Wednesday, March 3, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் அம்பானி ரயில் ஓட்டினால் என்ன நடக்கும் ?

அம்பானி ரயில் ஓட்டினால் என்ன நடக்கும் ?

-

மும்பை மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 8-ம் தேதி மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவானால் துவக்கி வைக்கப்பட்டது. மெட்ரோ சேவையை இயக்கும் அனில் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் ரயில் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துவக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதலில் கூறியிருந்த முதல்வர் சவான் பின்னர் தனது முடிவைக் கைவிட்டுவிட்டு விழாவில் கலந்து கொண்டார்.

சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘ரிலையன்சு மெட்ரோ’ என்ற பெயர் கம்பெனி லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்டதற்கு பதிலாக “இதனை மும்பை மெட்ரோ என்றே குறிப்பிடுங்கள், ரிலையன்சு மெட்ரோ என அழைக்க வேண்டாம்” என்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறார் சவான்.

பிரு்த்விராஜ் சவான் தொடங்கி வைத்தல்
மும்பை மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டத்தை தொடங்கி வைக்கும் ‘டம்மி பீசு’ முதலமைச்சர் பிருத்விராஜ் சவான்.

மும்பை மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் திட்டமிடப்பட்ட இதனை இரண்டு ஆண்டுகளில் முடிப்பதாக திட்டம். அப்போது திட்டச் செலவாக ரூ 2,300 கோடி திட்டமிடப்பட்டது. ஆனால் ஆறு ஆண்டுகளில் முடிக்கப்பட்ட இத்திட்டத்தின் செலவு தொகை தற்போது ரூ 4,300 கோடியை அடைந்து விட்டதாக இத்திட்டத்தின் தனியார் பங்குதார நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்சு கட்டுமான நிறுவனம் கூறுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் வேலையை இழுத்தடிப்பதோடு, அதிக செலவும் செய்வார்கள். மாறாக, தனியார் நிறுவனங்கள் ‘திறமையாக’ குறித்த காலத்துக்கு முன்பே வேலையை குறைந்த செலவில் முடித்து விடுவார்கள் என்று கூறித்தான் தனியார்மயத்தை அமல்படுத்தி வருகிறது அரசு. அதன் விளைவு இப்படி பல்லிளிக்கிறது.

ரிலையன்ஸ் தனது திறமைக் குறைவிற்கான தண்டனையை மக்கள் மீது சுமத்த விழைகிறது. மெட்ரோ ரயிலுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயித்த ரூ 9 க்கு பதிலாக ரூ 10 என்றும், அதிகபட்ச கட்டணத்தை ரூ 14 க்கு பதிலாக ரூ 40 என்றும் உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. அரசு மின்சார ரயிலில் அதிகபட்ச கட்டணமே 14 ரூபாய்தான்.

மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்சு உட்கட்டமைப்பு நிறுவனமும், வெயோலியா போக்குவரத்து நிறுவனமும் இணைந்து 2006- ல் உருவாக்கியிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் என்ற தனியார் நிறுவனம் மூலமாகத்தான் இந்த ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களில் ரூ 9 முதல் 13 வரைதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு விலை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், அந்த நிபந்தனையை தூக்கி கடாசி விட்டு தன் கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ள மும்பை மெட்ரோ நிறுவனத்தின் அதிகாரத்தில் கட்டணத்தை ஏற்றியே தீருவேன் என்று அடாவடி செய்கிறது ரிலையன்ஸ்.

தனியார் துறையில் திட்டமிடல் சரியாக இருக்கும், நியாயமான விலை நிர்ணயம் இருக்கும் என்று பேசும் பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் ரிலையன்சின் திட்டத்திற்கான கால தாமதம் மற்றும் கட்டண உயர்வு பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

அனில் அம்பானி.
திருட்டுத்தனத்தில் கொட்டை போட்ட திருபாய் அம்பானியின் புத்திரர் அனில் அம்பானி.

ரிலையன்சை எதிர்த்து மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகம் மும்பை உயர்நீதி மன்றத்தை அணுகியது. மும்பை பெருநகர வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஈ.பி. பரூச்சா ‘இது மும்பை நகர மக்களுக்கும் தனியார் நிறுவனத்துக்குமான சண்டை’ என்றுதான் வர்ணிக்கிறார். அது தான் உண்மையும் கூட.

