Thursday, October 21, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஆம் ஆத்மி பதவி விலகல் - எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !

ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !

-

”கடவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்கு கருணை காட்டுங்கள், வழி நடத்துங்கள் என வேண்டிக் கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களை தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.”

கேஜ்ரிவால்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கேஜ்ரிவால்

பதவியை ராஜினாமா செய்த சமயத்தில் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையின் ”பினிசிங் டச்சப்” தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. கேஜ்ரிவாலின் ராஜினாமாவும் அவரது சத்யாவேசம் பொங்கும் உரையும், அதன் இறுதியில் சென்டிமென்டலாக ஒரே போடாக போட்டுத் தாக்கியிருப்பதும் அவரது டி.ஆர்.பி ரேட்டிங்கை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்ளிலும் முதலாளித்துவ ஊடகங்களிலும் நடந்த விவகாரங்கள் குறித்த விவாதங்களில் கேஜ்ரிவாலின் மேல் பகுத்தறிவற்ற ஒரு பச்சாதாப உணர்ச்சி மேலோங்கி வருகிறது.

தில்லி தேர்தலில் 28 இடங்களை வென்று காங்கிரசின் தயவோடு ஆட்சியில் அமர்ந்த கேஜ்ரிவால், துவக்கத்திலிருந்தே தில்லி மக்களின் அன்றாட சவால்களைத் தீர்க்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.  அதனால்தான் இந்த 49 நாட்களில் தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை எப்படியெல்லாம் ஏற்றுவது என்பதில் தான் அவரது கவனம் இருந்தது. இலவச குடி நீர் மற்றும் மின் கட்டண அறிவிப்பை நெருக்கமாக அலசிப் பார்த்தாலே அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அந்த அறிவிப்புகளால் கேஜ்ரிவால் தலைப்புச் செய்திகளில் அடிபட்டதைத் தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே யதார்த்தமான் உண்மை.

கடைசியாக கடந்த வாரம் தனது பிரம்மாஸ்திரமான ஜன்லோக்பாலை ஏவியிருக்கிறார். தில்லி மாநில சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற விடாமல் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் எதிர்த்து வாக்களிக்கின்றன. “இதற்குக் காரணம் அதற்கு இரண்டு நாட்கள் முன் தனது அரசு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கே.ஜி பேசினில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்கு அதிக விலை வைத்து தில்லியில் விற்கப்படுவதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது தான்” என்று சொல்லும் கேஜ்ரிவால், “காங்கிரசும் பாரதிய ஜனதாவும் அம்பானிகளால் இயக்கப்படும் பொம்மைகள் என்றும் அதனால் தான் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் இவ்விரு கட்சிகளும் கைகோர்த்துக் கொண்டன” என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். முகேஷ் அம்பானிக்கு எதிராக வேறு ஒரு மாநிலத்தில் நடக்கும் எரிபொருள் துரப்பண நடவடிக்கையின் மூலம் ஏமாற்றப்படுவதை எதிர்த்து கொந்தளிக்கும் இதே கேஜ்ரிவால், தனது சொந்த மாநிலமான தில்லியில் மக்களின் தலையில் மின்சாரத்தின் பெயரில் மிளகாய் அறைக்கும் அனில் அம்பானிக்கு எதிராக இதே பரிமாணத்தில் பொங்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைகளுக்கும் தாம் செல்லத் தயார் என்றும், இதற்காக தனது அரசே போனாலும் பரவாயில்லை என்றும் அறிவித்துள்ள கேஜ்ரிவால் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு தில்லி அரசைக் கலைக்க கோரி மாநில ஆளுனரிடம் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

