privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !

அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !

-

டந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7-ம் தேதி) “அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்கிற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு செய்ய உச்சநீதி மன்றத்திற்கு செல்லும்படி தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம். தனியார்மயத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பு வெளியான உடனே நீதி மன்றத்தில் கூடி நின்ற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் நீதிபதிகளையும், அரசையும் கண்டித்து முழக்கமிட்டபடி உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தியுள்ளனர்.

செவிலியர் மாணவர்கள் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5-வது மாடியிலிருந்து குதிப்பதாக போராட்டம் நடத்திய செவிலியர் மாணவர்கள்.

2010-ம் ஆண்டு செவிலியர் பயிற்சியை முடித்த இம்மாணவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்களை வீதிகளிலும், நீதிமன்றத்திலும் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 25 செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. செவிலியர் பயிற்சி படிப்பிற்கான காலம் மூன்றரை ஆண்டுகள்.   2007-ம் ஆண்டில் சேர்ந்து பயிற்சியை முடித்த மொத்தம் 1861 மாணவர்கள், 25 பயிற்சி மையங்களிலிருந்தும் 2010-ம் ஆண்டு வெளியே வந்தனர். 2011-ம் ஆண்டு இந்த மாணவர்களை இரு பகுதிகளாக பிரித்து (969 பேர் ஒரு பகுதியாகவும் 893 பேர் மற்றொரு பகுதியாகவும்) தேர்வுக்குரிய சரிபார்ப்பு செய்யப்பட்டது.

இவர்களில் 969 பேருக்கு முதல் கட்டமாக வேலை வழங்கப்பட்டது. இதற்கிடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்ததால் பணி அமர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்ததாக அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்று மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே அரசுக்கு நினைவூட்டினர், ஆனால் அது அசைந்து கொடுப்பதாக இல்லை.

2012-ம் ஆண்டு தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள், “தங்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் வேலை வேண்டும். தனியார் பயிற்சி பள்ளிகளும் அரசு அனுமதியுடன், அரசு வழங்கிய சான்றிதழ்களின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. இரண்டு மாணவர்களுக்கும் ஒரே பாடங்கள், ஒரே தேர்வு முறைகள் தான் என்றிருக்கும் போது எங்களுக்கு மட்டும் அரசு வேலை தர மறுப்பது தவறு, இதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுத்தனர். வழக்கை பரிசீலித்த நீதிபதிகள் தனியார் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் எதிர்காலத்தில் வேலை வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதற்கெதிராக தனியார் பள்ளி மாணவர்கள் மறு ஆய்வு மனு தக்கல் செய்தனர். மாணவர்கள் இவ்வாறு மாறி மாறி நீதி மன்றத்தை அணுகிக் கொண்டிருந்த நிலையில். “இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலும் பிரச்சினை நடக்கிறது. அரசுக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று தான், எனவே இதற்கு தேர்வு தான் ஒரே தீர்வு” என்று கூறி அரசு தந்திரமாக ஒரு வேலையை செய்தது.

MRP (Medical Requretment Board)  மருத்துவ பணி தேர்வாணையம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையம் நடத்தும் தேர்வின் மூலம் தான் இனி செவிலியர் வேலைக்கு அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு அரசு, தனியார் என்று இரு தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானது என்று கூறி தனியார் பயிற்சி பள்ளிகளுக்கு ஆதரவாக தேர்வாணையம் ஒன்றை உருவாக்க அரசாணை பிறப்பித்தது. இப்படி மெரிட் என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளுக்கு கல்லாவை கூட்டும் வேலையை  தமிழக அரசு செய்தது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

அரசின் இந்த தனியார் மய ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக அரசு பள்ளி மாணவர்கள் உடனடியாக நீதி மன்றத்தில் தடை கோரி மனு போட்டனர். மாணவர்களின் மனுவை பரிசீலித்த ராமசுப்பிரமணியம் தலைமையிலான ஒருநபர் அமர்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கோரிக்கை சரியானது என்றும், அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அரசாணைக்கும் தடை விதித்தது.

இதற்கு அரசு தரப்பிலிருந்து ஆறு மாதங்களாக எந்த பதிலும் இல்லை. மேல் முறையீடும் செய்யவில்லை, வேலையும் வழங்கவில்லை. மொத்தத்தில் தீர்ப்பை அரசு மதிக்கவில்லை. எனவே மாணவர்கள் வீதியில் இறங்கினர். நீதிமன்ற உத்தரவுப்படி வேலை வழங்கக்கோரி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 2013-ம் ஆண்டு செவிலியர் மாணவர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

