Sunday, May 26, 2024
முகப்புசெய்திபட்டர்களின் தீண்டாமை - மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்

பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்

-

17-9-14 அன்று காலை 11-00 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கருவறை முன்பாக அமர்ந்து போராடிய அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் அரங்கநாதன், பாலகுரு இவர்களுக்கு ஆதரவளித்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராமசந்திரன், அரிராகவன், ராஜசேகர், நடராசன், சரவணசெல்வி மற்றும் உறுப்பினர்கள் உட்பட 15 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று பெரியார் தொடங்கி வைத்த போராட்டத்தை முறியடிப்பதற்கு தமிழக அரசும், நீதிமன்றங்களும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஊடக நிறுவனங்களும் இந்த ஜனநாயக கோரிக்கைக்கு எதிராக செயல்படுவது இப்போது அம்பலமாகியிருக்கிறது.

“2008 முதல் அர்ச்சகராக பயிற்சி பெற்று சாதி தீண்டாமை இழிவை சுமந்து கொண்டு இருக்கிறோம். மதுரை சிவாச்சாரியர்கள் நாங்கள் சாமி சிலையை தொட்டால் தீட்டாகிவிடும் என சொல்லிதான் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவை பெற்றுள்ளனர். தமிழக அரசு வழக்கை நடத்தாமல் வாய்தா வாங்கி கொண்டு இருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் இன்னும் எத்தனை நூற்றாண்டு காலம் பட்டர்களின் தீண்டாமைக் கொடுமையை பார்த்து கொண்டிருப்பாள்” என்பதை முறையிடவே அர்ச்சக மாணவர்கள் மீனாட்சியம்மன் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழ் பக்தர்களுக்கு இதன் மூலம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். உச்சநீதிமன்றத்தில் அர்ச்சக மாணவர்கள் சார்பில் 2010 முதல் மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு நடத்தி வருகிறது. தமிழக அரசு வாய்தா வாங்குவதால் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

மீனாட்சியம்மன் கோவிலில் விமான நிலையத்திற்கு செல்வது போன்ற காவல் துறை பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையில் உள்ளே மாணவர்கள் சென்றனர். கருவறை முன்பாக பக்தர்கள் நின்று வழிபடும் இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் இருந்ததால் பட்டர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.

12 மணி ஆனதும் கோவில் நடையை சாத்த வேண்டும் என பக்தர்களை நைச்சியமாக வெளியே போகச் சொல்லி உள் பிரகார நடையை சாத்தினர். உள்ளே மாணவர்களும் நமது வழக்கறிஞர்களும் இருந்தனர். பார்ப்பன பட்டர்களுக்கு ஆதரவாக கோவில் ஊழியர் நமது வழக்கறிஞரை தாக்க முயன்றார். நாமும் எதிர்த்து மிரட்டவே அவர் ஓடி விட்டார். அர்ச்சக மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் இந்து அறநிலையத்துறை அதிகாரி இணை ஆணையர், மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வாரத்தை நடத்தினர்.

மாணவர்கள், “எங்கள் கோரிக்கை உரிய பதில் கிடைக்கும் வரை நாங்கள் வெளியே போக மாட்டோம்” என உறுதியாக கூறினர்.

“கோரிக்கையை மனுவாக தாருங்கள் நான் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன்” என ஆணையர் கூறினார்.

“பல முறை கொடுத்து விட்டோம். சமீபத்தில் அறநிலையதுறை மானியக் கோரிக்கையின் போதும் தலைமைச் செயலகத்தில் மனு கொடுத்தோம். தற்போதும் தருகிறோம்” என அர்ச்சக மாணவர் சங்கத்தலைவர் அரங்க நாதன் மனு கொடுத்தார்.

மனுவில் “அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஆகமப்படி அமைந்த கோவிலில் பணி நியமனம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மதுரை பட்டாச்சாரியர்கள் பெற்ற தடை ஆணையை விளக்க தமிழக அரசு திறமையான மூத்த வழக்கறிஞரை வைத்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும். பணி நியமனம் கிடைக்கும் வரை பயிற்சி முடித்த மாணவர்களுக்கு இடைக்கால ஊதியமாக மாதம் ரூ 5,000 வழங்க வேண்டும்” என குறிப்பிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் கொடுத்தனர்.

“தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 1,144 பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். தந்தை வழி வாரிசாக பணிபுரிபவர்கள் 574 பேர் மற்றும் வெறும் பரிந்துரை கடிதம் கொடுத்தும் கொடுக்காமலும் 411 பேர் அர்ச்சகராக இருக்கிறார்கள். அர்ச்சக மாணவர்களாகிய நாங்கள் முறையாக படித்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளோம். நாங்கள் பார்ப்பனர் இல்லை என ஒன்றை மட்டுமே வைத்து சாதி ரீதியாக தடுப்பது தீண்டாமை குற்றம் தான். இதை அகற்றும் வரை தொடரந்து போராடுவோம்” என அறநிலையத்துறை ஆணையரிடம் வாதிட்டனர்.