சட்டமன்றத்தின் அதிகாரம் என்பது ஒரு கொலு பொம்மையின் அதிகாரம் என்பது கேஜ்ரிவால் அறியாத இரகசியம் அல்ல. கேஜ்ரிவாலே எழுதியிருக்கும் சுயராஜ்ஜியம் நூலில், சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் அங்கங்களுக்கு வெறுமனே சட்டமியற்றும் அதிகாரமும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் இருப்பதாகவும், அரசின் அங்கங்களான அதிகார வர்க்கத்தினருக்கே முழுமையான அதிகாரங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது எதுவும் அவரது சொந்த கண்டுபிடிப்பல்ல. மார்க்சிய லெனினிய இயக்கங்கள் வெகு காலமாக தமது திட்டங்களிலும், ஆவணங்களிலும் குறிப்பிடுபவைதான். மேலும் இதற்கான தீர்வாக  இந்த அமைப்புக்குள்ளேயே   மொக்கையான சீர்திருத்த நடவடிக்கைகளத்தான் கோருகிறார். அதன்படி இதற்கும் மாலெ இயக்கத்தின் திட்டத்திற்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால் கட்சி பிரமுகர்களுடன்

தலைநகர் தில்லி, ஹரியானாவின் குர்காவ்ன், உத்திரபிரதேசத்தின் காஜியாபாத் மற்றும் நோய்டா உள்ளிட்ட பகுதிகளோடு சேர்த்து ‘தலைநகர் பிரதேசம்’ (National Capital Teritory of Delhi) என்று அழைக்கப்படுகிறது. இது முழுமையான மாநில அந்தஸ்து பெற்ற பிரதேசம் அல்ல. அரசியல் சாசனத்தின் படி, யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைகளோடு மேலதிகமாக சில விசேஷ உரிமைகளைக் கொண்டிருக்கும் பிரதேசமாகும்.

சாதாரணமாக ஒரு மாநில சட்டமன்றம், ஒரு சட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் அந்த சட்டம் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள அதே பொருளிலான சட்டத்தோடு முரண்படுமானால், பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டமே இறுதியாக செல்லும். தில்லி யூனியன் பிரதேசத்தைப் பொருத்தமட்டில், பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் கீழ் நிறைவேற்றும் சட்டத்தோடு முரண்படாமல் சட்டமியற்றிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஒரு வேளை முரண்படும் பட்சத்தில், பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டமே இறுதியாக செல்லும்.

மேலும், தில்லி சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்ட மசோதாக்களை அம்மாநிலத்தின் லெப்டினெண்ட் கவர்னர் மூலமாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நிறைவேற்ற முடியும். இது யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வைத்திருக்கும் அயோக்கியத்தனமான ஒரு சட்டவாத நடைமுறை. தற்போதய ஜன்லோக்பால் மசோதா விவகாரத்தில், லெப்டினெண்ட் கவர்னர் நஜீப் ஜங் ஏற்கனவே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற அடிப்படையில் மசோதா தாக்கலாவதற்கு எதிரான அறிக்கையை தில்லி சட்டமன்றத்திற்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் அம்மசோதாவை அறிமுகம் செய்து நிறைவேற்றுவது இந்திய சட்டவாதத்திற்கு உட்பட்டே இயலாத காரியம் என்பதே உண்மை.

எதிர்பார்த்தபடியே மசோதா தோற்கடிக்கப்படுகிறது. இதில் பாஜகவும், காங்கிரசும் கை கோர்த்துள்ளமைக்கு ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமான அணுகுமுறையே காரணம்.  ஊழல் ஒழிப்பு குறித்த பெயருக்காவது ஆம்ஆத்மி பெயர் எடுக்க கூடாது என்பது அவர்களின் எண்ணம். ஒருக்கால் அவர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இது சட்டமாவது இயலாத ஒன்று. கேஜ்ரிவாலின் ராஜினாமாவைத் தொடர்ந்து  கவர்னர் சட்டமன்றத்தைக் கலைக்காமல் முடக்கி வைக்கிறார். உடனே இதெல்லாம் தனக்குத் தெரியவே தெரியாது என்பது போல் நடிக்கும் கேஜ்ரிவால், கவர்னர் காலனிய காலத்து வைசிராய் போல் செயல்படுவதாக அங்கலாய்த்துள்ளார்.

