privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !

கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !

-

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடன் நேர்முகம் – 2 : மாணவர்களின் மீது கல்வி என்ற ‘சுமை’

ஐடி வரை மாணவர்கள் வகுப்பறையின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயது, திறமை, விருப்பம் ஆகிய மூன்றின் அடிப்படையில் தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதிக பாடத்திட்டத்தை வைத்திருப்பதால் ஒரு அமெரிக்க குழந்தையை விட இந்திய குழந்தை படிக்க கஷ்டப்படுகிறது. ஆசிரியரால் கற்பிக்க இயலாத காரணத்தால் மனப்பாடக் கல்வி முறை இங்கே வளர்கிறது. ஆக்சிஜன் என்ற சொல்லை மட்டும்தான் கற்கிறதே தவிர அதைப் பற்றி வேறு எதுவும் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற குறைபாடுகளைப் பற்றி யஷ்பால் குழு நிறையவே சொல்லியுள்ளது.

கல்விச் சுமை
ஆக்சிஜன் என்ற சொல்லை மட்டும்தான் கற்கிறதே தவிர அதைப் பற்றி வேறு எதுவும் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

வகுப்பறை நடைமுறையில் உள்ள ஆண்டான் அடிமை கட்டுப்பாடு முறைகள் குழந்தையின் இயல்பான விளையாடும் பண்பை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வைத்து, அது சுதந்திரமாக பேசுவதை தடுக்கின்றன.

சுமை அதிகமான கல்வி தருவதுதான் நல்ல தரமான கல்வி என தனியார் பள்ளிகள் சொல்லி வருகின்றன. ஐந்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு செய்தித்தாள்களை படிக்க தெரிவது, கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலை போடத் தெரிவது, நாணய மதிப்புகளை அறிந்திருத்தல் என்பது மட்டுமே போதுமானது. ஆனால் இப்போது அதிகமான கணக்குகளை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதால் கற்பது என்பதே கடினமான ஒரு விசயமாக குழந்தைகளுக்கு மாறி விடுகிறது. முதலில் பாடச்சுமையை குறைக்க வேண்டும்.

பங்கேற்பு கல்வி இருக்க வேண்டும். போட்டி முறைக் கல்வியால், தான் மட்டும் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் முதல் ரேங்க் வாங்க கூடாது என்று சிந்திக்க தொடங்குகிறார்கள். அதாவது தான் வெற்றி பெற மற்றவர்கள் தோற்க வேண்டும் என்ற விஷம் அவர்களிடையே விதைக்கப்படுகிறது. இது அரசு வேலைக்கு செல்லுகையில் தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக பிறர் மீது மொட்டைக் கடிதம் போட வைக்கிறது. போட்டிக் கல்விக்கு பதிலாக தான் கற்றவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாக கல்வி முறை மாற வேண்டும். குழுவழி கற்றல், விவாத முறையில் கற்றல் போன்றவை இதற்கு அவசியம்.

வரலாற்றுப் பாடம்
மண் வாசனை சார்ந்து வரலாறு எழுதப்பட வேண்டும்.

ஒருமுறை நான் பிரிட்டன் சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு பள்ளியில் வரலாற்று பாடம் நடத்தப்பட்டது. வாட்டர்லூ யுத்தம் நேற்று நடைபெற்றது என்றால் இன்றைய செய்தித்தாள்கள் எப்படி எப்படியெல்லாம் செய்தி வெளியிடும் என்பதை குழந்தைகள் சொந்தமாக கற்பனை செய்தி அவற்றை எழுதி சுவரில் ஒட்டியிருந்தார்கள். ஆசிரியர் இதனை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அவற்றை மாணவர்களுடன் விவாதிக்கிறார். இதில் எதனை ஏற்கலாம், ஏற்க முடியாது என்பதை விவாதித்து விட்டு கடைசியில் எது சரியானது என முடிவெடுக்கும் உரிமையை மாணவர்கள் கையில் கொடுத்து விடுகிறார்.

