privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஓட்டுப் போடலேன்னா சாமி கண்ணக் குத்துமா ?

ஓட்டுப் போடலேன்னா சாமி கண்ணக் குத்துமா ?

-

தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கம்

1. திருச்சி

ர்வாதிகாரத்தின் உதவியுடன்தான் பாராளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்ற பரிதாபகரமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு விட்டது. 144 தடை உத்தரவு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்று முடிவெடுத்து விட்டது தமிழக தேர்தல் கமிஷன். திருச்சி நகரின் எல்லா போக்குவரத்து சிக்னல்களிலும் “பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்” என்று மை வைக்கப்பட்ட சுட்டுவிரல் விளம்பரம் மிரட்டுகிறது.

நமது தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தைக் கொண்டு சென்ற சில இடங்களில் பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்கள் பலரும் கூட ‘ஓட்டுப் போடலன்னா எப்படிங்க? செத்த பொணத்துக்கு சமமாச்சே’ என்று “சாமி கண்ணைக்குத்தும்” ரேஞ்சுக்கு அப்பாவித்தனமாக கேட்டனர். அந்த அளவுக்கு அச்சமூட்டி தேர்தல் நம்பிக்கை மூடநம்பிக்கையாக ‘வளர்க்கப்’ பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட பெரும் கொடுமை என்னவென்றால், தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை நமது சென்னை தோழர்கள் சந்தித்து தேர்தலைப் புறக்கணித்துப் பேசுவதற்கு உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிய பின்னும், அதை அவர் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் ( மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ) தகவல் அனுப்பிய பின்னும் கூட அந்த ஜனநாயக உரிமையை வெட்டிச் சிதைக்க திருச்சி அதிகாரிகள் அரும்பாடு பட்டனர். ஒலிபெருக்கி அனுமதிக்காக வாரக் கணக்கில் போராடி, பிரவீன் குமாரிடம் தொலை பேசியில் முறையிட்டு இறுதியாக கிடைத்ததோ “அனுமதி மறுக்கப் படுகிறது” என்ற ஆணைதான். நாம் விண்ணப்பத்துடன் இணைக்காத பிரசுரத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டு அதிகாரிகள் அத்தனை பேரும் கூடி கஷ்டப்பட்டு படித்து, அதில் “பல அரசியல் தலைவர்களின் பெயர்கள் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது” என்பதைக் கண்டுபிடித்து,“எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் தனிப்பட்ட முறையில் அவமதிப்பு செய்து பேசுவது இந்திய தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது. எனவே, மேற்படி கொள்கை பரப்பு பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.” என்று கூறியிருந்தனர்.

அதே நேரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரின் உத்தரவை மீறியதாகவும் இருக்கக் கூடாது என்பதற்காக “மேற்கண்ட இனங்கள் நீக்கப்பட்டு மனு அளிக்கும் பட்சத்தில் தங்களது மனு பரிசீலனை செய்யப்படும்” என்றும் தெரிவித்தனர். நாம் விடாக்கண்டனாக மாறி உடனடியாகவே அவ்வாறான மனு ஒன்றைத் தயாரித்து கொடாக் கண்டர்களிடம் போராடினோம். ஆனால், அதன் பின்னும் நாம் கோரிய 13 இடங்களுக்கு பதிலாக ஒரே ஒரு இடத்தில், அதுவும் அரை மணி நேரம் மட்டும் கூட்டம் நடத்த அனுமதி அளித்தனர்.

இதைப் பெற்றுக் கொண்ட நாம், நமது அமைப்பின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதன் மூலம் இந்திய ஜனநாயகத்தைப் காப்பாற்றத் துடிக்கும் இந்த அடாவடித் தனத்தைப் பற்றி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டோம். நமக்கு ஜனநாயக உரிமை வழங்குவதில் காவல் துறைக்கிருந்த அச்சத்தை மாவட்ட ஆட்சியர் நம்மிடம் விளக்கினார். நாமோ முறையான அனுமதி வழங்கிய எந்த கூட்டத்திலும் எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை என்று சொல்லி அச்சத்தை அகற்றியதுடன் அவ்வாறு வழங்காத நிலையில்தான் சட்டம் ஒழுங்கை குலைக்க வேண்டிய தேவை ஏற்படும் என்ற அச்சத்தை மாவட்ட ஆட்சியருக்கு உருவாக்கினோம். அதன் விளைவாக 7 இடங்களில் அனுமதி பெற்று ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டங்களை நடத்த முடிந்தது. இந்த தெருமுனைக் கூட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஒவ்வோரிடத்திலும் நூற்றுக் கணக்கில் மக்கள் கூடி நின்று நமது கருத்தை ஆமோதித்தனர். நிதியளித்து ஆதரித்தனர். தேர்தல் பற்றி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்த மக்கள் பலர் தெளிவாக முடிவெடுக்க இக்கூட்டங்கள் உதவியதாகக் கூறினர்.

