Tuesday, June 15, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் மோடி - முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்

மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்

-

தி இந்து தலையங்கம்தோ இருப்பது, “தி இந்து” தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கக் கட்டுரை. இராஜஸ்தான் மாநில வசுந்தராராஜே அரசு தொழிலாளர் களுக்கு எதிராக கொடுத்திருக்கும் பரிந்துரை இந்தியா முழுவதற்கும் கொண்டுவரப்பட இருக்கிறது. சங்கம் வைக்கும் உரிமை, பணி நிரந்தர உரிமை என எல்லா உரிமைகளும் பறிக்கப்பட இருக்கிறது. நாமெல்லோரும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வீதியில் வீழ்த்தப்பட இருக்கிறோம்.

தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பது என்பது, தேர்தலுக்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டது. சென்ற காங்கிரசு அரசு மேற்கண்ட தாக்குதலை தொழிலாளர்கள் மத்தியில் திணிக்க முற்பட்ட போது தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது. தற்போது கார்ப்பரேட் முதலாளிகள் பயங்கரவாதி மோடி மூலம் இந்த திட்டங்களை அமுல்படுத்தத் துடிக்கின்றனர். தொழிலாளர் எதிர்ப்பை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்கு மோடிதான் சரியான நபர் என்று அவரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

கார்ப்பரேட்டுகளின் அடியாள் மோடி!

மோடி கார்ப்பரேட்டுகளின் அடியாள் என்பதற்கு பல சம்பவங்களை தேர்தலுக்கு முன்னால் வெளியிட்டுள்ளோம். முக்கியமாக மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலையும் அவர்கள் சொன்ன வாழ்த்துச் செய்திகளையும் பல ஆங்கிலப் பத்திரிகைகள் பட்டியல் போட்டு வெளியிட்டன. இந்தியன் எக்ஸ்பிரஸ் (மே 27, 2014 பக்கம் 13) வெளியிட்ட செய்தியின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

இந்திய முதலாளித்துவ நட்சத்திர திரள் மோடியை வாழ்த்தியது என்று குறிப்பிடும் அந்தச் செய்தியில் இவ்விழாவில் கலந்து கொண்ட கார்ப்பரேட் முதலாளிகள் சிலரது பெயரையும் அவர்களது வாழ்த்துச் செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. சி.ஐ.ஐ.யின் தலைவர் சந்திரஜித் பேனர்ஜி, ஃபிக்கியின் தலைவர் சித்தார்த் பிர்லா, மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் சி.எம்.டி. ஆனந்து மகேந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா, இரு மகன்கள் மற்றும் அவரது தாயார் கோகிலாபென் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் அசோக் இந்துஜா, எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவர் ஷஷி ரூய் மற்றும் சி.இ.ஓ. பிரசாந்த் ரூய், மிட்டல் சகோதரர்கள் சுனில், ராஜன், ராகேஷ், டி.எல்.எஃப் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சிங், ஹீரோ மோட்டாரின் எம்.டி. பவன் முஞ்சல், சுஸ்லான் குழுமத்தின் தலைவர் டுல்சீ டான்டி மற்றும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் ராஜ்குமார் தூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், அதன் சி.இ.ஓ., ஏர் ஏசியா இந்தியாவின் மிட்டு சான்டில்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களன்றி யெஸ் பேங்க் தலைவர் ரானா கபூர், நாஸ்காம் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஜீ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர், எஸ்ஸல் குழுமத்தின் சுபாஸ் சந்திரா கலந்து கொண்டனர். ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் சி.எம்.டி. சஜ்ஜன் ஜிண்டால் கலந்து கொண்டார்.

உப்பிலிருந்து சாஃப்ட்வேர் (ஸால்ட் டூ சாஃப்ட்வேர்) வரை எல்லாவற்றிலும் கால்பதித்துள்ள டாடா குழுமத்தின் ரத்தன் டாடா, அவரது வாரிசுகள், சைரஸ் மிஸ்திரி ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் வர இயலவில்லை என்று சொல்லி வாழ்த்து தெரிவித்துள்ளனர். யூ.பி. குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா, எச்.டி.எஃப்.சி. தலைவர் தீபக் பரேக் ஆகியோரும் வெளிநாட்டில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளனர். ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் குமாரமங்கலம் பிர்லாவும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கார்ப்பரேட் முதலாளிகளும் கலந்து கொள்கிறார்கள் என்றால் மோடி அரசின் மீது அவர்களின் எதிர்ப்பார்ப்பு எப்படிப்பட்டது என புரிந்து கொள்ளுங்கள்!

மோடி ஆட்சியின் கார்ப்பரேட் சேவை!

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

ஆட்சிக்கு வந்த மோடி நாளொரு தாக்குதலை உழைக்கும் மக்கள் மீது தொடுத்து வருகிறார். குறிப்பாக,

 • அதானி குழுமம் குஜராத்தில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் அமைத்துள்ளது. இதில் 8,800 மெகாவாட் மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அவசர அவசரமாக அழைத்து, இதற்கான ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்ய மோடி பாகிஸ்தான் பிரதமரை நிர்பந்தித்தார்.
 • இரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விட்டார். அதில் ஒரு பகுதியாக இரயில் கட்டணங்களை மிகப்பெரும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்க உத்தரவிட்டுள்ளார்.
 • 88,000 கோடி ரூபாய்க்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
 • பாதுகாப்புத் துறையில் 100% நேரடி அன்னிய மூலதனத்தை திறந்துவிட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.
 • டீசல் விலையை உயர்த்தி ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளார். சமையல் எரிவாயுவை 60% விலை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார்.
 • கார்ப்பரேட் முதலாளிகள் பல ஆயிரக் கணக்கில் நிலங்களை குவிக்கும் வகையில் சட்டத்திருத்ததை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
 • கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு வழங்கிய வரிச்சலுகையைவிட பல மடங்கு அதிகமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்.
 • காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களிலும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பான விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமைக்கு எதிராக காங்கிரசு, தெலுங்கு தேசம் அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!

