Sunday, January 17, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் டிக்கெட் இல்லையா - இந்திய ரயில்வே கொல்லும் !

டிக்கெட் இல்லையா – இந்திய ரயில்வே கொல்லும் !

-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர், ராமன் என்கிற கல்லூரி மாணவர். கடந்த புதன்கிழமை 12.03.2014 அன்று இம்மாணவர், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பயணச் சீட்டு எடுக்காததால் பரிசோதகரை பார்த்து தப்பிக்க எண்ணி, கால் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனில் இது ஒரு ஒழுக்கமின்மை, மோசடி, மாணவர்களின் விட்டேத்திதனம் குறித்த பிரச்சினையாக அண்ணா ஹசாரேவால் அரசியலைப் பேச நிர்ப்பந்திக்கப்பட்ட மேன்மக்கள் கருதுவார்கள். உண்மை என்ன?

மாணவர்கள் போராட்டம்
படம் : நன்றி தினகரன்

சென்னையை அடுத்துள்ள வேப்பம்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில்தான் இம்மாணவரான ராமன், இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தான். கூலி வேலை பார்த்து வந்த, அவனுடைய அப்பா ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இறந்துள்ளார். அவருக்குப் பிறகு அம்மா தான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். ராமனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். அப்பா இறந்த பிறகு ராமன், பட்டாபிராமில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளான். தினமும் பட்டாபிராமில் இருந்து மின்சார ரெயிலில் பயணிக்க வேண்டியிருந்ததால் ரயில்வே சீசன் பயண அட்டையை பயன்படுத்தி வந்திருக்கிறான்.

அன்று காலை 8 மணியளவில், திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் நண்பர்களோடு ஏறியுள்ளான். அந்த வண்டி ஏற்கெனவே பயணிகளால் நிரம்பி வழிந்தபடி வந்ததால், நிற்கக்கூட இடமில்லாமல் இருந்திருக்கிறது. எனவே கூட்டம் குறைவாக இருந்த அடுத்தடுத்த பெட்டிகளை நோக்கி ராமன் நண்பர்களோடு நகர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி மாறி மாறி இறுதியில் கூட்டம் குறைவாக இருந்த முதல் வகுப்பு பெட்டிக்குச் சென்றிருக்கின்றனர்.

ரயில் திருநின்றவூர் அருகே சென்று கொண்டிருந்திருந்த போது பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்திருக்கிறார். ராமனிடம் பயணச்சீட்டை காட்டும்படி கேட்டிருக்கிறார். அவர் மாத சலுகை பயண அட்டையை காண்பித்துள்ளான்.

ஆனால் அந்த சலுகை பயண அட்டை மார்ச் 3-ம் தேதியோடு காலாவதியாகி விட்டிருக்கிறது. பொதுவில் மாணவர்கள் இந்த பயண அட்டையை உரிய தேதிகளில் எடுக்கிறார்கள் என்றாலும் சமயத்தில் ஒரு சில தினங்கள் எடுக்காமலே பயணிப்பது உண்டு. சில பரிசோதகர்களும் மறக்காமல் எடுக்க வேண்டும் என்று எச்சரித்து விட்டுவிடுவார்கள். இங்கே ராமன் அப்படி எடுக்காமல் இருந்ததற்கு மறதி மட்டுமல்ல, வறுமையும் கூடத்தான் காரணம். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாத பரிசோதகர் சட்டம் பேசி அந்த மாணவனை அச்சுறுத்தியுள்ளார். எப்படியாவது பரிசோதகரின் பிடியிலிருந்து தப்ப ராமன் வழி தேடியிருக்கிறான்.

இதற்கிடையே வேப்பம்பட்டு ரெயில் நிலையம் நெருங்கவே ராமன் இறங்கத் தயாராகியிருக்கிறான். பரிசோதகரோ அவனை இறங்கவிடாமல் வாக்குவாதம் செய்து கொண்டு சட்டையை பிடித்து இழுத்திருக்கிறார். ரெயிலில் இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து, பரிசோதகர் கேட்கப்போகும் அபராத தொகையை எண்ணி பயந்த ராமன், உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் ரயில் நிற்பதற்கு முன்னாலேயே இறங்க முயன்றுள்ளான். பரிசோதகர் அவனை தப்ப விடாமல் பிடிக்க முயற்சித்துள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த இந்த போராட்டத்தில் கண்ணிமைப்பதற்குள் ராமனின் இரண்டு கால்களும் பிளாட்பாரத்தில் சிக்கி நசுங்கியது, தலை பயங்கரமாக தரையில் மோதி தர தரவென இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறது. பிறகு ரயில் நின்று, அவசர ஊர்தி வந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் ராமன் இறந்து விட்டான்.

