Saturday, May 30, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார் !

ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார் !

-

ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார்!

  • தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் அதிகாரத் திமிரை ஒடுக்குவோம் !
  • தட்டிக்கேட்க ஆளில்லாமல், தட்டுக்கெட்டுத் திரியும் ஜிஎம்மிற்கு தக்க பாடம் புகட்டுவோம் !

ன்பார்ந்த காளீஸ்வரர் “பி” யூனிட் ஆலைத் தொழிலாளர்களே!

நமது ஆலையில் தற்போது பொதுமேலாளராகப் பணிபுரியும் வி. சிவசாம்ராஜின் சட்டவிரோதமான அட்டகாசங்களை நீங்கள் அறிவீர்கள். தனியார் ஆலையில் (கே.ஜி குரூப்) வேலை செய்து வந்த அவர் குறுக்கு வழியில் (20 எல்) ஆலைப் பொதுமேலாளராக வந்ததால், ஒரு முதலாளியைப் போல அவர் ஆடுகின்ற சட்டவிரோதமான ஆட்டங்கள் சகிக்க முடியாதது.

ஆனால், காளீஸ்வரர் ஆலை ஒன்றும் தனியார் ஆலையல்ல. இது காளையார்கோவில் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவே இந்திய அரசால் ஏற்று நடத்தப்பட்டு வருகிற பொதுத்துறை ஆலை. இங்கேயுள்ள பொதுமேலாளர் ஒன்றும் முதலாளியல்ல. அவர் தொழிலாளர்களின் உழைப்பினால் வரும் வருமானத்தில் சம்பளம் பெறுகிற ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால், இதை அவர் உணராமல் தொழிலாளரை அடிமைகளாகவே நினைக்கிறார்.

பொது வேலை நிறுத்தம் நடைபெற்றபோது வெளி ஆட்களைக் கொண்டுவந்து ஆலையை இயக்க முயற்சித்தார். தொழிலாளரை எப்போதுமே மதிப்பதில்லை. கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தியே பேசுவார். தான் ஒரு படிப்பாளி என்று சொல்லிக் கொள்ளும் அவரது நாகரீகமற்ற பேச்சுக்களை ஒரு குடிகாரனிடம்தான் நாம் எதிர்பார்க்க முடியும். அவரின் ஊழல்களையும், லீலைகளையும், திமிரையும் சட்டவிரோதப் போக்கையும் தட்டிகேட்கும் ஒரே சங்கமான புஜதொமு மற்றும் கோவை மண்டலச் சங்கத்தின் செயல்பாடுகளை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே சுவற்றில் எழுதினார் என்பதற்காக தொழிலாளி ராதாகிருஷ்ணனை மிரட்டி வி.ஆர்.எஸ்ஸில் போக வைத்தார். இப்போது சுமார் 13 ஆண்டுகளாக ஆலையில் வேலை செய்து வரும் தொழிலாளி தோழர் மருதுபாண்டியனை வேலைக்கு வரவிடாமல் தடுப்பதன் மூலம் சங்கத்தை வளரவிடாமல் தடுக்கலாம் நினைக்கிறார். காற்றைக் கையால் மறைக்க முயல்கிறார். அவரின் அடாவடிச் செயல்பாடுகளினால் குமுறிக்கொண்டு இருக்கும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட அவரது லீலைகளின் பட்டியல் இதோ;

1. மும்பையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு இவர் போனபோது கூடவே கட்டாயப்படுத்தி ஒரு பெண் பணியாளரையும் கூட்டிப் போனதால் அநதப் பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு ஆலைக்குள்ளும், வீட்டிலுமாக அவர் 2 தடவை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

2. பெண்களிடம் மிக இழிவாகவே பேசுவார், நாகரீகமே தெரியாத காட்டுமிராண்டியாகவே நடந்து கொள்வார்; வாலெண்டர்ஸ் தினத்தன்று அவரது அறையில் வெளிப்படையாக நடத்திய கூத்தும் கும்மாளமும் ஒரு கிரிமினல் குற்றம். நாகரீகம் கருதி அதை வெளிப்படையாகச் சொல்லாமல், இங்கு தவிர்க்கிறோம்.

3. இவர் தன்னை ஆன்மீகவாதி என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். இவரது ஆன்மீக நித்தியானந்தா லீலைகள் வீடியோ படம் பிடிக்கப்பட்டு, அந்த சி.டி யை வைத்து இவரை ஒரு கும்பல் மிரட்டுவதாகவும் அந்தக் கும்பலில் ஒருவர் வேலை செய்யாமலே ஆலையில் சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. யார் அந்த ஊழியர்?

இனி இந்த யோக்கியசிகாமணியின் ஊழல்கள்:

1. மூன்று டிரிப்புகளில் ஏற்றிச் செல்லவேண்டிய தொழிலாளரை ஒரே டிரிப்பில் அடைத்துக் கொண்டு ஏற்றிச் செல்ல வைத்து, ஆனால் 3 டிரிப் என கணக்கு எழுதி 2 டிரிப்பிற்கான பணத்தை ஆட்டையைப் போட்டு வருகிறார்.

2. பழைய பேருந்து ஓட்டுனர் சரவணனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையினை விபத்து நடந்ததற்கு என ஆட்டையைப் போடுவதற்காகவே தர மறுக்கிறார்.

