privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்

முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்

-

மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் கொட்டத்தை அடக்கிய தொழிலாளர் வர்க்கம்

துரை மாவட்டம், யானை மலை ஒத்தக்கடை சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் நிறைந்த ஊர். எந்நேரமும் சம்மட்டி ஒலி கேட்டுக் கொண்டே ஒரு துணை நகரம் போலவே இயங்கி கொண்டிருக்கக்கூடிய இடம். ஒத்தக்கடையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியத் தொழிலாக ஊரின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழில். இங்குள்ள பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரமாக உயர்ந்து நிற்கின்றன எவர் சில்வர் பட்டறைகள்.

எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்
எவர்சில்வர் பாத்திர தொழிலாளர் (படம் : நன்றி தி ஹிந்து)
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-shine-for-workers-of-stainless-steel-utensil-manufacturing-units/article1141581.ece

நாடெங்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிறு தொழில்களும், விவசாயமும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளால் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த‌ எவர்சில்வர் தொழிலின் எதிர்காலமும் கேள்விக் குறியாகியிருக்கிறது.

பிளஸ்மா வெல்டிங்கை எதிர்த்து போராட்டம்

இந்நிலையில் தற்போது எவர்சில்வர் தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கும் எமனாக வந்து நிற்பது பிளாஸ்மா வெல்டிங் மிஷின். இந்த மிசின் மூலம் வெல்டர், டிங்கர் இல்லாமல் ஒரு நாளைக்கு 5,000 பீஸ்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். வெறும் 8 அல்லது 10 பிளாஸ்மா வெல்டிங் மிசின் மூலம் ஒத்தக்கடையில் இப்போது உற்பத்தியாகின்ற அளவு பீஸ்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால் வெல்டிங் டிங்கர் தொழிலாளர்கள் சுமார் 200-க்கு மேற்பட்டோர் உடனடியாக வேலை இழப்பார்கள். மீதமுள்ள தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள். இது கற்பனையல்ல, ஏற்கனவே “பிளாஸ்மா” வெல்டிங், அனுமதிக்கப்பட்ட மதுரையின் பிறபகுதிகளிலும் மற்றும் காரைக்குடி, கும்பகோணம் திருப்பூரிலும் மற்றும் ஒத்தக்கடையில் வேறு சில பிரிவுகளிலும் வெல்டிங், டிங்கர் தொழிலாளர்கள் வேலையிழந்து தொழிலை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் கும்பகோணம் பகுதி தொழிலாளர்கள் வட்ட பிளாஸ்மா வெல்டிங்கை எதிர்த்து விடாப்பிடியாக போராடி வருகின்றனர்.

வேலையை பறித்து வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் சில உற்பத்தியாளர்கள்

ஆலைகள் முதல் சாலைகள் வரை உணவுப் பொருட்கள் முதல் இயந்திரங்கள் வரை அனைத்தையையும் படைத்தளிப்பவர்கள் உழைப்பாளி மக்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை வறுமையில் தள்ளும் எதையும் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்ல முடியாது. அநாகரிகம், மூர்க்கம் நிறைந்த கொடும் மனம் படைத்தோரின் செயல் என்றுதான் அதை சொல்ல முடியும். மலம் அள்ளுவது, சாக்கடை வாருவது போன்ற தொழில்களில் நவீனத்தை கொண்டுவர துப்பில்லாத, விருப்பமில்லாத ஆட்சியாளர்கள்தான் இன்று வளர்ச்சி முன்னேற்றம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து விரட்டுகிறார்கள். சிறு தொழில்கள் அழிக்கப்படுகின்றன, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலைத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலையிருந்து விரட்டப்படுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.

