privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்

-

 

தொழிலாளர் கமிட்டி

அன்பார்ந்த தொழிலாளர்களே!

தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனசு, பி.எப்., ஈ.எஸ்.ஐ. உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளைக் கூட எந்த ஆலை முதலாளிகளும் மதிப்பதில்லை. ஒசூர் தொழிற்சாலைகளில் நடக்கும் அடக்குமுறைகளை காணும்போது இது ஒரு உச்சநிலையை அடைந்திருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, எல்லா ஆலை முதலாளிகளும் அங்கீகரிக்கப்பட்ட, சட்டபூர்வமான, பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதில்லை. சங்க நிர்வாகிகளை இடைநீக்கம், இடமாற்றம், பணிநீக்கம் செய்து சங்கத்தின் செயல்பாடுகளை முடக்குகின்றன. மேலும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆண்டுக் கணக்கில் நிறைவேற்றாதது மட்டுமல்ல, அவ்வாறு நிறைவேற்றுவதாக இருந்தால், ஆலை நிர்வாகம் விரும்புகின்ற சட்டவிரோத, கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தத்தை (தொழிற்தகராறு சட்டம், பிரிவு18 உட்பிரிவு 1 அடிப்படையில்) மட்டும் தான் போடுகின்றனர்.

கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சங்க நிர்வாகி உட்பட 3 பேர் பணிநீக்கம், ஒருவர் இடைநீக்கம், 7 பேர் கட்டாய பணி இடமாற்றம் என சங்கத்திற்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவிட்டு கடந்த 7 மாதங்களாக, தனிநபருடன் ஹோட்டலில்தான் ஒப்பந்தம் பேசமுடியும் என கட்டப்பஞ்சாயத்து செய்கிறது ஆலை நிர்வாகம்.

முருகப்பா குழும நிறுவனமான கார்போரண் டம் ஆலையில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கான பேச்சுவார்த்தையை பெரும்பான்மை சங்கத்துடன் நடத்தினாலும் அதனை சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தமாக போட மறுக்கிறது. ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து (18/1) ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கும் பெரும்பான்மை சங்க நிர்வாகிகள் 3 பேர் பணிநீக்கம், 3 பேர் இடைநீக்கம் மற்றும் ஒருவர் இடமாற்றம் என்று ஒட்டுமொத்த சங்க நிர்வாகிகளையே ஆலையைவிட்டு வெளியேற்றியுள்ளது. இதனை சாதகமாகக் கொண்டு ஆலையில் பெரும்பான்மை சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது செல்போனில் படம் பிடிப்பது, கேமாரா முன்னால் நின்று டீ குடிக்க வேண்டும் என்பது, தொழிலாளர்களின் ஜட்டியில் கையை விட்டு சோதனை செய்வது, அவமானப்படுத்துவது போன்ற பல அடக்குமுறைகளை செலுத்தி, தொழிலாளர்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு சங்கத்தை உடைப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது.

வெக் இந்தியா ஆலையில் பெரும்பான்மை சங்க நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல அடக்குமுறைகளை இவ்வாலை நிர்வாகம் செலுத்தி வருகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை பெரும்பான்மை சங்கத்துடன் பேச மறுப்பது மட்டுமன்றி விரல்விட்டு எண்ணத்தக்க சிலரை வைத்துக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சட்டவிரோதமான (18/1) ஒப்பந்தம் போட இருப்பதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தொழிலாளர்களை ஆண்டுக்கணக்கில் ஏமாற்றி வருகிறது.

டி.வி.எஸ். குழும நிறுவனமான ஹரிதா ரப்பர் ஆலை 12 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணிமூப்பை ரத்து செய்துள்ளது. இங்கு சங்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டு தொழிலாளர்கள் மீது டி.வி.எஸ். நிர்வாகம் செலுத்தும் அடக்குமுறைகள், பண்ணையடிமைத்தனத்தைவிட கேடானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.சி. ஆலையில் 36 மாதங்கள் ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுத்தடித்து, இறுதியில் 8 சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த பிறகுதான் கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது இவ்வாலை நிர்வாகம். ஜி.எம்.டி. ஆலையில் ஊதியஉயர்வு வழங்கால் 60 நாட்களாக தொழிலாளர்களைப் பட்டினி போட்டு பணிய வைப்பதற்கான அடக்குமுறையை அவ்வாலை நிர்வாகம் செலுத்தி வருகிறது.