ஆக, அவர் தில்லியின் ஆட்சியதிகாரத்தை மேற்கொள்வது என்ற தீர்மானத்தை எடுக்கும் போதே அரசு இயந்திரத்தின் இயல்புக்கு மீறி இங்கே ஜனநாயகம் செல்லாது என்பதை அறிந்தவராகவே அவர் இருந்துள்ளார். என்றாலும், அவரே சுட்டிக்காட்டிய இந்த அமைப்பு முறைகளின் அத்தனை போதாமைகளையும் மனதார ஏற்றுக் கொண்டு தான் பதவியில் அமர்கிறார் என்கிற பட்சத்தில் அதன் நடைமுறைகளுக்கும் சொல்லப்படும் மரபுகளுக்கும் அது கோரும் மதிப்பை அளிக்க வேண்டியது அவரது கடமையாகிறது.

தற்போது, தான் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்டிமென்ட் நாடகங்களை அரங்கேற்றி வரும் கேஜ்ரிவால், இந்த ‘பாதிப்பை’ முன் அனுமானித்தே பதவியில் அமர்கிறார். கேஜ்ரிவால் – அண்ணா ஹசாரே கும்பல் ஊழல் ஒழிப்பு குறித்து அடித்த சவடால்களும், காங்கிரசு குறித்த அவர்களது பிரச்சாரங்களும் அத்தனை எளிதில் நமக்கு மறந்திருக்காது. அத்தனைக்கும் காரணம் சில ஊழல் அரசியல்வாதிகள் தான் என்று தனியார்மயம், தாராளமயம் மற்றும் அவற்றை முன் தள்ளும் கார்ப்பரேட் பகற்கொள்ளை நலன்கள் என்கிற முழு பூசணிக்காயை காங்கிரசு என்கிற மீந்து போன பழைய சோற்றுக்குள் புதைக்க முற்பட்ட பிரச்சாரங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். என்றாலும், அதே காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில் அமர அவர் ஏன் முடிவெடுத்தார்?

ஏனெனில், அவரது நோக்கம் எல்லாம் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தல் தான். நிறைவேற சாத்தியமற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது, அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைக் குறித்து வாய் திறக்க மறுத்ததில் தொடங்கி தற்போது காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் ஒரே தராசில் தள்ளி எதிர் தராசை கவர முயற்சிப்பது வரைக்கும் அதைத் தான் துலக்கமாக உறுதிப்படுத்துகிறது. ராஜினாமா முடிவையும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகளையும் கூட ஒரே நேரத்தில் துவங்கியிருப்பது தற்செயலானதல்ல. இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜகவை எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. முக்கியமாக பாஜக ஒப்பாரி வைத்து அழுகிறது. மோடி கும்பலே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

’நரேந்திர மோடிக்கு’ பிடுங்கிய பேதி

கேஜ்ரிவால் வழக்கு
முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கேஜ்ரிவால்.

இப்படியாக மோடியும்,பாரதிய ஜனதா கட்சியினரும் தற்போது அண்டி கலங்கிப் போய் கிடக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது நிற்காமல் புடுங்கித் தள்ளும் பேதியின் வரலாறு டிசம்பர் மாத இறுதியில் இருந்தே துவங்குகிறது. டிசம்பர் மாதம் நடந்த நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் வென்ற பாரதிய ஜனதா, தனது வெற்றியைக் கொண்டாட முடியாமல் இஞ்சி தின்ற குரங்காக அவஸ்தைப்பட வைத்தது தில்லி மாநில தேர்தல் முடிவுகள்.

பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றாலும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கையைப் பெற முடியவில்லை என்பதோடு ஆம் ஆத்மி கட்சி வென்ற 28 இடங்கள் பாரதிய ஜனதாவின் கண்ணில் ரத்தம் வழிய வைத்து விட்டது. ஊரெல்லாம் செல்லும் நமோ மந்திரம் தில்லியில் மண்ணைக் கவ்விய அதிர்ச்சியிலிருந்து பாரதிய ஜனதா மீள முடியாமல் தவித்தது. பாரதிய ஜனதாவின் அதிர்ச்சி விலகுவதற்குள் ஆம் ஆத்மி கட்சியின் இலவச குடி நீர் மற்றும் மின் கட்டணக் குறைப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்று மாற்றி ஒன்றாக போட்டுத் தாக்கின. சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற ஆம் ஆத்மியின் பிரகடனம் வணிகர்களிடையே செல்வாக்காக இருக்கும் பாஜகவின் இடத்தை கேள்விக்குள்ளாக்கியது.

