Thursday, May 8, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !

கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !

-

கும்ஹோ இந்தியா (GUMHO – INDIA) நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை ! முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மேலும் ஒரு ரத்தசாட்சியம்!

த்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை கிராமத்தில். ஹூண்டாய் வாகன நிறுவனத்துக்கு கார்ப்பெட் (வாகன மிதியடி) தயாரித்து அனுப்பும் நிறுவனமான கும்ஹோ-இந்தியா (GUMHO-INDIA) இயங்கி வருகிறது. தென் கொரியா முதலாளிகளால் நடத்தப்படும் இந்நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு பயிற்சியாளராக வேலை செய்து வரும் இதே ஊரைச் சேர்ந்த 25 வயதான லோகநாதன் என்ற தொழிலாளி 09-05-2014 அன்று ‘B’ ஷிப்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ராட்சத உருளையில் சிக்கி (Roller) கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்தவுடன் மேற்பார்வையாளர் அங்கிருந்து ஓடி விட்டார். உடன் பணியாற்றிய தொழிலாளிகள் 7 பேர் ஊர் மக்களுக்கு தகவல் சொல்லி அவர்களின் உதவியுடன் இயந்திரத்தை உடைத்து தொழிலாளி லோகநாதனின் உயிரற்ற உடலை மீட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான போலீசார் ஆலையின் முன் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • எவ்வளவு செலவானாலும் பிரச்சனையை மூடி முடித்துவிட முயல்கிறது நிர்வாகம்
  • வழக்கமான பாணியில் பஞ்சாயத்து பேசி, “சட்டம் ஒழுங்கை காப்பாற்ற” துடிக்கிறது போலீசு.
  • லோகநாதனின் உயிரற்ற உடலுடன் நியாயம் கிடைக்கும் வரை போராடுவது என்று ஊர்மக்கள் ஊர் மக்கள் உறுதியாக உள்ளனர்.

அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.

தொழிலாளர் நலச்சட்டங்களை மயிரளவும் மதிக்காமல் பாதுகாப்பு வசதிகள் அற்ற தனது துணை நிறுவனத்தில், பயிற்சியாளர்கள் என்ற பெயரில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வந்திருக்கிறது பன்னாட்டு பகாசுர நிறுவனம் ஹூண்டாய். தொழிலாளர் துறையும், சட்டங்களும் இதைத் தொடர்ந்து அனுமதித்து வந்திருக்கின்றன.

போரூருக்கு அருகில் மதனந்தபுரத்தில் வசிக்கும் தொங் ஜ்யுன் வான் என்பவரை நிர்வாக இயக்குனராகவும், அடையாரில் வசிக்கும் அசோக் குமார் அஞ்சாலியா என்பவரை இயக்குனராகவும் கொண்ட கும்ஹோ இந்தியா நிறுவனம் ரூ 8.5 கோடி மூலதனத்துடன் தனியார் பங்கு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் இந்தக் கொலைக்கு முழு பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும்; பயிற்சித் தொழிலாளரை உற்பத்தியில் ஈடுபடுத்தியதற்கு தண்டிக்க வேண்டும்.

ஆனால், இந்த அரசு அமைப்பே ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்காக கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. லோகநாதனின் மரணத்துக்கு – தொழிலாளர்களை நிரந்தரமாக வேலையில் அமர்த்தாமல் ஒப்பந்த/பயிற்சி தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி நடத்துவது, தொழிலாளர் நலச் சட்டங்களை மேலும் மேலும் ஒழித்துக் கட்டி வருவது, தொழிற்சங்க உரிமையை மறுப்பது ஆகிய அரச/முதலாளித்துவ பயங்கரவாத நடவடிக்கைகள்தான் காரணம். அந்த பயங்கரவாதத்துக்கு உறுதுணையாக நிற்கும் அரசு, அதை எதிர்த்து தொழிலாளர்களும், மக்களும் போராடுவதை தடுக்க போலீசை குவித்து, சட்டங்களைக் காட்டி மிரட்டுகிறது.

ஹூண்டாய் மற்றும் அதனைச் சார்ந்த இத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தொழிலாளர் சட்டங்களை முழுமையாக கடைப்பிடிக்க உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க புரட்சிகர தொழிற்சங்கம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய உழைக்கும் மக்களை கொடூரமாக கொன்று குவித்துக் கொண்டிருக்கும் தனியார் மய, தாராள மய, உலகமய முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிக்காமல் தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் வாழவே முடியாது என்பதற்கு லோகநாதனின் கொலை இன்னுமொரு சான்று.

[எச்சரிக்கை : படங்கள் மனதை பாதிக்கக் கூடியவையாக உள்ளன]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம் – 9444213318