Monday, August 15, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !

பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !

-

2012 டிசம்பரில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிருபயா என்ற பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிறகு நாடு முழுக்க பாலியல் அத்துமீறலுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. ஆனால் எந்த சட்டம் வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் காவல்துறையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், பல சமயங்களில் அவர்களே குற்றவாளிகளாக இருக்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் காணத் தவறி விடுகிறார்கள். அதுவும் குற்றவாளி ஒரு உயரதிகாரி எனில் கேட்கவும் வேண்டுமா என்ன?

கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத்
கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத்

கர்நாடக மாநிலத்தின் ரிசர்வ் போலீசு துறையின் கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத், வயது 50. அடுத்து பெங்களூரு நகர காவல்துறை ஆணையராக வர வாய்ப்புள்ளவராக கருதப்படும் ரவீந்திர நாத் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி. மட்டுமின்றி இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் தனது சிறப்பான காவல்துறை பணிகளுக்காக பெற்றவர். இவர்தான் ஒரு பாலியல் அத்துமீறலை நிகழ்த்தி விட்டு எந்தவித தடையுமில்லாமல் ஹாயாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவர்.

ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார். தங்கள் அனுமதியில்லாமல் யாரோ தங்களை படம் பிடிப்பதை தெரிந்து கொண்ட அந்த இரு பெண்களும் அவரிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டபடியே தப்ப முயற்சி செய்துள்ளார் ரவீந்திரநாத். அந்தப் பெண்களோ அவரிடமிருந்த செல்பேசியை பிடுங்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை தள்ளி விட்ட ரவீந்திர நாத் தப்பியோட முயற்சிக்கையில் அங்கிருந்த இன்னொரு வாடிக்கையாளரான ஸ்ரீதர் என்பவர் அப்பெண்களுக்கு ஆதரவாக வந்திருக்கிறார். ரவீந்திரநாத்திடமிருந்து இவர்கள் செல்பேசியை கைப்பற்றியுள்ளனர்.

அப்பெண்களை ஆபாசமான கோணத்தில் ரவீந்திரநாத் படம் பிடித்திருப்பது செல்பேசியில் இருந்த இரு புகைப்படங்களின் வழியே திட்டவட்டமாக தெரிய வந்தது. உடனடியாக ”நான் யார் என்று தெரியாமல் சண்டை போடாதீர்கள். நான் நினைத்தால் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என அப்பெண்களை மிரட்டி உள்ளார் ரவீந்திரநாத். பொதுவாக பிடிபடும் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் இப்படி பாதிக்கப்படும் பெண்களிடம் உதார் விடுகிறார்கள். காரணம் அதிகார மையத்தில் இருப்பதால் ரவீந்திரநாத் அப்பெண்களை கிள்ளுக்கீரையை விட கேவலமாகத்தான் கருதியிருப்பார்.

மீண்டும் அவர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட ரவீந்திரநாத் முயற்சிக்கவே, அப்பெண்கள் அழுது கூக்குரலிட்டனர். வெளியில் போய் கொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் அப்பெண்களுடன் இணைந்து அவரைப் பிடித்து ரோந்து வந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரது செல்பேசியும், சிம் கார்டும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

போலீசாரிடம் தனது காவல்துறை அடையாள அட்டையை காண்பித்து அவர்களை மிரட்ட துவங்கினார் சாதாரண உடையில் இருந்த ரவீந்திரநாத். தவறின் லட்சணத்தை பற்றிய குறைந்த பட்ச குற்றவுணர்வு கூட இல்லாமல் அதிகாரத் திமிரை போலீசிடமும் காட்ட முயன்றார். அந்த அடையாள அட்டையை போலி என்று கருதி, அவரது சட்டையை கழற்றிய ஹைகிரவுண்டு போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்தனர். இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 506-ன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் ‘அடையாளம் தெரியாத நபர்’ என்று காவல்துறையினர் குறிப்பிட்டிருந்தனர்.