இப்படியாக பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது. மேலும், தேர்தல் பரப்புரைகளுக்காக பாரதிய ஜனதா மேற்கொண்ட அதே ‘வதந்திக் கம்பேனி’ உத்தியை ஆம் ஆத்மி கட்சியும் திறமையாக பயன்படுத்திக் கொண்டது. இணையம் மற்றும் ஊடகங்களில் வெளிச்சம் பெறுவது எப்படி என்கிற பாடத்தில் பாரதிய ஜனதா இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே ஆம் ஆத்மி முனைவர் பட்டம் முடித்து விட்டிருந்தது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் கலையில் கேஜ்ரிவால் மோடியை அசால்டாக தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடியதாக இருந்தார். இது பாரதிய ஜனதாவிடம் பற்றியெறிந்த கவலையில் பெட்ரோலை ஊற்றியது.

தற்போதைய ஜன்லோக்பால் மசோதா விவகாரத்திலும் பாரதிய ஜனதா ‘நானும் ரவுடி தான் நானும் ஊழலுக்கு எதிரி தான்’ என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஜன்லோக்பால் மசோதா தாக்கலாவதை தாங்கள் எதிர்த்ததற்கும் அம்பானிக்கும் தொடர்பில்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று அம்பானியைத் திட்டியாக வேண்டும், இல்லை வெண்டைக்காயை வெட்டி விளக்கெண்ணையில் கழுவிய கணக்காக ஏதாவது சப்பைக்கட்டு கட்டி வழிய வேண்டும் என்கிற நெருக்கடி பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மசோதாவை எதிர்க்கும் போக்கில் காங்கிரசோடு பாரதிய ஜனதாவையும் இணை வைத்துப் பேசும் கேஜ்ரிவாலின் பரப்புரை ஏஜெண்டுகளையும் எதிர்கொண்டாக வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மோடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. எனினும் பாராளுமன்றத் தேர்தலில் எல்லா மாநிலங்களிலும் மோடி அலை இருக்காது, பிராந்திய கட்சிகளை வளைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பது அதன் கணக்கு. அதற்கு தோதாக ஆம் ஆத்மி போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகளை பிரிப்பார்கள், பாஜக தள்ளாடும் என்று காங்கிரஸ் பெருச்சாளிகள் முதலில் மகிழ்ந்தார்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் பெருச்சாளிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் ஆம் ஆத்மியின் பிரபலங்கள் போட்டியிடுவதால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். இப்படி இரு தேசியக் கட்சிகளும் தின்னவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறுகின்றன.

இந்த சூழ்நிலையில் மற்றுமொரு ஓட்டுக் கட்சியாக தனது அதிகாரத்தினை பெருக்கிக் கொள்ள ஆம் ஆத்மி துடிக்கிறது. தில்லி ஆட்சியை பணயம் வைத்து அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு அலையை எழுப்ப முயல்கிறார்கள்.  அதற்குத்தான் இத்தனை அதிரடிக் காட்சிகள். அரசியலற்ற வலதுசாரி கொள்கைகளை வைத்திருக்கும் ஆம் ஆத்மி மற்ற இரு தேசிய கட்சிகளை விட ஆளும் வர்க்கத்தின் செல்லக் குழந்தையாக மாறுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அடித்தளமோ, காரணங்களோ இல்லாத வெறும் ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் வைத்து ஒரு கட்சி எழ முடியுமென்றால் அதுவும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ மகிமைதான்.

எனவே, இனி நடக்கும் கூத்துகளில் இந்திய ஓட்டுச்சீட்டு போலி ஜனநாயகத்தின் மாண்பு கொடிகட்டிப் பறக்கும்.

