privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !

ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !

-

லக அளவில் சட்டம், நீதி, ராஜா, ராணி, ஜேம்ஸ் பாண்ட், பாண்டின் காதலிகள் என்று ஏகப்பட்ட ‘பாரம்பரியங்களுக்கு’ பெயர் போனது இங்கிலாந்து நாடு. அத்தகைய நாட்டின் ‘பாரம்பரியம்’ மிக்க ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஆயுத பேரங்களில் முறைகேடுகள் செய்ததாக அதே நாட்டில் தெரிய வந்தது. இதைக் கண்டு அஞ்சிய இந்திய பாதுகாப்பு அமைச்சகம், தமிழ் சினிமா கிளைமேக்சில் வரும் தினத்தந்தி போலிசு போல சும்மா பெயரெடுக்க விரும்பியது. அதன்படி அந்நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ்

மன்னர்களும், மகாராஜாக்களும் தங்களது பெருமையை பறைசாற்றிக் கொள்ள, சுய தம்பட்டமடிக்க ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்கிக் குவிப்பது போல இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் தங்களது ராணுவ பெருமையை பறைச்சாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் பீதியை கிளப்பிவிட்டு தேசபக்தி என்ற பெயரில் பன்னாட்டு ஆயுத நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கவும்  ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன.

பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் (BAE) சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ 8,500 கோடிக்கு 66 மேம்பட்ட ஜெட் பயிற்றுநர் விமானங்களை (Hawks Advanced Jet Trainer) இந்திய விமானப்படைக்கு வாங்குவதாக 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் 2010-ல் சுமார் ரூ 7,000 கோடிக்கு 57 விமானங்களும், 2011-ல் சுமார் ரூ 3,600 கோடிக்கு 20 விமானங்களும் மேலதிகமாக வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ரூ 25,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய 143 விமானங்களுக்கான இந்த ஒப்பந்தங்களின்படி 24 நேரடியாக பிரிட்டனில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் என்றும் மீதமுள்ள 119 விமானங்களை இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல்சுக்கு (HAL) உற்பத்தி உரிமம் கொடுக்கப்படும் என்றும் ஒப்பந்தமிட்டுக் கொண்டது பி.ஏ.ஈ சிஸ்டம்ஸ்.

இந்த ஹாக்ஸ் பயிற்றுநர் விமானங்களுக்கு என்ஜின்கள் வாங்குவதற்காக உலகின் விமான என்ஜின் தயாரிப்பில் அமெரிக்காவின் ஜி.இ (GE) நிறுவனத்திற்கு அடுத்த படியாக இரண்டாமிடத்தில் இருக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் எச்.ஏ.எல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தது.

ஆசியப்பகுதி நாடுகளுக்கு என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் சப்ளை செய்ய ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் கொடுத்ததாகவும், அந்நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான டிக் டெய்லர் 2012-ம் ஆண்டு அம்பலப்படுத்தினார். இந்தோனேசியாவின் கருடா விமான நிறுவனத்துக்கு ட்ரெண்ட்-700 ரக என்ஜின்களை விற்பனை செய்ய அப்போதைய அதிபர் சுகர்தோவின் மகன் டாமி சுகர்தோவுக்கு சுமார் 2 கோடி அமெரிக்க டாலர்களும், ஒருரோல்ஸ்-ராய்ஸ் காரும் லஞ்சமாக கொடுக்கப்பட்டதை அவர் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.