கைது நடவடிக்கையை சிறிதும் எதிர்பார்த்திராத ரவீந்திரநாத் உடனடியாக மூத்த அதிகாரிகளுக்கு தன்னிடமிருந்த இன்னொரு செல்பேசி மூலமாக தகவல் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அங்கு வந்த மூத்த காவல்துறை அதிகாரி ரவீந்திரநாத்தை விடுவிக்குமாறு செய்தார். இன்னார் எனத் தெரிந்தவுடன் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட கீழ்நிலைக் காவலர்கள் ரவீந்திர நாத்திடம் வருத்தம் தெரிவித்தனர். என்னதான் கடுமையான சட்டங்கள் வந்தாலும் அதற்கு காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரையில் அரை மணி நேரம்தான் ஆயுள் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டினர்.

உயர் அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறும் ரவீந்திரநாத்
உயர் அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறும் ரவீந்திரநாத்

அன்று மாலை 4 மணிக்கு மாநில அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிலும் குற்றவாளியான ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அதில் தன்னை காலையில் ‘துன்புறுத்திய’ ஹைகிரவுண்டு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவ்வளவுக்கும் மற்ற கைதிகளை விட மரியாதையாகத்தான் அவரை நடத்தியுள்ளார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காவலர்களை இடைநீக்கம் செய்ய மாநில காவல்துறை தலைமை அதிகாரி (DGP) லால்ரோகுமா பச்சாவ் மறுத்து விட்டார்.

மறுநாள் ரவீந்திரநாத்தைப் பற்றிய செய்திகள் ஊடகங்கள் வாயிலாக கசியத் துவங்கவே அதே காபி ஷாப்பில் ஒரு நிருபர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் அவர். அதற்கு முன்னரே உள்துறை அமைச்சர் ஜார்ஜ், ரவீந்திரநாத் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தி அறிக்கை தர உத்திரவிட்டிருந்தார். தான் விசாரணைக்கு தயாராக இருப்பதாக ரவீந்திர நாத் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். ”உண்மையில் என்ன நடந்தது என்பதை சொன்ன பிறகும் காவல்துறையினர் என்னை கைது செய்து விட்டனர். நான் அப்பெண்களை புகைப்படம் எடுக்கவில்லை. முதல் மாடியில் இருந்து வந்த ஒருவர் என்னை தாக்கி விட்டு எனது செல்போனை பறித்துச் சென்று விட்டார். அவர் அப்பெண்களுக்கு தெரிந்தவர் தான். மாலை வரை அவர்தான் என்னுடைய செல்பேசியை வைத்திருந்தார். அவரை விசாரித்தால் உண்மை தெரிய வரும்” என்றும் திசை திருப்பி விட்டார். அவரை பிடிக்க வந்தவர்களையே குற்றவாளிகளாக்கவும் முயன்றார். ஆனால் உண்மையில் அவரிடமிருந்துதான் செல்பேசியை கைப்பற்றியதாக ஹைகிரவுண்டு போலீசார் தெரிவிக்கின்றனர்.

அங்கு வேலை செய்யும் ஒருவரை பத்திரிகையாளர்களிடம் பேச வைத்துள்ளார் ரவீந்திரநாத். ”சார் எங்களோட தினசரி வாடிக்கையாளர். எப்பவுமே வந்தால் அமைதியாக செல்போன நோண்டிக் கொண்டிருப்பார். இதுக்கு முன்னாடி யாரையும் அவர் செல்போனில் புகைப்படம் எடுக்கவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார். காபி ஷாப்பில் வேலை செய்பவருக்கு இவர் செல்போனில் என்ன செய்தார் என்று எப்படி தெரிந்திருக்க முடியும் என்ற எளிய கேள்வி கூட அவருக்கு எழ முடியாமல் அதிகாரபோதை அவரது கண்களை மறைத்திருக்கிறது.

