privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?

ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?

-

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் ஒரு ஞாயிறு மதியம் சென்றோம். நுழைந்த உடனேயே வரிசையாக ஈய்ச்சர் மினி லாரிகள் வரிசையாக நிற்பதை பார்க்க முடிந்தது. ஓட்டுநர்கள் பலரும் ஒன்றாக மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஈய்ச்சர் மினி லாரி
ஈய்ச்சர் மினி லாரி

அவர்களில் முதலில் எதிர்ப்பட்டவரை சந்தித்தோம். அவருக்கு சொந்த ஊர் திருத்தணி அருகில். வயது 47 என்று அவர் சொன்னாலும் 60 வயது ஆனவர் போன்ற முதுமை அவரிடம் தென்பட்டது. ”தினசரி பதிவா வேல பாக்குறேன் சார். 600 ரூபா சம்பளம், 12 மணி நேரம் வேல.. இப்போ வாரத்துல மூணு நாள்தான் வேல வருது. வேல இல்லாத அன்னிக்கு 200 ரூபா சம்பளம் கிடைக்கும் சார்” என்றார். அவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சொந்த ஊரில் தறி போட்டுக் கொடுத்திருக்கிறார். ”நீங்க ஏன் அந்த வேலைய பாக்காம லாரி ஓட்ட வந்தீங்க” எனக் கேட்டதற்கு, ”அப்போல்லாம் பவர் லூம் வரல சார். இருந்திருந்தா இங்க வந்திருக்க மாட்டேன். அப்போலாம் கையால செய்யணும் சார். அது நமக்கு வரல” என்றார். ஈய்ச்சர் வண்டியிலேயே இரவு நேரங்களில் தங்கிவிடும் இவர் குளிக்க, காலைக்கடன் முடிக்க லோடு ஏற்றப் போகும் கம்பெனிகளின் கழிப்பறைகளையே பயன்படுத்திக் கொள்கிறாராம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவாராம்.

அவரிடமிருந்து விடைபெற்று ஈய்ச்சர் லாரி உரிமையாளர்களை சந்திக்கலாம் என அவர்களது ஸ்டாண்டிற்கு சென்றோம். எல்லோருமே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். மதுரையை சேர்ந்த முருகன் (வயது 42), முன்னர் 12 லாரிகள் வைத்திருந்த இவர் தற்போது மூன்று லாரிக்குதான் சொந்தக்காரர். பி.ஏ பட்டதாரியான அவர் 1987-ல் தனியார் நிறுவன வேலையை விட லாரி சொந்தமாக வைத்து ஓட்டினால் லாபம் அதிகம் எனக் கருதி ரூ.30 ஆயிரம் முதலீட்டில் பழைய ராணுவ லாரி ஒன்றை வாங்கி ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். அதில் சம்பாதித்து பல பழைய லாரிகளை வாங்கி, அதற்கு சில ஓட்டுநர்களை அமர்த்தி வேலை கொடுத்திருக்கிறார். அதற்கு ஒரு ஆபீசையும் வாடகைக்கும் அமர்த்தியிருந்திருக்கிறார்.

2005-ல் அவரது அண்ணன் மகளது திருமண செலவுக்காக முதல் லாரியை விற்கத் துவங்கியது முதல் அடுத்தடுத்த ஆண்டுகளில் லோடு முறையாக கம்பெனிகளில் இருந்து கிடைக்காமல் போகவே வரிசையாக ஒவ்வொன்றாக விற்கத் துவங்கினார். இப்போது அவரும் ஒரு லாரி ஓட்டுநர் தான், இன்னொரு ஓட்டுநர் அவரது தம்பி. பழைய லாரி ஆபீசை இரு ஆண்டுகளாக குளிர்பானக் கடையாக மாற்றி அதையும் அண்ணன் தம்பி இருவரும் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கின்றனர். கூடவே அவர்களது மனைவியரும் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்றாம்.”ஒருவேளை இந்தத் தொழிலில் இனி ஈடுபட்டால் வாழவே முடியாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, ”அதுக்குதான் கட வச்சிருக்கேன்..” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

