முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !

கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !

-

திகாலையில் பரபரப்பாக இயங்கும் தமிழகத்தின் பேருந்து, ரயில் நிலையங்களில் சரிவரத் தூங்காத சிவந்த கண்களோடு அவசரஅவசரமாகத் தாங்கள் வேலை செயுமிடத்திற்குப் பயணிக்கும் அவர்களின் முகங்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமானவைதான். கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய, சிறிய நகரங்களில் சாலைகள், பாதாளச் சாக்கடைகள், வானுயர் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், பிரம்மாண்ட மெட்ரோ ரயில், விமான நிலையம் போன்ற கட்டுமானப் பணிகளில் அற்பக்கூலிக்குப் பணியாற்றி வருவதும், இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் எந்தவிதமான தொழிற்சங்க உரிமையும் இன்றி மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டு வருவதும் பார்த்துபார்த்துப் பழகிப் போவிட்ட விசயமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் புலம்பெயர்ந்த ஆண் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், பெண்கள் அதையும் தாண்டி விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமையும் நடந்திருப்பது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெம்ஸ் அக்ரோ கொத்தடிமைகள்
நாமக்கல் – மணிக்கட்டுப்புதூரிலுள்ள ஜெம்ஸ் அக்ரோ நிறுவனத்தில் கொத்தடிமைகளாக தள்ளப்பட்டு, பின் மீட்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சத்தீஸ்கரைச் சேர்ந்த இடைத்தரகன் டிஜுராம் கொர்ரம், அம்மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு பழங்குடிப் பெண்களை ரயில் மூலம் திருப்பதிக்குச் செல்லலாம் என ஆசை காட்டி நாமக்கல்லிற்குக் கடத்தி வந்து, மணிக்கட்டிப்புதூரிலுள்ள ஜெம்ஸ் அக்ரோ என்கிற காய்கறிகளைப் பதனிட்டு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமையாக விற்றுச் சென்றுவிட்டான்.

ராஜேஸ்வரி சலம்
ஜெம்ஸ் அக்ரோ ஆலையில் கொத்தடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த பழங்குடியினப் பெண்களை சத்தீஸ்கர் மாநில அரசு உதவியோடு மீட்ட ராஜேஸ்வரி சலம்.

இவர்களைப் போன்றே பல சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் அந்நிறுவனத்தில் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர். இப்பெண்கள் காய்கறிகளைப் பதனிட அசிடிக் அமிலம் அடங்கிய வினிகரில் கைகளை நனைத்தபடி ஒருநாளுக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரிப்பு, ஒவ்வாமை போன்ற கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சோறு, தேங்காய் எண்ணெய், குளியல் சோப்பு மற்றும் மாதச்சம்பளமாக 100 ரூபாய் கொடுத்து, இப்பழங்குடியினப் பெண்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டியிருக்கிறது, ஜெம்ஸ் அக்ரோ. அவர்கள் பல நாட்களில் நள்ளிரவில் எழுப்பப்பட்டு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து நின்றால் தனியறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, முதலாளிகளாலும் அவர்களின் கங்காணிகளாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாய் வதைக்கப்படுவதை உணர்ந்தாலும், வெளியே தப்பிக்க முடியாதபடி, ஒற்றைக் கழிப்பறை கொண்ட அறைகளில் அவர்களனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறார் அந்த பன்னிரெண்டு பெண்களில் ஒருவரான ராஜேஷ்வரி சலம். அக்கொத்தடிமைத் தொழிற்சாலையில் இருந்து தப்பி தன் சொந்த மாநிலமான சத்தீஸ்கரை அடைந்த சலம், அம்மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து, தன்னுடன் வேலை செய்த 60 பழங்குடிப் பெண்களையும் அக்கொத்தடிமை முகாமிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில் இச்சம்பவம் வெளியே வந்த சமயத்தில், ஈரோட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த 24 சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், கடந்த பிப்ரவரியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 117 பழங்குடியினர் ஜம்முவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 48 குழந்தைகள் உட்பட 23 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடத்தல்காரர்களால், பனிரெண்டு லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளனர். குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு இவர்கள் ஜம்முவிலுள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர். காலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 3000-க்கும் அதிகமான செங்கற்களை அறுக்கும் இவர்களுக்கு, வாரச்சம்பளமாக குடும்பத்திற்கு 500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இயற்கை உபாதைக்குச் செல்லும்பொழுது கூட அங்குள்ளவர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுற்ற குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குக்கூட இவர்களை அனுமதிக்காமல், சிறைக் கைதிகளைவிடக் கேவலமாக நடத்தியிருக்கின்றனர் செங்கல் சூளை முதலாளிகள். கடைசியில் அவர்களுடன் இருந்த 31 வயது மதிக்கத்தக்க ஓம் பிரகாஷ், அங்கிருந்து தப்பித்து தன்னார்வ நிறுவனங்களுக்குத் தகவல் தந்த பிறகே அம்மக்கள் மீட்கப்பட்டனர்.

