Sunday, May 26, 2024
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்சதுரங்க வேட்டை: ஏமாற்றுக்காரன் ரசிக்கப்படுவது ஏன் ?

சதுரங்க வேட்டை: ஏமாற்றுக்காரன் ரசிக்கப்படுவது ஏன் ?

-

sathuranga-vettail 1துரங்க போட்டிகளில் பல உத்திகள், பாணிகள் உண்டென்றாலும் பொதுவில் தாக்குதல், தற்காப்பு என இரண்டாகப் பிரிக்கலாம். எந்தக் களமாக இருந்தாலும், சண்டை எனப்படுவது தன்னை பாதுகாத்துக் கொண்டு எதிரியை வீழ்த்துவதுதான். ஆனால் சதுரங்கத்தில் ஒரே அளவு படை, மீற முடியாத விதிமுறை காரணமாக தாக்குதல் பாணிதான் பலரும் ஆட விரும்பும் முறை.

தற்காப்பு என்பது எதிரியின் ஆற்றலுக்கு பயந்து பாதுகாப்பாக ஆடுவது என்ற வகையிலும் இருக்கும். ஆனால் அதே பயம் இருப்பதாக காட்டிக் கொண்டு எதிராளியை திசைதிருப்புவது வேறு வகை.

இந்த உளவியலின் படி எதிராளியை தாக்கும்படி ஆசை காட்டி, உள்ளிழுத்து, தவற வைத்து இறுதியில் ராஜாவிற்கு குறி வைத்து ஆட்டத்தை வெல்ல வேண்டும். இந்தக் கூற்றின் பொருளை போட்டியில் ஒரு எதிராளிக்கு உணர வைப்பது கடினம். ஒரு கணத்திலாவது இந்த உளவியல் தாக்குதலில் எதிராளியை விழ வைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம்.

சதுரங்க வேட்டைக் கலையில் கொட்டை போட்ட நாயகன் காந்தி பாபு அவர்களில் ஒருவன். பாதையோர மூணு சீட்டிலிருந்து, கோபுரக் கலச ரைஸ் புல்லிங் வரை அவனது ஏமாற்றுக் கலையின் ‘படைப்புத்திறனுக்கு’ ஏமாறாதவர்கள் எவருமில்லை. படத்தைப் பார்க்கும் மக்களை எடுத்துக் கொண்டாலும் ரசிக்காதவர் மிச்சமில்லை.

பழங்கால சந்தன வண்ண செவ்வியல் வடிவமைப்பு அட்டைகளில் தனித்தனி அத்தியாயங்களாக காட்டப்படுகிறது காந்தியின் யாத்திரை. அட்டையில் பழமை இருந்தாலும் சமகால நவீன உலகில்தான் காந்தி பாபுவின் பயணம். காசு தேடும் இந்த ஓட்டத்தில் அவனோடு இறுதி வரை ஒரு சிலரைத் தவிர்த்துவிட்டு பணம் தவிர யாரும் உடன் வருவதில்லை – அவனும் விடுவதில்லை – அவர்களும் விரும்புவது இல்லை.

மண்ணுள்ளி பாம்பு, மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, லில்லி புட், கடன் வாங்கிக் கொடுப்பது, போலீசு – நீதிமன்றங்களை விலைக்கு வாங்குவது, எதிரிகளால் அனுப்பப்படும் ரவுடி கும்பலை வியூகத்தால் முறியடிப்பது, அட்சயை திரிதியை, ரைஸ் புல்லிங், இடையில் அவன் அனாதையான முன்காலக் கதை என்று போகிறது பயணம். இறுதியில் ராசிபுரம் மலைப்பகுதியின் குடிசையில் மனைவி கைக்குழந்தையோடு ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற்றுக் கொள்கிறான் காந்தி பாபு. படைப்பைப் பொறுத்தவரை அது விருப்ப ஓய்வா இல்லை தற்காலிக ஓய்வா என்பதில் தெளிவில்லை.

அவனிடம் வேலை தேடி வரும் ஏழைப் பெண் பானுவிடம், ஏமாற்றுக்காரனாக மாறிய கதையை கூறுகிறான் காந்தி பாபு. அதையும் அனுதாபத்திற்காக கூறவில்லையாம். சித்திரவதை எடுபடாத போது, “ஏன் நீ எப்படி பணத்தாசை பிடித்து அலைகிறாய்?” என்று காவல் துறை உதவி ஆணையர் கேட்கிறார். “ பசி, காசில்லாமை, அம்மாவின் பிணத்தைக் கூட புதைக்க முடியாமை…இதெல்லாம் அனுபவித்து பார்த்திருக்கிறீர்களா” என்று வலியை மீறிய சீற்றத்துடன் கேட்கிறான்.

அவனது நடிப்பையும், நம்ப வைக்கும் திறமையையும் அறிந்த அதிகாரி கூட, அந்தக் கேள்வி நடிப்பல்ல என்று கணநேரம் திகைத்து போகிறார். அதே அதிகாரியிடம், ஆரம்பத்தில் தான் ஏன் அனாதை ஆனேன் என்று அவன் கூறவில்லை. தப்பு செய்யும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நீதியை கதையாக சொல்வார்கள் என்று போலீசு அவனது கதையை புறந்தள்ளும் என்கிறான்.