பேச்சுவார்த்தைக்கு பயிற்சி பெற்ற செவிலியர் மாணவர்களை நேரடியாக அழைக்காமல், அரசு செவிலியர் சங்கத்தலைவி லீலாவதி மூலம் அழைத்தது. மாணவர்களும் அதை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் சார்பில் லீலாவதி கலந்து கொண்டார். ஆனால் இந்த பேச்சு வார்த்தைக்கு சம்பந்தமே இல்லாத வகையில் தனியார் தரப்பையும் அரசு அழைத்திருந்தது. பேச்சு வார்த்தையில் தனியார் பயிற்சிப் பள்ளிகளின் பிரதிநிதி நேரடியாக கலந்து கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், சுகாதாரத்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு மாணவர்கள் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டால் அனைவருக்கும் உறுதியாக வேலை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே செவிலியர் சங்கத் தலைவி லீலாவதி, “வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன்” என்று மாணவர்களிடம் உறுதியளித்தார். அவர் நம்பிக்கையுடன் கூறியதால் மாணவர்களும் வழக்கைத் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

ஆனால், அதன் பிறகு ஆறு மாதங்கள் ஆகியும் வேலை வழங்கப்படவில்லை. மாறாக மீண்டும் தேர்வாணையத்தை புதுப்பிக்கும் வேலையை துவங்கியது அரசு. எனவே மாணவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். “அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து வேலை தருவதாக கூறியதால் தான் வழக்கை திரும்ப பெற்றோம், ஆனால் கூறியபடி வேலை வழங்காமல் மீண்டும் தேர்வாணையத்தை புதுப்பிக்கும் வேலையில் இறங்கியிருப்பதால் மீண்டும் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டு தடை பெற்றனர்.

கீழ்ப்பாக்கம் செவிலியர் பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவர்கள்.

அரசோ எதுவுமே நடக்காதது போல இன்னொரு ஆறு மாதங்களுக்கு ஆமையை போல நகர்ந்து கொண்டிருந்தது. பிறகு சொல்லி வைத்தாற்போல அரசு தரப்பும், தனியார் தரப்பும் ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தனியார் தரப்பு வழக்குரைஞர் என்ன என்ன வாதங்களை எல்லாம் வைத்தாரோ அதே வாதங்களை அரசு தரப்பு வழக்குரைஞரும் வைத்தார். ஏனென்றால் எல்லாவற்றையும் அவருக்கு தனியார் வழக்குரைஞர் தான் எழுதிக்கொடுத்தார் என்கின்றனர் செவிலியர் மாணவர்கள்.

“இந்தியாவில் உள்ள அனைவருமே இந்திய குடிமகன்கள் தான், எனவே அரசு தனியார் என்றெல்லாம் பார்க்காமல் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்” என்று தனியார் தரப்பு வாதிட்டது. “வேலை இல்லாமல் இருப்பது இரு தரப்பு மாணவர்களுக்குமே பிரச்சினை தான். எங்களுக்கு இரண்டு மாணவர்களும் சமம் தான். இந்த பிரச்சினையால் உரிய இடங்களுக்கு போதிய செவிலியர்களை வேலையில் அமர்த்த முடியவில்லை, துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தேர்வின் மூலம் இருவரையும் வேலைக்கு எடுக்க அரசு தயாராக இருக்கிறது. எனவே இருவருக்கும் வேலை வழங்க வேண்டுமானால் அரசாணை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்” என்று அரசு தரப்பு வாதிட்டது.

ஒரு பக்கம் மாணவர்களுடன் சட்டப் போராட்டம் நடத்துவது போல நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் அரசு தனது சதி வேலைகளை செய்துகொண்டிருந்தது. மூன்றாண்டுகளாக வழக்கு, போராட்டம் என்று செவிலியர் மாணவர்கள் அரசோடு போராடிக் கொண்டிருந்த போது, அரசு சதித்தனமாக இன்னொரு பக்கம் இந்த மூன்றாண்டுகளில் பயிற்சி முடித்து வெளியில் வந்திருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களிடமிருந்து செவிலியர் வேலைகளுக்கான ஆட்களை திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டிருந்தது. இந்த வேலையை நேரடியாக செய்யாமல் என்.ஜி.ஓ- தொண்டு நிறுவனங்களை வைத்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.

2013-ம் ஆண்டில் மட்டும் இவ்வாறு 10,000 செவிலியர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இரண்டு என்.ஜி.ஓ-களிடம் ஒப்படைத்திருந்தது. ஆண்டு இறுதியில் அனைவரும் வேலையிலும் அமர்த்தப்பட்டு விட்டனர். என்.ஜி.ஓ-க்கள் மூலம் வேலைக்கு எடுக்கப்படுபவர்கள் அனைவருமே தற்காலிக ஊழியர்கள் ஆவர். வேலைக்கு எடுக்கும் போதே என்.ஜி.ஓ அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்கின்றது. ஒப்பந்த பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே அவர்களை வேலையில் அமர்த்துகிறது. இவ்வாறு வேலைக்கு எடுக்கப்படும் செவிலியர்கள் எப்போது போகச் சொன்னாலும் வேலையை விட்டு போய் விட வேண்டும்.