ஒத்தக்கடையில் பிளாஸ்மா வெல்டிங்கை கொண்டுவந்து எவர்சில்வர் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டத் துடிக்கிறார்கள் சில உற்பத்தியாளர்கள். அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்து எவர்சில்வர் தொழிலாளர்களின் உழைப்பால் இன்று கோடீஸ்வரராகிவிட்ட, தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கு வந்த காதர் பாய் என்பவர் மிகவும் முக்கியமானவர். இவர் தனது மகன் மற்றும் சில எடுபிடிகளின் மூலம் பிளாஸ்மா வெல்டிங் மிசின் கொண்டு வந்து, பல ஆண்டுகள் தன்னிடம் உழைத்த தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தி விட்டார். ஒரு பக்கம் இன்னும் பல கோடிகளை சேர்க்க வேண்டும் என்கின்ற லாப வெறியில் காதர் பாய் எனில் இன்னொரு பக்கம் கேள்விக் குறியாக நிற்கும் பல நூறு தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும்.

காதர் பாய் முகத்தில் கறி

இந்நிலையில் ஒத்தக்கடை எவர்சில்வர் வெல்டர்‍‍, டிங்கர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள், ஒத்தக்கடையில் உறுதியான முடிவோடு பிளாஸ்மா வெல்டிங் மிசினை எதிர்த்து தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு அஞ்சி தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்க கூடிய பிளாஸ்மா வெல்டிங்கை ஒத்தக்கடையில் வைக்காமல் அதற்கு அருகில் உள்ள திருமோகூரில் குமார், கண்ணன் ஆகிய நபர்களோடு சேர்ந்து வைக்க முயற்சிக்கின்றனர். ராமு, கணேசன் ஆகியவர்களை துணையாக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் எங்களுக்கு பாதுகாப்பாக திருமோகூர் மக்கள் இருப்பார்கள் என்று சொல்லி திரிந்து கொண்டு பிளாஸ்மாவை வைத்து உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இந்த அநியாயத்தை எதிர்த்து போராடினால் ஊர்ப்பிரச்சினையை தூண்டிவிட காத்திருந்தார் காதர்பாய். இவரின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்களும் சங்கமும் காதர்பாயின் லாப நோக்கத்தையும் தொழிலாளர்களின் வாழ்நிலையையும், தொழிலாளர் பக்கம் உள்ள நியாயத்தையும் விளக்கி பிரசுரம் தயாரித்து திருமோகூரிலேயே வீடு வீடாக பொதுமக்களிடம் வினியோகித்தனர். திருமோகூர் மக்களும் தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ” நாங்கள் யாரும் காதர் பாயையும் அவருடைய ஆட்களையும் ஆதரிக்க மாட்டோம், நாங்கள் எல்லாரும் உங்களுடைய பக்கம்தான், நீங்கள் தைரியமாக போராட்டத்தை தொடருங்கள்” என்று கூறி காதர்பாய் மற்றும் அவரது அல்லக்கைகளின் மூஞ்சியில் கரியை பூசினார்கள். ஆனால் ஆத்திரம் தலைக்கேறிய காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் பிளாஸ்மாவை எப்படியும் கொண்டு வந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

இந்நிலையில் பிளாஸ்மா வெல்டிங் வருவதை கண்டித்து 3‍/7/14 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி வேண்டி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மனு செய்தார்கள் சங்கத் தொழிலாளர்கள். விசயமறிந்த காதர்பாய் உடனே சங்கத்தின் சார்பாக போடப்பட்டிருந்த பிரசுரத்தை எடுத்துகொண்டு வந்து ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை சந்தித்து “சங்கத்தை சேர்ந்தவர்கள் எனது தொழிலுக்கு தடையாக இருப்பதோடு எனது கௌரவத்தை சீர்குலைத்து வருகிறார்கள் அதனால் இந்த ஆர்ப்பாட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார். அதோடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துள்ளார். அதற்கு விசுவாசமாய் “நீங்கள் போய் வாருங்கள் நான் கவனித்து கொள்கிறேன்” என நம்பிக்கையூட்டி காதர்பாயை அனுப்பி வைத்துள்ளார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

2/7/14 அன்று இரவே, “எவர்சில்வர் தொழிலில் பிளாஸ்மா என்கிற வெல்டிங்கை புகுத்தி பல குடும்பங்களை அழிக்கத்துடிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காதர்பாயை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என சங்க சுவரொட்டிகள் பளிச்சிட்டன. சுவரொட்டியை கண்டதும் காதர்பாய் வயிற்றில் புளியும், ஆய்வாளர் கிருஷ்ண்குமாருக்கு காதர்பாயின் பாக்கெட் மீதான விசுவாசமும் சுரந்தது.

