privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்

மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்

-

த்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருந்தது. 1962 முதல் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்த கல்வியாளர் ராதாகிருஷ்ணன் நினைவாக இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

குரு உத்சவ் திணிப்பு
குரு உத்சவ் திணிப்பு

ஏற்கெனவே வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல், சிபிஎஸ்சி பள்ளிகளில் கட்டாய சமஸ்கிருத வாரம் கொண்டாட வைத்தல், வரலாற்றை நம்பிக்கையின் அடிப்படையில் திருத்தி எழுத வேண்டும் என்ற புதிய இந்தியா வரலாற்று ஆய்வு குழு (ஐ.சி.எச்.ஆர்) தலைவர் ஒய்.எஸ்.ராவின் அறிவிப்பு எனத் தொடரும் பாஜகவின் பார்ப்பனியக் கொள்கையின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய குரு உத்சவ் அறிவிப்பும் வந்துள்ளது.

தமிழகத்திலிருந்து இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு வந்ததை அடுத்து, ‘நாங்கள் ஆசிரியர் தினம் என்ற பெயரை மாற்றவில்லை. மாறாக அதில் நடைபெற உள்ள கட்டுரைப் போட்டியை மட்டும் தான் அப்படி ஒரு தலைப்பின் கீழ் நடத்துகிறோம்’ என்று சொல்லி தமது சுற்றறிக்கையை சமாளிக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

தற்போதைய பள்ளிக் கல்வி முறை பழைய குரு குல கல்வி முறைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க வானரங்கள் விரும்புகின்றன. நவீன பள்ளிகள் மாணவனுக்கு சம உரிமையளிக்கும் வகையில் ஜனநாயகத்தை போதிக்கும் இடங்களாக மாற வேண்டிய தேவை இருப்பதை பல கல்வியாளர்கள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பாரதிய வித்யா பவன் பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர் தினத்தன்று மாணவ மாணவிகள் தமது ஆசிரியர்களின் கால்களை கழுவி விடுவதும், அவர்களது பாதங்களில் பூக்களை கொட்டி பூஜை செய்வதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுபோல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி பெறுவது என்பது ஒரு பத்தாண்டுகளாக இன்னும் பல பெயர்பெற்ற பள்ளிகள் வரை வந்து விட்டது. இதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் நீட்டிப்பதற்கான முயற்சியாகத்தான் மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.

தமிழிசை
ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதே ‘குரு உத்சவ்’ நோக்கம்: தமிழிசை சவுந்தரராஜன்

இந்த அறிவிப்பு குறித்து பல காங்கிரசு தலைவர்கள் கருத்து தெரிவிக்க தயங்குகின்றனர். காரணம் அதுவே ஒரு மிதவாத இந்துத்துவா கட்சிதான். சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் இதனை கண்டித்திருந்தாலும், அக்கட்சி அணிகளே பண்பாடு என்ற முறையில் பார்ப்பனியத்தின் பழக்கங்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டே வாழ்கின்றனர். திருவண்ணாமலை தீபத்திற்கு தீக்கதிர் சிறப்பிதழ் போடும் போது குரு குல பூஜைகள் பெரிய அளவுக்கு பிரச்சினைகளாக இருக்காது.

ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களிடம் இணையம் மூலமாக பிரதமர் மோடி உரையாடியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை எல்லா பள்ளிகளும் வீச்சாக செய்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கவேண்டும். இணைய வசதி, தடையற்ற மின்சார வசதி, அன்றைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது கட்டாய வருகையை உறுதி செய்தல் ஆகியவற்றை முடித்து செப்டம்பர் 1-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு ஒவ்வொரு பள்ளியும் அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழிகாட்டியிருக்கிறது.

இப்படி மாணவர்கள், பள்ளிகள் அனைத்தும் இந்துமதவெறியர்களின் பிடியில் சட்டபூர்வமாக மாற்றப்பட்டு வருகிறது. இவர்களது கருத்துக்களை பாடத்திட்டமாக, பாடத்துக்கு வெளியேயான நடைமுறையாக கொண்டு வளரும் மாணவர்கள் பின்காலத்தில் எத்தகைய மதவெறியைக் கொண்டிருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி மோடி சிபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடியதை வரவேற்றுள்ள வைகோ மற்றும் ராமதாசு போன்றவர்கள் குரு உத்சவ் என்ற பெயர் மாற்றத்தை திரும்ப பெறும்படி கூட்டணிக் கட்சி என்ற முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். இந்த மானங்கெட்ட செயலுக்கு அவர்கள் மோடி காலிலேயே விழுந்து பூஜை செய்யலாம். மம்தா பானர்ஜியாவது மாணவர்களுடன் இணையம் மூலமாக பிரதமர் உரையாடுவதை விட பள்ளிகளில் தேவையான அளவு கழிப்பறைகளை கட்டித் தருவது முதன்மையானது என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் எந்த ஒரு சிபிஎஸ்சி பள்ளியிலும் பிரதமருடனான இணைய உரையாடல் நடைபெற விடாமல் கண்காணிக்க மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கெத்து கூட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இல்லை.

