Friday, January 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்அசோக் லேலாண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை

அசோக் லேலாண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை

-

களப்போராளிகள் தேவை என்பதை உணர்த்திய தொழிலாளர்களுக்கு நன்றி! நன்றி!!

சூர் அசோக் லேலாண்டு ஆலை-2-ல் 19–09–2014 அன்று நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இணைச் செயலாளர் பொறுப்புக்கு தோழர் பரசுராமன் போட்டியிட்டார். இவ்வாலையில் 3 இணைச் செயலாளர் பொறுப்புகளுக்கு மூன்று அணிகள் சார்பாக (தலா 3 பேர் என்ற வகையில்) 9 பேர் போட்டியிட்டனர். தோழர் பரசுராமன் மற்றும் பாரி என்ற இரண்டு பேர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தோழர் பரசுராமனுக்கும் பாரிக்கும் தலா 289 வாக்குகள் மட்டும் கிடைத்தன. இதில் வெற்றி பெற்ற ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் முறையே 747, 656, 720 ஆகிய ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர்.

அணி அரசியலின் வெற்றியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தோழர் பரசுராமன் பெற்ற வாக்குகள் 289 என்பது குறைவானதே. இதேபோல, எல்.சி.வி. சேசிஸ் பகுதியில் கமிட்டிக்குப் போட்டியிட்ட தோழர் ரவிச்சந்திரன் பெற்ற வாக்குகளும் குறைவானதே. வெற்றியா, தோல்வியா என்று எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது தோல்வியே.

இந்த வெற்றி தோல்வி – வாக்கு எண்ணிக்கை அதிகம் – குறைவு என்பதை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை விளக்கி பு.ஜ.தொ.மு. சார்பாக வெளியிட்ட துண்டறிக்கையின் உள்ளடக்கத்தை இங்கே தருகிறோம்.


[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

அன்பார்ந்த லேலாண்டு தோழர்களே!

நாங்கள் சொல்லும் நன்றி, இணைச் செயலாளர் (ஒகு) பொறுப்புக்கு போட்டியிட்ட தோழர் பரசுராமன் மற்றும் கமிட்டிக்கு போட்டியிட்ட தோழர் ரவிச்சந்திரனுக்கு வாக்களித்ததற்காக மட்டுமல்ல. இதன் மூலம் தொழிலாளர்கள் உணர்த்தியுள்ள உண்மைக்காக…

ஆம், தொழிலாளர்கள் உணர்த்திய அந்த உண்மை, களப்போராளிகள்தான் இன்றைய தேவை என்பதே!

தொழிலாளர்களால் சங்க நிர்வாகியாக எங்களைத் தேர்ந்தெடுக்க இயலாமல் போனாலும் கணிசமான தொழிலாளர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இது எங்களைத் தொடர்ந்து செயல்பட ஊக்கமருந்தாக அமைந்துள்ளது.

தொழிலாளர்களது இந்த உணர்வை பெரிதும் மதிக்கிறோம்! போற்றுகிறோம்! உயர்வாகக் கருதுகிறோம்!

எந்தச் சூழலில் தொழிலாளர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை சீர்தூக்கிப் பார்த்தாலே இந்த உண்மை உங்களுக்கு புரியும்.

எங்களது தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பிரசுரத்தில் குறிப்பிட்டது போல நடந்து முடிந்த இந்தத் தேர்தலும் காசு, தண்ணி, பிரியாணி உள்ளிட்ட அனைத்துவித ஓட்டைக் கவரும் பண்டங்களுடன் அணி கவர்ச்சிகளுடன் நடை பெற்றது. தனிப்பட்ட முறையில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் இவற்றைத் தாண்டி லேலாண்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் காட்டிய கவர்ச்சி வாசகங்களும் வழமையானதைவிட ‘சிறப்பாகவே’ இருந்தது. தலைவர்களை கவர்ச்சியாகக் காட்டி ஓட்டு கேட்கும் நடைமுறையும் புதிய வடிவங்களை எடுத்தது. ஆலை நிர்வாகத்தின் மூலதன இலக்கிற்கு – அடக்குமுறை நோக்கங்களுக்கு குந்தகம் விளைவிக்காத, அவற்றைத் தாக்காத, பதவிக்கு பாதுகாப்பான வீரச் சவடால்களும் நிறைந்திருந்தன. எங்களுக்கு வாக்களித்த – வாக்களிக்காத பல தொழிலாளர்கள் நாங்கள் நேரில் அவர்களது சாப்–க்கு வந்து ஓட்டு கேட்கவில்லை என்று எங்களது குறையை சுட்டிக்காட்டினார்கள்.