ஈய்ச்சர் மினி லாரி
”வாரத்துல மூணு நாளு லோடு கெடைக்கும்.. ஒண்ணும் இல்லாம இருக்கதால தான் ஞாயிற்றுக்கெழம கூட ஏதாச்சும் லோடு கெடைக்காதான்னு பாத்துட்டு இருக்கோம்”

35 வயதாகும் அவரை 2003 முதல் 2008 வரை ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் அந்த நிறுவனம் தினசரி அவருக்கு 900 ரூபாய் வாடகை தந்திருக்கிறது. அம்பத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு தினசரி லோடு எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்த சரக்கை இறக்கி வைக்கும் வேலையிலும் இவர் ஈடுபட வேண்டும். இதில் தினசரி டீசலுக்கு மட்டும் அப்போது 400 முதல் 600 ரூபாய் வரை செலவாகுமாம். 12 மணி நேரம் என்ற நேர வரையறை எல்லாம் வேலையில் அவருக்கு கிடையாதாம். அந்த ஐந்தாண்டுகளில் அதிகமான வேலை நேரத்தால் சரியாக தூக்கம் இல்லாமல் போய் இப்போது அவருக்கு கிட்டப்பார்வை பிரச்சினை அவருக்கு வந்து விட்டது. இப்போதைய பொருளாதார நிலைமையால் கண்ணாடி கூட வாங்க இயலவில்லை. ஆனால் தான் வாங்கியிருப்பதாகவும், வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும் சொல்லிக் கொண்டார்.

”நான் சரியா படிக்கல.. அந்த மேனேஜரு பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கான்.. தெரிஞ்ச பையன்தான் சார். ஸ்டாண்டுல வண்டிய விட்டா தெனமும் வேல வருமான்னு தெரியாது.. அங்கேன்னா தெனமும் வேல.. அப்டியே நம்மள காண்டிராக்டா பெர்மனண்டா வச்சுக்குவாங்கனு பார்த்தேன். கடசில கழட்டி விட்டுட்டாங்க சார்..” என்றார். ”வாரத்துல மூணு நாளு லோடு கெடைக்கும்.. ஒண்ணும் இல்லாம இருக்கதால தான் ஞாயிற்றுக்கெழம கூட ஏதாச்சும் லோடு கெடைக்காதான்னு பாத்துட்டு இருக்கோம்” என்றவரிடம் இயலாமை துலக்கமாக கண்ணில் தெரிந்தது.

”நீங்க புது வண்டி வாங்குனீங்களா ?” என்று கேட்ட போது, ”என்னா சார் நீங்க ! புது வண்டி பதினோரு லட்சம் சார்.. கடசில சேட்டுட்ட வட்டியோட கட்டி முடிச்சா இருபது லட்சம் கட்டணும் சார்.. மாசா மாசம் 33 ஆயிரம் கட்டணும். தெனமும் நமக்கு டீசல் போக கையில நிக்கதே 800 ரூபாதான். அதுவும் இப்போ வாரத்துல வேல மூணு நாளுதான். மாசத்துக்கு பத்தாயிரம் கூட தேறாது.. நீங்க வேற” என்று வெறுப்பாக கூறிய அவர் பழைய வண்டியை சேட்டு மூலமாக வாங்கி இன்னும் வட்டி கட்டி வருகிறார். அநியாய வட்டிதான் பெரும்பாலும் இவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

மகேந்திரனின் நண்பர் ஒருவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். முப்பது வயது நிரம்பிய அவர் சில ஆண்டுகளுக்கு முன் வட்டிக்கடை சேட்டு மூலம் சில பத்தாயிரத்தில் ஒரு பழைய ஈய்ச்சர் வண்டி வாங்குகிறார். முறையாக வட்டிப் பணத்தை மாதம்தோறும் இவர் தந்துவிடுவதை பார்த்த சேட்டு இன்னும் பணம் தந்து வண்டிகளின் எண்ணிக்கையை பெருக்க சொல்லுகிறான். அவனுக்கும் அப்போதுதானே நல்ல வருமானம் கிடைக்கும். இவரும் அப்படியே செய்தார்.

