Thursday, August 11, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்

ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்

-

தார் பல வகையிலும் முழுமை பெறாத ஒரு திட்டம். அதன் சாத்தியப்பாடு மற்றும் லாபக்கணக்கு குறித்த ஆய்வு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. தனித்துவ அடையாள எண் வைத்துள்ள ஒருவரின் கணக்கு தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அடையாள மோசடி செய்யப்படுவது மற்றும் ஒருவரின் அடையாள விவரம் தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த திட்டத்தோடு தொடர்புடைய எந்த நிறுவனமும் தயாரில்லை என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.

ஆதார்ஆதார் மூலம் திரட்டப்படும் தகவல்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் எதுவுமில்லை. இப்போது தனித்தனி தகவல் தளங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மைப் பற்றிய பலவகை விபரங்களை ஒரே ‘பொறியமைவுக்குள்’ கொண்டு வந்து தொகுக்கும் ‘தனித்துவ அடையாள ஆணையத்தின்’ (UIDAI) முயற்சி மக்கள் மீதான கண்காணிப்புகளையும், சமூகக் கட்டுப்பாட்டையும் சாத்தியமாக்குகிறது. ஒரு நபரை குறி வைத்து, அவரைப் பற்றிய தரவுகளை தொடர்ந்து கண்காணிப்பதையும், அவருக்கு முத்திரை குத்துவதையும் தடுப்பதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மக்களின் சொந்த வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளில் குறுக்கிடுவதற்காக புலனாய்வு அமைப்புகள் கடந்த 3-4 வருடங்களில் உருவாக்கி வைத்திருக்கும் கருவிகள்தான் NATGRID, CCTNS, NCTC, PII மற்றும் MAC போன்ற குறிச்சொற்கள்.

இந்த நிலையில் நவம்பர் 21-ம் தேதி ஆந்திர உயர்நீதிமன்ற அமர்வு ஒன்று வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீர்ப்பில் ஆதாரை காரணம் காட்டி மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு ஒருவருக்கு மறுக்கப்படக் கூடாது என்று நீதிபதி கூறியிருக்கிறார். அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆதார் அட்டை கேட்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமர்வு மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.

ஆதார் தேவை என்று சட்ட ரீதியாக எந்த கட்டாயத்தையும் விதிக்கவில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தது. இதே உறுதிமொழிப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்திலும் பெட்ரோலிய அமைச்சகம் சமர்ப்பித்தது.

குடிமக்கள் பற்றிய தகவல்களை உயிர்அளவை (Biometric) முறையில் சேகரிப்பது உயிர் வாழும் அடிப்படை உரிமையின் கீழ் வருகின்ற அந்தரங்க உரிமையை பறிப்பதற்கு இணையானது என்று அந்த புகார்தாரர் வாதிட்டார். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அனுபவிக்க ஆதார் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டமோ, ஆணையோ இயற்றப்படவில்லை என்பதும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

தகவல் திரட்டல்அமர்வின் சார்பாக தீர்ப்பு எழுதிய ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்த குறிப்பாணையோ, அங்கீகரிக்கப்பட்ட சட்டமோ இல்லாத நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க ஆதார் அட்டை இருந்தே தீர வேண்டும் என்று கோருவதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மார்ச் 2, 2013 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரியின் தலைமையிலான அமர்வு தனித்துவ அடையாள (UID) எண் பெற்றிருத்தல் அவசியம் என்ற சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுற்றறிக்கையின் சட்டப் பொருத்தப்பாடு தொடர்பாக நீதிமன்றம் சில கேள்விகள் எழுப்பிய உடனேயே மத்திய அரசு சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவு தனித்துவ அடையாள ஆணையம் என்பது சட்டபூர்வமாக எதிர்க்கப்படக் கூடியதும், பாதுகாக்க இயலாததுமாகும் என்ற அடிப்படை உண்மையை உறுதிப்படுத்தியது.

ஆதார் அட்டையை வற்புறுத்தி கேட்பதை தடை செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ஓய்வு பெற்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர், பேராசிரியர் ரொமிலா தப்பார், எஸ்.ஆர்.சங்கரன், நீதியரசர் ஏ.பி. ஷா, கே.ஜி. கண்ணபிரான், பெஸ்வாடா வில்சன், அருணா ராய் மற்றும் உபேந்திர பக்சி ஆகியோரை உள்ளடக்கிய 17 சிறந்த குடிமகன்கள் வெளியிட்ட செப்டம்பர் 28, 2010 தேதியிட்ட அறிக்கையையும், நிதித் துறைக்கான பாரளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. ‘உயிரியல் அளவை முறைக்கான துணைநிலை சட்டம் சட்டவிரோதமானதும் சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும்’ என்றும் ‘தனித்துவ அடையாள எண் திட்டத்துக்கு எதிரான அரசியலமைப்பு ரீதியான, சட்ட ரீதியான, வரலாற்று ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான மறுப்புகளை’ பட்டியலிட்டும் தரப்பட்ட 18/03/2013 தேதியிட்ட புகாரை மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி. கருணாகரன் தலைமையிலான துணைநிலை சட்டத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது

ஆதார் ஆணையம்
சட்ட விரோத ஆதார் ஆணையம்

இப்பிரச்சினை ஆதார் எண் கட்டாயமானதா, அல்லது விருப்பபூர்வமானதா என்பது சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல என்று மேற்கு வங்க சட்ட வல்லுநர்கள் மாநில முதலமைச்சரிடம் சொல்லத் தவறியது வருத்தத்துக்குரியது. மேற்குவங்க சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் அதைத்தான் பேசுகிறது. மாறாக, இது சட்ட நெறிமுறைகளுக்கு முரணாகவும், நீதிமுறைமைக்கு எதிராகவும் இந்த உயிரியல் அளவை எண் முறை ஏற்படுத்தக் கூடிய, ஏற்கனவே வலுவாக ஆவணப்படுத்தப்பட்ட தீவிர சிக்கல்களை பற்றிய பிரச்சினை.

கேரள எதிர்க்கட்சித் தலைவரான சி.பி.எம்.மின் வி.எஸ் அச்சுதானந்தன் 26 ஆகஸ்ட் 2011-ல் ஆதார் திட்டத்தை கைவிடுமாறு கேரள அரசை கேட்டுக் கொண்டார். ஆதாருக்கு எதிரான ஆய்வாளர்களும் பிரச்சாரகர்களும் இதனை வரவேற்றார்கள். காலந்தாழ்ந்ததாக இருப்பினும் அச்சுதானந்தனின் அறிக்கை மக்களின் விரல் தடயங்களைக் கொண்டு எடுக்கப்படும் உயிரியல் அளவை தகவல்கள் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகியவற்றை மீறுகிறது என்றது. பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து ஆதார் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்துகேரள அரசு பின்வாங்கியுள்ளது.

பிப்ரவரி 24, 2011-ல் அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்த போது தான் கேரளாவில் தனித்துவ அடையாள எண் (UID) திட்டமான ஆதார் கொண்டு வரப்பட்டது. அதன் தொடக்க விழாவில் பேசிய அச்சுதானந்தன் மக்களிடம் ஆதார் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். ‘இத்திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்’ என்றார். ஆனால், அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னரே திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு அச்சுதானந்தன் திட்டத்தை எதிர்க்கிறார். என்ன செய்வது, எதிர்க்கட்சியில் இருக்கும் போதுதான் அரசியல்வாதிகளுக்கு ஞானம் வருகிறது!

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காருக்கும் இத்தகைய காலங்கடந்த ஞானம் வருவதற்கு அவர் எதிர்க்கட்சி வரிசைக்கு போவது வரை காத்திருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் முதல் மாநிலமாகவும், இந்திய அளவில் 8-வது மாநிலமாகவும் திரிபுராவில் 2010 டிசம்பர் 2-ம் தேதி ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் திரிபுரா முதலிடம் வகிக்கிறது. ஆனால், திரிபுராவின் ஆதார் வெற்றியில் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்ப்ட்ட முறைகேடு கறையாக படிந்திருக்கிறது. 15 கோடி ரூபாய் வரை நிதி முறைகேடுகள் நடந்த்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நெருக்கடியை சமாளிக்க 2012 மார்ச் மாதம் மாநில முதல்வர் சி.பி.ஐ விசாரணை கோரப் போவதாக அறிவித்தார்.

ஆனால், மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சவுத்திரி காங்கிரசின் மத்திய அரசு ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முன்னணியில் இருந்ததற்காக கவுரவித்து விருது வழங்கியதை சட்டமன்றத்தில் தெரிவித்தார். சி.பி.ஐ விசாரணை கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

சிபிஎம் மோசடி
சிபிஎம்முக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிடமிருந்து இந்த விருதை பெற்ற சி.பி.எம் 25 செப்டம்பர் 2013-ல் ‘சட்டவிரோத ஆதார்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆதாருக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தது. அரசு பண விநியோகத் திட்டத்திற்கும், சமூகநலத் திட்டத்திற்கும் ஏழைகளைக் கண்டறியும் முறைக்கும் ஆதார் அடையாளத்தை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என்று மத்திய அரசை விமர்சித்து. சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (SUCI) மார்ச் 14, 2012-ல் ஆதார்/UID திட்டத்துக்கு எதிராக 3.57 கோடி கையொப்பங்களைத் திரட்டி பிரதமரிடம் அளித்தது. இத்திட்டம் ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் வருணித்தது. நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு டிசம்பர் 13, 2011-ல் தாக்கல் செய்த அறிக்கையில் தனித்துவ அடையாள ஆணையத்துக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அது இத்திட்டத்தை தெளிவற்றது, நோக்கமற்றது மற்றும் குழப்பம் மிகுந்தது என்று கருத்து தெரிவித்தது. மேலும் இத்திட்டம் பாராளுமன்ற முன்னுரிமைகளுக்கும், அடிப்படை அறநெறிகளுக்கும் எதிரானது என்றது.