வழக்கு விசாரணையின் போது ‘பழைய கட்டணம் ஜூலை 9 வரைதான் பொருந்தும்’ என்றும், ‘அதன் பிறகு கட்டண உயர்வை தவிர்க்க முடியாது’ என்றும் ரிலையன்சு நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மத்திய மெட்ரோ ரயில் சட்டம் 2002-ன்படி கட்டண நிர்ணயம் செய்ய மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அதிகாரம் இருப்பதாக ரிலையன்சு நிறுவனத்தினர் வாதிடுகின்றனர். 2002-ம் சட்டத்தின் 33-வது விதி முதன்முதலாக கட்டண நிர்ணயம் செய்யும் போது மெட்ரோ ரயிலின் நிர்வாகமே தன்னிச்சையாக முடிவு செய்து கொள்ள வழிவகுக்கிறது. ஆனால், மும்பை மெட்ரோவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள மெட்ரோ ஒன் நிறுவனத்தை ரிலையன்ஸ் கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறாக, தான் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட கட்டண நிபந்தனைகளை மீறுவதற்கு சட்டத்திலும் நடைமுறையிலும் உள்ள ஓட்டைகளை திறமையாக பயன்படுத்துகிறது ரிலையன்ஸ். திருட்டுத்தனத்தில் கொட்டை போட்ட திருபாய் அம்பானியின் புத்திரர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

பொதுத்துறை – தனியார் கூட்டு என்பது அரசு உதவியுடன் நடக்கும் தனியார் கொள்ளைதான் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்? 2002-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சட்டம் கார்ப்பரேட்டுகளின் டார்லிங்குகளான பா.ஜ.க ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மும்பை மெட்ரோ
மும்பை மெட்ரோ – மேட்டுக்குடியினருக்கு மட்டும்?

ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையையும் ஏற்றிக்கொள்ள ஏகபோக அனுமதி முதலாளிகளுக்கு எப்படி தரப்பட்டுள்ளதோ அதே போல தனியார் அரசு கூட்டு (public private partnership) என்ற பெயரில் மெட்ரோ ரயில் கட்டண நிர்ணயம் இப்போது அம்பானி கையில் போயிருக்கிறது. சாலை வழியாக போனால் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனம் ஆங்காங்கு சுங்கசாவடி அமைத்து வாகனங்களிடம் வசூல் செய்வது போல, மெட்ரோ ரயிலில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ரிலையன்சும் கட்டணம் என்ற பெயரில் மக்களை சட்டப்படி கொள்ளையிட ஏதுவாக அரசு சட்டம் இயற்றியுள்ளது. கொள்ளைதான் என்றாலும் சட்டப்படி நடப்பதால் நீதிமன்றம் அவர்களைத் தண்டிக்க முடியாது என்கிறது தனியார்மயம்.

ஏற்கெனவே குளிரூட்டப்பட்ட வண்டிகள், தானியங்கி கதவுகள் கொண்டதாக மெட்ரோ ரயில் சேவை இருப்பதால், இதனை பயன்படுத்த சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மும்பை வாசிகள் சற்றே தயங்கிக் கொண்டிருக்க, ரயில் கட்டண உயர்வு அவர்களை இதன் பக்கமே வரவிடாமல் தள்ளி விடுகிறது என்பதுதான் உண்மை. ஏழைகள் பயணிக்க முடியாத நவீன அக்கிரகாரமாக மெட்ரோ ரயில் மாற்றப்பட்டு விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வழக்கமாக முதலாளிகள் வியாபாரம் போணியாகாத போது கொடுக்கும் சலுகையைப் போல இப்போதும் முதல் முப்பது நாட்களுக்கு ரூ 10-ஐ சலுகை கட்டணமாக ரிலையன்சு அறிவித்துள்ளது. ஏனெனில் பயணம் துவங்கிய முதல் வாரத்தில் 21 லட்சம் மக்களே இதில் பயணித்துள்ளனர். இவ்வளவுக்கும் இந்த 11.4 கி.மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களிலேயே மெட்ரோ ரயில் கடந்து விடுகிறது. இதே தூரத்தை சாலை வழியாக கடக்க மும்பையில் குறைந்தபட்சம் 90 நிமிடங்களாவது ஆகும். எனினும் மக்களின் வாழ்க்கை பொருளாதார நிலைமைகளில் இந்த கட்டணம் கொடுத்து பயணம் போவது பெரும்பான்மையினருக்கு சாத்தியமில்லை என்பதால்தான் வியாபாரம் போணியாகவில்லை. அதே நேரம் இது தொடரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. வேறு வழியின்றி குறைந்த நேரத்தில் பயணம் போய் ஆகவேண்டிய தேவை அதிகரித்து வருவதால் மக்கள் நீண்டகால நோக்கில் மெட்ரோவை அதிகம் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதுதான் ரிலையன்ஸ் எனும் வேட்டை நரி துணிந்து கட்டணத்தை உயர்த்தக் காரணம்.

சென்னை மெட்ரோ
உழைப்புச் சுரண்டலில் உருவாகும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

இப்போது சென்னை மற்றும் ஜெய்ப்பூரிலும் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டு வேலைகள் நடைபெற்று ஓரளவு பகுதி அளவில் முடியும் தறுவாயில் உள்ளன. 14,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சில இடங்களில் மட்டும் நிறைவு பெற்று விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளுடன் ஒரு ஜப்பானிய வங்கியும் (Japan International Corporation Agency) கடன் கொடுத்துள்ளது. கடனுடன் திட்ட ஆலோசனையையும் கொடுத்து, பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களை விற்கவும் செய்துள்ளது இந்த வங்கி. உதாரணமாக ரயில் பெட்டிகள் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அல்ஸ்டோமால் விற்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சேர்த்து அழுத தொகையைத்தான் நமது தலையில் பயண கட்டணமாக வசூலிக்க இருக்கிறது அரசு.

மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வட இந்திய  தொழிலாளிகளுக்கு தினச் சம்பளமாக ரூ 160 தான் தந்தார்கள் அதில் ஈடுபட்டிருந்த தனியார் கட்டுமான நிறுவனங்களான எல்&டி, சிசிசிஎல், ஆப்கான்ஸ் போன்ற நிறுவனங்கள். அவர்களது தேவையை பயன்படுத்திக் கொண்டு நாளொன்றுக்கு அவர்களிடமிருந்து 12 மணி நேர உழைப்பை உறிஞ்சினார்கள்.

மின்சார ரயிலில் சீசன் டிக்கெட்டுகள் பெரும்பாலும் மாதமொன்றுக்கு 20 கிமீ தூரம் வரை ரூ 85 க்கு கிடைத்து வருகிறது. மெட்ரோ ரயிலில் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படப் போவதில்லை. இங்கேயும் ரிலையன்சின் தந்திரமே வெல்ல வாய்ப்பிருக்கிறது. வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்தாவது பயணம் செய்ய காத்திருக்கும் நடுத்தர வர்க்கம் இதை எதிர்த்து போராடுமா என்பதும் கேள்விக்குறி.

மெட்ரோ ரயில் போன்ற தனியார் கட்டுமான திட்டங்களில் தொழிலாளிகள் நேரடியாக சுரண்டப்படுகிறார்கள். எந்திரங்கள், தொழில்நுட்பம், வண்டிகள், கடனுக்கு வட்டி என்று ஏகாதிபத்திய நிறுவனங்கள் மக்களை மறைமுகமாக சுரண்டுகின்றன. மாநகர அவஸ்தைகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் பயணிகளோ வேறு வாய்ப்புகள் இன்றி மெட்ரோவை தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயம் ஆகியிருக்கிறது. இப்படித்தான் தனியார் மயம் பல்வேறு முனைகளில் நம்மை கொள்ளையடிக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

–    கௌதமன்

  1. Too much சுரண்டல்ஸ் & புலம்பல்ஸ் ??
    கம்யுனிசம் வந்தா என்ன பண்ணுவீங்க.. எப்படி ட்ரைன் ஓட்டுவீங்க ? எந்த கட்டணத்தில் ஓட்டுவீங்க ?
    உங்களுக்கு சம்பளம் வருது, ஒரு பட்ஜெட் வச்சுருக்கீங்க.. திடீர்ன்னு உங்க வீட்டு ஏசி வேலை செய்யல, கூடவே வாஷிங் மெஷின் மோட்டார் ரிப்பேர்… எப்படி அட்ஜஸ் செய்வீங்க ?
    செய்தி போடுறது ரொம்ப சுலபம். அந்தந்த பதவியில் இருந்து பாருங்க.

  2. நமக்கு அம்பானியை திட்டுவதற்கு ஏதாவது கிடைத்து விடுகிறது. அவர்களும் ஏதாவது செய்து இருப்பதால் தான் செய்தி வருகிறது. இப்போது என்ன: மெட்ரோ ரயில் மும்பையில்: நீண்ட கால தாமதம்; அதிக கட்டுமானச் செலவு. அதிக கட்டணம். சரி. ஒரு மெட்ரோ ரயில் பாதை, வடிவம் எவ்வளவு அலுவகங்கள் அனுமதி தரவேண்டும்?நம் அரசு அதிகாரிகள் அதுவும் குறிப்பாக மும்பை அதிகாரிகள் (நூற்றுக்கணக்கான அதானிகள், அம்பானிகள் பழக்கி விட்டது!) எவ்விதம் கால தாமதம் செய்வது என்று கற்றுத் தேர்ந்தவர்கள். அனுமதி நூறு சதவீதம் கையில் வந்த பின் தான் துவங்குவேன் என்று இருந்தால் ஒரு திட்டமும் துவங்கவே துவங்காது. அனுமதி முழுமையாக இல்லாமல் கட்டத் துவங்கிவிட்டால் நட்டாற்றில் விடுவதில் கை தேர்ந்த அரசு இயந்திரம். கால தாமதம் ஏன் ஆகாது? பின் அதிகம் செலவு ஏன் ஆகாது? நம் பதிவுகளில்அம்பானிகளை திட்டும் போது அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் குறிப்பிட்டால் பதிவின் நடுநிலைக்கு நம்பகத்தன்மைக்கு சான்று ஆகும். நல்ல வஷயங்களை எழுதுபவர் முழுமையாகவும் எழுதவேண்டும் என்பதே எம் அவா.

  3. Since Mumbai Metropolitan Development Agency is one of the partners in Mumbai Metro,that Govt agency could have taken care of clearances from Govt departments.Moreover,do you mean to say that Anil Ambani would be sitting idle when he is not getting the clearances?Whatever may be the reasons,Anil Ambani can not fix the ticket rates unilaterally.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க