Thursday, August 6, 2020
முகப்பு உலகம் ஐரோப்பா லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

-

முதலாளித்துவத்தின் பிறப்பிடமான லண்டன் மாநகரில் தரையடி ரயில் தொழிலாளர்களின் 48 மணி நேர வேலை நிறுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. லண்டன் தரையடி ரயில் சேவையில் பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள் அனைத்தையும் மூடி விட்டு சுமார் 960 ஊழியர்களை வேலையை வீட்டு நீக்குவதாக முடிவு செய்த நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் நேரப்படி திங்கட்கிழமை (ஏப்ரல் 28, 2014) இரவு 9.00 மணிக்கு துவங்கிய இந்த வேலை நிறுத்தம் புதன்கிழமை (ஏப்ரல் 30, 2014) இரவு 8.59க்கு முடிவுக்கு வந்தது.

ரயில் நிலையங்களில் நெரிசல்

இதற்கு முன்னதாக,  டிக்கெட் கவுண்டர்களை மூடும் முடிவை எதிர்த்து ரயில், நீர்வழி மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தையும் (Rail, Maritime and Transport Union – ஆர்.எம்.டி) மற்றும் போக்குவரத்து மற்றும் பயண துறை தொழிற்சங்கங்களின் சார்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி வேலை நிறுத்தம்  நடைபெற்றது.

நிர்வாக தரப்புக்கும், தொழிற்சங்க தரப்புக்கும் இடையில் 40 முறை நடந்த பேச்சுவார்த்தையை ஆலோசனை, சமரசம் மற்றும் நடுவர் சேவை (ACAS) என்ற அரசு அமைப்பு ஒருங்கிணைத்தது. ‘தாங்கள் செய்வதுதான் சரி, தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் அதை புரிந்து கொள்ளாமல் பேச வருகிறார்கள்’ என்று திமிருடன் நடந்து கொண்ட நிர்வாகம் பேச்சு வார்த்தையை இடையில் முறித்துக்கொள்ளவே அடுத்த கட்ட வேலை நிறுத்தப் போராட்டம் இந்த வாரம் நடத்தப்பட்டது.

வழக்கம் போல, வேலை நிறுத்தம் மக்களுக்கு சிரமம் அளிப்பதாகவும், தொழிற்சங்கங்கள் தொழில்நுட்பத்தை எதிர்ப்பதாகவும் ஆளும் வர்க்கங்கள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டன. வேலை நிறுத்தத்துக்கான பொறுப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தும் ஆளும் வர்க்க நரித்தனத்துடன் இங்கிலாந்து பிரதமர் “லண்டன்வாசிகளை சிரமத்திற்குட்படுத்துவதால் இந்த போராட்டம் தவறு” என்று கூறியிருக்கிறார்.

லண்டன் தரையடி ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 11 பாதைகளில் (பீச் – தாம்பரம் ரயில் பாதையைப் போல 11 பாதைகள்) 270 நிலையங்களைக் கொண்ட லண்டன் தரையடி ரயில் சேவையை தினமும் சுமார் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். தானியங்கி பயணச்சீட்டு அட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதால், மனிதர்களால் இயக்கப்படும் பயணச் சீட்டு கவுண்டர்களே தேவையில்லை என்று லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்; ஊதிய செலவைக் குறைத்து லாபம் அதிகரிப்பதுதான் இதன் ஒரே நோக்கம்.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பல ரயில் நிலையங்கள் ஒற்றை ஊழியரால் நிர்வகிக்கப்படுவதாக மாற்றப்படும். இதனால் வயதானவர்கள், புதிய பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு தேவைப்படும் நேரத்தில் உதவுவதற்கு மனித இருப்பு இல்லாமல் பயணிகளின் உயிருக்கும் உடமைக்கும் கூட ஆபத்து ஏற்படலாம். இது நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மை.

தம்மில் ஒரு பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்து வர்க்க உணர்வுடனும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்ட சமூக அக்கறையுடனும் தொழிலாளர்கள் போராடுவதை, ‘தொழிற்சங்கங்கள் பொறுப்பற்று நடந்து கொள்வதாக’ லண்டன் மேயரும், கன்சர்வேடிவ் கட்சி பெருந்தலைகளில் ஒருவருமான போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

லண்டன் தரையடி ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

இவ்வளவு முக்கியமான பிரச்சனைக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதை கொச்சைப்படுத்தும் வகையில், “செல்சீ அணிக்கும் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கும் இடையேயான சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு செல்லும் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது” என்று முதலாளித்துவ பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகள் வெளியிட்டன. ஆனால், அதே பத்திரிகைகள் “வேலை நிறுத்தம் ரயில் சேவைகளை பாதிக்கவில்லை” என்றும் “பிப்ரவரி 6-ம் தேதி வேலை நிறுத்தத்தை விட அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தார்கள்” என்றும் தொழிற்சங்கத்தின் வலிமையையும் தொழிலாளர் இயக்கத்தின் ஒற்றுமையையும் குலைப்பதற்கு முயற்சிக்கின்றன.