இந்தச் சூழலில்தான் தொழிலாளர்கள் அளித்த வாக்குகளை சீர்தூக்கிப் பார்க்கிறோம். பு.ஜ.தொ.மு.வின் கடந்த கால செயல்பாடு, பு.ஜ.தொ.மு. தோழர்களின் போராட்டம், அவர்களது நடைமுறை ஆகியவற்றை உரசிப்பார்த்து, இந்தத் தேர்தலில் ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை நாங்கள் உறுதியாக அம்பலப்படுத்தியதைப் பார்த்து, தொழிலாளர்கள் அளித்த வாக்குகள் என்பதால் அதனை மேலானதாகக் கருதுகிறோம்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் போதும், வாக்களித்துவிட்டு திரும்ப வரும்போதும், தொலைபேசியிலும் நேரிலும் தொழிலாளர்கள் பேசிய வாசகங்கள், தெரிவித்த கருத்துகள், எங்கள் மனதில், உணர்வில் நிழலாடிக்கொண்டுள்ளது.

“பரசு நான் உனக்கு ஒரு ஓட்டுப்போட்டேன். ஏன்னா போராடுற ஒருத்தன் வேணும்.”

“உனக்கு ஓட்டு போடலனா நான் மனுசனில்லப்பா.”

“உனக்காக நான் 10 ஓட்டாவது சேகரிப்பேன்”

“போராடுறவன் இல்லைன்னா இவர்கள யாராலையும் தட்டிக்கேட்க முடியாது.”

இப்படி உற்சாகத்துடன், மனநெகிழ்ச்சியுடன் தொழிலாளர்கள் பேசிய வார்த்தைகள் பாட்டாளி வர்க்க உணர்வின் வெளிப்பாடு! தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் அடையாளம்!

தேர்தல் முடிவு குறித்து:

பொதுவாக, லேலாண்டில் இரு அணிகளுக்கு இடையே நடந்த தேர்தல்களின் பொழுதெல்லாம், ஏதாவது ஒரு அணி பெரும்பான்மை வாக்குகளை (50%விட அதிகமான வாக்குகள்) பெற்றுவிடும். இந்தத் தேர்தலிலோ பெரும்பான்மை வாக்குகளை யாரும் பெறவில்லை. அதிகமான ஓட்டுகளை வாங்கியவர்தான் வெற்றி பெற்றவராகவும் அதற்கடுத்த ஓட்டு வாங்கியவர் எதிரணி என்பதாகவும் அமைந்துள்ளது.

இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால், முதல் இடத்தை பிடித்தவரை 900 பேர் எதிர்க்கின்றனர். இரண்டாம் இடம் பிடித்தவரை 1100 பேர் எதிர்க்கின்றனர். மூன்றாம் இடம் பிடித்தவரை 1200 பேர் எதிர்க்கின்றனர். அதாவது இந்தத் தேர்தலில் தலைவராக நின்றவர்களுக்கு வாக்களித்தவரைவிட எதிர்ப்பவர்கள்தான் அதிகம்.

அதாவது, தொழிலாளர்கள் அறுதியிட்டு யாரையும் தலைவராகக் கொண்டுவரும் உணர்வில் இல்லை. இதனை சிலர் இடைநிலை என்று கருதலாம். அப்படியல்ல, தொழிலாளர்களின் உணர்வின் தொங்குநிலை. இந்தத் தொங்குநிலைக்குக் காரணம் தற்போது போட்டியிட்ட மூன்று அணிகளிடமும் கொள்கை, நடைமுறையில் தொழிலாளர்கள் எந்த பாரிய வேறுபாட்டையும் பார்க்கவில்லை என்பதே. புதிதாக யாராவது வந்தால் அவருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாமே என்ற உணர்வு, எச்.1 தொழிலாளர்கள் என்ற உணர்வு, வேலை வாங்கித்தந்தவர் என்ற உணர்வு, அணி உணர்வு, பொருளாதார உறவினால் ஏற்பட்ட உணர்வு ஆகியவையே வாக்களித்ததற்கான முதன்மைக் காரணங்கள்.

சுருக்கமாக சொன்னால், தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு தெரியாத தொழிலாளர்கள் தலைமைகளின் மீது காட்டிய அதிருப்தியுணர்வைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஆனால், நாங்களோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தேர்தலை எதிர்கொண்டோம். சரியான தீர்வை முன்வைத்தோம். தனிநபர்துதி, நிர்வாகத்தின் மீதான பிரமை, காசு–தண்ணி போன்ற இன்னபிற போதைகளை தெளியவைக்க முயற்சித்தோம். காசு கொடுக்கவில்லை, தேர்தல்நிதி கேட்டோம். அடக்குமுறைகளைத் துணிவாக அம்பலப்படுத்தினோம். களப்போராளிகளை உருவாக்க வேண்டும் என்ற தேவையை உணர்த்தினோம். வர்க்க ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினோம். எங்கள் அரசியலை, அடையாளத்தை மறைக்காமல், நம்மைச் சூழ்ந்துவரும் மறுகாலனியாக்க அபாயத்தை உணர்த்தினோம். தொழிலாளர்கள் வாக்களித்துள்ளார்கள்!