3/7/14 அன்று காலை 10 மணி அளவில் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காவல் நிலையம் வந்தவுடன் இருப்புகொள்ளாமல் சங்க பொறுப்பாளர்களை போனில் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேச உடனே வருமாறு அழைத்தார். உடனே சங்கத்தின் தலைவர் வீரர் அலி, செயலர் மாரிமுத்து மேலும் சில தொழிலாளர்களும் காவல் நிலையத்திற்கு சென்றார்கள்.

ஆய்வாளரை சந்தித்ததும் அவர்களிடம் “பிளாஸ்மா வெல்டிங் என்று கூறிவிட்டு தனிநபரான காதர் பாயை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். இது சட்டப்படி தவறு” என்று மிரட்டும் தொனியில் பேசினார். எப்படியாவது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று “என்ன செய்ய போகிறீர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று திரும்ப திரும்பக் கேட்டுள்ளார் ஆய்வாளர்.

அதற்கு “பிளாஸ்மா வெல்டிங் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வாழ்வை அழிக்கிறது, அதைக் கொண்டு வருபவர் காதர்பாய் அதனால்தான் அவரையும் பற்றி பேசி வேண்டியுள்ளது” என்று சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது அல்லது கட்டப் பஞ்சாயத்து செய்து காதர்பாயின் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பது என்ற சீரிய லட்சியத்துடன் தீவிர முயற்சி செய்தார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

தொழிலாளர்களோ ஆய்வாளரின் நோக்கத்தை புரிந்து கொண்டு பணிய மறுத்தார்கள். உடனே ஆத்திரம் தலைக்கேறிய ஆய்வாளர் எழுந்து கிறுக்கனைப்போல் காவல் நிலைய வாயிலில் ஒட்டப்பட்டிருந்த சங்க சுவரொட்டியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து “என்ன தைரியமிருந்தால் பேரு போட்டு ஒட்டுவீங்க, எல்லோரும் உள்ள தான் போகப்போறீங்க. யோவ் ஏட்டு! எல்லோர்ட்டயும் இருக்கிற செல்போனை புடுங்குய்யா” என்று சொல்லிக் கொண்டே தனது நோக்கத்திற்கு சங்க நிர்வாகிகள் மசியாததால் சங்கத்தலைவர் வீரர் அலியை அடிக்க கை ஓங்கியுள்ளார்.

உடனே “எதுக்கு சார் அடிக்க வர்றீங்க, நாங்க எங்க தரப்பு நியாயத்தை பேசப்போறோம், நீங்க கேசு போடணும்னா போட்டுகொள்ளுங்கள். நாங்கள் பார்த்துகொள்கிறோம்” என ஆய்வாளரை எதிர்த்துப் பேசியுள்ளார் வீரர் அலி. எதிர்கேள்வியை சகித்துகொள்ள முடியாமல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அருகில் நின்று கொண்டிருந்த சங்க தொழிலாளர்களை மூர்க்கத்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். ஆய்வாளரின் மூர்க்கத்தனமான இந்த தாக்குதலினால் சங்கத்தை சேர்ந்த படையப்பா செந்தில் என்ற தொழிலாளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

ஆய்வாளரை சங்க‌ தோழர்கள் சந்திக்க போயிருப்பதை அறிந்த சில தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்திருக்கிறார்கள். காவல் நிலையத்திற்குள் பேசவேண்டும் என அழைத்து சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் அடித்து உதைத்து ரவுடியை போல் ஆய்வாளர் நடந்து கொள்வதை தெரிந்து கொண்ட அத்தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் இணைச்செயலாளருமான வாஞ்சிநாதனுக்கு தொலைபேசியில் காவல் நிலையத்தில் நடக்கும் விசயங்களை தெரிவித்துள்ளனர்.

