privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஜெயிலர் பாராட்டு, பேரறிவாளன் வாழ்த்து – சிறை அனுபவங்கள்

ஜெயிலர் பாராட்டு, பேரறிவாளன் வாழ்த்து – சிறை அனுபவங்கள்

-

சிறை எம்மை முடக்கி விடாது – 2

தமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்திய GSH நிறுவன மற்றும் அவர்களுக்கு ஆதரவான பிற தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு 167 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் வெளிவந்த தொழிலாளர்கள் 23-ம் தேதி காலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமது சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இக்கட்டுரை அந்த அனுபவப் பகிர்வின் இரண்டாம் பாகம்.

அனுபவப் பகிர்வு கூட்டம்
அனுபவப் பகிர்வு கூட்டம்

பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் :

மாலை 6 மணிக்கு சிறையில் அடைக்கப்பட்டோம். சிறைக்குச் சென்றதும் தொழிலாளர்கள் அனைவரையும் அமரவைத்து, “நாம் ஏன் கைது செய்யப்பட்டோம், கம்பெனி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர், போலீசு, நீதிமன்றமும் எப்படி தொழிலாளர்களுக்கு எதிராக கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டன” என்பதை விளக்கி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் சிவா பேசினார். பிறகு புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மறுநாள் காலை அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து வைத்து நாம் சிறைக்குள்ளும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதை விளக்கி அனைத்து வேலைகளுக்கும் குழுக்கள் அமைத்தோம். மொத்தம் ஆறு குழுக்கள், ஒவ்வொரு குழுவிற்கும் பத்து உறுப்பினர்கள். இந்த குழுக்கள் சுழற்சி முறையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டன.

உணவுக்குழு மூன்று வேளையும் 167 தொழிலாளர்களுக்கும் தேவையான உணவுகளை வாங்கி வந்து விடும். மருத்துவக்குழு உடல்நிலை சரியில்லாத தொழிலாளர்களை சிறை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும், அருகிலேயே இருந்து உணவு உள்ளிட்ட தேவைகளை கவனித்துக் கொள்ளும். சுகாதாரக்குழு தங்கியிருந்த இடத்தையும் சுற்றுப்புறத்தையும் காலை மாலை இருவேளையும் கூட்டிப்பெருக்கி சுத்தமாக வைத்திருக்கும். தண்ணீர்க்குழு குடிப்பதற்கும், குளிப்பதற்குமான தண்ணீரை ஏற்பாடு செய்துவிடும், விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளை சந்தித்து அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து ஒவ்வொரு நாள் இரவும் தொழிலாளர்களிடம் விளக்கும். தொண்டர் குழு அனைத்து வேலைகளையும் ஒழுங்குபடுத்துவதுடன் தொழிலாளர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை அறிந்து அதை சம்பந்தப்பட்ட குழுவிடம் தெரிவித்து பெற்றுத்தரும்.

ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். பட்ஜெட் பற்றி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம், இந்துமதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம். மறுகாலனியாதிக்கம் பற்றி அறைக்கூட்டம் என்றால் அன்று முழுக்க அது தொடர்பான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கலைநிகழ்ச்சிகள் நடக்கும் போது சிறையில் உள்ள மற்ற கைதிகளும் ஆர்வத்தோடு உட்கார்ந்து கேட்பார்கள். “திருந்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்”, “வைகோ, நெடுமா, சீமான்” போன்ற பாடல்கள் நேயர் விருப்ப பாடல்களைப் போல ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் என்று கேட்கும் பிரபல பாடல்களாகிவிட்டன.

கொரிய முதலாளிகளோடு சேர்ந்துகொண்டு GSH தொழிலாளர்களை ஒடுக்கும் அரசின் அடக்குமுறைகளைப் பற்றியும், பிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையை பற்றியும் நாடகங்கள் போட்டோம். தொழிலாளர்கள் கவிதைகள் வாசித்தனர்.

சங்கம் கட்டுவதில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் இறுதியில் வெற்றிகரமாக சங்கம் கட்டப்பட்டதை பற்றியும் TI மெட்டல் மற்றும் கெமின் ஆலையில் பணிபுரியும் இரு தொழிலாளர்கள் தமது அனுபவங்களை விளக்கிப் பேசினர்.

மேலும் இரு தொழிலாளர்கள் சங்கத்திற்கு வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் என்பதைப் பற்றி பேசினர்.

ஒரு தொழிலாளி, தான் பா.ம.க. இளைஞரணி ஒன்றியச் செயலாளராக இருந்த போது வன்னிய சாதிவெறியனாகவும், குடிகாரனாகவும், பிற்போக்கான நபராக இருந்ததையும், பா.ம.கவில் இருந்த போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பத்து பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றதையும் பா.ம.க உண்மையில் பாட்டாளி மக்களுக்கு எதிரான கட்சி என்பதை பு.ஜ.தொ.மு விற்கு வந்தபிறகு தான் உணர்ந்த்தாகவும் சாதிவெறியனாக இருந்து தோழராக மாறி வந்த பாதையை பற்றி கூறினார்.

