privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகுடந்தை தீ விபத்தா - தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?

குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?

-

குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ? – 1  மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்

2004-ல் நடந்த கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. காலம் தாழ்த்தி வந்துள்ள இத்தீர்ப்பில் உயரதிகாரிகள் பலரை அரசே விடுவித்திருப்பதும், எந்த அதிகாரமும் இல்லாத எழுத்தர்கள், சமையல்காரர் போன்றோர்களுக்கு, பள்ளி தாளாளருக்கு இணையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதையும் பார்க்கையில் பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சற்றும் குறையாத வகையில் இழுத்தடிக்கப்பட்டுதான் இந்த தீர்ப்பே நமக்கு கிடைத்துள்ளது.

இந்த விபத்து நடந்த பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரைகளை எந்த தனியார் பள்ளியும் மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை என்பதுதான் கடந்த பத்தாண்டு கால அனுபவம். கட்டண நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட சிங்காரவேலர் கமிட்டியையும் தங்களது கால் தூசுக்கு சமமாக கூட எந்த தனியார் பள்ளி முதலாளிகளும் மதிக்கவில்லை. மக்களும் வேறு வழியேயில்லாத காரணத்தால் தனியார்மய மோகத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். “பொதுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தவும், தாய்மொழி வழிக் கல்விக்கு சாவுமணி அடிக்கவும், கல்வித் தந்தைகள் கண்மூடித்தனமாக மக்களை சுரண்டி கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் இந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் வலிய வந்து தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் குறைத்து விடாது” என்கிறார் மூத்த கல்வியாளர் திரு. எஸ்.எஸ். ராஜகோபாலன்.

இது குறித்து அவருடன் நடத்திய உரையாடலை கீழே தொகுத்து தருகிறோம்.

ss-rajagopalanகும்பகோணம் தீ விபத்தை ஒரு ஓலைக் கூரை பிரச்சினையாக திசை திருப்பிய அரசு, முதலில் இருந்தே வழக்கில் காலம் தாழ்த்தும் வேலையை செய்து வருகிறது. இப்படி வகுப்பறைக்கு அருகில் சமையற் கூடம் அமைக்க சமூக நலத்துறை ஒப்புதல் கொடுத்திருப்பதால் இதுவும் அரசின் பொறுப்புதான். இச்சம்பவத்திற்கு பிறகு சில அரசுப் பள்ளிகளுக்கு நான் சென்று பார்த்த போது கூரைகளை மட்டும் அகற்றியிருந்தார்கள். பதிலுக்கு எதனையும் கொண்டு மேலே மூடாத காரணத்தால் குழந்தைகள் வெயிலிலும், மழையிலும் துன்பப்படுவதுதான் எல்லா இடங்களிலும் நடைபெற்றது. “ஏன் கூரை போடவில்லை என்று கேட்டால், அரசாங்கம் தான் ஓலை கூரையை எடுக்கச் சொன்னார்கள். அவர்கள்தான் பதிலுக்கு எதைப் போட வேண்டுமோ அதைப் போட வேண்டும், நாங்கள் இதில் என்ன செய்ய முடியும்” என்றார்கள். ஏனென்றால் அது அரசுப்பள்ளி. இதுதான் நிலைமை.

விபத்து நடந்த பள்ளியில் அன்று ஆசிரியர்கள் குழுந்தைகளைப் பூட்டி வைத்து விட்டு கோவிலுக்கு போயிருக்கிறார்கள். பள்ளி நேரத்தில் ஆடி வெள்ளிக்காக ஆசிரியர்கள் சிவன் கோவிலுக்கு போனதை எப்படி அனுமதிக்கிறார்கள். இதில் இசுலாமியர்களுக்கு பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே விதிவிலக்கு தரப்பட்டிருப்பினும், அவர்கள் மதிய உணவு இடைவேளை போன்ற ஓய்வு நேரத்தில் தான் தொழுகைக்கு செல்கின்றனர். எனவே ஆசிரியர்கள் குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு சென்றது தவறு.

