Wednesday, September 23, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?

உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?

-

மா மகேஸ்வரி கொல்லப்பட்டது இப்போது பழைய செய்தியாகிவிட்டது. புதிய பரபரப்புகள் பழையவற்றை தின்று செரிக்கின்றன. எனினும் உமாவின் சக நண்பர்கள், அவர் பணிபுரிந்த வளாக ஊழியர்கள், அந்தப் பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். தங்களிடையே ரத்தமும், சதையுமாக நடமாடிய ஓர் உயிர் இப்போது இல்லாமல் போனதை அவர்கள் எவ்வாறு உணர்கின்றனர் என்பதை அறிய நினைத்தோம். ஒரு மாலை நேரத்தில் சிறுசேரி தொழில்நுட்ப வளாகத்தில் நுழைந்தபோது நுழைவாயிலில் ஒரே ஒரு காவல்துறை வாகனம் மட்டும் நின்று கொண்டிருந்தது.

சிறுசேரி டி.சி.எஸ்
சிறுசேரி டி.சி.எஸ் கட்டிடம்

அந்த கரிய நிற சாலை எங்கள் முன்னே நீண்டு சென்றது. சற்று தூரம் சென்றதும் இடதுபுறம் படர்ந்து கிடந்த கருவேல புதர்க்காடுகள் தென்பட்டன. சாலையில் இருந்து சுமார் 100 அடி தூரமுள்ள அந்த புதர்களின் இடையில்தான் உமா மகேஸ்வரியின் உடல் கிடந்ததாக சொன்னார்கள். மனம் கனக்க அந்த இடத்தைக் கடந்தோம். எங்கள் முன்னே சாலையின் விளிம்பில் உயர்ந்து நின்றன வானுயர்ந்த கட்டடங்கள். அதுதான் டி.சி.எஸ். நிறுவனம். பக்கவாட்டில் பார்வையைத் திருப்பினால் இன்னும், இன்னும் ஏராளமான நிறுவனங்கள் திரும்பிய திசை எங்கும் தென்படுகின்றன. அது ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

டி.சி.எஸ். நிறுவனத்தை சுற்றிக்கொண்டு பின்பக்கமாகப் போனோம். அங்கே கட்டடத்தின் கடைசிப் பகுதியில் சுமார் 100 இளைஞர்கள் கூட்டம் தேநீர் அருந்திக் கொண்டும் சிகரெட் புகைத்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் நின்றனர். எல்லோரது கழுத்திலும் டி.சி.எஸ். நிறுவனத்தின் அடையாள அட்டை மினுமினுத்தது.

தேநீர் குடித்தபடி சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நான்கைந்து இளைஞர்களிடம் பேசத் துவங்கினோம். முதலில் மிரண்டனர். பின்னர் மெள்ள, மெள்ளப் பேசத் துவங்கினர்.

‘‘இங்கே 26 ஆயிரம் பேர் வேலைப் பார்க்குறோம் சார். ஆனால் ஒருத்தருக்கு இன்னொருத்தரைத் தெரியாது. அதிகப்பட்சம் எங்க புராஜெக்டுல இருக்குறவங்களைத் தெரியும், அவ்வளவுதான். உமா மகேஸ்வரிங்குற பொண்ணை எங்க யாருக்கும் தெரியாது. அவங்க ஃப்ரெஷ்ஷர்னு நினைக்கிறோம்’’

‘‘அந்தப் பொண்ணை கொலை செய்ததா வட இந்தியத் தொழிலாளர்களை போலீஸ் கைது பண்ணியிருக்கு. அவங்க இதுபோல வேற ஏதாவது குற்றச் செயல்களில் இதுக்கு முன்ன ஈடுபட்டிருக்காங்களா, உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘அப்படி எதுவும் இல்லைங்க. அவங்க கட்டட வேலைப் பார்க்குறாங்க. அங்கே எதுவும் நடந்திருந்தா எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த சிப்காட்குள்ள எவ்வளவோ கம்பெனிகள் இருக்குது. எல்லாத்துலயும் என்ன நடக்குதுன்னு நமக்கு என்ன தெரியும்?’’

‘‘ஆனா வட இந்தியத் தொழிலாளர்கள்தான் இப்படிப்பட்ட குற்றங்களை செய்யுறதா போலீஸும், மீடியாவும் சொல்லுதே?’’

‘‘அது தப்புங்க. இந்த வழக்குல வட இந்தியர்கள் குற்றவாளி, அவ்வளவுதான். அதுக்காக வட இந்தியர்கள் எல்லாரும் குற்றவாளிகள்னு சொல்றது தப்பு. இப்போ, நாங்க ஆன்சைட் வேலைக்கு வெளிநாடு போறோம். அங்கே ஏதோ ஒரு தமிழன் தப்புப் பண்ணிட்டான்னு வைங்க. மொத்தத் தமிழர்களுமே இப்படித்தான்னு சொன்னா நமக்கு கஷ்டமா இருக்கும்ல… அதுபோலதான்’’

அவர்களின் விசாலப் பார்வையை மதிக்கத் தோன்றியது. இன உணர்வை நீக்கம் செய்து இரு தரப்பும் தொழிலாளர்கள் என்ற கோணத்தில் அதை புரிந்து கொண்டுள்ளனர் என்றபோதிலும், ‘‘வட இந்தியர்களிடம் நாகரிகம் இல்லை. கல்வியறிவு இல்லை’’ என்பதும் அவர்களின் கருத்துதான். மேற்கொண்டும் உமா மகேஸ்வரி குறித்துக் கேட்க முயற்சித்தோம். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. ‘இருந்தாங்க, இப்போ இல்லை, அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?’ என்ற தொனியில் அமைந்திருந்தன அவர்களின் பதில்கள். தங்களுடன் பணிபுரிந்த ஒரு சக உயிரின் இழப்பு அவர்களை சிறு அளவிலும் தொந்தரவு செய்யவில்லை.