1948-ல் சமூக அறிவியல் பாடத்தை நம் நாட்டில் முன்வைக்கையில் வரலாறு, நிலவியலுடன் குடிமையியலும் இணைத்துதான் கற்பிக்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். இங்கே மண் வாசனை சார்ந்து வரலாறு எழுதப்பட வேண்டும். மேட்டுப்பாளையம் துவங்கி ராஜபாளையம் வரை உள்ள கரிசல் காடுகளில் தெலுங்கு பேசும் ஆந்திர மக்கள் பெருமளவு பரவி இருக்கின்றனர். இசுலாமிய படையெடுப்பின் போது தமிழகம் வந்த அவர்கள் தாங்கள் ஏற்கெனவே குடியிருந்த கரிசல் பூமியைத்தான் இங்கும் வசிக்க தெரிவு செய்தார்கள் என்பதை எந்த புத்தகம் நமக்கு வரலாறாக சொல்லித் தருகிறது. பார்ப்பனர்கள் தங்களது அர்த்தமற்ற சடங்குகளுக்காக நதித்தீரங்களை நாடினர். ஆக மக்களின் இடப்பெயர்வில் கூட வம்சாவழியும் சமூகம் சார்ந்த விசயங்களும் உள்ளன. கன்னடம் பேசுபவர்கள் தொண்டாமுத்தூர் துவங்கி கம்பம் வரை உள்ள பள்ளத்தாக்குகளில் தான் குடிபெயர்ந்தார்கள். இதைப் பற்றி சொல்லித் தருவதுதான் சமூக அறிவியல். இதனை தடுத்தவர்கள் சென்னையை சேர்ந்த ஆசிரியர்கள். பிரிட்டிஷார் காலத்தில் படித்த இவர்கள் இப்படி சிந்திக்க விரும்பவில்லை. அதற்கு தகுந்த திறமையும், அறிவும் அவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

பள்ளிக் குழந்தைகள்
“உயிருள்ளவை நகரும்” என்று சொன்னார் ஆசிரியர். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு ஒரு மாணவன் கேட்டான். “ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு உயிர் இருக்கிறதா” என்று.

விவாதித்தல் மூலமாக கற்பதும் கற்றுக்கொள்வதில் முக்கியமான முறை. ஆந்திராவில் குறைந்தபட்சம் ஒரு குழந்தை ஒரு பாட வேளையின் போது ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டும் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை தனது குறிப்பேட்டில் ஆசிரியர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதனை கண்காணிக்கும் குழுவில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன்.

“உயிருள்ளவை நகரும்” என்று சொன்னார் ஆசிரியர். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு ஒரு மாணவன் கேட்டான். “ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு உயிர் இருக்கிறதா” என்று. யோசித்த ஆசிரியர், “அதனை உயிருள்ள ஒருவன் ஓட்ட வேண்டியதாயிருக்கிறது” என்று விளக்கினார். “போன வாரம் மரத்திற்கு உயிர் இருப்பதாக சொன்னீர்களே, அது நகரவில்லையே” என்று கேட்டான் இன்னொருவன். அதற்கு அந்த ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. பாவம் அவர் அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருந்தார். பிறகு நாங்கள் குறுக்கிட்டு, “மேல் நோக்கிய வளர்ச்சி கூட நகர்வதைப் போலத்தான்” என்று விளக்கினோம்.

அடுத்து நான்காம் வகுப்பிற்கு சென்றோம். அங்கு ஒரு குழந்தை இப்படிக் கேட்டது. “போன வாரம் எச்சில் ஜீரணத்தை அதிகரிப்பதாக சொன்னீர்கள், இந்த வாரம் எச்சில் நோயை பரப்பும், அதை வெளியே துப்பாதீர்கள் என்கிறீர்கள். நான் எச்சிலை விழுங்கினால் எனக்கு நோய் வருமா வராதா” என்று கேட்டது அந்த குழந்தை. நானும் உயிரியல் மாணவன் இல்லை என்பதால் எனக்கும் சரியான விடை தெரிந்திருக்கவில்லை. உடனே நான் இப்படி சொன்னேன். “நாய் தன்னுடைய உடம்பில் ஏற்படும் காயத்தை தனது எச்சிலை கொண்டு நக்குவதில்லையா, அந்த நாயின் எச்சில் அதற்கு ஏற்படும் காயத்திற்கான எதிர்-உயிரியாக, எதிர்ப்பு சக்தியாக, மருந்தாக பயன்படுகிறது, அது போலத்தான் இதுவும்” என்றேன். “இரண்டாவது எல்லா எச்சிலிலும் நோய்கிருமிகள் இருக்காது, எந்த எச்சிலில் நோய்க்கிருமிகள் இருக்கிறது என்று நமக்கு சரியாக தெரியாது” என்பதால் ஆசிரியர் அப்படி பொதுவாக சொல்லியிருக்கிறார் என்றும் விளக்கினேன்.

