Friday, April 3, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !

மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !

-

னியார் கல்வி – ஆங்கிலம் – தரம் என்பதோடு ஒன்றோடொன்று பிய்க்க முடியாத வஜ்ஜிரமாய் தனியார்மயத்தால் பட்டிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள் மக்கள். உலகமே “பூச்சி மருந்து”ன்னு சொன்னாலும் வெறப்பா நின்னு, ‘கோக், பெப்சி குடிக்கறதுதான் ஸ்டேட்டஸ், நம்பர் ஒன்!’ என்று ஸ்டெடியாய் நிற்பவர்கள்தான் பலர். சமூக அவலங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

எல்லாம் தெரிஞ்சவங்க
“எங்களுக்கேவா! நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்!”

இந்தியாவின் வல்லரசுக் கனவில் துண்டு போடும் வர்க்கத்திடம், போகும் பாதையை குறித்து நாம் எச்சரித்தால், “எங்களுக்கேவா! நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்!” என்று பிரமிப்பூட்டுகிறது.

“உலகம் கருவிகளால் உணரப்படக்கூடியது அல்ல, கருத்துக்களால் ஆராயப்பட வேண்டியது” என்று வாயெடுத்தால் “வந்துட்டாருப்பா! வள்ளுவரு!” என்று நக்கலடிக்கும் இந்த மாடர்ன் மண் குதிரைகளை அதே ரூட்டில் காலி செய்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள்.

சரவெடி ஆங்கிலம், ‘இண்டர்நெட்’, ‘ஹேன்ட்சம் லுக்’, நடை, உடை, பாவனைகளில் சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் “கேம்பஸ் இன்டர்வியூ” என்ற பெயரில் பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளார்கள் டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சவுமியா, புதுச்சேரியைச் சேர்ந்த பீனா இருவரும்.

வெறும் பாவனைகளிலேயே காலந்தள்ளும் தனியார் கல்வியின் தரத்தை தனியார்மயத்தின் அசல் பதிப்பு, பாவனைகளாலேயே வென்றுவிட்டது!

நடந்தது இதுதான்.

சவுமியா, சபானா இருவரும் சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்து, “நாங்கள் டெல்லியை தலைமையகமாகக் கொண்ட பிரபல சாப்ட்வேர் நிறுவனம், எங்களுடைய பெங்களூர், ஐதராபாத், சென்னை கிளைகளில் உங்களுக்கு உடனடி சொர்க்கம்” என்று சொல்லி மாணவர்களிடம் ரொக்கம் ரூ 1,500 -ஐ கறந்துள்ளனர். கடைசியாக, ஒரு கல்லூரியில் சந்தேகம் வந்து சில மாணவர்கள் புகார் செய்ய இப்போது பிடிபட்டுள்ளனர்.

“எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை” என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் இருவரும்.

கட்டடம் கட்டிய திருடனின் கல்லாவுக்கு பாதகமில்லை, கட்டம் கட்டிய திருடர்கள்தான் மாட்டிக் கொண்டார்கள்! பாதிக்கப்பட்டதோ வழக்கம்போல மாணவர்கள்.

சவுமியா, சபானா
‘கவர்மென்ட் காலேஜ்லாம் வேஸ்ட் சார்! புவர் மேனேஜ்மென்ட், நோ குவாலிட்டி’ என்று இலக்கணம் பேசும் நடுத்தர வர்க்கத்திற்கு பாக்கெட் பணத்தை காப்பாற்றக் கூட உதவவில்லை இந்த தரமான தனியார்மயக் கல்வி. (படம் : நன்றி தினகரன்)

இதில் பணத்தை பறிகொடுத்த மாணவர்களின் அறியாமை ஒருபக்கம் இருக்கட்டும். ‘நாங்கல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட், டிசிப்ளின், கேரன்ட்டி, சேஃப்’ என்று பிட்டு போடும் தனியார் கல்லூரிகளின் யோக்யதை இவ்வளவுதான் என்பது தெரிய வந்துள்ளது.

வெளியிலிருந்து கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டு எவன் வந்தாலும், யார்? உண்மையா? போலியா? என்ற எந்த விசாரணையும் இன்றி, ‘எங்க காலேஜில் படிச்சா உடனே நேரா சொர்க்கம்தான்’ என்று வழிப்பறி செய்யும் இந்த மேனேஜ்மென்ட்தான் ‘தரமான’ தனியாராம்!

‘கவர்மென்ட் காலேஜ்லாம் வேஸ்ட் சார்! புவர் மேனேஜ்மென்ட், நோ குவாலிட்டி’ என்று இலக்கணம் பேசும் நடுத்தர வர்க்கத்திற்கு பாக்கெட் பணத்தை காப்பாற்றக் கூட உதவவில்லை இந்த தரமான தனியார்மயக் கல்வி.

தனியார் கல்லூரி முதலாளியிடம் கட்டு கட்டாக ஏமாந்துவிட்டு “மச்சான்! என்னமா ஏமாத்திட்டாடா!” என்று மெட்டு போட்டு ராகம் வேற!

