Saturday, August 20, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தேர்தல் புறக்கணிப்பு பேசாதே - புதுச்சேரியில் நாறும் ஜனநாயகம்

தேர்தல் புறக்கணிப்பு பேசாதே – புதுச்சேரியில் நாறும் ஜனநாயகம்

-

புதுச்சேரி பு ஜ தொ மு – வின் இருசக்கர வாகனப் பிரச்சாரமும்! தேர்தல் துறையின் போலி ஜனநாயகமும்!

பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் கமிசன், ஏற்கனவே நைந்து போன ஜனநாயகத்தை தைத்து இது ‘புத்தம் புதிய காப்பி’ என முன்னிறுத்த முயன்று கொண்டிருக்கிறது. மறுபுறம், இது போலி ஜனநாயகம் என தனது சர்வாதிகார செயல்களாலேயே நிரூபித்தும் வருகிறது. தேர்தல் கமிசனின் கெடுபிடிகள் தமிழகத்தை விட புதுச்சேரியில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள், சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள் ஆங்காங்கே காண முடிகிறது. ஆனால், புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கமிசன் செய்த முதல் வேலை சுவருக்கெல்லாம் சுண்ணாம்பு அடித்தது தான். அதற்குப் பிறகு, பேனர்களை அகற்றி சுவரொட்டிகளைக் கிழித்தது. ஜனநாயகத்தைப் பற்றி சண்டமாருதம் செய்யும் எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் இவைகளைப் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஆனால், எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து பகுதிப் பிரச்சனைகளை ஒட்டி சுவரொட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்காகத் தேர்தல் விதி முறைகளை மீறிவிட்டதாக போடப்பட்ட பல வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறது.

“இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தல் அல்ல! கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தேர்தல்!” என விளக்கி, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 15/04/2014 அன்று கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வதற்காக, இருசக்கர வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டது.

இந்த பிரச்சாரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அனுமதி கோரி தேர்தல் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், நமது பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிக் கேட்ட தேர்தல் துறையில் அனுமதி தொடர்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தாசில்தார் சிவக்குமார், “இந்தப் பிரச்சாரத்திற்குப் பயன்படும் இரு சக்கர வாகனங்கள் பற்றிய முழு விவரங்கள் (ஆர்.சி., இன்சூரன்ஸ்), வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்தின் நகல்களையும் அளிக்க வேண்டும். அவைகளை சரி பார்த்த பிறகே இந்த அனுமதி தருவது பற்றி பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.

“ஒவ்வொரு ஓட்டுக்கட்சியும் 50, 100 என தனது தொண்டர்களை இரு சக்கர வாகனங்களில் அணிதிரட்டி ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிக்கின்றனரே, அவர்கள் இந்த விவரங்களைக் கொடுத்ததாக கேள்விப் பட்டதில்லையே” எனக் கேட்டவுடன், “அவர்கள் எல்லாம் கொடுத்துத் தான் அனுமதி பெற்றுள்ளனர்” என நம்மிடமே ஒரு ‘ஜெர்க்’ விட்டார். மேலும், “பொதுவாக இரு சக்கர வாகனப் பிரச்சாரங்களுக்கு சாதாரண காலங்களில் இது போன்று கோருவதில்லையே?” எனக் கேட்ட போது, “அதைப் பற்றி எல்லாம் பேச முடியாது. கேட்டது கொடுத்தால் அனுமதி பற்றிப் பேசப்படும்” என்று கூறியதால், அந்த வாகனங்களின் மேற்கூறிய விவரங்கள் அடங்கிய நகல்கள் கொடுத்து, நாம் திட்டமிட்ட தேதியை மாற்றி மீண்டும் அனுமதி கோரப்பட்டது. “இப்போது தானே கொடுத்தீர்கள், அதைப் பரிசீலனை செய்து சொல்கிறோம்” என கூறிவிட்டார். இதற்கிடையில், வாரவிடுமுறையும், தமிழ் வருடப் பிறப்பு விடுமுறையும் வந்துவிட்டது. ஆனால், அனுமதி மட்டும் வரவேயில்லை.