கீழ்தளம் தமிழ் வழி அரசு உதவி பெறும் மாணவர்களுக்கானது. அப்படி சொல்லித்தான் அரசிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கில மீடியம் படிப்பவர்கள் படி ஏற முடியாது என்று சொல்லி தமிழ் மீடியம் படிப்பவர்களை இரண்டாவது மாடிக்கு மேலே அனுப்பி இருக்கின்றனர். இது அப்பட்டமான விதிமீறல்

கும்பகோணம் பள்ளி தீவிபத்துஎழுத்தருக்கு தண்டனை என்பது ஏற்க முடியாது. அவருக்கு எந்தவித கருத்து சொல்லும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது. ஆனால் கல்வி இயக்குநரை அரசே வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இவர்தான் 126 ஆசிரியர் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து அதனால் சுப்ரீம் கோர்ட்டில் கண்டனம் பெற்றவர்; அவர் அந்த அனுமதி கொடுத்த நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை. அவரை வழக்கில் இருந்து விடுவித்தது மாபெரும் தவறு.

இந்த சம்பவத்திற்கு பிறகும் கூட உதவி பெறும் பள்ளியின் வளாகத்திலேயே மெட்ரிக் பள்ளிகளையும் இயங்க அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு கட்டிடங்களில் தான் இயங்க வேண்டும் என்கிறது சட்டம். பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலம் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்பது தனியார் பள்ளி முதலாளிகளின் தொடர்ச்சியான தலையீட்டினால் இப்போது அறுபது சென்டு என்ற நிலைமைக்கு வந்து விட்டது. பள்ளி வளாகத்தில் பிற பள்ளிகளோ அல்லது வணிக நிறுவனங்களோ இருக்க கூடாது என்பது சட்டம். இதனை எல்லாம் தடுத்து நிறுத்தும் விதமாக செயல்பட்டிருக்க வேண்டியவர்களான அரசோ கல்வித்துறையோ இந்த விபத்திற்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்கப்படவில்லை. என்பதுதான் ஏமாற்றத்திற்குரியது.

இதுதவிர பல விபத்துக்கள் பள்ளிகளுக்குள் நடக்கின்றன. தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தைகள் இறந்து போவது, மூடியில்லாத, சுவரில்லாத கிணற்றில் தவறி இறந்து போவது என பள்ளி வளாகத்திற்குள் விபத்துக்கள் நிறையவே நடக்கிறது. அதில் ஆக மோசமானது குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். பாலியல் தொந்திரவு செய்யும் ஆசிரியர்களை இட மாற்றுதல் மட்டும் செய்கிறார்கள். மாறுதலாகிப் போய் செல்லும் இடத்திலும் அவர் அதே தவறை செய்வார். இது ஒரு குற்ற நடவடிக்கை. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை மனநோய் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி தற்போது இருக்கும் இடம் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தம் என்பதால் தமிழக அரசு அந்த இடத்தை 99 வருசத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஒரு குடியிருப்பு உருவாகையில் பூங்கா, பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியன கட்டாயம் அப்பகுதியில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கான இடம் முறையாக முன்னரே ஒதுக்கப்படுகிறது. அப்படி அரசால் பள்ளிக் கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உருவான பள்ளி தான் பத்மா சேஷாத்ரி பள்ளி. இப்படி ஒதுக்கப்படும் நிலத்தில் பள்ளி நடத்துவதற்கான விண்ணப்பம் கோரும் அரசு விளம்பரம் நீதிமன்ற கண்துடைப்புக்காக மட்டுமே வெளியாகும். இது யாருக்கும் தெரியாத அளவில்தான் பெரும்பாலும் பத்திரிகைகளில் ஒரு ஓரமாக வெளியாகும். அப்படி உருவான பத்மா சேஷாத்ரி பள்ளிதான் கல்விக் கொள்ளையில் முன்னணியில் நிற்கிறது.

கல்வி தனியார்மயம் என்பது மெட்ரிகுலேசனை கொண்டு வந்த எம்ஜியார் காலத்தில் இருந்து துவங்குகிறது. ஆனால் அவர் இன்று விமர்சனத்திற்கப்பாற்பட்டவர் என ஆகி விட்டதால் கருணாநிதி உள்ளிட்ட யாரும் இதைப் பற்றி பேச மறுக்கிறாரகள். தனியார்மயம் என்பது பொதுத்துறையை கழுத்தை நெறிப்பது, தனியாரை அனுமதிப்பது என்ற இருமுனைகளில் செயல்படுகிறது. அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்ற கோயபல்சு பிரச்சாரம் தனியாரால் முன்னெடுக்கப்படுகையில், கல்வித்துறை செயலரும், அமைச்சரும் மவுனம் சாதிக்கிறார்கள். “எனது பள்ளி தரமானது, என்னிடம்தான் தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்வது அவர்கள் கடமையில்லையா?