முகேஷ் அம்பானி, கவுதம் அதானி
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி

மோடி அரசின் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வரலாறு உள்ளது. 1992-ல் காங்கிரசு அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைதான் இதன் தொடக்கம். அதற்கு பின்னர் வந்த வாஜ்பாயி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றெ தனி அமைச்சகம் உருவாக்கியது. 1420-க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய இருந்த தடையை நீக்கி சிறுதொழில், குறுந்தொழில்களை ஒழித்துக் கட்டியது. தற்போதைய மோடி அரசு என்பது பார்ப்பன பாசிசத்தின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ சர்வாதிகாரம்.

தற்போது மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதல்களை பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்காமலேயே கார்ப்பரேட் முதலாளிகளுடன் பேசி அமுல்படுத்துகிறார். பெயரளவிற்கான பாராளுமன்ற மரபையும் தூக்கியெந்துவிட்டு பச்சையாக பாசிசத்தை அமுல்படுத்தி வருகிறார். இதற்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் துணையாக நிற்கின்றனர். கொள்கை என்று இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

தொழிலாளர் உரிமைகளையும் உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத பாசிசத் தாக்குதலை மோடி அரசு ஒருபுறம் தொடுத்துக் கொண்டிருக்கும் போது, சங்கப்பரிவாரத்தின் பிற அமைப்புகளான சிவசேனா, பஜரங்கதள் போன்ற அமைப்புகள், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் சுரண்டலுக்கு காரணம் வடமாநிலத் தொழிலாளர்களும் அண்டை மாநிலத் தொழிலாளர்களும் தான் என்று பிரச்சனையை திசைத்திருப்பு கின்றனர். இனவெறி, மொழிவெறியைத் தூண்டிவிட்டு தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் பிளவுப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்.

ஆகையால், நமக்கான ஜனநாயகத்தை நாம்தான் படைத்துக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்தவரை திருப்பி அழைக்கும் அதிகாரம், ஆலைகளை நிர்வகிக்கும் அதிகாரம், தொழிற்பேட்டையை நிர்வகிக்கும் அதிகாரம், ஊழல் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை நாமே செய்து கொள்ளும் அதிகாரம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கமிட்டிகளுக்கு இருக்கும் வகையிலான மாற்று அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் இதனை உடனடியாக செய்வதன் மூலம் கார்ப்பரேட் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியும். உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.

வீதியில் இறங்கி போராடுவதே இன்று நம்முன் உள்ள தீர்வு!

மோடியின் இந்த பயங்கரவாதத் தாக்குதல் மொத்தமும் உழைக்கும் மக்கள் மீதும், குறிப்பாக தொழிலாளர்களாகிய நம்மீதுதான் தொடுக்கப்படுகிறது. இதனை நாம் உணர்ந்து வீதியில் இறங்கி மோடி அரசுக்கு எதிராக போராட முன்வரவேண்டும். மோடியுடன் சேர்ந்து கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளே இன்று ஆட்சி புரிகின்றனர். பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் பறிக்கப்பட்டுவிட்டது. இனி, உண்மையான ஜனநாயத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைப்பதற்காக போராடுவது ஒன்றே தீர்வு! அந்தவகையில் போராடும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைவீர்!

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட்டுகளின் அடியாள்,
பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்ட் மோடி அரசின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784

 1. இதற்கு ஓரே தீர்வு, அரசுத் தொழிற்சாலைகளில் எல்லாம் உற்பத்தியைப் பெருக்கி தொழிலாளத் தோழர்கள் சாதனை செய்ய வேண்டும். அரசுத் தொழில்கள்/வர்த்தகங்கள் லாப கரமாக இயங்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.

 2. நம் நாடு இனி கார்ப்பரேட்டுகளின் நாடு என்பதை மோடி பதவியேற்பு நிகழ்விலேயே தெரிகிறது. நம்மை கார்ப்பரேட்டுகள் தான் ஆளப்போகிறார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியது மோடி பதவியேற்ற நாள். மோடி கார்ப்பரேட்டுகளின் கருவி என்பதை மக்கள் உணரவேண்டும்.
  உழைக்கும் வர்க்கங்கள் என்ற வகையில் அணி திரள வேண்டும்.
  சந்தோஷ்.

 3. மோடி முதலாளிகளின் தலைவன்? தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்று கருதுகிறேன். நண்பன் அல்லது அடிமை என்று குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும்.
  சந்தோஷ்.

 4. மோடி தொழிலாளிகளின் பகைவன் என்பதில் மாற்று கருத்துகளுக்கு இடமில்லை !ஆனால் முதலாளிகளின் தலைவன் என்பது ஏற்புடையதல்ல . முதலாளிகளின் எடுபிடி என்பதே பொருத்தமாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க