Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅதிமுக-வை எதிர்த்தா என்கவுண்டர் - திருச்சி அம்மா போலீசின் திமிர்

அதிமுக-வை எதிர்த்தா என்கவுண்டர் – திருச்சி அம்மா போலீசின் திமிர்

-

ழல் குற்றவாளி பாசிச ஜெயா கைது நடவடிக்கைக்குப்பின் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் ஆட்டம் போட்டது தமிழக காவல்துறை!

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் அ.தி.மு.கவின் அடியாள் படையாகவே செயல்பட்டு அம்பலப்பட்டு போயுள்ளனர்.

திருச்சி மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்த முயலும் பா.ஜ.க அரசின் சதித்செயலை கண்டித்து அக்டோபர் 30.09.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி பெற்று இருந்தனர். இதற்கிடையே ஜெயாவை குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைத்தது பெங்களுரு நீதிமன்றம். கைதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தபோவதாகவும், எனவே, பு.ஜ.தொ.முவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்வதாகவும் கூறினார், அமைச்சர் கோகுல இந்திராவின் கொழுந்தனாரும் திருவெறும்பூர் ஆய்வாளருமான பாஸ்கர்.

எனவே, பு.ஜ.தொ.மு தோழர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் தண்டபாணி ஆகியோர் காவல் ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து, திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த தங்களுக்கு அனுமதியளிக்கவேண்டும், கொடுத்த அனுமதியை மறுப்பது ஜனநாயக விரோதமானது என எடுத்துக்கூறினர்.

அதிமுக ஆய்வாளர் பாஸ்கர், “என்னய்யா ரொம்ப அறிவாளித்தனமா பேசுற, உங்க தலைவர உள்ளபுடிச்சி போட்டா சும்மா இருப்பியா, அம்மா வெளியவரவரைக்கும் யாருக்கும் அனுமதி கிடையாது. அரசாங்கம், போலீசோட அனுசரிச்சு போங்கயா” என கூறினார்.

தோழர் தண்டபாணி, “மரியாதையா பேசுங்க, எங்கள் தலைவர்கள் மக்கள் சொத்த கொள்ளையடிக்கிற சமூகவிரோத செயல செய்யமாட்டாங்க! மக்களுக்கு பொறுப்பான அதிகாரி நீங்க, அத மறந்துட்டு பேசாதீங்க, கோடிக்கணக்கான தொழிலாளர் பிரச்சனைக்காக நாங்க மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளதை தடுப்பது நியாயமில்லை. தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிங்க” என்றார்.

ஆத்திரமான அந்த ஆய்வாளர், “நான்யார் தெரியுமுல்ல, என் படிப்பு, உத்யோகம், சர்வீஸ் தெரிஞ்சு பேசுடா, அமைச்சர் கோகுல இந்திரா கொழுந்தன்னா டிப்பார்ட்மென்ட்டே யோசிக்கும். இந்த சட்டையபோட்டுதான் சம்பாரிக்குனுமுன்னு அவசியமில்லடா. பெரிய மசுரு மாதிரி என்கிட்டயே பேசுர, கைய, கால ஒடைச்சி உள்ள தள்ளிடுவேன்” என எகிறினார்.

இவர் செயலை கண்டித்து திருச்சி நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி அம்பலப்படுத்தினர் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள். பதறிப்போன அந்த அதிகாரவர்க்க சூரப்புலி பாஸ்கர் எரிச்சலடைந்தார்.

ஆய்வாளரை கண்டித்து போஸ்டர்
ஆய்வாளரை கண்டித்து HRPC போஸ்டர்

அடுத்த நாள் காலையிலேயே போலீசை வீட்டுக்கனுப்பி தோழர் தண்டபாணியை கைது செய்து மாலை வரை திருவெறும்பூர் காவல்நிலையம் கொண்டுவராமல் உறவினர் வீடு, போலீசு வாகனம் என சட்டவிரோதமாக அடைத்து வைத்து…”ஏன்டா என்னோட பவரைபத்தி தெரியாம மோதுர, என் பேரு, என் குடும்பத்தையே போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கயா, யாரெல்லாம் சேர்ந்து எனக்கெதிரா போஸ்டர் ஒட்னீங்க… உன்னை போட்டுதள்ள ஒரு குண்டு போதும், எனக்கு ஒரு என்கொயரிதான்… மனித உரிமை, மயிறு உரிமைன்னு இனியும் பேசுனா கொன்னுடுவேன்” என மிரட்டினார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு பேசிய போதெல்லாம் தாங்கள் கைது செய்யவில்லையென்றும் இரவு ரோந்து சென்றதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூசாமல் பொய் பேசினார்.

