Thursday, June 30, 2022
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் ‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், "எதுவெல்லாம் தேசத்துரோகம்?"

‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசத்துரோகம்?”

-

ங்கிலேயக் காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி, விடுதலைப் போராளிகளைத் தண்டிக்க 1860-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் 124-ஏ தேசதுரோகச் சட்டம். 154 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை ஏவி, அரசு எதிர்ப்புப் போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காராகிருகத்தில் தள்ளப் பயன்படுத்தி வருகிறது, “சுதந்திர இந்தியஅரசு”.

“பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டி, தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது” என்பதை நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் பார்ப்பன பாசிசத்தின் தயார்நிலை சட்ட ஆயுதமாக உள்ளது, இந்த 124-ஏ தேசத்துரோகச் சட்டம். இதற்கு உச்சபட்ச சான்றானதொரு காரியத்தை உ.பி.யின் மீரட் நகரில் அவர்கள் செய்துள்ளார்கள்.

மாணவர்கள் தாக்குதல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கு முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்களைத் தாக்கும் இந்து மாணவர்கள்.

ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்தன. அவற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றின் போது சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிதியைப் பாராட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள், உ.பி.யின் மீரட் நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சுவாமி விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்தில் பயிலும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் சிலர். இந்தக் “குற்றத்துக்காக” அவர்கள் மீது பல்கலைக் கழகப் பதிவாளர் புகார் கொடுக்கவே, 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கும் போட்டுள்ளனர்.

இதனால் வகுப்புக் கலவரம் வெடித்துவிடும் என்றஞ்சியதாகப் புளுகும் பல்கலைக் கழக நிர்வாகம், அதனால் மாணவர்களை ஜம்மு-காஷ்மீருக்கே திருப்பியனுப்பி விட்டதாகச் சொல்கிறது. ஜம்மு-காஷ்மீர் முதல்வரின் முறையீடு காரணமாக, தேர்தல் நேரத்தில் “இசுலாமிய எதிர்ப்பு பழி” வந்துவிடும் என்றஞ்சிய சமாஜவாதி அரசு 124-ஏ தேசத்துரோக குற்றப்பிரிவை மட்டும் விலக்கிக் கொண்டது. 153-ஏ பிரிவின் கீழ் வெவ்வேறு இன மக்களிடையே பகைமையைத் தூண்டுவதாக வழக்கு, 427 பிரிவின் கீழ் சீர்குலைவு ஏற்படுத்துவாக வழக்கு ஆகியவை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

மீரட் சம்பவம் பற்றி அதிச்சியடைந்தாற்போன்று தலையங்கம் தீட்டியுள்ள “தி இந்து” நாளேடு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. “இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா? சமீபத்தில் ஜம்முவில் தங்கியிருந்த ஜம்மு-காஷ்மீர் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அணியினரின் அறை நள்ளிரவில் சோதனையிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இப்போது காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகள் மனத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியப் பொதுசமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?” இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் “தி இந்து”க்கள் மட்டுமல்ல, காஷ்மீரிகளும் அறியாததல்ல!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசியக் கிரிக்கெட் போட்டி துவங்கும் முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் 12 காஷ்மீரி மாணவர்கள் இந்து மாணவர்களால் ஒரு காரணமுமின்றித் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

சட்ட நியாயப்படி இல்லாவிட்டாலும், “இந்தியப் பொதுசமூகத்தின்” மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துவதாகச் சொல்லித்தான் காஷ்மீரி அப்சல் குருவை கோழைத்தனமாகவும், வக்கிரமாகவும், சட்ட விரோதமாகவும் தாய்க்கும் மனைவிக்கும் தெரிவிக்காமல் தூக்கிலிட்டு கொலைசெய்து, அவரது பிள்ளைக்கும் உடலைக் காட்டாமல் இரகசியமாக சிறைவளாகத்திலேயே புதைத்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு, இந்திய அரசு நடந்து கொண்டது சட்டம், நியாயப்படியானதா, இல்லையா என்று ‘அக்கிரகாரத் திண்ணை’யில் உட்கார்ந்து அலசினார்கள்.

“இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள் போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்” என்று அங்கலாய்க்கிறது, “தி இந்து”. இது ஏதோ இந்தியாவில் சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப் படுவதற்கு எதிரான “அவா”க்களின் ஆட்சேபனை என்று எண்ணிவிட வேண்டாம்.

