Friday, August 12, 2022
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு ராம்கோவை முறியடித்த ராஜபாளையம் மே நாள் மற்றும் சென்னை ஆர்ப்பாட்டம்

ராம்கோவை முறியடித்த ராஜபாளையம் மே நாள் மற்றும் சென்னை ஆர்ப்பாட்டம்

-

1. சென்னை

மே நாள்… உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வுக்கு உரமூட்டும் நாள்.

128-வது மே நாளில், இந்தப் போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக, 01.05.2014- வியாழக்கிழமையன்று, சென்னைக்கு அருகே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளில் அதிகளவில் பணிபுரியும் தொழிலாளர்கள் வசிக்கின்ற நகரமான பூவிருந்தவல்லியில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில்

  • பன்னாட்டுக்கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!

என்ற தலைப்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமார் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய தோழமை அமைப்புகளின் தோழர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்ட இந்தப் பேரணியை பு.ஜ.தொ.மு.-வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா தொடங்கி வைத்தார்.

பூவிருந்தவல்லி கல்லறைத்தோட்டம் அருகிலிருந்து தொடங்கி தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வசிக்கின்ற தெருக்களின் வழியாகச் சென்ற இப்பேரணியில், “தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி, உதிரம் குடித்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, கொழுத்துத் திரிவதுடன், நம் நாட்டின் இயற்கை வளங்களையும், நமது வாழ்வாதாரத்தையும் சூறையாடிவரும் பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டைவிட்டே துரத்தியடிக்கவேண்டும்; நடந்து முடிந்துள்ள போலி ஜனநாயகத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவது எந்தக் கட்சியாக இருந்தாலும் நமது பிரச்சினைகள் தீரப்போவதில்லை; ஏனென்றால் லேடி, மோடி, டாடி என எல்லோருமே பன்னாட்டுக் கம்பெனிகளின் கூஜாக்களே… எனவே, இந்த தரகு, அதிகாரவர்க்க முதலாளிகளின் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!” என்பனவற்றை உள்ளடக்கி தோழர்கள் எழுப்பிய முழக்கங்களை பகுதிவாழ் மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.

பேரணியின் முடிவில் பூவிருந்தவல்லி பேருந்துநிலையத்தின் அருகிலுள்ள அம்பேத்கர் சிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமையுரையாற்றிய தோழர் சிவா, “8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர பொழுதுபோக்கு ஆகிய கோரிக்கைகளுக்காகப் போராடிய நமது முன்னோடிகள், தமது இன்னுயிர் ஈந்து அந்த உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். ஆனால் இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் இந்த உரிமைகளனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் கழிப்பறைக் காகிதங்களாகி விட்டன. தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய மாருதி கார் தொழிற்சாலையின் தொழிலாளர்களைக் கைது செய்த, முதலாளிகளின் ஏவல்நாயான இந்திய அரசு அவர்களுக்குப் பிணை வழங்கக்கூட மறுத்து சிறையிலடைத்து வதைக்கிறது. திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டுச் சுரண்டப்படுகின்றனர். இக்கொடுமைகளை ஒழித்துக்கட்டி, நமது உரிமைகளை மீட்டெடுக்க தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு புரட்சிகரத் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் இணைந்து போராட முன்வரவேண்டும்” எனத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், உலக இயக்கத்தின் அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டி, இதற்குக் காரணமாகவுள்ள தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற இந்த மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். “இன்றைய சூழலில், உயிர் வாழ்வதற்காக ஏதாவதொரு வேலையில் சேர்ந்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள் தமது உரிமைகள், தொழிற்சங்க சட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வற்று உள்ளனர். அத்தகைய புரிதல் ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ஆபாசச் சீரழிவுகள், மது, போதைப்பழக்கம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நச்சுக் கலாச்சாரத்தைத் திட்டமிட்டே திணிக்கிறது ஆளும் வர்க்கம். இதனுடைய உச்சக்கட்டமாக தொழிலாளர்களின் போராட்ட தினமான மேதினத்தில் தொழிலாளர்களுக்குக் கட்டாய மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர் சில நயவஞ்சக முதலாளிகள். உரிமை, போராட்டம் எனும் உணர்வு சிறிதளவுகூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். ஆகவே, தொழிலாளி வர்க்கம் முன்னெப்போதையும்விட கூடுதலான விழிப்புணர்வுடன் தமது போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தொழிலாளர்கள் தமது வரலாற்றுக்கடமையை உணர்ந்து, சரியான அரசியல் புரிதலுடன் வர்க்கமாக அணிதிரண்டு, புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட போராட்டங்களின் வாயிலாகத்தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள GSH எனும் ஆலையின் முதலாளி, தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி, மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பாடு செய்திருந்த கட்டாய மதுவிருந்தை பு.ஜ.தொ.மு. தோழர்கள் தடுத்து முறியடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள CRP ஆலையில் மே நாளில் பு.ஜ.தொ.மு.-வின் செங்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து ஆளுங்கட்சியின் ஆசிபெற்ற பிழைப்புவாதத் தொழிற்சங்கம் ரவுடிகளை ஏவிவிட்டு மிரட்டிய காலித்தனத்தை முறியடித்து பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஆதரவோடு கொடியேற்றியுள்ளனர் பு.ஜ.தொ.மு. தோழர்கள்.