வைகோ
வைகோ மோடி காலிலேயே விழுந்து பூஜை செய்யலாம்

திமுக தலைவர் கருணாநிதி குரு உத்சவ் என்ற இப்பெயர் மாற்ற முடிவை கடுமையாக கண்டித்திருந்தாலும், உடன்பிறப்புகளின் குழந்தைகளே இத்த்கைய பள்ளிகளில்தான் படிக்கின்றனர், ‘மக்கள் கருணாநிதியின் இந்த வெறுப்பு பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர் ஏன் இவ்வளவு தூரம் கோபமடைகிறார் என்று தெரியவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் நமது மரபு. குருவிற்கு பிறகுதான் கடவுளையே வைத்திருக்கிறோம். அதனால் குருவுக்கு மரியாதை செலுத்துவதில் தவறில்லை’ என்று கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.பி இதுபற்றி கூறுகையில் ‘நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் எல்லோருக்கும் ஏன் தயக்கம் என்றே தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது என்பது இங்கே மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அகண்ட பாரத கனவில் வருணாசிரம தர்மத்தினை ஆயுதமாக கொண்டு செயல்பட விரும்புகின்றன இந்துத்துவா வானரங்கள். தற்போதைய கல்விமுறையில் ஜனநாயக அடிப்படையில் இன்னமும் மாற்றங்கள் தேவைப்படுவதாக பல கல்வியாளர்கள் சொல்லி வரும் வேளையில் குருவை அடிமைத்தனத்தோடு ஏற்றிப் போற்றும், கேள்வி கேட்காத கல்வியை, மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்புகிறது. ஏபிவிபி என்ற அவர்களது மாணவர்களது அமைப்பே இதற்காகத்தான் செயல்பட்டு வருகிறது. குரு உத்சவ் என்பது குரு குலக் கல்வி முறையினைப் போற்றும், மீட்டெடுக்க முனையும் சனாதனவாதிகளின் கனவு. அதற்கு கல்லறை கட்டுவது ஜனநாயக வாதிகளின் கடமை.

இந்து-இந்தி-இந்தியா
இந்து – இந்தி – இந்தியா (கார்ட்டூன் : நன்றி indiatomorrow.net)

கல்வி தனியார்மயமாகிய பிறகு கல்வி மறுக்கப்பட்ட மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். கல்வி வழங்கும் இடத்தில் கல்வித் தந்தைகள் அதாவது முன்னாள் சாராய வியாபாரிகள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் தான் அதிகம் இருந்து வருகின்றனர். அல்லது சினிமா கருப்புப் பண முதலைகள் தான் அதிகமும் இருந்து வருகின்றனர்.  பாஜகவின் கூட்டணியில் இருக்கும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்ற கல்வி முதலாளிகளுக்கு இந்த குரு உத்சவை விட வேறு என்ன வேண்டும்?

கல்வி முதலாளிகளை எதிர்த்து போராடாமல் இருப்பதற்கு பார்ப்பனிய அடிமைமுறைகள் நன்கு பயன்படும்.

குரு உத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒய்.ஜி. பார்த்தசாரதி, லதா ரஜினிகாந்த், பச்சமுத்து, சாராய உடையார், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோரின் கால்களை மாணவர்கள் கழுவி பூச்சொரிய வேண்டியிருக்கும்.

கல்வி தனியார்மயத்தை எதிர்ப்பதும், மாணவர்கள்-ஆசிரியர்கள் உறவில் ஜனநாயகத்திற்காக போராடுவதும் தான் குரு உத்சவ் என்ற இந்த இந்துத்துவா பண்டிகையின் நோக்கத்திற்கு சாவு மணி அடிப்பதாகும். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் இதற்காக களம் காண வேண்டும்.