Thursday, November 26, 2020
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் அஞ்சலையின் இருபது வருடப் போராட்டம்

அஞ்சலையின் இருபது வருடப் போராட்டம்

-

ரிதினும் அரிதான வழக்குகளில் மட்டும்தான் காவல்துறையினர் கைது செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளிலும் கூட நீதி கிடைப்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் சில பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். அதிலும் அவர்கள் ஏழைகளாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து விட்டால் நீதியை அவர்கள் கனவில்தான்  பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.

அஞ்சலை
அஞ்சலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வசிக்கும் அஞ்சலை என்ற பெண்ணுக்கு இப்படி ஒரு காலம் தாழ்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. சென்னை கொத்தவால் சாவடியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அஞ்சலையின் கணவனை 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விசாரணைக்காக அழைத்துச் சென்றார் பாடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆய்வாளர் கஸ்தூரி காந்தி.

பாண்டியனுடைய தம்பி செல்லத்துரை, ஆதிக்க சாதியை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் மோகன் என்பவரது இள வயது மகளை காதலித்து பின்னர் கடத்திச் சென்று விட்டார் என்பது தான் வழக்கு. காதலர்கள் சிக்காத காரணத்தால் அடைக்கலம் தந்திருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் பாண்டியனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு சென்ற பாண்டியன் வீடு திரும்பவில்லை. இரு நாட்கள் கழித்து கிழுமத்தூர் சின்னாற்றங்கரையில் உள்ள வேப்ப மரமொன்றில் தூக்கில் தொங்கியபடிதான் அவரது உடலை உறவினர்களால் மீட்க முடிந்தது. பாண்டியனது கைகள் பின்னால் கட்டப்பட்டும், ஆசன வாயில் துணி செருகப்பட்டும் இருந்தது தெரிய வரவே இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள் சேர்ந்து பல்வேறு மறியல், முற்றுகை போராட்டம் நடத்திப் பார்த்தார்கள். அரிசி ஆலை அதிபரது சகோதரன் சுப்பிரமணியம் என்பவர், நடந்த சம்பவத்திற்கு போலீசுதான் காரணம் என ஊர் மக்களிடம் தெளிவாகக் கூறி விட்டார். பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் பாண்டியன் தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்கிறார். மக்களின் போராட்டத்தால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக 1995-ல் இச்சம்பவத்தை விசாரித்த கோட்டாட்சியர் இதனை தற்கொலை தான் என்று தீர்ப்பெழுதி தனது அதிகார வர்க்க பாசத்தை நிரூபித்துக் கொண்டார்.

மறுபுறம் தனது கணவனது மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சிவில் உரிமைக் கழக (பி.யூ.சி.எல்) உதவியுடன் அஞ்சலை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2003-ல் நீதிமன்றம் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி வழக்கை தள்ளுபடி செய்தது. மீண்டும் டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்தார் அஞ்சலை. 13 டிசம்பர் 2013-ல் நீதிபதிகள் எலிப்.பி.தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வானது இக்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டதுடன், குற்றச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் அஞ்சலைக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்திரவிட்டது.

பிறகு சிபிஐ விசாரணை துவங்கியது. மாநில காவல் துறையினரே இக்கொலை வழக்கில் குற்றவாளிகளாக இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு அவர்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை. பாண்டியனது பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவர் தூக்கில் தொங்கும் புகைப்படம் போன்றவற்றையெல்லாம் கூட அஞ்சலையிடமிருந்துதான் சிபிஐ பெற்றுக் கொண்டிருந்தது. ”இன்னும் எத்தனை வருஷத்துக்கு விசாரித்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்” என்று விரக்தியாக சிபிஐ அதிகாரிகளிடம் அஞ்சலை கேட்டாராம்.