இந்த வேலையில் ஈடுபட்டுள்ள இரண்டு என்.ஜி.ஓ-க்களில் ஒன்று அரசு பயிற்சிப் பள்ளி மாணவர்களில் ஒருவரைக்கூட வேலைக்கு எடுக்கவில்லை. எனவே, “ஆள்பற்றாக்குறை நிலவுகிறது, மாணவர்களை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் அரசாணை மீதான தடையை உடனே நீக்க வேண்டும்” என்றெல்லாம் அரசு தரப்பு நீதி மன்றத்தில் கூறியதெல்லாம் பச்சைப் பொய்கள் என்பதையும் அரசுப் பயிற்சி பள்ளிகளை ஒழித்துக் கட்டி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திலானவை என்பதையும் இந்த நடவடிக்கைகள் அம்பலமாக்குகின்றன.

அந்த பொய்களை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, “அனைத்து தரப்பு மாணவர்களும் சமமானவர்களாக இருக்கும் போது அரசு மாணவர்களுக்கு மட்டும் தனிச்சலுகை அளிக்கத் தேவையில்லை” என்று அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் என்கிற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு அரசாணை மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

தனியார் மாணவர்கள்
தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட மாணவர்கள்.

எங்களுக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என்று அரசும். மாணவர்களுக்குள் அரசு மாணவர்கள், தனியார் மாணவர்கள் என்று ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நீதி மன்றமும், சமத்துவ விரும்பிகளைப் போல பேசுவதை கேட்பவர்கள், அப்பாவிகளாக இருந்தால் ‘அரசாங்கமும், நீதிமன்றமும் சொல்றது சரிதானே’ என்று நினைக்கலாம். ஆனால் இது மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையின்பாற்பட்டு வெளியான கருத்து அல்ல.

மருத்துவத்துறையை மொத்தமாக தனியார்மயமாக்க வேண்டுமானால் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று கூறிக்கொண்டு வேலையில் உரிமை கோருவதை எல்லாம் முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டுமானால் சலுகைகள், இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை கோர முடியாதபடி, தனியார் நிறுவனங்களை இழுத்து வரவேண்டும். அரசும் நீதிமன்றமும் கூறுவது போல இரு தரப்பு மாணவர்களும் ஒன்றா? இல்லை. நாம் ஏன் அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களை ஆதரிக்க வேண்டும்?

அரசு பயிற்சிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையிலும், பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழும் அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியாரில் அப்படி அல்ல, தனியாருக்கே உரிய அனைத்து முறைகேடுகளுடனும் தனியார் பயிற்சி பள்ளிகள் இயங்குவதால் யார் வேண்டுமானாலும் 500, 600 மார்க் எடுத்திருந்தாலே நன்கொடை கொடுத்துவிட்டு சேர்ந்து கொள்ளலாம். அதாவது, பணம்தான் இடம் பெறுவதற்கான தகுதி. இதனால் இவர்கள் மேட்டுக்குடி என்று பொருள் அல்ல. அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமலும், வேறு படிப்புகளில் வேலை வாய்ப்பு குறைவு என்பதாலும், பொதுவில் செவிலியர் படிப்பை பெற்றோர்கள் விரும்புகின்றனர். இப்படி வேறு வழியின்றிதான் தனியார் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

அரசு பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசே உதவித் தொகை வழங்கி அதற்கு ஈடாக மாணவர்கள் படிப்பு காலத்தில் மூன்றரை ஆண்டுகள் பயிற்சி என்கிற பெயரில் அருகாமை மருத்துவமனைகளில் தினமும் எட்டு மணி நேரமும், அதற்கு மேலும், இரவு நேரங்களிலும் கூட கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். தனியாரில் பயில்பவர்களுக்கு இந்த பயிற்சியே இல்லை. மருத்துவமனையை சுற்றிப் பார்க்க வருபவர்களைப் போல அவ்வப்போது சில நாட்கள் அவர்களை அழைத்து செல்வதோடு அவர்களின் பயிற்சியை முடித்துக் கொள்கின்றன தனியார் பயிற்சிப் பள்ளிகள்.

செவிலியர் பணிஅடுத்து, அரசு பயிற்சி பள்ளிகளில் இணைய வேண்டுமானால் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும். தினமும் எட்டு மணி நேரமும், அதற்கு மேலும் மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்பதையும், வெளிநாடுகளில் வேலை கிடைத்தாலும் போக மாட்டேன் என்பதையும் நிபந்தனையாக ஏற்றுக் கொண்டவர்களை தான் அரசு பயிற்சி பள்ளிகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நிபந்தனைகள் எதுவும் பணம் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இல்லை. வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு என்ற பெயரில்தான் மாணவர்களை தனியார் பயிற்சிப் பள்ளிகள் இழுக்கின்றன.

