Sunday, November 29, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !

சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !

-

ணினி வலையமைப்பு (நெட்வொர்க்) துறையில் முன்னணி நிறுவனமான சிஸ்கோ 6,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. இணைய வலைப்பின்னலுக்கு உதவும் வழிச்செயலிகளையும், (ரவுட்டர்கள்), நிலைமாற்றிகளையும் (சுவிட்சுகள்) தயாரிக்கும் நிறுவனமான சிஸ்கோ சமீபகாலங்களில் தொலைக்காட்சி வாங்கிகள் (செட்டாப் பாக்ஸ்கள்), கணினி பாதுகாப்பு, தொலைத் தொடர்பு உரையாடல் (வீடியோ கான்பரன்சிங்) போன்ற துறைகளிலும் தனது தொழில்களை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியக் கிளையில் சுமார் 10,000 பேர் வேலை செய்கின்றனர். இவர்களும் இந்த வேலை இழப்பினால் பாதிக்கப்படலாம்.

சிஸ்கோ
சிஸ்கோ 6,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது

2014-ம் ஆண்டு ஜூலையுடன் முடிவடைந்த காலாண்டில் கிட்டத்தட்ட ரூ 13,200 கோடியை ($220 கோடி) லாபமாக மட்டும் ஈட்டியுள்ளது சிஸ்கோ; வருவாய் $1240 கோடியாகஉள்ளது. ஆனால் இவை கடந்த ஆண்டுகளை விட முறையே 1% , 0.5% குறைந்துள்ளதால் ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது சிஸ்கோ. அதாவது நிறுவனத்திற்கு நயா பைசா அளவுக்குக் கூட நஷ்டமில்லை, அவர்கள் எதிர்பார்த்த அளவை விட 0.5% லாபம் குறைந்துவிட்டது, அவ்வளவுதான்.

வேலை இழப்பவர்களில் 15% நிர்வாக பிரிவில் இருக்கும் துணைத்தலைவர் போன்ற உய ர்பதவிகளில் இருப்பவர்கள் என்று கூறியுள்ளது சிஸ்கோ. அதாவது, 85% பேர் சாதாரண ஊழியர்கள்.

பொருளாதார தேக்கநிலை காரணமாகவும், கணினி வலையமைப்பு துறையில் புதிய போட்டி நிறுவனங்களின் வரவினாலும் சிஸ்கோவின் சந்தை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் முதலாளித்துவ வல்லுநர்களும், பத்திரிகைகளும் ஆட்குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் சிஸ்கோ சுமார் $100 கோடி வரை வரை செலவுகளைக் குறைக்க முடியும் என்று மனம் மகிழ்ந்துள்ளனர்.

“பலருக்கு வேலை இழப்பு துருதிருஷ்டமாக இருக்கலாம். ஆனால், சிஸ்கோ போட்டியில் முன்னேறுவதற்கு இது அவசியம் என்று கருதுகிறேன். சிஸ்கோ சரியான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார் முதலீட்டு ஆய்வாளர் மார்ஷல்.

சிஸ்கோவின் முதன்மை செயல் அலுவலர்  சாமபர்ஸ் “சந்தை யாருக்காவும் காத்திருக்காது, நாங்கள் சந்தைப் போக்கை எதிர்நோக்கி செயல்படுவோம். அதற்கு சில கடினமான முடிவுகளை தேவையாக இருக்கிறது.“ என்று கூறி இந்த வேலைநீக்கத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

நிறுவனம் லாபம் சம்பாதிக்கும் போது ஆதாயம் அனைத்தையும் முதலாளிகள் ஒதுக்கிக் கொள்ளலாம்; சந்தையில் இன்னொரு நிறுவனம் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், அதன் பாதிப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தி வேலையை வீட்டு நீக்கலாம் என்பதுதான் முதலாளித்துவ சந்தை முன்வைக்கும் வளர்ச்சி சூத்திரம்.

இவ்வாறு, ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு சக்கையாக துப்பி எறிவது, ‘வெற்றிகரமான’ முதலாளித்துவ நிறுவனங்களின் வாடிக்கை. சிஸ்கோ இதை கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு கோடைக் காலத்திலும் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறு நிறுவனங்களை வாங்கி தன்னுடன் இணைத்துக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் தனது லாபவேட்டையின் செயல் முறையாக வைத்துள்ளது. கடந்த ஆண்டு 4,000 ஊழியர்கள், 2012-ல் 1,300 ஊழியர்கள், 2011-ல் 6,500 ஊழியர்கள் என ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கு லாபம் இல்லை என்றால் தொழிலை நடத்தாது. குறைவான லாபத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

“10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.
20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.
50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது.
100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.
300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.
தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்.”

என்று மூலதனம் நூலில் மார்க்ஸ் குறிப்பிடுவதன்படி தங்கள் லாபத்தில் 1% குறைவதைகூட பொருத்துக்கொள்ள இயலாமல ஊழியர்களின் வயிற்றில் அடித்து அதை ஈடுகட்ட முயற்சிக்கிறது சிஸ்கோ.

