privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்

கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்

-

1. கோவையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • விசைத்தறி , கைத்தறி உட்பட சிறுதொழில், சிறு வணிகர்களை விழுங்கவரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடிப்போம்!

என்கிற அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் 2 மாதங்களுக்கு மேலாக கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.

விசைத்தறி உரிமையாளர்கள் 1993-லிருந்தே தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வந்தபிறகு விசைத்தறி பிரச்சனை தீவிரமடைந்து வந்திருக்கின்றது.

தற்சமயம் விசைத்தறி உரிமையாளர்களாக உள்ளவர்களெல்லாம் யார்? இவர்களெல்லாம் முன்னாள் விவசாயிகள். விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டமுடியாது என்ற காரணத்தினாலேயே தங்களிடமிருந்த விவசாய நிலங்களையும் நகைகளையும் விற்றும் மற்றும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுமே இந்த தறியை அமைத்தவர்கள். எப்படியாவது அரசு பார்த்து 5% , 10% கூலி உயர்வுக்கு வழிசெய்து கொடுத்து தங்களை கரையேற்றும் என நம்புகிறார்கள். ஆனால் இந்த அரசுதான் நம்மை அப்போது விவசாயத்திடமிருந்தும் தற்போது விசைத்தறியிடமிருந்தும் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

நமது நாட்டில் விளையும் தரமான பஞ்சை அடிமாட்டு விலைக்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பற்றாக்குறையை உருவாக்குகிறது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையை ஒன்றும் இல்லாததாக்கி விட்டது . கோவையில் இருக்கக்கூடிய 5 தேசிய பஞ்சாலைகளையும் சில வருடங்களுக்குள் மூடி விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டிருகிறது. இதற்காகவா நாம் இவர்களையெல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்?

பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்த போது கட்டியிருந்த கோவணம் பறிபோன கதையாக நாம் கூலி உயர்வு பற்றி பேசிகொண்டிருக்கும் போதே விசைத்தறி அழிக்கப்படும் அபாயம் நெருங்கி வருகிறது. அதிக வேகத்துடன் நெய்யக்ககூடிய பவர்லூம் , சுல்ஜர் தறி, ஜெட் தறி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முதலாளிகள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதே இதற்கு சான்று.

தற்சமயம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வந்த பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்ந்து வருகின்றது. 2014-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 110% மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்கின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியும் உயர்த்தி தராத பட்சத்தில் அரசாங்கத்தின் மின்கட்டண உயர்வு என்பது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது தானே?

கடந்த மார்ச் மாதத்தில் விசைத்தறி பிரச்சனை தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் 12 (3) ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சோமனூர் பகுதிகளுக்கு 30% கூலி உயர்வும், பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நெய்யப்படும் ரகங்களுக்கு 27% கூலிஉயர்வும் கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவை ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் அங்கீகரிக்கவில்லை. விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது சங்கங்களை கலைத்தனர். ஜவுளித்துறையினர் இந்த ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது என அடாவடித்தனம் செய்து வந்தனர். விளைவு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தறிகள் ஓடவில்லை. பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழவழியின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கஞ்சித் தொட்டி திறந்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு , மின்வெட்டு , மின்கட்டணம் உயர்வு , உதிரிபாகங்கள் விலையேற்றம், தங்களிடம் வேலைசெயும் தொழிலாளர்களுக்கு கூலிஉயர்த்தி கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாகவே விசைத்தறி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்களை சிறிதேனும் போக்க ஜவுளி உற்பதியாளர்களிடம் கூலிஉயர்வு கேட்டனர். கூலிஉயர்வில் உடன்பாடு ஏற்படாததின் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்சமயம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகள் ஓடவில்லை. பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ வழியில்லை. ஓட்டு பொறுக்கிகள் போட்ட தேர்தல் கூச்சலில் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் நம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தையே வில்லாக வளைப்போம்’ என சவடால் அடித்து தேர்தல் வாக்குறுதிகளையும் பணத்தையும் அள்ளி வீசிய எந்த கட்சியும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனையை கண்டு கொள்ளவே இல்லை தேர்தல் புறக்கணிப்பு, கஞ்சித்தொட்டி திறப்பு என பாதிக்கப்பட்டோர் எவ்வளவு தீவிரமான நிலை எடுத்த போதிலும் அரசும் மசிந்து கொடுக்கவில்லை . மாறாக தேர்தலில் ஓட்டு போடவில்லை என்றால் எந்த சலுகையும் கிடையாது என மிரட்டவே செய்தது.