தவிர, பல குடியிருப்புப் பகுதிகளில் மெகாஃபோனுடன் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது. கல்லூரிகளில் விநியோகிக்கப் பட்ட “கல்வி உரிமை வேண்டுமா? தேர்தலுக்கு கட் அடி!” என்று தலைப்பிட்ட பிரசுரம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டி படிக்க வைத்தது.

நமது பிரச்சாரங்களை கவனித்த ஒருவர் “நான் பரம்பரை தி.மு.க கட்சிகாரன். எங்க அப்பா காலத்திலிருந்து அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டு போடுவோம், ஆனா உங்க அமைப்புக்கு நான் என்னைக்கும் ஆதரவாளன். அந்த மோடி வரக் கூடாதும்மா, மோசமானவன். குஜராத்தில் எவ்வளவு பேரை கொன்னான்” என்றார். இன்னொருவர் “எல்லாரும் ஓட்டுப் போடுங்கன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போது நீங்க போடக்கூடாதுன்னு சொல்றீங்க , வெளிய கிளம்பின நான் உங்க போஸ்டரப் பாத்துட்டு , பிரச்சாரத்தப் பார்க்கணுன்னே நின்னுக்கிட்டு இருக்கேன், ஏன்னா நீங்க எப்பவும் சரியா பேசுவீங்க” என்றார்.

கடைவீதிகளில் பிரச்சாரம் செய்யும் ஓட்டுக்கட்சிகள் எப்போதும் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையூறு செய்யும் வகையிலேயே பிரச்சாரம் செய்வதால், இத்தகைய பிரச்சாரங்கள் என்றாலே எரிச்சலைடைதிருந்த கடைக்காரர் ஒருவர், “தேர்தல் பிரச்சாரக்கூட்டம் என்றாலே நான் கடையை பூட்டி விட்டு சென்று விடுவேன். ஆனால் நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல் கூட்டம் நடத்துறீங்க, பேச்சை முழுமையா கேட்டேன் எந்தவித சுயநலமுமில்லாமல், தேர்தல் என்ற பேரில் அதிகாரிகள் நடந்து கொள்கின்ற அத்துமீறல் பற்றி நீங்கள்தான் தைரியமாக கூட்டத்தில் பேசுகிறீர்கள். இது போன்று யாரும் தைரியமாக பேசியதில்லை” எனக் கூறினார்.

பெரும்பான்மையான கடை வியாபாரிகள்,“ தேர்தல் சமயத்தில் மட்டும் தேர்தல் அதிகாரிகள் நேர்மையானவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். நேற்று வரை யார் நம்மிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு கையெழுத்து போட்டார்களோ, அவர்கள் லஞ்சத்தை பற்றி பேசுகிறார்கள்” என்ற உண்மையை இதுவரை இங்கு நடந்த எந்த கூட்டத்திலும் யாரும் சொல்லவில்லை என்று கூறி நமது பிரச்சாரத்தை வரவேற்றனர். ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், ‘ நான் இலங்கைக்காரன் அங்கு எம் மக்களுக்கு துரோகம் நடந்த விசயத்தை எந்த வித கலப்படமுமில்லாமல் அப்படியே சொன்னீர்கள், எந்த கட்சியும் உதவவில்லை மாறாக துரோகம் தான் செய்தது என்பதை உணரச் செய்தீர்கள்” என்றார்.

இரண்டு இளைஞர்கள். “டீ குடிக்கத்தான் வந்தோம், கூட்டத்தை பார்த்தவுடன் வழக்கம் போல் நடைபெறும் தேர்தல் கூட்டம் என்றுதான் நினைத்தோம். ஆனால் ஓட்டு போடாதே என்ற உங்கள் முழக்கமும், ஏன் ஓட்டு போட கூடாதுன்னு என்னால் நிறைய காரணம் சொல்ல முடியும், ஏன் ஓட்டுபோடணும் என்பதற்கு எந்த அரசியல் கட்சியோ, அரசோ, தேர்தல் கமிசனோ காரணத்தை சொல்ல முடியுமா? என்று உங்கள் பேச்சாளர் கேட்ட கேள்வியும் எங்களை நிற்க வைத்துவிட்டது” என்று கூறினர்.