வெளிநாடுகளில் இப்போது வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விட இங்கு இருக்கும் சொற்ப வேலைகளில் அவர்களுக்கு பங்கு அளிக்க முயற்சிக்கிறது அரசு. இல்லையென்றால் தனியார் செவிலியர் பள்ளி முதலாளிகளின் தொழில் படுத்து விடும்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தீர்வு என்ற கேள்வியும் இங்கே எழலாம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பலவும் இத்தகைய செவிலியர் பள்ளிகளை அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு நடத்துகின்றன. இதனால் அவர்களது மருத்துவமனைகளில் இலவசமாக உழைப்பை சுரண்டிக் கொள்ளலாம். மேலும் பிராண்ட் மதிப்பு என்பதற்காக மாணவர்கள் இவற்றை சகித்துக் கொண்டே ஆகவேண்டும். அடுத்து இந்த தனியார் மருத்துவமனைகள் எதுவும் அரசு போல ஊதியம் கொடுப்பதில்லை. அதனால்தான் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு வேலையை விரும்புகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவதில்தான் இந்தப் பிரச்சினை தீரும். மாறாக அரசு வேலை வேண்டும் என்று அரசு பள்ளிகளை ஒழிக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் பலியாவது சரியல்ல. அல்லது தனியார் பயிற்சி பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்கவேண்டும் என்றாவது போராட வேண்டும்.இப்படி பள்ளி, மருத்துவமனை என இரண்டு விதத்திலும் தனியார் மயம் மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிராக இருக்கிறது.

அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து முறையிட்ட அரசு மாணவர்கள் “சரிபார்ப்பு முடிக்கப்பட்ட 893 அரசுப் பள்ளி மாணவர்களுக்காவது வேலை வழங்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். முறைப்படி நாங்கள் இப்போது வேலையில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். எனவே வேலைக்கு தேர்வாகிவிட்ட நாங்களும், தனியார் மாணவர்களும் ஒன்றாக போட்டியிடுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்” என்று ஒரு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

செவிலியர் கைது
தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் மாணவர்களை கைது செய்து அழைத்து செல்லும் போலீஸ்.

இந்த மனுவை நீதிபதிகள் பாலசுந்தரம், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததுடன் ‘நீதி’க்காக உச்சிக்குடுமி மன்றத்திற்கு செல்லும்படி அறிவுரையும் வழங்கியது. இந்த அற்புதமான தீர்ப்பு வெளியான அன்று தான் (கடந்த வெள்ளிக்கிழமை) செவிலியர்கள் தீர்ப்பை கண்டித்து உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களில் ஐந்து பெண்கள் ஆறு மாத கர்ப்பிணிகளாக இருந்தனர். செவிலியர்களின் பெரும்பாலான போராட்டங்கள் சென்னை நகரில் தான் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்காக தமிழகம் முழுவதுமிருந்து வருகின்ற பெண்கள் ஒவ்வொரு முறையும் பல்வேறு இன்னல்களை கடந்து தான் வந்து செல்கின்றனர்.

இவர்களில் பெரும்பலான பெண்கள் திருமணமானவர்கள். அரசு வேலை கிடைக்கும் என்று கூறி தான் பெற்றோர்கள் இவர்களை மணம் முடித்து கொடுத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாண்டுகளாகியும் வேலை கிடைக்காததால், குடும்பத்தில் தினம் தினம் சண்டையாக இருக்கிறது. கணவர் பிரச்சினை செய்யாவிட்டாலும் மாமனார், மாமியார் திட்டுகின்றனர் என்கிறார்கள் பல செவிலியர்கள். திருமணமாகாத செவிலியர்கள் திருமணமானவர்களின் நிலையை எண்ணி திருமணம் செய்துகொள்ளவே தயங்குகின்றனர்.

“வேண்டாத கடவுளே இல்லை சார். ஆனா எந்த கடவுளை வேண்டியும் பிரயோசனம் இல்லையே. எல்லாம் எங்களுக்கு எதிராத்தானே அமையுது. ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா” என்று குமுறுகிறார் ஒரு செவிலியர்.

“நீதிபதிங்க மட்டுமா சார் இப்படி இருக்காங்க. நாங்க வாழ்றதா சாகுறதான்னே தெரியாம போராடிட்டு இருக்கோம். இப்படி ஒரு தீர்ப்பு வந்த கோபத்துல தான் அஞ்சாவது மாடியில ஏறி தற்கொலை பண்ணிக்குவோம்னு அரசை மிரட்டி போராடினோம். ஆனா கீழே நின்ன வக்கீலுங்க எல்லாம் எங்களைப் பார்த்து சிரிச்சி கிண்டல் பண்ணதோட, போலீஸ்காரங்களை விட மோசமா நடந்துக்கிட்டாங்க, பொம்பளைன்னு கூட பார்க்காம அடி அடின்னு அடிச்சாங்க. கீழே குதிங்கடி, சீக்கிரம் குதிங்கடின்னு கத்துறாங்க சார். சீக்கிரம் குதிச்சா சாப்பிடவாவது போலாம் டைம் ஆச்சின்னு ஒருத்தன் சொல்றான். இவனுங்க எல்லாம் வக்கீலுங்களா சார்” என்று கோபத்துடன் வழக்குரைஞர்களை திட்டுகிறார் ஒரு செவிலியர்.