“விரும்பிய கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது கண்டிப்பாக நல்லது நடக்கும்” என நீங்கள் நம்பிகொண்டிருக்கலாம் . ஆனால் மோடியோ-லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. தீவிரமடையத்தான் போகின்றன என்பதைதான் தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.

நம் கண் எதிரிலேயே விவசாயம் ,கைத்தறி , விசைத்தறி, சிறு குறு தொழில்கள், மீனவர்கள் மற்றும் சிறுவணிகர்களின் வாழ்வாதார உடமைகள் பறிக்கப்படுகின்றன. உழைப்பாளர்களிடமிருந்து உற்பத்தி கருவிகளை பிடுங்கிக் கொண்டு அவர்களை உடைமை ஏதுமற்றவர்களாக , வாழவழியற்றவர்களாக நகரங்களில் விசிறியடித்து வருகிறது முதலாளித்துவம். அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.

பெருநகரங்களில் உழைக்கும் மக்கள் குவிவது அதிகமாகி வருகிறது. நகரங்களில் கூலி வேலை செய்பவரை விசாரித்து பாருங்கள். அவர் முன்னாள் விவசாயியாக , ஒரு சிறு தொழில் முனைவராக இருப்பார்கள், இப்படி நமது தொழில்களை அழித்த இந்த முதலாளிக்குதான் அரசு வரிச்சலுகைகள், மானியங்கள், வட்டியிலா கடன்கள், இலவச மின்சாரம் குறைந்த விலையில் நிலம், தண்ணீர் போன்ற பொருளாதார உதவிகளோடு அடியாளாக போலீசையும் அனுப்பி வைக்கிறது. நாம் நமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடினால் தடியடி, சிறை, சித்ரவதை, கொட்டடி கொலை என வெறியாட்டம் போடுகிறது.

ஆகவே ஆட்சியாளர்களை நம்பி பயனில்லை, அரசை நம்பி பயனில்லை. ஏனெனில், இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. விசைத்தறி உள்ளிட்ட சிறு தொழில்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டது இந்த அரசு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவையே , அதாவது சிறு தொழில்களை அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளை அமைப்பதையே நடைமுறைப்படுத்துவார்கள்.

இந்த புரிதலுடன் விசைத்தறி உரிமையாளர்கள் புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்துபோரட முன்வர வேண்டும். இல்லையெனில் நாம் பெறுவது எல்லாம் தற்காலிக வெற்றிதான். அடுத்து வரும் மாதங்களில் இந்த வெற்றியெல்லாம் தட்டிப் பறிக்கப்படும். எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி அழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடது. கிராமந்தோறும் ஊர் கமிட்டிகளை அமைத்து கோரிக்கைகள் நிறைவேறும்வரை உறுதியாக விடப்பிடியாகப் போராட முன்வரவேண்டும்.

சாதி , மத பேதங்களை கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்று சேரவேண்டும் என இந்த மே நாளில் உறுதி எடுத்துகொள்ளவேண்டும்.

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் விடுதலைக்காக நக்சல்பாரி அமைப்பு களத்தில் நிற்கிறது . உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை வென்றெடுக்க மே நாள் பேரணியில் திரளாக கலந்து கொண்டு வர்க்க உணர்வுபெற, உரிமைகளை வென்றெடுக்க உங்களை அறைகூவி அழைக்கின்றோம்.

தமிழக அரசே!

  • கூலிக்கு நெசவு செயும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று!
  • விசைத்தறிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கு !
  • விசைத்தறி உள்ளிட்ட சிறு தொழில்களை அழித்து வரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அனுமதிக்காதே!

என்கிற முழக்கங்களோடு பல்லடம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மே தினத்தில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று ம.க.இ.க – பு.மா.இ.மு-பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் கோவை-திருப்பூர்-ஈரோடு- கரூர்-நாமக்கல் மாவட்டங்களுடன் இணைந்து திட்டமிட்டன.

மே தினத்துக்கு முன்னால் 5 நாட்களாக பல்லடம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சரம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த காவல்துறை, “நக்சல் பரி அமைப்புகள் விசைத்தறி பிரச்சனை கையில் எடுத்துவிட்டார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்” என்று பதறியது.

“தேர்தல் முடிவு வெளியாகும்  மே 16-ம் தேதிக்கு மேல் கூலி உயர்வு குறித்து பேசலாம்” என்றும் சொல்லியிருந்தனர் திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள். ஆனால்,  மே -1 தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் 28.04.2014 தேதியன்று இருதரப்பினரையும் அழைத்து பேசி சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 27% கூலி உயர்வு பேசி முடித்து உள்ளார்கள்.

பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் கூறி விட்டது. “தடையை மீறி செய்வோம்” என்று கூறிய பிறகு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

பல்லடம் , கோவை , ஈரோடு , காங்கயம் , கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் வீச்சான பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்கள் பெருத்த ஆதரவும் , நிதியுதவும் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற காவல் நிலையத்தில் கேட்டகப்பட்டது. நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு பேரணி கூடாது, ஒலிப்பெருக்கி கூடாது, புண்படுத்தக் கூடாது. இப்படி பல கூடாதுக்கு பிறகு பல்லடம் காவல் துறை அனுமதி வழங்கியது. இதை மீறி ஒலிபெருக்கி வைத்து கைதாவது என முடிவு செய்து ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது.

தோழர் புஸ்பராஜ் சிவகிரி

ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தேர்தலின் போது அனல் பறக்கும் பிரச்சாரம் என்று வாய்ச்சவடால் அடித்தனர். இன்று தேர்தல் முடிந்த பின்பு அம்மா கொடநாட்டிலும் , விஜயகாந்த் டாஸ்மாக்கிலும் என ஆளுக்கொரு மூலை பறந்து விட்டனர் . மக்கள் அனாதையாய் விடப்பட்டனர் என ஓட்டு கட்சிகளை அம்பலப்படுத்தினார். மேலும் ஈரோடு பகுதிகளில் நாலணா கூலிக்காக எத்தனை போராட்டம் நடத்த வேண்டி இருந்தது என்பதை சுட்டி காட்டினார்.

விளவை ராமசாமி

புரட்சிகர அமைப்புகள் பல்லடத்தில் கால் வைத்து விடுவோம் என்று போலீசுக்கும் , முதலாளிகளுக்கும் பெரும் அச்சம் எனவே காவல் துறையினர் அனுமதி தருவதற்கு இழுத்தடித்தனர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் முடிவுக்கு பிறகுதான்  நடத்துவதாக இழுத்தடித்து வந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தையை புரட்சிகர அமைப்புகள் களமிறங்கியதும் அவசர அவரசமாக விசைத்தறியாளர்களையும், ஜவுளி உற்பத்தியாளர்களையும் ஆட்சியர் அலுவலகத்தில் அழைத்து, “இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே இதை சமரசமாக முடித்துக் கொள்ளுங்கள்” என அவசரகதியில் கூலி கொடுக்கப்பட்டதை விளக்கி பேசினார்.

இந்த கூலி உயர்வு தற்காலிகமானது என்பதையும் , விசைத்தறி முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்க காத்திருப்பதையும் அம்பலப்படுத்தி பேசினார். அனைத்து தேசிய தொழில்களையும் இயற்கை வளங்களையும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்திலிருந்து இந்த மனிதகுலம் முழுவதையும் காக்கும் பொறுப்பு கம்யுனிஸ்டுகளின் தோள் மீது விழுந்திருக்கிறது என்பதை விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
கோவை பகுதி பு.ஜ.தொ.மு.

2. தருமபுரி பென்னாகரம்

ருமபுரி, பென்னாகரம் வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மேதின பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மே-தின பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது காவல்துறை. பலமுறை முயற்சித்தும் பேரணிக்கு தடை விதித்தது.

இதனை பொருட்படுத்தாமல் மக்களை திரட்டும் வேலையில் பரவலாக ஈடுபட்டு பென்னாகரம் பி.டி.ஓ அலுவலகம் அருகில் 500-க்கும் மேற்பட்ட மக்கள், தோழர்கள் திரளாக கூடினார்கள். உடனே தடையை மீறி அமைதி பேரணியாக மாலை 4.30 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கியது. மக்கள் கூட்டத்தை சற்றும் எதிர்பார்க்காத போலீசு செய்வதறியாமல் திகைத்து நின்றது. காவல்துறை கேமிராவை கொண்டு வந்து படம் பிடித்தது.

மே தினத்தை விழாவாக அனைத்து கட்சிகளும் கடைப் பிடிக்கும் பொழுது நாம் போராட்டமாக செய்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த 4-5 பேர் கடமைக்காக கொடியேற்றியிருந்தனர். நமது கூட்டத்தை பார்த்து முகத்தில் களை இழந்து கூட்டத்தை கவனித்தனர்.

  • உண்மையான ஜனநாயகத்தின் மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவோம்,
  • விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்

என்ற கோரிக்கைகளை விளக்கி பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பு.மா.இ.முவைச் சேர்ந்த தோழர் அன்பு உரையாற்றினார். தோழர் கோபிநாத், வட்டார செயலாளர் தோழர் முத்துகுமார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரை ஆற்றினர், தோழர் குபேந்திரன் நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க