இன்னும் சிலர்,  “சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைக் கண்டு யாருக்கும் ஓட்டு போட கூடாதுன்னுதான் நோட்டா பட்டனை அழுத்தி விடலாம் என நினைத்தோம், ஆனால் , நீங்க சொல்வதை பார்த்தால் இதுவும் பயனற்றதாகவே தெரிகிறது. நீங்க சொன்ன மாதிரி நாமதான் வேலையை விட்டுவிட்டு வரிசையில் நிற்கிறோம். டாடா, அம்பானின்னு எந்த முதலாளியும் போய் ஓட்டு போடறதில்லை. நாங்க இந்த தடவை எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம்” என கூறினர். இங்கு மட்டுமல்ல சட்டக் கல்லூரியில் நாம் சந்தித்த மாணவர்கள் மூன்றில் ஒருவர் நோட்டாவுக்கு ஆதரவாகப் பேசினர். இப்படிப்பட்ட பலரிடம் நமது பிரசுரமும் பிரச்சாரமும் தெளிவை ஏற்படுத்தியது.

நமக்கு இருக்கும் ஒரே உரிமையான வாக்களிக்கும் உரிமையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக் கூடாது என மக்கள் நினைத்தாலும், நமது பிரசுரங்களும், சுவரொட்டிகளும், கார்ட்டூன் சுவரொட்டிகளும் தெருமுனைக் கூட்டங்களும், பேருந்து பிரச்சாரமும் அவர்களை சிந்திக்க வைப்பதாக அமைந்தது. பாய்லர் ஆலையில் நாம் ஒட்டிய துண்டறிக்கைகளும் கார்ட்டூன் சுவரொட்டிகளும் தொழிலாளர்களை கூட்டம் கூட்டமாக நின்று படிக்க வைத்தது. பகுதி பிரச்சாரம் செய்த சில இடங்களில் கழிப்பறை வசதி கூட செய்து தராத இந்த ஜனநாயகத்துக்கு வாக்களித்து நமது கடமையை ஆற்றுவதால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்தனர்.

அந்த வகையில் என்னதான் தேர்தல் கமிசனின் கட்டுப்பாடுகள் நமது பிரச்சாரத்தை முடக்கினாலும் அதையும் தாண்டி மக்களின் எண்ணமாகவே தேர்தல் புறக்கணிப்பு மாறி வருவதை உணர முடிகிறது. ஆளும் கும்பல் நோட்டா போன்றவற்றை அனுமதித்து என்னதான் இந்த போலி ஜனநாயக மயக்கத்தில் மீண்டும் மீண்டும் மக்களை ஆழ்த்த முயன்றாலும் அதைத் தாண்டி மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் இந்த உதவாக்கரை தேர்தல் முறையை தூக்கியெறிந்து புரட்சிப் பாதையில் முன்னேறுவர் என்ற நம்பிக்கையைப் பெற முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு – பெ.வி.மு,திருச்சி.
தொடர்புக்கு: 7373217822.

2. சென்னை பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை கிளை பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள் 21.4.14 மற்றும் 22.4.14 ஆகிய இரண்டு நாட்களும் பல்லாவரம் (நாகல்கேணி) – குரோம்பேட்டை (காந்தி நகர்) யை சுற்றிலும் தேர்தல் புறக்கணிப்பு – மோடி வெளியீடு – தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டினர்.

மக்களிடம் வீடு வீடாக சென்று அமைப்பை அறிமுகப்படுத்திவிட்டு 16-வது நாடாளுமன்ற தேர்தலால் உழைக்கும் மக்களுக்கு எந்தவிதமான ஜனநாயக உரிமைகள் வரப்போகிறது, மோடி பிரதமராக வந்தால் இந்தியாவும் குஜராத்தை போல வளர்ச்சி அடையுமா? என்ற கேள்விகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தோம்.

கிராமத்திலிருந்து சென்னைக்கு பிழைப்புக்காக வந்த ஒரு குடும்பத்திடம் பிரச்சாரம் செய்யும் போது, “நாங்கள் இப்போதுதான் கிராமத்திற்கு சென்று வந்தோம். அங்கு வரும் வேட்பாளர்கள் மக்களிடம் சொம்பில் பாலை நிரப்பி அதன்மீது எனக்குதான் வாக்களிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுங்கள் என்றும் மேலும் அப்படி செய்தால் உடனே 500 ரூபாய் தருகிறார்கள்” என்ற தகவலை சொன்னார்கள். ஓட்டு கட்சிகளின் யோக்கியதையை விளக்கி பேசினோம். பகுதியில் ஒரு நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணியிடம் பேசும் போது யார் வந்தாலும் நம்முடைய கஷ்டங்கள் தீரபோதில்லை என்றார். அவரிடம் மோடியை பற்றிய வெளியீட்டை வாங்கி கொள்ளுங்கள் என்றதும் எனக்கும் குடும்பத்திலுள்ள யாருக்கும் தமிழ் தெரியாது என்றார். தோழர்கள் புறப்பட்ட போது இருங்க நீங்க எல்லோரும் வெயில்ல வந்து பிரச்சாரம் செய்றீங்க என்னால புத்தகந்தான் வாங்க முடியல்ல, குளிர்ச்சியா கொஞ்சம் மோராவது குடிங்க என்று தோழர்களுக்கு தந்து உபசரித்தார்.

தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டியை குரோம்பேட்டை பஸ் நிலையத்தை சுற்றிலும் ஒட்டிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் தோழர்களிடம் வந்து, “போஸ்டரில் சரியான விஷயங்கள் தான் எழுதியிருக்கிறீங்க ஆனாலும் சீக்கிரமா ஒட்டிவிட்டு போங்கள். மேல் அதிகாரி வந்தால் எனக்கு பிரச்சினையாக முடியும்” என்றார். நாங்களும் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு பகுதிக்குள் சென்று ஒட்டினோம்.

அதை பகுதி மக்கள் ஆர்வமுடன் படித்து பார்த்தார்கள். மேலும் இந்த பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்க வந்தவர்கள் மக்களிடம், ‘இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன் முதலிய பொருட்கள் வந்துள்ளது, அதை தேர்தலுக்கு பிறகுதான் கொடுப்போம். அதனால் நீங்கள் ஓட்டை ‘பார்த்து போடுங்கள்’’ என்று சொன்னதையும் நம்மிடம் பகிர்ந்தார்கள். நம்முடைய வரி பணத்தில்தான் இலவசங்கள் கொடுக்கப்படுகிறது என்பதை தோழர்கள் அவர்களிடம் விளக்கி பேசி அதனால் இலவசங்களுக்காக ஓட்டு போட்டு நமது வாழ்க்கையை விற்க வேண்டாம் என்பதை கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டு ஓட்டு போட மாட்டோம் என்றார்கள்.

மேலும் ஒருவர் வெள்ளைக்காரர்கள் ஆண்ட போது இந்தியா சரியாக இருந்தது என்றும் இப்போதுதான் சீரழிந்துள்ளது என்றும் தோழர்களிடம் கூறி வாங்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு நமது தோழர் இருவர் பொறுமையாக வெள்ளைக்காரன்களிடம் நாம் அடிமையாக இருந்ததையும், போலி சுதந்திரத்தை வாங்கிய பின்னரும் நாடு எப்படி பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமையாக இருக்கிறது என்பதையும் விளக்கிய பின்னர் சரிங்க நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் இந்த ஒரு முறை நான் ஓட்டு போடுவேன். அதன் பிறகு நீங்கள் சொன்னதை பரிசீலித்து பார்க்கிறேன் என்றவர் மோடி வெளியீட்டை வாங்கிக் கொண்டார்.

பகுதியில் ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் தொழிலாளி ஒருவர் நம்மிடம் வந்து என்ன பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று ஆர்வமுடன் கேட்டார். அவரிடம் பிரசுரமும் மோடி வெளியீட்டையும் தந்து விளக்கிய பிறகு எனக்கு இந்த மோடி வெளியீட்டை படிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனாலும் என்னிடம் காசு இல்லை என்று வெளியீட்டை வருத்தமுடன் திருப்பி தந்தார். உடனே தோழர்கள் காசு இல்லை என்றால் பரவாயில்லை என்று புத்தகத்தை அவரிடம் தந்து படியுங்கள் என்றதும் அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தோழர்களிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் “நீங்கள் யார் ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதற்கு, அவர் அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஓட்டு போடுவதுதான் கடமை” என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு தோழர்கள் விளக்கமாக 15 முறை ஓட்டு போட்டு என்ன செய்தார்கள்? தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு உள்ளதையும். விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவதையும் கூறிய பிறகும் அவர் சத்தம் நின்றபாடில்லை. அவர்கள்  குடும்பத்தினர் திமுகவை சார்ந்தவர்கள் என்றும், அதனால்தான் அப்படி பேசுகிறார்கள் என்றும் பகுதியில் எந்த பிரச்சினைக்கும் அவர்கள் வர மாட்டார்கள் என்றும் பகுதியில் உள்ள மற்ற பெண்கள் கூறியதாக தெரிய வந்தது. அரசியல் கட்சிகளிடம் உள்ள ஜனநாயகத்தை(?) புரிந்து கொண்டு பிரச்சாரத்தை அடுத்து வீட்டிற்கு கொண்டு சென்றோம்.