ஊர்ப்புறங்களில் அந்தக் காலத்தில் சில வினோதமான பிச்சைக்காரர்கள் வருவார்கள். நல்ல நெடுநெடுவென்ற உயரத்தில் ஆஜானுபாகுவான ஆகிருதியோடு மேல் சட்டை அணியாமல் கெண்டைக் காலில் இந்த பெருமாள் கோயில் பந்த சேவைக்குச் செல்பவர்கள் கட்டுவது போன்ற சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஜல் ஜல் என்று வருவார்கள். அவர்கள் கைகளில் சணல் கயிற்றை முறுக்கிச் செய்த சாட்டைக் கயிறு ஒன்று இருக்கும். முதுகில் இரத்தத் திவலைகள் அப்பியிருக்கும்.

கையிலிருக்கும் சாட்டையை லாவகமாக சொடுக்கிச் சுழற்றி தங்களையே அடித்துக் கொள்வார்கள். ஆனால் பாருங்கள், அது பார்க்கத் தான் அடி போல இருக்கும். உண்மையில் அந்த சாட்டைக் கயிறு சுழன்று லாவகமாக அவர்கள் முதுகை மென்மையாக முத்தமிடுவது போல் ஒற்றியெடுத்துச் செல்லும். இதைப் பார்க்கும் சிலர் அஞ்சி மிரள்வார்கள், சிலர் அது சும்மா செட்டப் என்பதை அறிந்து இரசிப்பார்கள்.. நாலைந்து நிமிடம் தன்னையே ‘அடித்துக்’ கொள்ளும் பிச்சைக்காரர்கள் கடைசியில் முகத்தில் ஒருவிதமான பரிதாப உணர்ச்சியை வலிந்து வரவழைத்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் பிச்சையெடுக்க வருவார்கள் – ஒரு நசுங்கிய மஞ்சள் நிற டால்டா டப்பாவை நீட்டியபடி.

பயந்தவர்கள் காசு போடுவார்கள், நாடகமென்று அறிந்தவர்கள் சிரித்துக் கொண்டே விலகி விடுவார்கள். இதில் ஒரு அறிவாளி இருந்தான். அவனுக்கும் இது நாடகம் என்று தெரியும். ஒரு நாள் பொறுக்கமுடியாமல் “யேல அந்த சவுக்கு வாரை இங்கெ குடுலே. நான் நாலு விளாரு விளாருதேன். பொறவு துட்டு குடுக்கேன்” என்று முன் வந்தான். பிச்சைக்காரர் ஓடியே போய் விட்டார். அதன் பிறகு அந்த பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு மட்டும் வர மாட்டார்கள்.

கேஜ்ரிவால் டால்டா டப்பாவொடு ஓட்டுக் கேட்டு வருகிறார். பாரதிய ஜனதா ஆலோசனைக் கூட்டங்களில் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசு பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது. அப்பாவிகள் பரிதாப படுகிறார்கள். நாம் தான் முன்வந்து சாட்டைக் கயிற்றை கையிலெடுக்க வேண்டும். அப்போது ஆம் ஆத்மி மட்டுமல்ல, நேற்றைய வித்தைக்காரர்க்ளான காங்கிரசும், பாஜகவும் கூட ஓட வேண்டியிருக்கும்.

– தமிழரசன்.

மேலும் படிக்க

 1. நம்மாளுக அப்பிடித்தான். மாற்று அரசியல்னு ஒண்ண சொல்லிக்கிட்டே இருப்பான். எவனாவது கொஞ்சம் மாத்தி யோசிச்சி எதாவது முயற்சி பண்ணா ‘இதெல்லாம் ஷங்கர் படத்துலயே பாத்துட்டோம்’பான். (தியேட்டர்ல கை தட்டி விசிலடிச்சிருப்பான். அது வேற வாய்!).
  தெருவுல எறங்குனா ‘போலீஸ் கோர்ட்லாம் எதுக்கு இருக்கு? போய் கேஸ் போடும்பான்’. கேஸ் போட்டா ‘எல்லா ஊர்லயும் கேஸ்தான் போடுறாய்ங்க. ஆனா ஒண்னும் நடக்காது’ம்பான்.