அவன் மட்டுமல்ல பிறப்பிலேயே பணக்காரராக பிறக்காத அம்பானி, பில்கேட்ஸ், புரட்சித் தலைவர், கண்டக்டர் ரஜினிகாந்திற்கும் கூட ஆரம்பத்தில் இப்படி ஒரு இல்லாதவனின் பின்கதை இருக்கத்தான் செய்கிறது. இடையில் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து இறுதியில் சட்டத்தையே மண்டியிட வைத்தது அம்பானியின் சாம்ராஜ்ஜியம். பில்கேட்சோ போட்டிகளின் விதிமுறைகளை மறுத்து கள்ளாட்டம் ஆடி, ஏகபோகத்தை நிறுவுகிறார். திராவிட இயக்கமும், வெண்திரையும் தந்த பிரபலத்தை வைத்து தனது கட்சியை காலடியில் விழ வைக்கிறார் எம்ஜிஆர். திரைத்துறை முதலாளிகளோ பிளாக்கில் சுருட்டிய காசு உதவியுடன், ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கினார்கள்.

எனினும் இவையெல்லாம் ஏமாற்று என்பதாக அல்லாமல், ஏழையின் சொல் அம்பலம் ஏறிய சாதனைகளாகவே வியந்தோதப்படுகின்றன. ஏழ்மைக்கு நேர்மையான தீர்வு கண்கூடாக கிடைக்காத போது ஏமாற்று வித்தைகள் ஏணிப்படி முன்னேற்றமாக ஏக்கத்துடன் ரசிக்கப்படுகின்றன.

எனினும் காந்திபாபு எப்படி ஒரு மோசடிப் பேர்வழியாக மாறினான், என்று அதற்கொரு நியாயத்தை வைக்க முனைந்த இயக்குநரின் நோக்கம் இங்கே நிறைவேறியிருக்கிறதா? இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான விடைதான் நமக்கு முக்கியம்.

படைப்பாளியின் உலகக் கண்ணோட்டத்திலிருந்து கருக்கொள்ளும் ஒரு கதை, எழுதப்படும் போது தன் போக்கில் இயல்பாக வளர்ந்து, எழுத்தாளன் யோசித்திராத களங்களுக்கெல்லாம் செல்வது உண்மையே. அதுவே சினிமாக் கலை என்றால், வர்த்தக நலனின் வரம்புகளால் உணர்ச்சிகளையும், நியாயங்களையும், வழமைகளையும் அல்லது அற்பவாத உணர்ச்சிகளை முன்வைத்து ‘வழக்கம்’ போல் சுபம் போட வேண்டியிருக்கிறது.

இரண்டையும் கணக்கில் கொண்டாலும் இந்த கதையின் ஆன்மா என்ன? ரசிகனின் இதயத்தை தொடும் சூட்சுமம் எது? நாமறிந்த மோசடி சம்பவங்களை நாமறியாத முறையில் ஒரு த்ரில்லரின் மயக்கத்தில் தாலாட்டுவதால்தான் பார்வையாளர்கள் கட்டுண்டு போகிறார்கள்.

விதவிதமான ஏமாற்று கதைகளில் காந்தி பாபுவின் அசாத்திய திறமையை வியக்கும் ரசிகனுக்கு அனாதை முன்கதை சுருக்கமோ, விளக்கமோ தேவையில்லை. அறுசுவை விருந்தில் வயிறு புடைக்க புசித்து விட்டு களைப்புடன் வரும் ஒருவனிடம் பசி குறித்து என்னதான் அருமையாக, ஆற்றாமையாக, கண்ணீரை வரவழைக்கும் தேர்ச்சியுடன் கதை சொன்னாலும் அது எடுபடுமா என்ன?

உழைப்பினால் முன்னேற முடியாது, அடுத்தவன் உழைப்பை அபகரித்துத்தான் பணக்காரனாக முடியும். இதுவே காந்தி பாபுவின் வாழ்க்கை நீதி. அவனது நீதியின் பயணம் நிதி தேடும் கலையில் பணத்தாசை கொண்டோரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாமென்பதாக நிலை பெறுகிறது.

இயக்குநர் முதலில் காந்தி பாபுவின் அசாத்திய திறமை கொண்ட ஏமாற்றுக் கதைகளை உருவாக்கியிருக்கலாம். பிறகு அதற்கோரு தமிழ் சினிமா நீதிப்படி உபதேச காட்சிகளை வலிந்து சேர்த்திருக்க வேண்டும். இந்த ஒட்டுதல் இங்கே எடுபட்டிருந்தால் மோசடி சம்பவங்களை பார்வையாளர்கள் ரசித்திருக்க மாட்டார்கள். ஏழை ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையில் மோசடிக்காரனாக மாறுவது நடக்காத ஒன்றல்ல. ஆனால் அந்த சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்த்தும் பொருட்டோ, விரிக்கும் பொருட்டோ இந்தக் கதை தோன்றவில்லை.

படத்தில் வரும் அனேக ஏமாற்றுக் கிளைக்கதைகள் குறித்து வினவில் நிறைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதைப் படித்திருக்கும் தேர்ந்த வாசகர்கள் படம் பார்க்கும் போது ஒன்றிப் போனாலும் புரிந்து கொள்ள கொஞ்சம் முயல வேண்டும்.

படம் முழுக்க காந்தி பாபுவின் மோசடிகள் புதுமை என்ற அளவில் மட்டுமல்ல, அவனது பணச்சுருட்டுக் கலை தோற்றுவிக்கும் பொன்மொழிகளும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. காசு வாங்க கருணையை எதிர்பார்க்காதே – ஆசையைக் கிளப்பு, குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யும் எந்த தவறும் குற்றமல்ல, ஏமாற்றுபவனுக்கு ஏமாற்றுவபன் குரு, அந்தக் கலையை சொல்லிக் கொடுத்திருக்கிறான், பொய்யில் கொஞ்சம் உண்மை கலந்திருந்தால்தான் நம்பத் தோன்றும் என்று அவை காட்சிகளின் விறுவிறுப்பை ‘காரண காரிய’ அறிவால் அதிகப்படுத்துகின்றன. உண்மையில் இந்தக் காரண காரிய தர்க்க அறிவின் ஊற்று மூலம் தனிநபர் காரியவாதமா இல்லை சமூகநலனை உணர்த்தும் அறமா? ரசிகர்களோ இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்ட சிரிப்புணர்ச்சியிலும், மோசடி வித்தையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். விசயம் தெரிந்தவர்களோ அந்த வசனங்களின் கூரிய முரண்பாட்டில் கொஞ்சம் மயங்கவும் செய்கிறார்கள்.