அப்போது நர்சிங் படிக்கும் ஒரு மாணவி நம்மிடம் தயங்கி தயங்கி வந்து ஏன் ஓட்டு போடாதீர்கள் என்று சொல்றீங்க என்றார். அவர் இப்போதுதான் முதன்முதலில் ஓட்டு போட தகுதியானவர் என்பதை அவரிடம் பேசும்போது தெரிந்தது. அவரிடம் எப்படி நமக்கு இலவசப் பொருட்கள் தருகிறார்கள் என்பதையும், டாஸ்மாக் சாராயக் கடையால் ஏற்படும் பிரச்சினைகளையும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதையும், இதற்கெல்லாம் காரணமான இந்த அரசியல் அமைப்பை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் எடுத்து விளக்கினார்கள். அந்த மாணவியும் நீங்க சொல்வது சரியானதுதான் நானும் ஓட்டு போட மாட்டேன் என்று கூறி சென்றார்.

பொதுவாகவே மக்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்முடைய வாழ்க்கை மாறபோவதில்லை என்பதையும், கடுமையாக உழைத்தால் கூட, சாராயத்தால் ஏற்படும் கொடுமைகள் மாற போவதில்லை என்பதையும் ஓட்டுகட்சிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஓட்டு போடுவதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றதையும், தமிழகத்தில் மோடி அலை வீசுவதாக கூறும் பத்திரிக்கை, ஊடகங்களில் வரும் செய்திகள் பொய் என்பதையும் உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை கிளை

3.  சென்னை மக்கள் கலை இலக்கியக் கழகம்

தெருமுனை பிரச்சாரம் – 20-4-14 சேத்துப்பட்டு

போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிக்கிறோம் சட்டப்படி 49-oல் உரிமையுள்ளது அனுமதி கொடுங்கள் என்ற மத்திய சென்னை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அனுமதி பெற்றோம். 20-ம் தேதி அன்று காலை சேத்பட் காவல்துறை (ஜி-7) ஆய்வாளர் போன் செய்து, “தம்பி நோட்டாவை சப்போர்ட் பண்ணித்தானே பேசப் போறீங்க” என்று கேட்டார். இதற்கு நாம், “இல்ல சார், 49-O சட்டப்படியான உரிமையில் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம், ஏன் புறக்கணிக்கிறோம் என்பதை விளக்கிக் கூறி மக்களையும் புறக்கணிக்க கூறவுள்ளோம் சார்” என்றோம்.

உடனே ஆய்வாளர் மாரியப்பன், “அய்யய்யே அப்படி இல்ல சார், தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என எங்களுக்கு இன்ஸ்ட்ரக்சன் வந்துள்ளது. நோட்டாவை பேஸ் பண்ணி பேசுங்க சார்” என்றார். இதற்கு நாம், “அப்படி ஏதும் தேர்தல் ஆணையும் கொடுத்த அனுமதியில் இல்லையே சார். அந்த இன்ஸ்ட்ரக்சன் ஒரு காப்பி எங்களுக்கு கொடுங்க சார், நாங்க தேர்தல் ஆணையம் கிட்ட பேசுறோம்” என்றோம்.

உடனை இடைமறித்த ஆய்வாளர், “ஹ ஹ இல்ல சார், எங்களுக்கு மேல இருந்து சொன்னாங்க அதான்” என்றார்.

இதற்கு நாம், “அப்படியா சார், நாங்க ஏற்கனவே சொன்ன மாதிரி பிரச்சாரம் செய்யுறோம் சார். நீங்க என்னன்னு முடிவு சொல்லுங்க” என்றோம்.

இதற்கு மேல் ஒன்றும் பேச முடியாத ஆய்வாளர், “சரி தம்பி சாயந்திரம் வரும்போது தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதம் எடுத்து வாங்க, அங்க பேசிக்கலாம்” என்றார்.

சாயந்திரம் அவர் வரவில்லை. சாதாரண பீட் போலீசுதான் வந்திருந்தனர்.

மற்ற ஓட்டுக் கட்சிகளின் ஆரவாரம் அரசின் ‘நேர்மை’க்கு எதிராக 15 பேர் வந்து ‘கத்துவதை’ அப்படியாவது மிரட்டி காரணங்களை சொல்லி தடுத்து விடலாம் அல்லது சாதாரணமாக பேச வைக்கலாம் இதன் மூலம் தெருமுனை பிரச்சாரத்தை ஒண்ணுமில்லாமல் செய்து விடலாம் என்று ஆய்வாளர் கடுமையாக முயன்றார். முடியவில்லை. பெண்கள், சிறுவர்கள், ஆண் தோழர்கள் இணைந்து சேத்பட்டில் 4 இடங்களில் முழக்கம், பாடல், பேச்சு என காவல்துறையின் நயவஞ்சகத்தை முறியடித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் வெற்றிகரமாக நடந்தது.