இவரது சட்டவிரோத நடவடிக்கையை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து கண்டித்தனர் வழக்குரைஞர்கள். ‘ “ஆமாம் கைது செய்திருக்கிறார்கள், கோர்ட்டுக்கு கொண்டுவருவார், அங்கே பாருங்கள்” என நழுவிகொண்டார் திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர். இதைச் சொல்ல அவருக்கு பல மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

இறுதியாக, தனக்கெதிராக போஸ்டர் ஒட்டியது என்று வழக்கு போடாமல் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாக அ.தி.மு.கவை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக கொஞ்சமும் நேர்மையே இல்லாமல் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

pala tiruchi 1
இந்த சுவரொட்டிக்குத்தான் அதிமுக அடிமைகளை வைத்து புகார் பெற்றுக் கொண்டு வழக்கு போட்டார் அந்த அமைச்சர் கொழுந்தன்.
அதிமுக ரவுடிகளைக் கண்டித்து மகஇக போஸ்டர்
அதிமுக ரவுடிகளைக் கண்டித்து மகஇக போஸ்டர்

இதற்கேற்ப தனது கூட்டாளியும், கட்டப்பஞ்சாயத்து புதுபணக்கார ரவுடியுமான கிருஷ்ணா சமுத்திரம் அ.தி.மு.க பஞ்சாயத்துத் தலைவர் சிவாஜி என்பவரிடம் பொய் புகார் பெற்றுக்கொண்டார். இப்படி அ.தி.மு.க காலிகளும், திருவெறும்பூர் காவல் ஆய்வாளரும் யாருக்கு யார் எடுபிடி என்று தெரியாத வண்ணம் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து போயுள்ளனர். மேலும் தனது நண்பரான துவாக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், மற்றும் துவாக்குடி ஆய்வாளர் மூலமாக பொய்புகாரின் அடிப்படையில் பகுதி தோழர்கள் சாகுல் என்பவரை இதே பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தது. தாஸ் என்ற தோழரை கைது செய்ய தேடியபோது அவர் இல்லாததால் அவர் தம்பிகள் இருவரை கைது செய்து, ‘ தாஸை ஒப்படைச்சிட்டு இவன்களை கூட்டி போ ‘ என சட்டவிரோதமாக பிணை கைதி போல அடைத்து வைத்தார் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார். அப்பகுதி மக்களை திரட்டி தோழர்கள் ஆய்வாளரின் இச்செயலை கண்டித்த பின்பே அவர்களை விடுவித்தனர். மேலும் சிலரை நள்ளிரவில் வீடு புகுந்து தேடியுள்ளது. பெண்கள், குடும்பத்தினரை அவமானப்படுத்தி துன்புறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் சட்டவிரோதமாக கடத்தி, கொலை மிரட்டல் விடுத்த ஆய்வாளரின் அராஜகத்தை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்பினருடன் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் மாவட்ட கண்காணிப்பாளரை மறுநாள் சந்தித்து முறையிட்டனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை -:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்

“உங்கள் புகாரினை விசாரிக்கிறேன், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கிறேன். உங்கள் தோழர்களை பிணையில் விட எதிர்க்க மாட்டோம்” என உறுதியளித்த பின்பே தோழர்கள் கலைந்து சென்றனர். பத்திரிக்கை-ஊடகங்கள் மூலமாகவும் நமது தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டும் அரண்டுபோன அந்த சூரப்புலி அவசர அவசரமாக தானே செலவு செய்து திருவெறும்பூர், துவாக்குடி ஆய்வாளர்கள் மீது பொய் புகார் கொடுத்த ம.க.இ.கவினரை கண்டிக்கிறோம் என பொது மக்கள் பேரில் போஸ்டர் ஒட்டி மேலும் அம்பலப்பட்டுபோனார்.