11-c-1

கொத்தடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், போலீசு கண்காணிப்பாளர், வட்டாட்சியர், தொழிலாளர் நல ஆணையர் – என ஒரு பெரும் அதிகார வர்க்கமே இருந்தபோதும், அவர்களின் கண்களுக்குக் கீழ்தான் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது. இக்கும்பல் தங்களின் அதிகாரத்தை முதலாளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்குவதற்குப் பயன்படுத்துகிறதேயொழிய, கொத்தடிமைகளாகச் சுரண்டப்படும் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு ஒருக்காலும் பயன்படுத்துவதில்லை என்பதை இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வெளியே தெரிந்த செய்திகளுக்கு அப்பால், சத்தீஸ்கரின் பழங்குடியினப் பெண்கள் மும்பை, டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் தென்பகுதிகளில் உள்ள பெருநகரங்களுக்குக் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவதும் நடந்து வருகிறது. திரையில் தொடர்ச்சியாக மாறிக் கொண்டேயிருக்கும் பிம்பங்கள் போல, இம்மக்களது வேலை மற்றும் வாழ்நிலையில் வலுக்கட்டாயமாக பல மாற்றங்கள் அடுத்தடுத்து திணிக்கப்பட்டதுதான் அவர்களின் அவல நிலை அனைத்திற்கும் காரணமாகும். கார்ப்பரேட் பகற்கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் தலைவிரித்தாடும் சத்தீஸ்கரில், ‘நாட்டின் வளர்ச்சி’ என்கிற பெயரில் பல கொடூரங்கள் இம்மக்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. இவர்களின் பூர்வீக வாழ்விடமான மலைகளில் உள்ள அரிய கனிம வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, இம்மக்கள் வலுக்கட்டாயமாகத் தமது சொந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இந்த கார்ப்பரேட் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது ‘மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் மீது “காட்டுவேட்டை” என்ற பெயரில் அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, வாழ்வாதாரங்களை இழந்து அகதி நிலைக்குத் தள்ளப்படும் பழங்குடியின மக்களை ஆசை காட்டிக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக விற்பது ஒரு தொழிலாகவே அம்மாநிலத்தில் நடந்து வருகிறது.

11-c-2

சத்தீஸ்கரில் மட்டும் இதுவரை 9,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 90,000- யும் தாண்டும் என அங்குள்ள சமூகநல அமைப்புகள் கூறுகின்றன. குறிப்பாக பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர், ராய்காட், பலாவ்டா பஜார், ஜன்ஞ்கீர் சம்பா, ஜக்தல்பூர் போன்ற இடங்களில் ஆள்கடத்தல் கோலோச்சுவதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. கடந்த நான்காண்டுகளில் நாராயண்பூர் மற்றும் கன்கெர் மாவட்டங்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். ரூபாய் 5,000-லிருந்து 50,000 வரை விற்கப்படும் இப்பெண்கள் பெருநகரங்களில் உள்ள புதுப் பணக்காரர்களின் வீடுகளில் வேலையாட்களாகவும், தொழிற்சாலைகளில் குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாகவும், பல சமயங்களில் விபச்சாரத்திலும் பலவந்தமாகத் தள்ளப்படுகிறார்கள்.