வீட்டுப் பிரச்சாரம்

தேனீக்கள் கூட்டாக சேர்த்து சேகரித்ததனால் இது கூட்டுத் தேன். இதில் இந்த சிறு தேனீ சேகரித்தது சில தேன்துளிகள். அவை இதோ..

ஒசான்குளம், சேத்துபட்டு, எழும்பூர் மாணவர் விடுதி என்று மொத்தம் ஏழு நாட்கள் தோழர்களுடன் பகுதிவாழ் மக்களையும், மாணவர்களையும் சந்தித்து தேர்தல் புறக்கணிப்பு பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். முதலில் பதற்றமாகவும், பின்னர் ஆர்வமாகவும் பின்பு கடமையாகவும் உணர்ந்து செயல்பட்டேன். முதல்நாள் ஆசான்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் மக்கள், “நீங்க தேர்தலில் நில்லுங்க, நாங்க ஓட்டுப் போடுறோம்” என்று கூறினர். அவர்களுக்கு மாற்று அரசியல் குறித்த புரிதல்களை தோழர்கள் எடுத்துரைத்தனர். இந்த ஜனநாயகத் தேர்தல் என்பது அராஜகத்தின் மூலமாகவும், பணத்தின் மூலமாகவும்தான் நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றது என்பதை சாதாரணமாக அமர்ந்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கியது மகிழ்ச்சியாக இருந்தது. பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாகவே தேர்தலை புறக்கணிப்பது என்கிற கருத்தில் இருந்தனர். முதல் தடவை ஓட்டுப் போடப் போகும் சிலரை சந்தித்து அவர்களின் இறுகிய திரையை கிழித்து பிரச்சாரம் செய்தோம். கல்விக் கட்டணம் குறித்து மாணவர் ஒருவரிடம் பேசிய போது, உண்மையை உணர்ந்து நான்என்னுடையை ஓட்டைப் பதிவு செய்ய மாட்டேன் என உறுதியாக கூறினார். இது போல் முதல்முறையாக ஓட்டுப் போடும் ஒரு பெண்ணிடம் பேசிய போது அவர் ஒன்றும் பேசவில்லை. இறுதியில் அவரது முகபாவம் மாறி, நான் ஓட்டுப் போட போக மாட்டேன். இனி என் ஓட்டு யாருக்கும் கிடையாது என்று உறுதியாக கூறினார்.

விடுதியில் மாணவர்களை சந்தித்து உரையாடிய போது, புரிந்து கொண்ட மாணவர்கள் நம்மோடு உறுதியாக நிற்பதாக தெரிவித்தனர். பெண்களை வீட்டிலுள்ள ஆண்கள் சுயமாக சிந்திக்க விடாமல் தாங்கள் விரும்பிய கட்சிக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்துகின்றனர் என்று கூறினர். தேர்தல் புறக்கணிப்பு குறித்து நாம் அவர்களிடம் கூறியபோது இப்படி ஒரு வழியுண்டா என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர், அவர்களது விழியில் நம்பிக்கை தெரிந்தது. அரசியல் புரிதலை ஏற்படுத்தி விட்டால் அவர்கள் தம்மை ஏமாற்றுபவர்களை உறுதியாக எதிர்த்து நிற்பார்கள் என்று தெரிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,

சென்னை.

4. ஒசூர்

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!

என்ற முழக்கத்தின் கீழ் கிருஷ்ணகிரி,தருமபுரி மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி-யின் சார்பாக தமிழ், தெழுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பிரசுரம் அச்சிட்டு குடியிருப்பு பிரச்சாரம், கிராம பிரச்சாரம், ஆலைவாயில் பிரச்சாரம் என விரிவாக பிரச்சாரம் செய்தனர்

குடியிருப்புப் பிரச்சாரம்:

ஓசூரில் தொழிற்பேட்டை பகுதியான எலசகிரி, பேடரப்பள்ளி, மூக்கண்டப்பள்ளி ஆகிய இடங்களில் காலையிலிருந்து மாலை வரை பிரச்சாரம் செய்து மாலையில் தெருமுனை கூட்டம் நடத்தினர். பிரச்சாரம் தொடங்கும் போது அ.தி.மு.க பிரமுகர்கள் தாளம், தப்பட்டை,வெடி என திருவிழா போல அமர்க்களத்துடன் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போதே வீடுகளை தட்டி அமைப்பை அறிமுகம் செய்து, “நாங்கள் யாருக்கும் ஓட்டுப் போடாதீங்க என்று சொல்கிறோம்” என்றதும் சிலர் ஏன் என்று கேள்வி கேட்டனர்.

