privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !

நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !

-

ந்தியாவில் இன்று அந்நிய முதலீடு நுழைய முடியாத தொழில் துறையோ, நிதி-சேவைத் துறைகளோ ஏறத்தாழ இல்லை என்றே கூறிவிடலாம். அந்நிய முதலீடுதான் வளர்ச்சியின் அறிகுறி என்றவாறு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீடைக் கவருவதற்காக ஏராளமான சலுகைகள் – வரிச் சலுகைகள், குறைவான வட்டியில் கடன், அடிமாட்டு விலைக்கு நிலம் உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகள் என வாரியிறைக்கப்படுகின்றன. அந்நிய முதலீடின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அமலில் உள்ள சட்டங்கள் செல்லுபடியாகாத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தச் சலுகைகளை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என வாய்ப்பூட்டுச் சட்டம் போடாத குறையாக, அந்நிய முதலீட்டிற்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது.

தொழிலாளி அம்பிகாவின் தாய்
நோக்கியாவின் சுரண்டல் – கொத்தடிமை கொடூரத்துக்குப் பலியான தொழிலாளி அம்பிகாவின் தாய்: தாளமாட்டாத துயரத்தில்.. (கோப்புப் படம்)

அந்நிய முதலீடு வருவது அதிகரித்தால் நாட்டின் ஏற்றுமதி பெருகி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என்றார்கள். ஆனால், நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்து, அதனால் ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்ததைக் கண்டோம். தனியார்மயம் உருவாக்கும் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அந்நிய முதலீடு உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசுவதில் பொருள் கிடையாது. அந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ வேலை உத்திரவாதம் இன்றி, அடிமாட்டுக் கூலிக்குக் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை மாருதி தொழிலாளர்களின் போராட்டம் நாடெங்கும் அம்பலப்படுத்தியது.

அமெரிக்காவின் என்ரான் நிறுவனம் திவாலான பொழுது அந்நிறுவனம் இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கித்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்திருப்பது அம்பலமானது. தமிழகத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் நுழைந்த நோக்கியாவிற்கு, அந்நிறுவனம் கொண்டுவந்த மூலதனத்தைவிடப் பல மடங்கு பெறுமான சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்நிய முதலீடு நாட்டை வளமாக்கவில்லை; நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறது; அந்நிய முதலாளிகள் அரசாங்கம் அளித்துள்ள அத்துணை சலுகைகளையும் அனுபவிப்பதோடு, அதற்கு மேலும் சட்டவிரோதமான வழிகளில் நாட்டின் வளங்களைத் திருடிச் செல்கிறார்கள் என்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, நோக்கியா விவகாரத்தைக் கொண்டே விளங்கிக் கொள்ளலாம்.

நோக்கியாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சிறீபெரும்புதூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல், 2005-இல் அ.தி.மு.க. ஆட்சியில் கையெழுத்தானது. 2006-இல் பதவிக்கு வந்த தி.மு.க. ஆட்சி இந்த ஒப்பந்தத்தைப் பொதுமக்களின் பார்வையே படாதவாறு, காத்து வந்தது. சென்னையைச் சேர்ந்த ‘சிட்டிசன்ஸ் ரிசர்ச் கலெக்டிவ்’ என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் போராடி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகுதான், தமிழகம் நோக்கியா என்ற பூதத்தின் வாயில் சிக்கியிருக்கும் உண்மை அம்பலமானது.

ஃபாக்ஸ்கான் விஷவாயுக் கசிவு
நோக்கியாவின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்படுகிறார். (கோப்புப் படம்)

இந்த ஒப்பந்தத்தின்படி ஏக்கருக்கு 4.5 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் சிப்காட்டுக்குச் சோந்தமான 210.87 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதனால் சிப்காட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் ஏறத்தாழ 7.4 கோடி ரூபாய். இந்தக் குத்தகையைப் பதிவு செய்வதற்கான 4% முத்திரைத்தாள் கட்டணத்தையும் தள்ளுபடி செய்ததுடன், தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலத்தைப் பிற நிறுவனங்களுக்குக் கூடுதல் விலைக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உரிமையையும் நோக்கியாவுக்கு வழங்கியது, தமிழக அரசு.

