privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஒபாமா எம் உற்சவம் - பாரத மாதா எம் தத்துவம் !

ஒபாமா எம் உற்சவம் – பாரத மாதா எம் தத்துவம் !

-

கவுனி தாண்டுதல்
‘வெங்கடாஜலபதி என்றாலே பேமஸ் உண்டியல்தான்! அதையும் கண்டவனும் குலுக்கி காலி செய்துவிட்டால், பின் வெங்கடாசலபதி வெறும் வாயையா மெல்ல முடியும்?’ (படம் : நன்றி நக்கீரன்)

சீசனுக்கு ஏற்ற மாதிரி பாய்சன் தருவதில் இந்துமத வெறியர்கள் கைதேர்ந்தவர்கள். ஆடி மாதம் மக்களை கூழாய் கரைத்தாயிற்று, ஆவணி மாசம் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையில் பிடித்தாயிற்று, இப்போது புரட்டாசி மாதம் வெங்கடாசலபதி ‘நாமத்தில்’ இழுக்கும் வேலையில் காவிப்படை கிளம்பிவிட்டது. குறிப்பாக சென்னையில் “திருப்பதி குடை கவுனி தாண்டுகிறது” (அதாவது யானைக்கவுனி என்ற ஏரியாவைத் தாண்டுவது) என்ற பெயரில் காவிப்பரிவாரங்கள் தலைமை தாங்கி இதையும் தனது குடையின் கீழ் பக்தர்களைத் திரட்டிக் கொள்ளும் நோக்கத்தோடு தெருவுக்கு தெரு கிளம்பி வருகிறது.

‘வெங்கடாஜலபதி என்றாலே பேமஸ் உண்டியல்தான்! அதையும் கண்டவனும் குலுக்கி காலி செய்துவிட்டால், பின் வெங்கடாசலபதி வெறும் வாயையா மெல்ல முடியும்?’ என்ற எச்சரிக்கையோடு இந்து மதத்தின் ஹோல்சேல் வியாபாரிகள் ‘உண்டியல் வசூல் கிடையாது!’ என விளம்பரப்படுத்தியிருக்க, சீசன் பிச்சைக்காரர்களுக்கும், ஏரியா வசூல் மன்னர்களுக்கும் ஏகக் கடுப்பு!

திருப்பதி குடை வரும் வீதியில், சாலை ஓரங்களில் தங்க நிறத்தில், தகதகக்கும் செட்டிங்கில் பாலாஜி பள பளக்கிறார். இப்படி ரெடிமேட் கோயில் வைத்து, ஏழுமலையானை தெருவோரம் எழுந்தருள வைப்பது வைகாஷ்சம விதிப்படி ‘உசிதமா’ என்பதை வைணவர்களின் பார்வைக்கே விட்டுவிடுவோம்!

எப்படியோ, பக்தியை மூலதனமாக்கி பெருமாளின் குடை கவுனியைத் தாண்டுகிறதோ இல்லையோ, பெருமாள் கையைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘மூலதனத்தின் பக்தி’ மோடி தலைமையில் இந்தியா தாண்டுகிறது! அமெரிக்க ஏழு மலையானைத் தரிசிக்க அம்பானி சகிதமாய் மோடி பக்த ஜனசபை வாசிங்டன் குடையோடு உற்சவ மூர்த்தி திசைநோக்கி புறப்பட்டு விட்டது!

அமெரிக்காவில் மோடி
மோடி வந்தால் இந்தியா தலைநிமிரும் என்றார்கள், அது மொட்டையடிப்பதற்காக என்பது இப்போதுதான் புரிகிறது!

பக்தியின் பெயரால் அடிக்கப்பட்ட மொட்டையால் (முடியால்) ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வருமானமாம் பாலாஜிக்கு! பன்னாட்டுக் கம்பெனிகளின் பாலாஜிகளுக்கு இந்தியாவின் மொத்த தலையையும் அமுக்கிப் பிடிக்கும் வேகத்தில் மோடியின் வாய் ஒலிக்கிறது. “மேக் இன் இந்தியா!” அப்படியாயின் ஏழுமலையானுக்கு நாம் அடித்த மொட்டை? அது “மேட் இன் இண்டியா!” சுதேசி, இந்தியனாய் இரு! இந்தியப் பொருளையே வாங்கு என்றதெல்லாம் பழைய மொட்டை! நீ எவனாய் வேண்டுமானாலும் இரு இந்தியாவில் வந்து மொட்டை அடி, என்பதுதான் புதிய மொட்டை “மேக் இன் இண்டியா!”

பக்தியின் வாடிக்கையாளர்களை வேண்டுமானால், லட்டு டோக்கன், க்யூ, கவுன்ட்டர், பல மணிநேரம் காத்திருப்பு என கட்டுப்படுத்தலாம், ஏழு மலையான் ஒன்றும் எழுந்து போகப் போவதில்லை. மூலதனத்தின் மூர்த்திகளை காக்க வைப்பதும், கட்டுப்படுத்துவதும் தெய்வகுத்தம். ஆதலால், தேசத்தையே சிறப்பு கவுன்டர் மூலம் அவர்களுக்கு திறந்துவிட்டு, அவர்கள் இஷ்ட்டப்படி எழுந்தருள, தொழிலாளர்களை பக்தர்களாக்கி மொட்டையடிக்க தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை திருத்தப்படும் என வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுப்ரபாதத்தை தொடங்கிவிட்டார்! மோடி வந்தால் இந்தியா தலைநிமிரும் என்றார்கள், அது மொட்டையடிப்பதற்காக என்பது இப்போதுதான் புரிகிறது! இந்தியாவை ‘பாரத மாதாவாக’ப் பார்க்க வேண்டும் என்று கும்பிடச்சொன்ன ‘பாரத புத்திரர்கள்’ இன்று, “இந்தியாவை சந்தையாக மட்டும் பார்க்காதீர்கள்! தொழில் வாய்ப்பாக பாருங்கள்!” என்று கூப்பிடச் சொல்கிறார்கள்.