ஒரு மாணவன் ஏழை என்பதால் இத்தகைய கொடூர மரணத்திற்கு ஆளாகியுள்ளான். ஓரிரு நூறு ரூபாய்களை மதிப்புடைய பயண சீசன் அட்டை இல்லை என்பதால் இந்திய ரயில்வேயின் விசாரணைக்கு தனது உயிரை அபராதமாக கட்டி விட்டு விடைபெற்றுக் கொண்டான் ராமன்.

மாணவர் சாவு
படம் : நன்றி தினத்தந்தி

ஆனால் இந்த சம்பவம் அவனுடன் பயணித்த பிற மாணவர்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. மற்ற பெட்டிகளிலும், கல்லூரியிலும் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து, அனைவரையும் ரெயில் நிலையத்தில் அணிதிரட்டினர். பரிசோதகர் ராமமூர்த்தியை கைது செய்யக்கோரி அந்த வழித்தடத்தில் சென்ற அனைத்து ரெயில்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொந்தளித்துக் குமுறிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களால் ரெயில் நிலையம் கலவரப் பகுதியானது. உடனடியாக போலீஸ் படை வந்தது. அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பரிசோதகரை கைது செய்யாத வரை மறியலை கைவிட முடியாது என்று மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

நடந்து கொண்டிருந்த சமாதான பேச்சுவார்த்தை மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையிலான வாக்குவாதமாக மாறியது. பிறகு போலீசு மாணவர்களை மிரட்டியதால், லத்திக்கம்பை எடுத்து காட்டுமிராண்டித்தனமாக விளாசித் தள்ளியது. இதனால் கொந்தளித்த மாணவர்கள் போலீசு மீது சிறு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசு நடத்திய தடியடி தாக்குதலில் மாணவர்கள் எல்லா திசைகளிலும் சிதறி ஓடினர். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வழக்கை ரெயில்வே போலீஸ் விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தை பற்றி செய்தி வெளியிட்டுள்ள பத்திரிகைகளில் ஒரு சில பத்திரிகைகள், இந்த சாவுக்கு காரணம் சட்டையை பிடித்து இழுத்த பரிசோதகர் தான் என்றும், வேறு சில பத்திரிகைகள் ஓடும் ரெயிலிலிருந்து இறங்கிய மாணவன் தான் என்றும் எழுதியுள்ளன. இப்படி இரண்டு விதத்திலும் நடந்திருந்தாலும் இந்த மரணம் தரும் பாடம் என்ன? அற்பமான பயணச்சீட்டு விசயத்தில் ஒரு உயிர் பறிக்கப் பட்டிருருக்கிறது. ரயிலில் உரிய பயணச் சீட்டு எடுக்க வில்லை என்றால் அதற்கு உயிர்தான் அபராதமா, என்று இதன் தீவிரத்தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பொதுவில் மாணவர்களை அதிலும் ஏழை மாணவர்களை பொறுக்கிகளாக கருதுபவர்கள் உடனடியாக மாணவனுக்கு எதிராக விரலை நீட்டி விடுவார்கள். அவனுடைய மரணத்துக்கு அவனே தான் காரணம் என்று இந்த சம்பவத்திற்கு தீர்ப்பை எழுதிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள். பச்சமுத்து கல்லூரியில் பல இலட்சம் கொடுத்து சேர்ந்துவிட்டு, பல்சார் பைக்கில், ஐ போனுடன் சுற்றும் மாணவர்கள் வாழும் காலத்தில்தான், ஒரு பயண சீட்டுக்கு கூட வழியில்லாத ராமன்களும் வாழ்கிறார்கள்.

