privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்

உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்

-

மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சஹரான்பூர் நகரம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி போலீஸ் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன, சீக்கிய குருத்வாராவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள குதுப்ஷேர் காவல் நிலையத்தின் ஒரு பக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி, மறுபக்கம் சீக்கியர்-இந்து பகுதி என்று ஊர் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

சஹரான்பூர்
சஹரான்பூர் கலவரம்

குருத்வாராவை அடுத்த ஒரு காலி மனைதான் பிரச்சனை. அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று குருத்வாரா தரப்பினர் வாதிட, ‘அந்த நிலத்தில் முன்பு அஸ்காரி மசூதி இருந்ததால் அது வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது, குருத்துவாரா அதை பயன்படுத்தக் கூடாது’ என்று முஸ்லீம்கள் தரப்பில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மாநகர நீதிபதி தடையாணை பிறப்பித்திருப்பதால் நிலத்தை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என்ற நிலை இருந்திருக்கிறது.

இந்நிலையில் குருத்வாரா தரப்பினர் அந்நிலத்தில் ஒரு சுவர் கட்ட ஆரம்பித்திருக்கின்றனர். முஸ்லீம்கள் அதை எதிர்த்து முறையிட கடந்த சனிக்கிழமை (ஜூலை 26, 2014) மாவட்ட ஆட்சியரிடம் போயிருக்கின்றனர். போலீஸ் கட்டிட வேலையை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காமல், கூட்டத்தை கலைப்பதற்காக வானத்தை நோக்கி சுட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 33 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். 22 கடைகளும், 15 வாகனங்களும் எரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பிலிருந்தும் 38 பேர் கைது செய்யப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது

ஊரில் நிலவும் சூழலைக் குறித்து பெயர் சொல்ல விரும்பாத 32 வயது இசுலாமியப் பெண் ஒருவர் “தோலிகால் பகுதியிலிருந்து வெளியில் போக எங்களுக்கு அனுமதி இல்லை. போலீஸ் கண்டதும் சுடும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எங்கள் குழந்தைகளையும், ஆண்களையும் பகுதியிலிருந்து வெளியே போக விட மாட்டோம். என் வீட்டுக்காரரை வீட்டிலேயே நமாஸ் செய்யும்படி சொல்லியிருக்கிறேன். நான் இத்தனை வருஷமாக வாழ்ந்து வரும் இந்த சகரான்பூர் நகரம் இப்போது இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கிறது. நான் அந்தப் பக்கம் போக முடியாது. அங்கு வாழும் எனது தோழி இங்கு வர முடியாது” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் கூறியிருக்கிறார்.

முஸ்லீம் குடும்பம்
வீட்டிலிருந்து வெளியில் எட்டிப் பார்க்கும் ஒரு முஸ்லீம் குடும்பம்

“நேற்று, போலீசுடன் சில ஆட்கள் வந்து ரப்பர் குண்டுகளால் சுட ஆரம்பித்தார்கள். அவர்கள்தான் மசூதி ஜன்னல்களை உடைத்து, கார்களை எரித்து, கடைகளை  சேதப்படுத்தினார்கள். அவர்கள் இங்கு எதற்காக வந்தார்கள் என்று தெரியாது. இந்த வருஷம் ஈத் பண்டிகை இயல்பாக இருக்காது என்று மட்டும் தெரிகிறது,” என்றார் அவர்.

“அடுத்தத் தெருவுக்குப் போவதற்கு போலீஸ் உதவி கேட்க வேண்டியிருக்கிறது. யாரைப் பார்த்து நாங்க பயப்படணும். இத்தனை வருஷமா எங்களோட வாழ்ந்து வரும் மக்களைப் பார்த்தா?” என்று கேட்கிறார் அவர்.

உருவாக்கப்பட்டுள்ள மதப் பிரிவினையின் மறுபக்கம் வாழும் சீக்கியர்களும், நகரத்தில் இரு மதத்தவரும் பல ஆண்டுகளாக அமைதியாக சேர்ந்து வாழ்ந்து வருவதை குறிப்பிடுகின்றனர்.

“இந்த கலவரம் அரசியல் ரீதியானதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், வன்முறை செயல்களை செய்தது பெரும்பாலும் வெளியாட்கள்தான். மொராதாபாத், முசாஃபர் நகர், தியோலி போன்ற இடங்களிலிருந்து வந்து கலவரத்தை நடத்தியிருக்கிறார்கள். வாகனங்களை எரித்தவர்கள் மத்தியிலோ, கடைகளை எரித்தவர்கள் மத்தியிலோ எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லீம் முகத்தைக் கூட பார்த்தாக நினைவில்லை. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது” என்கிறார் 58 வயதான குர்ஷரன் கவுர். இவர் சீக்கிய பிரிவைச் சேர்ந்தவர்.

ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு போலீஸ் படைகளைச் சேர்ந்தவர்கள் வண்டிகளையும், வீடுகளையும் எரித்தார்கள் என்று குருத்துவாராவுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சஹரான்பூரின் அம்பாலா பேருந்து நிலையத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள்
சஹரான்பூரின் அம்பாலா பேருந்து நிலையத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள்

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைனோ, “உத்தர பிரதேசத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், ஒரு மாநில அரசுதான் நிலைமையை மேம்படுத்தவோ, மோசமாக்கவோ செய்ய முடியும்” என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க அரசு நிலைமையை எப்படி கையாளும் என்பதற்கு பா.ஜ.கவினரே பதிலளித்திருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் கர்நாடகா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளருமான சி.டி.ரவி, “2002 முதல் அமல்படுத்தப்பட்ட குஜராத் மாதிரிதான் இத்தகைய கலவரங்களை அடக்க முடியும். இந்த மாதிரியை பாரதம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்” என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார். முஸ்லீம்களை தூண்டி விட்டு கலவரம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிடுவதாக ஒரு வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

மதவெறியைத் தூண்டி விட்டு திட்டமிட்டு கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை கொன்று குவித்ததும், சிறுபான்மை மதத்தவரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதும்தான் இவர்கள் கூறும் குஜராத் மாதிரி. 1980-கள் முதலாகவே, இந்தி பேசும் மாநிலங்களிலும் பிற பகுதிகளிலும் இத்தகைய மதக் கலவரங்கள்தான் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கான அடிப்படையாக இருந்திருக்கின்றன.

இப்படி இருக்கையில் “ஓடறான் பிடி” என்று திருடனே கூச்சலிடுவது போல சஹரான்பூர் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் லக்கன்பால், கலவரங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்றும் எதிர்வரும் இடைத்த் தேர்தலில் இருவேறு மதத்தவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் முறையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மோடி அரசாளும் நாட்டில் சஹரான்பூர் நிலத் தகராறு மதக்கலவரமாகும்; முசஃபர்நகர் காதல் பிரச்சனை சாதிக் கலவரமாகும்; மொராதாபாத் ஒலிபெருக்கி பிரச்சனை தேசதுரோக பிரச்சனையாகும்.

மோடி கொண்டு வரும் ‘வளர்ச்சி’ பொருளாதார ரீதியாக மக்களை வதைக்கிறது. அந்த வளர்ச்சிக்காக அடித்தளமிடும் மதக்கலவரங்களோ மக்களை கொல்கிறது.

மேலும் படிக்க