பாராளுமன்றத்தில் சட்டமாகும் முன்னரே உயிரியல் அளவை மற்றும் தனித்தகவல்களை சிறப்பு அடையாள எண் மூலம் பெறும் முடிவுக்கு எந்த சட்ட அனுமதியும் இல்லை. ஏப்ரல் 2013 SUCI கட்சியின் ‘ப்ராலட்டேரியன் எரா’ ஆதார் திட்டம் குறித்த பல கேள்விகளை எழுப்பி அதன் பின்னுள்ள உண்மைகளை திரைகிழித்தது. இந்த திட்டம் சட்டத்துக்கும், அரசமைப்பு விதிகளுக்கும் எதிரானது என்று உரைத்தது. இத்திட்டத்தை கொண்டுவர இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகேனிக்கு வரம்பற்ற அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அக்கட்சி மேற்கொண்ட ஆய்வின் படி ஆதார் சமூக அமைப்பை இடைத்தரகர்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் என்று கதையளப்பது மோசடியாகும். மேலும், தகவல்களை சேகரிக்கும் சில நிறுவனங்கள் வகுப்புவாத மற்றும் மத அடிப்படைவாத சக்திகளுடன் இணைந்து நிற்பதையும் அவற்றின் தீய நோக்கத்தையும் சுட்டிக்காட்டி கட்சி எச்சரித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகள் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டுள்ளன. கண்காணிப்புக்கு புகழ்பெற்ற அமெரிக்கா கூட்டுத் தாயக பாதுகாப்புத் துறையிடம் மாகாணங்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு தகவல்களை ஒன்று திரட்ட அனுமதி பெற முயற்சித்து தோல்வியைக் கண்டது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தேசிய உயிரியல் அளவை எண் மூலமாக எடுக்கப்படும் கணக்கீடு தனிநபர் உரிமை மற்றும் அந்தரங்கத்தன்மையை பாதிப்பதை எடுத்துச் சொன்னது. மக்கள் அனைவரின் கைரேகை, உயிரணுக்களின் மாதிரி மற்றும் சந்தேகத்திற்குள்ளான ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாதவர்களின் டி.என்.ஏ பதிவுகளை திரட்டுவது மிக ஆபத்தானது என்பது நீதிபதிகளின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

நந்தன் நிலகேணி
ஆதார் எண்ணை குடிமக்கள் உடம்பில் பச்சை குத்த விரும்புகிறார் நீலகேணி.

அதிகார முறைகேடு, அரசியல் எதிரிகளை கண்காணித்தல், அடிப்படை மனித உரிமைகளை மிதிப்பது, ஜனநாயக மக்கள் இயக்கங்களின் செயல்பாட்டாளர்களை துன்புறுத்துவது, திட்டமிட்ட ரீதியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்களை கொடுமைப்படுத்துவது ஆகியவை தினம்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கும் நமது நாட்டில் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அமைப்பிடம் குவிப்பது எதேச்சதிகாரத்தை உருவாக்கும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கவனத்தை உறுதியாக ஈர்க்கும் வகையில் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

1984 மற்றும் 2002 குஜராத் படுகொலையில் அரசு எந்திரத்தின் முழு பங்கேற்பு இருந்தது என்பது ரகசியமல்ல. அரசு நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் நடக்கும் என்கவுண்டர் படுகொலைகள், விசாரணை கைதிகள் சாவு, போலீஸ் – ராணுவம் மூலம் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டுதல் போன்றவை எதார்த்தமாக இருக்கும் சூழலில் இது தொடர்பாக எழுகின்ற அச்சத்தை புறந்தள்ள முடியாது. அரசியல் எதிரிகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்காணித்து வரும் முதலாளித்துவ அரசுக்கு ஆதார் வசதியும் அமைந்து விட்டால் கேட்கவா வேண்டும். ரயில் முன்பதிவு, ATM-லிருந்து பணம் பெறுதல் முதற்கொண்டு உணவு மானியத் தொகை வங்கியில் செலுத்தப்படும் கணக்கு வரை ஒரு ஒருங்கிணைந்த கண்காணிப்பு வளையத்துக்குள் நாம் நுழைவோம்.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது எதேச்சதிகார, பாசிச சக்திகள் சமூகத்தில் மோசமான கண்காணிப்பு முறைகளை ஏற்படுத்தி இத்தகைய தொழில்நுட்பங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஜெர்மானிய ஆட்சியாளர்கள் 1933-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது IBM ஹாலரித் D II அட்டை வகைப்படுத்தும் கருவியை பயன்படுத்தினர். அதில் இருந்த இனம் பற்றிய வகைப்பாடு, IBM-ஐ பயன்படுத்தி யூதர்களை நாஜிக்கள் கொன்றழிக்க உதவியது.

