உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே
(2002 குஜராத் முஸ்லீம் இனப்படுகொலையைத் தொடர்ந்து 2003 பிப்ரவரி மாதம் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்ட பார்ப்பன பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட உரை.)
“ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்ற தலைப்பில் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே ஆழமான தன் உரையை எளிமையான எடுத்துக்காட்டுகள் மூலம் அளித்திருக்கிறார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. கீழே அவரது உரையின் சுருக்கம் :

ஏகாதிபத்திய உலகமயமாக்கம் ஒரு புறமும், பார்ப்பன பயங்கரவாதம் மறுபுறமும் ஆக இருமுனைத்தாக்குதல் நம் மீது தொடுக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்றன.
உலகமயமாக்கத்திற்கு எதிரான இத்தகைய இயக்கங்கள் வரவேற்கத்தக்கவையே. எனினும் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இத்தகைய எதிர்ப்பியக்கத்தை நடத்துவதால் அவற்றுக்கிடையே இந்த எதிர்ப்பியக்கத்தின் திசைவழி குறித்துத் தெளிவின்மை நிலவுகிறது. இந்த அமைப்புகள் நடத்தும் இயக்கங்கள் அரசு சாரா நிறுவனங்களின் (தன்னார்வக் குழுக்களின்) ஏற்பாடுகளே என்பதைக் கவனிக்கும்போது ஐயம் மேலிடுகிறது. மாற்று உலகை அமைப்பது என்ற அவர்களின் கோட்பாடு ஏகாதிபத்தியவாதிகளின் உதவியோடுதான் செயல்படுத்தப்படும் போலும்! உலகமயமாக்கம் என்பது முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம்தான் என்பதிலும் இது தவிர்க்க இயலாமல் சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் என்பதிலும் நம்பிக்கை உடைய சக்திகள் தன்னார்வக் குழுக்களின் நடவடிக்கைகளால் திருப்தி அடைந்து விட முடியாது.
இந்தியாவில் நிலைமை பாரதூரமாக உள்ளது. உலகமயமாக்கத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்ச்சியான வெறியாட்டங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். உலகமயமாக்கத்தை விட அபாயகரமானது இந்துத்துவமே என்று ஒருசாரார் கருதுகின்றனர். இதற்கு மாறாக உலகமயமாக்கமே பேராபத்து விளைவிக்கக் கூடியது என்று கருதுவோரும் உள்ளர்.
உதாரணமாக, இந்துத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்து வரும் மதச்சிறுபான்மையினர் உலகமயமாக்கத்தை அவ்வளவாக எதிர்ப்பதில்லை. தனியார்மயத்தின் விளைவாக இடஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பறிகொடுத்து வரும் தலித்துக்கள் உலகமயமாக்கத்தை எதிர்த்த போதிலும் இந்துத்துவ எதிர்ப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதைவிட மோசமானது என்னவெனில், தலித்துக்கள் சங்கப் பரிவாரங்களின் கவர்ச்சிவாத அரசியலுக்கு இரையாகி இந்துத்துவத்தின் காலாட்படையாக மாறி வருவதுதான். பழங்குடியினர் பலரும் மீண்டும் இந்துக்களாக மதம் மாறி வருகின்றனர். உலகமயமாக்கம் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அவர்கள் உலகமயமாக்கத்தை எதிர்க்க முன்வந்த போதிலும் இந்துத்துவத்தை எதிர்க்க முன்வரவில்லை என்பது கவனத்துக்குரியது. இதுபோல் உலகமயமாக்கத்தின் விளைவாகத் தங்களின் கல்வியைப் பறிகொடுத்து வரும் மாணவர்களும் இந்துத்துவத்தின் அபாயம் பற்றிச் சரிவர உணரவில்லை. மறுபுறத்தில், இந்துத்துவ எதிர்ப்பில் முனைப்பு காட்டி வரும் பல மதச்சார்பற்ற சக்திகள் உலகமயமாக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.
உலகமயமாக்கமும் இந்துத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே. இதைப் புரிந்து கொள்ளாத தெளிவின்மை மக்கள் திரள் இயக்கங்களைக் கட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தி ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக முடியும். உலகமயமாக்கமும் இந்துத்துவமும் மட்டுமல்ல, பாசிசமும் இவற்றோடு நெருக்கமான தொடர்பு உடையதாகும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் அடிப்படைத் தத்துவம் நவீன தாராளவாதம் ஆகும். இந்துத்துவமோ சங்கப்பரிவாரங்களின் அரசியல் – பண்பாட்டுச் செயல் திட்டம் ஆகும். உலகமயமாக்கம், இந்துத்துவம் இவ்விரண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகமே பாசிசம் ஆகும்.