செவிலியர் போராட்டங்கள் அனைத்திலும் முதல் ஆளாக நிற்கும் கருப்பசாமி என்கிற செவிலியரை கூட்டமாக சேர்ந்து கொண்டு மிக மோசமான முறையில் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியே தாக்கியுள்ளனர். வழக்குரைஞர்கள் இவ்வாறு செவிலியர்களை தாக்கிக்கொண்டிருக்கும் போது வழக்குரைஞர் சங்கத்தலைவர் பால்.கனகராஜ் அதை தடுக்காததோடு, அவரும் சேர்ந்து கொண்டு திட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார் என்கிறார் கருப்பசாமி.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை தாக்கியதோடு நிற்காமல், காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையிலும் தள்ள வேண்டும் என்று இந்த வழக்குரைஞர்கள் அடம் பிடித்துள்ளனர். அதற்கு இவர்கள் கூறுகின்ற காரணம் நீதிமன்றம் புனிதமான இடமாம், அதை செவிலியர்கள் அசிங்கப்படுத்தி விட்டார்களாம்.

அந்த நீதிமன்றத்தின் புனிதத்தை கடந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சுபாஷ் ரெட்டி போன்ற பல நீதிபதிகளும் சரி, அதிமுக மகளிர் அணியினரும் சரி, இல்லையென்றால் சுப்ரமணிய சாமி போன்ற புரோகர்களும் நாறடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வருகிறது என்றால் இதை போலீசுக்காரனை விட மோசமான ஆளும் வர்க்க விசுவாசம் என்று தான் கூற வேண்டும்.

போராட்டக்காரர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்திய வழக்குரைஞர்கள் மட்டுமல்ல அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த வழக்குரைஞர்களும் நம் கண்டனத்துக்குரியவர்கள் தான்.

“இவ்வளவு பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கும் எங்களை வழக்குரைஞர்கள் கூட புரிந்துகொள்ளாதது ரொம்ப வருத்தமா இருக்கு சார்” என்கிறார் கருப்பசாமி.

பயிற்சி பெற்ற அரசு செவிலியர்களுக்கு சங்கம் எதுவும் இல்லை. இப்போது தான் ஒரு சங்கத்தை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். “இனி உச்சநீதி மன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறிவிட்டதே, என்ன செய்யப்போகிறீர்கள்” என்று கேட்டதற்கு. “25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வழக்குரைஞர் கூறியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு பணத்தை எங்களால் திரட்ட முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் போராடித்தானே ஆக வேண்டும், என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்” என்கிறார் கருப்பசாமி.

அரசின் மறுகாலனியாக்க கொள்கைகளையும், பார்ப்பன பாசிச நடவடிக்கைகளையும் மேலும் செழுமைப்படுத்தி தீர்ப்பாக வழங்கி வரும் உச்சிக்குடுமி மன்றம், செவிலியர்களுக்கு என்ன மாதிரியான தீர்ப்பை வழங்கும் என்பதை ஒரு அடி முட்டாள் கூட அப்படியே வரிக்கு வரி கூறிவிடுவான்.

செவிலியர்கள் நீதி மன்றங்களை மட்டும் நம்பாமல் தமது போராட்டங்களை மக்கள் மன்றத்தில்தான் முக்கியமாக நடத்த வேண்டும். தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களோடு தமது போராட்டங்களையும் இணைக்க வேண்டும். அதற்காக தமக்கான ஒரு வலுமிக்க சங்கத்தையும் கட்டியமைத்துக் கொள்ள வேண்டும்.

–    வினவு செய்தியாளர்.