சமச்சீர் கல்வி மாநாடு
2011 சமச்சீர் கல்வி மாநாட்டில் மாணவர்கள் (கோப்புப் படம்)

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களை சேர்ப்பது என்பது ஒருவகையில் பார்த்தால் கல்வி மறுப்பு சட்டம் தான். இந்த விசயத்தில் நமது இடதுசாரிகளே கொஞ்சம் திசை விலகி விடுகிறார்கள். 25% ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு என்பது நல்ல திட்டமில்லையா என்கிறார்கள். இதில் சில என்ஜிஓக்களும் உடன் நிற்கிறார்கள். உண்மையில் நாம் செய்ய வேண்டியது இந்த இட ஒதுக்கீட்டில் தனியாரில் ஏழை மாணவர்களை சேர்ப்பதல்ல, மாறாக அரசு பள்ளியின் தரமுயர்த்தப்பட போராடுவது, மாணவர்களை அங்கு சேர்க்க வைக்க போராடுவது என்பதுதான். இதை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ராஜூ வந்துதான் செய்ய வேண்டுமா. இதனை செய்ய வேண்டியவர்கள் அரசு கல்வித்துறை அதிகாரிகள் இல்லையா?

1970 வரை உள்ளாட்சி அமைப்புகள்தான் பள்ளிகளை நடத்தின. அவை அரசு உதவி பெறும் பள்ளிகள்தான். ஆசிரியர் பயிற்சிக் கூடத்துடன் இணைந்திருக்கும் மாதிரி அரசு பள்ளிகள், இசுலாமிய பெண்களுக்கான மூன்று பள்ளிகள் என மொத்தம் இருபது பள்ளிகளை மட்டும்தான் ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசு நிர்வகித்து வந்தது. பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே நேரடியாக நிர்வகிக்க எடுத்துக் கொண்டது. நாற்பதாயிரம் பள்ளிகளை இணைத்து நிர்வாகத்தை அரசு மேற்கொள்வது என்பது எளிதல்ல. முன்னர் உள்ளாட்சி பள்ளியாக இருக்கையில் நமது பள்ளி என்று மக்கள் இப்பள்ளிகளைப் பார்த்தார்கள். இப்போது அரசு பள்ளியாகி விட்டதால் அரசு பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டார்கள். அடுத்து எம்.ஜி.ஆர் செய்த தவறு ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக்கியது. இதனை மாற்றி இப்பள்ளிகளை மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட அனுமதி தர வேண்டும்.

இப்போது நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு பித்தலாட்டம் தான். ஆசிரியருக்கு ஒரு விசயத்தை குழந்தைகளுக்கு விளக்குமளவுக்கு மொழியறிவு எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான தகுதி. இப்போது ஏன் இவ்வளவு மாணவர்கள் தேர்வு பெறவில்லை என்ற கேள்வியை யாராவது சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்கிறார்களா? 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்த இடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள். எப்படி பொறியியல் கல்லூரிகள் அதிகரித்த பிறகு அந்த கல்வியின் தரம் கீழே விழுந்ததோ அதே போன்ற நிலைமைதான் இன்று ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் எதிலும் இணைந்த மாதிரி பள்ளிகள் கிடையாது. துறை போகிய ஆசிரிய பயிற்சி நிலையங்கள் என்று எதுவும் இல்லை. இதில் உருவாகும் அரைவேக்காட்டு ஆசிரியர்களால், இத்தேர்வுக்கு தயாராக்கும் நுழைவுத்தேர்வு ஆயத்த கைடுகளை போடும் நிறுவனங்கள், தனிப்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தான் பயன்பெறுகின்றன. இதனால் இதற்கு வழியில்லாத ஏழை மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.

2012 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
2012 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

பொதுக்கூட்டம், எழுதுவதை தாண்டி நேரடியாக மக்களிடம் சென்று இந்த கல்வி தனியார்மயம் பற்றி நாம் பேச வேண்டும். பாப்புலிஸ்டு திட்டங்கள்தான் பாசிசத்தின் வருகைக்கான முன்திட்டமிடல் என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது இடதுசாரிகளின் கடமை. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உப்புக்கு அதன் பிறகு வந்த பிரதமர்கள் நேரு துவங்கி இந்திரா வரை யாரும் வரி போடவில்லை. இப்போது வரி போட்டு விட்டதுடன் அரசே அதனை மக்களிடம் விற்கவும் துவங்கி விட்டார்கள். குடிநீரை அரசு மலிவு விலைக்கு விற்க துவங்கி விட்டது. அது பாதுகாக்கப்பட்டதா என்பது வேறு விசயம்.