இம்மாதிரியான முறைகேடுகள் 1980-90-களிலேயே தொடங்கி விட்டதாகவும், இது ஒரேயொரு உதாரணம் மட்டுமே என்றும் சீனா உட்பட பல ஆசிய நாடுகளின் ராணுவ மற்றும் விமான நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்ச முறைகேடுகள் பலவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் ஈடுபட்டதாக அவர் அம்பலப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் தீவிர பொருளாதார மோசடிகளுக்கான விசாரணை அலுவலகம் (SFO) ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விற்பனை முறைகேடுகளை விசாரித்து, லண்டன் வாழ் இந்தியர்களான சுதிர் சவுத்திரி மற்றும் அவருடைய மகன் பானு சவுத்திரி ஆகிய ஆயுத புரோக்கர்களை கடந்த மாதம் கைது செய்தது. முதலாளி இங்கிலாந்தானாலும், அவனுக்கு புரோக்கர் வேலை பார்த்தது சாட்சாத் இந்தியர்கள் என்பதால் மோடி பக்தர்களும், காங்கிரஸ் அன்பர்களும் பெருமை கொள்ளலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சின்
ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சின் வாங்குவதில் ஊழல்

இப்படி இங்கிலாந்தில் ஊழல் வெளிப்பட்டு பேசப்பட்ட உடன், எச்.ஏ.எல் உடனான ஒப்பந்தங்களில் சட்ட விரோதமான இடைத் தரகர்களை ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்தியது தொடர்பாக ஒரு ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப் போவதாக சி.பி.ஐ அறிவித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் கெயில் மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கான காற்றுசுழலிகளை (Gas Turbine) எச்ஏஎல்லுக்கு சப்ளை செய்ததில் இடைத்தரகர்களை பயன்படுத்தியதாக ரோல்ஸ்-ராய்ஸ் ஒப்புக்கொண்டதாகவும், அந்த சுயவிளக்கத்தை எச்ஏஎல்-ன் ஊழல் தடுப்புபிரிவு பாதுகாப்பு அமைச்சகத்தின் விசாரணைக்கு அனுப்பி வைத்ததாகவும், எச்.ஏ.எல்லுடன் ரோல்ஸ் ராய்சின் இராணுவ ஒப்பந்தங்கள் அனைத்திலும் இடைத்தரகர்களின் பங்கையும், முறைகேடுகளையும் விசாரிக்க சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஆஷ்மோர் பிரைவேட்  லிமிடெட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் பத்னி என்பவரை இந்தியாவுக்கான தனது தரகராக 2013 ஜனவரி வரை பயன்படுத்தியதாக ரோல்ஸ் ராய்ஸ் கூறியிருந்தது.

அதாவது இங்கிலாந்து மைனர் ரோல்ஸ்-ராய்ஸ் தானாகவே வாலண்டியராக வந்து வண்டியில் ஏறியதாக, அதாவது 2013 டிசம்பரில் ரோல்ஸ்-ராய்ஸ் அனுப்பிய சுயவிளக்க கடிதத்தின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மீது விசாரணை நடவடிக்கைகள் தொடங்கியதாக நம்மை நம்பச் சொல்கிறார்கள். உண்மையில், இவ்வளவு நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது போல நடித்த பாதுகாப்பு அமைச்சகம் ரோல்ஸ்-ராய்ஸ் பெயர் இங்கிலாந்தில் நாற ஆரம்பித்தவுடன், சென்ற ஆண்டு இத்தாலியில் அம்பலமான இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் அசிங்கப்பட்டது போல அசிங்கப்படுவதை தவிர்க்க முந்திக் கொண்டு விட்டது.

மேலும் இவர்கள் விசாரணை என்று அறிவித்த உடனேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எப்படி ஊழல், யாரால் ஊழல், எவ்வளவு பணம் என்பதை விசாரிக்காமலேயே தெரிவித்திருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? இதிலிருந்தே பாதுகாப்பு அமைச்சகத்தின் மேல் தட்டுக்கும், இந்த கார் கம்பெனிக்கும் நடந்த விவகாரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியும் என்பது தெரிகிறது. அந்த நட்பின் அடிப்படையில்தான் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வேறு பேரங்களை மனதில் கொண்டு வெளியே விட்டிருக்கிறார்கள். ஜெயாவின் சொத்துக் குவிப்பையே இத்தனை ஆண்டுகளாய் நிரூபிக்க முடியாத போது ரோல்ஸ் ராய்சின் ஊழலை மட்டும் ஓரிரு நாட்களில் கொண்டு வந்து விட முடியுமா என்ன?