கஸ்தூரி காந்தி
கஸ்தூரி காந்தி

கடந்த திங்கள்கிழமை (26-05-2014), மதுரை மாநகர கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை உதவி ஆணையராக (AC) பணியாற்றும் சி. கஸ்தூரி காந்தியையும், திருச்சி விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் ரவி (பாண்டியன் கொலையான போது இவர் குன்னம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்) என்பவரையும் சென்னைக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த சிபிஐ  அவர்களை கைது செய்தது. குன்னம், பாடலூர் காவல் நிலையங்கள், பழைய திருச்சி மாவட்டத்திற்குள் வருவதால் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். முன்னர் திருச்சியில் உதவி ஆணையராக பணியாற்றி இருந்த கஸ்தூரி காந்திக்கு திருச்சியை நெருங்கும்போதே நெஞ்சு வலிப்பதாக சிபிஐயிடம் தெரிவித்தார். உடனடியாக அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்த்தனர். தலைமை நீதிபதி ஏ.பி. பாலச்சந்திரன் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்ட ரவிக்கும், அவருக்கும் வரும் ஜூன் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இருவர், தான் தொடர்ந்த வழக்கினால் கைதாகியிருப்பது கூட தெரியாமல் வேப்பூர் கிராமம், ஆதிதிராவிடர் காலனியில் வசித்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார் அஞ்சலை. இந்த கைது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ”எப்படியோ எனக்கு வாழ்க்கை பறிபோயி 19 வருஷம் கழித்தாவது நியாயம் கிடைத்ததே அதுவே போதும். இப்போது அந்த போலீசு அதிகாரி நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரில படுத்திருக்காருன்னு சொல்றாங்க. ஒரு கைதுக்கே அவங்களுக்கு நெஞ்சு வலி வருதுன்னா கணவரை பறிகொடுத்த என்னோட நெஞ்சு என்ன பாடு பட்டிருக்கும்.” என்கிறார் இன்று ஐம்பது வயதை தொட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலை.

இருபதாண்டு காலம் ஆதிக்க சாதிகளுடன் இருக்கும் ஊரில் கணவனை இழந்த ஒரு தலித் பெண் தனியாக வாழ்வது அப்படியொன்றும் எளியதல்ல. ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் சம விகிதங்களில் கலந்து ஒடுக்குகையில் அதனை ஒருபுறம் எதிர்கொண்ட படியேதான் தங்களது தினசரி வாழ்வை தினந்தோறும் நாடு முழுக்க கடத்திக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சலை போன்ற பெண்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் அந்த வாழ்க்கை முள்ளில் பட்ட சேலையாக இருபதாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் ‘என்னோட நெஞ்சு என்ன பாடுபட்டிருக்கும்’ என்று சொல்கிறார் அஞ்சலை.

இத்தகைய வறிய வாழ்விலும் தனது கணவனை கொன்ற போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை கொண்டிருந்தார். கணவன் இறந்த எட்டாண்டுகளில் உயர்நீதி மன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்த போது அஞ்சலை சோர்ந்து விடவில்லை. மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தின் கதவை தன்னந்தனியாக அவர் விடாமல் தட்டிக் கொண்டே இருந்தார்.

கொட்டடி கொலைகணவன் இறந்த சில மாதங்களிலேயே கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நாடறிந்த கொலையை தற்கொலைதான் என்று ஊத்தி மூடிய போதே அவரது நெஞ்சு வெடித்துச் சிதறியிருக்கும் தான். ஆனால் ஆரம்பத்தில் அஞ்சலை சோர்ந்து விடவில்லை. மனித உரிமை அமைப்புகளும் அவருக்கு துணை நின்றன. ஆனால் காலம் செல்லச் செல்ல கொலைகார போலீஸ்காரர்களை தண்டிப்பது சுலபமல்ல என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம்.