மற்றொரு இளம் தொழிலாளி, “சங்கத்தில் இணைந்தால் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்கிற பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் தான் பு.ஜ.தொ.முவில் இணைந்தேன் தோழர்கள் எப்போது பிரச்சாரத்திற்கு அழைத்தாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்து வந்தேன். அந்த நேரங்களில் ஒன்னு பசங்களோட தண்ணியடிச்சிட்டு சுத்திட்ருப்பேன் அல்லது பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கொண்டிருப்பேனே தவிர வேறு எந்த வேலையும் இருக்காது. ஆனா தோழர்கள் அழைத்தால் போக மாட்டேன். ஒரு நாள் மின்சார ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த போது நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு தோழர்கள் நிதிவசூல் பிரச்சாரத்திற்காக வந்து மக்களிடையே பேசிய போது தான் தோழர்கள் செய்த பிரச்சாரத்தையும் அதற்கு மக்கள் அளித்த ஆதரவையும் நேரடியாக பார்த்தேன். இவ்வளவு நாட்கள் தோழர்கள் நம்மை இதற்காக தான் அழைத்திருக்கிறார்கள், நாம் தான் புரியாமல் நடந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து உடனடியாக அடுத்த ஸ்டேசனில் இறங்கி தோழர்களோடு இணைந்து கொண்டேன். அதன் பிறகு ஒரு தோழராக மாறி இப்போது மூன்றாவது முறை கைதாகி சிறைக்கு வந்திக்கிறேன்” என்று விளக்கிப் பேசினார்.

சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முதல் நாள் இரவு ஜெயிலர் எங்கள் பிளாக்கிற்கு வந்து பார்த்து விட்டு போராட்டத்தை பாராட்டி பேசினார். “இதுக்கு முன்னாடி பா.ம.க காரங்க ஒரு முன்னூறு பேரு வந்தாங்க, வீட்ல அரை குடம் தண்ணில குளிக்கிறவன் எல்லாம் இங்கே வந்து நாலு குடம் தண்ணிய காலி பண்ணானுங்க, அதோட மத்தவங்க குளிக்க முடியாதபடி தண்ணியையும் அழுக்காக்கிருவானுங்க. எந்த கட்சிக்காரன் வந்தாலும் இந்த இடத்தையே அசிங்கமாக்கி நாசம் பண்ணிருவானுங்க. ஆனா நீங்க ரொம்ப நீட்டா வச்சிருக்கீங்க உங்ககிட்ட இருந்து நாங்களே நிறைய கத்துக்கிட்டோம். இன்னும் கொஞ்ச நாள் இருந்தா சிறையையே வேற மாதிரி மாத்திப்பீங்க” என்றார்.

அதோட, “இதுக்கு முன்னாடி வந்த எல்லோருமே யாராவது ஒரு பிரபல தலைவரோடு தான் வந்திருக்காங்க. நாம் தமிழர் கட்சிக்காரங்க சீமானோட வந்தாங்க, பா.ம.க.காரங்க அன்புமணி ராமதாசோட வந்தாங்க, ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் சவுந்திரராஜனோட வந்தாங்க, ஆனா உங்கள்ள யாரும் பிரபலமான தலைவர்களா தெரியல, ஆனா உங்களோடு இவ்வளவு இளைஞர்கள் கட்டுப்பாடாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும் போது வியப்பா இருக்கு. இவ்வளவு சரியாக இருக்கும் நீங்கள் நடத்தும் போராட்டமும் சரியாகத்தான் இருக்கும் ஆகவே உங்களுடைய போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று கூறியதுடன், என்னுடைய நண்பன் கல்லூரி காலத்தில் ம.க.இ.க வில் இருந்தான். நான் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த போது அவனோடு சேர்ந்து சுவரெழுத்துக்கள் எழுத போயிருக்கேன். அதனால உங்களைப் பத்தி ஓரளவுக்குத் தெரியும். புதிய ஜனநாயகம் பத்திரிகை படிச்சிருக்கேன். என்னுடைய அம்மா அப்பா ரெண்டு பேரும் திராவிட குடும்பத்தை சேர்ந்தவங்க” என்றார்.

கடைசி நாள் சூப்பிரண்டெண்ட், “இந்த ஏழு நாட்களில் நிறைய படிச்சிருக்கீங்கன்னு தெரியுது, இத்தனை ஆண்டுகளில் லைப்ரரியில் இவ்வளவு நூல்களை புரட்டிப் பார்த்ததும் ஏழு நாட்களில் நிறைய படித்ததும் நீங்களாகத் தான் இருக்கும். உங்களோட போராட்டம் நியாயமானது சட்டப்பூர்வமான வழியில் போராடி வெற்றி பெறுங்கள்” என்றார்.