‘‘இதுக்கு யார் என்ன சார் செய்ய முடியும்? கம்பெனி வேலைதான் கொடுக்கும். கூடவே துணைக்கு ஆளையுமா அனுப்பும்? நடந்தது நடந்து போச்சு. அதை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். மத்தபடி எங்க கம்பெனியில பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்கா சார். ஐ.டி. கார்டு இல்லாம யாரும் உள்ளே வரவே முடியாது’’

நவீன ஐ.டி. தலைமுறை மனப்போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவர்கள் பிரதிபலித்தனர். அவர்கள் உதிரிகளாக பிரிக்கப்பட்டிருப்பது உடல்கள் என்ற அளவில் மட்டுமல்ல… அக மனதிலும் அவர்கள் உதிரிகளே. எல்லோரின் மனதும் தனித்தனி ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஐ.டி. துறையில் அண்மை காலமாக நடந்துவரும் அதிவேக ஆட்குறைப்புக் குறித்துக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அங்கிருந்து நகர்ந்தோம். மறுபடியும் டி.சி.எஸ். அலுவலக வாயிலுக்கு வந்தபோது வரிசையாக பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. பர்வீன் டிராவல்ஸை சேர்ந்த சுமார் 110 பேருந்துகள், டி.சி.எஸ். நிறுவனத்துடன் வாகன ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஊழியர்களை அழைத்து வருவதும், திரும்ப அழைத்துச் செல்வதும் இவர்கள்தான். நாங்கள் அங்கு சென்ற நேரம் ஒரு ஷிப்ட் முடியும் நேரம். பேருந்துகள் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தன. அங்கு நின்றிருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் பேசினோம்.

‘‘ஒரு பொண்ணை கொலை பண்ணிட்டதா சொல்லிக்கிறாங்க சார். அதைப்பத்தி நமக்கு என்னா சார் தெரியுது? ஒண்ணும் தெரியாது. வருஷக்கணக்குல பஸ்ஸுல வர்றாங்க. ஆனால் யாரும் ஒரு வார்த்தைக் கூட பேச மாட்டாங்க சார். நம்மக்கிட்ட பேசாதது மட்டும் இல்ல… அவங்களே அவங்களுக்குள்ள பேசிக்க மாட்டாங்க. ஏறி உட்கார்ந்ததும் போன் ஒயரை காதுல சொருகிக்குவாங்க. பேசுறாங்களா, பாட்டுக் கேட்குறாங்களான்னுக் கூட நமக்குத் தெரியாது. அமைதியா வருவாங்க..’’

சிறுசேரி டி.சி.எஸ்
டி.சி.எஸ்

ஓர் இளைஞர் குறுக்கிட்டார். ‘‘பஸ் பஞ்சரானா கூட ஏன், எதுக்குன்னு கேட்குறது இல்லை. ‘வேற பஸ் ரெடி பண்ணுங்க’னு கூட சொல்ல மாட்டாங்க. நாமளா பார்த்துதான் பண்ணனும். வர்றதுக்கு லேட்டாச்சுன்னா மட்டும் கம்பெனில நம்பர் வாங்கி நமக்கு போன் பண்ணுவாங்க, ‘டிரைவர் அண்ணாவா… ஃபைவ் மினிட்ஸ்ல வந்திருடுறேண்ணா… ப்ளீஸ்’னுவாங்க. வந்து ஏறுனதும் ஒரு தேங்க்ஸ், அவ்வளவுதான்’’ என்று சிரிக்கிறார்.

மற்றொரு பணியாளர், ‘‘நைட் 8 மணிக்கு வேலையை முடிச்சுட்டுப் போனா இந்த மாதிரி கொலை எல்லாம் ஏன் நடக்கப்போகுது’’ என்றார்.

‘‘நமக்கு வருமானம் பத்தலைன்னு ஓவர்டைம் பார்க்குறோம். அதுபோல அவங்க வேலைப் பார்க்கலாம் இல்லையா?’’

‘‘என்னது.. அவங்களுக்கு சம்பளம் பத்தலையா?’’ என்று அதிர்ச்சியடைந்தார் அந்த இளைஞர்.

இவர்களின் பேருந்து சேவை இரவு 10 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு வாகன வசதி தேவைப்படுவோருக்கு நிறுவனத்தில் இருந்து ‘கேப்’ ஏற்பாடு செய்து தருவார்களாம்.

உமா மகேஸ்வரி வேலை முடிந்து சென்ற இரவு 10.00&10.30 மணி என்பது அதிகமான வாகனங்கள் சென்றுவரும் நேரம். தொழில்நுட்ப வளாகத்தில் இருக்கும் நிறுவனங்களில் அது ஷிப்ட் முடிந்து, துவங்கும் நேரம் என்பதால் ஏராளமானோர் உள்ளே வந்தும், வெளியே சென்றும் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில்தான் உமா மகேஸ்வரியை வட இந்தியத் தொழிலாளர்கள் இழுத்துச் சென்றனர் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டனர் ஓட்டுனர்கள். ஆனால் அவர்களே, ‘‘கண்ணுக்கு நேரா யாருக்கு எது நடந்தாலும் இவங்க கண்டுக்க மாட்டாங்க சார். அதனால் ஒருசிலர் பார்த்திருந்தாலும் கம்முன்னு இருந்திருப்பாங்க’’ என்றார்கள்.

இருள் கவியத் துவங்கியிருந்தது. மஞ்சள் தலைக்கவசமும், ஃபுளோரசன்ட் மேல்அங்கியும்  அணிந்திருந்த வட இந்தியத் தொழிலாளர்கள் சைட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் சிறு பையன்கள். காலையில் இருந்து உழைத்து களைத்த சோர்வு. ஒல்லியான தேகம். நரம்பு புடைத்திருக்கும் கை, கால்கள். யாருக்கும் உடம்பில் கொஞ்சமும் சதைப்பற்று இல்லை. மெதுவாய் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். தங்கள் சொந்த ஊர் விவரங்களை தயங்கிப் பேசியவர்கள் உமா மகேஸ்வரியின் பெயரைச் சொன்னதும் ‘‘எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்று ஓட்டம் எடுத்தனர். பெரும் அச்சம் சூழ்ந்திருக்கும் அவர்களின் கனக்கும் மனதின் படபடப்பை புரிந்துகொள்ள முடிந்தது. கடந்த சில நாட்களாக, பார்க்கும் கண்களில் எல்லாம் வெளிப்படும் குரோதத்தையும், வன்மத்தையும் எதிர்கொள்பவர்கள் அல்லவா? காவல்துறையின் மிரட்டலையும், விசாரணையையும் தினம், தினம் அனுபவிப்பவர்கள் அல்லவா? அந்த அச்சம் நியாயமானதே.

சிறுசேரி மக்கள்
சிறுசேரி மண்ணின் பூர்வகுடிகள்

வெளியே வந்தோம். இடதுபக்கம் திரும்பி கொஞ்சம் வெளியே வந்தால் வரிசையாக கடைகள். ‘சிறுசேரி’ என்ற பெயர்ப்பலகையும், அதன் பின்னால் பூர்வீக சிறுசேரி ஊரும் தென்பட்டன. இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்ன கருதுகின்றனர்? உள்ளே சென்றோம். ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து நான்கைந்து பெண்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர். ஒரே சிரிப்பு சத்தம். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது வேறொரு முனையில் இருந்து துவங்கினார்கள்.