இதையே திருப்பி பார்க்கலாம். மோசடிக்காரனது வாதங்களை கச்சிதமாக முன்வைக்கும் இயக்குநர் அவனால் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பை எந்தக் கோணத்திலிருந்தும் காட்டவில்லை. அவர்கள் அனைவரும் பேராசை எனும் சுயநலத்திற்கு தண்டிக்கப்படுவதில் தவறே இல்லை. இதுவே காந்திபாபுவின் வாதம்.

ஈமு கோழி பண்ணையில் ஈர்க்கப்பட்ட விவசாயிகளோ இல்லை திண்டிவனம் நகைக்கடையில் பாதிவிலைக்குத் தங்கம் வாங்க குவிந்த மக்களோ, மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் இணைந்து கழிப்பறை நீரை அமெரிக்க மருந்து நீராக விற்ற திருப்பூர் இளைஞர்களோ பேராசைக்கு பலியாவதை எப்படி பார்ப்பது?

sathuranga-vettail 2உழைத்து முன்னேறலாம், படித்து சாதிக்கலாம், 2020-ல் இந்தியா வல்லரசு என்றெல்லாம் கூவித் தெரியும் அப்துல் கலாமின் எதிர்ப்பதம்தான் ஆசையால் மக்கள் ஏமாந்ததாக உபதேசிப்பது. இதனால் மக்களிடையே பேராசை இல்லையா, ஏமாறுவது சரியா என்பவர்கள் ஆசையை ஆட்டுவிப்பது மனநிலையா, வாழ்க்கை சூழலா என்று ஆராய வேண்டும்.

மதுரை கிரானைட் அதிபர் மூவேந்தர் இலாபம் பார்ப்பதற்காக அல்ல, கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற ஏதாவது மாய சக்தி கிடைக்காதா என்று கோபுர கலச ரைஸ் புல்லிங் மோசடியில் ஏமாறுகிறார். செட்டியாரோ வசதியான வாழ்க்கை கிடைத்தும் கூடுதல் பணம் அதுவும் உழைக்காமல் கிடைத்தால் நல்லது என்று குறுக்கு வழியில் போனதால் மண்ணுள்ளி பாம்பு மோசடியில் ஏமாறுகிறார். இவர்களும் மக்களும் ஒரே ஆசையால்தான் ஏமாறுகிறார்கள் என்றால் உண்மையான ஏமாளிகள் நாம்தான்.

இப்போது டாஸ்மாக்கில் மொய்யெழுதும் தொழிலாளிகள் முன்பு சுரண்டல் லாட்டரிக்கும் சேர்த்தே எழுதினார்கள். கோடியில் ஒருவனுக்கு இலட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கானோர் லாட்டரி வாங்குவது எதற்காக? இருக்கும் வாழ்க்கையில் இல்லாமையின் பிரச்சினைகள் வளர்வதற்கேற்ப லாட்டரி போன்ற மாயைகள் சட்டென்று கவ்விக் கொள்கின்றன.

அடுத்து ஏழையாகவே இருந்தாலும் சுற்றியிருக்கும் நுகர்வு கலாச்சார வாழ்க்கையின் ஆசைகள் பேதமின்றி அனைவரையும் ஆட்கொள்கிறது. கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் ஏதோ அற்புதம் நடந்து வாழ்க்கை மாறாதா என்று அவர்கள் நினைக்கத்தான் செய்வார்கள். ஈமு கோழியை வாங்கும் விவசாயிகள் எல்லாம் விவசாயத்தில் இலாபம் பார்த்தவர்களா என்ன? இல்லை திருப்பூர் இளைஞர்கள் எம்எல்எம்மில் அலைந்து திரிந்து ஆள்பிடித்து சேர்ப்பதற்கு உழைக்கவில்லையா? அப்படி உழைத்தால் கோல்டு, டயமண்ட், பிளாட்டினம், எம்டியாக பறக்கலாம் என்று காந்திபாபு குறிவைத்து அடிக்கும் போது நாளை கிடைக்க இருக்கும் கனவு வாழ்க்கை, அவர்களை அடிபணியச் செய்கிறது.

ஆனால் ஏமாற்றுதலை கலை போலச் செய்யும் காந்தி பாபு, திருந்துவதற்கான காரணங்களை மட்டும் இயக்குநர் தமிழ் சினிமா மரபுப்படி முன் வைக்கிறார். அவன் அடிபட்டு மிதிபட்டு, குழந்தை குட்டி என்று ஆன பிறகுதான் மோசடி கூடாது என்ற போதி தத்துவத்தை கண்டடைகிறான். அதையும் கருத்து சார்ந்து அல்ல, உணர்ச்சி சார்ந்தே பார்க்கிறான்.

தனது சொந்த வாழ்க்கை இன்னல்கள் காரணமாக திருந்துபவன், மக்களின் துன்ப துயரத்தை பார்த்து திருந்தவில்லை. உண்மையில் இது திருந்துதலா இல்லை திருந்துதலின் பெயரில் மற்றுமொரு மோசடியா?