இந்த நாடகத்தை தொடர்ந்து, தான் கைதான ஹைகிரவுண்டு காவல்நிலையத்திற்கு போயிருக்கிறார் ரவீந்திரநாத். மூத்த போலீஸ் அதிகாரி என்பதால் அங்கிருந்த போலீசார்  அனைவரும் அவருக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்தியுள்ளனர். உடனே ”நேற்று என்னை உட்கார வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்ட அதே இடத்தில் இன்று மரியாதையாக உட்கார வைத்துள்ளீர்கள்” என்று ஏளனமாக பேசியிருக்கிறார். “புகார் பதிவு செய்யப்பட்டிருப்பின் என்னை கைது செய்யுங்கள்” என்றும் கூறியிருக்கிறார். அவரை அங்கிருந்த கீழ்நிலை காவலர்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். பிறகு டிஜிபி அலுவலகம் சென்ற அவர் அங்கிருந்த நிருபர்களிடம் ஒரு நேர்மையான போலீசு அதிகாரியாக இருப்பதன் கஷ்டங்களை விளக்கியிருக்கிறார். ஏறக்குறைய 27-ம் தேதி முழுதும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். வழக்கமாக போலிசுதான் குற்றவாளிகளைத்தான் அழைத்துக் கொண்டு குற்றம் நடந்த இடங்களுக்கு சென்று எப்படி குற்றம் நடந்தது என்று நடித்துக் காட்டச் சொல்வார்கள். இங்கே குற்றவாளி நேரெதிராக போலிசை கிண்டல் செய்து சுற்றுகிறார். காரணம் அவர் ஒரு உயர் போலீசு அதிகாரி.

சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டு ரவீந்திரநாத் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாத உள்துறை அமைச்சர் ஜார்ஜ் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடாததை அதற்கு காரணமாக சொல்லியிருக்கிறார். அவரை எப்போது கைது செய்வீர்கள் என்று கேட்டதற்கு காவல்துறை உயரதிகாரிகள் நானில்லை, நீயில்லை என்று தப்பித்துக் கொள்கின்றனர். ரவீந்திர நாத்தை நான்கு மாத மருத்துவ விடுப்பில் சென்று விசாரணையை எதிர்கொள்ளுமாறு முதல்வர் சீத்தாராமைய்யா அறிவுறுத்தியிருக்கிறார்.

ரவீந்திரநாத்தற்போது அவரது செல்பேசியை தடயவியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். சம்பவம் நடைபெற்ற ஆவ் பொன் பெய்ன் காபி ஷாப்பில் சிசிடிவி சரிவர வேலை செய்யாத காரணத்தால் என்ன நடந்தது என்பது சரியாக தெரியாவிட்டாலும், தடயவியல் துறை முடிவின் படி ரவீந்திரநாத் மாட்டிக் கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் என அரசு தரப்பு அனைத்துமே காவல்துறை உயரதிகாரி என்பதற்காக ரவீந்திர நாத்தை பாதுகாக்க முனையும் போது காவல்துறையின் கீழ் இயங்கும் தடயவியல் துறை மாத்திரம் அவரை கைவிட்டு விடாதுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை. கடைசியில் குற்றவாளியே பாதிக்கப்பட்டவரைப் போல மாற்றப்படுவதுதான் இந்த சட்டம் மூலமாக நமக்கு கிடைக்கும் ‘நீதி’.

1990 ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ரவீந்திரநாத் ”பெங்களூரு மாநகர காவல்துறை ஆணயர் அரேட்கர் புலனாய்வு துறை டிஐஜி ஆக இருந்த போது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஐஜி ஆக இருந்த என் மீது நக்சல் தொடர்பு இருப்பதாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார். விசாரணையில் அது தவறான குற்றச்சாட்டு என தெளிவாகவே இப்போது பெண்களை வைத்து என்னை சிக்க வைக்க பார்க்கிறார்” என்று அரேட்கர் மீது பழி போடப் பார்க்கிறார். இவரது குற்றச்சாட்டை அரேட்கர் மறுத்து விட்டார். அவருக்கு எதிராக துறையில் சதிவலை பின்னப்படுவதாக கூறும் அளவுக்கு இவர் அவ்வளவு ஒர்த் இல்லை என்பது ஒரு விசயம். அடுத்து இதுவே பாஜக-வின் வட இந்திய மாநிலங்களாக இருந்தால் இது பாகிஸ்தான் சதி, ஐஎஸ்ஐ பயங்கரம் என்று கூட இவர் சொல்லலாம்..

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் உறவினர்கள். அதில் ஒருவர் முன்னாள் பத்திரிகையாளர். தங்களது புகாரில் கூட அடையாளம் தெரியாத நபர் தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாட்டிக் கொண்ட பிறகு தன்னை நியாயப்படுத்துவதற்காக சதித்திட்டம் ஒன்று தன்னைச் சுற்றிப் பின்னப்படுவதாக கதை கட்டுகிறார் ரவீந்திரநாத். பாலியல் குற்றச்சாட்டில் கையும் மெய்யுமாக பிடிபடும் எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் தப்பிக்க முயலும் பல வழிகளில் இதுவும் ஒன்று.