தமிழகம் உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் வேலை தேடி புலம் பெயரும் இத்தொழிலாளர்கள் இத்தகயை கொடிய அவலநிலையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுது, அத்தகைய அவல நிலையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, தமிழர்களின் தாயகமாக தமிழ்நாடு நீடிக்க அதிக எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கக் கூடாது என்றும் இனவெறியைத் தூண்டிவிடும் போராட்டங்களை நடத்துகின்றன, த.தே.பொ.க., நாம் தமிழர் போன்ற தமிழினவாத அமைப்புகள். மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா குண்டர்கள் மராட்டியம் மராட்டியர்களுக்கே சொந்தம் எனக்கூறி, இம்மக்களை விரட்டக் கோருகின்றனர். தங்கள் வாழ்விடங்களிலிருந்து கடத்தப்பட்டு, கொத்தடிமைகளாக விற்கப்பட்டு அவல வாழ்வில் வதைபடும் இம்மக்களை எதிரிகளாகச் சித்தரிப்பது வக்கிரத்தின் உச்சமாகும்.

11-c-3

அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க கருப்பின மக்கள் நவீன அமெரிக்காவை உருவாக்கியதைப் போல, இன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்குபவர்கள் ஒரிசா, பீகார், சத்தீஸ்கர் போன்ற ‘வளர்ச்சி’யற்ற மாநிலங்களிலிருந்து வெளியேறிவரும் தொழிலாளர்கள்தான். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயம் – தாராளமயம் நாடெங்கும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைத்தான் உருவாக்கியிருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான் தொழிலாளர்களை அகதிகளாகச் சிதறடிக்கிறது. முதலாளித்துவத்தின் கொடிய சுரண்டலுக்கு இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி அவசியமான ஒன்றாகும். எனவே, சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினர் கொத்தடிமைகளாக விற்கப்படுவதையும், விபச்சாரத்தில் தள்ளப்படுவதையும் கிரிமினல் ஆள்கடத்தல் கும்பலின் நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வளர்ச்சி – என ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் வாப்பந்தல் போடுகிறார்களே, அந்த மோசடியின் விளைவுகள்தான் இவை.

– அன்பு
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

  1. இத்துணை பேர் காப்பற்ற பட்டார்கள் என்று செய்தி வருகிறது ஆனால் தண்டிக்கபட்டர்கள் என்று வருவதில்லை . யாரும் தண்டிக்கபடுகிரார்களா என்று தெரியவில்லை

    • முதலாளிகளுக்கு ஜிங்-சாங்-ஜால்ரா போடும் இராமன் அவர்களை முதலில் என்ன செய்யலாம் ?

      //கடந்த ஆண்டு நவம்பரில் இச்சம்பவம் வெளியே வந்த சமயத்தில், ஈரோட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த 24 சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், கடந்த பிப்ரவரியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 117 பழங்குடியினர் ஜம்முவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 48 குழந்தைகள் உட்பட 23 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடத்தல்காரர்களால், பனிரெண்டு லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளனர். குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு இவர்கள் ஜம்முவிலுள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர்.//

  2. When migration takes place for seeking employment, young ones particularly male population move first. When social order is disturbed by the predominance of migrant male labour, law and order issues arise. Malaysia restricted male workers from china and India at one stage and preferred women when due to famine many migrated to malaysia to work in rubber plantations. Similarly in Jamaica and US male workers were restricted to create a balance and women immigrants were welcome. Similarly if men and women come with a balance, there are lesser chances of crime and torture of women workers also may disappear

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க