போலீஸ் போஸ்டர்
போலீஸ் போஸ்டர்

மக்களோ… “ம.க.இ.க காரன் பேரு, போன் நம்பர் போட்டு தில்லா ஒட்டுவான், இந்த லஞ்சபேர்வழிக்கு எந்த பொதுமக்கள் போஸ்டர் ஒட்டுவான்” என காரி உமிழ்ந்தனர்.

சி.பி.எம், விடுதலைச் சிறுத்தைகள். த.மு.மு.க மற்றும் மாற்றுக் கட்சியினர் பலரும், “நாங்களும் இவனை எப்படி கண்டிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டுருந்தோம். வகையா ம.க.இ.க கிட்ட மாட்டிகிட்டான், விடாதீங்க” என தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அ.தி.மு.க ஆய்வாளர் பாஸ்கர், மட்டுமல்ல காவல்துறையே சமூகவிரோத கும்பலாக சீரழிந்து கிடப்பதையும், இதனை ஒழிக்காமல் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை என்பதை விளக்கியும் திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.

அம்மா போலீஸ்
அம்மா போலீஸ் – படம் : ஓவியர் முகிலன்

செய்தி
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திருச்சி.
தொலைபேசி: 9487515406

  1. ஆய்வாளர் பாஸ்கர் அவர்களின் (மாமுல்) வாழ்கை பற்றி தங்களுக்கு ஏற்க்கனவே தெரிந்திருந்ததா?அல்லது தங்களது ஆர்பாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் தான் தெரியவந்ததா?
    ஒருவேளை ஏற்க்கனவே தெரிந்திருந்தது எனில் அதற்கு ஏதேனும் நடவடிக்கை (இப்போது போஸ்டர் ஒட்டினதுபோலவாவது )எடுத்திருந்தீர்களா?அல்லது கண்டும் காணாது விட்டுவிட்டீர்களா?
    ஏன் கேட்கிறேன் என்றால் தனக்கு ஒரு பாதிப்பு எனும்போதுமட்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்பவர் அந்த ஆய்வாளர் மட்டுமா?அல்லது பு.ஜ.தொ.மு தோழர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் தண்டபாணி அவர்களுமா?என தெரிந்துகொள்ளத்தான்.
    திடீரென்று இந்த பிரச்சனையில் அவரது ஊழல் குறித்தும் போஸ்டரில் வாசகம் இருந்ததால் தான் இப்படி கேட்கிறேன்.
    தங்களுக்கு ஒரு பாதகமும் இல்லை எனும் வரையில் அவரது ஊழல் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல அல்லவா?

  2. அய்யா வேலுமணி சரவணக்குமார் கோகுல இந்திரா உங்க சாதியா ஏன் இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வக்காளத்து வாங்குகிறீர் ஜெயலலிதா கொள்ளை அடித்து அது நிருபிக்கப்பட்டு உள்ளே போனார் தான் கொண்டிருக்கும் பதவியை மறந்து அதற்க்கு செம்பு தூக்குகிறான் ஒரு காவல் துறை ஆய்வாளர் அதை வெளிப்படுத்தி பேசுகிறது வினவு இதுல அப்ப ஏன் கண்டிக்கல இப்ப ஏன் கண்டிக்கல போஸ்டர் ஏன் ஒட்டலனு கேள்வி கேட்குறீகளே இது எதனால் சாதி பாசமா சரி இருக்கட்டும் அந்த ஆய்வாளர் எப்ப பதவிக்கு இங்கு வந்தார் என்பது கட்டுரையில் இல்லை அப்பிடி வந்து சட்ட விரோத செயல்கள் புரிந்து இருந்தால் கண்டிப்பாக வினவு வெளிப்படுத்தி இருக்கும் தங்களுக்கு பாதகம் இல்லாதவரையில் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதுதான் என் பார்வை…