சிலர் நாம் பேசுவதற்கு முன்பே,”நானும் அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன் நீங்கள் சொல்லுவது எங்களுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது” என்றார் ஒருவர். அவரிடம்,”நீங்க ஏன் ஓட்டு போட மாட்டேங்கிறீங்க” என்று விவாதம் தொடங்கும் போது, “யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் கொள்ளையடிக்க போறாங்க, மக்களுடைய பிரச்சனையை ஏதும் பேசறதுமில்லை, கேட்பதுமில்லை. வேற எதுக்கு ஓட்டு போடணும்” என்றார்.

பகல் நேரம் என்பதால் பெரும்பான்மையாக பெண்கள் இருந்தனர். இன்னொருவர், “டிவி செய்திகளை பார்த்தால் ஜெயலலிதா கருணாநிதியை பற்றி பேசுவது, கருணாநிதி டிவியில் ஜெயலலிதாவை பற்றி பேசுவது என மக்களை குழப்புகின்றனர். இருவரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை பற்றி பேசுவதில்லை. தொழிலாளர்கள் உரிமை பறிப்போவதை பற்றி பேசுவதில்லை. எல்லாருமே திருட்டு பேர்வழிங்கதான்” என்று கருத்து தெரிவித்து, “ஓட்டு யாருக்கும் கிடையாது, சிறப்பாக செய்யுங்க” என்று தோழர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசி தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

இன்னொருவரிடம் நாம் பேசிய பிறகு தோழர்கள் அந்த தெருவில் பிரச்சாரம் செய்யும் வரை நமக்கு ஆதரவாக,”ஓட்டு யாருக்கும் போடாதீங்க, எல்லாரும் திருட்டு பசங்கதான்” என்று முழக்கமிட்டு கொண்டே வந்தார். பலர்,”எங்க தெருவில் குடிநீர் கிடையாது, அதனால் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் வைக்க போகிறோம்” என்றனர்.

சில பெண்கள்,”நீங்க நல்ல விசயத்துக்காக போராடறீங்க. என்னிடம் நிதி இல்லையே” என்று அருகில் உள்ள வீடுகளில் நிதி வாங்கி கொடுத்தனர். படித்தவர்கள் நோட்டாவில் ஓட்டு போடுகிறோம் என்று தெரிவித்தனர். நோட்டா என்பதே ஆளும் வர்க்கம் தேர்தலின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த உருவாக்கியதுதான் என்பதை விரிவாக விளக்கியவுடன் பிரசுரத்தை வாங்கி படித்தனர்.

பொதுவாக எல்லாத் தரப்பு மக்களுக்கும் அரசின் மீது அவநம்பிக்கையும், மாற்று என்ன? என்று தெரியாமல் உள்ளனர். குறிப்பாக நாம் சென்றது போல ஓட்டு கட்சிகள் யாரும் மக்களிடம் செல்லாமல் தெருக்களிலே கத்திவிட்டு செல்லும் அளவுக்குத்தான் ஓட்டு கட்சிகளின் நிலைமை உள்ளது. மாற்றம் தேவை என்ற கருத்து மக்களுக்கு மேலோங்கியுள்ளது. இதற்கு மாற்று புதிய ஜனநாயகப் புரட்சிதான் என்று சொல்லும் போது ஏற்று கொள்கின்றனர்.

கிராமப் பிரச்சாரம்

ஒசூரில் சுற்று வட்டார கிராமங்களிலும், அஞ்செட்டி ஒன்றியம், தேன்கனிக்கோட்டை,பாகலூர் போன்ற அமைப்பு செயல்படும் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அஞ்செட்டி ஒன்றியத்தில் ஒரு கிராமத்திற்கு தோழர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஒரு பெண்மணி, “ஓட்டு கேட்டு யாராவது வீட்டு பக்கம் வந்தீங்கன்னா, இந்த துடப்பக்கட்டையிலேயே அடிப்பேன்” என்று பேசியுள்ளார்.

