Thursday, May 30, 2024
முகப்புஉலகம்அமெரிக்காவெடிகுண்டுகளுக்கு மத்தியில் தேநீர்

வெடிகுண்டுகளுக்கு மத்தியில் தேநீர்

-

ரச்சேலின் கடிதங்கள் -3 போராடும் உலகம் (இறுதிப் பகுதி)

மெரிக்க ஆதரவுடன் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உயிர் நீத்த அமெரிக்க இளம் பெண் ரச்சேல் கோரி காசா முனையிலிருந்து அவரது பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களிலிருந்து : (படங்கள் : இப்போது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பானவை)

அம்மா,

உன்னையும் என்னையும் போன்ற வசதியான நடுத்தர வர்க்கத்தினர், நமது வசதிகளை கட்டமைக்கும் அமைப்புகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை தகர்ப்பதற்கு நம்மைப் போல கொடுத்து வைக்காதவர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

பிப்ரவரி 15-ல் நடந்தது போல குடிமைச்சமூகம் பெருமளவில் விழித்தெழுந்து அதன் மனசாட்சி இருப்பதன் ஆதாரத்தை, ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் அதன் தன்மையை, பிறரின் துன்பங்கள் குறித்த அதன் கருணையை பெருமளவு காட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இசுரேல் தாக்குதலால் சிதைக்கப்படும் பாலஸ்தீனர்கள் வாழ்க்கை(நன்றி : RT.com)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மேட் கிரான்ட், பார்பரா வீவர், டேல் நுத் போன்று இன்னும் அதிகமான ஆசிரியர்கள் உருவாகி அமெரிக்க குழந்தைகள் மத்தியில் விமர்சன பார்வையை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்போது நடக்கும் சர்வதேச எதிர்ப்பு இயக்கம் அனைத்து வகையான பிரச்சனைகளையும் ஆய்வு செய்வதற்கு இட்டுச் சென்று பல்வேறு தரப்பிலான மக்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஜனநாயக அமைப்பில் இயங்குவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு புதியவர்களான நாம் இனச்சார்பு, வர்க்கச்சார்பு, ஆணாதிக்கம், பாலியல் சார்பு, வயது சார்பு, திறமை சார்பு இவற்றை நீக்கிக் கொண்டு போராட்டங்களில் ஈடுபடும் திறனை வளர்த்துக் கொள்வோம் என்று எதிர்பார்க்கிறேன்.

இன்னொரு விஷயம், இது பொது எதிர்ப்பை பற்றியது. சில வாரங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஒரு பொது ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் போதோ அல்லது கலந்து கொள்ளும் போதோ, ‘அது உண்மையிலேயே தோல்வியடைந்து விடும், மிகச் சிலரே கலந்து கொள்வார்கள், அவமானப்படும்படியாகி விடும். ஊடகங்கள் நம்மை கிண்டல் செய்யும்’ என்று பயமாக இருக்கிறது.

உண்மையில் பல நேரம் அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மிகச் சிறிய அளவில் முடிந்து விடுகின்றன. ஊடகங்கள் நம்மை கிண்டல் செய்கின்றன. இந்த வார இறுதியில் நாங்கள் நடத்திய 150 பேர் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு 2,000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.

எங்கள் சிறிய ஆர்ப்பாடம் உலக அளவிலான செய்தியாக மாறவில்லை என்றாலும், அரபு ஊடகங்களுக்கு வெளியில் சில இடங்களில் ராஃபா என்ற சொல் ஒலித்தது.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட தெருநாடக போராட்டம் (நன்றி : RT.com)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சியாட்டிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காலின் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும், “ராஃபா மீதான, இராக் மீதான போரை ஒலிம்பியா (நகரம்) எதிர்க்கிறது” என்ற பதாகையை கொண்டு சென்றிருக்கிறார். அவரது படங்கள் முகமது என்பவர் நடத்தும் “ராஃபா – இன்று” இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. இங்கும் பிற இடங்களிலும் உள்ள மக்கள் அந்த படங்களை பார்த்தார்கள்.

கிளென், 10 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இராக் மீதான பொருளாதாரத் தடையால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை காட்டும் பெயர்ப் பலகையுடன் தெருவோரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதை நினைத்துப் பார்க்கிறேன். சில சமயம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே அவரோடு சேர்ந்து கொள்வார்கள், பெரும்பாலும் எல்லோரும் அவர்களை பைத்தியம் என்று நினைத்தார்கள். அவர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள்.