  1. உழைப்பாளர்களின் தோழர்கள் என்று காட்டிக் கொள்ளும் வினவு, தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியருக்கு வேலை நேரம் குறைவு என்று சொல்வதை நினைத்தால் வித்தியாசமாக உள்ளது.அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் பயின்ற செவிலியர்கள் எல்லோருமே நேரடியாக தனியார் கல்லூரியில் சேர்ந்தவர்கள் அல்ல.அரசு கல்லூரியில் சேர்வதற்கான இடத்தை ஒரு சில மதிப்பெண்களால் இழந்த ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்.அரசு வைத்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு அரசால் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து அவர்கள் சக்திக்கும் மீறி கடன் வாங்கி செலவு செய்துதான் படித்திருக்கிறார்கள்.அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முதலில் அரசு கல்லூரி அப்புறம் அதற்கு அடுத்து மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தனியார் கல்லூரியில் அரசு இடத்தை ஒதுக்குவது என்று டாக்டர், எஞ்சினியர் படிப்பிற்காக இருக்கும் நடைமுறை போன்றதுதான் இது. அரசு கல்லூரியில் படித்து பயிற்சி எடுப்பதற்கும் அரசு வேலைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மத்திய அரசு நடத்தும் றைல்நய் மற்றும் ஏஸீ மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்காக நடத்தப்படும் போட்டி தேர்வில் அனைவருக்கும் சமமான வாய்ப்புதானே கொடுக்கப்படுகிறது.அரசு வேலையோ இல்லை அதில் முன்னுரிமையோ கொடுப்பதற்கு அரசு கல்லூரியில் படித்தவர்களின் கஷ்டங்களும், பிரச்சனைகளும் கணக்கில் கொள்ளப்பட்டால், கஷ்டமான சூழ்நிலையிலும் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் படித்துவிட்டு சில ஆயிரங்களை மட்டும் ஊதியமாக பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்களின் நிலை திருப்தி அளிக்கும் நிலையில் உள்ளதா. அரசு கல்லூரியில் படித்து, பயிற்சி எடுத்தாலே ஒருவரது பணித்திறமை கூடுதலாகிவிடும் என்றால் இதை எல்லா படிப்புகளுக்கும் செயற்படுத்த வேண்டியதுதானே? தமிழகத்தை பொருத்தவரை அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது அரசு கல்லூரியில் பயின்றவர்கள், தனியார் கல்லூரியில் பயின்றவர்கள் என்ற பாகுபாடு செவிலியர் படிப்பை தவிர வேறு எந்த படிப்பிலும் இருப்பதாக தெரியவில்லை. மருத்துவத் துறையிலேயே கூட அரசு, மற்றும் தனியார் கல்லூரியில் படித்த டாக்டர் அரசு பணிக்கு செல்வதற்கு ஒரே விதிமுறைதானே பின்பற்றப்படுகிறது. அரசு கல்லூரியில் படித்து பயிற்சி எடுக்கும் செவிலியர்களின் பணித்தன்மை, ஊதியம் போன்றவற்றை வைத்து அவர்களது நிலையை அரசு வேலைக்கான விதி முறைகளில் இருந்து விதிவிலக்காக எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற வாதம் தவறானது. இன்னும் சொல்லப் போனால் படிப்பதற்கும் அரசு பணம் கொடுத்து, வேலையும் கொடுப்பதற்கு இது ஒன்றும் 2000, 3000 சம்பளம் பெறுகிற அந்த காலம் அல்ல. 30000, 40000 சம்பளம் கொடுக்கிற இந்த அரசு வேலையை நோகாமல் பெறுவதற்குத்தான் அரசு கல்லூரிகளில் படித்த செவிலியர்கள் இந்த நாடகம் ஆடுகிறார்கள். அரசு வேலை என்பது எல்லோருக்கும் பொதுவானது. இது போட்டி தேர்வின் மூலமே கொடுக்கப் படவேண்டும். இன்றைய கால கட்டத்தில் அனைத்து அரசு பணிகளும் போட்டி தேர்வின் மூலமே நிரப்பபடுகிறது. ஏழை மாணவ, மாணவிகள் அரசு வேலை பெறுவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு போட்டி தேர்வுதான் அதையும் தனியார் கல்லூரி முதலாளிகள், பணக்கார வர்க்கங்கள் என்று சொல்லி தடை ஏற்படுத்தினால் தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்கள் காலமெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் அடிமையாகத்தான் வேலை செய்ய வேண்டுமா. என்ன நோக்கத்திற்காக அரசு கல்லூரியில் படித்த செவிலியர்கள் அரசு வேலையை பெற நினைக்கிறார்களோ அதே எண்ணம் தனியார் கல்லூரியில் படித்தர்வகளுக்கும் இருக்கத்தானே செய்யும். அரசு வேலைக்கு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர அது கருணை அடிப்படையில் இருக்கக் கூடாது. படிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு இல்லை எனவே நாங்கள் சரியாக படிக்கவில்லை,நாங்கள் கஷ்டப்படுகிறோம் அதனால் போட்டி தேர்வு எழுதாமலேயே எங்களுக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும் என்று இவர்கள் கேட்பது தவறான முன் உதாரணம் அல்லவா? போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கு என்ன தேவையோ அதை கோரிக்கையாக வைக்காமல் அடுத்தவர்களின் உரிமையை கெடுத்து ஆதாயம் அடைய நினைப்பதில் சுயநலம் மட்டுமே உள்ளது?அரசு பணிக்காக, தனியார் கல்லூரியில் பயின்ற செவிலியருக்கு இணையாக படிப்பில் நாங்கள் போதுமான அளவு தேர்ச்சி பெறவில்லை என்று சொல்லும் இவர்களை அரசு பணியில் அமர்த்தினால் நாளை அரசு மருத்துவமனையில் ஒரு திறமையான செவிலியர் உருவாக முடியுமா, உலகதரத்தோடு போட்டியிட முடியுமா இல்லை இவர்களின் தகுதி குறைவினால் பின்னாளில் நோயாளிகளுக்கு நவீன சிகிச்சைகள் கொடுக்க முடியுமா?. தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு எல்லாமே முறையாக கற்று கொடுக்கப் படுகிறது என்று யார் சொன்னது. அப்படிஎன்றால் அரசு பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டு தனியார் பள்ளி, கல்லூரிகளை ஊக்குவிக்கவேண்டியதுதானே? அரசு மருத்துவமனைகளில் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று இவர்கள் சொல்வது உண்மை என்றால் அளவிற்கு அதிகமான இவர்கள் பணி அனுபவம் போட்டிதேர்வின் போது இவர்களுக்குத்தானே சாதகமாக இருக்கும். அரசு கல்லூரி, அரசு வேலைக்கான போட்டி தேர்வு என்கிறபோது வினாக்களும் அரசு மருத்துவமனயை சார்ந்துதானே இருக்கும் அப்புறம் இவர்களுக்கு என்ன கஷ்டம். பல லட்சங்கள் செலவு செய்து விட்டு தனியார் கல்லூரியில் படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில், இல்லை வேறு ஏதாவது நிறுவனத்தில் வேலை செய்தாலோ ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஊதியம், பணிநேரம், பணி பாதுகாப்பு என்பது மிக குறைவு. அப்படி இருக்கையில் படித்து முடிப்பவர்களுக்கு அரசு வேலை என்பது ஒருகனவுதான்.