மற்றவரது நலனை ஏறி மிதிக்கலாம் என்று ஒருவனின் சுயநலம் குற்ற உணர்வின்றி முடிவு செய்யும் போது, அவனது சுயநலம் குற்ற உணர்வோடு திருந்துவது மட்டும் எப்படி சாத்தியம்? குற்ற உணர்வின்றி செய்யும் எதுவுமே குற்றமில்லை என்றால் இந்த திருந்துதலில் மட்டும் நேர்மை எப்படி இருக்கும்? ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்  குற்றம் குறித்த அளவுகோலும், தண்டனையும் அவர்களது நலனுக்கேற்ப செயல்படுவதால்தான் பொது வாழ்க்கையில் மோசடி செய்யும் கனவான்களிடம் குற்ற உணர்வின் தடயத்தைக் கூட காண முடியாது.

ஆனால் மக்களைப் பொறுத்தவரை சமூக உறவின் நெறிமுறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதால்தான் பெரும்பான்மை சமூகம் ‘குற்றமோ’ இல்லை கலகமோ செய்யாமல் விதியே வாழ்க்கை என்று ஓடுகிறது. இதுதான் காந்தி பாபுவின் பலமே அன்றி பேராசை பெருநஷ்டம் என்பதாக காட்டப்படும் மக்களின் மனப்பாங்கு அல்ல. சமூக விழுமியங்கள் எனப்படுபவை தனி மனிதனின் பௌதீக சுயத்தை பாதுகாக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை. பெரும்பான்மை மக்கள் அந்த பாதுகாப்பை மேற்கொள்ளும் அரசியல் அமைப்பில் பங்கேற்கும் போது குற்ற உணர்வு மட்டுமல்ல, குற்றமும், தண்டனையும் கூட அருகிப் போகும் அல்லது உள்ளது உள்ளபடி அமுல்படுத்தப்படும். அதைத்தான் புதிய (மக்கள்) ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.

மக்களிடம் இருக்கும் நேர்மைக்கு அஞ்சியே, தான் சொல்லும் ஒரு பொய்யில் கொஞ்சம் உண்மை இருக்கும் என்கிறான் காந்தி பாபு. ஆனால் முழுப் பொய்யை விட அரை உண்மை ஆபத்தானவை. காந்தி பாபு மட்டுமல்ல, பின் நவீனத்துவம், ஜே கிருஷ்ணமூர்த்தி – ஓஷோ போன்ற நவீன குருக்கள், ஓட்டுக் கட்சிகள், கார்ப்பரேட் ஊடகங்கள் அனைவரும் கூட அரை உண்மைகளை பொய்யோடு கலந்துதான் கடை விரிக்கிறார்கள்.

இவர்களது கருத்துக்களை ஒரு வாழ்வியல் போக்கோடு பொருத்திப் பார்த்தாலே அவற்றின் இயலாமையும், போதாமையும் மட்டுமல்ல மோசடியும் வெளிப்பட்டுவிடும். ஒரு விசயத்தை ஏதோ சில முன்முடிவுகளோடு அணுகினால் அதுதான் ஆடம்பரம், அப்படி இல்லாமல் பார்ப்பதே எளிமை என்று ஜேகே பேசும் போது வார்த்தைகளை ரசிக்கும் அறிஞர்களும் நடுத்தர வர்க்கமும் கேள்வியின்றி சரணடைகிறார்கள். ஆனால் அநீதியான முறையில் வேலை இழக்கும் ஒரு தொழிலாளி தனது முதலாளி குறித்து எந்த முன்முடிவும் இல்லாமல் ‘எளிமையாக’ அணுக முடியுமா?

ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகள் மக்களின் துன்ப துயரம் புரட்சியாக வெடித்து விடாமல் இருக்கும் பொருட்டு ஆன்மீகத் தணிப்பு வேலைகளை திணிக்கிறார்கள். அதன் பொருட்டே வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்று ஆரம்பித்து அதை தீர்க்கும் வழியை தவிர்த்துவிட்டு இருப்பதை வைத்து வாழுங்கள் என்று ஆறுதல் தருகிறார்கள். இப்படித்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் எனும் அரதப் பழசான வழக்கு பல நூறு முறைகளில் புதிது புதிதாக உற்பத்தி செய்யப்படுகிறது.

காந்தி பாபுவும் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டே நம்பிக்கையூட்டும்படி பேசி ஏமாற்றுகிறான். அறிஞர்களின் ஏமாற்றுத் தத்தவம், ஆன்மீக சுரண்டலை சப்தம் போடாமல் செய்கிறது என்றால் காந்தி பாபுவின் சுரண்டல், பணம் எனும் பொருளாதாரம் சார்ந்து மறைவாக செய்கிறது.

ஏமாற்றுவதற்கு கருணையை அல்ல, ஆசையைத் தூண்ட வேண்டும் என்கிறான் காந்தி பாபு. ஆசையும், கருணையும் கூட வர்க்கங்களுக்கேற்ப பொருள் விளக்கத்திலும் செயல் நடைமுறையிலும் எண்ணிறந்த முறையில் வேறுபடுகின்றது. ஏழைகள் அவலத்திலும் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள். பணக்காரர்கள் ஆடம்பரத்தின் விரயத்திலும் மேலும் மேலும் வசதிகளை பெருக்குவார்கள். காந்தி பாபு போன்ற மகா மோசடிக்காரர்களுக்கும் கருணை வழங்க பானு போன்ற ஏழைகள் காத்திருப்பார்கள். அதே ஏழைகளை கருணையின்றி சுரண்ட முதலாளிகள் மட்டுமல்ல, காந்தி பாபுவும் எப்போதும் முயல்கிறார்கள்.

