privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேர்தல் புறக்கணிப்பை முறியடிக்க துணை இராணுவம் !

தேர்தல் புறக்கணிப்பை முறியடிக்க துணை இராணுவம் !

-

வசரமாய் நடந்து முடிந்தது தேர்தல். ஆனால், அவசியமாய் பேசவேண்டியது எதுவும் பேசப்படவில்லை. ஆயினும், அதைப் பற்றிய அக்கறை எதுவுமின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெருக்கிப் பிடித்து அதைக் கட்டிக் காத்த பெருங்கடமையை முடித்து விட்டதாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் தேர்தல் துறை.

வீராம்பட்டினம்
தேர்தலை புறக்கணித்த வீராம்பட்டினம் மீனவர்கள்.

புதுச்சேரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துவிட வேண்டும் என்பதற்காக, எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்தும், அந்த அனுமதி மறுப்பை எழுத்துப் பூர்வமாக தர மறுத்தும் என்னென்ன வித்தைகளோ செய்து பார்த்தது. ஆனால், மக்களோ அவர்களது ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டனர்.

நாம் இந்த அனுமதிக்காக சென்றிருந்த போது, தேர்தல் துறையால் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டோவைப் பற்றி மக்களீடம் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு வந்த சில மனித உரிமை அமைப்பினர், அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்புகளிடம், ” நாங்க எதுக்கு இருக்கிறோம். நாங்களே தேவைப்படும் அளவுக்குப் பிரச்சாரம் செய்கிறோம். நீங்க என்ன புதுசா? அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீங்க எதாவது புதுசாப் பண்ணி குட்டையக் கொழப்பாதீங்க. உங்களுக்கு அனுமதி கிடையாது.” என்ற தேர்தல் அதிகாரியிடம், “என்ன சார், அரசாங்கம் அறிவித்ததைத் தானே பிரச்சாரம் செய்யப் போறோம்.” என்ற அந்த அமைப்பினர் பதில் கூறியவுடன், “எதுவா இருந்தாலும் நாங்க முடிவு பண்றது தான்.” என்று தாங்கள் சொல்லும் ஜனநாயகத்தைப் பட்டென்று போட்டுடைத்தார்.

ஏற்கனவே இந்த 100 சதவீத வாக்குப்பதிவிற்கு புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பகுதி மக்கள் ஆப்பு அறைந்து விட்டனர். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் இப்பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பெருவாரியான வீடுகள் சேதமடைந்தது. ஆனால், இன்று வரை அம்மக்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட வில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி பல முறை முறையிட்டபோதும் அரசோ, அரசியல் கட்சிகளோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த அம்மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்து அறிவித்திருந்தனர்.

இதனால் தங்களது 100 சதவீத வாக்குப் பதிவுக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் துணை ராணுவப் படைகளைக் குவித்திருந்தது தேர்தல் துறை. இது ஏதோ இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்பகுதி மக்கள், தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக நடத்தினர். இப்பகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,000-த்திற்கும் மேல் இருந்தாலும் 500-க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியது.

ஆனால், தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என மிரட்டும் விதமாகத் தான் இந்த துணை ராணுவப் படைக் குவிப்பு என்பதை நிரூபிக்க, தேர்தல் நாளன்று நடந்த கீழ்க்கண்ட சம்பவமே சாட்சி.

