privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேர்தல் முடிவின் பொருள் என்ன ?

தேர்தல் முடிவின் பொருள் என்ன ?

-

ஜெயாங்குற லேடி, நரவேட்டை மோடி இருவருமே பாசிச கேடிதேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அளவில் மோடியின் வெற்றியையும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியையும் உறுதி செய்கின்றன. இந்த முடிவே முற்றிலும் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. இந்த முடிவின் வீச்சென்னவோ அவர்களே எதிர்பாராததுதான்.

பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்த பின், அந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி அறுவடை செய்து கொள்வதொன்றும் இந்தியாவின் தேர்தல் அரசியலில் புதிய விடயமல்ல. அந்த வகையில் இந்த வெற்றி என்பது மன்மோகன் அரசு மோடிக்கு போட்ட பிச்சை. எனவே, பாரதிய ஜனதா தனது வெற்றி குறித்து மிகைபடப் பீற்றிக் கொள்வதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

நமது கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விசயங்கள் வேறு.

1

ன்மோகன் சிங் அமல்படுத்திய மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, எந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடம் இந்திய மக்கள் தமது வாழ்க்கையையும் உரிமையையும் பறிகொடுத்தார்களோ, அதே முதலாளி வர்க்கம், இந்த தேர்தல் மூலம் மக்களின் எதிர்ப்புணர்ச்சியையும் அறுவடை செய்து கொண்டு விட்டது.

மக்களின் எதிர்ப்புணர்ச்சியை முன்னறிந்து, அதனை தான் விரும்பிய திசையில் திருப்பி, வடிவமைத்து, பிறகு தனது கைப்பிள்ளையையே தங்களுடைய தலைவனாக ஏற்கும்படி மக்களை நம்ப வைப்பதிலும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசு அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற 2009-ம் ஆண்டிலிருந்தே, “எதிர்காலப் பிரதமர் மோடி” என்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தொடங்கி விட்டதையும், “ஒளிரும் குஜராத்” என்ற புனைகதையை பரப்பியதையும்  மே – 2014 இதழ் புதிய ஜனநாயகம் கட்டுரை விளக்கமாக கூறுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மன்மோகன் சிங் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், மக்களுடைய அதிருப்தியின் வழியாக தனது அதிருப்திக்கு விடை கண்டுவிட்டது; மோடிக்கு முடி சூட்டுவதென்ற தனது கருத்தை இந்திய மக்களின் பொதுக்கருத்தாக மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறது என்பதுதான் இந்த தேர்தல் வெற்றியின் உண்மையான பொருள். இந்த தேர்தல் முடிவு, அம்பானி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை பிரதமர் நாற்காலியில் நேரடியாகவே அமர வைத்திருக்கிறது என்று கூறலாம். தொண்டைமானுக்குப் பதிலாக எட்டப்பன் அரியணை ஏறியிருப்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.

2

“இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை பிரச்சினைகள்” என்று சிலவற்றை மூடிஸ் என்ற ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்போதே அறிவித்து விட்டது. கனிம வளக்கொள்ளைக்கு காடு, மலைகளைத் திறந்து விடுவது முதல் தொழிலாளர் உரிமைச் சட்டங்களை ரத்து செய்வது, காப்பீட்டுத் துறை தனியார்மயம் வரையிலானவை அந்த அடிப்படை பிரச்சினைகளில் அடக்கம்.

இது ஒரு புறமிருக்க, “ராமர் கோயில், காஷ்மீர் விவகாரம், பொது சிவில் சட்டம் போன்ற அடிப்படை பிரச்சினைகளை” மோடி கவனிக்க வேண்டுமென்று நேற்று ஆர்.எஸ்.எஸ் கூறியிருக்கிறது. “மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் நிர்ப்பந்தத்துக்கு பணியக்கூடாது” என்றும், “வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கார்ப்பரேட் எச்சில் பொறுக்கி ஊடகவியலாளர்கள், மோடிக்கு “அறிவுரை” கூறத்தொடங்கி விட்டனர். இனி ஊடகங்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் இதனைச் சுற்றி விவாதங்களையும் பொதுக்கருத்தையும் கொண்டு செல்வார்கள்.