பாலியல் அத்துமீறல் குற்றம் புரிந்துள்ள ரவீந்திர நாத்தின் தனிப்பட்ட செல்பேசி ஹைகிரவுண்டு போலீசிடம் இருந்த போதிலும் அவருக்கு வழங்கப்பட்ட துறை சார்ந்த செல்பேசியை கைதின் போது அவர் பயன்படுத்த முடிந்திருக்கிறது. சாதாரணமாக கைது செய்யப்படும் மக்களுக்கு வழங்கப்படும் உரிமை அல்ல இது. ஆனாலும் தனது சட்டையை கழற்றி சிறையில் அடைத்தார்கள் என்பதற்காகவே பொங்கியெழுகிறார் ரவீந்திரநாத். பெரும்பான்மை மக்களுக்கு காவல் நிலையத்தில் வழங்கப்படும் அதே ‘மரியாதை’யை அவருக்கு கீழிருக்கும் அதிகாரிகளே சில மணித்துளிகள் மட்டும் காட்டியதற்காகவே ரவீந்திர நாத் பொங்குகிறார். ஆனால் இதை விட கேவலமாகத்தான் மொத்த சாதாரண, நடுத்தர மக்களை அவர்கள் காலம் காலமாக நடத்தி வருகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது பற்றிய இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்கின் முடிவில் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இது ரவீந்திர நாத் போன்ற போலீசார் விசயத்தில் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் சுதந்திரமாக அரசுப் பதவிகளில் நீடிக்கவும் முடிகிறது.

இந்த வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ரவீந்திரநாத் கோரியிருக்கிறார். அதாவது மாநில அளவில் விசாரணை நடந்தால் அவருக்கு நீதி கிடைக்காதாம். துறையில் நடக்கும் கூட்டுச்சதியில் அவர் பலிகடாவாகி விடுவாராம். இப்படி கோருவது சாமான்யர்களுக்கு சாத்தியமில்லை என்பது ஒருபுறமிருக்க, விசாரணையை இழுத்தடிப்பதற்காக அவர் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. சிபிஐ விசாரணையெல்லாம் முடிந்து தீர்ப்பு வருவதற்கு எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்?

ஏதோ தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற தோன்றத்தை ஏற்படுத்திட முயல்வது தான் காலத்தின் கொடுமை. தன்னை நியாயப்படுத்துவதற்காக பல வழிகளிலும் முயல்கிறார் ரவீந்திரநாத்.

2013 டிசம்பரில் ஒரு இளம்பெண்ணும், தாயும் மூன்று இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டனர். அடுகோடி போக்குவரத்து காவல்நிலையத்தின் உள்ளே வைத்து இச்சம்பவம் நடைபெற்றது. அடித்தவர்கள் போலீசாரின் மகன்கள் என்பதால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மக்கள் போராடிய பிறகு உயர் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டுதான் வேறு வழியேயில்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டியதாயிற்று. ஆனால் இப்போது மாட்டியிருப்பவரோ மாநில அளவில் உயரதிகாரி. விசாரிப்பவர்கள் ஏறக்குறைய இவருக்கு சம அந்தஸ்திலோ அல்லது அதற்கும் சற்று குறைவான அந்தஸ்திலோ இருப்பவர்கள். நிச்சயமாக ரவீந்திர நாத் போன்ற பொறுக்கியை பாதுகாக்க தான் முயல்வார்கள். இந்த பாலியல் அத்துமீறல் செய்த பொறுக்கியை பிடித்து கொடுத்த மக்கள் இன்னும் தொடர்ந்து போராடினால் கூட ரவீந்திர நாத் போன்றவர்களை அரசாங்க தரப்பும் தண்டிக்காது.

இவ்வளவு வெட்டி நியாயம் பேசும் ரவீந்திரநாத் வழக்கை சட்டப்படி எதிர் கொள்ள ஏன் பயப்பட வேண்டும்? மாறாக என்னை விசாரிக்கவே கூடாது என்று ஏன் மிரட்ட வேண்டும்? போகட்டும், ஒரு குற்றவாளி அப்படி நடப்பது இயல்புதான் என்றால் அரசாங்கம் அவரை கைது செய்து உள்ளே தள்ளி வழக்கை நடத்த தயங்குவது ஏன்? இது என்ன ஜனநாயகம்?