  3. //ஆய்வாளர் பாஸ்கர் அவர்களின் (மாமுல்) வாழ்கை பற்றி தங்களுக்கு ஏற்க்கனவே தெரிந்திருந்ததா?அல்லது தங்களது ஆர்பாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் தான் தெரியவந்ததா?
    ஒருவேளை ஏற்க்கனவே தெரிந்திருந்தது எனில் அதற்கு ஏதேனும் நடவடிக்கை (இப்போது போஸ்டர் ஒட்டினதுபோலவாவது )எடுத்திருந்தீர்களா?அல்லது கண்டும் காணாது விட்டுவிட்டீர்களா?
    ஏன் கேட்கிறேன் என்றால் தனக்கு ஒரு பாதிப்பு எனும்போதுமட்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்பவர் அந்த ஆய்வாளர் மட்டுமா?// Vinavu always says the entire police is Mamul and rowdy police. If they have not name each and everyone it will be the entire Police payrole list. And this truth all the working class people very well. But what is my concern is why cannot Mr Velumani saravanan lend his hands on this struggle against Police and anti people state? What say Velu?

  4. அந்த ஆய்வாளரின் ஆளும் கட்சியினருக்கு சாதகமான செல்பாடுகளை கண்டித்து போஸ்டரில் குறிப்பிட்டிருப்பதை பற்றி மாற்று கருத்து நான் சொல்லவில்லை.ஆனால் திடீரென்று அவரது ஊழல் பற்றி சொல்லி இருந்ததற்க்குதான் நான் விளக்கம் கேட்டேன்.
    சம்பந்தப்பட்டவர்கள் அவரது ஊழல் பற்றி தெரிந்திருந்து ஏதேனும் புகாரோ வழக்கோ ஏற்க்கனவே பதிவு செய்திருக்கிறார்களா?அல்லது இந்த போஸ்டர் போராட்டதிற்க்குபிறகு செய்தார்களா? என்பதுதான் என்கேள்வி.
    ஒருவேளை போராட்ட அனுமதி ரத்து செய்யப்படாமலிருந்தால் அவரைப்பற்றி (அவரது ஊழல் பற்றி)இதுபோன்றதொரு கண்டன போஸ்டர் வெளிவந்திருக்குமா?
    நண்பர் திரு .ஜோசப் எந்த பிரச்னை அல்லது விவாதம் என்றாலும் சாதியை கலக்காமல் விஷயம் பற்றி மட்டும் விவாதியுங்கள்.(ஒருவேளை வினவை தொடர்ந்து படிப்பதால் வந்த அணுகுமுறையோ என்னவோ?)
    நண்பர் திரு.பாலுமணி இந்த போஸ்டர் விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சரத்தை விமர்சித்துத்தான் நான் கருத்து தெரிவித்து இருந்தேனே தவிர முழுவதும் மறுக்கவில்லை.
    ஒருவிதத்தில் நீங்கள் சொல்லுவதுபோல்தான்.அனைவர்மீதும் குற்றசாட்டுகள் இருக்கின்றன.ஆனால் சம்பந்தப்பட்டவர்களால் நமக்கு பாதகம் இல்லாதவரையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை.
    அதைவிடுத்தால் நண்பர் திரு .ஜோசப் தனது விமர்சனத்தில் சொல்லி இருந்ததுபோல (பிரச்சனைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பொழுதும்)சாதி,மொழி என ஒரு பக்கம் சார்பாக விமர்சிக்கவேண்டியது.இதைதான் சமுதாய மறுமலர்ச்சி ஏற்ப்படுத்துவதாக குறிகொள்ளும் பல இயக்கங்களும் செய்துவருகின்றன.
    ஆனால் இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இவர்கள் யார் யார் அணுகுமுறைகளை விமர்சனம் செய்கிறார்களோ அதே வழியைத்தான் இவர்களுக்கான செயல்பாட்டிலும் காண்பிக்கிறார்கள்.

    • அடப்பாவி , இங்க ஒரு கூட்டம் குடும்பத்தை மறந்து , பிறருக்காக போராட்டம் பண்ணுகிறார்கள் . அதில் எத்துனை கேலி ,” உனக்கு எதுக்கு வேண்டாத வேலை” ,” நாம் எதுக்கு போலீசிகிட்ட திட்ட வாங்கணும்” போன்ற பல தடைகளை தாண்டி , தொழிலில், வாழ்வில் தடைகளை தாண்டி தங்கள் கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து போராட்டம் செய்கிறார்கள் .