ராமனது வறுமைக்கு காரணம் அவனது அப்பா உயிருடன் இல்லை. அம்மாவோ மூன்று குழந்தைகளுக்கும் வாழ்வளிப்பதற்க்காக அன்றாடம் கூலி வேலை செய்கிறார். இத்தகைய சூழலில் இருக்கும் ராமன், கட்டணம் எடுக்கவில்லை என்பதை ஒழுக்கமீறலாகவும், கொழுப்பு திமிராகவும் புரிந்து கொள்வதற்கு இதயத்தில் இரக்கம் துளியும் இல்லாதவர்களால்தான் சாத்தியம்.

டிக்கெட் எடுக்கவில்லை என்பதற்காக நம்மில் யாராவது ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடுவோமா? ராமன் என்கிற அந்த மாணவனின் இடத்தில் பல ஆயிரம் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கும் வேறொரு ராமனை வைப்போம், அவர் இப்படி ‘முட்டாள்தனமாக’ குதித்து செத்து போயிருப்பாரா? இல்லை, அது அப்படி நடந்திருக்காது. அவர் அபராதத்தை கட்டிவிட்டு இறங்கிப் போயிருப்பார். அந்த தொகையை கட்ட முடியாதது தான் இந்த ஏழை ராமனின் பிரச்சினை. அப்படி கட்ட முடியுமென்ற வசதி இருந்திருந்தால் அவன் சீசன் டிக்கெட்டே எடுத்திருப்பான். வங்கிகளோ இல்லை வட்டிக் கும்பல்களோ வாக்குத் தவறாத ஏழைகளின் இயல்பு காரணமாகத்தான் தமது கடன்களை வட்டியுடன் வசூலிக்கின்றன. நாமம் போடுபவர்கள் முதலாளிகள்தான்.

பரிசோதகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களும் இந்த சமூகத்திலிருந்துதான் உருவாகி ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்டோருக்கு திருவள்ளூர் மார்க்கத்தில் வரும் மாணவர்களின் பின்னணி, பிரச்சினை தெரியாமல் இருக்காது. எனினும் அவர் இப்படி கொலை வெறியுடன் ஏன் நடந்து கொண்டார்?

சாதாரண ரயில்
ஆடம்பர ரயில்களுக்கு உள்ள வசதிகள் அடிப்படை மக்கள் பயணிக்கும் சாதாரண ரயில்களுக்கு கிடையாது.

இன்றும் வட இந்தியாவில் சாதாரண மக்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில்லை. இதனாலொன்றும் ரயில்வேக்கு நட்டமோ, இழப்போ ஏற்படுவதில்லை. தமிழகத்திலும் அரசியல் மாநாட்டிற்கு மக்கள் டிக்கெட் எடுக்காமல் ரயில்களை பயன்படுத்தும் வழக்கம் புரட்சிகர அமைப்புகளிடம் இன்றும் உண்டு. முதலாளிகளின் காசில் வயிறு வளர்க்கும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் ஆம்னி பேருந்துகளையும், ஆடம்பர கார்கள், வேன்களையும் மாநாடுகளுக்காக, வாடகைக்கு எடுக்கும் போது புரட்சிகர அமைப்புகள் தொழிலாளி வர்க்கம் உருவாக்கிய ரயில்வேயை உரிமையுடன் பயன் படுத்திக் கொள்கிறது.

ஆனால் தனியார் மய காலத்தில் பொதுத்துறைகளும் சேவை நோக்கத்தை விடுத்து இலாபமொன்றே குறியாக செயல்பட வேண்டும் என்ற அநீதிக்கு இந்திய ரயில்வேயும் விலக்கு இல்லை. ஏற்கனவே இந்திய ரயில்வேயின் பல்வேறு சேவைகள் தனியார் மயத்திற்கு பகுதி பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆடம்பர ரயில்களுக்கு உள்ள வசதிகள் அடிப்படை மக்கள் பயணிக்கும் சாதாரண ரயில்களுக்கு கிடையாது. அது போல ரயில்வே பரிசோதகர்களின் பணியிலும் தற்போது வசூலிக்கும் அபராதத் தொகைக்கு இலக்கு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அதன்படி சில இலட்சங்களையாவது மாதந்தோறும் வசூலிக்க வேண்டும். இதனாலேயே பரிசோதகர்கள் கந்து வட்டி ரவுடிகள் போல நடந்து கொள்கிறார்கள்.