124-ஏ மட்டுமல்ல, அப்சா, தடா, பொடா, மிசா, மினி மிசா, அந்தந்த மாநில தடுப்புக் காவல் சட்டங்கள் என்று எவ்வளவோ சட்டங்களை சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் மீது அற்பக் காரணங்கள் கூறி இப்படித்தான் பலமுறை ஏவிவிடப்படுகின்றன. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் மகாராஷ்டிரா, குஜராத் உழைப்பாளர்கள் மீதும், “எங்கள் ஊரில் அணு உலைவேண்டாம்” என்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும், “எங்கள் காடுகளின் கனிம வளங்களைச் சூறையாடாதீர்கள் – எங்கள் வாழ்வுரிமைகளைப் பறிக்காதீர்கள்” என்று மறிக்கும் சோடாநாகபுரி மலைவாழ் பழங்குடி மக்கள் மீதும் இந்தத் தேசத்துரோகச் சட்டத்தைக் காட்டி இந்திய ஆயுதப் படைகளின் கொலைகாரத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சுபார்தி பல்கலை மாணவர்கள்
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் ஆட்டக்காரரை பாராட்டிய குற்றத்திற்காக பொய்வழக்கு சோடிக்கப்பட்டு உ.பி.யின் மீரட் நகரிலுள்ள விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி மாணவர்கள்.

காஷ்மீரையும் வடகிழக்கு இந்திய மாநிலங்களையும் இந்தியாவில் இருத்திக் கொள்வதற்காகவும் அம்மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கி வைப்பதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் தயார்நிலை ஆயுதந்தான் தேசத்துரோகத் தடுப்புச் சட்டம் என்ற பாசிச அரசியல். ஆனால், இந்திய ஆட்சியாளர்களின் இந்த வகையான தேசத் துரோகத் தடுப்புகளைக் கண்டுகொள்ளாத “தி இந்து”க்கள் கிரிக்கெட் விவகாரத்தில் ரசிகர்களின் நாடு கடந்த ஜனநாயக உரிமைக்காகக் கோஷம்போடக் கிளம்பிவிட்டார்களே, ஏன்? கிரிக்கெட் தங்களின் ஆங்கிலேயப் பிரபுக்குல விளையாட்டு என்பதாலா? அல்லது இப்போதும் கோடிகோடியாகக் கொட்டும் உலகமகா சூதாட்டம், ஆகவே அதை அரசியலுக்கு அப்பால் வைக்கவேண்டும் என்பதாலா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது “தேசத்துரோகம்”, “தேசபக்தி”, “நாட்டுப்பற்று” ஆகிய சொல்லாடல்கள் நாடுகளின், தேசங்களின் என்ற எல்லைகளைக் கடந்த உலகமய அரசியல் என்றாகி விட்டது என்பதாலா?

இந்திய ஆளும் தரகு முதலாளிகள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் ஏராளமான வியாபார, தொழில் ஒப்பந்தங்களும் உறவுகளும் கொண்டுள்ளனர். அந்நாடுகளுடன் பல்வேறு வகையில் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக உறவுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அதேசமயம் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் அரசியல் ஆதாயம் கருதியே அந்நாடுகள் மீது பகைமை உணர்வு பாராட்டும்படியான பொதுக்கருத்தை இந்தியச் சமூகத்தாரிடையே நிரந்தரமாகப் பராமரித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக நிரந்தரமானதொரு ஆத்திரமும் வெறியும் தொடர்ந்து ஊடகங்களால் கிளறிவிடப்படுகிறது.

இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அரசியல்வாதிகளும்”தேசபக்தி”, “நாட்டுப்பற்று” ஆகியவற்றுக்கான உள்ளடக்கத்தையும் பொருளையும் ஆன்மாவையும் உருவியெடுத்து விட்டார்கள். அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்களுக்கும் நாட்டையே கூறுபோட்டு விற்கும், நாட்டு மக்களைப் புதைகுழியில் தள்ளும் பல துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இறால் பண்ணைகளை அமைத்து, மீத்தேன் வாயுவை உறிஞ்சி, உயிரி விதைகளையும் இரசாயனங்களையும் புகுத்தி நமது வளம்மிக்க வயல்வெளிகளைப் பொட்டல் காடுகளாக்குகிறார்கள். காடு-மலைகளைப் புரட்டிப்போட்டு, கனிம வளங்களைச் சூறையாடிக் கற்குவியல்களாக்குகிறார்கள். அணுஉலைகள், நச்சு ஆலைகளை இறக்குமதி செய்கிறார்கள். பெரும் பெரும் பெட்டகங்களில் அணுக்கழிவுகள், இரசாயன, மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் கொள்ளைக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை மருத்துவ ஆய்வுகள் என்ற பெயரில் சிறு பச்சிளங் குழந்தைகள் முதல் நமது மக்கள் மீது சோதனைகள் நடத்திப் படுகொலைகள் புரிகிறார்கள். மொத்தத்தில், இப்படிப் பலவாறும் நமது நாட்டையே மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றும் தேசத்துரோகஞ் செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் அரசியல்வாதிகளும் “தேசபக்தி”, “நாட்டுப்பற்று” என்பதையெல்லாம் இந்தியாவின் கிரிக்கெட் வெற்றியைப் போற்றுவது, இந்து மதச் சின்னங்களின் புனித்தைப் பேணுவது, அமெரிக்காவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், “தேவயானி”கள் மீதான நிர்வாணச் சோதனைகளைத் தடுப்பது போன்ற அடையாளப் பிரச்சனைகளாக்கி விட்டார்கள். ஆகவே, இதை “இந்து தேசபக்தி” “இந்துஸ்தானிய நாட்டுப்பற்று” என்றுதான் சொல்ல வேண்டும்.

இனி, உண்மையான தேசபக்தர்களாகிய நாம் இப்போதுசெய்யவேண்டியது, வெறும் அடையாளப் பிரச்சனையாக்கப்பட்டுள்ள தேசபக்திக்கு மாற்றாக, எதிராகத் “தேசத்துரோகம்”தான்! இதிலும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்.

1954-ம் ஆண்டு மே 29 அன்று, உத்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு குக்கிரமத்தின் சுமார் 200 விவசாயிகளிடையே பேசினார் ராம் நந்தன். அதன் சாரம் இதுதான். “தாய்மார்களும் சகோதரிகளும் தாங்கள் வாழ்க்கை நடத்தும் பொருட்டு தங்கள் மானத்தையே விற்க வேண்டியிருக்கிறது. உழைக்கும் மக்கள் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் சோறில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். காங்கிரசு ஆட்சியில் ஆயிரக்கணக்கான சீதைகள் கடத்தப்படுகிறார்கள்; உணவுக்கும் உடுப்புக்கும் வேண்டி பெண்கள் விபச்சாரிகளாகிறார்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் வரிகள் விதிக்கப்படுகின்றன. விவசாயிகளின், கூலித் தொழிலாளர்களின் ரத்தம் அந்நிய முதலாளிகளிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. உ.பி. தொழிலாளர்கள் தாங்களே அமைப்பாகத் திரண்டுள்ளார்கள். இனி அவர்கள் தங்கள் மீது அனுதாபப்படுமாறு கெஞ்ச மாட்டார்கள். மாறாக, கம்புகளைக் கையிலெடுப்பார்கள்; அமைச்சகத்தைச் சூழ்ந்துகொண்டு தமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அது தூக்கியெறியப்படும் என்று எச்சரிப்பார்கள்.”

“விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினால், ஒவ்வொரு இளைஞரும் வாள்களையும் துப்பாக்கிகளையும், குண்டாந்தடிகளையும் எரிசாராயப் பாட்டில்களையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு போரில்லாமல் இந்த அரசு சரணடையாது. குண்டாந்தடிகளைப் பயன்படுத் தாமல் தூக்கியெறியப்பட்டதில்லை. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் சங்கங்கள் அமைத்து இராணுவத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.”

“சீனத்து அரசைப் போன்றதொரு அரசைப் பெறவெண்டுமானால், தன்னார்வத் தொண்டர்களின் படையொன்றைக் கட்டியெழுப்பி, துப்பாக்கிகளையும் கைத்துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். தைமூர்லுங், ஔரங்கசீப், சேர்ஷா மற்றும் பிற கொடுங்கோலர்கள் நமது நாட்டைப் பிளக்கவில்லை; நேருதான் துரோகியாகி நாட்டை இரண்டாகப் பிளந்தார்.”