அரசு கல்லூரியில் படித்த செவிலியருக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படுமேயானால் எதிர்காலத்தில் எல்லா அரசு வேலைகளையும் தவிர்த்து செவிலியர் வேலையில் மட்டும் ஒரு சமத்துவமின்மை உருவாகி குழப்பங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் ஏற்கனவே தனியார் கல்லூரியில் படித்து முடித்த லட்சக்கணக்கான செவிலிய மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் பயின்றால் அரசு வேலைவாய்ப்பு குறைவு தனியார் மருத்துவமனையில்தான் வேலைசெய்து ஆக வேண்டும் என்ற கண்டிப்பான நிலை வரும்போது ஆர்வமின்மை காரணமாக தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து எதிர்காலத்தில் நோயாளிகளுக்கும் செவிலியருக்கும் உள்ள விகிதாச்சாரத்தில் அதிக அளவு வேறுபாடு ஏற்படும் என்பது யதார்த்தமான உண்மை. இந்த விஷயத்தில் எத்தனையோ லட்சம் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளாமல் அரசு வேலையை ஈசியாக பெற தகுதியில்லாத காரணத்தை சொல்லிக்கொண்டிருக்கும் அரசு செவிலியருக்கு ஆதரவாக வினவு எழுதியிருப்பது தவறானது ஆகும். இதற்காக தனியார் கல்லூரிகளின் சுய லாபம் என்று சொல்வது இவர்களின் தவறான வாதத்திற்கு வலு சேர்ப்பதற்கு சொல்வது ஆகும்.நல்ல கட்டமைப்பு உள்ள அரசு மருத்துவமணையில் இருப்பவர்களுக்கு அரசு வேலை கொடுப்பதில் தவறு இல்லையென்றால் அப்புறம் அரசு வேலையை அரசு கல்லூரியில் படித்த டாக்டருக்கு மட்டும் கொடுக்கவேண்டியதுதானே? ஏன் தனியார் கல்லூரியில் படித்த டாக்டருக்கு கொடுக்கிறார்கள். அரசு கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற இந்த முறையற்ற நியாத்தினால்தான் அரசு வேலைக்கு சென்ற பிறகும் எங்கள் பிள்ளைகளுக்கும் அரசு வேலை கொடுங்கள் என்று இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அரசு வேலையில் நுழைந்துவிட்டால் அப்புறம் கால காலமாக அவர்கள் குடும்பத்திற்குத்தான் என்றால் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும். நோகாமல் அரசு வேலையை பெற நினைப்பவர்கள் இருவர்தான். ஒருவர் ஆசிரியருக்கு படித்தவர்கள், மற்றொருவர் அரசு செவிலியர் கல்லூரியில் படித்தவர்கள். இதில் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கொண்டுவந்தாயிற்று. அரசு செவிலியர் மாணவிகளின் போராட்டத்தால் மீண்டும் அவர்கள் முருங்கை மரம் ஏற வாய்ப்பு உள்ளது. ஒரே படிப்பை படித்தவர்களில் ஒரு சாரர் மட்டும் 3000, 4000 க்கும் தனியார் நிறுவனத்தில் காலமெல்லாம் வேலை செய்ய வேண்டும் போல்.அரசு கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு ஒரு சில மதிப்பெண்களால் அரசு கல்லூரியை இழந்து அதன் பின் கடன் பட்டு பல லட்சங்கள் செலவு செய்து தனியார் கல்லூரியில் படித்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள் என்றால், +2 வரை கான்வென்டில் படித்து அதிக மதிப்பெண் பெற்று அரசு செவிலியர் கல்லூரியில் சேர்ந்து அரசின் உதவி தொகையையும் பெற்று படித்தவர்கள் ஏழைகளா? வேண்டுமானால் ஒன்று செய்யலாம் ஆரம்ப பள்ளியில் இருந்து செவிலியர் கல்லூரி படிப்பு வரை அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தனியார் கல்லூரியில் படித்த செவிலியர்கள் தங்களது உரிமைக்காக போராடும் நேரத்தில் தனியார் கல்லூரிகளை அரசு ஊக்குவிக்கிறது என்று நீங்கள் எழுதியிருப்பது சரியானது அல்ல. அப்படிஎன்றால் இந்த தனியார் கல்லூரிகள் பள்ளிகள் எல்லா படிப்புகளிலும் உள்ளது அந்த மாணவ, மாணவியருக்கு எல்லாம் அரசு வேலை கொடுக்க கூடாது என்று உங்களால் சொல்லமுடியுமா. கடைசியாக வினவிடம் சில கேள்விகள் விரும்பினால் பதில் சொல்லுங்கள். (1) தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலை இல்லை என்றால் அரசு அவர்களுக்கு ஏன் கல்லூரிகளை தேர்ந்த்தேடுக்கும்போது அவர்களுக்கு ஏன் கவுன்சிலிங் வைக்க வேண்டும். (2). அரசு மருத்துவமனைகளில் படிக்கும் செவிலியருக்கு வேலை நேரம் அதிகம், கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்கிறீர்களே அப்போ அதே மருத்துவமனையில்தான் அரசு கல்லூரியில் படித்த டாக்டர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும்தான் அரசு வேலை தனியார் கல்லூரியில் படித்த டாக்டருக்கு அரசு வேலை கொடுக்க கூடாது என்று ஏன் இதுவரை சொல்லவில்லை. (3) +2 வரை தனியார் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு அப்புறம் அரசு செவிலியர் பயிற்சியில் சேந்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் அவர்களை விட தனியார் கல்லூரிகளில் படித்த ஏழை மாணவிகள் அரசு வேலை பெற தகுதி இல்லாதவர்களா? அரசு கல்லூரிகளில் படிக்கும் செவிலியருக்கு மட்டும்தான் அரசு வேலை கொடுக்க வேண்டுமா? நீங்கள் நியாயமானவராக இருந்தால் ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலை என்று சொல்லமுடியுமா? +2 வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு மதிப்பெண் குறைவால் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் படித்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்க கூடாது என்பது என்ன நியாயம் .