இது ஏதோ சிறிய வயதில் அனாதையாக்கப்பட்ட காந்தி பாபுவின் எதிர் வினை என்கிறார் இயக்குநர். காவல் துறை ஆணையரும் இயற்கை சமநிலை குலைவு என்று வருத்தப்படுகிறார். அப்படிப் பார்த்தால் அயோத்திக் குப்பம் வீரமணியும், ஆட்டோ சங்கரும், தாவுத் இப்ராஹிமும், சர்வதேச மாஃபியாக்களும் இந்த சமநிலை குலைவின் விளைவுகளா என்ன?

ஏழையின் சம நிலை குலைவு ஒரு கலகம் எனும் நடவடிக்கையைத் தாண்டி போவதில்லை. சான்றாக லண்டன், தென் அமெரிக்க கலகங்கள். அந்த கலகங்களுக்கு தண்டனையாக வாழ்க்கை முழுவதும் வேலை கிடைக்காமல் நலிந்து சாகும் அளவுக்கு இங்கிலாந்து அரசு அவர்களை தண்டித்திருக்கிறது. இந்த உண்மையான கலகம்தான் தாங்க முடியாத சுரண்டலின் விளைவுகள். இதுவே ஒரு தனிநபரான ஏழையிடம் ஏற்பட்டால் அது கொலை, தற்கொலை, சின்ன திருட்டு, கோபம், அடிதடி என்பதற்கு மேல் தாண்டாது. மாறாக அது மாபெரும் சாம்ராஜ்ஜியம் போல கட்டியமைக்கப்படுகிறது என்றால் அது ஏழையின் கலகம் அல்ல. நிறுவனமயமான ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின் அங்கத்தினன் மட்டுமே அப்படி விரிந்த திருட்டு சாம்ராஜ்ஜியத்தை நடத்த முடியும். அவன் ஆரம்பத்தில் ஏழையாக இருந்தாலும் கூட.

மேலும் சிறு வயதில் திருட்டு, அடிதடி, ரவுடி என்று மாறும் ஏழைச் சிறுவர்கள், விரைவிலேயே எந்த மதிப்பீடுகளும் அற்ற முழுக் குற்றவாளியின் மனதை அடைந்து விடுவார்கள். உழைக்காமல்  பிழைப்பது, உல்லாசமாக வாழ்வது என அவர்களது மனப்பாங்கே மாறிவிடும். அவர்களெல்லாம் இன்றும் சின்ன வயது துக்கங்களுக்காகத்தான் தொழில் செய்கிறார்கள் என்றால் துக்கம் என்ற வார்த்தையை நாம் அழிக்க வேண்டியிருக்கும்.

ஆக குற்றம், ஏமாற்று, திருந்துதல், குற்ற உணர்வு, மக்களோடு உறவு என்ற முழுமையில் ஒரு மோசடிக்காரனின் எதிர்மறைப் பாத்திரம் மட்டுமே இங்கு கவர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. பொதுவில் எதிர்மறை நாயகனது பாத்திரங்களுக்கு வரவேற்பு இருக்கும். அனைத்தையும் எதிர்த்து பேசும் அவர்களின் ‘கலக’ எதிர்ப்புக்கு கலகம் செய்ய விரும்பியும், வாய்ப்பற்ற மக்கள் ஆதரிக்கவே செய்வார்கள். ஆனால் காந்தி பாபு இங்கே மக்களை ஏமாற்றுவது குறித்து மட்டும் பேசுகிறான். தன்னை நியாயப்படுத்துவதற்காகவே இயக்குநரின் உதவியால் தத்துவம் பேசுகிறான்.

எம்.ஆர்.ராதா அனைத்து படங்களிலும் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தாலும் அவரது நோக்கம் பொதுவில் மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம், பணக்காரர்களை எதிர்ப்பதாக இருந்தது. மேலும் திராவிட இயக்கம், பெரியார் போராட்டங்களோடு இணைந்திருந்ததால் மட்டுமே ராதாவின் கலை வாழ்வு அர்த்தமுள்ள எதிர்மறை நாயகனாக வெளிப்பட்டது.

அஜித் நடித்த மங்காத்தா படம் கூட எதிர்மறை நாயகனை துதிக்கும் படம்தான். அதையும் சதுரங்க வேட்டையையும் பிரிப்பது இங்கே உண்மை சம்பவங்கள் மற்றும் அரசியல் குறியீடுகள் அதிகம் வருகின்றன. இவை இல்லா விட்டால் இதுவும் ஒரு சிறு முதலீட்டு மங்காத்தா படம்தான்.

தனது கதைக்கு அரசியல் பின்னணியை பொருத்துவதற்கு இயக்குநர் வெகுவாக பாடுபட்டிருக்கிறார். தொட்டதை தங்கமாக்கும் கிரேக்க மன்னனோடு தொடர்புடையதுதான் மிடாஸ் டச் என்றாலும் நாம் அதை ஜெயா சசி மிடாஸாக பார்க்கலாம். ஆம்வேயை நினைவு படுத்தும் எம்.எல்.எம் அமெரிக்க ஏரியின் மருத்துவ தண்ணீர், மதுரை கிரானைட் கொள்ளை பிஆர்பியோடும், முக்குலத்தோர் சாதி சங்கங்களையும் நினைவுபடுத்தும் மூவேந்தர், முழுத்தமிழ் பேசும் ரவுடி, நீதிமன்றங்களின் ஊழலை காட்டும் வழக்கு நடைமுறை, காந்தி பாபுவின் கைதை ஒட்டி ஊடகங்களின் பரபரப்பு தலைப்பு செய்திகள் எல்லாம் காட்சிக்கு காட்சி வருகின்றது.