மொத்தத்தில், இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது இதுதான். எந்தத் தலைவர்களாலும் லேலாண்டில் நடக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அடக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. களப்போராளிகளை உருவாக்குவதே உடனடிப் பணியாக உள்ளது. அந்தவகையில் லேலாண்டு தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கவும், லேலாண்டின் அடக்குமுறைகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர 1,000 தொழிலாளர்களை புதிதாக பணியமர்த்தவும், ஜனநாயகமான உற்பத்தி நிலைமை; பாதுகாப்பான பணிச்சூழல்; பணிப் பாதுகாப்பு; நியாயமான ஊதியம்–போனசு ஆகியவற்றை வென்றெடுக்கவும் உறுதியுடன் போராடுவோம்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளியிட்ட பிரசுரங்கள்

17-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்


[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

18-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம் 4
notice-2

19-09-2014 அன்று வேட்பாளர் அட்டை


[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.

  1. ‘அசோக் லேலண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை’ என்கிற இந்தப் பதிவு தொழிலாளர்களை மட்டுமல்லாது சமூகத்தின் இதர குழுக்களையும் தட்டி எழுப்பும் விதத்தில் துண்டறிக்கை இருந்தது. மிகச்சிறப்பாக களநிலைமைகள் தொகுக்கப்பட்டும் களப்போராளிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் துண்டறிக்கை விளக்கியிருந்தது. சமூகத்தின் ஒட்டுமொத்த குழுக்களும் சுரண்டப்பட்டு வருகிற சூழலில் தொழிலாளிகளோடு சேர்ந்து போராடுகிற வாய்ப்பை இதுபோன்ற துண்டறிக்கையின் மீதான விவாதங்கள் ஊக்கப்படுத்தும் என்பது மிகையல்ல. மேலும் எங்கெல்லாம் தொழிலாளர்கள் கூடுவார்களோ அங்கெல்லாம் அதை உடைக்கும் பொருட்டு ஆளும் வர்க்கம் பல்வேறு சித்து வேலைகளைச் செய்கிறது. ஒப்பந்த தொழிலாளிகள் முறை, பல்வேறு உதிரிப்பாட்டாளிகளின் நிலைமை, சமூகத்தின் அறிவுத்துறையினர், ஊடகம், வெகுஜனம் போன்ற சகலக் குழுக்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒதுங்கியிருக்கும் படிக்கு முதலாளித்துவம் பலபிரயத்தனங்களைச் செய்கிறது. இதை முறியடிக்க பலமுனைத்தாக்குதல் தேவைப்படுகிற பொழுது இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கை பற்றியபதிவுகள், சில்வர்பட்டறைத் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஈச்சர் லாரி தொழிலாளிகள், செவிலியர்களின் நிலைமை, பஞ்சாலை யூனியன் நடவடிக்கைகள், நோக்கிய தொழிலாளர்களை ஒன்றுபடுத்துகிற போராட்டங்கள், தொழிலாளர்கள் சிறை சென்ற அனுபவங்கள், சட்டப்போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் போன்ற பலதரப்பட்ட பதிவுகள் பலசமூகக் குழுக்களையும் வினையாற்ற உதவுகின்றன. தொழிலாளிகள் ஐக்கியமாதல் என்பதும் தொழிலாளிகளுடன் ஐக்கியமாதல் என்பதும் வர்க்கமாக அணிதிரள்தல் என்பதன் வெவ்வேறு நிகழ்ச்சிப்போக்குகள் அல்ல என்பதை உணர முடிகிறது.

  2. வெற்றியா தோல்வியா என்பதில் இல்லை என்பதை உணர்த்திய இந்த கட்டூரை அங்கே ஜனநாயக ரீதியில் சங்கம் நடக்கிறது என்பதை பதிவு செய்கிறது,ஏன் எனில் 3 அணிகள் சார்பாக 9 பேரும்,சுயேட்சையாக 2 பேரும் போட்டியிட அனுமதித்ததை பார்க்கும் போது நவீன ஜனநாயக வாதிகள் தங்களை சுயபரீசிலனை செய்ய வேண்டியுள்ளதை காட்டுகிறது, அய்யங்கார் ஆலைகளில் ஒரு சங்கம் மட்டுமே அதுவும் அவர்களுக்கு தோதான விசக்காளான் சங்கம் மட்டுமே இருக்கமுடிகிறது இது மறுக்கப்படும் ஜனநாயகம் என பிரச்சாரம் செய்பவர்கள் தனிப் பதிவு எண் இருந்தும் ஜனநாயகத்தை மறுக்கிறவர்களை என்னவென்றூ சொல்ல……மிக அருமையான கட்டூரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க