எக்ஸைடு, குளோபல் ஃபார்மாடெக், அசோக் லேலாண்டு, பாராகோட் போன்ற பல ஆலைகளில் பெரும்பான்மை சங்கத்தை வைத்தே கட்டப் பஞ்சாயத்து (18/1) ஒப்பந்தங்களை திணித்துள்ளன அவ்வாலை நிர்வாகங்கள். பல ஆலைகள் சங்கமே வைக்க விடாமல் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துகின்றன.

லேலாண்டு, டி.வி.எஸ்., டைடான், வெண்ட் இன்டியா, கேட்டர்பில்லர், ஆவ்டெக், லுக்இன்டியா உள்ளிட்ட பல ஆலைகளில் உற்பத்தியின் பெரும் பகுதி அவுட்சோர்ஸ், ஒப்பந்த – தற்காலிக தொழிலாளர்கள், டீம் லீடர், ஸ்டாப் ஒர்க்கர் போன்ற முறைகளைக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. பணி நிரந்தரம், 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு, போனசு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

மொத்தத்தில், தொழிற்சாலைகளில் சட்டத்தைப் பற்றி பேசமுடியாது என்ற நிலையை முதலாளிகள் உருவாக்கிவிட்டனர். தொழிற்சங்க சட்டங்கள் நடைமுறையில் செல்லா காசாகி விட்டன. அறிவிக்கப்படாத பாசிச காட்டாட்சியை ஆலைக்குள் முதலாளிகள் செலுத்துகின்றனர்.

முதலாளிகளின் இந்த காட்டாட்சிக்கு அரசு எந்த அளவிற்கு துணை போகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை உங்கள் முன் வைக்கிறோம். சென்ற 2012ம் ஆண்டு கமாஸ் வெக்ட்ரா ஆலையில் நடத்தப்பட்ட 105 நாள் உள்ளிருப்புப் போராட்டத்தின் இறுதியாக போலீசு, ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் உதவி ஆணையர் போன்ற அரசின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகம் தூக்கியெறிந்து விட்டது. ஒப்பந்த மீறல் – கிரிமினல் குற்றவாளிகளான இந்த ஆலை அதிகாரிகள் உள்ளே தள்ளப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பொதுவானது என்ற கூற்று நடைமுறையில் பொய் என்பது மட்டுமல்ல, முதலாளிகள் எவ்வளவு கொடிய குற்றங்கள் இழைத்தாலும் அவர்களை இந்த அரசு ஆதரிக்கும் என்பதையும் மேற்கண்ட இந்த சம்பவம் காட்டுகிறது.

மற்றொருபுறம், தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பது எந்தவித அடிப்படை சுகாதாரமும் அற்ற அடிப்படை வசதிகளற்ற நவீன சேரிகளாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, பேடர்பள்ளி பகுதி முழுவதும் கழிப்பிடம், குடிநீர், சுகாதாரம் போன்ற எந்த வசதிகளும் இல்லை. பெண்கள் துணி துவைப்பதற்கு அருகில் ஆண்கள் கழிப்பிடம் இருக்கும் அவலம் இங்கே நிலவுகிறது. குளிப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் குளிக்க வேண்டிய அவலமும் இங்கே நிலவுகிறது. மூக்கண்டப்பள்ளி, பேடர்பள்ளி, சின்ன எலசகிரி போன்ற பல பகுதிகளில் குடிநீர் மிகவும் உப்புத்தன்மையும், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் இலாயக்கற்ற நீராகத்தான் உள்ளது. சாலை வசதி, போக்குவரத்து வசதி எதுவும் திட்டமிட்ட வகையில் இல்லை. கொத்தகொண்டப்பள்ளி, மோரனப்பள்ளி தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகூட இன்றுவரை போதுமான அளவு இல்லை. தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சிறு பட்டறைகள் கூட எந்த அடிப்படை வசதிகளுமின்றி உழல்கின்றன. மொத்தத்தில், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க இந்த அரசு தயாராக இல்லை.