மின்சார ரயில்களில் கூடை தூக்கி பிழைக்கும் வியாபாரிகளெல்லாம் இவர்களுக்கு மாதந்தோறும் தட்சணை போல அபராதத்தை கட்ட வேண்டும். இது போக பயணச்சீட்டு எடுக்காதவர்கள் – அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் – இவர்களது இலக்கு. இத்தகைய சூழலில்தான் பரிசோதகருக்கு பயந்து ராமன் அநியாயமாக பலியாக நேர்ந்திருக்கிறது.

அந்த ஏழைத் தாய்க்கு இருந்த ஒரே நம்பிக்கை அவன் மட்டும் தான். இப்போது அந்த மகனும் இல்லை. இனி இரண்டு பெண்களையும் அவர் கரையேற்ற வேண்டும், அவை எல்லாம் இனி அந்த ஏழையின் பாடு. தேர்தல்களில் பிசியாக இருக்கும் கட்சிகள் எதற்கும் ராமனது மரணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல.

மக்கள் தாலியை அறுப்பதற்காகவே எம்.எல்.ஏ, எம்.பி.களாகும் நபர்களுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் அரசு, மாணவர்களை அவ்வாறு அனுமதிக்க மறுப்பது ஏன்? அமைச்சர்கள் அனைவரும் வெளிநாட்டு பயணம், விமான பயணம் என பல நூறு கோடிகளை விழுங்கும் போது இந்தியாவில் மாணவர்களுக்கென்று இலவச ரயில் பாஸ் வழங்கினால் குடியா முழுகிப் போகும்?

பரிசோதகர் ராமமூர்த்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். அது மற்ற பரிசோதகர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த பரிசோதகரை அம்பு போல ஏவிவிட்ட இந்திய ரயில்வே, மாணவனது குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இந்திய ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளோடு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்குமாறு தெற்கு ரயில்வேயை நிர்பந்தித்து, மாணவர்கள் போர்க்குணத்துடன் போராட வேண்டும். ராமனது மரணம் இந்த மாற்றத்தை கொண்டு வருமானால் எதிர்காலத்தில் பல ஏழை மாணவர்கள் இப்படி கொல்லப்படுவதிலிருந்து தடுக்க முடியும்.

–    வினவு செய்தியாளர்.

 1. பையன் அவசரப்பட்டு விட்டானா இல்ல பரிசோதகர் தள்ளி விட்டாரா என்ன சொல்ல வரிங்க பொதுவா வருமையை ஒழிப்பது அரசின் கடமை அதுக்கு குரல் குடுங்கள் ரயில்வே நிர்வாகம் என்ன பன்னும் வேனும்னா பரிசோத்கர சஸ்பண்ட் பன்னும் அப்பவும் அவரை சார்ந்த தொழிற்சங்கம் போராடும் ,அந்த பையனின் இழப்புக்கு வருந்துவோம் ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்று தர முயலுங்கள்

 2. இன்று தமிழ் இந்து பத்திரிக்கையில் 3ம் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. ரசீதே போடாமல் ஒரு டிடிஆரும் அவரது நண்பரும் சேர்ந்து பயணிகளிடம் அபராதம் வசூலித்து சிக்கிக் கொண்டுள்ளனர்

 3. ரயில்வே பரிசோதகருக்காக ரயில்வே சங்கம் கடும் போராட்டம் நடத்தும்… நீங்கள் அந்தப் பையனுக்கு நடத்துங்கள்…ஜோசப் சொல்வது போல இழப்பீடு தர முயலுங்கள்.. நம்மவூர்ல எதுக்ககெடுத்தாலும் சட்டம் பேசறது ஜாஸ்தி.. வடக்க அப்படி சட்டம் பேச முடியாது.. ”பேசி” என்பதற்கே வழிகிடையாது… நீங்க இத வச்சுகிட்டு வர்க்க பாடம் வேணும்னா எடுக்கலாம்.