”போலீசுக்காரங்க சாதாரண ஜனங்கள துன்புறுத்தறதுக்கு முன்னாடி தன்னை அந்த இடத்துல நிறுத்திப் பார்த்துக்கணும்” என்று தற்பதைய தீர்ப்புக்கு பிறகு அஞ்சலை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார். தன்னுடைய கணவனை கொடூரமாக கொன்ற கயவர்களான காவல்துறையிடமும் மனிதநேயப் பரிவோடு பேசுகிறார். தனது துயரத்தை எதிரிகளான போலீசாராலும் புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார். ஆனால் மக்களை ஒடுக்குவதற்கென்றே சிறப்பு பயிற்சிகளையும், அதிக சலுகைகளையும் பெற்று வாழும் அந்த வன்முறை எந்திரத்திடம் இந்த ஏழையின் சொல் ஏறாது.

பயிற்சியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே தங்களை சமூகத்திலிருந்து விடுவித்துக் கொண்டு, அதனை அடக்க பிறந்தவர்களாக நினைக்கும் காவல்துறையினர் அதன்படியே மக்களை நடத்துகின்றனர். அதாவது பழக்கப்படுத்தப்படும் ஜமீன்தார் வீட்டு வேட்டை நாய்க்கும், காவல்துறைக்கும் ஒப்பீட்டளவில் எந்த வேறுபாடுமில்லை என்றே சொல்லலாம். ஆனால் அவர்களையும் மதித்து அஞ்சலை ”இன்றைக்கு அந்த போலீசுகாரனுக்கு நேர்ந்தது வேற யாருக்கும் வராதபடி போலீசுகாரங்க நடந்துகிட்டா அதுவே நான் இவ்வளவு காலம் போராடியதற்கு கிடைத்த வெற்றி” என்கிறார்.

தன் எதிரிக்கும் சேர்த்து யோசிக்கும் அஞ்சலையின் இப்படி ஒரு வார்த்தையை போலீசோ, நீதிபதிகளோ எந்தக் காலத்திலாவது சொல்ல முடியுமா? கனவிலும் தப்பித் தவறிக் கூட சொல்லி விட மாட்டார்கள் அவர்கள்.

அஞ்சலை பள்ளிக்கூட படிப்பை கூட முடிக்காதவர் தான். வழக்கு போட முயன்ற இவரால் நடந்த சம்பவங்களை கோர்வையாக கூட சொல்ல இயலவில்லை என்கிறார்கள் பி.யூ.சி.எல் அமைப்பினர். இருபதாண்டுகள் போராடிய பிறகுதான் நீதி கிடைக்கும் எனும்பட்சத்தில் அதற்கு எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்?

அஞ்சலை - பாண்டியன்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலை – பாண்டியன்

கைது நடவடிக்கை என்றவுடன் இப்போது பயந்து போய் நெஞ்சு வலி வந்திருப்பதாக சொல்லும் ஏசி கஸ்தூரி காந்திக்கு, 20 வருடங்களுக்கு முன்னர் விசாரணைக்காக தன்னால் அழைத்துச் செல்லப்பட்ட பாண்டியன், அஞ்சலை தம்பதியின் வலி என்றுமே புரியாது. ஒருக்கால் செய்த குற்றம் குறித்த குற்றவுணர்ச்சியெல்லாம் இருந்திருந்தால் அவர் நிச்சயமாக நெஞ்சு வலிப்பதாக கதையெல்லாம் கட்டியிருக்க மாட்டார். இவ்வளவுக்கும் சிறையோ, நீதிமன்றமோ எதுவானாலும் தனது பங்காளிகளில் ஒருவரான அவரை கைவிட்டு விடப் போவதில்லை என்பதும் அவருக்கு நன்கு தெரியும். ஆனாலும் பிறரை கைது செய்து மட்டுமே பழக்கப்பட்ட அவருக்கு தானும் ஒருநாள் கைது செய்யப்படுவோம் என்பதை மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாண்டியனைப் போன்ற ஏழைகளுக்கு மனித உரிமை, முற்போக்கு மற்றும் இடதுசாரி அமைப்புகள்தான் உடன்நிற்கின்றன. எனினும் எந்த போராட்டமும் இன்றி சட்டப்பூர்வமாக நீதியை வாங்குவது அப்படி ஒன்றும் எளிதல்ல. அதற்கு பாதிக்கப்பட்டவர்களது தரப்பின் அயராத ஒத்துழைப்பும் ஒரு முன் நிபந்தனையாகிறது. ஒருவேளை சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் மேல்முறையீடு செய்து எளிதாக வெளியே வந்து விடுவார்கள்.