sathuranga-vettai-4.jpgஆனால் இவை அனைத்தும் அரசியல்வாதி கெட்டவன் எனும் பொதுப் புத்தியாக சுருங்கி விடுகிறது. சிங்கப்பூராக்குவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு நிறைவேற்றாத அரசியல்வாதிகளை கைது செய்ய முடியுமா என்று கேலி செய்கிறான் காந்தி பாபு. இதை கை தட்டி ஆதரிக்கும் மக்கள் உண்மையில் நம் விவசாய நாட்டை சிங்கப்பூராவாக்குவது சரியா என்றோ அந்த கனவை விதைத்த ஊடகங்களையோ, இல்லை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் முதலாளிகளின் நலனுக்காக ஒரு வேளை சிங்கப்பூராக மாற்றினால் எத்தனை மக்கள் நிலமிழுந்து, வாழ்க்கையிழந்து துரத்தப்பட வேண்டும் என்றோ பார்ப்பதில்லை. இதுதான் அரசியலற்ற அரசியல் வெறுப்பு. அல்லது அரசியல்வாதிகளை மட்டும் வெறுக்க வைக்கும் ஆளும் வர்க்க முனைப்பு.

மோசடிப் பணத்தில் பாதியை “மக்கள் பணத்தில் பாதி மக்களுக்கே” என்று ஒரு தோழர் உண்டியலில் போடும் காந்தி பாபு, தன்னை முதலாளியாக விரும்பும் கம்யூனிஸ்டு என்று கூறிக் கொள்கிறான். திருப்பதியில் கருப்புப் பணத்தை போடும் கைகள் மற்றும் இந்தியாவை சோசலிச நாடு என்று அறிவத்துக் கொள்ளும் நமது அரசியல் சட்டத்திற்கும் இயக்குநரின் இந்த ‘அறிவார்ந்த’ வசனம் மற்றும் காட்சிக்கும் என்ன வேறுபாடு?

எனினும் இந்த படத்தில் இயக்குநர் இப்படி ஒரு கருவை எடுத்து புதுமையாகவும், கூர்மையாகவும் சொல்வதற்கு தனது  திறமைகைள பயன்படுத்தியிருப்பது உண்மை. ஆனால் அந்த ‘மை’கள் எல்லாம் சேர்ந்து எதிர்மறை பாத்திரமே ஆற்றியிருக்கிறது.

மரபான தமிழ் சினிமா களங்களிலிருந்து மாறுபட்டு புதிய களங்களை கண்டறியும் புதிய இயக்குநர்கள், அந்த புதுமையோடு தான் உறவாடும் களங்களின் சமூக அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்வது புதுமையை விட முக்கியத்துவம் வாய்ந்தது.

இல்லையேல் ஈமு கோழி பண்ணை, அட்சயை திரிதை-தங்கத்தின் பெயரில் விதவிதமான தள்ளுபடி, ரியல் எஸ்டேட் சலுகை, எம்எல்எம் நிறுவனங்கள் போன்ற மோசடி கம்பெனிகளுக்கு விளம்பரங்களை கொடுத்து விட்டு, விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று படிக்க முடியாத எழுத்துருவில் போட்டு விட்டு, அந்த கம்பெனிகள் அம்பலப்பட்டால் ஒன்றுமே நடக்காத மாதிரி விளம்பரங்களை நிறுத்தும் விகடன் குழுமம்தான் தற்போது சதுரங்க வியூகம் படத்திற்கு 52 மதிப்பெண்ணையும் கொடுத்திருக்கிறது.

குற்ற உணர்வு இல்லாமல் செய்யும் எதுவும் தப்பே இல்லை என்பது இங்கு பொருத்தமாக இருக்குமோ?

 

 1. //”அது ஏழையின் கலகம் அல்ல. நிறுவனமயமான ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின் அங்கத்தினன் மட்டுமே அப்படி விரிந்த திருட்டு சாம்ராஜ்ஜியத்தை நடத்த முடியும். அவன் ஆரம்பத்தில் ஏழையாக இருந்தாலும் கூட”//.

  ஒவ்வொரு ஏழையும் அதை நோக்கிதான் தள்ளப்படுகிறான். குற்ற நடைமுறையில் மாட்டிக் கொண்டால் காணாமல் போகிறான். மாட்டா விட்டால் சாம்ராஜ்ஜிய அதிபதி ஆகிறான்.

 2. என் நண்பன் சங்கர் B.E, அம்மா திரு அனுராதரமணன் அவர்களீன் சிறு கதையை [விவாகரத்து பற்றிய கதை] ராஜ் அல்லது விஜய் தொலைகாட்சியில் நாடகம் ஆக்கியவர் ,இதே போன்ற[சதுரங்க வேட்டை] ஒரு கதையை திரைபடம் எடுக்க முயன்றவர் அடிக்கடி கூறும் ப்ன்ச் டயலாக் “நேரா போனா தட்டு ,ரிவர்ஸ்ல போனால் துட்டு ” என்று தன் படத்துக்கு உரிய வசனத்தை கூறுவார். அவர் பெங்களூர் தமிழர் , சென்னைக்கு வந்து பசியாலும், வறுமையாலும் பாதிக்கபட்டவர். இருதியில் அவர் கதை நாயகனும் இப்படி தான் திருந்துவான்.

  இது போன்ற கதை களம் அமைந்த பல திரை கதைகள் தயாரிப்பாளரின் கவனத்தை ஈர்க்க பலவாராக முயன்று கொண்டு உள்ளன என்பது தான் கோடம்பாக்கம் [கோலிவுட்] கனவு தொழில் சாலையீன் இன்றைய மிக பெரிய சோகம்.