கவுனி தாண்டுதல்
மூலதனத்தின் மூர்த்திகளை காக்க வைப்பதும், கட்டுப்படுத்துவதும் தெய்வகுத்தம். (படம் : நன்றி நக்கீரன்)

இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பா.ஜ.க. வின் முன்னோடி ஜனசங்கம் என்பதே முதலாளிகளுக்கான சங்கம்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிறவிப் பெருங்கடலில் நீந்தி உண்டகட்டி வாங்கிய உத்தமர்கள்தான்! “இந்தியா முன்னேற அந்நிய நேரடி மூலதனம்தான் ஒரே வழி” என்று பேசும் மோடியின் உறுதி, ஜனசங்கத்தின் வரலாற்று வழி சுருதிதான்!

எல்.ஐ.சி, பெல் (BHEL), இந்தியன் ரயில்வே போன்ற அரசு, பொதுத்துறை நிறுவனங்களை அன்னிய முதலாளிகளின் லாபத்திற்காக அழித்துவிட்டு, குறிப்பாக இந்திய உற்பத்திகளையும், அதற்கான வாய்ப்புகளையும் அழித்துவிட்டு, ‘இந்தியாவில் உற்பத்தி’ என்பது ஏதோ முற்போக்கு ஆரவார கூச்சலாக கருத்தை மறைக்கும் அளவுக்கு கத்தி தீர்க்கும் மோடி அரசின் தேசத்துரோக வளர்ச்சியின் முழக்கம்தான் இந்த ‘மேக் இன் இந்தியா!’

“நாடு முழுக்க மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்துங்கள்” என்று “லிவ் இன் இண்டியாவை” காலி செய்துவிட்டு, அதாவது உள்ளூர்த் தொழிலை காலிசெய்து விட்டால், ‘மேக் இன் இண்டியாவை’ நான் மேய்ந்து கொள்கிறேன் என்று அம்பானி உடனே துள்ளி எழுகிறார்! அம்பானி, டாடா, அசீம் பிரேம்ஜி இப்படி முதலாளிகளின் வளர்ச்சிதான் தேசத்தின் வளர்ச்சி என்று காட்டியும், இன்னும் இந்தியா முன்னேற வேண்டுமானாலும் பன்னாட்டு முதலாளிகள் கட்டுப்பாடின்றி வந்து தொழில் தொடங்க வேண்டும் என்பதும், மோடியின் மூளையில் உதித்த ஞானம் அல்ல! உலக வர்த்தகக்கழக பெருமானின் வாமன அவதாரத்தின் கட்டளைக்கு கீழ்பணிந்து, சிரம் தாழ்த்தி குடைபிடிக்கும் மோடி அரசின் தரகுப் பிரமோற்சவம் இது!

அமெரிக்காவில் மோடி
இந்தியா முன்னேற வேண்டுமானாலும் பன்னாட்டு முதலாளிகள் கட்டுப்பாடின்றி வந்து தொழில் தொடங்க வேண்டும்.

பாருங்கள், ஆதிசங்கரனால் கூட இப்படி ஒரு அத்வைத விளக்கம் தர முடியுமா என்று தெரியவில்லை? மூலதனத்தின் அகண்ட பாரத நாயகன் மோடி சொல்கிறார். “எப்.டி.ஐ என்பது ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்” என்பது மட்டுமல்ல “பர்ஸ்ட் டெவலப் இண்டியா”! ஆகா! என்ன ஒரு பாஷ்யம்! அகம் பிரம்மாஸ்மி… அன்னிய மூலதனம்… அதுவே இந்தியா! இந்தியாவே மூலதனம்! நானே சத்யம்… நானே சந்தை!

அடடா! மோடியின் தர்மசாஸ்திரத்தின் அர்த்தம் விளங்க நடுங்குகிறாள் பாரதமாதா! முழுவதும் முதலாளிகளுக்கும், மூலதனத்திற்கும் என்று ஆனபின்பு என் முகத்தின் மேக்கப்பையாவது கொஞ்சம் மாற்றக்கூடாதா! என கதறுகிறாள் பாரதமாதா!

ஒபாமாவே எம் உற்சவம்! பாரத்மாதா எங்கள் தத்துவம்! என ஆதிசங்கரனின் நமட்டுச் சிரிப்போடு அமெரிக்க பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் மூடில் மோடி தேசத்தையே மெய் மறக்கிறார்! இனி என்ன? இந்தியாவின் மானம் காக்க வந்த பா.ஜ.க – வின் தாரக மந்திரம் “சர்வம் சமர்ப்பயாமி!”

– துரை.சண்முகம்