ஈய்ச்சர் மினி லாரி
முறையாக வட்டிப் பணத்தை மாதம்தோறும் இவர் தந்துவிடுவதை பார்த்த சேட்டு இன்னும் பணம் தந்து வண்டிகளின் எண்ணிக்கையை பெருக்க சொல்லுகிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன் வந்த பொருளாதார மந்தம் அவரது தொழிலை இப்போது ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. அவரிடம் வேலை பார்த்த ஓட்டுநர்கள் பலர் வேறு வேலைகளுக்கும், ஊர்களுக்கும் சென்று விட்டனர். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த அளவு எடை கொண்ட பொருட்களை (சுமார் 8 முதல் 10 டன் வரை) வேறு மாநிலங்களுக்கு ஈய்ச்சர் வண்டி மூலமே எடுத்துச் செல்லும் தொழிலை செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். ஒருசில மாதங்களிலேயே அதற்கும் சாத்தியமில்லாத அளவுக்கு உற்பத்தித் துறை விழுந்து விட்டது. இப்போது சிஐடியு ஸ்டாண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். தொழில் நட்டமானதற்கு தனது தவறான, கூடா நட்புகள் தான் காரணம் என்று வருத்தப்பட்டார் அந்த இளைஞர். இப்போது எந்த கெட்ட பழக்கமும் தனக்கு இல்லை என நேர்மையாக அவரே முன்வந்து சொன்னார்.

”கம்ப்யூட்டர் கம்பெனியெல்லாம் வந்த உடன எங்கள மெயின் ரோட்ட விட்டு உள்ள தள்ளிட்டாங்க சார். மூவாயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்க கிழக்கு கடற்கரை சாலை வரைக்கும் போவோம் சார். வீடு காலி பண்ற பல பேருட்ட பேக்கேஜிங் கம்பெனி வச்சிருக்கிறவங்க ஏமாத்துறாங்க சார். படிச்சவங்க.. கம்ப்யூட்டர்ல தேடி போன் போட்டு புக் பண்ணிடுறாங்க. அங்கெல்லாம் பேரம் பேசாம பெரிய தொகைக்கு போயிடுறாங்க.. கேட்டா எங்க வண்டி சின்ன வண்டிங்குறாங்க..அடுக்குற மாதிரி அடுக்குனா அதே பொருள எங்க வண்டிலயும் கொண்டு போலாம் சார்” என்றார்கள். ”காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.” என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அவரைப் போலவே அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு குறைவான வாடகைக்கும் வண்டியை கிளப்ப அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் என தெளிவாக தெரிந்தது.

எல்லோருக்குமே சராசரி வயது நாற்பதை தாண்டிக் கொண்டிருந்தது. எளிய வாடகை வீடுகளில் குடியிருக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கித் தர முயற்சிக்கிறார்கள். மீதமானவற்றை மட்டும் தங்களுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். காலை நேரத்தை பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக ஒதுக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் பலரும் யாரிடமராவது கார் ஓட்டுநராக போக விரும்பவில்லை. ”எம் பொழப்பு என்னோட போகட்டும்னுதான் புள்ளய படிக்க வைக்கிறேன். ஸ்கூல்ல கொழந்தய விட்டுட்டு கார எடுக்க வீட்டுக்கு போனா ‘என்ன ஆபீசருக்கு இப்போதான் விடிஞ்சுதா’ன்னு மொதலாளிங்க நக்கலடிப்பாங்க சார்.. எரிச்சலா வரும்.. அதாங் கெடைச்ச வரைக்கும் இதே போதும்னு பாக்குறேன் சார்” என்றார் மகேந்திரன்.

eicher-1இங்கு இரண்டு சங்கங்கள் உள்ளன. ஒன்று ஓட்டுநர்கள் சங்கம், இன்னொன்று வேன் உரிமையாளர்கள் சங்கம். இரண்டு சங்கத்துக்கும் ஒரே ஸ்டாண்டுதான், சிஐடியு தான் இருவரையும் வழிநடத்துகிறது. பெரும்பான்மையானவர்கள் ஓட்டுநர் சங்கத்தில் தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருமே ஒரு வண்டியை மட்டுமே சொந்தமாக வைத்து ஓட்டுபவர்கள். அவரவர் கவுரவத்தை பொறுத்து வெவ்வேறு சங்கங்களில் இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறினர். வேன் உரிமையாளர் சங்கம் ஒன்றை இப்பகுதியில் சுயேட்சையாக நடத்தி வந்த ஒருவர் இப்போது அண்ணா தி.மு.க.-வில் ஐக்கியமாகிய பிறகு சங்க வேலைகள் எதுவும் நடப்பதில்லையாம்.