ஏதுடா, எங்கேந்தோ வந்து ‘நாளைலேந்து உங்க வாழ்க்கையே டாப்புல’ங்குறானே இதுக்கு அடிப்படை இருக்கா? என்று நடைமுறையிலேந்து ஆராய்ந்து பார்க்காத இந்த மறுகாலனிய மசக்கைதான், எங்கேந்தோ வந்து ஒரு வெளிநாட்டு கம்பெனி, ‘நாளைலேந்து நாட்டை வல்லரசாக்கப்போறேன், வளர்ச்சியாக்கப்போறேன்’, என்று மோடி சைசுக்கு மூட்டையை அவிழ்த்து விட்டாலும் சுத்த மாங்கா மடையனாக்கும் ஆரம்பம்.

வெறும் சாஃப்ட்வேரையும், இ.மெயிலையும் காட்டியே ஏமாற்றும் அளவுக்கு ஒரு உள்ளீடற்ற மாங்கா மடையனை உருவாக்குவதுதான் தனியார் கல்லூரிகளின் தரம். கோபம் வந்தா கொடுத்த காசுக்கு, ஏவிவிட்ட கல்லூரி முதலாளிகளிடம் காட்டுங்கள் பார்க்கலாம்.

பெங்களூரு ஆர்ப்பாட்டம்
பெங்களூரு தனியார் பள்ளியில் சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதை எதிர்த்து போராடும் பெற்றோர்

தனியார் மயத்தின் பரிதாபம், கேலிக்கூத்து ஒருபக்கம் எனில், பெங்களூர் தனியார்பள்ளியில் நடந்திருக்கும் இன்னொரு சம்பவமோ சோகத்தையும், கேட்பவனுக்கு ஆத்திரத்தையும் வரவழைக்கக் கூடியது.

பெங்களூர், மாரத்தஹள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமியை அதே பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரும், செக்யூரிட்டிகாரரும் சேர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்… இந்தத் தகவல் கூட பெற்றோர்களுக்கு தானாகவே தெரியவந்துள்ளது. தகவல் தெரிந்தும் பள்ளி நிர்வாகம் குற்றவாளிகளை போலீசில் ஒப்படைக்காமல் ‘பள்ளியின் நற்பெயருக்கு’ களங்கம் வராமல் பாதுகாத்துள்ளது. இந்த தனியார் பள்ளியின் தரத்தை நம்பி ரூ 1.95 லட்சம் நன்கொடையாகத் தந்து, தன் மகளை இதில் சேர்த்திருக்கிறார்கள் பெற்றோர்கள். தமிழகத்திலும் நற்பெயர் கட்டணக் கொள்ளைக்கு பஞ்சமில்லை!

‘அரசாங்கப் பள்ளிக்கூடம்னா கண்ட கண்ட பசங்களும் வருது, கெட்ட பழக்கம் வரும், டிசிப்ளின், டீசென்ட் இருக்காது’ என்று நடுத்தரவர்க்கம் தனியார் பள்ளிகளை தரமானதாக கருதி பிள்ளைகளை இப்படி பாழும் கிணற்றில் தள்ளுகிறது.

கண்ட கண்ட காலிகளும், ரவுடிகளும், திருடர்களும் பள்ளி முதலாளிகளாக இருக்கும்போது, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத நடுத்தரவர்க்கம், கடைசியில் பட்டு அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது!

“அரசாங்கப் பள்ளியில் அனைவருமே ஒழுக்கமானவர்களா?” என்று கேட்கலாம். சமுதாயத்தையே தனியார்மயம் வன்புணர்ச்சி செய்வதன் நீட்சி அங்கும் உண்டுதான்! அங்காவது கேட்டைத் தாண்டிப் போய் கேட்க நாதியுண்டு, தனியார் பள்ளி முதலைகளோ மொத்த குற்றத்தையும் மூடி மறைத்து விடுகிறார்கள், செய்திகளில் கசிவது கொஞ்சம்தான்.

சென்னை ஜேப்பியார் கல்லூரி மாணவி, வேல்டெக் மாணவி, திருவொற்றியூர் தனியார்பள்ளி மாணவி இப்படி தமிழகமெங்கும் தனியார் கல்விக் கூடங்களில், நாமக்கல் உண்டு உறைவிட பள்ளிகளில் பல வடிவங்களில் மாணவர்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

உங்கள் பணத்துக்கு அல்ல உயிருக்கே கேரண்டி கிடையாது என்பதுதான் அன்றாடம் தனியார்மயம் உணர்த்திடும் உண்மைகள்! அனுபவத்தில் புரிந்துகொண்ட கர்நாடக மக்கள் தனியார்பள்ளியை தம் கையால் சூறையாடி இருக்கிறார்கள்.

‘வேட்டி’ பிரச்சனைக்கு நாள் கணக்கில் கிழியும் தமிழகமே, சீருடையணிந்து பள்ளிக்குப் போகும் நம் பிள்ளைகளை சீரழிக்கும் தனியார்மயத்திற்கு எதிராக உன் மானம் துளிர்ப்பது எப்போது?

– துரை.சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. அரைவேக்காடாக இருக்கிறோம் என்கிற புரிதலே ஞானத்தின் துவக்கம்…..!!

  2. நடுத்தர வர்க்க தீக் கோழி மண்ணுக்குல் தலையை புதைக்கும் கதை ஓ இதுதானா ?

Comments are closed.