சி.பி.ஐ விசாரணை அறிவிக்கப்பட்டவுடன், ‘நல்ல புத்தி’ வந்த ரோல்ஸ் ராய்ஸ் ஹாக்ஸ் பயிற்றுநர் விமானங்களுக்கு அடூர் வகை என்ஜின்கள் சப்ளை செய்ய இடைத்தரகர்களுக்கு 18 கோடி கொடுத்ததாகவும், அதை இந்திய அரசுக்கு திருப்பி செலுத்தி விடுவதாகவும் எச்.ஏ.எல்-க்கு கடிதம் எழுதியுள்ளது. அதாவது பிடிபட்டவுடன் திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நாடகமாடுகிறது. ஆனால் இவ்வொப்பந்தத்திற்கு சுமார் ரூ 500 கோடி வரை கமிஷனாக கைமாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் மறைக்கும் பெரிய திமிங்கிலங்கள்

ஹாக்ஸ் பயிற்றுநர் விமானங்களுக்கு அடூர் வகை என்ஜின்கள் மட்டுமின்றி ஜாகுவார், அவ்ரோ, கிரண் போன்ற விமானங்களுக்கும், கடல்-அரசன் (Sea King) ஹெலிகாப்டர்களுக்கும் ரோல்ஸ்ராய்சிடமிருந்து என்ஜின்களை ஹெச்.ஏ.எல் வாங்கி வருகிறது. மேலும் பல்வேறு இராணுவ விமானங்களை பழுது பார்க்கும், பராமரிக்கும் ஒப்பந்தங்களை ரோல்ஸ் ராய்சுடன் இந்திய விமானப்படை போட்டுக் கொண்டுள்ளது. எச்.ஏ.எல் – ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் பெங்களூருவில் ஐ.ஏ.எம்.பி.எல் (International Aerospace Manufacturing Private Limited) என்ற விமான என்ஜின் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை கூட்டிணைவில் உருவாக்கியிருக்கின்றன. இத்தனை ஒப்பந்தங்களுக்கு பின்புறமும் கைமாறிய கமிசன் தொகைகள் பல ஆயிரம் கோடிகளை தாண்டலாம். ஆக சிறிய மீனை கொடுத்து விட்டு திமிங்கலங்களை மறைத்து விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

1980-களில் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழல் மற்றும் அடுத்தடுத்து அம்பலமான ஊழல்களை அடுத்து, தமது ஆயுத பேரங்களை புனிதப்படுத்திக் கொள்ள, ‘இனி இடைத்தரகர்களை பயன்படுத்துவதில்லை’ என்றும் ‘இடைத்தரகர்களை பயன்படுத்துவதும், கமிஷன் கொடுப்பதும் குற்றமென்றும்’, ‘பாதுகாப்பு துறைக்கு தளவாடங்களை வழங்கும் நிறுவனங்கள் தங்களது மூன்றாண்டுகால நடவடிக்கைகள் குறித்து சுயஉறுதிச் சான்றை அளிக்க வேண்டுமென்றும்’, ‘ராணுவத்துக்கான தளவாடங்களை நேரடி உற்பத்தியாளரிடம் இருந்து மட்டுமே வாங்குவது, மூன்றாம் தரப்பிடம் இருந்து கொள்முதல் செய்வதில்லை’ என்றும் அடுத்தடுத்து புதிய வழிகாட்டி விதிமுறைகளை இந்திய ஆளும் வர்க்கம் அறிவித்துக் கொண்டிருந்தது.