எனவே சாதிய, மதவாத, இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதார் தகவல் அடிப்படையை தமது ஜனநாயக விரோத, சட்ட மற்றும் நெறிமுறையற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.

தவறானவர்கள் கையில் ஆதார் தகவல்கள் சேர்வதையோ மற்றும் தவறான நோக்கங்களுக்கு ஆதாரை பயன்படுத்துவதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன வழி என்று நந்தன் நிலகேனியிடம் கேட்ட போது அவர் அளித்த பதிலில் அதன் குரூரம் ஒளிந்துள்ளது. ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இப்பிரச்சினையில் நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத உண்மை என்னவென்றால் ஆதார் தொடர்பான நிலைப்பாட்டில் திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சி.பி.எம்மிற்கு நடுவே பெரிய பேதங்கள் எதுவும் இல்லை என்பதே. சட்டவிரோதமாக குடியேறுபவர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை தவிர சி.பி.எம். பா.ஜ.கவிடமிருந்து வேறுபடவில்லை.

நன்றி : Frontierweekly

AADHAR—Extra Legal Coercion – Usha Ramanathan

[கொல்கத்தவின் எர்த்கேர் புத்தக நிலையத்தில் 2013-ம் ஆண்டு நவம்பர் 21 அன்று உஷா ராமநாதன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்]

ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு : சுகதேவ்

 1. ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை

  மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார் நந்தன்

  நிலகேணி

  நந்தன் நீலகேணி தன் கையில் பச்சை குத்தியுள்ளாரா???

  ஆதார் திட்டத்திற்கு ஈடாக இப்பொழுது தனக்கு ஓட்டு போட்டுவிட்டு தங்கள் ”கையில் பச்சைக்கு”

  பதில் ”கை விரலில் மை” வைத்துக்கொள்ளச்சொல்லியுள்ளார்.சரிதானே?????

 2. “”””””””அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகள் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டுள்ளன”””””” — ஏதாவது தெரியலைனா மூடிட்டு இருக்கனும்….. அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி நம்பர் எனப்படும் எண் அனைவருக்கும் உள்ளது…. இது போல இங்கிலாந்து உட்பட பல நாடுகளிலும் உள்ளது…. சீனாவிலும் இன்னும் இரண்டான்டுகளில் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டையும், எண்னும் வழங்கப்படவுள்ளது…. திரைமறைவு வேலையை செய்யும் நக்சல்பாரிகளுக்கு வேண்டுமானால் அவர்களது அடையாளம் தெரிவது பிரச்சனையாக இருக்கலாம்…100 சதவிகிதம் இது போன்ற திட்டம் அமல்படுத்தப்ப்ட்டால் மக்களுக்கு நல்லது தான்…. தீவீரவாதிகளுக்கும்,நக்சல்பாரிகளுக்குமே மண்டை காயும்….

  • இந்தியன்,

   மேலே நீங்கள் “கண்டெடுத்ததை” சொன்னது வினவு இல்லை. மேலும் அதை சொன்ன Dr. உஷா ராமநாதன் நக்சலைட் தீவிரவாதியும் இல்லை.

   http://thealternative.in/author/urushargmail-com/
   http://www.thehindu.com/news/national/tamil-nadu/uid-project-last-step-in-dismantling-of-welfare-policies-expert/article1770519.ece

   ஜனநாயகம் அது இதுன்னு பினாத்த வேண்டியது, உங்க ஜனநாயகத்தோட யோக்கியதைய பத்தி பேசுனாலே போதும் அவங்கள தீவிரவாதின்னு சொல்லிட வேண்டியது. அரசும், அதிகார வர்க்கமும் மட்டுமல்ல “சிறந்த” இந்தியர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.
   உங்க எல்லாப்பயலையும் ஒரு நாள் “பாதாள” சிறையில் அடைக்கத்தான் போறோம் அதுக்கப்புறம் அங்க போயி உங்க “ஜனநாயகத்த” பத்தி பினாத்திகிட்டு கிடங்க :).

Comments are closed.