  கோடம்பாக்கம் [கோலிவுட்] கனவு தொழில் சாலையீன் கதை களத்தை பின் வரும் படி மிக எளிமையாக வகைமைபடுத்தலாம் :

  [1]வறுமை–> அதனால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாரித்தல் –>இருதீயில் திருந்துதல் உம் :சதுரங்க வேட்டை

  [2]நடுத்தர வாழ்க்கை /உயர் நடுத்தர வாழ்க்கை, —> தீயோரால் பாதிக்க படுதல் —> பழி வாங்குதல் உம: கஜினி ,நான் சிகப்பு மனிதன் [new அண்ட் old ] ,மகாநதி etc etc 90% தமிழ் திரைபடங்கள்.

  [4]நண்பன் கொல்லபடுதல் —>பழிவாங்குதல் –> உம் :பாஷா ,அஜீத்தீன் சமீபத்தீய திரைபடம் [I forget the Name]

  [5] mafiaவுக்கு எதிராக போராடுதல் உம் :சிங்கம் I, II ,காக்கி சட்டை,அபூர்வ சகோதரர்கள்
  1 to 5 இந்த pattern திரைகதையுள் காதல் காட்சிகளையும், song sequence யையும் 45 நிமிடங்களுக்கு இணைத்து கொள்ளலாம்.

  [6]காதலை மையம் வைத்த திரைகதைகள்

  குறிப்பு :

  சினிமா கலையை மிக எளிமையாக பிரித்து pre-production ,production ,post production என்று எளிமையாக எனக்கு ஆசிரியர் போன்று வகுப்பு எடுத்து , practicalஆக pre production script work, recording theater, எடிட் suit , studio, என்று அழைத்து சென்று சொல்லி கொடுத்த என் நண்பன் சங்கருக்கு மிக்க நன்றி.

  • Very nice classification of almost all of the movies nowadays. Appreciate the analysis and understanding behind.
   Do you mean to say this movie is also within the category?

 3. //விவசாய நாட்டை சிங்கப்பூராவாக்குவது சரியா என்றோ அந்த கனவை விதைத்த ஊடகங்களையோ, இல்லை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் முதலாளிகளின் நலனுக்காக ஒரு வேளை சிங்கப்பூராக மாற்றினால் எத்தனை மக்கள் நிலமிழுந்து, வாழ்க்கையிழந்து துரத்தப்பட வேண்டும் என்றோ பார்ப்பதில்லை. இதுதான் அரசியலற்ற அரசியல் வெறுப்பு. அல்லது அரசியல்வாதிகளை மட்டும் வெறுக்க வைக்கும் ஆளும் வர்க்க முனைப்பு.//

  வினவு அவர்களுக்கு.,

  இந்த சிங்கப்பூர் மேட்டர், நீங்கள் நேரிடையாக புரிந்து கொண்ட அர்த்தமாக இருக்காது. ஒரு உதாரணம் வேண்டுமென்று எல்லோரும் உவமானமாக சொல்லி வரும் விசயம்தான் அது, ரஜினியாக வேண்டும் என்று ஒருவன் நினைப்பது கதாநாயகன் குறித்தே அன்றி ரஜினி போல் கருப்பாக இருக்கவேண்டும் என்பதாக இருக்காதில்லையா ….

  அதோடு தரிசாக கிடந்த நிலத்தை காசுள்ளதாக மாற்றினார் என்பதாலும் நம் கண் முன்னே இது நடந்த விஷயம் என்பதாலும் சிங்கப்பூர் சுலபமாக உவமானம் ஆயிற்று.

  வினவு பற்றி எனது தனிப்பட்ட விமர்சனம் இது!
  இதோ சிறியவயது தோழர் கைதாகிறார் என்று நீங்கள் பெருமையாக இடுகை இடுவதும் …, துப்பாக்கி ஏந்திய ஒரு சிறு வயது போராளி போட்டோவை தீவிரவாதிகள் /போராளிகள் வெளியிடுவதும் என்னை பொருத்தவரையில் ஒன்றே. எல்லாவற்றையும் மத கண்ணோட்டத்தோடு பார்பவர்களும், அதனை அப்படியே எதிர் திசையில் பார்க்கும் நீங்களும் எனக்கு ஒன்றே!

 4. //உழைப்பினால் முன்னேற முடியாது, அடுத்தவன் உழைப்பை அபகரித்துத்தான் பணக்காரனாக முடியும். இதுவே காந்தி பாபுவின் வாழ்க்கை நீதி. அவனது நீதியின் பயணம் நிதி தேடும் கலையில் பணத்தாசை கொண்டோரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாமென்பதாக நிலை பெறுகிறது//

  The above statement is true. This is not only for the character shown in the movie, you have to play “Gandhi babu” role in real life to reach top level in corporate or political ground.

  //ஈமு கோழி பண்ணையில் ஈர்க்கப்பட்ட விவசாயிகளோ இல்லை திண்டிவனம் நகைக்கடையில் பாதிவிலைக்குத் தங்கம் வாங்க குவிந்த மக்களோ, மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் இணைந்து கழிப்பறை நீரை அமெரிக்க மருந்து நீராக விற்ற திருப்பூர் இளைஞர்களோ பேராசைக்கு பலியாவதை எப்படி பார்ப்பது?//

  Both bad and good things are placed in front of people in life, it is up to individuals to select on their own risk. The movie is not about the lesson for public, because this types of cheating will never get ends.