***

லைக்குள் தொழிலாளர் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆலைக்கு வெளியே தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்குகூட இந்த அரசு தயாராக இல்லை. முதலாளிகளுடன் சேர்ந்து நம்மை ஒடுக்குவதை மட்டும் செய்கிறது. இனி நாம் என்ன செய்வது என்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். இந்த இழி நிலைமையை தீர்க்கக்கோரி யாரிடம் சென்று கேட்பது? கலெக்டரிடமா, போலீசிடமா, தொழிலாளர்துறை அதிகாரிகளிடமா, நீதிமன்றத்திடமா… இவர்கள் தான் முதலாளிகளின் ஏவாலாட்கள், கையாட்கள் தொழிலாளர்களின் எதிரிகள். பன்னாட்டுக் கம்பெனிகள், டாடா, லேலாண்டு, டிவிஎஸ், முருகப்பா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். அதனால், இவர்களிடம் போய் மண்டியிடுவதும் மனு கொடுப்பதும் நமது உரிமைகளை நாம் காவு கொடுத்து விட்டதாக ஒப்புக்கொள்வதற்கு சமமானது.

இதற்கு மாறாக, தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகள் மூலம் ஆலையில் சட்டபூர்வ உரிமைகள் அமுல்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும். சட்டத்தை மீறி செயல்படும் ஆலை முதலாளிகள், அதிகாரிகளை இந்தக் கமிட்டிகளே தண்டிக்கவேண்டும். தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகள் தொழிலாளர் குடியிருப்பைப் பராமரிப்பது, சாலைகளை சீரமைப்பது, நமது அடிப்படைத் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது, தொழிலாளர்களின் சுகாதாரத்திற்கு கேடான முதலாளிகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட எல்லா தேவைகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளுக்கே இருக்க வேண்டும்.

இந்த நிலைமையை நாம் எட்டமுடியுமா? நிச்சயம் முடியும். இதற்கு முதல் தேவை, ஒசூர் தொழிலாளர்களிடையே ஓர் ஒற்றுமை. இதனைக் கட்டியமைக்க வேண்டும். அண்மையில் திருப்பூர், ஈரோடில் உள்ள லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறித் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து போராடி ஊதிய உயர்வைப் பெற்றனர். அதுபோல, ஒசூர் தொழிலாளர்களும் ஓரணியாக சேர்ந்து முதலாளிகளுக்கு எதிரான நமது உரிமைகளை போராடி வென்றெடுக்க வேண்டும். ஒரு ஆலையில் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் ஒசூரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களும் திரண்டு வருவார்கள் என்ற அச்சம் முதலாளிகளுக்கு ஏற்பட வேண்டும். இந்த நிலைமை மட்டும் தான் சங்கம் வைக்கும் உரிமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் சட்டத்தில் கொண்டுவரப்படாத பிற உரிமைகளையும் வென்றெடுக்கவும் நிலைநாட்டுவதை நோக்கி முன்னேறவும் உதவும். அப்படி ஒரு தொழிலாளர் வர்க்க எழுச்சியை ஒசூரில் கட்டியமைக்க ஓரணியில் திரள்வோம்!

_______________________________________

கருத்தரங்கம்

நிகழ்ச்சி நிரல்

நேரம்  : 25–05–2014, மாலை 4.30 மணி

இடம் : செங்குந்தர் கல்யாண மண்டபம்
சீனிவாசா தியேட்டர் எதிரில், ஒசூர்.

தலைமை :
தோழர் பரசுராமன்
,
மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு.,

சிறப்புரை :
தோழர் பா. விஜயகுமார்,
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு.

தோழர் சங்கர்,
மாவட்ட செயலாளர்.

தோழர் வேல்முருகன்,
மாவட்ட செயற்குழு.

மற்றும்

உரிமைக்காகப் போராடும் ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்களின் அனுபவங்கள்

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்க்கும் காட்சிப்படங்கள், விடியோ காட்சிகள், காட்சி விளக்கங்கள்

நன்றியுரை:
தோழர் சாந்தக்குமார்,
மாவட்டப் பொருளாளர்.

கம்யூனிசமே வெல்லும்! முதலாளித்துவம் கொல்லும்!
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

பணிநிரந்தரம், 8 மணிநேரவேலை,
ஊதிய உயர்வு, சங்கமாக சேருதல் உள்ளிட்ட
உரிமைகளுக்காகப் போராடுவோம்!

குடிநீர், பேருந்து, கழிப்பிட வசதி உள்ளிட்ட
உழைக்கும் மக்களின் அடிப்படை
வசதிகளுக்காகப் போராடுவோம்!

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று
அதிகார அமைப்புகளைக்
கட்டியெழுப்புவோம்!

[நோட்டிஸ், போஸ்டரை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கம்
வெக் இண்டியா கிளைச் சங்கம்
கார்போரண்டம் யூனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்

ஒருங்கிணைப்பு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தரும்புரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784 – ஒசூர்.