 4. டிக்கெட் பரிசோதகர்கள் சட்டை காலரை பிடித்து இழுத்து செல்வதை காணலாம்.இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? முதல் வகுப்பில் ரயில்வே ஊழியர்கள் சட்டை பாக்கெட்டுக்கு மேல் தெரியும்படி எஸ்.ஆர் ,எம்.யு, டி ஆர்.இ.யு என்று சங்க பெயர்களை காண்பித்துக்கொண்டு ஒ சி பயணம் செய்கின்றனர்.அவர்களிடம் எந்த பரிசோதகனும் நெருங்குவதில்லை .அவர்களுக்கு முதல் வகுப்பில் பயணிக்க தகுதி உள்ளதா என பார்ப்பதில்லை.எவனாவது அப்பாவி மாட்டினால் பணம் வசூலிக்கின்றனர்.ரயில்வே காரர்களின் ஒசி பயணத்தை தடுக்க துப்பில்லாதா டி டி களுக்கு மற்றவர்கள் மீது கை வைக்க உரிமை இல்லை.

 5. “””””பரிசோதகர் ராமமூர்த்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். அது மற்ற பரிசோதகர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த பரிசோதகரை அம்பு போல ஏவிவிட்ட இந்திய ரயில்வே, மாணவனது குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இந்திய ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளோடு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்குமாறு தெற்கு ரயில்வேயை நிர்பந்தித்து, மாணவர்கள் போர்க்குணத்துடன் போராட வேண்டும்””””””‘………

  வினவு கேட்டதில் ஒரு மண்ணும் நடக்கப்போவதில்லை….. இது ஒரு நாலாந்தர வழக்காக கூட பதிவு செய்யப்பட மாட்டாது… சட்டப்படி அச்சிறுவன் செய்தது தவறு….. பரிசோதகரை வழக்கில் கைதி செய்ய முடியாது, ரயில்வே துறையிடமிருந்து நட்ட ஈடும் வாங்க முடியாது…. வேண்டுமானால் இலவச ரயில் பாஸ் வழங்க கோரிக்கை வைக்கலாம்……..நடைமுறைக்காவாத விசயத்ற்கு எல்லாம் “போர்குணம்” , புடலங்காய் குணம்னு கிளம்பினா வேலைக்காவாது… மூடிட்டு படிச்சாத்தான் அட்லீஸ்ட் ஒரு லாயராவது ஆகமுடியும்…. நான் உட்பட எல்லோருமே அவர்கள் வீட்டு பிள்ளைகளை முதலில் போராட அனுப்பிவிட்டு அதன் தகவல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்……

 6. அந்த மாணவன் இறந்தது என்பது மிகவும் தற்செயலான நிகழ்வு. அந்த மாணவனின் மீது உள்ள இரக்கத்தால் வினவு தேவையில்லாத இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளது. என்னதான் ஏழ்மை நிலை என்றாலும் அந்த மாணவன் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தவறு தானே! அந்த பரிசோதகர் தன் பணியைத் தானே செய்திருக்கிறார். டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை வேறு எப்படித்தான் வழிக்குக் கொண்டு வருவது? அவரின் பக்கத்திலிருக்கும் நியாயத்தையும் வினவு கொஞ்சம் பரீசிலிக்க வேண்டுமில்லையா?

  • இங்கே வினவு குறிப்பிடுவது , தவறு செய்தவர் ஏழை என்றால் எட்டி குதிக்கும் நீதி அமைப்பும் ,வீரம் காட்டும் பரிசோதகரும் , பணக்காரர்கள் இதே தவறு செய்தவர்கள் என்றால் எப்படி நடத்தும் ?

   நான் காரில் சென்றபோது பிடித்து லைசென்சு கேட்காத போலிஸ் , அதே இடத்தில அன்று மாலையே பைக்கில் செல்லும் பொது நிறுத்தி எல்லா கேள்வியும் கேட்கிறது .