இப்படிப்பட்ட வர்க்க உணர்வுடன் கூடிய போராட்டங்களே இன்றைய அவசர, அவசியத் தேவைகளாகவுள்ளன. போராடாமல் வாழ்க்கையில்லை. எனவே, தொழிலாளிவர்க்கம் இழந்துவிட்ட தனது உரிமைகளை மீட்டெடுக்க, வாழ்க்கையின் அவலத்தைப் போக்க, புதியதொரு சமுதாயத்தைப் படைத்திட முன்வரவேண்டும். நிலவுகின்ற இந்தப் போலி ஜனநாயகத் (முதலாளித்துவ சர்வாதிகாரத்)தைத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைக்க வேண்டும். இந்த மேநாளில் அதற்கான உறுதிமொழியை நாமனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகரத் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் இணைந்து போராட முன்வரவேண்டும்” என்று மே தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உரையாற்றினார்.

தமது இன்னுயிர் ஈந்து மே தினம் உருவாகக் காரணமாகவிருந்த தொழிலாளத் தோழர்களுக்கும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தியதுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை.

2. ராஜபாளையம்

“பன்னாட்டுக்கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!” எனும் மே நாள் சூளுரை முழக்கத்தின் கீழ் தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிகளில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே நாளன்று இராஜபாளையத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என முடிவு செய்து அதற்கான துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகளில் ஒட்டி பிரச்சாரம் செய்து வந்தன.

ஏற்கனவே அப்பகுதியில் தொழிலாளர் வர்க்கத்தை நசுக்கிப் பிழிந்து, தொழிலாளர் நலச் சட்டங்களை மயிரளவிற்கும் மதிக்காமல், ஆண்டாண்டு காலமாக தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ராம்கோ குரூப்பின் அக்கிரமங்களை எதிர்த்து அப்பகுதி வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரத்தால் பீதியடைந்து போயிருந்த ராம்கோ கும்பல் மேநாள் பேரணியினை நடத்த விடாமல் தடுக்க தனது வளர்ப்புப் பிராணிகளான போலீசை ஏவிவிட்டது. போலீசும் திங்கிற சோத்துக்கு விசுவாசத்தோடு வாலை ஆட்டியது. என்றைக்கோ பிறந்த ராம்கோ குரூப்பின் முதலாளி ராமசாமி ராஜாவின் பிறந்த நாளை மே 1-ம் தேதி கொண்டாடப் போவதாக அறிவித்து அன்று பார்ப்பன அரை லூசான எஸ்.வி. சேகரின் அல்வா நாடகம் நடத்தப்போவதாக நகரமெங்கும் விளம்பரம் செய்திருந்தது.