  //ஆனால் ஏமாற்றுதலை கலை போலச் செய்யும் காந்தி பாபு, திருந்துவதற்கான காரணங்களை மட்டும் இயக்குநர் தமிழ் சினிமா மரபுப்படி முன் வைக்கிறார். அவன் அடிபட்டு மிதிபட்டு, குழந்தை குட்டி என்று ஆன பிறகுதான் மோசடி கூடாது என்ற போதி தத்துவத்தை கண்டடைகிறான். அதையும் கருத்து சார்ந்து அல்ல, உணர்ச்சி சார்ந்தே பார்க்கிறான்.//

  At one stage Gandhi babu loses money and trying to work and earn money for his loved girl. What’s wrong with this scene? after all he is also human being.

  //இது ஏதோ சிறிய வயதில் அனாதையாக்கப்பட்ட காந்தி பாபுவின் எதிர் வினை என்கிறார் இயக்குநர். காவல் துறை ஆணையரும் இயற்கை சமநிலை குலைவு என்று வருத்தப்படுகிறார். அப்படிப் பார்த்தால் அயோத்திக் குப்பம் வீரமணியும், ஆட்டோ சங்கரும், தாவுத் இப்ராஹிமும், சர்வதேச மாஃபியாக்களும் இந்த சமநிலை குலைவின் விளைவுகளா என்ன?//

  Yes, our birth also decides the future. Who is becoming prostitute in our society? rich background girl / IIT student / poor or uneducated girl? If the baby born in Appolo hospital, he or she goes to CBSE or Matric school, if the baby born in poor government hospital..who knows??? you may find as a Gandhi babu or prostitute. (Not everyone).

  // சிங்கப்பூராக்குவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு நிறைவேற்றாத அரசியல்வாதிகளை கைது செய்ய முடியுமா என்று கேலி செய்கிறான் காந்தி பாபு. இதை கை தட்டி ஆதரிக்கும் மக்கள் உண்மையில் நம் விவசாய நாட்டை சிங்கப்பூராவாக்குவது சரியா என்றோ அந்த கனவை விதைத்த ஊடகங்களையோ, இல்லை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் முதலாளிகளின் நலனுக்காக ஒரு வேளை சிங்கப்பூராக மாற்றினால் எத்தனை மக்கள் நிலமிழுந்து, வாழ்க்கையிழந்து துரத்தப்பட வேண்டும் என்றோ பார்ப்பதில்லை.//

  Singapore is referred for “in terms of economy growth, revenue from tourism and management skills”. It is not like demolish all lands and built the buildings. Don’t include all your socialism thought in the movie reviews.

  //குற்ற உணர்வு இல்லாமல் செய்யும் எதுவும் தப்பே இல்லை என்பது இங்கு பொருத்தமாக இருக்குமோ?//

  Answer is “As Gandhi babu says Money is always ultimate”

 5. Dear stalin….. please dont waste your time to spend comments, because you and me kind of people wanna know the two side of coins, but vinavu /religious/business kind of people think always one side of their ideologies, so please you and me have to concentrate to do atleast small good things to others, thats enough!

  thanks for the comment of singapore matter, because me too has same answer for that particluer words!

 6. சாதாரணமாக நாளிதழ்களை புரட்டினால் நம் கண்ணில் படும் எம்.எல்.எம் மோசடி, ஈமு கோழி, இரிடிய கோபுரம் கலசம், தங்க நகை சீட்டு மோசடி செய்திகளையெல்லாம் கலந்து கட்டி கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனமான திரைக்கதையையும் சேர்த்து ஒரு ரகளையான படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர்.

  மண்ணுளி பாம்புக்கு இளயதளபதி விஜய் பெயர் வைத்து பணத்தாசை பிடித்த வியாபாரியாக வரும் இளவரசு, நட்ராஜ் உடன் வரும் சகாக்களும், பிற்பாடு காசுக்காக கழுத்தை அறுக்கும் கட்டப்பஞ்சாயத்து கம் அரசியல்வாதிகள் கேரக்டர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

  படத்தின் மற்றொரு சிறப்பு வசனங்கள் தான்.படத்தில் குத்து பாட்டு வைப்பதற்கான அத்தனை வாய்ப்புகள் இருந்தும் அதெல்லாம் இல்லாமல் படம் எடுத்திருப்பதற்காகவும், ஒரே படத்திற்குள் புதுசு புதுசாக ஃபிராடு குரூப்புகள் எப்படி கிளம்புகிறார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் விழிப்படைய பாடமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கும், தயாரிப்பாளர் மனோபாலாவுக்கும் பாராட்டுக்கள்…

 7. விமர்சிக்க ஆயிரம் காரணம் எந்த படத்திலும் காணலாம், ஆனால் இந்த படத்தை ஏமாளி மக்களின் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட படம் என்று ஏன் வினவு கருத கூடாது?…. என்னை பொருத்தவரை இந்தபடம் படமாக அமையாமல் பாடமாக அமைந்தது ………சிங்கப்பூரை உவமையாக சொல்வது அங்கு உள்ள கட்டிடங்களுக்காக அல்ல மாறாக பொருளாதார வளர்ச்சி ,மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் …இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் விமர்சனம் எழுதுவது நல்லது அல்ல…

 8. அடங்கப்பா உங்க அலப்பரைக்கு அளவே இல்லையா???

  நீங்க வேணும்னா கதை, திரைக் கதை எழுதிக் கொடுங்கையா, பின்பு அதற்கும் ஒரு விமர்சனம் எழுதுங்க// சித்தா செட்டு எப்புடி? சவுண்டு கிழியிதா??? கிழியிது!! கிழியிது!!!.

  உம்ம வரட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க