பள்ளிக் குழந்தைகள்
வினா எழுப்ப அனுமதி தந்தால் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள் வரும் என்பதை தவிர்க்கவே நாம் அதனை அனுமதிப்பதில்லை.

ஒரு எட்டாம் வகுப்பு மாணவி, மதம் பற்றிய ஒரு பாடத்தின்போது “இசுலாமியர் குரானை வைத்துள்ளனர், கிறிஸ்தவர்கள் பைபிளை வைத்துள்ளனர், நாம் எதை வைத்துள்ளோம் சார்” என்று கேட்டாள். “பகவத் கீதை” என்று சொன்னோம். “ஆனால் அவர்கள் எல்லாம் தொழுகைக்கு போகும்போதும், சர்ச்சுக்கு போகும்போதும், வீட்டிலும் இவற்றை வைத்துள்ளனரே” என்றும், “எங்கள் வீட்டில் பகவத் கீதை இல்லையே, அதை எப்படி நமது மத நூல் என்று சொல்கிறீர்கள்” என்றும் கேட்கிறாள். வினா எழுப்ப அனுமதி தந்தால் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள் வரும் என்பதை தவிர்க்கவே நாம் அதனை அனுமதிப்பதில்லை.

இப்போது மாணவர்கள் பிறரை மரியாதையாக விளிப்பதில்லை என்று பல இடங்களிலும் பார்க்கிறோம். பாடத்திட்டங்களிலும், வினாத் தாளிலும் மாணவர்களை மரியாதையாக விளிக்க வேண்டும் என்பதை நான் அதற்கான குழுக்களில் இருந்த போது பலமுறை வலியுறுத்தினேன். எழுது என்பதற்கு பதில் எழுதுக என்று மறைமுகமாவது மாணவனுக்கு மரியாதை தரும் விதத்தில் கேள்வித் தாள்களில் மாற்ற சொன்னேன். அதனை ஆசிரியர்கள் “சின்னப் பையனுக்கு எதற்கு சார் மரியாதை” என்று கூறி தட்டிக் கழித்தனர்.

மனிதர்களுக்கு மரியாதை தருவது நமது சமூகத்தில் எங்குமே இல்லை. உயர் அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை உட்கார வைத்து பேசுவதில்லை. இந்த நிலைமை தான் கல்வித் துறையிலும் இருக்கிறது. சில பள்ளிகளில் ஆசிரியர்களது பாதங்களில் மலர்களை மாணவர்கள் தூவுகின்ற சடங்குகளை எல்லாம் நடத்துகின்றனர். சமூகத்தின் பல இடங்களில் இத்தகைய சமூக பிறழ்வுகள் இருப்பதால் அது கல்வித்துறையிலும் எதிரொலிக்கிறது. அதனை எதிர்த்து கேள்வி கேட்க உத்வேகம் கொடுப்பதுதான் உண்மையான கல்வி.

பள்ளிக் குழந்தைகள்
ஒரே மாதிரியாக தமிழ்வழியில்தான் பாடத்திட்டம் என்பது எப்படி பொருந்தும்

பாடநூல் இல்லாமல்தான் நானெல்லாம் வகுப்பு எடுப்பேன். ஆனால் இப்போது எந்த ஆசிரியரும் அப்படி பாடம் எடுப்பதில்லை. பாடநூலும் கற்பதற்கு ஒரு தடைதான். அதே போல தேர்வும் ஒரு தடை. தேர்வுக்காக படிப்பதை மாற்றி அறிவுக்காகத்தான் படிக்க வேண்டும் என நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.