    • மத்திய அரசு நடத்தும் Railway மற்றும் ESI மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்காக நடத்தப்படும் போட்டி தேர்வில் அனைவருக்கும் சமமான வாய்ப்புதானே கொடுக்கப்படுகிறது.

  2. அய்யா தங்களது கட்டுரை ஓரளவு நடுநிலையோடு இருக்கிறது, நானும் தனியார் கல்லூரியில் பயின்றவன் தான் இப்போது போராடும் இந்த ஒரு பகுதியினருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை, ஆனால் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர் பயிற்ச்சி மையங்களில் பயின்றவர்கள் மட்டுமே வேலை பார்க்க முடியும் என்பது ஏற்ப்புடையது அல்ல…

  3. அடுத்து இந்த தனியார் மருத்துவமனைகள் எதுவும் அரசு போல ஊதியம் கொடுப்பதில்லை. அதனால்தான் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு வேலையை விரும்புகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவதில்தான் இந்தப் பிரச்சினை தீரும். மாறாக அரசு வேலை வேண்டும் என்று அரசு பள்ளிகளை ஒழிக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் பலியாவது சரியல்ல///

    சரி தனியார் மருத்துவமனையில் சரியாக சம்பளம் தரவில்லை, அதை சரிசெய்ய கேரளா மாதிரி Minimum Wages for Professional Nurses என்று ஒரு Standard வரையறுத்து அது ஒவ்வொரு மருத்துவமனையிலும் செயல்படுத்த படுதாண்ணு ஒரு கமிட்டி போட்டு Monitor பண்ணுங்க என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம் ஆனா யாரும் கண்டுக்கலை… இப்ப எப்படியோ அரசு வேலைக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு ஆனா ஊடகங்கள் எங்க பிரச்சனைக்கு எடுத்து சொல்லாம ஒருதலைபட்சமா இருக்குது… நாங்க இன்னமும் இங்க படிச்சிட்டு குடும்பம் குட்டியவிட்டு வெளிநாட்டுகாரன் கிட்ட பிச்ச எடுக்கணுமா அண்ணே…

  4. Respected sir,

    Its impossible to give all the govt. post should give only those who are studied in Govt. colleges.(Infact Mr. Durairaj discuss some very good important points)

    Plenty of private college also, they are contacting very good class, in the all branches.

    Those peoples also equally qualified, so best think contact common examination and interview recruitment for nurses in Govt. Hospital, even those marks we will give the weight age for recruiting private hospital also.

    Thanks with Regards
    Udayan

Leave a Reply to Salomon Raj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க