இப்படிப் பேசியதற்காக ராம் நந்தன் மீது உ.பி. அரசு 124-ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றஞ்சாட்டியது. கீழமை நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவருடன் சேர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்ட இசக் இலாமியையும் பரஸ்நாத் திரிபாதியையும் விடுவித்தது. இவர்களையும் தண்டிக்கச் சொல்லி உ.பி. அரசும், தன்னை விடுவிக்கச் சொல்லி ராம் நந்தனும் மேல்முறையீடு செய்தனர். அலகாபாத் உயர்நீதி மன்றம் மூவரையும் விடுதலை செய்தது.

தேசத்துரோகக் குற்ற வழக்குகளில் நியாயப்படியோ, சட்டப்படியோ வாதாடுவதற்கான அடிப்படை ஆதாரங்கள் எதையும் மக்கள் எதிரிகளால் உண்மையில் முன்வைக்கவே முடியாது. இது பல வழக்குகளில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது. என்றாலும் அரசியல் பழிவாங்குவதற்காகவே தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட பினாயக் சென், நாராயண் சன்யால் போன்ற சிலர், பாசிச “நீதியரசர்”களுடன் கூட்டுச்சதி செய்து தண்டிக்கப்படுகிறார்கள். மற்றபடி தேசத்துரோகப் பொய்வழக்குப் போடப்படும் நூற்றுகணக்கானவர்கள் குற்றப் பத்திரிக்கைகள்கூடத் தாக்கல் செய்யப்படாமல், விசாரணையின்றி, கேள்வி முறையின்றி பல ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

– ஆர்.கே.
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

 1. 1,50,000 தமிழர்களை கொன்ற இலங்கை அணி,இந்திய கிரிக்கெட்
  அணி ஆட்டத்தை கொட்டாவி விடாமல் பார்த்த சுத்த சுயம் பிரகாச
  தமிழர்களை கொண்ட நாடு இது?
  வேதனை அடைவதை தவிர எனக்கு வழி இல்லை

  • சீதாபதி சார்,

   //1,50,000 தமிழர்களை கொன்ற இலங்கை அணி//

   உங்களது பல கருத்துக்களுக்கு நான் ஒத்துபோனாலும், மேற்கூறிய கருத்து சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.

   தமிழர்களை கொன்றது கொலைவெறியன் இராஜபக்சே, மற்றும் அவனது சிங்கள இராணுவம். இலங்கை பொதுமக்களையோ இல்லை இலங்கை கிரிக்கெட் அணியையோ இதில் இணைக்க வேண்டாமே.
   இந்திராவை கொன்றது ஒரு சீக்கியர் என்பதானால் அத்தனை சீக்கியர் மேலும் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் வெறியர்கள் போல நாம் இருக்க வேண்டாமே.

   • ரொம்ப சரி…அதனால்தான் இந்திராவைக் கொன்ற
    சீக்கிய சமுதாயத்தில் இருந்து ஒரு நல்ல ரப்பர் ஸ்டாம்பு
    ஆசாமியை, நமது தமிழ் இனத்தின் வேர் அறுக்க “பொறுக்கி”
    வைத்துள்ளோம்!
    இந்திய சிப்பாய்களின் தலையை துண்டு துண்டாக வெட்டினாலும்
    பாகிஸ்தானுடன் கிரிக்கட் விளையாடாமல் இருக்க முடியாது!

 2. இன்று வரை இலங்கை அரசாங்கத்துக்கு மாமா வேலை
  பார்க்கும் இந்து ராம்…..எந்த பிரிவில் தண்டிக்கலாம்?
  யார் தண்டிப்பார்?

 3. இது ஆரிய இனத்தின் மனுதர்மம். காங்கிரஸோ பா.ஜ.க.வோ ஆரிய வேதம் படிக்கும் ஆக்கிரமிப்பாளர்களே. அவர்களுக்கு குறிப்பாக தமிழர்கள் சூத்திரர்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்ற நினைப்பே மேலோங்கி உள்ளது.

  சிறீ லங்காவின் துணைத் தூதர் காரிய வசம கூறியது போல் இந்தியாவும் இலங்கையும் ஆரிய இனத்தின் ஆளுகைக்கு உரிய தேசங்கள். சுப்பிரமணியன் சுவாமி ,சுஸ்மா சுவராஜ், இந்து ராம், துக்ளக் சோ இவர்கள் எந்ந மொழி பேசினாலும் ஆரிய வேதம் மட்டுமே பேசுகிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க