‘‘இந்த கம்பெனிக இருக்குற இடத்துலதான் நாங்க காலம், காலமா விவசாயம் செஞ்சு வாழ்ந்தோம். நெல்லு, கம்பு, தர்ப்பூசணி, காய்கறிக எல்லாம் போடுவோம். விதவிதமா வெளையும். இப்போ செத்துப்போன பொண்ணு வேலைப் பார்க்குற இடம்தான் என் இடம். நானும், என் ஊட்டுக்காரரும் அதுல வெள்ளரித் தோட்டம் போட்டது இப்பவும் எனக்கு நினைவு இருக்கு. உள்ளே ஒரு ஏரி இருந்துச்சு. அதுலேர்ந்துதான் தண்ணீ பாய்ச்சுவோம். இந்த சிப்காட் காரன் வந்து எல்லாத்தையும் புடுங்கிட்டு உட்டுட்டான். எங்க ஆளுகளுக்கு எல்லாம் வேலை தர்றேன்னான். கடைசியில எங்க வூட்டு பொம்பளை சனத்துக்கு குப்பை அள்ளுற வேலைதான் கொடுத்திருக்கான்’’ என்று ஆற்றாமையுடன் பேசும் அனைவரும், கோடிகளில் விலைபோகும் அந்த நிலம் தங்களிடம் இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குகிறார்கள்.

உமா மகேஸ்வரியின் பேச்சைத் துவங்கியதுமே, ‘‘பயம்மா இருக்குதுப்பா… இந்தா இருக்குற காம்பவுண்ட் சுவரைத் தாண்டிதான் கொலை நடந்த இடம் இருக்கு. இன்னைக்கு அந்தப் புள்ளைக்கு நடந்தது, நாளைக்கு நமக்கு. சேதி தெரிஞ்ச அன்னையிலேர்ந்து திக்கு, திக்குன்னு இருக்கு, தூக்கம் வரமாட்டங்குது. நம்ம புள்ளைகளும் இப்படித்தானே ஏதோ ஒரு ஊர்ல வேலைப் பார்க்குதுக… அதுகளுக்கும் இப்படி ஒரு ஆபத்து நடக்க வாய்ப்பு இருக்குல்ல..’’ என்று கிராமத்துப் பெண்களுக்கே உரிய இயல்புடன் பேசினார் ஒரு பெண். எல்லோரது கருத்தும் அதுதான்.

ஆனால் வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த அவர்களின் கருத்து ஊடகங்களின் கருத்தை அப்படியே எதிரொலிக்கிறது. ‘‘இந்திக்காரங்க வந்தப் பிறகுதான் இவ்வளவு அட்டூழியம். ஒரே திருட்டு. ரோட்டுல நடக்க முடியலை. கடைக்குப் போனா, பொம்பளைங்க நிற்கிறாங்களேன்னு நகர்ந்து நிற்கிறது கூட இல்லை. இப்போ கொலை வேற செஞ்சிருக்கானுங்க. அவங்களை வேலை செய்யுற இடத்துலயே வெச்சுக்கு சொல்லுங்க. வெளியே விட்டா எல்லாருக்கும் ஆபத்து’’ என்று அவர்களை ஏதோ வேற்றுகிரக வாசிகளைப் போலவே கருதிப் பேசினார்கள். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த விசமத்தனமான கருத்துக்கு அவர்கள் இரையாகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இது மிகவும் துயரமானதுதான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பீகார், ஒரிசா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து, குறைந்த கூலிக்கு நாள் முழுக்க கடும் உடல் உழைப்பை மேற்கொள்ளும் அவர்களை ஓரிரு சம்பவங்களை முன்வைத்து கொலையாளிகளாக சித்தரிப்பது எத்தனை மோசமானது? பகலும், இரவும், பனியும், வெயிலும், கோடையும், குளிரும் கடந்து அந்தத் தொழிலாளர்கள் உழைத்துக் கொட்டுவது கொலையாளி பட்டம் பெறவா? அவர்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ள மற்றுமொரு முறை முயற்சிக்கலாம் என்று சிப்காட் உள்ளே சென்றோம்.

காக்னிசென்ட் நிறுவனத்தின் இரவு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. வரிசையாக நான்கைந்து தொழிலாளர்கள் நாங்கள் சொல்வதைக் கூட கேளாமல் அச்சத்துடன் விலகிச் சென்றனர். இளமைத் துடிப்பும், அரும்பு மீசையும் நிரம்பிய ராஜ் என்ற இளைஞன் நின்று பேசினார். கூடவே மற்றொரு சிறுவனும் இருந்தான். ராஜுக்கு 21 வயது. ஒரிசா மாநிலத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். தேர்ந்த அனுபவசாலியாக அவர் பேசியவை எளிய சொற்கள்தான். ஆனால் மனதை நொறுக்க வல்லவை.

வட மாநிலத் தொழிலாளர்கள்ராஜ், ஊரில் மினிபஸ் ஓட்டுனர். அந்த வேலை வேண்டாம் என்று அம்மா தடுத்ததால் இந்த வேலைக்கு வந்துள்ளார். இங்கு கட்டட வேலை பார்க்கிறார். அவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் திருமணம் முடிந்து தனித்தனியே சென்று விட்டனர். ஒரு தங்கைக்கும் திருமணம் ஆகிவிட்டது. அம்மா மட்டும் தனித்திருக்கிறார். வீட்டில் திருமணம் ஆக வேண்டியவர் ராஜ் மட்டுமே.

‘‘அப்புறம் என்ன பையா.. அடுத்து உங்க கல்யாணம்தானே?’’ என்ற கேள்விக்கு அவரிடம் சிறு வெட்கத்தையேனும் எதிர்பார்த்தோம். எதுவும் இல்லை. ‘‘எதுவும் லவ்வா?’’ என்றதும் இதழோரம் ஒரு விரக்தி குறுநகை எட்டிப் பார்த்தது. ‘‘நிறைய கடன் இருக்கு சார். தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கினது’’ என்றார். ராஜ் விவரிக்கும் கணக்குப்படி சுமார் 50 ஆயிரம் ரூபாய் கடன் அவர்களுக்கு இருக்கிறது. அதை அடைத்தபிறகு இன்னும் மூன்று, நான்கு வருடங்கள் கழித்துதான் திருமணமாம். பல வருடங்களுக்கு முன்பே பக்கவாதம் வந்து படுத்தப் படுக்கையாய் இருந்து இறந்துபோன அப்பா மட்டும் இருந்திருந்தால் தன் வாழ்க்கையின் துயரங்கள் சற்று குறைவாக இருந்திருக்கும் என்று மனம் கனக்க சொல்கிறார் ராஜ்.