இராசபாளையம் நகரில் மே நாள் அன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட உடன், ஏப்ரல் 24 அன்றே போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

முதலில் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிகழ்ச்சி இருப்பதால் அனுமதி கிடையாது என்று மறுத்தது போலீசு. இந்த பதிலைக் கூறவே போலீசுக்கு இரண்டு நாள் ஆனது.  பின் வேறு பாதையில் அனுமதி கேட்டோம். அதற்கு பதிலளிக்காமல், அனுமதி கேட்கச் சென்ற தோழர்களை கூட்டம் நடத்த மாட்டோம் என எழுதித் தரவேண்டும் என்றும் அப்போதுதான் ஸ்டேசனில் இருந்து வெளியில் விடுவோம் என்றும் கூறியது. இது சட்டவிரோதமானது என போராடிய தோ0ழரை ஒரு போலீசு அடித்துள்ளான்.

இது பற்றி தகவல் அறிந்தவுடன் , போலீசின் இந்த சட்ட விரோத நடவடிக்கை பற்றி மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர். வாஞ்சிநாதன் எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோருக்கு புகார் செய்த பிறகு தோழர்களையும் விடுவித்தது.

பின்னரும், ஆளே இல்லாத  சாலையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்றது போலீசு.

இதை ஏற்க முடியாது, என்று “ஓரளவாவது மக்கள் கூட்ட இடத்தில் கூடும் , ஆர்ப்பாட்டம் மட்டுக்குமாவது அனுமதி பெறுவதற்கு தோழர்களும் ம.உ.பா.மை. தோழர் நடராசனும் போராடினார்கள்.

இறுதி வரை போலீசு அனுமதி வழங்கவில்லை.காரணம்,  ராம்கோ முதலாளியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மே நாள் அன்று நடை பெற இருப்பதால் புரட்சிகர அமைப்புகள் மே நாளை கடைபிடிக்க கூடாது என்பது தான்.  இதை வெளிப்படையாகவே போலீசு கூறியது. மேலும், மே நாளை தவிர வேறு நாளில் நாம் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும், அல்லது சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் அனுமதி தருவதாகவும் கூறியது போலீசு .

அப்பட்டமாக தான் ராம்கோ முதலாளியின் கைக்கூலி என தன்னை காட்டிக் கொண்டது போலீசு. டவுன் ஸ்டேசன், டி.எஸ்.பி, எஸ்.பி இன்ஸ்பெக்டர், எஸ்.பி, என தோழர்களை அலைக்கழித்தது போலீசு. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் இந்தியாவிலுள்ள சட்டங்களும் மனித உரிமைகளும் ராம்கோ வீட்டுக் கக்கூசிற்குள் கிடப்பதை விட உயர்வானதல்ல என எண்ணுகிற ராஜபாளையம் போலீசு இறுதியில் அனுமதியினை மறுத்தது.

ஆனால், அனுமதி கொடுத்து நிகழ்ச்சியினை நடத்தியிருப்பதைக் காட்டிலும் கூடுதலான போராட்ட உணர்வினைத் தோழர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கேயுரிய போர்க்குணமிக்க ஒரு போரட்டத்தினைக் காணுகிற வாய்ப்பினை ராஜபாளையம் மக்களுக்கும் 2014 மேநாள் வழங்கியது.

பரபரப்பும் நெருக்கடியுமான நான்கு சாலைகள் கூடும் காந்திசிலை சிக்னலின் அருகே சரியாக காலை 10 மணிக்கு நான்கு சாலைகளின் வழியாக செஞ்சட்டையும் கொடியும் ஏந்திய தோழர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு ஒன்று சேர்ந்தனர். மே நாள் மைய முழக்கங்களோடு ராம்கோ குரூப்பையும் அதன் ஏவல் நாய்களாக விளங்கும் போலீசையும் கண்டித்து முழக்கங்கள் விண்ணதிரும் வகையில் எழுப்பப்பட்டன. ஏற்கனவே அப்பகுதியில் பாதுகாப்பு எனும் பெயரில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில போலீசார்கள் நின்ற இடத்திலேயே பதட்டமடைந்ததோடு மேல்போலீசுக்குத் தகவல் அனுப்பினர்.