உடனே வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் அடாவடித்தனத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். இதனால் தொழிலாளர்கள் ஆத்திரம் கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.  எனவே, உடனே சங்க தோழர்களை வெளியே விடச்சொல்லியும், இதற்கு காரணமான கிருஷ்ணகுமார் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்துள்ளார்.

கண்காணிப்பாளரிடம் தன் மீது புகார் போனதை அறிந்ததும் பம்ம ஆரம்பித்தார் கிருஷ்ணகுமார். காவலர்களிடம் “யோவ் இவங்களோட செல் போனையெல்லாம் திருப்பிக் கொடுத்துடு” என்று ஆணையிட்டார். தொழிலாளர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சங்க தொழிலாளர்களை பார்த்து ” நீங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டீங்க, கொடுத்திட்டேன், இனியும் ஏதாவது உதவி வேண்டும், அனுமதி வேண்டும் என்றாலும் வாருங்கள், எந்த உதவி என்றாலும் செய்து தருகிறேன்” என நைச்சியமாக பேச ஆரம்பித்துள்ளார்.

சங்க தோழர்களிடம் “உங்க சங்கத்தின் சட்ட ஆலோசகர் யாரு?” எனக் கேட்டுள்ளார் கிருஷ்ணகுமார். தோழர்கள் வாஞ்சிநாதன் என்று சொல்ல, இன்று ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுவதும் வாஞ்சிநாதன் தான் என்பதை கேட்டு அறிந்து கொண்ட கிருஷ்ணகுமார் “வாஞ்சிநாதன் ஒரு கூட்டத்தில் என்னோட‌ சட்டையை கழட்ட வைப்பேன் என்று சொல்கிறார் . அதை கேட்டதும் எவ்வளவு மனது கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக நடக்கிறவன், என்னை இப்படி பேசலாமா?” என மாலை மாலையாக கண்ணீர் வடித்து அழுது தொழிலாளர்களிடம் சுய பச்சாதாபம் தேட நாடகம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

விசயம் என்னவெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று பு.ஜ.தொ.மு. தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தபோது கூட்டத்தன்று காலையில் தோழர்களிடம் வந்து “யாரைக் கேட்டுகூட்டம் நடத்துகிறீர்கள்” என பவுசாக கேட்டுள்ளார்.

தோழர்களோ, “தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றுவிட்டோம்” என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, “எனக்கு தெரியாமல் கூட்டம் நடத்துவீர்களா, உங்களை எல்லாம சுட்டுவிடுவேன்” என்று திமிர்த்தனத்துடன் பேச, “அனுமதி அளித்தவரிடம் போய் கேளுங்கள்” என்று பதிலளித்துவிட்டார்கள். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில்தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆய்வாளரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், “நாங்க நினைச்சா நீ காக்கி சட்டையே போட முடியாது, சட்டையை கழற்றிவிடுவோம்” என்று இவரை கண்டித்தும் பேசியது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் சங்க நிர்வாகிகளிடம் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