அனுமதி இல்லாததால் ஒலிபெருக்கிக்குப் பதில், மெகா போன் மூலம் பிரச்சாரம் செய்வது, அதையும் மீறி பிரச்சினைகள் வந்தால் எதிர்கொள்வது என்ற அடிப்படையில் திட்டமிட்ட நாளில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. நமது இணைப்புச் சங்கங்கள் இயங்கும் நகரப் பகுதியான வில்லியனூர் கோட்டைமேடு என்ற பகுதியில், காலை 11.00 மணிக்கு பிரச்சாரம் துவங்கப்பட்டது. தோழர்கள் வந்து சேரும் முன்பே காவல் துறைக்கு மூக்கு வேர்க்க, மோப்பம் பிடித்து விட்டது. அங்கிருந்த கான்ஸ்டபிள், “அனுமதி இருக்கிறதா?” எனக் கேட்ட போது, இவர்களின் கெடுபிடியால் பிரச்சாரம் தடைபடக் கூடாது என எண்ணி, “அனுமதி வாங்கப்பட்டு விட்டது. தோழர்கள் கொண்டு வருவார்கள். அதற்காகத் தான் காத்திருக்கிறோம்” என்று கூறி, அடுத்த 10 நிமிடத்தில் வாகனங்களில் கொடிகளைக் கட்டிக் கொண்டு, சிவப்புப் சட்டையுடன் கேலிச் சித்திரங்கள் அடங்கிய தட்டிகளுடன் பிரச்சாரம் துவங்கப்பட்டது. வில்லியனூர், உறுவையாறு, மங்கலம், செம்பியப்பாளையம், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், குமாரமங்கலம், சேலியமேடு, பாகூர், கன்னியகோவில், காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடை வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து வகை மக்களையும் சந்திக்கும் வகையில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. பிரச்சாரம் செய்தபின் அங்குள்ள மக்கள், சிவப்புக் கொடிகளைக் கட்டிக் கொண்டு ஓட்டுப் போடாதே என்று சொல்கிறார்களே என ஆச்சரியமாகப் பார்த்தனர். விசயங்களை ஆர்வமுடன் கவனித்தனர். அனைத்து இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவைக் கொடுத்தனர். குறிப்பாக, நாம் பேசுவதை தலையசைத்து ஆமோதிப்பது, பேருந்து ஏற காத்திருப்பவர்கள், பேருந்து வந்தாலும் ஏறாமல் நமது பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு அடுத்த பேருந்தில் ஏறுவது என தங்கள் ஆதரவை தங்களது செய்கையாலேயே பதிவு செய்தனர்.

பொதுவாக, வயதானவர்கள், ஓட்டுப் போட்டு, ஓட்டுப் போட்டு விரக்தியிலும், ஆத்திரத்திலும் பேசுவதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. இந்தப் பின்புலத்தை வைத்து, தேர்தல் கமிசன் குறிப்பாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சென்று ஓட்டுப் போடும் வயதை அடைந்த மாணவர்களிடம் ஓட்டுப் போடுவது பற்றிப் பேசுவது ஏன் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

நண்பகல் நேரத்தில் கிராமங்களில், மக்கள் குறைவாக இருந்தாலும், பாடல், முழக்கம் என மக்களை வெளியில் வரவைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு மூதாட்டி, “ஆமாம் தம்பி! நீங்க சொல்வதெல்லாம் சரிதான். மாமன், மச்சான், சித்தப்பான்னு உறவு முறை சொல்லி ஓட்டுக் கேட்கிறானுங்க. ஆனா ஜெயிச்சு வந்தா, அவனுங்க கொள்ளையடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல” என தனது வழக்கமான மொழியில் ஆவேசமாகத் திட்டி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

மார்க்கெட் பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் போது, “பல ஆண்டுகளாகக் கடை வைத்திருக்கும் மளிகைக் கடை வியாபாரியோ, டீக்கடைக்காரரோ தன்னால் அடுத்த கிளையைத் திறக்க முடியவில்லை. ஆனால், முதலாளிகள் புதிதாக தொழிற்சாலை தொடங்கிய ஒரு ஆண்டிலேயே, கிளைகளைத் துவங்கி விடுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?” என்றும், “சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளில் தாங்களே கடை நடத்துபவர்களாகவும், தாங்களே அந்தக் கடையில் வேலை செய்யும் தொழிலாளியாகவும் வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு வரிச்சலுகை எதுவும் இல்லை. ஆனால், வங்கிகளில் உள்ள மக்கள் சேமிப்பை கடனாகவும், பங்குச் சந்தை மூலம் நேரடியாய் மக்கள் பணத்தின் மூலமும், தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கோடிகளுக்கும் மேல் வரிச்சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த அநியாயத்தைச் செய்யும் ஓட்டுக்கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டுமா?”  எனவும் கேள்வி எழுப்பியவுடன், “சரியா சொன்னீங்க தம்பி! நான் கூடஓட்டுப் போடக் கூடாதுன்னு தான் நெனச்சேன். கண்டிப்பா நான் ஓட்டுப் போட மாட்டேன். மத்தவங்ககிட்டயும் இந்தக் கருத்தச் சொல்லுவேன். ஓட்டுப் போடுவதைத் தடுப்பேன்” என பட்டென்று சொன்னார் பக்கத்தில் இருந்த கடை வியாபாரி.