   ஆகா ஏழை என்றால் மட்டும் ஆண்மையும் வீரமும் காட்டும் போலிஸ் சட்டத்துறை நமது சமூக அமைப்பை வினவு குற்றம் சாட்டுவதாக எடுத்துகொள்ளலாம்

  • இழந்தஒரு உயிர் மட்டுமல்ல….,இனிமேல் இது தொடரக்கூடாது என்ற எண்ணம் புரியப்பட வேண்டும்.மாணவர்கள் இலவசமாகப் பயணித்தால் என்ன கெட்டுவிடப் போகிறது.கல்வியைக் கொண்டு கொள்ளையடிக்கும் செயல் தடுக்கப்பட்டு கல்வி இலவசமாக வேண்டும் என்றால் மாணவ சமுதாயம் மட்டுமல்ல முட்டாள்களாகிய மக்கள் கூட்டங்களும் சிந்தித்தால்தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வரும்.

 7. //அன்று காலை 8 மணியளவில், திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் நண்பர்களோடு ஏறியுள்ளான். அந்த வண்டி ஏற்கெனவே பயணிகளால் நிரம்பி வழிந்தபடி வந்ததால், நிற்கக்கூட இடமில்லாமல் இருந்திருக்கிறது. எனவே கூட்டம் குறைவாக இருந்த அடுத்தடுத்த பெட்டிகளை நோக்கி ராமன் நண்பர்களோடு நகர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி மாறி மாறி இறுதியில் கூட்டம் குறைவாக இருந்த முதல் வகுப்பு பெட்டிக்குச் சென்றிருக்கின்றனர்.//

  ரயில் பயணங்களை தினமும் பார்க்கின்றேன்.நானும் சீசன் டிக்கட் பயணி தான். பயணிகளில் பயன்பாட்டுக்கு தக்கபடி ரயில்களை விடுவதில்லை, இருப்பதையும் குறைக்கின்றனர். நேரத்துக்கு ரயில்கள் விடுவதில்லைல், போன்ற பல குறைகள் ரயில்வேயில் உண்டு.

  கூட்டம் நிரம்பி வழியும் ரயிலில் பெண்கள் பாடு திண்டாட்டம் தான். அங்கே இருக்கும் இடத்தில் ஒரு காலால் நின்று வருகையில், மேலே சாய்வதையோ உரசுவதையோ எதிர்த்து கேட்க இயலாது. கேட்டல் சரி நீ தள்ளி நின்றுகொள் என்றால் அந்த பக்கம் நிற்பவர் மேல் தான் சாய வேண்டும்.

  அதிலும் பஸ்ஸில் யாருக்கும் வராத இயற்கை அழைப்பு ரயிலில் வரும். ஓவ்வொருவராக கழிவறை சென்று வருகையில், நகர்ந்து சாய்ந்து வழி விடிட்ட வேண்டும். இப்படிபட்ட பயணத்தில் பெண்களில் நிலை அவர்களூக்கு மட்டும் புரியக்கூடியது. கணவன் காதலனுடன் கூட பரிர முடியாதது . ஏனேனில் நாளை இதுவே அவர்களுக்கு எதிராக பயன் படுத்தபடலாம் என்பதால்.

  எக்பிரஸ் ரயில்களை பொறுத்தவரை சீசன் டிக்கட் எடுத்து பயணிப்பவர்கள், அலுவலகம், பள்ளி முடியும் நேரத்தில் வரும் ரயில்களில், ரிசர்வுடு பெட்டிகளில் பயணிப்பதையும் அதை பரிசோதர்கள் பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதையும் பார்த்திருக்கினேற்ன்.

  எக்ஸ்ப்ரஸ் ரயில்களில் பாஸ் என்பது அன் ரிசர்வுடு சரியாக சொன்னால் செகண்ட் கிளாஸ் பயணத்திற்கானது. காலவதியான பாஸில் இதில் பணிப்பதே குற்றம் தான்.

  ஏற வேண்டிய செக்கண்டு கிஸாஸ்,
  ரிவர்வுடு ஸ்லீப்பர்,
  ரிவர்வுடு சேர் கார்,
  3 டயர் ஏசி,
  2 டயர் ஏசி,
  பஸ்ட் கிளாஸ்
  1 ஏசி

  என பல அடுக்குகளில் கட்டணத்துக்கு தகுந்தற்போல சேவை இருக்கின்றது.

  இதில் 1 ஏசி, பர்ஸ்ட் கிளாஸ் என்பன பல ஆயிரம் கட்டணம் தர வேண்டியது.