தனிநபரின் அதீத ‘சுதந்திரம்’ என்பதுதான் நவீனதாராளவாதத்தின் அடிப்படைக் கோட்பாடு, இக்கோட்பாடு எத்தகைய கூட்டுச் செயல்பாட்டையும் கூட்டத் தன்மையையும் அடியோடு நிராகரிக்கிறது; இவ்விதத்தில் இது கம்யூனிசத்துடன் முரண்படுகிறது; இவற்றை எல்லாம் அகற்றிவிட்டு அதனிடத்தில் நபர்களுக்கு இடையிலான போட்டி மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கிறது; மானுட முன்னேற்றத்தின் தாரக மந்திரம் இப்போட்டி மனப்பான்மையே என்று கூச்சலிடுகிறது.

நவீன தாராள வாதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கத்தில் ஏழை எளியோர் அதிகாரமற்றோர்க்கு இடமே கிடையாது; ‘திறமை’யற்றோர்க்கும் அங்கு இடம் கிடையாது. சந்தைச் செயல்பாடுகளில் சாமர்த்தியம் காட்டத் தெரியாமல் இருப்பதுதான் திறமையின்மையாகும். நவீன தாராளவாதம் சமத்துவத்தை அடியோடு எதிர்க்கிறது; சுதந்திரமான தொழில் முனைவோரின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிறது. தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது. இக்கோட்பாட்டின்படி, சமத்துவமின்மைதான் மனிதக் குழு முன்னேற்றத்தின் உந்து சக்தி; அதுபோலவே, சகோதரத்துவத்தையும் இது நிராகரிக்கிறது.
இந்துயிசத்தின் அடிப்படையாகவும் தனிநபர்வாதமே இருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியின் அடிப்பையில்தான் அவனுகுரிய சாதி அந்தஸ்தை இந்த உலகில் அடைகிறான். தன்னுடைய சாதிக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்வதன் மூலம்தான் அடுத்த பிறவியில் ஒரு மனிதன் உயர் சாதியில் பிறக்கும் வாய்ப்பைப் பெறுகிறான் என்கிறது இந்துயிசம்.
கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி அதைத்தாண்டியும் இந்துத்துவம், நவீன தாராளவாதம் ஆகிய இரண்டுக்குமான ஒப்புமைகள் பரவிக் கிடக்கின்றன. சான்றாக, இவை இரண்டும் சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானவை. சமத்துவமின்மை (அசமத்துவம்) என்பதுதான் இயற்கையானது என்று இவை இரண்டுமே கருதுகின்றன.
நவீன தாராளவாதம் வழங்கும் சுதந்திரம் காசுக்கு வாங்கப்படும் ஒரு பண்டமாகும். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான எதையும் – உணவு, உடை, உறைவிடம் உட்பட எதையும் பணத்தைக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். உங்களிடம் பணம் இல்லையென்றால் உங்களுக்குச் சுதந்திரம் இல்லை. எனவே நவீன தாராள வாதம் வழங்கும் சுதந்திரம் பணத்தில் உள்ளது. அது பணம் படைத்தவர்களின் சுதந்திரம் ஆகும்.

“இந்துயிசம் சுதந்திரம் என்பதையே அறியாதது” என்று கருதுவது சரியல்ல. இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு அது போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது. இவர்களுக்குச் சேவை செய்யப் பிறந்த சூத்திரர்களுக்கு இந்தச் சுதந்திரம் இல்லை. பஞ்சமர்களோடு ஒப்பிடும் வகையில் சூத்திரர்களும் சுதந்திரத்தைக் கோரமுடியும். வர்க்கங்கள் தம் சிறப்புத் தன்மையை இழந்து சாதிகளாக உருமாறிய பின் சுதந்திரம் வாங்கத்தக்கதாகி விட்டன.
அநேகமாக எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இந்துத்துவத்திற்கும் புதிய தாராள வாதத்திற்குமிடையில் வியக்கத்தக்க ஒத்த தன்மைகள் இருப்பதை நாம் காண்கிறோம்.
இவ்வாறு இந்துத்துவம் என்பது உலகமயமாக்கத்தின் வெறும் பின்தொடர்ச்சி அல்ல; அதன் பண்பு ரீதியான பிரதிபலிப்பும் ஆகும். அரசு மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் பாசிசமயமாகி வருவது உலகமயமாக்கத்தின் பின்விளைவு மட்டுமின்றி இந்துத்துவப் பரவலின் இயல்பான விளைவும் ஆகும். ஏனெனில், இந்துத்துவம் தன் பிறப்பிலேயே ஒரு பாசிச ரகம்.