இப்போது வெள்ளிக் கிழமை மாலைகளில் பலர் கலந்து கொள்கிறார்கள். 5-வது தெருவுக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் இடையேயான சந்திப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்புகிறது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல கை அசைத்தல்களும், கார் ஒலிப்பான்களும், விரல் உயர்த்தல்களும் கிடைக்கின்றன. மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவதற்கு ஏதாவது செய்வதற்கான கட்டமைப்பை அவர்கள் அங்கு உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் கிண்டல் செய்யப்படுவதை பார்க்கும் ஒருவர் பிரச்சனை குறித்து பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதையாவது செய்வோம் என்று முடிவெடுப்பதை அல்லது ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சிறிது நேரம் நின்று போகலாம் என்று நினைப்பதை, அல்லது சாலை ஓரத்தில் நின்று இராக் குழந்தைகள் கொல்லப்படுவதை எதிர்த்து பேசி கிண்டலுக்குள்ளாவதை விட குறைவாக நகைப்புக்குரியதாக தோன்றும் ஏதாவது செய்ய முடிவு செய்வதை எளிதாக்கினார்கள்

நீங்கள் செய்து கொண்டிருப்பது பற்றி தெரிந்து கொள்வது, நான் தனியாக செயல்படுகிறேன் என்ற உணர்வை குறைக்கிறது; நான் பலனற்ற வேலையை செய்கிறேன் என்ற எண்ணத்தை மட்டுப்படுத்துகிறது; யாரும் நாம் செய்வதை பார்க்கப் போவதில்லை என்ற விரக்தியை இல்லாமல் செய்கிறது. ஹாரன் அடிப்பவர்களும் கை அசைப்பவர்களும் உதவுகிறார்கள்; படங்கள் உதவுகின்றன; காலின் செய்வது உதவியாக இருக்கிறது.

சர்வதேச ஊடகங்களும் நமது அரசும் நாம் செய்வது மாற்றத்தை கொண்டு வரும், நாம் முக்கியமானவர்கள், நமது வேலை நியாயமானது, நாம் தைரியமானவர்கள், நாம் புத்திசாலிகள், நாம் மதிப்புக்குரியவர்கள் என்று நம்மிடம் சொல்லப் போவதில்லை. நாம்தான் ஒருவருக்கொருவர் அதை செய்து கொள்ள வேண்டும். அதை செய்வதற்கான ஒரு வழி நமது வேலையைப் பற்றி எல்லோருக்கும் அறியும்படி செய்வது.

குழந்தை பத்திரிகையாளர்
காசாவில் குப்பை பையை மேல் கோட்டாகவும், டி.வி என்று எழுதப்பட்ட ஹெல்மெட்டுடனும், எதிர்காலத்தில் தானும் பத்திரிகையாளர் ஆக விரும்புவதாக படம் எடுக்க நின்ற சிறுவன். இந்தப் படம் டுவிட்டரில் 9,000-க்கும் அதிகமான தடவை டுவீட் செய்யப்பட்டிருக்கிறது. (நன்றி : RT.com)

அமெரிக்காவில் ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் மக்கள், வசதிகளற்ற மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள். நாம் அவர்களது போராட்டத்துடன் நம்மை இணைத்து கொள்வதன் மூலம் அவர்கள் பக்கம் நாம் நிற்பதை அவர்கள் தெரிந்து கொள்வர்கள். அல்லது போராட்டத்தை அவர்களே செய்யும்படி விட்டு விடலாம், அதன் மூலம் அவர்கள் கொல்லப்படுவதில், நாம் வகிக்கும் மறைமுக பாத்திரத்துக்காக அவர்கள் நம்மை சபிக்கும்படி விட்டு விடலாம். ஆனால், இங்குள்ள யாரும் நமக்கு சாபமிடுவதாக எனக்கு தோன்றியதில்லை.

இங்குள்ள மக்கள், அவர்களது சார்பாக நமது உயிரை பணயம் வைக்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, நமக்கு போதுமான வசதிகள் செய்து தருவதற்கும், உடல்நிலையைப் பற்றியும் அதிக கரிசனம் செலுத்துகிறார்கள். குறைந்தபட்சம் எனது அனுபவம் அதுதான். துப்பாக்கிச் சூட்டுக்கும், வெடிகுண்டு வெடிப்புகளுக்கும் மத்தியில் மக்கள் எனக்கு நிறைய தேநீரும் பிஸ்கட்டுகளும் தர முயற்சிக்கிறார்கள்.