அவரிடம், “நாங்க யாருக்கும் ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்ல வந்திருக்கிறோம்” என்றதும் தோழர்களை வரவேற்று உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து பேச ஆரம்பித்தார். அப்போது, “எங்க ஊருக்கு குடித்தண்ணீர் பிரச்சனை உள்ளது. இது பற்றி தலைவருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் ஏதும் செய்யவில்லை. இப்பிரச்சனையை விளக்கும் வகையில் வெளிநாட்டு முதலாளிகளுக்கு தடையற்ற தண்ணீர், மின்சாரம் செய்கின்ற அரசு, நாடு முழுவதும் சாராயக் கடையை திறந்து மக்களை கொள்ளையிடும் அரசுக்கு சாதாரண தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியாதா?” என்று விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொண்டார்.

பெரும்பான்மை கிராமங்களில் தோழர்கள் பேசும்போது,”நல்ல விசயம் தான் நாங்க ஓட்டுப் போடுவதில்லை, ஓட்டுப் போடவில்லை என்றால் என்னசெய்வது” என்று கேட்டுள்ளனர். அதற்கு கிராம கமிட்டி அமைத்து அவர்கள் மூலம் அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசியுள்ளனர்.  சிலர் ஓட்டுக் கட்சிகளிடம் பணம் வாங்கியவர்கள் சரி சரி என பிரசுரத்தை வாங்கிப் படித்தனர்.பொதுவாக கிராமத்தில் அரசின் கட்டமைப்பால் ஏதும் செய்ய முடியாது என தெரிந்தும் தேர்தல் வந்ததும் சென்றுவிடுவது (சாங்கிய சடங்கில் பலன் இல்லை என்பது தெரிந்தாலும் முன்னோர்கள் செய்தார்கள் என்று மாற்றைப் பற்றி யோசிக்காமல் செய்வதுப் போல) ஓட்டுப் போடுகின்றனர்.

ஓசூரில் ஒரு கிராமத்தில் தோழர்கள் பிரச்சாரம் செய்யும் போது மக்கள் பிரசுரத்தை வாங்கி படித்து ஆதரித்தனர். ஓட்டுக்கு பல கட்சிகளிடமும் பணம் வாங்கிய அ.தி.மு.க காலிகளும், பி.ஜே.பி காலிகளும் தோழரிடம் வம்புக்கு இழுத்தனர். தோழரும், “நீங்க ஓட்டு போடுங்க என்று சொல்லுவதற்கு எந்தளவிற்கு உரிமை உள்ளதோ, அதே போல ஓட்டு போடாதே என்று சொல்லுவதற்கும் உரிமை உள்ளது” என்று பேசியுள்ளார். அதற்கு பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் கெட்ட வார்த்தைகளில் பேசிவிட்டு, சென்றுவிட்டனர். கருத்து ரீதியாக எதிர்கொள்ள அவர்களிடம் ஏதுமில்லாததாலும் பிரச்சனை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விடுவோமென்றும் அல்லக்கைகள் எல்லாம் கலைந்து சென்றனர்.

இங்கேயும் போலி ஜனநாயகம்தான் என்று விளக்கும் போது புரிந்து கொண்டாலும் மாற்று என்ன என்று தெரியாமல் உள்ளனர். புதிய ஜனநாயக அரசமைப்பு பற்றி பேசும் போது ஏற்று கொள்கின்றனர். இந்த இயக்கம் தேர்தலில் ஆட்களை மாற்றுவது தீர்வல்ல, புதிய ஜனநாயக புரட்சிகாக மாற்றி யோசிப்பதுதான் தீர்வு என்பதை உணர்த்துவதாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்கள்.
தொடர்புக்கு 9788011784, ஓசூர்.

5. தஞ்சாவூரில் அனுமதி மறுப்பு

தஞ்சாவூர் அனுமதி மறுப்பு

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்

  1. மூட நம்பிக்கையோடு நவ நாகரிகமான முறையிலே சேர்ந்துவிட்ட ஜனநாயக தேர்தல் என்ற மூடநம்பிக்கையும் ஒழிக்க பாடுபடவேண்டும்.

  2. டெல்டா மாவட்டகளில் மீதேன் வாயு எடுப்பதை வைத்து புரட்சிப் பசங்க வாய் கிழிய கத்தியது வேலை செய்யவில்லை… எல்லா இடங்களிலும் போன தேர்தலை விட வாக்காளர்கள் ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்… நக்கல்பாரி கூட்டத்தை ஆதரிக்கும் வினவு முகத்தில் கரி பூசப்பட்டது…. மிக்க சந்தோசம்…

    • ஓட்டு போட்டதால் நீங்கள் உங்கள் முகத்தில் கரி பூசி கொண்டீங்க இந்தியன். ஜனநாயகம் பூத்து குளுங்குது பறிக்க தான் ஆள் இல்லை.

  3. அது தெரியாதுப்பா…ஆனா ஒட்டு போட்டா சீன கைகள் கண்ணை குத்தும் என்று தெரியும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க