நோக்கியா தனது கைபேசியை உள்நாட்டில் விற்பனை செய்வதன் மூலம் செலுத்தும் “வாட்” வரியையும் மத்திய விற்பனை வரியையும் தமிழக அரசு திருப்பிச் செலுத்தும் என்பது ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான சலுகை. கைபேசி வாங்கும் குடிமக்கள் செலுத்தும் வரி அரசின் கஜானாவுக்குப் போகாமல், நோக்கியாவிற்குத் திருப்பி விடப்பட்டிருக்கிறது. இச்சலுகையை ஒரே வரியில் சொன்னால், இது நோக்கியா சட்டபூர்வமாக நடத்தியிருக்கும் வரிச் சுருட்டல். இச்சலுகையின் கீழ் 2005-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு நோக்கியாவுக்குத் தூக்கிக் கொடுத்துள்ள தொகை ஏறத்தாழ 650 கோடி ரூபாய். இதோடு, தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கிய மற்ற சலுகைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், நோக்கியா வெண்ணலையாக அடைந்த ஆதாயம் மட்டும் 1,020.4 கோடி ரூபாய்.

தமிழக அரசின் சலுகைகள் ஒருபுறமிருக்க, நோக்கியா நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலமாகச் செயல்பட்டு வருவதால் மைய அரசு அந்நிறுவனத்திற்கு சுங்க வரி, உற்பத்தி வரி விலக்குகளை அளித்திருக்கிறது. இந்த இரண்டு வரி விலக்குகள் காரணமாக நோக்கியா 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் அடைந்துள்ள மறைமுக இலாபம் 681.38 கோடி ரூபாய். இவை தவிர, வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிச் சலுகைகள், ஏற்றுமதி வரிச் சலுகைகளால் நோக்கியா தனது முதல் மூன்று ஆண்டுகளில் அடைந்த மறைமுக இலாபம் தோராயமாக 8,000 கோடி ரூபா.

caption-008-nokia-1நோக்கியா சிறீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையைத் தொடங்க போட்ட முதலீடே 650 கோடி ரூபாய்தான் என்பதனை இச்சலுகைகளோடு ஒப்பிட்டால்தான் நோக்கியா அடித்திருக்கும் பகற்கொள்ளையின் பரிணாமம் பிடிபடும். இந்த இலாபக்கணக்கில் நோக்கியா தனது தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியைச் சுரண்டியதன் மூலம் அடைந்துள்ள அதிரடி இலாபம் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியாவில் 10,000 தொழிலாளர்களும், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களில் ஏறத்தாழ 15,000 தொழிலாளர்களும் வேலைபார்த்து வருகின்றனர். நோக்கியாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுள் வெறும் 3,800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதியுள்ளவர்களைப் பயிற்சித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனப் பிரித்து வைத்து வேலை வாங்கி வருகிறது, நோக்கியா. நிரந்தரத் தொழிலாளர்களும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கூலி கொடுப்பதற்காக மட்டுமின்றி, தொழிலாளர்கள் ஒன்றாக அணிதிரண்டு விடக் கூடாது என்ற தீய நோக்கத்திலும் இந்தப் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது, நோக்கியா.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்
ஃபாக்ஸ்கான் ஆலையில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் நேர்ந்த விஷவாயுக் கசிவைக் கண்டித்து அவ்வாலையின் முன் நடந்த தொழிலாளர்களின் போராட்டம். (கோப்புப் படம்)

நோக்கியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் மாதாந்திர சராசரி சம்பளம் 2.5 இலட்ச ரூபாய். அதேசமயம் அதனின் சிறீபெரும்புதூர் ஆலையைச் சேர்ந்த நிரந்தரத் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட சராசரி மாதச் சம்பளம் வெறும் 7,000 ரூபாய். பயிற்சித் தொழிலாளிகள், ஒப்பந்தத் தொழிலாளிகள், துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாதக் கூலியோ ஏழாயிரத்துக்கும் கீழே. கூலியில் காணப்படும் இந்த பிரம்மாண்டமான வேறுபாடு எவ்வளவு கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றால், ஃபாக்ஸ்கான் ஆலையில் அம்பிகா என்ற பெண் தொழிலாளியின் கழுத்து ஒரு இயந்திரத்தில் சிக்கி, அவ்வியந்திரத்தால் கரகரவென்று அறுத்துக் கொல்லப்பட்ட பயங்கரம் ஆலையினுள் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டதை அம்பலப்படுத்தியது.

சிறீபெரும்புதூர் ஆலையில் நாளொன்றுக்கு 4.5 இலட்சம் கைபேசிகள் தயாரிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்கு, பின் படிப்படியாக 6.8 இலட்சமாக உயர்த்தப்பட்டதாம். இந்த அதிகரித்த உற்பத்தி இலக்கு தொழிலாளர்களைத் தமது உயிரைப் பணயம் வைத்து இயந்திரங்களோடு போட்டியிட்டு வேலை செய்யக் கூடிய “ரோபோ”க்களாக மாற்றியிருக்கிறது. இந்த அராஜகமான உற்பத்தி இலக்கும், அதன் பின்னுள்ள முதலாளித்துவ இலாபவெறியும்தாம் அம்பிகாவின் உயிரைப் பறித்தது.

