Friday, March 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விநாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா - வில்லனா ?

நாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா ?

-

ன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் நாவல்காடு பகுதியில் உள்ள ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவர்கள், கல்லூரி சேர்மன் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

james-college-studentsஐ.டி, எலக்ட்ரிகல், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சைன்ஸ், சிவில், எலக்ட்ரிகல்-எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த சுமார் 360 மாணவர்களை கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தொழில்துறை சுற்றுப் பயணத்துக்காக பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் என்ற நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றது கல்லூரி நிர்வாகம்.

ஆனால், தொழில் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பயன்பாட்டிற்கு அற்றது என்று கழிவு செய்து ஒதுக்கிய விமானத்தை மட்டும் காட்டியிருக்கின்றனர். தொழிற்சாலை என்று எதையும் காண்பிக்கவில்லை. மேலும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்ற இந்த நிறுவனம் மாணவர்கள் படிக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாதது ஆகும்.

இந்த பயணத்துக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ 7,850 வசூல் செய்திருக்கின்றனர். மொத்தம் நான்கு நாட்கள் தொழில்துறை பயணம் என்று கூறியும் எந்த ஒரு தொழில் நிறுவனத்திற்கும் அழைத்து செல்லவில்லை. மேலும் தரமான 3 நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளதாகவும், தரமான உணவு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கூறியிருக்கிறது. அதற்காகவே ரூ 7,850 வசூலித்துள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை, சரியான தங்கும் இடமும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வருவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் சரியான பேருந்து வசதி செய்யப்படவில்லை. 10 பேர் வரை நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை இருந்துள்ளது. சுமார் 40 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய கல்லூரி பேருந்தில் 50 பேரை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், இருக்கையில் இருந்து பயணம் செய்யும் அளவிற்கு மட்டுமே ஏறுவோம் என்று கூறி கடைசி பேருந்தில் இருக்கை கிடைக்காத மாணவர்கள் பேருந்தில் ஏறாமல் வெளியில் நின்று விட்டிருக்கின்றனர்.

இந்த தகவல் சொல்லப்பட்ட கல்லூரி சேர்மன் வழிகாட்டுதல்படி, இருக்கை கிடைக்காமல் பேருந்திற்கு வெளியே நின்ற மாணவர்களை அப்படியே விட்டு விட்டு பேருந்தை ஓட்டுநர் நகர்த்தி சென்று விட்டார்.

இதனை தட்டிக் கேட்ட பேராசிரியரையும், மாணவர்களையும் பேருந்து ஓட்டுநர், ஆபாசமாக, தரக்குறைவாக, கெட்ட வார்த்தையில் திட்டி முறைகேடாக நடந்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிறகு பேருந்தை நிறுத்தி கீழே நின்ற மாணவர்களை மீண்டும் பேருந்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார் ஓட்டுனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் பேருந்தின் உள்பக்க மேற்கூரையை அடித்து சத்தம் எழுப்பியதில் மைக்காவில் சிறிய ஓட்டை விழுந்துள்ளது. சேர்மன் வழிகாட்டலின்படி பேருந்தை ஓசூர் தாலுகா சூளகிரி காவல் நிலையத்திற்கு ஓட்டுநர் ஓட்டிச் சென்றிருக்கிறார். மாணவர்கள் கட்டாயப்படுத்தி கேட்டபின் காவல் நிலையம் செல்வதாக கூறியிருக்கிறார்.

காவல் நிலையம் செல்லும் வழியிலேயே சூழகிரி காவலர்கள் பேருந்தை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். மாணவர்கள் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி சேர்மன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருப்பதாக காவல் அதிகாரிகள் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்த மாணவிகள் காவல் அதிகாரியிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள்தான் பெங்களூரில் இருந்து இங்கு வரை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர் என்றும் கூறியிருக்கின்றனர். காவல் அதிகாரிகள் மாணவர்களை மிரட்டி பேருந்தின் மேல்கூரை மீது மாணவர்கள் நடனம் ஆடும்போது தலைப்பட்டு மைக்கா உடைந்தது என்று எழுதி வாங்கியிருக்கின்றனர்.