நான் உன்னை நேசிக்கிறேன்.

ரச்சேல்.

_________________

(ரச்சேலின் தந்தை ரச்சேலுக்கு எழுதிய மின்னஞ்சல்)

மார்ச் 11, 2003

ரச்சேல்,

உனக்கு கடிதம் எழுதுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் உன்னைப் பற்றி நினைக்காமல் இருப்பது முடியாத விஷயமாக இருக்கிறது. எனவே, நான் கடிதம் எழுதாவிட்டாலும், நண்பர்களுடன் சாப்பிடும் போது உன்னைப் பற்றிய எனது பயங்களை சொல்லிச்சொல்லி அவர்களை சலிப்படைய வைக்கிறேன்.. உன்னை நினைத்து நான் பயப்படுகிறேன். அதற்கு காரணமும் இருப்பதாக கருதுகிறேன். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஆனால், டான் ரெம்ஃபர்ட் சொல்வது போல : நான் இன்னொருவரின் மகளை நினைத்து இவ்வாறு பெருமைப்படுவதைத்தான் விரும்புவேன். அப்பாக்கள் அப்படித்தான். நமது குழந்தைகள், அவர்களுக்கு எவ்வளவு வயதாகியிருந்தாலும், அவர்கள் எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு நல்லது செய்து கொண்டிருந்தாலும், இந்த அளவு அச்சுறுத்தலை எதிர் கொள்வதையும், அல்லது இந்த அளவு துயரங்களை பார்ப்பதையும் கூட விரும்பாதவர்களாகத்தான் அப்பாக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

நான் இப்படி மணலில் தலையை புதைத்துக் கொள்வது தவறு என்று நீ சொல்லலாம் (சொல்லியிருக்கிறாய்), ஆனால், நான் உன் தலையை மணலில் புதைத்து விட முயற்சிக்கிறேன், அது வேறு விஷயம். மாற்ற முடியாமல் என்னில் புதைந்திருப்பது. இதைப் பொறுத்த வரை மாற்றிக் கொள்ள முடியாதது.

நான் உன்னை நேசிக்கிறேன், கவனமாக இரு கண்ணே.

அப்பா

(ரச்சேலின் கடைசி மின்னஞ்சல்)

அப்பா,

உனது மின்னஞ்சலுக்கு நன்றி. எனது கடிதங்கள் மூலம் அம்மாவிடம் பிரச்சாரம் செய்வதை எல்லாம் அவள் உன்னிடம் சொல்லி விடத்தான் செய்கிறாள் என்று நினைத்து உன்னை முற்றிலும் புறக்கணிக்கிறேனோ என்று சில சமயம் யோசித்திருக்கிறேன்.

என்னைப் பற்றி பெரிதாக கவலைப்படாதீர்கள். இப்போதைக்கு நாங்கள் சரியாக செயல்படுகிறோமா என்பதைப் பற்றித்தான் எனக்கு மிகப்பெரிய கவலை. எனக்கு குறிப்பான அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக நான் இன்னும் உணரவில்லை. இராணுவம் சுடுவதும், வீடுகளை இடிப்பதுமான ஊடுருவல்களை வடக்கில் நடத்துவதாலோ என்னவோ ராஃபா சமீபகாலமாக அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த வாரத்தில் எனக்குத் தெரிந்த வரை ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது, ஆனால் பெரிய அளவில் எந்த ஊடுருவலும் இதுவரை இல்லை. ஆனால், இராக்கில் போர் மூண்டால் நிலைமை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது.

உங்களது போர் எதிர்ப்பு பணிகளை அதிகப்படுத்துவதற்கு நன்றி. அதைச் செய்வது எளிதானதில்லை என்று எனக்கு புரிகிறது, குறிப்பாக காசாவில் நான் அதை செய்வதை செய்வதை விட அமெரிக்காவில் நீங்கள் அதை செய்வது இன்னும் பல மடங்கு சிரமம் என்று தெரிகிறது. சார்லட்டில் உள்ள பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு நான் மிக ஆர்வமாக இருக்கிறேன். அந்த நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