அம்பிகா ஆலையின் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு இறப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக அவ்வாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 260-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கிச் சரிந்தனர். சில தொழிலாளர்கள் இரத்த வாந்தி எடுக்கும் அபாய கட்டத்திற்குப் போனார்கள். ஆனால், ஆலை நிர்வாகமோ, “பசி மயக்கம், மத்தபடி ஒண்ணுமில்ல” எனப் பூசிமெழுகி இந்த விபத்தை அப்படியே அமுக்கிவிட்டது.

புஜதொமு ஆர்ப்பாட்டம்
நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்தியதையடுத்து, 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சிறீபெரும்புதூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

கொடூரமான உழைப்புச் சுரண்டல், எந்தவிதமான உரிமைகளும் அற்ற கொத்தடிமைத்தனம் என்ற இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் கூலி உயர்வு, சங்கம் வைக்கும் உரிமை கேட்டுத் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் குதித்த போதெல்லாம், போராட்டத்தில் முன்னணியில் நின்ற தொழிலாளர்களை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்து, அப்போராட்டங்களை ஒடுக்கியது ஆலை நிர்வாகம். நோக்கியா ஆலையில் வேலைநிறுத்தம் நடைபெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த ஆலையைப் பொதுச் சேவைக்கானது என அறிவித்து, நோக்கியாவின் பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பு அளித்தது, தமிழக அரசு.

நோக்கியாவின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு ஒருபுறமிருக்க, அந்நிறுவனத்திடம் சாதாரண வியாபாரிகளிடம் காணப்படும் வர்த்தக நேர்மைகூட இருந்தது கிடையாது. சிறீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகளில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்யப் போவதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கும் நோக்கியா, உற்பத்தியில் 70 சதவீதத்தைச் சட்டவிரோதமான முறையில் உள்நாட்டுச் சந்தையிலேயே விற்று கல்லா கட்டியிருக்கிறது. இந்த வர்த்தகப் பித்தலாட்டத்தனத்தால் மைய அரசிற்கு ஏற்பட்டுள்ள சுங்க வரி இழப்பு மட்டும் 681.36 கோடி ரூபாய்.

இந்தத் திருட்டுத்தனங்கள் ஒருபுறமிருக்க, நோக்கியா 21,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. வடதமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள சிறீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையில் தயாரிக்கப்படும் கைபேசிகளுக்கான மென்பொருளை பின்லாந்திலுள்ள தனது தாய் நிறுவனமான நோக்கியா கார்ப்பரேஷனிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது, நோக்கியா இந்தியா. இப்படி வாங்கப்படும் மென்பொருளுக்கு அதற்கான விலையோடு, ராயல்டி தொகையும் செலுத்தி வருவதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இந்த ராயல்டி தொகை மட்டும் சுமார் 25,000 கோடி. இதில் பத்து சதவீதம் வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக இந்தவரியை நோக்கியா செலுத்தவும் இல்லை. அதனை வசூலிக்க இந்திய அரசு இந்த 8 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. ராயல்டிக்கான வரி மட்டுமின்றி வெவ்வேறு இனங்களில் கீழ் இந்திய அரசுக்குச் சேர வேண்டிய 21,000 கோடி ரூபாய் வரிப்பணம் பின்லாந்திற்குக் கடத்தப்பட்டுவிட்டது.

இந்த வரிஏய்ப்பு விவகாரம் தொடர்பாக இந்திய அரசிற்கும் நோக்கியா கார்ப்பரேஷனுக்கும் இடையே சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நோக்கியா கார்ப்பரேஷன் தனது ஆலைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, கம்பி நீட்டுவதற்குத் தயாரானது. டிச.12, 2013-க்குள் நோக்கியாவின் சிறீபெரும்புதூர் ஆலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குக் கைமாற்றிவிட வேண்டும் என முடிவாகியிருந்த நிலையில் வருமானவரித் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு நோக்கியா இந்தியா நிறுவனச் சொத்துக்களை முடக்கியது.