  நாங்க குடுத்த வாக்குறுதிய நிறைவேத்த முடிலனு சொல்லி பதவிய தூக்கிபோட்டுட்டு போனா, ஆட்சி நடத்த துப்பு இல்லம்பான்.

  ஊழல் மட்டுந்தான் பிரச்சனையானு கேப்பான். அப்பிடி நெனச்சித்தான் மக்கள் ஓட்டுப்போட்டாங்கனு சொன்னா, லோக்பால் மசோதாவால ஒண்ணும் நடக்காதும்பான். அதான் ஒண்ணுமில்லியே அப்புறம் ஏன் காங்.,பிஜேபி சேந்து நின்னு எதுக்குறாங்கனு கேட்டா, டாபிக் மாத்தி, அம்பானி மட்டுந்தான் அயோக்கியனாம்பான். சரி அம்பானி யோக்கியனானு கேட்டா ‘தெர்லியேப்பா’ம்பான்.

  இன்பாக்ஸ்ல போய் என்னதான்யா பிரச்சனைனு கேட்டா பொழுதுபோகல பாஸ்னு சிரிப்பான். ஸ்மைலியாலயே துப்பிட்டு நாம வந்துடணும். நம்மாளுக அப்பிடித்தான்.(முத்து ராம்)

 2. Revolution has to come…as Bribary has become a daily affair, just like chanting VISHNUSAHASRANAMAM daily by Hindus in their houses…How to meet the family expendses ?
  Essential commodities like Milk, Rice, Vegetables, Oil for common man has become Horse Horn..
  Upper class people are enjoying there is no scarcity for Petrol, Diesel,Luxuary Food etc for them.

 3. நீங்க சொல்லுறத பாத்தா, இந்த 10 வருஷத்துல பாஜகவுக்கு கனிஞ்சு வர்ற நேரமா பாத்து எங்கிருந்தோ இருந்து ‘ஆம் ஆத்மி’ என்னும் ரூபத்தில் குடைச்சல் குடுக்க களமிறங்கிவிடப்பட்டிருக்கிறார்கள் இல்லையா? யாரால், எதற்காக என்பது தான் ஆச்சரியமா இருக்கு. அதான் விஷயமே!!! 😀

 4. “தமிழரசன்”.எழுதிய இக் கட்டுரை “கு ப ர”வின் தமிழ்-வடமொழி-ஆங்கிலம் கலந்தக் கட்டுரை போல உள்ளது!

  புரியும் சொற்களா இவை ?

  பினிசிங் டச்சப்

  சத்யாவேசம்

  சென்டிமென்டலாக

  டி.ஆர்.பி ரேட்டிங்கை

  பச்சாதாப

  யதார்த்தமான்

  பிரம்மாஸ்திரமான

  கே.ஜி பேசினில்

  ஈவன்ட் மேனேஜ்மென்ட்

  பார்பனர் பாரதிக்கு இருந்த தமிழ் மொழிபெயர்ப்பு ஆர்வம் கூட வினாவுக்கு இல்லை !

  • சொன்ன செய்தி குடைசலகவும் உன்மையகவும் இருந்தால் என்ன செய்ய முடியும். இப்படித்தான் தப்பு கன்டுபுடிக்கனும். ரொம்ப நல்லா வருவீங்க..

   • வடிவம் ,உள்ளடக்கம் இரண்டும் எப் படைப்புக்கும் முக்கியம்

    நான், இக் கட்டுரையின் உள்ளடக்கத்தில்[content] தவறு இருபதாக கூறவில்லையே !

    “ரொம்ப நல்லா வருவீங்க..” என்ற உங்கள் சாபம் பலிக்க விரும்புகின்றேன் !