தொடக்கப் பள்ளி ஒன்றுக்கு போயிருந்தேன். அங்கு தலைமையாசிரியரே சந்தோஷமாக பாடம் எடுக்க முன்வந்தார். அவர் எம்.ஏ.பி.டி படித்தவர். பாடம் எடுத்த பிறகு எளிமையாக சில கேள்விகளைத்தான் மாணவர்களிடம் கேட்டார். ஆனால் குழந்தைகள் அனைவரும் மவுனமாக இருந்தனர். சில நொடிகளில் நிலைமையை யூகித்து அவரிடம், “தெலுங்கு உங்களுக்கு தெரியுமல்லவா, தெலுங்கிலேயே கேள்வி கேளுங்கள்” என்று சொன்னேன். தெலுங்கில் அவர் பேசியவுடன் மாணவர்கள் உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தனர். காரணம் அது தோட்ட வேலை செய்யும் சக்கிலிய சாதியின குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சிறப்பு பள்ளி. அவர்களது பெற்றோர்களாவது வேலைகளுக்காக தமிழில் சமூகத்தில் பிறருடன் கலந்துரையாடுவார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் சேரியை விட்டு வெளியே வராதவர்கள். எனவே அவர்கள் தமது தாய்மொழியான தெலுங்கை மட்டும்தான் தெரிந்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கும் பிறருக்கும் ஒரே மாதிரியாக தமிழ்வழியில்தான் பாடத்திட்டம் என்பது எப்படி பொருந்தும். நான் “இப்படி ஒரு பிரச்சினையில் எனக்கு உதவ முடியுமா” என்று மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகளுக்கான நிறுவனத்திற்கு கேட்டு எழுதினேன். யாருமே இதுவரை அப்படி கேட்டிருக்க மாட்டார்களோ என்னவோ உடனடியாக எனக்கு ஆறு பேரை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இயக்குநர் பட்நாயக், இணை இயக்குநர் அண்ணாமலை ஆகியோர் அப்போது அங்கிருந்தனர். அண்ணாமலை, திருமலை மற்றும் இப்போது புதுச்சேரியில் அறிவியல் பேரவை தலைவராக உள்ள புருஷோத்தமன் என ஆறு பேரை அனுப்பினர். அவர்கள் தாய்மொழி தெலுங்காக இருப்பவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் முறையை சொல்லித் தர முயன்றார்கள்.

பன்மொழி அறிதல்
குழந்தைகளால் நான்கைந்து மொழிகளை கற்றுக்கொள்ள முடியும் என்ற வாதம் தவறானது. அதில் நடப்பது மொழியை அறிதல் மட்டும்தான்.

தற்செயலாக அப்போது கல்வியமைச்சராக இருந்த அரங்கநாயகம் அங்கு வந்தார். “இதனை மலையாளம், கன்னடம் போன்றவற்றை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு நீட்டிக்க திட்டம் வகுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இதில் மராட்டியம், சௌராஷ்டிரா, துளு என ஏழு மொழிகளில் பாட நூல்களை தயாரித்து அரசிடம் கொடுத்தோம். ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை. பாட நூல் தயாரிப்பின்போது தமிழாசிரியர்களை அழைத்து வந்து நேரில் பதினைந்து நாள் பயிற்சி வேறு அளித்தோம்.இந்தக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைப் போலவே தமிழும் அந்நிய மொழிதான்.

இப்போது ஆங்கிலத்தை கூட ஒன்றாம் வகுப்பிலேயே சொல்லித் தர ஆரம்பித்து விட்டார்கள். இதுவும் கூட எம்.ஜி.ஆர் துவங்கி வைத்தது தான். தனியார் ஆங்கில பள்ளிகளை அனுமதித்த காலத்தில் நம்மவர்கள் கேட்டதற்கிணங்க ஒன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலம் பாடமாக வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு முதல் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை. ஆனால் இப்படி முதலாம் வகுப்பிலேயே இரு மொழிகளை அறிமுகப்படுத்தியதால் தமிழும் சரியாக கற்க முடியவில்லை, ஆங்கிலத்தையும் சரிவர கற்க முடியவில்லை என்பதுதான் நடந்தது. சில குழந்தைகளுக்கு ஆங்கிலம் இங்கு மூன்றாவது மொழியாகவும் இருக்கிறது. பல இடங்களில் தேவையான அளவுக்கு ஆசிரியர்களையே போடாமல் வேறு இருக்கிறார்கள்.

