கோவை
“ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கக் கும்பலுக்கு அடிபணியாதே…! தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே…!” என்ற தலைப்பில் கோவையில் 30-09-2014 அன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டதிற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. பி.4 காவல் நிலைய ஆய்வாளர், “இது போல தீவிரமான போராட்டத்திற்கெல்லாம் அனுமதி தரமாட்டோம். ஒருநாள் உண்ணாவிரதம் வேண்டுமானால் இருந்து கொள்ளுங்கள்” என்றார். “உண்ணாவிரத போராட்டம் எங்கள் அமைப்புக்கு உடன்பாடில்லை” என்று தோழர்கள் மறுத்து விட்டனர்.
அடுத்து, துடியலூரில் 08-10-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து பிரச்சார வேலைகள் நடந்தது. தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள் இதுவரை எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி துணைத் தலைவர் தோழர் சத்திய நாராயணன் தலைமை தாங்கினார். தோழர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் ஜெகநாதன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.
கோவை மாவட்டச் செயலாளர் விளவை இராமசாமி தனது கண்டன உரையில், “கோவை மாவட்டத்தில் பிராந்தி, பிரியாணி, போக்குவரத்து செலவு கொடுக்காமல் கொள்கை சார்ந்து தொழிலாளர்களை திரட்டும் ஒரே அமைப்பு புஜதொமு தான்” என்றும் “வேறு எந்த ஓட்டுக் கட்சிக்கும் இந்த தகுதி இல்லை” என்பதையும் கூறினார்.
மேலும் பேசுகையில், “தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துகின்ற மோடி அரசின் செயல்பாடுகளுக்கு போலிகள் கோவையில் ஏன் போராடவில்லை. இது போல ஒரு சம்பவம் நாட்டிலே நடக்காதது போல் உள்ளனர். பாரத் மாத்தாக்கி ஜே என பிஜேபி கூப்பாடு போட, ஜப்பான், அமெரிக்கா போன்ற அந்நியர்கள் நாட்டை சுரண்ட தடையாக இருப்பதுதான் தொழிலாளர் நலச் சட்டங்கள். எனவேதான் மோடி அரசு பதவி ஏற்றவுடன் இச்சட்டத்தை திருத்த முயற்சிக்கின்றனர்.
பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் அடியாளைப் போல மோடி செயல்படுகிறார். கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் முதலாளிகள் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணியில் உள்ளார்.” என்றும் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்றவைகளை அம்பலப்படுத்தியும் பேசினார்.
இறுதியாக, தோழர் கோபிநாத்-ன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை
ஆவடி- அம்பத்தூர்
“ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்க கும்பலுக்கு அடிபணியாதே ! தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தாதே !” என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும் இரு மாத பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அம்பத்தூர் உழவர் சந்தைக்கு முன்பு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஆவடி-அம்பத்தூர் பகுதி சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம், 07.10.2014 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
ஆவடி-அம்பத்தூர் பகுதி செயலாளர். தோழர். டி. முரளிதரன் முன்னிலையிலும், திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர், தோழர். சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் கண்டன முழக்கங்கள் முழங்கப்பட்டன.
இன்று தொழிலாளர் சட்டங்கள் அமலாக்குவதில் உள்ள அவல நிலைமையையும், இந்த நிலைமையில் தொழிலாளர் நல சட்டங்களை மாற்றும் மோடி அரசின் பயங்கரவாதத்தை பற்றியும் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர், தோழர் சதிஷ்குமார் தனது தலைமையுரையில் விளக்கினார்.
ஏற்புரை நிகழ்த்திய பு.ஜ.தொ.மு மாநில இணைச் செயலாளர். மா.சி. சுதேஷ்குமார் அவர்கள், இன்று நிலவும் தனியார்மய உலகமய சூழல்களுக்கும், முதலாளிகளின் நலன்களுக்காகவும் சட்டத்தை திருத்துவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களை இரவு நேர வேலைக்கு கட்டாயமாக்கும் சட்டம் மற்றும் தொழிற் பழகுனர் (Apprentice) என்ற பெயரில் இளம் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்துவத்தின் பயங்கரவாதம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி பேசினார்.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஆவடி-அம்பத்தூர் பகுதி