சட்டமும், போலிஸ் துறையும், நீதித்துறையும் மக்களுக்கானதில்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறது. மக்களுக்கு மட்டும் சட்டத்தின் பார்வையில் தண்டனை, போலிசுக்கு இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

போலிசு ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய் என்பதை இனியும் யாராவது மறுப்பீர்களா?

–    கௌதமன்.

 1. வினவு இதில் சொல்லப் பட்ட தகவல்களை மீண்டும் விசாரிக்க வேண்டும். ரவீந்திரநாத் தூய்மையான, மனிதாபிமானம் நிரம்பிய அதிகாரியாக அறியப் படுகிறார். க்டந்த இரு நாட்களாக ரிசர்வ் போலீசார் நூற்றுக் கணக்கில் குடும்ப சகித்ம் பெங்களூர், ஹாசன், கொப்பல் மற்றும் பல் பகுதிகளில் ரோட்டிற்கு வந்து அவருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இவை அனைத்தும் அவருக்கு எதிராக பின்னப் பட்டுள்ள சதி என்பது அவர் கீழ் பணியாற்றியுள்ள பெரும்பாலோனரது கருத்து. வினவு ஒரு நேர்மையான மனிதரைப் பற்றித் தவறாக எழுதக் கூடாது.

  • இவ்வளவு நியாயம் பேசும் ரவீந்திரநாத் வழக்கை சட்டப்படி எதிர் கொள்ள ஏன் பயப்பட வேண்டும்? மாறாக என்னை விசாரிக்கவே கூடாது என்று ஏன் மிரட்ட வேண்டும்? போகட்டும், ஒரு குற்றவாளி அப்படி நடப்பது இயல்புதான் என்றால் அரசாங்கம் அவரை கைது செய்து உள்ளே தள்ளி வழக்கை நடத்த தயங்குவது ஏன்?

 2. அவர் வழக்கு பதிவு செய்து விசாரியுங்கள் என்றுதான் வலியுறுத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் போலீசும்தான் தயங்கியது. தற்சமயம் அவரே ஆராத்கர், ரவிசங்கர் கௌடா, ரவி ஆகிய அதிகாரிகளுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தலித் என்பதால் பிராமணரான ஆராத்கர் அவரை இழிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில் எம்.பிற.பிற.எஸ் மருமருதுரவீந்மருமருதுரவீந்திப்ஹ்ளகொண்டா. ஆந்திரா நளகொண்டாவ்ரான இவர் நக்சலைட் ஆதரவாளராகவும் குற்றம் சாட்டப்பட்டார். M.B.B.S. படித்து, பின் IPS சேர்ந்தவர்.கன்னட ஊடகங்க்ச்ளில் விரிவான செய்திகள் வெளியாகியுள்ளது.

 3. இது பற்றி மேலும் சில விபரங்கள்:

  1) உள்துறை மந்திரி ஜார்ஜ், முன்னாள் முதல்வர் குமாரசுவாமி,முன்னாள் துணை முதல்வர் அஷோக், முன்னாள் போலீஸ் அதிகாரி சங்கர் பித்ரி உட்பட பலரும் இவர் நேர்மையான அதிகாரி என்று வெளிப்படையாக சான்றிதழ் அளித்துள்ளனர்.
  2)எளிமையான, கூச்ச சுபாவி, எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்.அடிக்கடி ஆட்டோ, பஸ்களில் பயணம் செய்வார்.காரோட்டத் தெரியாது.
  3) இதே ஆராத்கர்தான் இவர்மீது நக்சலைட் என்று குற்றம் சாட்டினார்.
  4) அரசும்,போலீசும்தான் இப்போது இந்த விவகாரத்தை இதோடு மூடி மறைக்க முயல்கின்றன. இவர் விசாரணை நடக்கட்டும்,உண்மை வெளிவரட்டும் என்கிறார்.
  5) இவர் அடுத்த போலீஸ் கமிஷனராக வரக்கூடிய வாய்ப்புள்ளவர்.அதனால்தான் இந்த உள்குத்து வேலை? டிக்கண்ணன் சுவாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க