ஆனால் அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் விவகாரங்கள் இந்திய பாதுகாப்புத் துறையும் அதன் கொள்முதல் துறையும் ஊழலில் ஊறித் திளைக்கின்றன என்பதை உறுதி செய்தன. 2012-ம் ஆண்டு அம்பலமான டாட்ரா கனரக வாகனங்களை வாங்குவதில் நடந்த முறைகேடுகளிலும், சென்ற ஆண்டு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகளும், இந்த வழிகாட்டி விதிமுறைகளை அரசோ பன்னாட்டு ஆயுத நிறுவனங்களோ கழிவறை காகிதமாகக்கூட மதிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதி செய்தன. இதில் காங்கிரசு மட்டுமல்ல, கார்கில் சவப்பெட்டி ஊழல் புகழ் பாஜகவிற்கும் பங்கு இருக்கிறது என்பது முக்கியம்.

தேசத்தின் பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளிப்படை தன்மையற்ற, இடைத்தரகர்களின் வலைப் பின்னல்கள் மூலம் நடக்கும் ஆயுதபேரங்கள் அனைத்திற்குப் பின்னாலும் இம்மாதிரியான ஆயிரக்கணக்கான கோடி ஊழல்கள், முறைகேடுகள் நடக்கின்றன. மற்றொரு உதாரணமாக இந்திய விமானப்படை ஜெட் பயிற்றுநர் விமானங்களை (AJT) வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டிருக்கும் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் (BAE) சிஸ்டம்ஸ் நிறுவனமே 2010-ம் ஆண்டு ஊழல் முறைகேடுகளுக்காக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் 450 மில்லியன் டாலர் வரை (சுமார் 2500 கோடி ரூபாய்) அபராதம் கட்டியிருக்கிறது.

பேரங்களும் ஒப்பந்தங்களும் ரகசிய மூடுதிரைக்குள்ளிருந்து வெளியாகாத வரை ஊழலற்றதாக தோற்றமளிக்கும், வெளியானால் சந்தி சிரிக்கும். இதுதான் வல்லரசு இந்திய இராணுவத்தின் யோக்கியதை. அப்படி வாங்கப்படும் ஆயுதங்கள், கருவிகளின் தரம் என்ன? ஏற்கனவே ரசியாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் ரக விமானங்கள் அதிகம் விபத்துக்களை சந்திப்பதாக சீன் போட்டவர்களின் அருகதையை ரோல்ஸ்ராய்சின் ஊழலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இப்படி இவர்கள் கமிஷன் பெற்று வாங்கும் ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்களை வைத்து போர் நடத்தவில்லை என்றாலும் அவற்றின் தரம் காரணமாக வீரர்களே சாகிறார்கள். சென்ற மாதம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்துரத்னா’ என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் திடீர் தீ விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமுற்று 2 பேர் பலியாயினர். இப்படி கப்பற்படையில் மட்டும் ஏராளம் விபத்துக்கள். பாவம் வீரர்கள்!

அண்டை நாடுகளுடனான பாதுகாப்பு அச்சுறுத்தல் பீதியை கிளப்பிவிட்டு அதன் மூலம் ஆயுதங்களையும் கருவிகளையும் வாங்கி நம் வரிப் பணத்தை பன்னாட்டு ஆயுத கம்பெனிகளுக்கு வாரி இறைப்பதற்கு சகல முறைகேடுகளையும் கையாள்கின்றன இந்திய ஆளும் வர்க்கங்கள். இடைத்தரகர்கள், அதிகாரிகள், இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் கம்பெனிகள், ஏகாதிபத்திய நாடுகள் என்று நீளும் இந்த வலைப்பின்னல் அழுகி நாறும் இச்சுரண்டல் அமைப்பின் சீரழிவைக் காட்டுகிறது.

ஆக இராணுவமென்றால் உங்களுக்கு தியாகத்தை நினைவூட்டியவாறு அவர்கள் கல்லாவை சுருட்டிக் கொள்கிறார்கள். தியாகத்தின் விலை அவ்வளவுதான்.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க