‘‘10 வயசுலயே கோவாவுக்கு வேலைக்குப் போனேன். நான் ரொம்ப சின்னப் பிள்ளையா இருக்கேன்னு வேலை தரலை. இருந்தாலும் வந்துட்டோம், திரும்பப் போகக்கூடாதுன்னு ஒரு ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு வருஷம் வேலை பார்த்து ஊருக்கு 10 ஆயிரம் கொண்டு போனேன்’’ என்கிறார்.

இவர்களுக்கு நான் ஒன்றுக்கு 300 முதல் 350 ரூபாய் வரை சம்பளம். மாதம் ஒன்றுக்கு சுமார் 9,000 ரூபாய். அதில் 1,000 ரூபாய் செலவுக்கு வைத்துக்கொண்டு மீதியை ஊருக்கு அனுப்பிவிடுகிறாராம். ‘‘இந்தக் கம்பெனியில் வேலை பார்க்குறவங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னு தெரியுமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘அவங்க கூட இணைச்சு யோசிக்கிறதே தப்பு. இது எங்க தலைவிதி. வேற என்ன பண்றது?’’ என்கிறார். சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் திட்டம் எதுவும் தீர்மானமாக இல்லை என்றும், ‘வாழ்க்கை எப்படிப் போகிறதோ அப்படியேப் போக வேண்டியதுதான்’ என்று ஒரு ஞானியைப் போல பேசிய ராஜிடம் உமா மகேஸ்வரியின் மரணம் குறித்துக் கேட்டோம்.

‘‘யாரோ ஒருசிலர் தப்பு செய்யுறதால எங்க எல்லாருக்குமே கெட்டப் பேர். நாங்க இங்கே பொழைக்கத்தான் வந்திருக்கோம். எங்களுக்கும் ஊர்ல அக்கா, தங்கச்சி இருக்காங்க’’ என்கிறார். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த மொத்த பொதுப் புத்தியின் கேள்விகளுக்கும் அது பொருத்தமான; போதுமான பதிலாக இருந்தது.

இரவின் அடர்த்தி மிகுந்திருந்தது. அவர்கள், தங்களின் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். இருவரும் சென்று சமைத்து உண்ண வேண்டும். பகல் எல்லாம் உழைத்த உடல் தசைகளுக்கு சற்றே ஓய்வு தர வேண்டும். அடுத்த நாள் உழைப்புக்குத் தயாராக வேண்டும். நாங்கள் விடைபெற்றோம்.

உமா மகேஸ்வரியின் நினைவுகளை இந்த அளவுதான் சிறுசேரி வைத்திருக்கிறது. இனி எத்தனை நாட்கள் அது நீடிக்கும் என்று தெரியவில்லை. சிறுசேரி மக்கள், ஐடி ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், வட இந்தியத் தொழிலாளிகள் என உழைக்கும் மக்கள் சங்கமிக்கும் அந்த இடத்தில் உண்மையில் எந்த சங்கமித்தலும் இல்லை. இருந்திருந்தால் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.

–    வினவு செய்தியாளர்கள்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. இந்திக்காரங்க வந்தப் பிறகுதான் இவ்வளவு அட்டூழியம். ஒரே திருட்டு. ரோட்டுல நடக்க முடியலை. கடைக்குப் போனா, பொம்பளைங்க நிற்கிறாங்களேன்னு நகர்ந்து நிற்கிறது கூட இல்லை. இப்போ கொலை வேற செஞ்சிருக்கானுங்க. அவங்களை வேலை செய்யுற இடத்துலயே வெச்சுக்கு சொல்லுங்க. வெளியே விட்டா எல்லாருக்கும் ஆபத்து’’

 2. //வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த விசமத்தனமான கருத்துக்கு அவர்கள் இரையாகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது.//

  என்னமோ எல்லாரும் சேர்ந்து வட இந்தியத் தொழிலாளர்கள் மேல் திட்டம் போட்டுக்கொண்டு விஷமத்தனமான கருத்துக்களை வெளிப்பட்டுத்துவது போல் எழுதுகிறீர்கள். அங்க தான் இருக்கு உங்க அரசியல்.

  //யாரோ ஒருசிலர் தப்பு செய்யுறதால எங்க எல்லாருக்குமே கெட்டப் பேர். நாங்க இங்கே பொழைக்கத்தான் வந்திருக்கோம். எங்களுக்கும் ஊர்ல அக்கா, தங்கச்சி இருக்காங்க’’ என்கிறார். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த மொத்த பொதுப் புத்தியின் கேள்விகளுக்கும் அது பொருத்தமான; போதுமான பதிலாக இருந்தது.//

  ஒரு அடையாளத்துடன் இருக்கும் ஒரு குழுவில் ஒருத்தர் தவறு செய்கிறார்களென்றால், அந்த குழுவில் இருக்கும் மற்றவர்கள் அதை முதலில் கேட்கவேண்டும். அப்பொழுது தான் அவர்கள் மேல் குறைந்தபட்ச நம்பிக்கை வரும்.

  வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் கடையில் ஒரு பொருளை வாங்கப்போனால் அவர்கள் அங்கு வரும் பெண்களை தங்கள் மொழியில் கிண்டல் செய்கிறார்கள் (இந்தி/மராத்தி). அது என்னவென்று புரிவதில்லை. அதையும் மீறி கேள்வி கேட்டால் கூட்டமாக சேர்ந்துகொண்டு அடிதடியில் இறங்கிய சம்பவங்கள் சென்னையில் உண்டு.

  //பெரும் அச்சம் சூழ்ந்திருக்கும் அவர்களின் கனக்கும் மனதின் படபடப்பை புரிந்துகொள்ள முடிந்தது. கடந்த சில நாட்களாக, பார்க்கும் கண்களில் எல்லாம் வெளிப்படும் குரோதத்தையும், வன்மத்தையும் எதிர்கொள்பவர்கள் அல்லவா? காவல்துறையின் மிரட்டலையும், விசாரணையையும் தினம், தினம் அனுபவிப்பவர்கள் அல்லவா? அந்த அச்சம் நியாயமானதே.//

  இதே அச்சம் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு இருந்தால் மட்டும் குற்றம் சொல்றீங்க. விந்தையான வினவுலகம்.