 5. ஒருபக்கம் அம்பானியை விமர்சித்துவிட்டு – இந்திய முதலாளிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் கெஜ்ரிவால். முதலாளிகள் அமைப்பான சிஐஐ நடத்திய சந்திப்பில் அவர் கொடுத்த விளக்கத்தில் ‘அரசாங்கம் தொழில் நடத்தக் கூடாது’ என பொதுத்துறைகளை அரசு கைவிடும் நடவடிக்கை உட்பட பல தாராளமய பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார்.

  ஆம் ஆத்மியின் கொள்கைகள் என்ன? என்று பலதரப்பு கேள்வி எழுப்பியபோதும் வாய் திறக்காதவர்கள் – அம்பானி எதிர்ப்பால் தொழிலதிபர்களின் பகைமைக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அவசரத்தில் இதைச் செய்துள்ளது வெளிப்படை.

  ஒவ்வொரு, பட்ஜெட் உரை தயாரிப்பின்போதும் – பெரிய முதலாளிகளைச் சந்திப்பதும், கோரிக்கைகளைக் கேட்பதும் காங்கிரஸ், பாஜகவின் வழக்கம். ‘ஏன் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்திப்பதில்லை’ என்ற கேள்வியை இடதுசாரிகள் முன்வைப்பார்கள்.

  ஆனால், அரசு இதுவரையிலும் தன் நிதிநிலை அறிக்கை மீதான சாமானியர்களின் எதிர்பார்ப்பை கேட்டதில்லை. ‘சாமானியர்களின்’ கட்சியான ஆம் ஆத்மியும், தற்போது அதைத்தான் செய்திருக்கிறது.

  உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் என்ன? என பலமுறை கேட்டும் விளக்கம் கொடுக்க முன்வராதவர்கள். தற்போது பெரிய நிறுவனங்களிடம் போய் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். கெஜ்ரிவாலின் விளக்கங்களில் பல அபத்தமானவை. அப்பட்டமாக, தொழிலதிபர்களின் மனதில் இடம்பிடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவை.

  இந்த விருப்பத்தில் அவர்கள் வெற்றியடையலாம். ஆனால், அந்த வெற்றி, சாமானியர்களின் வெற்றியாக இருக்கப்போவதில்லை.

 6. //முகேஷ் அம்பானிக்கு எதிராக வேறு ஒரு மாநிலத்தில் நடக்கும் எரிபொருள் துரப்பண நடவடிக்கையின் மூலம் ஏமாற்றப்படுவதை எதிர்த்து கொந்தளிக்கும் இதே கேஜ்ரிவால், தனது சொந்த மாநிலமான தில்லியில் மக்களின் தலையில் மின்சாரத்தின் பெயரில் மிளகாய் அறைக்கும் அனில் அம்பானிக்கு எதிராக இதே பரிமாணத்தில் பொங்கவில்லை//

  ஓட்டுப் பொறுக்கிகளையே விஞ்சிய ஓட்டுப் பொறுக்கியாக இருக்கும் கேஜிரிவால் பலே! பலே!

  • Its Kejiwal Who in Delhi Ordered CAG audit of Anil Ambani and Tata Power Companies.

   When power Companies threaten of Power Shut Down. then also he didnt bow down. He send notice to DERC to Cancellation of Licences if Power is Shut Down..

   Pity that without knowing all the facts you are accusing Kejriwal

 7. எப்படியோ யாராக இருந்தாலும் குறை சொல்லியே பிழைப்பை ஓட்டுவது எளிது .ஒரு பிச்சைக்காரனின் வேண்டுதலுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை .அவன் பசிக்காக பிச்சை .உம்முடைய வண்டி ஓட எச்சில் துப்புரீர் அடுத்தவர் மேல் .

 8. கேஜ்ரிவால் தனது பொருளாதாரக் கொள்கையை வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அவர் முதலாளித்துவத்துக்கு எதிரானவர் இல்லையாம்; க்ரானி முதலாளித்துவத்துக்குத்தான்(Crony Capitalism)எதிரியாம்.

  http://indianexpress.com/article/india/india-others/kejriwal-spells-out-economy-agenda-says-aap-against-crony-capitalism/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க