இதே போன்று கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மைக்ரோசாஃப்ட் பங்கு வைத்துள்ள “இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ்” என்ற நிறுவனம் 19% ஆட்குறைப்பை அறிவித்துள்ளது. இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபமாக $570 கோடி டாலர் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் சமீபத்தில் இணைத்துக்கொண்ட நோக்கியா நிறுவனத்தில், சந்தைப்படுத்தல் பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஆயிரக்கணக்கானவர்களை வேலை நீக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் இயங்கிவரும் நோக்கியா நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஏற்கனவே விருப்ப ஓய்வு என்ற பெயரில் மோசடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சென்னை நோக்கியா, பல ஆண்டுகளாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ 21,153 கோடியையும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ 2,400 கோடியையும் செலுத்தாமல் ஏய்ப்பு செயதிருக்கிறது.

இத்தனைக்கும் மதிப்புக் கூடுதல் வரியாகவும், மத்திய விற்பனை வரியாகவும் நோக்கியா எவ்வளவு தொகையைச் செலுத்துகிறதோ, அந்தத் தொகையை தமிழக அரசு நோக்கியாவுக்குத் திருப்பிக் கொடுத்து வந்தது. அந்த வகையில் 2005 துவங்கி 4 ஆண்டுகளில் மட்டும் நோக்கியாவின் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் தமிழக அரசு நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் தொகை 650 கோடி ரூபாய். நோக்கியா தனது தொழிற்சாலையில் போட்டிருக்கும் முதலீடும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய்தான். 2010 நிலவரப்படி தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ 1020 கோடி.

இப்படி வேலை உத்தரவாதமின்றி ஊழியர்களை சுரண்டுவது, பலவித வரிச்சலுகைகள் மூலம் மக்கள் பணத்தை விழுங்குவது என கொழுத்து வரும் முதலாளித்துவ நிறுவனங்கள், தமது லாபத்திற்கு பங்கம் வரும் போது ஊழியர்களை தூக்கி எறிந்து ஆட்குறைப்பை அறிவிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட உலகின் எந்த பகுதியில் எத்தனை பேர் நீக்கப்பட உள்ளார்கள் என்ற தகவலை இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சீனாவில் மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறர்கள்.

மைக்ரோசாஃப்ட்டின் தலைவராக இந்தியரான சத்திய நாதெல்லா என்பவர் நியமிக்கப்பட்டவுடன் இந்தியாவிற்கு பெருமை என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த ஊடகங்களும், தேசபக்தர்களும் நோக்கியா வேலை பறிப்பு குறித்து கருத்து தெரிவிக்காமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார்கள்.

வேலைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தான் 15 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு திறமையாக  வேலை செய்து வருவதாகவும், பணிதிறனில் குறைபாடு இல்லாத தன்னை எந்த காரணமும் கூறாமல் பழைய கணினியை தூக்கி எறிவது போல எறிந்து விட்டதாக வேதனையுடன் கூறுகிறார். வேலை இழப்பைவிட நிறுவனம் தன் குழந்தைக்கு வழங்கி வந்த காப்பீடு இனி இல்லை என்பது அவரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சிஸ்கோ
நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

இதே போன்று கடந்த மே மாதம் எச்.பி நிறுவனம் 16,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் கூறும் வேலைகளை தன் சொந்த வேலையாக எடுத்துக்கொண்டு திட்டமிட்ட தேதிக்குள் பணியை முடிக்கவேண்டும் என்று தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் இராப்பகலாக உழைத்த ஊழியர்கள், அடுத்த ஆண்டு நல்ல சம்பள உயர்வு தருகிறோம் என்று ஆசைகாட்டி உழைப்பை பிழிந்து எடுக்கப்பட்ட ஊழியர்கள், அமெரிக்க சொர்க்கம் செல்லும் ஆசைகாட்டி உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாட்டு தொழிலாளிகள் என பல ஆண்டுகளாக நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

இந்த வேலையை நம்பி வாங்கிய கடனட்டை கடன்கள், கடன் தவணைகள், வீட்டு செலவுகள், வீட்டுக் கடன், கார் கடன், திருமண செலவுகள், தான் திறமையில்லாதவனோ என்ற உளவியல் சிக்கல், அடுத்த வேலை எப்போது கிடைக்கும், கிடைக்குமா என்ற நிச்சயமின்மை என பலவித பிரச்சனைகளுடன் விசிறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இதுபோன்ற நிறுவனங்களை தான் வேலைவாய்ப்பை பெருக்கும் அடசய பாத்திரம் என்று நம்பச்சொல்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறிதான் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நியாயப்படுத்துகிறது அரசு. அந்த வேலைவாய்ப்பின் லட்சணம் இது தான். சட்டபூர்வ உரிமை கூட கொடுக்காமல் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டிவிட்டு நடுத்தெருவில் நிறுத்துவதுதான் அவர்கள் உருவாக்கும் வேலைவாய்ப்பின் லட்சணம்.

முதலாளிகளின் மதமான சந்தையின் புனித நூல்களில் லாபத்தை பெருக்குவதுதான் அறம். அதற்காக எதையும் செய்யலாம் என்பது தான் இவர்களின் புனிதவிதிகள். இதை எதித்து போராட வேண்டுமென்றால் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சங்கமாக திரள்வதை தவிர வேறு வழியில்லை.

–    ரவி

மேலும் படிக்க