  //அது தப்புங்க. இந்த வழக்குல வட இந்தியர்கள் குற்றவாளி, அவ்வளவுதான். அதுக்காக வட இந்தியர்கள் எல்லாரும் குற்றவாளிகள்னு சொல்றது தப்பு. இப்போ, நாங்க ஆன்சைட் வேலைக்கு வெளிநாடு போறோம். அங்கே ஏதோ ஒரு தமிழன் தப்புப் பண்ணிட்டான்னு வைங்க. மொத்தத் தமிழர்களுமே இப்படித்தான்னு சொன்னா நமக்கு கஷ்டமா இருக்கும்ல… அதுபோலதான்//

  தமிழன் ஆன்சைட்டில் அடிக்கு கூத்துக்கள் பல. என்ன தான் கை நிறைய சம்பாதித்தாலும் அவனும் தமிழன் தானே. என்னுடன் வேலை பார்த்த ஆந்திர மாநில பையன் ஒருத்தன். அவனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 170$ சம்பளம். திங்கட்கிழமை காலை ஏர்போர்ட்டிலிருந்து அலுவலகத்துக்கு டேக்ஸியில் வருவதில்லை. ஆனால், வெறும் 30$க்காக டூப்ளிகேட் பில்லை ஸ்கேன் செய்து பணத்தை வாங்குவான். அதனால் இந்தியர்கள் என்றாலே இதைப்போன்ற தகிடுதத்தம் நடக்கும் என்று வெள்ளைக்காரனுக்கு விளங்கும்.

 3. Very Nice written article, The reporter has really done a wonderful job in speculating and manipulating the report just like any other yellow papers.

  ஆனால் வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த அவர்களின் கருத்து ஊடகங்களின் கருத்தை அப்படியே எதிரொலிக்கிறது. ‘‘இந்திக்காரங்க வந்தப் பிறகுதான் இவ்வளவு அட்டூழியம். ஒரே திருட்டு. ரோட்டுல நடக்க முடியலை. கடைக்குப் போனா, பொம்பளைங்க நிற்கிறாங்களேன்னு நகர்ந்து நிற்கிறது கூட இல்லை. இப்போ கொலை வேற செஞ்சிருக்கானுங்க. அவங்களை வேலை செய்யுற இடத்துலயே வெச்சுக்கு சொல்லுங்க. வெளியே விட்டா எல்லாருக்கும் ஆபத்து’’ என்று அவர்களை ஏதோ வேற்றுகிரக வாசிகளைப் போலவே கருதிப் பேசினார்கள். வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த விசமத்தனமான கருத்துக்கு அவர்கள் இரையாகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

  Those village doesn’t have much social knowledge, they have expressed their views of what they have really experienced. Not like your speculations of supporting North indian workers.

  இது மிகவும் துயரமானதுதான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பீகார், ஒரிசா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து, குறைந்த கூலிக்கு நாள் முழுக்க கடும் உடல் உழைப்பை மேற்கொள்ளும் அவர்களை ஓரிரு சம்பவங்களை முன்வைத்து கொலையாளிகளாக சித்தரிப்பது எத்தனை மோசமானது? பகலும், இரவும், பனியும், வெயிலும், கோடையும், குளிரும் கடந்து அந்தத் தொழிலாளர்கள் உழைத்துக் கொட்டுவது கொலையாளி பட்டம் பெறவா?

  Give them Doctorate or comrade on behalf of Vinavu.

  தேநீர் குடித்தபடி சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நான்கைந்து இளைஞர்களிடம் பேசத் துவங்கினோம். முதலில் மிரண்டனர். பின்னர் மெள்ள, மெள்ளப் பேசத் துவங்கினர்.

  ‘அப்புறம் என்ன பையா.. அடுத்து உங்க கல்யாணம்தானே?’’ என்ற கேள்விக்கு அவரிடம் சிறு வெட்கத்தையேனும் எதிர்பார்த்தோம். எதுவும் இல்லை. ‘‘எதுவும் லவ்வா?’’ என்றதும் இதழோரம் ஒரு விரக்தி குறுநகை எட்டிப் பார்த்தது.

  Athu ennan paiyya????

  Journalism is the backbone of democrazy, dont spoil it by manipulating and speculating the original views of public.
  We are respect the views of North Indian workers here,but need to understand the different cultures we are representing.

 4. வட இந்திய தொழிலாளிகள் வேலை செய்யும் கடையில், முதலாளி இல்லாத சமயத்தில் போய்ப் பாருங்கள். ஏதோ அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் தெனாவெட்டாக நக்கலாக பார்ப்பார்கள். அதுவும் உங்கள் உடை கொஞ்சம் பழசாக இருந்துவிட்டால் வேண்டா வெறுப்பாக நடந்துகொள்வார்கள். இந்தி தெரிந்தவர்களிடம் சாதாரணமாகவும், தெரியாதவர்களிடம் நக்கலாகவும் நடந்துகொள்கிறார்கள்.
  எப்போதாவது ரயிலில் தமிழ்நாடு தாண்டி நீண்ட தூர பயணம் செய்திருக்கிறீர்களா? பயணிகளுக்கு இரவு சாப்பாடு கணக்கெடுக்க வரும் கேண்ட்டீன் தொழிலாளிகள் தமிழர்களை பார்த்தவுடன் நக்கலாக, “சாப்பாட்?” என்று கேட்பார்கள் பாருங்கள். அனுபவித்தவர்களுக்கு தெரியும் அவனது நக்கல்.
  இது போன்று எவ்வளவோ விஷயங்கள் உங்களுக்குத் தெரியாதது இல்லை. தெரியாதது போல் எழுதுகிறீர்கள் பாருங்கள், மிகவும் அருமை. இது போன்ற நிலைப்பாடுகளால் நீங்கள் வெகு ஜனத்திடமிருந்து விலகிப் போகிறீர்கள்.
  சங்கம் கட்ட முனவராத IT – தொழிலாளிகளிடம் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது எதிர் பார்த்த ஒன்றுதான். என்ன ஒன்று, அதை நேரடியாக சொல்லும் துணிவில்லை. இந்த விஷயத்தில் IT – துறை நண்பனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
  IT-ல் வேலை பார்க்கும் நான்கு பேர், கற்பழித்து கொலை செய்ய வேண்டாம், ஒரு வட இந்திய தொழிலாளியை அடித்து விட்டதாக வைத்துக்கொள்ளுவோம். அப்போதும் கூட உங்கள் எதிர்வினை இப்படித்தான், ஏதோ நாலு பேர் மடத்தனமா செஞ்சதுக்கு மத்தவங்க என்ன பண்ணுவாங்க-ன்னு கட்டுரை போடுவீங்களா? உங்க அணுகுமுறை இப்படித்தான் இருக்குமா? வினவு தளத்தை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களிடமே இந்த கேள்வியை விட்டுவிடுகிறேன்.