ரொட்டித் துண்டைக் கவ்வத் தாவுவதைப் போலவே பாய்ந்து வந்த போலீசு முதலில் சட்டம் பேசிப் பார்த்தது. பின்னர் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களோடு வாக்குவாதம் செய்து பார்த்தது. எதுவும் தோழர்களின் முழக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே பேசாமல் நின்றுகொண்டு, மேநாள் மைய முழக்கங்கள், ஆசான்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், மாமேதை லெனின், பாட்டாளி வர்க்கத் தளபதி ஸ்டாலின், சிவப்புச் சூரியன் மாசேதுங், புரட்சியாளன் பகத்சிங் ஆகியாரின் பிரம்மாண்டமான உருவப்பட பேனர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அதன்பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமை உரையாற்றினார். மேநாள் ஒரு போராட்ட நாள் என்பதை விளக்கிய அவர் ராம்கோ குரூப்பின் சட்டவிரோதமான செயல்களையும் அதற்கு வாலாட்டும் போலீசுத்துறையையும் கண்டித்துப் பேசியதும் ஆர்ப்பாட்ட்த்தை முடித்துக்கொள்ளக் கோரிய போலீசு அனைவரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் இறக்கியது.

மண்டபத்திலும் கூட்டம் தொடர்ந்தது, தலைமையேற்றுப் பேசிய தோழர் மருது, நடந்த நிகழ்ச்சிகளையும் அதற்கான காரணங்களையும் விளக்கினார். அதன்பிறகு மீண்டும் தோழர் நாகராசன், தொழிலாளி வர்க்கம் இன்று எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை விரிவாகப்பேசினார். அதன்பின்னர், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் மேநாள் எவ்வாறு தொழிலாளர் தினமாக உருவெடுத்தது என்பதையும், பாட்டாளி வர்க்கத் தலைவர்களாகிய லெனின், ஸ்டாலின் , மாவோ ஆகியோர் மேநாளுக்குக் கொடுத்துவந்த முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

அதன்பிறகு மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளருமான தோழர் வாஞ்சிநாதன், அனுமதி பெறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவற்றைப் போலீசு அனுமதி மறுத்ததையும் விளைக்கியதோடு, மேநாளை இப்படி ஒரு போராட்ட நாளாக நடத்த புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே முடியும் என்பதை விளக்கி பகுதியின் தோழர் அய்யனார் துணிச்செயலான செயல்பாடுகளுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு தோழர்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இறுதியாக நன்றி தெரிவித்துப் பேசிய தோழர் அய்யனார், ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை ராஜபாளையத்தில் நடத்த வேண்டும் எனும் தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஓட்டுக்கட்சிகளும் போலிக்கம்யூனிஸ்டுகளும் மேநாளை ஒரு கேலிக்கூத்தான நாளாக ஆக்கிவைத்திருக்கும் சூழ்நிலையில் புரட்சிகர அமைப்புகள் மேநாளை ஒரு போராட்ட நாளாக மாற்றியதால் ஏற்படும் வர்க்க உணர்வோடு தோழர்கள் விடைபெற்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ராஜபாளையம்

  1. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ராம்கோ குழுவினரின் ராஜாங்கத்திற்கு சாட்டையடி புரட்சிகர அமைப்பிடமிருந்து தான் கிடைக்கும்.

  2. ராஜபாளையம் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

    மே நாள் நிகழ்ச்சி ராம்கோ நிறுவத்தின் கொடுரத்திற்க்கு எதிரான போராட்டமாக மாறியது வரலாற்று நிகழ்ச்சி….

    இரணியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க