மேலும் பயணம் முடிந்து செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவர்களிடம்,  பிரச்சனைக்கு உள்ளான பேருந்தில் வந்த 36 மாணவர்களுக்கும் தலா ரூ 12,750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணத்தில் சென்ற 360 பேருக்கும் பொது அபராதமாக தலா ரூ 2,000 விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறிப்பிட்ட அபராதம் கட்டாத வரை மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என்றும் கூறியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். மேலும் தொழில்துறை பயணம் (ஐ.வி- IV) சென்ற மாணவ மாணவியரில் தாமதமாக கல்லூரிக்கு வந்தவர்களுக்கு தலா ரூ 1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் சேர்மனின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்தும், “இதுவரை கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது சட்டவிரோதமாக விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தும் செப்டம்பர் 2-ம் தேதி அன்று கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி நிர்வாகம் காவல் துறை மூலமாக மாணவர்களை சந்தித்திருக்கின்றனர். சேர்மன் 13-ம் தேதிதான் வெளியூரிலிருந்து வருவார், அன்று எல்லா பிரச்சனைக்கும் நல்ல முடிவை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித் தரும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.  ஆனால், அன்றைய தினம் இரவே போராட்டத்தில் முன் நின்ற கல்லூரி விடுதியில் உள்ள மாணவர் ஒருவரை, “இந்தக் கல்லூரியில் இனி நீ படிக்க முடியாது” என்று கூறி வெளியேற்றியிருக்கின்றனர்.

இவ்வாறு, நிர்வாகம் ஏற்றுக் கொண்டதற்கு முரணாக விடுதியில் தங்கியிருந்த மாணவனை கல்லூரியை விட்டு வெளியேற்றியதை செப்டம்பர் 3-ம் தேதி மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர். அப்போது கல்லூரி நிர்வாக அதிகாரியான ஐக்கிய கிறிஸ்தவ பேரவையைச் சேர்ந்த தியோடர் சாம் என்பவர், “இது எங்கள் இடம், நாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம். நாங்கள் போராட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வோம்” என்று கூறியதோடு மாணவர்களை அடிக்கவும் செய்திருக்கிறார்.

இந்த தியோடர் சாம்தான் வேறுபல கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடிய சமயங்களில் அங்கு சென்று அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிக் கொண்டவர். சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து இப்போது வெளியேறியவர்.

மேலும், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தின் அடாவடியை தட்டிக் கேட்ட மாணவர்களில் முன்னணியாக நின்றவர்களை செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்திருக்கின்றனர்.

காவல்துறை ஜேம்ஸ் கல்லூரியில் ஊதியம் பெறுவது போன்று கல்லூரிக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் 9-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளுடன் மனு கொடுத்தனர்.

  • சட்ட விரோதமாக அபராதம் வசூலிக்கும் கல்லூரி சேர்மன் ஜேம்ஸ் பிரேம்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சேர்மனுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் எவ்வித காரணமும் இன்றி அபராதம் என்று அடாவடியாக மாணவர்களிடம் வசூலித்த பணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று துறைக்கு தொடர்பில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவர்களை துன்புறுத்தியதற்கு கல்லூரி சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று கூறி ஏமாற்றி பணம் வசூல் செய்ததற்கும், மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக காவல்துறையில் பொய்புகார் கூறியதற்கும் கல்லூரி சேர்மன் மற்றும் ஓட்டுநர் ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐ.வி என்று ஏமாற்றியதை கேள்வி கேட்டதற்காக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள்
    அகிலேஷ் ,ஐடி மூன்றாம் ஆண்டு
    எவின், எலக்ட்ரிகல் நான்காம் ஆண்டு
    எஸ்தர், எலக்ட்ரிகல் மூன்றாம் ஆண்டு
    செல்வ அசோக், எலக்ட்ரிகல் மூன்றாம் ஆண்டு
    ஆகியோரை எந்த நிபந்தனையுமின்றி மீண்டும் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்திய பின்பும், அதை மாணவர்களிடம் மறைத்து அதே மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்ததற்கு சேர்மன் ஜேம்ஸ் பிரேம்குமார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • கல்லூரி நிர்வாகம், சேர்மன் ஆகியோரின் அடாவடித்தன்மை, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத அபராத வசூல் ஆகியவற்றை கேள்வி கேட்டதற்காகவும் இது குறித்து புகார் செய்ததற்காகவும் எதிர்காலத்தில் எந்த விதத்திலும் பழிவாங்குதல் நடவடிக்கையில் சேர்மன் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஈடுபடாதவாறு பாதுகாப்பு தர வேண்டும்.

மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 36 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாணவர்களையே குற்றவாளிகள் போல சித்தரித்து பேசியுள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு, தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சட்ட விரோதமாக அபராதம் விதிப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறி விட்டார்.

மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக இதுவரை விதிக்கப்பட்ட அபராதங்களை அனைத்து மாணவர்களுக்கும் ரத்து செய்து விட்டதாக செய்தி கசிய விட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். போராடிய மாணவர்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்வது பற்றி எதுவும் கூறவில்லை, மாறாக ஒவ்வொரு மாணவர் பெற்றோருக்கும் தொடர்பு கொண்டு உங்கள் மகன் கல்லூரியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான், கலாட்டா பண்ணுகிறான் என்று பீதியூட்டி அவர்கள் மூலம் மாணவர்களை பின்வாங்கச் செய்யும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. மேலும் மாணவர்களை துறைரீதியாக அழைத்து ஒருவருக்கொருவர் ஒற்றுமை ஏற்படாதவாறு பிரிவினையூட்டி வருகிறது.

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி அங்கு படிக்கும் அனைத்து மாணவர்களையும் கொள்ளையடிக்கின்றது என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும். துறை ரீதியாக பிரிந்து போவது என்பது கேள்விக்கு இடமின்றி கல்லூரி நிர்வாகம் கொள்ளையடிப்பதற்கு மாணவர்களே வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும்.

கல்லூரி நிர்வாகத்தை வீரமுடன் தட்டிக் கேட்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது சக மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

அடாவடியாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகத்திடம் தன்மானத்தை இழக்க விரும்பாமல் போராடும் மாணவர்களுக்கு துணை நிற்பது சக மாணவர்களின் கடமை என்பதை உணர வேண்டும்

தகவல்

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
நாகர்கோவில்.

  1. இதே ஜேம்ஸ் கல்லூரியில் கடந்த ஆண்டு பி எட் எழுதிய 99.99% தினர்… தேர்ச்சி பெறவில்லை. பெயில் ஆக்கப்பட்டனர்.
    ஏன்னென்றால்… கல்லூரி நிர்வாகத்துக்கும் .. அரசு கல்வியியல் கழகத்துக்கும் பிரச்சனை … காத்திருந்து..மாணவர்களை பெயிலாக்கிவிட்டார்கள்.
    இது பற்றி மானவர்கள் சென்னை சென்று..கோட்டை சாலையிலே மறியல் செய்து..மேற்படி அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

  2. உயர் கல்வி தனியார் மயம் ஆனதிலிருந்து சில நல்ல கல்லூரிகளும் (SASTRA, VIT வேலூர், முதலியன) பல பெயர்ப் பலகை தவிர உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் பலவும் தமிழ் நாட்டில் வந்து விட்டன. அவற்றுக்கு தணிக்கை இல்லை. சரியான ஆசிரியர்கள் இல்லாமை, பரிசோதனைச் சாலைகள், தொழிற்கூடங்கள், ஆய்வுக் கூடங்கள், உபகரணங்கள் இல்லாமை காணப் பட்டு அவற்றைச் சீர் செய்ய எந்த அரசு அதிகாரியோ நிறுவனமோ இல்லை. UGC தணிக்கை மேம்போக்கானது; ஆண்டுக்கு .ஒரு முறை தான். அதையும் நம் கல்விக்காவலர் ஜகத்ரக்ஷகன் தம் மருத்துவக் கல்லூரியில் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்று வலைப் பதிவுகளில் படித்திருக்கிறோம். இது போன்ற கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. நான்கு ஆண்டுகள் வாங்கும் arrearsஐ வைத்துத் தான் தம் கல்லூரியின் தரம் பற்றி அறிந்து கொள்ள முடியும். நான்கு ஆண்டுகளுக்குப் பின் எந்த வேலை நிறுவனமும் வலைக்கு எடுத்துக்கொள்ள வில்லை என்றால் எங்கு போவர்? கட்டிய கட்டணமும்,காலமும் சீரழிந்ததெ மிச்சம்.

    இந்த பதிவு கல்லூரியின் நடவடிக்கை பற்றி, முதல்வரின் செயல் (வில்லத்தனம்) பற்றி இருந்தால்,ஒரு பின்னூட்டத்தில்,கல்லூரியை victim ஆக காட்டும் கருத்து தெரிவித்திருக்கிறார்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க