 5. வட இந்திய தொழிலாளர்களின் தமிழக ஊடுருவல் தமிழினத்தின் மீது இந்திய அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல் , தமிழகத்தில் உள்ள தமிழர்களே வேலை கிடைக்காமல் அல்லாடும் போது மிக குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு இருக்கும் வேலைவாய்ப்புகளையும் கெடுக்கின்றனர் வட இந்திய தொழிலாளர்கள் . வேறிடத்தில் வந்து பணி புரிவதால் அவர்களுக்கு எவ்வித பொறுப்புணர்வும் இருப்பதில்லை , வட இந்திய தொழிலார்கள் அச்சமூட்டுகிரார்கள் …வட இந்திய தொழிலார்கள் தங்கள் தாயகத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்ட பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் அரசியல்வாதி அயோக்கியர்களுக்கு எதிராக போராடி உரிமைகளை மீட்பதே சரியான வழியாக இருக்கும் …

  • // வட இந்திய தொழிலாளர்களின் தமிழக ஊடுருவல் தமிழினத்தின் மீது இந்திய அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல் //

   யப்பா புல்லரிக்குது. எப்டின்னே இவ்ளோ அறிவா பேசறீங்க? இத கல்வெட்டுல குறிச்சி வெச்சு பக்கத்துலயே உக்காந்துகுங்க. பின்னால வர சந்ததியர் பாத்து தெளிவா நடந்துப்பாங்க.

   • இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகள் கழித்து பாருங்கள் , தமிழகம் முழுவதும் எத்தனை வெளி மாநிலத்தார் இருக்காங்கன்னு . கல்வெட்டு மட்டுமில்லை சொந்த நிலம்ன்னு தமிழனுக்கு ஒரு அடி கூட மிஞ்சாது .

 6. இந்த கட்டுரை வினவின் “தரத்தில்” இல்லை என்பது கவலைக்குரியது. கட்டுரையின் பாதை, எழுத்தின் தொனி இரண்டுமே “சிறுபிள்ளைத்தனமாக” இருக்கிறது. ஒரு ஆரம்பகட்ட செய்தியாளராக இருக்கலாம். இன்னும் தெளிவாக எழுதுமாறு வினவு வாசகர்கள்

  “கரிய நிற சாலை எங்கள் முன்னே நீண்டு சென்றது” – என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த துயர சம்பவம் விவரிக்க இப்படிபட்ட சொல் அலங்கரிப்பு தேவையா? இல்லை “கருப்பு” என்ற வண்ணத்தையும் “நீண்டு” என்று குறித்து இதை முன்னகூடியே வாசகர் மனதில், சிப்காட் அமைந்திருக்கும் இடத்திருக்கு வில்லத்தன்மை கொடுக்க முயற்சிக்கிரீரா?

  சிறுசேரி மக்களை விசாரித்த பொது இருந்த கருத்து பரிமாற்றம் அதை இவருடைய பார்வையில் நமக்கு கொண்டுவந்த விதம் உண்மையில் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது.
  உதாரணம் : “வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த விசமத்தனமான கருத்துக்கு” என்ற வரி

  நம்மவர்கள் நிறையபேர் வெளியூர் சென்றால் அவர்கள் அடிக்கும் கூத்து தெரிந்ததே. ஏனென்றால் யாரும் தெரிந்த முகம் இருக்காது, அவமானமும் நிலைக்காது என்பதுதான். இது வடைந்தியர் தென்னிந்தியர் என்றில்லை, உள்நாடு வெளிநாடு என்றில்லை, ஆன் பெண் என்றில்லை, உழைக்கும் மக்கள் , உழைக்காத மக்கள் என்றில்லை . பெருவாரியாக இது பொருந்தும்.

  அந்த சிறுசேரி மக்கள், இப்படி தனி மனித ஒழுக்கம் இல்லாத இருக்கும் மனிதர்களுக்குத்தான் அஞ்சுகிறார்கள். இவர்களுக்கு இந்த பயம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது, அது இப்போது கொஞ்சம் கூடுதலாக. அவ்வளவுதான். இப்படி இந்த கட்டுரை ஏகப்பட்ட இடத்தில் தடம் புரள்கிறது.

  தயவு செய்து இதை ஒரு “constructive criticism” என்ற பார்வையில் எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த கட்டுரையை திருத்தி ஏற்றம் செய்யுங்கள்.

 7. The concern expressed toward north Indian workers is ok but you have not strike home the point that all these workers had not come there with their families or spouses except in few cases.
  The african migration to sugarcane farms in America and the adajacent islands , the English army people administration of colonial India etc and there are still more examples where crime on women were conducted as the entire battalian were men without their wives.

 8. சமூக அக்கரை இன்று வரவரக் குறைந்து கொண்டு வருகிறது என்பது உண்மை.எல்லா தரப்பிலும் சமூக அக்கரை குறைந்து கொன்டு வரும் பொழுது,அந்த சமூகத்தின் பிள்ளகளான,சிறுசேரி மென்பொருள் பொறியாளர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இன்றய இளைஞைரை சமூக அக்கரை பற்றிக் கேட்டால்,”என்னுடைய பாட்டையே என்னால் சிந்திக்க முடியவில்லை.இதில் எனக்கு சமூகத்தைப் பற்றிக் கவலைபட நேரம் ஏது?.கிராமங்களில் உள்ள எங்களை இந்த நிலைக்கு உயர்த்திய கல்வியறிவு கிடைக்காத எங்கள் உடன் பிறப்புகளையே மறந்து விட்டோம்.எங்களிடம் சமூக அக்கரை எதிர்பார்ப்பது சரியான ஒன்றல்ல” என்று பதிலளிக்கிறார்கள்.மேலும் இன்றய இளைஞர்களுக்கு பொருளாதாரத் தாக்கம் மட்டுமே உண்டு.சமூகத் தாக்கம் கிடையாது.1905 இல் தமிழகத்தில் சிவகாசிக் கொள்ளை என்ற சாதிக் கலவரம் நடந்தது.அன்று கிராமத்தில் யாரும் படித்தவர்கள் அல்ல.அதன்பின் தமிழகத்தில் 1925 இல் மாங்குடி-பெருமாள்பட்டி சாதிக் கலவரம்.அப்பொழுதும் படித்தவர்கள் அதிகம் இல்லை.அதன்பின்பு 1958 இல் சாதிக் கலவரம் முதுகுளத்தூரில்.அப்பொழுதும் கல்விகற்றவர்கள் குறைவு.அதன்பின்பு 1978 இல் ஆரம்பித்த சாதிக் கலவரங்கள் ஓய்ந்த பாடில்லை.ஆனால் இன்று தமிழகம் கிராமக் கல்வியில் இந்தியாவின் முதல் இடத்தில் உள்ளது.கணக்கெடுப்பின் படி,ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் சராசரியாக 5 பேர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.பின்பு இந்தியாவில் எத்தனை பேர் மென்பொருள் பொறியாளராக வேலை செய்வார்கள் என்று யூகித்துக் கொள்ளலாம். பின்பு ஏன் இந்த சாதிக் கலவரங்கள்.இதிலிருந்த அறிவது என்ன? ஏசுநாதர்,”இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் சம்பந்தமில்லை” என்றார். இன்று கல்வியினால் பணம் அதிகமாகச் சம்ப்பதிக்க முடிகிறது.ஆதலால் இதயம் சுருங்கி விட்டது.தன் பக்கத்தில் உள்ளவர் யார் என்று கூட எங்களுக்கு ஒன்று தெறியாது,என்கிறார்கள்.ஒரு மானை புலி களுத்தில் கடித்து, இரத்ததை உறிஞ்சும் பொழுது, மற்றொரு மான் அங்கு என்னது நடக்கிறது என்று அறியாமலே விழித்துக் கொண்டு நிற்கும்.மான் மிருகம்.இன்று மானுடமும் அந்த நிலைக்குத்தான் தள்ளப் பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கமில்லாதாருக்கு அஞ்சும் இவர்கள், ஒட்டு மொத்த சமூகமுமே ஒழுக்கமற்றுப் போனால் என்ன செய்வார்கள்?