  யோசியுங்கள், பல ஆயிரம் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வருபவருக்கு, ரிசர்வ் செய்யாமல் பெட்டியில் ஏறுபவர் இடைஞ்சலா இல்லையா?

  பல ஆயிரம் கட்டணம் உயர் வகுப்பினர் தான் கட்டுவர் என்றில்லை, நிம்மதியாக பயணம் செய்ய விரும்பும் யாரும் கட்டலாம். உயர் வகுப்பினர் அதிகம் இருக்கலாம். ஆனால் யாரக இருந்தலும் எந்த சேவைகாக பணம் பெறப்பட்டதோ அதை நிறைவெற்ற ரயில்வேக்கு கடமை உண்டு.

  இதே ரிவர்வுடு கம்பார்ட்மேடில் நாம் ரிசர்வ் டிக்கட் வாங்கி தூங்கி எழுந்து காலையில் வேறு வேலை பார்க்கலாம் என்று நாம் போய் படுத்தால் 10 பேர் நமக்கு ஒதுக்கப்பட்ட இடத்திக்ல் வந்து உட்கார்ந்தும் நின்றும் பயணீத்தால் , அது சரிதான் என்று ஏற்றுகொள்வோமா?

  இந்த ராமனின் விஷயத்தில்
  1) பாஸ் காலவதியானலும் பயணித்தது தவறு,
  2) ராமன் வகுப்பு மாறி ஏறியது தவறு,
  3) பரிசோதகரிடம் பிடி பட்டதும் தப்பி ஓடியது தவறு.
  4) ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதும் தவறு

  பரிசோதகர் ராமனிடம் கருணை காட்டி இருக்கலாம் தான். ஆனால் முதல் வகுப்பிலும் ஏசி வகுப்பிலும் பணிக்கும் மற்ற பயணிகள் முன்னாள் , இன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட, சேவை குறைபாடு என்று, இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் , அப்புரம் அவருக்கு யாரும் கருணை காட்டுவார்களா என்பது சந்தேகம் தான்.

  //இன்றும் வட இந்தியாவில் சாதாரண மக்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில்லை. இதனாலொன்றும் ரயில்வேக்கு நட்டமோ, இழப்போ ஏற்படுவதில்லை. //

  நிச்சயம் இழப்பே.ரயிலில் ஏற்றப்படும் ஓவ்வொறூ கிலோ சுமைக்கும், ஒவ்வொரு நபருக்கும், எரிபொருள், தேய்மானம் உள்ளிட்டவை கூடவே செய்யும். கட்டணத்தை குறைக்க கேட்கலாம், மம்தா அமைச்சராக இருந்தபோது அறித்தது போல் 25 ரூபாய் பாஸ் போன்றவை கேட்கலாம் தான். முழுமையான இலவச பாஸ் கூட கேட்கலாம், ஆனால் கட்டணம் கட்டி பயணம் செய்யவேண்டும் என்று சட்டம் இருக்குபோது அதை மீறுபவர் குற்றவாளிகளே. பலர் மீறினர் என்பதால் குற்றம் குற்றம் இல்லை என்றாகிவிடாது. இது போன்று வட இந்தியாவில் பலர் செய்வதாலேயே வட இந்தியாவை விட தென் இந்தியாவில் ரயில்கள் மிக குறைவாக இருந்தாலும், வருமானத்தில் தென் இந்தியாவே அதிகம் தருகின்றது

  பார்க்க http://railradar.railyatri.in/

  வட இந்தியாவிலும்(உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட்) கேரளாவிலும் இருக்கும் ரயில்கள்ளோடு ஒப்பிட்டல் தமிழகம் ரெயில்வே பார்வையில் பாலைவனமே. ஆனாலும் இங்கு டிக்கட் இல்லா பயணம் என்பது மிக மிக குறைவு என்பதால் தான் ரெயில்வே வருமாமத்தில் தென்னகத்தின் பங்கு அதிகம்.

  இப்போதைய கணக்குபடி 100 ரூபாய் வருமானம் வர 132 ரூபாய் செலவு என்கிறது ரயில்வே. வட இந்தியாவிலும் சரியான முறையில் டிக்கட் எடுத்து பயணீக்க ஆரம்பித்தால் ரயில்வே வருமானம் உயரவே செய்யும். டிக்கட் எடுக்காத பயணம் நிச்சயம் ரயில்வேக்கு நட்டமே.