காவல் துறை, “அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள்” என அறிவுறுத்தினர்.

“நாங்கள் கோவில் நடை திறந்த பிறகு மீண்டும் 4-00 மணிக்கு போராட்டத்தை தொடருவோம்” என மாணவர்கள் காவல் துறையிடம் தெரிவித்தனர். “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது எங்கள் தனிப்பட்ட கோரிக்கை அல்ல, அனைத்து மக்களுக்கும் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை தெரிவிக்க வேண்டும். எனவே நாங்கள் கலைந்து போக மாட்டோம்” என உறுதியாக கூறினர்.

அனைவரும் மதியம் 3-00 மணியளவில் காவல் துறையால் கைது செய்யபட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

போராட்டத்தின் போது

சாதி தீண்டாமை ஒழிக!
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் என்ன இழிபிறவிகளா?

பணி வழங்கும் வரை இடைக்கால ஊதியம் கொடு!
உச்ச நீதிமன்ற வழக்கை விரைந்து நடத்து!

தலித் ஜனாதிபதி, தலைமை நீதிபதி ஆகலாம்
அர்ச்சகர் ஆக முடியாதா?

ஆகமப்படி அமைந்த கோவிலில் பணி வழங்கு!

அனைத்து கோவில்களும் பொதுக் கோவில்
பார்ப்பன அர்ச்சகர்களின் தனிச்சொத்தல்ல!
அர்ச்சகர் பணி என்பது அரசு பணிதான்

என்பதை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு காலையில் பல பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். ஆனால், கோயிலுக்குள் நடந்த நீண்ட போராட்டம், வாக்குவாதங்கள், அதைத் தொடர்ந்து காவல் துறை கைது நடவடிக்கை இவை அனைத்துக்கும் பிறகும் டெக்கான் குரோனிக்கிள் ஆங்கிலப் பத்திரிகையைத் தவிர பிற பத்திரிகைகள் இந்த போராட்டம் குறித்த செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டம் அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியதற்கான அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமை பாது காப்பு மையம்,
மதுரை
9443471003, 9865348163

  1. தலித் ஜனாதிபதி, தலைமை நீதிபதி ஆகலாம், தலித் தவிர பிற சூத்திர சாதிகளும்கூட
    அர்ச்சகர் ஆக முடியவில்லையே……… பெரியாரின் பிறந்தநாளில் முத்தாய்ப்பாக போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

  2. தந்தை பெரியார் அவர்களின் 136 ஆவது பிறந்த நாளில் மீனாட்சி அம்மன் சன்னதியிலே அர்ச்சக மாணவர்கள் நடத்தியுள்ள இந்த போராட்டம் வறலாற்று சிறப்பு மிக்கது.1972 சனவரி 26ல் பெரியார் அவர்கள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி கருவறைத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் எனக் கோரி கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.42 ஆண்டுகளுக்குப் பிறகும் கருவறைத் தீண்டாமை ஒழிக்கப் படவில்லை.உச்சிக் குடுமி மன்றமும் பார்ப்பன மேலாதிக்கமும் சேர்ந்து சோரம் போன திரவிடக் கட்சிகளின் சுயநலத்தைப் பயன்படுத்திக் கொண்டு இன்று வரை கருவறைத் தீண்டாமையை நிலை நிறுத்தி வருகின்றன.இவர்களை நம்பிப் பயனில்லை.அம்பாளின் சன்னதியில் அனைவருக்கும் இடம் உண்டு. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் அம்பாள் என்ன பட்டர்களுக்கு ஆதரவாகவா வந்தாள்.இல்லையே.அர்ச்சக மாணவர்களுக்காத்தான் அம்மன் வந்தாள்.அது அடி உதை வாங்கியவர்களுக்குத் தெரியும்.மீனாட்சித் தயாருக்கும் தெரியும்.அர்த்தமண்டபத்திலிருந்து கருவறை வெகு தொலைவில் இல்லை.சிலத் தப்படிகள்தான். நுழைந்திருக்கலாம்.ஆனால் தடைசெய்யப் பட்டிருக்கும் மக்களும் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை உணரும் காலம் விரைவில் வரும்.மீனாட்சி கண் திறக்க மக்களின் பேராதரவோடு கருவறை நுழைவோம்.அகமகிழ்வோம் நம்மைப் பெற்ற அன்னையோடு.கருவறைத் தீண்டாமையை எதிர்த்துத் துணிவுடன் போராடிய அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களுக்கும். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க