வந்த ஓரிரு நாட்களிலேயே அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை சந்தித்தோம், வழக்கு பற்றியும் சிறைக்கொடுமைகள் பற்றியும் விரிவாக கூறினார். நாங்கள் கிளம்புவதற்கு முதல் நாள் “உங்களுடைய சிறை அனுபவங்களையும், தொழிலாளர்களுக்கு ஏதேனும் கூற விரும்பினால் அதையும் தொழிலாளர்கள் மத்தியில் வந்து பேச வேண்டும்” என்கிற கோரிக்கையை வைத்தோம். அதை ஏற்று எங்களிடையே பேச வந்தார்.

“என்னை கைது செய்து விசாரணை செய்து கொண்டிருந்த போது சி.பி.ஐ தலைமை அதிகாரி ராகோத்தமன் ‘என்னடா சாதி ஒழிப்புன்னெல்லாம் பேசுற, சாதியெல்லாம் இப்ப எங்கடா இருக்குன்னு’ கேட்ட போது அந்த இளமைப் பருவத்திற்கே உரிய துடிப்புடன், ‘சாதி இல்லன்னா ஏன் சார் பூணூல் போட்ருக்கீங்கன்னு’ அந்த 18 வயதிலேயே கேட்டேன், அதுக்கு காரணம் எங்க குடும்பம்தான், எங்க குடும்பமே ஒரு அரசியல் குடும்பமாக, திராவிடர் கழக பாரம்பரியத்தில் வந்ததனால் தான் நான் அப்படி பேசினேன். அப்போது நான் எப்படித் துடிப்பான இளைஞனாக இருந்தேனோ அப்படித்தான் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்.

இன்னைக்கு உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களை சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சுரண்டலை எதிர்த்து போராடி நீங்க சிறைக்கு வந்திருக்கீங்க, இந்தப் போராட்டத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளக்கூடாது. அடுத்தக்கட்டமா நீங்க சிறையில் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அதனால் மனரீதியாக பாதிக்கக்கூடாது. அப்படி பாதிக்காம இருக்கணும்னா குடும்பத்தை அரசியல்படுத்த வேண்டும், குடும்பத்தோடு போராட வேண்டும். நீங்க மட்டும் சிறைக்கு வந்திருக்கீங்க ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தால் அது எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்திருக்கும். நான் 23 வருசமா சிறையில் இருந்தாலும் இன்னும் உறுதியோடு இருக்கக் காரணம் 23 வருசமும் எங்க அம்மா வாரம் வாரம் வந்து பார்த்துட்டு போறதுதான்.

என்னை பார்க்க வர்ற பலரும் உங்க அம்மா இல்லைன்னா நீ இல்லன்னு சொல்லுவாங்க, எங்க அம்மா இல்லைன்னா நான் இல்லைன்னு சொல்லாதீங்க எங்க அம்மா ஒரு பகுத்தறிவாளரா இல்லைன்னா நான் இல்லைன்னு சொல்லுங்கன்னு சொல்வேன். எங்க அம்மா ஒரு சாதாரண அம்மாவா இருந்திருந்தாலும் வாரம் வாரம் வந்துட்டு போயிருப்பாங்க. ஆனா திருப்பதிக்கோ, பழனிக்கோ போய்ட்டு கையில விபூதியோடு வந்து கடவுளை வேண்டிக்கப்பான்னு சொல்லிட்டு போயிருப்பாங்க. ஆனா அற்புதம் அம்மா பகுத்தறிவுவாதியாக இருக்கிறதனால என்னை வாரம் வாரம் வந்து பார்க்கிறதோட, ஆறுதல் சொல்லி வெளியில இப்படி இப்படி எல்லாம் போராட்டம் நடக்குது அடுத்து என்ன பண்ணலாம்னு கலந்தாலோசிச்சிட்டு போவாங்க.

2010 வரை தமிழகத்தில் இருந்த தலைவர்கள் தான் என்னை இயக்கிக்கிட்ருந்தாங்க, நானும் அவங்களை நம்பி பின்னாடி போனேன். 2010 க்கு பிறகு தலைவர்கள் பின்னாடி போகக்கூடாதுன்னு முடிவு பன்னி நானே தனியாக பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்ப நானே டிரைவ் பன்றேன் விபத்து நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பாக இருந்துட்டு போறேன்.

நான் கைதான உடனே “பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 26 தமிழர்களை உடனே விடுதலை செய்” என்று குறிப்பாக பெயர் குறிப்பிட்டு சுவரொட்டி போட்டது தமிழ்நாட்டிலேயே மக்கள் கலை இலக்கியக் கழகம் மட்டும் தான். புதிய ஜனநாயகம் பத்திரிகையை எங்க அம்மா கொண்டு வந்து கொடுப்பாங்க. ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் நடத்தி வரும் எல்லா போராட்டங்களும் எனக்குத் தெரியும். உங்கள் போராட்டம் வெற்றி பெற உங்கள் குடும்பத்தை அரசியல்படுத்துங்கள், உங்கள் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

என்று பேரறிவாளன் பேசினார்.

–     தொடரும்

வினவு செய்தியாளர்.