இட ஒதுக்கீடு செய்வதோடு அரசின் கடமை முடிந்து விடவில்லை. இட ஒதுக்கீடு இல்லாமல் முழுமையாக பயன்பெற வேண்டிய நிலைமைக்கு தரமான கல்வியை துவக்க பள்ளியில் இருந்தே அதனை தருவதற்கு முயற்சிக்க வேண்டாமா? மதிப்பெண்களை குறைவாக நிர்ணயித்த காரணத்தால் படிப்பில் சேர்ந்த எத்தனை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முறையாக அதனை முடித்தார்கள். நிறைய பேர் பாதியிலேயே படிப்பை கைவிட்டனர். அல்லது பதினைந்து அரியரோடு வெளியே வந்தனர்.

நமது நம்பிக்கை மாநில அரசை விட மத்திய அரசு உசத்தி என்று இருப்பதால் அதனைத்தான் நாம் மிகவும் மதிப்போம். தமிழ்நாட்டு போலீசை விட சிபிஐ உசத்தி என்பதுதான் நமது நம்பிக்கை. ஆனால் அங்குதான் ஊழல் அதிகம் என்று நமக்கு தெரியாது. அது போல முன்னர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த பாலகுருசாமி பொறியியல் கல்லூரிகளின் மதிப்பெண் பட்டியலை வெளியிட சொன்னார். யாரும் அதனை சட்டை செய்யவில்லை. தற்போது நீதிமன்ற உத்திரவுக்கு பிறகு ஏஜசிடிஈ வந்துதான் தரவாரியாக கல்லூரிகளது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் எல்லோரது லட்சணமும் வெளி வந்து விட்டது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளிகளில் முதல்வராவதோ அல்லது தனியாக மெட்ரிக் பள்ளிகளை ஆரம்பிப்பதோ கூடாது என்று அவர்கள் ஓய்வுபெறும் விழாவில் நான் பேசுவேன். எதாவது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும் என்றுதான் சொல்கிறேன். நான் சொல்வதை யாரும் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.

நாமக்கல் தனியார் பள்ளிகளை துவங்கியவர்கள் அனைவருமே அரசு ஆசிரியர்கள்தான். திருச்செங்கோடு பள்ளியை துவங்கியவர் சங்ககிரி பள்ளியின் தலைமையாசிரியர். அவரைத்தான் பாடத் திட்டக் குழுவிலும் அரசு போட்டது. அவர் பள்ளியில் இருந்து ஆண்டுக்கு நாற்பது பேராவது அரசு மருத்துவ கல்லூரிக்கு போய் விடுகிறார்கள். பாடத் திட்டத்திற்கான ஒரு கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. நேரில் விசாரித்து பார்த்தால் தனக்கு தகவல் இல்லை என கூசாமல் பொய் சொல்லியிருந்தார். இதனை கூரியர் சர்வீஸ் மூலம் சரிபார்த்துதான் சொல்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே கடைசி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நான்கு செல்பேசிகளை வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்க அவற்றை அணைத்து விட வேண்டும் அல்லது வெளியில் சென்று பேசுமாறு கூறினேன். இயக்குநர்களுக்கு மதிய உணவை இறைச்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார்.

இந்த அரசு இயக்குநர்கள் அரசு பயணியர் விடுதிகளில் தங்குவதற்கு பதிலாக ஐந்து நட்சத்திர விடுதிகளில்தான் பெரும்பாலும் தங்குகின்றனர். சமச்சீர் கல்வி விசயத்திலேயே அங்கு இருந்த இயக்குநர்களிலேயே தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநர் ஒருவரை தவிர மற்ற அனைவருமே மெட்ரிக் பள்ளிகளின் ஆட்கள்தான். ஆனால் நமக்கு இவர்கள் கண்ணுக்கு தெரிவது இல்லை. அம்பானி போன்றவர்கள் தெரிவதில்லை. நமக்கு சிறிய அளவில் திருடுபவர்கள் தான் கண்ணில் தெரிகிறார்கள்.

(தொடரும்)