இதற்குப் பின்னரும் வரிபாக்கியைக் கட்ட நோக்கியா தயாராக இல்லை. ஒரு சொத்து என்ற முறையில் சென்னை ஆலைக்கு எந்த மதிப்பும் கிடையாது. நாங்கள் அந்த ஆலையின் பயன்பாட்டு உரிமையை மட்டுமே மைக்ரோசாப்டுக்கு விற்கிறோம். அதனைப் பயன்படுத்துவதோ, கைவிடுவதோ மைக்ரோசாப்டின் விருப்பம். எங்கள் சொத்துகளை முடக்கும் உத்தரவைத் திரும்பப் பெற்றால்தான் நாங்கள் எங்களது நிறுவனத்தை மைக்ரோசாப்டிற்கு விற்க முடியும். அவ்வாறு திரும்பப் பெறமுடியாதென்றால், சரியாக ஒரு ஆண்டிற்குள் சென்னை ஆலை முழுவதையும் மூடிவிடுவோம் என்று மிரட்டியது நோக்கியா. காரணம், சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். 8 ஆண்டு தேய்மானத்துக்கான மதிப்பைக் கழித்து விட்டால், அந்த ஆலையின் எந்திரங்களுக்கு அவ்வளவுதான் – காயலான் கடை மதிப்புதான். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய். ஆலையை மூடினால் தெருவுக்கு வரக்கூடிய தொழிலாளர்கள் 25,000 பேர். இவர்களைப் பிணையக்கைதிகளாக வைத்து பேரம் நடத்தியது நோக்கியா. தீர்ப்பு அதற்குச் சாதகமாகவே அமைந்தது.

முடக்கப்பட்ட நோக்கியா இந்தியாவின் சொத்துக்களை விடுவித்தும்; “நோக்கியா இடைக்காலத் தொகையாக 2,250 கோடி ரூபாயை அரசுக்குச் செலுத்துவதோடு, முழுத் தொகையைச் செலுத்துவதற்கான வாக்குறுதியை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டும் டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்படியொரு சமரச ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வாழ்க்கை பறிபோய்விடும் என இத்தீர்ப்புக்கு ஒரு நொண்டிச்சாக்கும் முன்வைக்கப்படுகிறது.

வரி ஏய்ப்பு, வியாபாரப் பித்தலாட்டம், சுரண்டல், கொத்தடிமைத்தனம், கொலை, விபத்து – எனப் பலவிதமான கிரிமினல் குற்றங்களைச் செய்திருக்கும் நோக்கியா, ஏய்த்த வரியைக் கட்டச் சொன்னவுடன், இந்தியாவில் தனக்கு நீதி மறுக்கப்படுவதாகக் கூப்பாடு போட்டு வருகிறது. இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த வரியை இந்தியாவில் கட்டத் தேவையில்லை என வாதாடி வருகிறது.

பன்னாட்டுத் தொழிற்கழகங்களையும், அந்நிய முதலீட்டையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்காக இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம், இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் எனப் பல்வேறு பெயர்களில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஏறத்தாழ 80 நாடுகளோடு இந்தியா போட்டு வைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியச் சட்டங்களுக்கு மேலானவையாக, அந்நிய முதலாளிகள் இந்தியாவைக் கொள்ளையடித்துச் செல்வதற்கு வழங்கப்பட்ட லைசென்சாக உள்ளன.

நோக்கியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தைக் காட்டி வரி கட்ட முடியாது எனக் கூறினால், ரசியாவைச் சேர்ந்த சீஸ்டெமா நிறுவனம், இந்தியா-ரசியா இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி தனது 2ஜி உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என வாதாடுவதோடு, இந்திய அரசிற்கு எதிராக வழக்கு தொடருவோம் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனம் இந்தியா-சிங்கப்பூர் பொருளாதார கூட்டு ஒப்பந்தப்படி, 2ஜி உரிமங்களில் தான் போட்டுள்ள முதலீட்டிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வோடோஃபோன் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட 11,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட போதும், அந்நிறுவனம் “இந்திய அரசு வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை வருங்காலத்தில் கொண்டு வந்தாலும் கூட, இந்தியா-டச்சு இருதரப்பு ஒப்பந்தத்தின்படி தன் மீது சுமத்தப்பட்டுள்ள 11,000 கோடி ரூபாய் வரியைக் கட்ட முடியாது” என வாதிட்டு வருகிறது.

கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டன் ஏகாதிபத்தியமும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற கடந்த காலம் காலனி ஆதிக்கம் என்றால், நிகழ்காலத்தில் பல ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் செல்வங்களைச் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடித்துச் செல்வதை மறுகாலனியாதிக்கம் என்றுதான் சோல்ல முடியும். ஆனால், ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் இம்மறுகாலனியாதிக்கத்தை “வளர்ச்சி”, “வல்லரசு” என்ற வாய்ஜால மோசடிகளால் மூடிமறைக்கின்றன.

– செல்வம்
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_____________________________________________