பொதுவாக காவல்துறையின் அத்துமீறலை நிரூபித்தாலும் தண்டனை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பின் வழக்கு விசாரணைக்கு முன்னரே ஒன்றுமில்லாமல் செய்ய விசாரணை கமிசன்கள் அமைக்கப்பட்டு இருப்பதற்கு சான்றுகள் தாமிரபரணி படுகொலையும், பரமக்குடி படுகொலையும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அஞ்சலைக்கும் முழுநீதி கிடைத்து விட்டது என்றோ இனி கண்டிப்பாக கிடைக்கும் என்றோ கூறிவிட முடியாது. உயர்நீதிமன்றத்தில் விட்டதை இவர்கள் உச்சநீதிமன்றத்தில் பிடிக்கமாட்டார்களா என்ன?

ஆனாலும் தனது கணவனது கொலைக்காக ஒரு ஏழைப்பெண் இருபது வருடங்களாக போராடி காத்திருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கும் ஜனநாயகம் மற்றும் நீதி அமைப்புக்களின் தரம் என்ன?

–     கௌதமன்.

படங்கள் : நன்றி தி ஹிந்து

 1. தனது கணவனது கொலைக்காக ஒரு ஏழைப்பெண் இருபது வருடங்களாக போராடி காத்திருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கும் ஜனநாயகம் மற்றும் நீதி அமைப்புக்களின் தரம் இதுதான். 000000000000000000000000000000000000000000000000000000

 2. ஒரு முதல்வர் நீதிக்காக 17 வருடம் காத்திருக்கும்போது அஞ்சலை காத்தால் என்ன தப்பு????

 3. மிக நடு நிலைமையுடனும் அனாவசிய பழித்தல் இல்லாமலும், குறிப்பாக பார்ப்பனியம் மற்றும் பாசிசம் என்ற பதங்களை பயன்படுத்தாமல் எழுதிய நல்ல பதிவு. இது போன்றவர்களுக்கு உதவுவோர் இன்னும் இருப்பது ஆறுதல்

 4. It shows clearly there is soon a Revolution may arise between the poor & oppressed Indians against the public servants.

  Public servants are not serving the public, they are serving only politicians, rowdis, and for corporate gains.

 5. அஞ்சலையின் போராட்டம் மகத்தானது. காக்கிசட்டைகளுக்குள் இருக்கும் பல மிருகங்களை பல அமைப்புகள் எதிர்த்துபல போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தியுள்ளது. இருந்த போதிலும் இந்த போர் பல்வேறு வகைகளில் எடுத்துக்கட்டானது. வழக்கறிகஞர் சுரேஷ் அவரது அமைப்பு செய்த உதவியும் பாரட்டுக்குறியது. அரசு, அதன் அதிகார மையங்களான காவல் துறையை அடிதட்டு மக்களுக்கு எதிராக பயன் படுத்துவதை அம்பலப்படுத்டுவோம்.

 6. ஏழைகளாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து விட்டால் நீதியை அவர்கள் கனவில்தான் பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.

 7. Yes it’s very difficult to get justice, especially for the poor, in this country but it’s not impossible as this case proved.

  Imagine getting justice in N.Korea or Cuba or USSR…

  That’s why democracy however bad is better than the communism or dictatorship. Here atleast Vinavu and Puthiya jananaayagam are able to function even though they are against the government. I don’t think this would be possible without democracy.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க