மீண்டும் பிரச்சினைக்கு வருவோம். காவல் நிலையத்திற்கு வெளியே நிற்கின்ற தொழிலாளர்கள் காவல்நிலையத்திற்குள் நடக்கின்ற அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அணிதிரள ஆரம்பித்துள்ளார்கள். சில நிமிடங்களில் 200-க்கும் மேலான தொழிலாளர்கள் திரண்டவுடன் நிலைமையை உணர்ந்துகொண்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஏற்கனவே தன் மீதுகண்காணிப்பாளரிடம் புகார் போய்விட்டது. தான் அடித்ததில் ஒரு தொழிலாளி (படையப்பா செந்தில்) பாதிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் புரிந்துகொண்டு சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் வெளியில் செல்லலாம் எனச் சொல்லியுள்ளார். எதுவுமே நடக்காதது போல் பல்லைக் காட்டி இளித்து பேசி அனுப்பி வைத்துள்ளார் கிருஷ்ணகுமார்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த தொழிலாளர்கள், ஆய்வாளரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட படையப்பா செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் இராசாஜி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து பேரணியாக திரண்டுவந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கண்டன உரையாற்றினார். பின்னர் தொழிலாளர்கள் மொத்தமாக சென்று காவல்நலைய கண்காணிப்பாளரை சந்தித்து ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை புகாராக அளித்தார்கள்.

தொழிலாளர்கள் அளித்த புகாரின் விளைவாக ஆய்வாளர் கிருஷ்ண்குமார் ஆயுதபடை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் ஒத்தக்கடையில் பணிபுரிந்த காலத்தில் எல்லா சமூக நல அமைப்பை சேர்ந்தவர்களையும் தான் சொல்லி கேட்காவிட்டால் காவல்நிலயத்திற்கு அழைத்து தாராளமாக அடிப்பார். கட்டப்பஞ்சாயத்து செய்து பச்சையாக ரவுடித்தனம் செய்வார். லஞ்ச லாவண்யங்களில் ஊறித்திளைத்து, மக்களின் பிரச்சினைகளை ஒட்டி சுவரொட்டி ஒட்டினால் கூட கூப்பிட்டு வைத்து மிரட்டுவார். சுருக்கமாக சொன்னால் சினிமா போலீசை போல் நடந்து கொள்வார். அப்படியெல்லாம் கொட்டமடித்த ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதும் ஒத்தகடையின் சகல பிரிவு மக்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டார்கள்.

கிருஷ்ணகுமாரின் தினவெடுத்த அடாவடித்தனங்களால் வெறுத்து போயிருந்த ஒத்தக்கடை பொதுமக்கள், தொழிலாளர்கள், சமூக நல அமைப்புகள் அனைவரும் வெல்டிங்‍‍‍,டிங்கர் சங்கத்தையும் சங்கத் தொழிலாளர்களையும் பாராட்டினார்கள்.

ஒற்றுமையாய், ஒரு அமைப்பாய் தொடர்ச்சியாக போராடினால் தொழிலாளிவர்க்கம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை சகல தரப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ளது, முத்தாய்ப்பாக படையப்பா செந்திலை தாக்கியதற்காக ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது தனிப்பட்ட வழக்கு நீதிமனற‌த்தில் தொடுக்க இருப்பதை கேள்விப்பட்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார் “வழக்கு எதுவும் போட வேண்டாம். நாம் வெளியே பேசித்தீர்த்துக் கொள்வோம்” என்று ஒத்தக்கடையில் தற்போது பணியில் இருக்கும் துணை ஆய்வாளர் மூலம் சமாதானத் தூது அனுப்பியிருக்கிறார்.

தொழிலாளர்களோ முகத்தில் அறையும் வகையில் அதை மறுத்துவிட்டார்கள்.

அதன் பின் 10/7/2014 அன்று காதர்பாயை கண்டித்து தொழிலாளர்களின் நியாயத்தை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களும் மாற்று சங்க நிர்வாகிகளும் பொது மக்களும் திரளாக வந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளும் உரையாற்றினார்கள். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இது ஒத்தக்கடை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

ஒத்த‌க்கடை வாழ் உழைக்கும் மக்களின் நம்பிக்கையின் ஒலிக்கீற்றாய் புரட்சிகர இயக்கங்களும் அதன் தலைமையில் இயங்கும் சங்கங்களும் விளங்கி வருவதை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

தகவல்
மதுரை மாவட்ட எவர்சில்வர் வெல்டர்‍ டிங்கர் தொழிலாளர் சங்கம்