3. கேண்டீனுக்கான தரமான பொருட்கள் எல்லாம் யாருக்கும் கமிசன் கொடுக்காத கடையான மதுரை கண்ணன் ஸ்டோரில்தான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக உள்ளூரில் வாங்குகிறார்.

4. கேண்டீனுக்கு அரசு இண்டேன் கேஸ்தான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக தனியார் மீனா கேஸ் வாங்குகிறார்.

5. ஆலைக்கான தரமான எந்திர உதிரிப்பொருட்கள் இதுவரையிலும் கோவை சாந்தி கேர் நிறுவனத்தில்தான் வாங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக இவரே நேரில் போய் பில் தயாரித்து தரமற்ற பொருட்களை வாங்கி வருகிறார்.

6. ஜெனரேட்டருக்காக இதுவரையிலும் தரமான சர்வோ ஆயில்தான் வாங்கப்பட்டது. ஆனால், இப்போது இவர் கமிசனுக்காக தரமற்ற ரிலையன்ஸ் ஆயில் வாங்குகிறார்.

7. அழுக்குப் பஞ்சுக் கழிவோடு வெள்ளைப் பஞ்சையும் கலந்து அதையும் விதி முறைப்படி டெண்டர் விடாமல் தன்னிச்சையாக விற்றுள்ளார்.

8. ஆலைவளாகத்தினில் இருந்த மரங்களையும் டெண்டர் விடாமல் தனியாக விற்றுள்ளார்.

9. சிமிண்ட் மூடைகள், கம்பிகள் ஆகியவை திருட்டுப்போனதாக இவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆலையின் பின்புறம் வசிப்பவர்கள் டாடா ஏசிஇ வண்டியில் அந்தப்பொருட்கள் பகிரங்கமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவே சொல்கிறார்கள்.

10. சில புகார்களை விசாரணை செய்யவந்த அதிகாரிகளிடம் குற்றங்களிலிருந்து தான் தப்பிப்பதற்காக ஆலையின் ஹெச். ஆர் மீது பழிபோட்டு மாட்டிவிட்டுள்ளார்.

11. பெண்களை இரவு 10 மணிக்கு மேல் வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.

12. புது ஆலையில் ரூ 100 கூலிக்கு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளார்.

13. பத்து மாதங்கள் ஆகியும் பயிற்சித்தொழிலாளருக்கு சி.எல்.ஆர் அட்டை தர மறுக்கிறார்.

14. சி.எல்.ஆர் தொழிலாளரை கொத்தடிமைகளைப் போல நடத்துகிறார்.

15. ஆர்.சி.எல்.ஆர்களுக்கு லே-ஆஃப்-க்கு சம்பளமும், சி.எல்லும் கொடுக்க மறுக்கிறார்.

16. ஒரு நாள் வேலைக்கு வராமல் ஆப்செண்ட் ஆனாலும், மறுநாள் அதையே காரணங்காட்டி வேலையில்லை என்று சொல்லி அலைக்கழிக்கிறார்.

17. மேஸ்திரிகளுக்கு அடிக்கடி பொய் நோட்டீஸ் கொடுக்கிறார்; வேலை முடிந்தாலும் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என சட்டமிட்டுள்ளார்.

18. சக ஊழியர்களை காட்டிக் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.

19. கைக்கூலிகளாக சில அல்லக்கைகளை வைத்துக்கொண்டு பலசலுகைகள் கொடுக்கிறார்.

20. வேலை ஒப்பந்தத்தையும் மீறி ஓவர் டைம் பார்க்கச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். மறுக்கும் தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கிறார்.

21. அலுவலக ஊழியர்களை வேலை செய்யவிடாமல் அடிக்கடி இடம் மாற்றுகிறார்.

22. இதுவரை ஆறு சூப்பர்வைசர்களை வெளியேற்றியிருக்கிறார்.

23. உடல்நலம் பாதிக்கப்பட்டு வி.ஆர்.எஸ் கேட்பவர்களையும்கூட, ராஜினாமா செய்யச் சொல்லிக் கடிதம் கேட்கிறார்.

24. கேண்டீனில் கொடுக்கப்பட்ட பன், டீயில் பன்னை நிறுத்தி விட்டார். உணவுகளின் எடையளவையும் குறைத்துவிட்டார்.

தோழர்களே!

இன்னும் நீங்கள் அறிந்த இதுபோன்ற சட்டவிரோத, கிரிமினல் செயல்களை உடனே எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதுவரை எந்த சங்கமும் தட்டிக்கேட்காததால்தான் இவர் இப்படி நடந்துகொண்டு வருகிறார்.

ஜி.எம்மிற்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால் அது பு.ஜ.தொ.மு போன்ற தொழிலாளி வர்க்கச் சங்கத்தினால்தான் முடியுமே தவிர பிழைப்புவாத ஓட்டுக்கட்சி சங்கங்களினால் முடியவே முடியாது. ஆகவே தொழிலாளர்களே நாம் ஒன்றிணைவோம்!

அதிகார வர்க்க சாம்ராஜ்யத்தைத் தகர்த்தெறிவோம்!

ஜி.எம் சிவசாம்ராஜை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தினூடாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்
இணைப்பு :  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்