Thursday, September 23, 2021
முகப்பு கலை கவிதை சிரிப்பாய் சிரிக்கிறது நுங்கு !

சிரிப்பாய் சிரிக்கிறது நுங்கு !

-

.சி.யில் இருப்பவர்களுக்கு
எதார்த்தத்தின்
தட்பவெப்பம் மட்டுமல்ல
ஏழைகளின் கர்ப்பவெப்பமும்
தெரிவதில்லை!

nunguவெயில் நிக்க முடியல
சீக்கிரம்… சீக்கிரம் என்று
அய்ந்து நிமிட காத்திருப்பில்
ஆயிரம் கேள்வி கேட்கும் அவனுக்கு
அதுவே கதியான
அவள் வாழ்க்கை சுடுவதில்லை!

நுங்கின் ஈரம் காத்து
தலை ஆவியாகும்
அவள் கோலம் பார்த்தும்
‘ இதான் பகல் கொள்ளையா
பத்து ரூபாய்க்கு நாலுதானா ‘
என நுகர்வோனின்
வாங்கும் சக்தி
குலை, குலையாய் காய்க்கிறது!

“அய்யய்யோ… என்ன இப்புடி சொல்றீங்க
காய்ப்பு கிடையாது, டிமாண்டுங்க ”
பழிக்கஞ்சி பதைக்கிறாள்
நுங்கு விற்கும் பெண்.

ஒரு லிட்டர் கின்லேயை
இருபது ரூபாய்க்கு வாங்கி
நாக்கு மரத்துப் போகும் அவன்
சாமர்த்தியத்தில் உறைகிறான்,
“கொடுக்கலாம். கொடும்மா…
எல்லாம் எனக்கும் தெரியும்
இன்னும் ரெண்டு போடு!”

“ஏன்சார் நுங்குன்னா
ரோட்ல கெடக்கா
கழுத்தெலும்பு ஒடிய
நான் தூக்கி வந்தா
நீ இடுப்பெலும்ப ஒடிக்கிற மாதிரி
காய் கேக்குற!

அரக்கோணத்துல
ஆளுக்கொரு கை
ஆர்.பி.எஃப் எடுத்து,
இறங்குற ஸ்டேசன்ல
இன்னும் ரெண்டு போலீசு எடுத்து,
இப்ப இங்க நீ வேற,
மரத்துல பறிச்ச காய விட
என் கூடையில பறிச்ச காய்
கூடும் போல
இதுல நான் பகல் கொள்ளையா!
கட்டுப்படியாவாது சார்!
விழிநுங்கு வெடித்ததுபோல்
இமையோரம் சூடு கசிந்தது.

ரிலையன்ஸ் பிரெஷ் அம்பானியிடம்
வாயை மூடிக்கொண்டு
கேட்டதைக் கொடுத்தவன்,
தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம்
தத்துவம் பேசினான்,
“கிராமத்துல சிரிப்பா சிரிக்குது
இங்க டவுன்ல வந்து கிராக்கி பண்ணி
லாபம் பாக்குறீங்க
சரி ஒன்னாவது கொடு”!

“ஏன்சார், சொல்றேன்னு கோவிச்சுக்காத
இந்த முத்துன நுங்கோட மல்லுகெட்டலாம்
உன்னோட முடியல,
உனக்கு கட்டுப்படி ஆவலேன்னா ஆள வுடு!

ஆவடிக்கு தாண்டி அவனவன்
பிளாட்டு போட்டு நிலமே
காய்ஞ்சு கட்டாந்தரையா கெடக்கு,
ஏது பன மரம்?
இருக்கறதும் காய்ந்து மட்டக் கருகுது!
பன மரமே இல்ல!
பயிர் விளையாம நிலமே ரியல் எஸ்டேட்டா கெடக்கு,
ஊர் உலகம் தெரியாம
நீ வேற உயிர எடுக்குற? போய்யா!”
கையிலுள்ள இலைக்கொத்தால்
ஈ யோடு
அவனையும் ஓட்டினாள்!

இதயம் இல்லாதவனின்
மூளையைப் பார்த்து
உண்மையில்
நுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது!
_____________________

– துரை.சண்முகம்

 1. நல்ல கவிதை !