துப்பாக்கி முனையில் தேர்தல்
துப்பாக்கி முனையில் தேர்தல்

இதே, புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் பால் பேட் என்ற பகுதியில் ஏற்கனவே பல முறை பல்வேறு விசயங்களையொட்டி நாம் பிரச்சாரம் செய்துள்ளோம். அதனால், நமது அரசியலைப் புரிந்து கொண்டு கருத்துக்களை ஏற்று அப்பகுதி மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். அதனடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் பாதையை அம்பலப்படுத்தி தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தி பிரசுரங்களை விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது. நாம் சொல்கின்ற விசயங்களில் உள்ள உண்மைகளை அனுபவத்தில் உணர்ந்த அப்பகுதி மக்களில் பெரும்பாலோர் வாக்குச் சாவடி பக்கமே போகவில்லை என்பதை அங்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கையே நிரூபித்துவிட்டது. அந்தப் பகுதி வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மொத்தம் 1872. இதில் பதிவான மொத்த வாக்குகள் 170 மட்டுமே.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையில் இந்த 170 வாக்குகளும் பதிவாகி விட்டன. அதன் பின் அப்பகுதி மக்கள் யாருமே ஓட்டுப் போட போகவில்லை. இதைக் கவனித்த அப்பகுதி ஓட்டுக்கட்சிகள், அந்த மக்களிடம் கெஞ்ச ஆரம்பித்தனர். அங்குள்ள நமது ஆதரவாளர் ஒருவர் தான் மக்களை ஓட்டுப் போட தடுப்பதாக நினைத்து அவரிடம் சென்று, “நீங்க ஓட்டுப் போடச் சொல்லுங்க. நீங்க சொன்னாப் போடுவாங்க” என கெஞ்ச ஆரம்பித்தனர். உடனே அவர், “இது மக்களின் விருப்பம். இதில் நான் ஒன்றும் சொல்லக் கூடாது. மேலும், யாரையும் தூண்டவோ, நிர்ப்பந்திக்கவோ கூடாதுன்னு தேர்தல் துறையே சொல்லியிருக்கு. அதனால மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திப்பது தவறு.” என்று சொன்னவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் மக்களிடமே சென்று கெஞ்ச ஆரம்பித்தனர். மக்கள் வெயில் குறைந்தவுடன் வருவதாகவும், மதிய உணவை முடித்து வருவதாகவும் சொல்லி காலம் கடத்தினர்.

இப்படியெல்லாம் கெஞ்சினால் மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த தேர்தல் அதிகாரி, தனது தலைமை அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கவே சற்று நேரத்திற்கெல்லாம் சுமார் 50 துணை ராணுவப்படை வீரர்களை இறக்கியது தேர்தல் துறை. துப்பாக்கி முனையில் ஜனநாயகம் காக்கும் கேவலம் அரங்கேற ஆரம்பித்தது. இது வரை நாம் இந்த அரசியலமைப்பு, அதிகார அமைப்பு பற்றி மக்களிடம் சொன்ன விசயங்கள் தங்கள் கண் முன்னாலேயே நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தனர் மக்கள்.

இந்த அரசு மக்களுக்கு சேவை செய்வதற்கான கருவி அல்ல; அது மக்களை ஒடுக்கும் கருவி என்ற அரசியல் உண்மையை எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைத்ததற்கு ஒருவகையில் நாம் தேர்தல் துறைக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலளர் முன்னணி – புதுச்சேரி

  1. //இப்படியெல்லாம் கெஞ்சினால் மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த தேர்தல் அதிகாரி, தனது தலைமை அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கவே சற்று நேரத்திற்கெல்லாம் சுமார் 50 துணை ராணுவப்படை வீரர்களை இறக்கியது தேர்தல் துறை. துப்பாக்கி முனையில் ஜனநாயகம் காக்கும் கேவலம் அரங்கேற ஆரம்பித்தது. இது வரை நாம் இந்த அரசியலமைப்பு, அதிகார அமைப்பு பற்றி மக்களிடம் சொன்ன விசயங்கள் தங்கள் கண் முன்னாலேயே நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தனர் மக்கள்.//

    அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். துணை ராணுவப்படை மக்களை மிரட்டி ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றதா என்ன? இவ்வாறு அவர்கள் செய்தாலும் ஆச்சரியமில்லைதான். ஆளும் வர்க்கத்தின் கருவி அவ்வாறு செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

  2. இந்த போலி ஜனநாயகத்தின் மீது புதுசேரி மக்கள் காரி உமிழ்ந்துள்லார்கள் என்பது நன்றாக தெரிகின்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க