இடையில் இந்த ஸ்டாண்டிற்கு முன்னர் தொழிலாளிகளுக்கான ஒப்பந்ததாரராக இருந்த அண்ணா தி.மு.க வை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். இப்போது ஒப்பந்த தொழிலாளிகளை நிறுவனங்கள் எதுவும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை என்பதால் இவருக்கும் வருமானம் இல்லையாம். வேறு வழியே இல்லாததால் இப்போது குட்டி யானை வண்டி வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். ”வீட்டுல பத்து டிக்கெட்டுபா.. முன்னமே கம்பெனிலருந்து வாடகப் பணம் மாரி பத்தாயிரம் பத்தாயிரம்னு மாசத்துக்கு வந்துக்குனு இருந்துச்சு.. அந்த மெதப்புல மருமகங்கிட்ட குடும்ப செலவுக்கெல்லாம் காசு வாங்கக் கூடாதுன்னுட்டேன்.. இப்போ குடும்ப செலவு மட்டும் 12 ஆயிரமாவது கொறச்சலா ஆகுதுப்பா.. அதான் வீட்டம்மா நகய சேட்டாண்ட வச்சு குட்டி யான வாங்கிட்டேன்.” என்றார். ”வடக்கேருந்து 150 ரூபாக்கு ஆள இட்டாந்திருக்காங்க சார்.. நம்மாளுங்க இந்த ரேட்டுக்கு ஒத்துக்குவானா” என்று சலித்துக் கொண்டார்.

அப்போது நான்கைந்து வட இந்திய இளைஞர்கள் ஒரு சிறு பையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு கம்பெனிகளைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்து சரவணன் என்ற 30 வயது இளைஞர் ”இவனுகளால தான் எங்க பொழப்பே போச்சு சார்” என்று விரக்தியுடன் சொன்னார். ”அவங்க ஊர்ல வேலை கிடைக்காமதான இங்கே வந்திருக்காங்க” எனச் சொன்னவுடன் ”ஒரு பிரியாணி பொட்டலத்த நாலு பேரு சாப்பிட்டா யாருக்குமே பசியடங்காதே சார்” என்று ஒப்பிட்டு சொன்னார் ஐம்பது வயதை தொட்டுக் கொண்டிருந்த செந்தில்குமார். சரவணன் முதலில் தானியங்கி லேத் பட்டறை வைத்துக் கொண்டு மூன்று, நான்கு பேருக்கு வேலை தந்து கொண்டிருந்தவர். மூன்று ஆண்டுகளாக ஆர்டர் கிடைக்காத காரணத்தால் ஈய்ச்சர் வண்டியை வாங்கி ஓட்ட ஆரம்பித்தார். தற்போது ஏழெட்டு மாதமாக அதிலும் சரியான வருமானம் இல்லை. எனவே அவருக்கு திருமணமும் தள்ளிப் போகிறது என வருத்தப்பட்டார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் ஒரு சாலை

செந்தில்குமாரோ பெரிய குடும்பஸ்தர். கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறார். மூத்த பெண் ஐடி துறையில் வேலைக்கு போய் விட்டார். அவளுக்கு திருமணம் முடிவதற்குள் அவளுக்காக வங்கியில் வாங்கிய கல்விக்கடனையும் அடைக்க வேண்டும், திருமணத்துக்கும் நகை வாங்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையும் வந்து லோடு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரண்டு குழந்தைகளது கல்வி, அன்றாட செலவு உள்ளிட்ட அனைத்தும் இவரது வருமானத்தை தான் சார்ந்திருக்கிறது. சரவணனோ அல்லது செந்தில்குமாரோ இந்தக் கவலைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாகத்தான் சொன்னார்கள்.