இது கிழிந்து தொங்கும் ஜனநாயகம் என மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் உணர்ந்துள்ளனர். ஆனால். மாற்று வழி தெரியாமல் கையறு நிலையில் உள்ளனர். ஒரு பக்கம் மக்கள் தெரிந்து கொண்டிருந்தாலும், காவல் துறையும், தேர்தல் துறையும் தங்கள் பங்குக்கு ஜனநாயகத்தைக் கிழித்துத் தொங்க விட்டது தான் இப்பிரச்சாரத்தின் கூடுதல் சிறப்பு.

இந்தப் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வந்து நின்ற காவல் துறையும், தேர்தல் துறையும் பிரச்சாரம் முடியும் வரை தொடர்ந்து வந்து அனுமதி, அனுமதி என்று ஜனநாயகத்தைக் ‘கட்டிக் காக்க’ பெரும் பாடுபட்டனர். ஒரு கட்டத்தில், அனுமதி கடிதத்தைக் காட்டினால் தான் உண்டு என்ற காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்றவுடன், கொதிப்படைந்தார். ஆயினும், “ஒலிபெருக்கிக்குத் தான் அனுமதி தேவை. மெகா போனுக்கு அனுமதி தேவையில்லை” என்று சொன்னாலும் அவர் விடுவதாயில்லை. மேலும், அந்த மெகா போனின் புனல் போன்ற தோற்றத்தைப் பார்த்து அது மெகா போன் என்று ஒத்துக் கொள்ளவேயில்லை. ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இது மெகா போன் தான் என வாக்குவாதத்துடன் பிரச்சாரம் முடிக்கப்பட்டது.

“ஒரு இடத்தில், தேர்தல் அதிகாரி அனுமதி வாங்கித்தான் பிரச்சாரம் செய்கிறீர்களா? எங்கே அனுமதி கடிதம்” எனக் கேட்டார். “அனுமதி கடிதம் எங்கள் தலைவரிடம் கேட்க வேண்டும் எடுத்து வரச் சொல்லியிருக்கிறோம்” எனக் கூறியவுடன், சரி என்று சொல்லி, நாம் பிரச்சாரம் செய்வதை கவனித்த படியே அனுமதி கடிதத்திற்குக் காத்துக் கொண்டிருந்தனர்.

பிரச்சாரத்தில் பேசிய தோழர், “இன்று தேர்தல் துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு கெடுபிடிகள், சோதனைகள் செய்யும் இவர்கள், தங்களது அன்றாட வேலைகளுக்காக லஞ்சம் வாங்கும் யோக்கிய சிகாமணிகள்” என்றும், “இதுவரை நடத்திய சோதனைகளில் எந்த ஓட்டுக்கட்சியின் பணத்தையும் கைப்பற்றவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பட்டுவாடா படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்காமல், அன்றாடம் பிழைப்புக்குச் செல்லும் வணிகர்களின் பணத்தையும், முறையாக கணக்கு காட்டாமல் எப்போதும் போல் எடுத்துச் செல்லப்படும் பணத்தையும் தான் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்” என்றும், இவர்கள் நடத்தும் தேர்தலின் யோக்கியதையை அம்பலப்படுத்தி உண்மையைச் சொன்னவுடன், தனது மானம் கப்பலேற்றப்படுவதைப் பொறுக்க முடியாமல், சற்றுத் தள்ளிப் போய் நின்றனர். தோழர்கள் அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்குச் செல்லும் வழியில் மடக்கி தனது எரிச்சலை தீர்த்துக் கொள்ளும், விதமாக, “உங்கள் பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயரும், அதன் எண்ணிக்கையும் குறிக்கப்படவில்லை. அதனால், நீங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுகிறீர்கள். உங்களது பிரசுரங்களைப் பறிமுதல் செய்து விடுவோம்” என மிரட்டிப் பார்த்தனர்.

