சாப்பிடுவதற்கு போதுமான உணவு இருக்கிறது என்று அவனை நம்ப வைக்க, அவனோடு சேர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கியிருக்கிறார் ஜேக்.

தமிழாக்கம்: அப்துல்

மேலும் படிக்க