பாசிசப் பண்பு என்பது இந்துத்துவத்தின் பிறவி அடையாளம். மராட்டியத்தில் பூனாவில் பார்ப்பன மன்னர்களான பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியத்தின் பார்ப்பனச் சக்திகள் ஒன்று திரண்டு இழந்த ஆட்சியைப் பெறுவதற்கு முயன்றனர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பூனா பார்ப்பனர்களின் கலகம் உண்மையில் இந்த வகையைச் சேர்ந்ததுதான். காலனிய எதிர்ப்புப் புரட்சிகரப் போராட்டங்களாக இவற்றைப் பார்ப்பனர்கள் வர்ணித்தபோதிலும், சாராம்சத்தில், அது பழமைவாதப் பிற்போக்கு வகையிலானதே. தங்களுக்கேற்ற ஒரு வலதுசாரிப் பழமைவாதப் புரட்சியைத் தேடிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் முசோலினியின் பாசிசத்தில் புகலிடம் தேடினர்.
சங்கப் பரிவாரங்களின் முழக்கமான “ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி” என்பது “ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே தலைவர்” என்ற நாஜி முழக்கத்தின் எதிரொலியே.
1947-க்குப் பிறகு பல்வேறு வெகுஜன அமைப்புக்களைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளை நிறுவியது. கம்யூனிச எதிர்ப்பை லட்சியமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உள்நாட்டு ‘எதிரிகளா’ன முசுலீம்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்ந்துவிட்டது. சிறுபான்மையினரைப் பற்றி வதந்திகளைப் பரப்பி வெகுஜனங்களிடம் வெறியைக் கிளப்பியது. ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கையாண்ட அதே தந்திரத்தை இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கையாண்டது. ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது. மேலும் ஆப்கானிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய தொலைதூர நாடுகளையும் உள்ளடக்கிய அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் மேலாதிக்க விஸ்தரிப்பு வெறியை ஏற்படுத்துகிறது.
ஒன்று தெளிவாகத் தெரிகிறது – சங்கப் பரிவாரங்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்துத்துவம் என்ற போதிலும், அது அவர்களோடு முடங்கி விடவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. இன்று அது இந்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்திரா காந்தி இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆன காலந்தொட்டே இந்துத்துவம், ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகத் திகழ ஆரம்பித்தது என்பதும், ராஜீவ்காந்தியின் பதவிக்காலத்தில் இது குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்பட்டது என்பதும் கவனத்துக்குரியது. இதே காலகட்டத்தில் தான் தாராளமயச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நரசிம்மராவ் ஆட்சியின்போது உலகமயமாக்கம் திணிக்கப்பட்டபோதே இந்துத்துவச் சக்திகளின் ஏறுமுகமும் தென்படத் தொடங்கியது. பாரதீய ஜனதாக் கட்சி அல்லது காங்கிரசின் மிதவாத, தீவிரவாத, இந்துத்துவ ரகங்களுக்கு இடையில் உண்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை. திராவிடப் பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாடிய போதிலும், ஜெயலலிதா தமது பார்ப்பனியத்தை பாரதீய ஜனதாவுடன் ஐக்கியப்படுத்துகிறார்; கலைஞரோ பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கண்டுள்ளார்.
இவற்றில் எல்லாம் இருந்து கிடைக்கும் படிப்பினை என்ன? இந்துத்துவத்தையும் உலகமயமாக்கத்தையும் எதிர்ப்பது என்பதன் பொருள் என்னவெனில், தேர்தல் அரசியலில் இதற்கான தீர்வு இல்லை என்று உணர்வதே ஆகும். தீர்வு, மக்கள் திரள் போராட்டங்களில் இருக்கிறது – பாசிசச் சக்திகளுக்கெதிரான தெருச்சண்டையில் இருக்கிறது.
பாசிச இந்துத்துவத்தை உலகமயமாக்கலில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது. எனவே, ஒன்றுக்கு எதிரான போராட்டம் என்பது மற்றொன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இருந்தே தீரவேண்டும். எனவே, இவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் அரசியல் ரீதியானவை மட்டுமின்றி கலாச்சார ரீதியானவை என்பதாகவும் அமைய வேண்டும். உள்ளூர் அளவில் மட்டுமின்றி உலகுதழுவியதாகவும் அமைய வேண்டும். பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
____________________________
மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று. பலமுறை டிக்ஷனரி மாதிரி ஒப்பிடத் தக்கது.