உடனே தோழர்கள், “நாங்கள் தேர்தலில் பங்கேற்பதில்லை. நீங்கள் சொல்லும் விதிகள் இதற்குப் பொருந்தாது” என்று சொன்னவுடன், “அதெப்படி? நீங்களும் தான் பிரச்சாரம் செய்கிறீர்கள். பிரச்சாரத்தில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும்” என்றார். அவரிடம் சொல்லிப் புரியவைப்பது சாத்தியமில்லை. அதற்கு நமக்கு நேரமுமில்லை என்பதைக் கணக்கில் கொண்டு, “அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்” என பேசி முடித்துக் கொள்ளப்பட்டது.

நாம் இவ்வாறு கூறிவிட்டு வந்தும், தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தேடும் வகையில், தோழர்களைப் பின் தொடர்ந்து வந்தும், மதிய உணவு அருந்துவதை மட்டுமில்லாமல், பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய கேலிச்சித்திரங்களையும், இரு சக்கர வாகனங்களையும் வீடியோ எடுத்தும் வழக்குப் போடுவோம் எனக் கூறியும் மிரட்டிப் பார்த்தனர். தோழர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரச்சாரத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தனர். தனது மிரட்டல்கள் எடுபடாமல் போவதை உணர்ந்த அவர்கள் அமைதியாகச் சென்றுவிட்டனர்.

மற்றொரு இடத்தில், 4 தேர்தல் துறை அதிகாரிகள், 1 உதவி ஆய்வாளர், 4 கான்ஸ்டபிள்கள் என ஒரு கூட்டமே நமது பிரச்சாரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அதிலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பல கோணங்களில் படம் பிடிப்பதைப் போல, நமது பிரச்சாரத்தை மூன்று பக்கங்களில் மூன்று கேமராக்களை வைத்து முகத்திற்கு அருகில் வந்து வீடியோ எடுத்து பயமுறுத்திக் கொண்டிருந்தனர். நமது தோழர்கள், அசராமல் நின்று பிரச்சாரம் செய்து அதைக் கேலிக்குள்ளாக்கினர்.

ஓட்டுப் போடுவது மக்களின் ஜனநாயகக் கடமை என மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்யும் தேர்தல் துறை, சட்டத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லும் காவல்துறை, ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசு என இவர்களே தாங்கள் கூறும் ஜனநாயகம் போலியானது என்பதனைக் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தைத் தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால், இவர்கள் சொல்லும் ஜனநாயகம் போலி ஜனநாயகம் என நாம் கூறிவருகிறோம்.

மொத்தத்தில், ஓட்டுப் போடுவது ஜனநாயகக் கடமையே இல்லை என்பதையும், ஓட்டுப் போடுவதால் தங்களது பிரச்சினைகள தீரப்போவதுமில்லை என்பதையும் உணர்ந்ததால், மக்கள் தேர்தல் மயக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். இதற்கு மாற்றாக புதியஜனநாயக அரசமைப்பு அதன் தன்மைகளை விளக்கும் போது, கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அவர்களை இது சாத்தியமா? என அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. ஆனால், வரலாற்று ரீதியாக அதைச் சாத்தியமாக்கும் வழிமுறைகளைப் பற்றி விளக்கியவுடன் புது நம்பிக்கை ஒளி அவர்களது கண்களில் காண முடிகிறது. இந்த நம்பிக்கை ஒளி புரட்சியின் தீபமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அனுபவபூர்வமாக உணர முடிந்தது இந்த மக்கள் பிரச்சாரத்தின் மூலம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – புதுச்சேரி.

  1. தேர்தல் புறக்கணிப்பு உங்கள் கொள்கையா இல்லை மக்களுக்கு அதிகாரம் இல்லத தேர்தல் முறையை எதிர்ப்பதற்க்கான அடையாளமா

  2. மாமுல் தேர்தல்…
    மாமுல் அதிகாரிகள்….
    மாமுல் மாமாக்கள்….
    மாமுல் தேசமடா தம்பி!

  3. தேர்தலைப் புறக்கணித்த பிறகு என்ன செய்வது, அதற்கு மாற்று ஏற்பாடு என்ன, அதில் ஊழல் இல்லாமல் இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம், யாராவது அதை நடைமுறைப் படுத்தி ஓரளவாவது வெற்றி கண்டிருக்கிறார்களா என்பதைப் பற்றி விபரமாக – யாருக்காவது தெரிந்தால் – ஒரு கட்டுரை எழுதுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க