ஆர்.எஸ்.எஸ், தான் எழுப்பும் அடிப்படைப் பிரச்சினைகளின் மீது மக்களின் கவனத்தை இழுக்கும். மூடிஸ் எழுப்பிய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நாட்டை அறுத்து எடைபோடுவார் மோடி. தென்னிந்திய முஜாகிதீன், தென் மாவட்ட முஜாகிதீன், சைக்கிள் குண்டு, டிபன் பாக்ஸ் குண்டு ஆகியவை தினத்தந்தி, தினமலரின் தலைப்புச் செய்திகளாக பரபரக்க, காடுகளும் மலைகளும் ஓசைப்படாமல் கைமாறும். காட் ஒப்பந்தத்துக்கும் பாபர் மசூதி பிரச்சினைக்கும் இடையிலான உறவை அன்று இந்தியா புரிந்து கொள்ளவில்லை. இன்று “வளர்ச்சி”க்கும் இந்துத்துவத்துக்கும் இடையிலான உறவை மோடி இந்தியாவுக்குப் புரிய வைப்பார்.

3

ந்த தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றியும் நமது கவனத்துக்குரியது. இந்த வெற்றிக்குக் காரணம், மக்களின் அறியாமை என்று சொல்வதை விட, “அறிவு” என்று சொல்வதே பொருத்தமானதாக தெரிகிறது. வாக்குகளை விலைக்கு விற்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பது போலத் தெரிகிறது. மக்களின் பேரம் பேசும் ஆற்றல், தேர்தலுக்கு தேர்தல் கூடி வருகிறது.

“நாயே சும்மாவாடா ஓட்டு போட்டே, காசு வாங்கல? ஐயா போன வாட்டி நூறு ரூபா கொடுத்தீங்க கட்டுப்படியாகல, இந்த வாட்டி நூத்தம்பது கொடுங்கன்னு கேளு, அது ஜனநாயகம்; அத வுட்டுட்டு உரிமை அது இதுன்னு பேசுற?” என்று இயக்குநர் வி.சேகர் திரைப்படமொன்றில் கவுண்டமணி மக்களைப் பார்த்து பேசும் வசனம் வரும்.

இதனை நகைச்சுவைக் காட்சி என்று கருதி தமிழர்கள் இனி சிரிக்க முடியாது. தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய தினம் போடப்பட்ட 144 தடை உத்தரவு, நம்பகமான அதிகார வர்க்கத்தின் பொறுப்பில், போலீசு வேன் மூலம் அதிமுக நடத்திய பண விநியோகம் போன்றவையெல்லாம் ஊர் சிரித்துப் போன உண்மைகள்.

ஓட்டுப் பொறுக்கிகளின் ஒழுக்கக்கேடு, பிழைப்புவாதம் ஆகியவை குறித்து நாம் பேசுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. அவையெல்லாம் மெல்ல மெல்ல மக்களின் பண்பாடுகளாக மாறி வருகின்றன என்பதுதான் இப்போது நம் கவலைக்குரிய விடயமாகியிருக்கிறது. அதிமுக வுக்கு பதிலாக திமுக வுக்குப் போட்டிருந்தால் அதன் காரணமாக ஒரு வெங்காயமும் மாறிவிடப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்ல விலை கிடைத்தால் தங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடைய பிழைப்புவாத மனோபாவம்தான், நம்மை அச்சுறுத்துகிறது.

இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய சவால் இது.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நேரடிக் கொடுங்கோன்மை, அதனை அமலாக்கும் எடுபிடிகளாக இந்து மதவெறிக் காலாட்படை, அதன் தலைவனாக ஒரு தொழில்முறைக் கொலையாளி, இவர்களுடன் கூச்சமே இல்லாமல் கூட்டு சேரத் தயாராக இருக்கும் பல வகைப் பிழைப்புவாதக் கட்சிகள், பார்ப்பனப் பாசிசக் கும்பலின் சேவகனாகவே வேலை செய்யத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கம், அரசியல் மடமையும் பிழைப்புவாதமும் இணைந்த கலவையாக மக்கள்!

– இந்தச் சேர்க்கைதான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வெற்றி என்று வெட்கமின்றி சித்தரிக்கப்படுகிறது.

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

தண்டனையிலிருந்து மக்களை விடுவிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வோம்.