குழந்தைகளால் நான்கைந்து மொழிகளை கற்றுக்கொள்ள முடியும் என்ற வாதம் தவறானது. அதில் நடப்பது மொழியை அறிதல் மட்டும்தான். ஆனால் இப்படி மொழியை அறிவது என்பது புறச்சூழலின் தேவைக்காக மட்டுமே நடப்பது. அவர்களுக்கு இலக்கணப்படி எல்லாம் பேசவோ எழுதவோ முடியாது. ஒரு அடுக்கக குடியிருப்பில் பல்வேறு மொழி பேசும் மக்கள் குடியிருந்தால் அங்கு இப்படி குழந்தைகள் மொழியை அறிவது நடக்கும். அதுவே மொழியை கற்றுக்கொள்வது என ஆகாது.

செயல்முறை கற்றல் என்பது புதிய திட்டம் எல்லாம் இல்லை. பங்கேற்பு கல்வி என்பது நான் பி.டி படித்த அறுபதாண்டுகளுக்கு முன்னரே இருந்த ஒன்றுதான். இதற்கு வட்டாரம் சார்ந்து, தொழில் சார்ந்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். மீனவர்கள் நிறைந்த பகுதியில் ஒன்றாகவும், நெசவாளர்கள் நிறைந்த பகுதியில் ஒன்றாகவும், விவசாயம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகவும் தான் பாடத்திட்டங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே பொதுவான ஒரு பாடத்திட்டம் வகுத்து அதில் செய்முறை கற்றலை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. செய்முறை கற்றல் என்பதே குழந்தைகளையும் பங்கேற்க வைக்கும் ஒன்றுதான். இப்போது இதற்கு நிறைய செலவு செய்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்வதன் மூலம் சமத்துவம் வருவதாக சொன்னார்கள். சமத்துவத்தை இதயத்தில் தர மறுத்து விட்டு ஒன்றாக உட்கார வைப்பதால் வந்து விடுமா? இப்படி உட்காருவது கட்டாயம் என்று சொன்ன போது கர்ப்பிணி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துச் செல்லவே, ஆசிரியர் இல்லாத பள்ளியாக அது மாறியதுதான் கடைசியில் நடைபெற்றது.

(தொடரும்…)
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடன் நேர்முகம் – 1 குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?

  1. முதலில் பொது இடத்தில் (பள்ளி உட்பட) சிறுகுழந்தைகளை மரியாதையாக நீங்க, வாங்க, போங்க என விளிக்கும் மரியாதை கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். சிறிய குழந்தை என்றாலும் அவர்களுக்கும் சமுதாயத்தில் மரியாதை கொடுக்கப்பட வேண்டும். வேட்டிக்கு சட்டம் போடும் அரசு இதற்கும் சட்டம் போடுமா?

  2. பொது வெளியில் பேசுவதைப் போலவே வீட்டிலும் அதனை செய்யலாமே.உண்மையில் சிங்கப்பூரில் வாழும் நம் தமிழர் இல்லங்களில் இவ்வாறு தமது குழந்தைகளை விளிக்கும் பண்பு உள்ளது.எதற்குமே சட்டம் போட்டு செய்ய முடியாது என்பது ஒருபுறம்.அதனை செய்கிற சுயமரியாதை உணர்வெல்லாம் அம்மாவின் சந்நிதானத்தில் நிலவ முடியுமா என்ன?பெரியார் தம்மை விட வயதில் மிக இளையவர்களையும் வாங்க,போங்க என விளிக்கும் பண்பாளர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.ஆனால் அது கூட அவரது தனிப்பட்ட பண்பாகவே இருப்பதல்லாமல் அவரது இயக்கத்தினரின் வழக்கமாக மாறிவிடவில்லை.சாதிப் பெயர்களை துறக்க சொன்னதைப்போல இந்த வழக்கத்தையும் அவர் செய்திருக்க தகுதியானவர் .இன்றைய நிலையில் இதனை செயத்தக்கவர் யார்? என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தமிழ் மட்டுமே இவ்வாறு ஒருமை பன்மையில் அவரவர் ‘தகுதியைப்’ பொறுத்து விளிக்கும் பேதம் கொண்டதாக உள்ளது .

Leave a Reply to rajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க