வேலை நிறுத்தத்தின் போது 8 வழித்தடங்களில் சேவை எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம்  காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரைதான் ரயில் சேவை இருக்கும் என்று பயணிகளுக்கு முன்னறிவிப்புகளைச் செய்தது. சில வழித்தடங்களை இடை நிறுத்துவதாகவும் அறிவித்தது. வழக்கமாக வந்து போகும் பயணிகளை பேருந்துகளையும், படகுப் போக்குவரத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. கூடுதலாக 100 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன.

எனினும் வீட்டிலிருந்து புறப்படும் முன் பயண விபரத்தை இணையத்தில் சரிபார்த்துக் கொள்ளும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேலை நிறுத்தம் நடந்த இரு நாட்களிலும் ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். பேருந்துகளிலும், சாலை போக்குவரத்திலும் கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்தது.

லண்டன் தரையடி ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

RMT ஐ சேர்ந்த லண்டன் தொழிலாளிகள் மே தினத்தை போராட்ட தினமாக கடைப்பிடித்தனர்.  தொழிலாளிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக அடுத்த திங்கள் கிழமை (மே 6, 2014) முதல் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்துக்கு திட்டமிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் 1980-களில் மார்கரெட் தாட்சரின் ஆட்சியின் கீழ் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு, உற்பத்தித் துறையில் தொழிற்சங்கங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டு ஒழித்துக் கட்டப்பட்டன. அதன் விளைவாக உற்பத்தி துறையின் பெரும்பகுதியை தமது லாப அதிகரிப்புக்காக உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாக்கப்பட்ட எதிர்ப்பின்றி உலக மயமாக்கத்தை தீவிரப்படுத்த முதலாளிகளால் முடிந்தது.

லாப வெறியும், அதை நிறைவேற்றித் தரும் சந்தை போட்டியும்தான் வேத மந்திரங்கள் என்று உழைக்கும் மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பறித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் தாக்குதல்கள் மேலும் மேலும் மூர்க்கமாகி வருகின்றன. ஒப்பந்தத் தொழிலாளி வேலை நீக்கம் செய்யப்பட்டால், நிரந்தர தொழிலாளி கவலைப் படுவதில்லை; நோக்கியாவில் வேலை இழப்பு ஏற்பட்டால் ஹூண்டாய் தொழிலாளிகள் கண்டு கொள்வதில்லை; உற்பத்தித் துறை தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்கள் பொருட்படுத்துவதில்லை என்ற நிலை ஒழிந்து தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாக ஒருங்கிணைந்து முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்.

ஆனால், மேற்கத்திய நாடுகளின் தொழிற்சங்கங்கள், தத்தமது துறையில் தொழிலாளர்களுக்கு சலுகைகளையும், உரிமையையும் வென்றெடுத்து தருவதாகவே செயல்பட்டு வந்தன. அவர்களின் பிரதிநிதியாக கருதப்பட்ட தொழிலாளர் கட்சியும், நாடாளுமன்ற முறையில் பங்கேற்று ஆட்சி அதிகாரத்தை பிடித்து சில சீர்திருத்த நடவடிக்கைகள் நிறைவேற்றியது. ஆனால், முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் தவிர்க்க முடியாத தொடர்ந்த தாக்குதல்களால் தொழிற்சங்க உரிமைகளும், தொழிலாளர் நலனும் படிப்படியாக அரிக்கப்பட்டு விட்டன.

லண்டன் தரையடி ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

எனவே, தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தாண்டி, உலகெங்கிலும் 1% ஆக இருக்கும் நிதியாதிக்க பண மூட்டைகளுக்கு சேவை செய்யும் இந்த முதலாளித்துவ அமைப்பையே ஒட்டுமொத்தமாக தூக்கி எறிந்து 99% உழைக்கும் மக்களுக்கு சேவை செய்யும் படியான பொருளாதார, அரசியல் அமைப்பை கட்டி அமைக்க போராடுவதுதான் இன்றைய நெருக்கடிகளை தீர்ப்பதற்கான ஒரே  தீர்வு.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க