  மேலும் தினமும் பார்க்கும் மாணவர்களை கவனித்தால், மாணவர்கள் பாஸ் வாங்குவதற்காகும் பணத்தை வீட்டில் பெற்றுகொண்டு, அதை வேறு செலவுகளூக்கு பயன்படுத்தி விடுகின்றனர். ஒரு முறை நான் மாலை பேசஞ்சர் ரயிலில் பயணிக்கையில் வந்த சட்டக்கல்லூரி மாணவ மாணவியரில் 20 பேர் ஒரே நாளில் பாஸ் காலவதியானதால் பிடி பட்டனர்.

  12 மாணவர்களுக்கும் 8மாணவிகளும் பிடிபட்டதில் 6 மாணவர்களூம் 4 மாணவியரும் அபராத தொகை செலுத்தி சென்றனர். மீதம் 4 மாணவவிகளுக்கும் மாணவர்கள் தங்களூக்குள் வசூலித்து அபராதம் செலுத்தி மீட்டனர். ஆனால் மீதம் 6 மாணவர்களுக்கு உதவ யாரும் இல்லை அவர்களை பரிசோதகர் கூட்டி சென்றார்.

  இவர்களிள் அபராத தொகைக்கு வீட்டில் என்ன கணக்கு சொல்வது என்பது தான் பிரச்சனை. ஏனேனில் பாசுக்கான தொகையை செலவிட்டிருந்தர்.

  ரயிலில் இருந்து ராமன் குதிக்கபார்க்கும்போது விட்டிருக்க வேண்டும். துரத்தி பிடிக்க பரிசோதகர் போலிஸ் அல்ல. இதே பரிசோதகர், ஆந்திரா தாண்டியவுடன் பெட்டி பாம்பாக சுருண்டு விடுவார். அங்கு யாரும் ரிசர்வேசனை மதிப்பதில்ல்லை.
  பெரும்பானயினர் செய்வதால் இது தவறில்லை என்று ஆகிவிடாது.

  பொது மக்களை பொருத்தவரை முதலில் பயணம் தேவையில்லாத அளவுக்கு எல்லா பள்ளி கல்லூரிகளயும் தரம் உயர்த்த வேண்டும். அவசியப்பட்டால் மட்டும் பயணம் செய்யும் வகையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும்.

  ரயில்வே வருவாய் / பயன்பாட்டை ஒட்டி ரயில்களை இயக்கவெண்டும். லொல்லு பிரசாத் போட்ட உத்திரவு , மம்தா உத்திரவு என்று வருவாய் இல்லாத தேவையில்லாத இடங்களில் ரயில்களை இயக்கி, தேவைப்படும் இடத்தில் ஒன்றும் இல்லாமல் செய்வது மிக தவறு.

 8. இப்படி எவ்வளவோ வறுமையின் கொடுமைகள் தமிழ்நாட்டிலுண்டு. ஏனைய நாடுகளிலும் வறுமை இருந்தாலும், வறியவ்ர்களைக் கொடுமையாக, தீண்டத்தகாதவர்களாக, மரியாதையின்றி நடத்துவது தமிழ்நாட்டில் அதிகம். ஏனென்றால் உயிருக்கு அங்கு மதிப்பில்லை. அந்த பரிசோதகர் ராமனை எச்சரித்து விட்டிருக்கலாம் அல்லது அடுத்த ரயில் நிலையத்தில் போலீசில் ஒப்படைத்திருக்கலாம். தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் கிரைண்டர், மிக்சி, கொடுப்பதை விட்டு இலவசமாக ஏழை மாணவர்களுக்கு பாஸ் கொடுக்கலாம். ஒரே மகனையும் இழந்து தவிக்கும் அந்த ஏழைத்தாய்க்கு எத்தனை பேர் ஆறுதல் கூறினாலும் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாது.

 9. சகல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியாத அரசு இலவச கிரைண்டர், மிக்சி, கொடுப்பதை விட ஏழை மாணவர்களுக்கு இலவசமாக போக்குவரத்து பாஸ் கொடுத்திருக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க