தெற்காசியாவில் சிறுதொழில் முனைவோருக்கான மிகப்பெரிய தொழிற்பேட்டை இது. 1965-ல் 1250 ஏக்கர் பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட போது நூறுக்கும் குறைவாகவே இருந்த சிறு தொழிற்சாலைகள் பின்னர் வளர்ந்து 1,700 தொழிலகங்கள் வரை பெருகியுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியும் இடமாக திகழ்ந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இப்போது பெரும்பாலான இடங்களில் பாழடைந்து கிடக்கிறது. மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் உதிரி பாகங்களையே பெரும்பாலும் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த அப்பகுதியில் இன்று கார்களுக்கு சர்வீஸ் செய்யும் நிறுவனங்கள் மட்டும் தான் ஒன்றிரண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ஆயத்த ஆடை நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்டர் கிடைக்காத காரணத்தால் மூடப்படவே அம்பத்தூரை நம்பி தையல் தொழிலுக்காக வந்து கொண்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தத்தம் கிராமங்களுக்கு திரும்பிப் போய் விட்டனர். அந்த நிறுவனங்கள் இருந்த இடங்களை தற்போது மென்பொருள் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு விட்டன.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கு உற்பத்தி பெருமளவு குறையத் துவங்கியது.

டிஐ சைக்கிள்ஸ், டிவிஎஸ், பிரிட்டானியா, டன்லப் போன்ற பெரிய நிறுவனங்கள் அம்பத்தூரில் இருந்தபோதும் பெரும்பான்மை தொழிலாளிகள் சிறு தொழிலகங்கள், சிஎன்சி மிசின், லேத் பட்டறைகளை நம்பிதான் தினசரி இங்கு வந்து கொண்டிருந்தனர். சிறிய லேத் பட்டறைகளை சொந்தமாக ஓரிரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்தவர்களும் அவர்களில் உண்டு. இவர்களையும், டைனி எனப்படும் சிறு தொழில் நிறுவனங்களையும் சேர்த்தால் 5,000 நிறுவனங்களாவது அம்பத்தூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இயங்கி வந்தன. 2008-ம் ஆண்டில் இங்கு வணிக வளாகங்களை நிறுவ முயற்சி நடைபெற்ற போதும், சிறு உற்பத்தியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் அதற்கு அனுமதி தரவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கு உற்பத்தி பெருமளவு குறையத் துவங்கியது. பல நிறுவனங்கள் இங்கு தொடர்ச்சியாக மூடப்பட்டன. மூடப்படாத நிறுவனங்களில் உற்பத்திக் குறைப்பும், ஆட்குறைப்பும் ஒருங்கே நிகழத் துவங்கின. 2011-ல் பொருளாதாரத்தில் ஒரு மீட்சி வருவது போல தெரிந்த போதும் 2012 இறுதியில் மீண்டும் இங்கு தொழிற்துறை உற்பத்தி சரியத் துவங்கியது. அச்சரிவு தொழிலாளிகளுக்கு மாத்திரம் பிரச்சினையாக இல்லை. இத்தொழில்களை சார்ந்து இயங்கிய பிற தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சாரார்தான் ஈய்ச்சர் வண்டி ஓட்டுநர்கள்.

ஆரம்பத்தில் சிறு முதலாளிகளை வளரவைப்பது என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் தமக்கு தேவையான வேலைகளை செய்து கொள்கின்றன. பிறகு தேவையில்லை என்று முடிவு செய்யும் போது அவர்கள் ஈவிரக்கமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். அப்படித்தான் ஈய்ச்சர் லாரி ஓட்டுநர்கள் வாழ்க்கை மாறிவிட்டது. முதலில் இவர்களை நிறைய லாரிகள் வாங்க வைத்து தொடர்ச்சியாக வேலை கொடுக்க வைத்து ஆசை காட்டி பிறகு அம்போ என விட்டுவிட்டு போய்விட்டனர். லாரிகளை வைத்தவர்கள் விற்றுவிட்டு தற்போது ஓரிரு லாரிகளை வைத்து மட்டும் பிழைப்பை ஓட்ட முயற்சிக்கின்றனர்.

ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக அமல்படுத்தப்படும் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் இப்படித்தான் மக்களை அலைக்கழிக்கிறது.

–    வினவு செய்தியாளர்

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

  1. vinavu,

    ஜூலை 15,16 ஆகிய நாட்களில் ஓய்வு பெற்ற ஆசிரியரான என் அம்மாவின் pension விடயமாக நான் பிறந்த ஊரான கடலூர் செல்ல வேலை ஏற்பட்டது.நீண்ட கால இடைவெளியில் எம் லாரி,பஸ் மெக்கானிக் நண்பனை சந்தித்தேன். அன்றேய தினம் நண்பனுடன் பரிங் and லுப்ரிகன்ட் தயாரிக்கும் TEMKEN MNC யீன் வியாபார ஊக்குவிப்பு [ business promotion ] கூட்டத்திற்கு செல்ல நேர்ந்து. ஒரு மெக்கானிக் தோழர் அக் கூட்டத்தில் எழுப்பிய கேள்வி :

    செங்கல்பட்டு முதல் பொன்னேரி வரை செல்லும் NH 45, Byepass வழி தடத்தில் மட்டும் 4 சுங்க சாவடிகள் அங்கு வசூல் செய்யபடும் பணம் , டீசல் விலை ஏற்றம், ஆனால் அதற்கு ஏற்ப வடகை கூலி கிடைக்காதது ,அதனால் வண்டி முதலாளீகள் லாரி பிசினஸ்அய் விட்டு ஓடுவது போன்ற விடயங்கள் பற்றி விவாதித்தார். லாரி பிசினஸ்ஏ மந்தமானதால் தம் மெக்கானிக் தொழில் இப்போது கஷ்ட காலத்தில் இருப்பதாக கூறினார்.

    உள் நாட்டில் விவசாயீகள் ,சிறு முதலாளீகள் செய்யும் தொழில்களை தன் கொடும் கரத்தால் முடக்கி, உள் நாட்டு பொருளாதாரத்தையே சூனியமாகும் இந்த , அந்த அரசுகள் [மோடி ,மன்மோகன் ] முடிவில் அடைய போகும் சாதனை என்னவாக இருக்கும் ? எத்தியொப்பிய பஞ்சம். இதற்கும் எதிராக கம்யூனிஸ்ட்கள் தான் கொடி பிடிக்க வேண்டுமா ? உள் நாட்டு முதலாளிகள் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் மவுனம் சாதிப்பது ஏன் ?

    வினவு “இது போன்ற உள் நாட்டு பொருளாதாரத்தை சிதைக்கும் இந்த இந்திய அரசின் முகத்திரையை” தம் அதிக கட்டுரைகள் மூலம் அம்பல படுத்த வேண்டும்

  2. //உள் நாட்டில் விவசாயீகள் ,சிறு முதலாளீகள் செய்யும் தொழில்களை தன் கொடும் கரத்தால் முடக்கி, உள் நாட்டு பொருளாதாரத்தையே சூனியமாகும் இந்த , அந்த அரசுகள் // கட்டுரையில் நொடித்துப் போன தம் தொழிலுக்கு அரசை அல்லது அரசின் செயல் பாட்டை, பெரிய குறை நிறுவனங்களின் செயல் பாட்டைக் குறை சொல்லவில்லையே , எனக்குத் தான் தமிழில் படித்தால் புரிய வில்லையா? தொழிற்சாலைகள் சிறிய அளவு லோடு இருக்கும் போது சிறு எயசெர் போன்ற லாரிகளை பயன் படுத்துவர். அவர்களுக்கே உற்பத்தி இல்லாத போது செய்வார்கள்? ஒப்பந்தம் செய்து கொண்டு ஒப்பந்தம் கழட்டி குறை சொல்லலாம். உலக மயம் தாராள மயம் ஆனதால் உலகெங்கும் தொழில் மந்தம் . வெவ்வேறு தொழில்களை பாதிக்கிறது ? அரசை ஏன் குறை சொல்லவேண்டும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க