இங்கிருந்து போன பிறகு என்ன செய்யப் போகிறேன் என்றும் எப்போது இங்கிருந்து புறப்படுவது என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைய நிதி நிலவரப்படி ஜூன் வரை தங்கமுடியும் என்று நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஒலிம்பியாவுக்கு திரும்பிப்போக எனக்கு விருப்பமில்லை. ஒதுக்கி வைத்திருக்கும் என்னுடைய பொருட்களை எடுத்து சரிசெய்யவும், இங்கு எனது அனுபவங்களைப் பற்றி பேசவும் நான் அங்கு வர வேண்டியிருக்கிறது. ஆனால், அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி வந்து விட்ட பிறகு, இந்த கரையின் இந்த பக்கம் இன்னும் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்ற உறுதியாக விரும்புகிறேன். ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வேலை தேடலாம் என்று திட்டமிடுகிறேன். சீரியசாக அரபு மொழியை கற்றுக் கொள்வதில் இறங்க வேண்டும்.

திரும்பிப் போகும் வழியில் ஸ்வீடனுக்கு போவதற்கு ஒரு அழைப்பு கிடைத்திருக்கிறது. அதை குறைந்த செலவிலேயே செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ராஃபாவை விட்டு கிளம்பும் போது திரும்பி வருவதற்கான தெளிவான திட்டத்துடன் போக விரும்புகிறேன்.

எங்கள் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவர் நாளை புறப்படுகிறார். அவர் இங்கு இருக்கும் மக்களிடம் விடை பெறுவதை பார்க்கும் போது எனக்கு அது எவ்வளவு சிரமமாக இருக்கப் போகிறது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் மக்கள் எங்களைப் போல கிளம்பி போய் விட முடியாது. அது விடைபெறுதலை இன்னும் சிக்கலாக்குகிறது. நாங்கள் திரும்பி வரும் போது தாம் உயிரோடு இருப்போமா என்று கூட தெரியாத நிலை குறித்து அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.

இந்த இடத்துக்கு நினைத்த போது எளிதாக வந்து போக முடியக் கூடிய நான், ஆனால் திரும்பிப் போகாமல் இருக்கிறேன் என்ற குற்றவுணர்ச்சியுடன் நான் வாழ முடியாது. இடங்களுடன் நம்மை இணைத்துக் கொள்வது முக்கியமானது என்று கருதுகிறேன். எனவே, ஒரு ஆண்டுக்குள் திரும்பி வருவதற்கான திட்டம் போட்டுக் கொள்வேன்.

என்வசம் இருக்கும் சாத்தியங்களின்படி போகும் வழியில் ஒரு சிலவாரங்களுக்கு ஸ்வீடன் போய் வருவேன் என்று நினைக்கிறேன். என்னுடைய பாரிசிலிருந்து ஸ்வீடன் போய் வர சுமார் 150 டாலர்களில் பயணச்சீட்டுகளை மாற்றி ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.

பிரான்சில் உள்ள சொந்தக்காரர்களை போய் பார்க்க வேண்டும்தான், ஆனால் அதை நான் செய்யப் போவதில்லை. அப்படி போனால், அவர்களுடன் தங்கியிருக்கும் நாட்கள் முழுவதும் சிடுசிடுவென்றுதான் இருக்க முடியும். அவர்களுக்கு என்னால் எந்த உற்சாகமும் டைக்கப் போவதில்லை. மேலும் இன்றைய நிலையில் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்குள் குதிப்பது போன்றது அது. அப்படி போனால், பெருமளவு வர்க்க குற்றவுணர்வு என்னிடம் இருந்து கொண்டே இருக்கும்.

என் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

உங்களை மிக மிக நேசிக்கிறேன்.

நான் ஹவாயி என்ற பெரிய தீவுக்கு நெசவு கற்றுக்கொள்ள அல்லது ஏதோ விடுமுறை முகாமுக்கு போயிருப்பது போல நினைத்துக்கொண்டு எனக்கு நீங்கள் கடிதம் எழுத விரும்பினால் எழுதலாம். இங்கு வாழ்க்கையை சகித்துக் கொள்ள நான் செய்யும் ஒரு விஷயம், நான் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்திலோ அல்லது மிகேல் ஜே ஃபாக்ஸ் நடிக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியிலோ இருப்பதாக கற்பனை செய்து கொள்வதுதான்.

அதனால், ஏதாவது கற்பனை செய்து கொள்ள தயங்காதீர்கள், நானும் அதனோடு ஒத்து போக தயார்.

அன்புகள் அப்பா,

ரச்சேல்

_________________________

தமிழாக்கம்: செழியன்.

நன்றி : theguardian.com

“பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 31.07.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், இரயில் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முந்தைய பகுதிகள்

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி
ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !
ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க