  • நன்றாகச் சொன்னீர் அனபரே! ஒட்டு மொத்தச் சமூகமே இன்று பணம் என்ற ஒன்றின் பின்னால் அலைகிறது! அதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்!

 9. // அவங்களை வேலை செய்யுற இடத்துலயே வெச்சுக்கு சொல்லுங்க. //

  சிறுசேரி மக்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது.. இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்வதைப் போலவே இங்குள்ள காண்டிராக்டர்களும், கம்பெனிகளும் வட இந்திய தொழிலாளர்களையும் குறைந்த ஊதியத்தில் வேண்டிய அளவுக்கு வேலையை வாங்கிக் கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்களே தவிர வேறு பொறுப்பு ஏதும் ஏற்பதில்லை, குறிப்பாக அத்தொழிலாளர்களுடன் கலந்திருக்கும் ஒரு சில கிரிமினல்களின் நடவடிக்கைகளுக்கு..உமா மகேஸ்வரியின் பாதுகாப்பை சிப்காட், போலிசின் பொறுப்பு என்று எப்படி டிசிஎஸ் தட்டிக் கழிக்க முடியாதோ அதே போன்று வட இந்திய தொழிலாளர்களைப் பயன்படுத்தும் காண்டிராக்டர்களும், கம்பெனிகளும் தட்டிக் கழிக்க முடியாது.. வட இந்திய தொழிலாளர்களைப் பற்றிய சரியான விவரங்களை தேவைப்படும்போது அரசுக்கும், காவல்துறைக்கும் தரும் பொறுப்பு அவர்களை பயன்படுத்தும் காண்டிராக்டர்களுக்கும், கம்பெனிகளுக்கும் உண்டு.. கேரளத்தில் இதற்கான சட்டத்தை கொண்டு வர முயற்சி எடுத்திருப்பதாகத் தெரிகிறது..:

  “We will soon issue an order that all employers keep a detailed register of migrant labourers. Those who fail to do so will face punitive measures,” says Labour Minister Shibu Baby John. The previous Left Democratic Front government initiated India’s first welfare scheme for migrant labour in 2010, but only 20,000 labourers have registered with the scheme till now.

  http://m.indiatoday.in//story/kerala-malayalis-gulf-labourers-crisis/1/186347.html

 10. வினவு இந்த விவகாரத்தில் தனது பேனாவை மூடி வைப்பது நல்லது….தொழிலாளி தொழிலாளி என்று வடக்கத்தி திருடர்களுகாய் வரிந்து கட்டுவது ஏனோ?…இவர்கள் தொழிலாளர் அல்ல…அனைவரும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டு,ஒரு வீட்டில் நகையை திருடி விட்டு,சங்கிலி பறித்தல்…கொலை…செய்தல்… இதை செய்வதில் பயமோ…மற்ற எதுவும் இல்லது துணிகர கொலையாளிகளை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்…..வினவு தயவு செய்து இவர்கள் வாழும் வாழ்கையை அனுதாப எழுத்துகளில் எழுத வேண்டாம்…!

 11. dear vinavu, please fix your enemy first and then use your weapon. I was robbed by two criminals in front of chennai airport in the year 1998 at 9:00PM. Later those were identified as a labours (from south tamilnadu) working in trisulam granite quarries.
  Presently, the labours are migrated from north india for their bread and butter. At the same time their poor background and anonymity will lead to do anything including robbing, raping and murder. The same is applicable to the tamils who settled in the slums of mumbai who can do whatever they want and runaway.
  These so-called labours have to stay in their own place and fight for their livelihood with the help you people (vinavu group) instead they runaway from their own land and struggling here (bangalore, hyderabad and mumbai also).
  The industries in south india bring labours from north india and the companies in north india bring the labours from south india. Why don’t you unite the labours. But you can not. Because they are enjoying the ‘life’ with cricket, cinema and low level prostitution. While the politician, bureaucrats and industrialist are enjoying their life with high level prostitution these labours are trying to satisfying their physical need with the availability. Please do not support blindly to the workers.

 12. வினவு இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்….எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் கருத்து பதிவிட்டவர்கள் பெரும்பாலும் வடக்கத்தி நபர்களுக்கு எதிரான கருத்தையே வைத்துள்ளனர்…ஆகவே இன்னும் அவர்களுக்காய் பரிந்து எழுதுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்…அவர்கள் தொழிலாளர் அல்ல…அந்த போர்வையில் உலவும் கொள்ளையர்கள்,திருடர்கள்….காம பொறுக்கிகள்…!

 13. சதீழ்குமர் அவர்களே
  நீங்கள் பின்னூட்டத்தில் உள்ள பின்வரும் வரிக்கு என்ன காரணம் என்று யோசித்து பாருங்கள். உங்களுக்கு காரணம் புரியும்.
  //The industries in south india bring labours from north india and the companies in north india bring the labours from south india//