      எங்க ஊரு பியூனு அஞ்சு ரூபா லஞ்சம் வாங்கினதை பத்தி போரட்டம் பண்ணுல என்று ஆராய்ந்து குற்றம் கண்டு பிடிகிரீன்களே , நீங்க என்ன பண்ணியிருகிரீங்கன்னு சொன்னீங்கன்னா நாங்க தெரிஞ்சுக்குறோம் .

      போகும் பாதையில் உள்ள கற்களை தான் ஒதுக்கிவிட்டு முன்னேறி செல்ல வேண்டும் . ஊரில் உள்ள எல்லா கற்களையும் அகற்றுவேன் என்று அலைந்தால் ஊர் பொய் சேர முடியாது

    • நான் சொல்லல? வேலுமணி சார் ரொம்ப கருத்தாப் பேசுவாப்ளன்னு 🙂

      சார் மைக்க இவர்கிட்ட கொடுங்க. 🙂

  5. வேலுமணி சரவணகுமார் அவர்களே !!! அந்த ஆய்வாளர் பேசியபிற்பாடு தான் அவர் பற்றி தெரிந்து (விசாரித்து) போஸ்டர் போட்டதாகவே இருக்கட்டும். உலகில் நடப்பதை எல்லாம்நானா திருஷ்டியில் அறிய முடியாது அல்லவா ?

    என்னமோ போங்கள் !!!

  6. //நண்பர் திரு.பாலுமணி இந்த போஸ்டர் விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சரத்தை விமர்சித்துத்தான் நான் கருத்து தெரிவித்து இருந்தேனே தவிர முழுவதும் மறுக்கவில்லை.
    ஒருவிதத்தில் நீங்கள் சொல்லுவதுபோல்தான்.அனைவர்மீதும் குற்றசாட்டுகள் இருக்கின்றன.ஆனால் சம்பந்தப்பட்டவர்களால் நமக்கு பாதகம் இல்லாதவரையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை.
    // Vinavu is not God neither Ma Ka Ee Ka is not magical creature having infinite existance and power to perform everywhere at a time. Given their strenght and presence they are doing more than what they can do. It is an Organization of true human beings. If you are a human being come and participate and increase the good works of Vinavu to expand by that not to miss a culprit from punishment. otherwise post in future post also like this hiding your pseudo genunism.

  7. எனது விமர்சனத்தை விமர்சித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
    அதிலும் எனக்கு முன்னுரிமை வாங்கித்தர முயலும் செல்வி/செல்வன்/திரு/திருமதி சரவெடிக்கு நன்றிகள் பல.
    (எனது கருத்து என்னவென்றால்) இவர்கள் எதிர்க்கும் ஆளும் வர்க்கம் எப்படி தனக்கு வேண்டாதவர்களை மட்டும் குறிவைத்து கஞ்சா வழக்கு முதல் வன்முறையை தூண்டினார்,பிரிவினைவாத பிராச்சாரம் செய்தார் என வழக்கு சோடிக்கிறதோ அதேபோலதான் இவர்களும் இவர்களுக்கு ஆதரவளிக்காதவர்கள் அல்லது (சாதி,மத ரீதியாக )ஆகாதவர்கள் என தெரிந்தால் மட்டும்தான் அவர்களது தவறுகளை பற்றி கூக்குரலிடுவார்கள்.
    சம்பந்தமில்லாமல் ஊழல் பற்றி அந்த இடத்தில குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை என்பதுதான் எனது கருத்து.ஆளும் வர்கத்தின் நடவடிக்கைகளுக்கும் அவர்களை எதிர்க்கும் இவர்களது நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.ஆளும் வர்க்கம் கட்சி,சாதி பார்த்து நடவடிக்கை எடுக்கிறது என விமர்சித்து அதைக்கடந்து சமுதாயப்பணி செய்வதாக குறிகொல்லும் வினவும் சாதி மதம் பார்த்தே செயல்படுகிறது.