  “ஒரு லிட்டர் கின்லேயை இருபது ரூபாய்க்கு வாங்கி நாக்கு மரத்துப் போகும் அவன்..”
  “ரிலையன்பிரெஷ் அம்பானியிடம் வாயை மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்தவன்,தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம் தத்துவம் பேசினான்”

  ஒரளவு வசதி படைத்தவர்கள் அனைவரும் இம்மாதிரி சின்னஞ்சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 2. வசதி படைச்சவந்தான் பேரம் பேசுவான் மனவை சிவா நானே பனை மரம் ஏறிய அனுபவம் உண்டு கரணம் தப்பினால் மரணம் தான் 50 அடி உயர்த்துல தெரியாம மட்ட கருக்க புடுச்சுட்டா அருக்கும் வலிக்கும் நெஞ்சு நோகும் பத்து மர்த்துல ஏறி வெட்டுனா ஆயிரம் கிடைக்கும் அதுக்குதான் உயிரை பணயம் வைக்கிறார்கள் கணவாஙளே தயவு செய்து பேரம் பேசுரதுக்கு முன்னாடி இத சிந்திங்க

 3. நொங்கு, இளநீர் விற்பவர்களிடம் பேரம் பேசும் நாம் பூச்சி மருந்து அதிகம் சேர்க்கப்பட்ட கப்சியையும், அக்காமாலாவையும் வாங்கும் போது விலையை கூட கேட்காமல் ரூபாய் தாளை எடுத்து நீட்டுகிறோம்.

  இந்த குளிர்பானங்களை கொண்டு கக்குஸ் கழுவினால் பளபளவென்று சுத்தமாகும் என்று கேள்விப்பட்டு ஓசியில் கிடைத்த கொக்கா கோலாவை கொண்டு நானும் சுத்தம் செய்து பார்த்தேன்.

  ம்ஹூம்…. எதிர் பார்த்த ரிசல்ட் கிடைக்கவேயில்லை. ஆக ‘இதுகள்’, ‘அது’க்கு கூட லாயக்கில்லை.

  கே.எப்.சீ யில சூடா சிக்கன தின்னுட்டு சில்லுன்னு பெப்சியை குடிச்சா ( அவந்தான் தண்ணி குடுக்க மாட்டானே! )பல்லு வீணா போவது உறுதி. அடுத்த வாரம் அதே பில்டிங்குல ரெண்டாவது மாடியில இருக்கிற பல்லாஸ்பத்திரிக்கு செக்கப்புக்கு போக வேண்டியிருக்கும்.

  நான்கு அல்லது ஐந்து நொங்குகளுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சிறிது நன்னாரி சர்பத் எசன்ஸ், சில ஐஸ் கட்டிகள் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால் வெயிலுக்கு குளிர்ச்சியான நொங்கு சர்பத் ரெடி!

 4. அண்மையில் நடைபாதையோர கடையொன்றில் மாம்பழம் வாங்கினேன்.பழங்களை கூறு கட்டி விற்பனைக்கு வைத்திருந்தார் கடைக்கார பெண்மணி.ரூபாய் 50 க்கும் 100 க்கும் தனித்தனி கூறுகள் இருந்தன.நூறு ரூபாய் கூறு ஒன்று வாங்கினேன்.பழங்களை பையில் போட்டு தந்த அந்த பெண்மணி பின்புறம் கூடையிலிருந்து ஒரு பழத்தை எடுத்து கூடுதலாக பையில் போட்டார்.

  ”ஏன் ஆயா ஒரு பழம் கூடுதலா தர்ற” என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஏழை எளிய மக்களின் நேர்மைக்கு அருமையான எடுத்துக்காட்டு.

  ”அது வந்துப்பா,வர்றவுங்க அல்லாரும் பத்து இருபது கொறைச்சு கேக்குறாங்க.எதுனா கொறைச்சாதா வாங்குறாங்க.குறைக்கலன்னா யாவாரம் ஆவ மாட்டேன்னுது.அதுனால ஒரு பத்து ரூபா சேத்தேதா வெல சொல்றது.உன்னிய மாதிரி ஒர்த்தர்,ரெண்டு பேர் சொன்ன விலைக்கு வாங்கிக்கிட்டாங்கன்னா இவுங்கள ஏமாத்துறோமோ ன்னு தோணுதுப்பா,அதா ஒன்னு ரெண்டு பழம் அவுங்களுக்கு எஸ்ட்டாவா போட்டு வுடுறது

  • ஆயாவோட மனசு அம்பானி கம்பெனிகிட்ட எப்படி வரும்…சாலையோர வியாபாரிகிட்ட பேரம் வேண்டாமே..

 5. நம்ம திறமையை எல்லாம் ஏழை வியாபரிட்டதான் காமிப்போம், ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி எங்கள் ஊருக்கு தயிர் விக்க சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலேந்து நடந்தே வருவாங்க எல்லா விசேசத்துக்கும் அவங்கதான் எங்க ஊருல வாங்குவாங்க, அப்புறம் மினி பஸ் வந்ததுக்கு அப்புறம் தொடர்ந்துச்சு இப்பெல்லாம் HATSUN, AROKIYA 4.5 பால் எல்லாம் வந்து அவங்க வரத்து குறைஞ்சு போச்சு

 6. வெயில் கொடுமையை விடவும்நுங்கு விற்பவனுக்கு ஏற்படும் கொடுமை அதி கொடுமை ஐயா. அருமையான கவிதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க