 14. யாவரும் யார் காரணம் என்ற கேள்வியைக் கேட்டு,பிரச்சனையைச் சரியாக உள்வாங்காது திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.தொழிலாளர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்பது போலவும்,படித்த வெள்ளைச் சட்டைக்காரர்கள் எல்லாம் பண்பாளர்கள் போலவும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.1932 இல் கல்வியற்றவர்கள் மிகுதியாக இருந்த பொழுது தேவதாசி முறை ஒழிக்கப் பட்டது. தமிழ் நாட்டில்,இன்று கல்வியாளர்கள் மிகுதியாக இருக்கும் பொழுது சிவப்பு விளக்குப் பகுதிக்கு அங்க்கீகாரம் என்ற கோரிக்கை கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.இது எதைக் காட்டுகிறது.ஆகவே இதில் கல்வியாளர்கள் எல்லோரும் உத்தமர்போல் பேசுவது,ஒரு திசை திருப்பலே.யார் தவறு செய்தாலும் தவறுதான்.படிக்காதவன் லோ லெவெல் முறையில் சோரம் போகிறான்,படித்தவன் ஹை லெவெல் சோரம் போகிறான்.அதுதான் வேறுபாடு.படித்தவனும் பணத்தைத் தேடுகிறான்.பாமரனும் பணத்தைத் தேடுகிறான்.அவரவர்கள் அறிந்த வழியில் தேடுகின்றனர்.வழியில்லாதவன் வெளிப்படையாகத் திருடுகிறான்.படித்த கூட்டம் மறைமுகமாகப் பேரம் பேசி திருடுகிறது.படித்தவனும்,படிக்காதவனும் பெண்னைப் போகப் பொருளாகப் பார்ப்பதில் யாரும் யாருக்கும்சளைத்தவர்கள் அல்ல.எங்கள் அர்ச்சனையைத்தான் கடவுள் கேட்பார் என்று கூறும் ஆரிய அர்ச்சகர்கள் காஞ்சிபுரத்திலும், திருப்பரங்குன்றத்திலும் கடவுளின் சன்னதியில்,கடவுளின் முன்னாலேயே பெண்களுடன் பாலியல் புணர்ச்சி செய்திருப்பது எதைக் காட்டுகிறது.பெண்கொடுமை ஒரு சமூகக் குற்றம்.குற்றவாழியாக யாரும் பிறப்பதில்லை.குற்றவாழிகள் சமூக விகாரத்தின் வெளிப்பாடுதான்.இந்தியா பல இனங்களை,பல கலாச்சாரத்தைக் கொண்ட நாடு. தமிழகம் (மட்டும்)தான் ஆரிய தாக்கத்தால் பல இனங்களின் கலாச்சாரசங்கமமாக இருக்கிறது. பொதுவாகவே வட இந்திய இலக்கியங்களும்,அதன் வழிவந்த கலாச்சாரமும் கொஞ்சம் கொச்சையானவையே.ஆதலால் வட இந்திய சமூகத்தின் குற்ற வெளிப்பாடு இங்கு அதிகம் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

 15. டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான போது,டில்லியே பற்றி எறிந்தது.அட சென்னையில்கூட அந்தத் தாக்கம் இருந்தது.இங்குள்ள ஊடகங்கள்,”தலை நகரில் இப்படி அனியாயம் நடந்திருக்கிறதே” என்று இங்கு உச்சுக் கொட்டியது.ஆனால் அந்த சமயத்திலும் அதன் பின்பும் பல பாலியல் வன் கொடுமைகள் தமிழகத்தில் நடந்தேரியது.டில்லியில் நடந்த சம்பவத்து அன்று ஸ்ரீவைகுண்டத்தில் புனிதா என்ற 10 வது படிக்கும் மாணவி,பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிப் பலியானாள்.இது ஒரு எடுத்துக்காட்டு.டில்லி சம்பவத்தை தலைப்புச் செய்தியாகப் போட்ட தினத் தந்தி இந்த சம்பவத்தை எங்கோ ஒரு மூலையில் 4 வரிச் செய்தியாகப் போட்டது.மற்ற ஊடங்கள் அதையே வழி மொழிந்தது.டில்லி சம்பவத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவன் 16 வயது நிரம்பிய சிறுவன் என்பதால், அவனைத் தூக்கிலிட முடியாது என்று அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் அளவுக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது.டில்லி சம்பவத்தில் ஈடுபட்டவர் யாரும் இன்றுவரை பிணையில் வர முடியவில்லை.அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.அங்குள்ள நீதி மன்றம் விரைவாகச் செயல்பட்டு,இன்று அவர்களுக்கு மரண தண்டனை அளித்துவிட்டது.ஆனால்,”சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும், மகளிர் நிரை காக்கும் காப்பே தலை” என்பது அரசின் கடமை என்று உலகுக்கு முரசடித்த வள்ளுவன் பிறந்த மண்ணில்,புனிதாவைக் கெடுத்துக் கொலை செய்தவர்,”நிகள்வு நடந்த 15 நாளில் பிணையில் விடப்பட்டு,சுதந்திரமாக அலைகிறார்” என்றும்,”அந்த வழக்கிற்கு ,அரசு வழக்கறிஞர்கூட பணியமர்த்தப் படவில்லை “என்றும் இந்து நாளிதள் இரண்டுவாரத்திற்கு முன்பு வரை சொல்லிக் கொண்டிருந்தது. இதுதான் இன்றயத் தமிழகம்.உலகில் உள்ள இனங்களிலே இந்தியத் தமிழன் வாயிலிருந்து மட்டும்தான்,”நான் என்ன செய்ய முடியும்” என்ற சொல் தாராளமாக வரும். அது மட்டுமல்ல.தமிழகத்தில் மட்டும்தான் இப்படிப் பட்ட நிகள்வுகளுக்கு, பாதிக்கப் பட்ட குடும்பத்தினர் அரசிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.குற்றச் செயல் மறைக்கப் பட்டு விடும். சிறுசேரி நிகள்வுக்காவது,”Save Tamil” என்ற மெத்தப் படித்த கூட்டம், ஒரு நாள் ஆர்ப்பரித்தது.ஆனால் இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு அது மூச்சே விடவில்லை.இதிலும் நகரம் கிராமம் என்ற பாகுபாடு.தமிழன் என்று திரைக்கு முன்பும் பின்பும் சோரம் போகிறவர்களை, காவல் தெய்வங்களாகக் கொண்டாடினார்களோ,நீதி அன்றே செத்துவிட்டது. இப்படியிருக்க இன்று இதையெல்லம் மறந்துஒவ்வொரு தமிழனும், யார் பிரதமர் என்ற கருத்துக் கணிப்பில் மிதந்து கொண்டிருக்கிறான்.இன்று புனிதாக்கள்,உமா மஹேஸ்வரிகள்.நாளை எத்தனை கண்ணகிகளோ? கண்ணகி என்றால் தமிழன்,யார்? என்று கேட்பான்.ஏனென்றால் தமிழன் இந்திரனால் கற்பளிக்கப் பட்ட அகலிகையை அறிவான்.5 பேருக்கு(பஞ்ச பாண்டவர்கள்) மடிவிரித்த வடக்கத்தி பாஞ்சாலியை தெய்வமாகக் கொண்டாடுவான்.டில்லி வெள்ளைத் தோலுக்கு இழைக்கப் பட்ட கொடுமை அறிவான். உள்ளூர் கருவாச்சிகளான கண்ணகிகளை எத்தனை பேர் கன்னிகளித்தாலும் அறியான். நாவில் எச்சில் சொட்ட சொட்ட ஓநாயாக வேடிக்கை பார்ப்பது தமிழனின் பெறுமை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க