  8. “போகும் பாதையில் உள்ள கற்களை தான் ஒதுக்கிவிட்டு முன்னேறி செல்ல வேண்டும் . ஊரில் உள்ள எல்லா கற்களையும் அகற்றுவேன் என்று அலைந்தால் ஊர் பொய் சேர முடியாது”,,,,,,,. அதைதான் நானும் சொல்கிறேன் நண்பர் திரு .ராமன்.
    முதல்வர் வரும் வழியில் இருக்கும் குழி மேடுகளை சமன்செய்து சீராக பாதை அமைக்கிறது ஆளும் வர்க்கம்.சீரழிந்துகிடக்கும் மற்ற சாலைகளை பற்றி கவலை கொள்ளவதில்லை.
    அதை விமர்சிக்கும் வினவும் அதுபோலதான் .குறிப்பிட்ட சாதியினர் மதத்தினரின் தவறுகளைத்தான் கோடிட்டு காட்டிகொண்டிருக்கும்.மற்றவர்களது தவறுகளை நியாயபடுத்திகொண்டிருக்கும்.
    இந்த போக்கைத்தான் ஏற்றுகொள்ளமுடியவில்லை.இதுபோன்ற சறுக்கல்கள்தான் வினவின் பக்கம் சேரவிடாமல் தடுக்கிறது.

    எங்க ஊரு பியூனு அஞ்சு ரூபா லஞ்சம் வாங்கினதை பத்தி போரட்டம் பண்ணுல என்று ஆராய்ந்து குற்றம் கண்டு பிடிகிரீன்களே ,,,,,,,,,என்ன இவ்வளவு அசால்ட்டாக சொல்லிவிடீர்கள் திரு.ராமன்?ஒரு தொழிற்சாலைக்கு அனுமதிவேண்டி கோடிகோடியாக (அதுவும் நமக்கு ஆகாத முதலாளி வர்க்கம் ) லஞ்சம் தருவதுமட்டும் தான் குற்றமா?பிறந்த குழந்தையை கண்ணில் காட்ட , பிணவறையில் சவத்தை ஒப்படைக்க ஐந்து பத்து லஞ்சம் வாங்குவது குற்றமில்லையா நண்பரே?லஞ்சத்தை எதிப்பதில் கூட சாதி,மதம்,முதலாளிவர்க்கம், உழைப்பாளிவர்க்கம் என பாகுபாடு பார்க்கவேண்டுமா நண்பரே?

  9. நீங்க என்ன பண்ணியிருகிரீங்கன்னு சொன்னீங்கன்னா நாங்க தெரிஞ்சுக்குறோம் .,,,,,,,,,,,,,,,,,.
    சாதி, மதம், இனம் என்று பாராமல் அதற்காக விட்டுதராமல் யார் செய்திருந்தாலும் தவறை தவறு என்று தைரியமாக கூறிவந்திருக்கிரேன் நண்பர் திரு.ராமன்.
    எதற்காகவும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டும் எனது இனம் சாதி மதம் என்பதற்காக வரிந்துகட்டிகொண்டும் அடுத்தவரைமட்டும் பழித்தும் இழித்தும் எழுதாமலிருக்கிறேன் திரு.ராமன்.
    பாத்திரம் அறிந்து பிட்சைபோடு என்பதுபோல எனது (நெருப்பில்) எதிர்ப்பில் அடுத்தவர் குளிர் காயகுடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் நண்பர் திரு.ராமன்.

    • நண்பர் வேலுமணி சரவணகுமார்,

      இங்கேத் தனக்கு ஒருப் பிரச்சினை என்றவுடன் என்று கூறுகிறீர்களே அது என்ன பிரச்சினை என்றுக் கட்டுரையில் தெளிவாக போட்டிருந்தும் கண்ணிருந்தும் குருடராய் பிதற்றுகிரீர்களே இது நியாயமா. அம்மா.தி.மு.கவை எதிர்பதென்பது என்னவோ வினவிற்கும் அவர்களுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு போல பேசுகிறீர்களே உண்மையிலேயே கட்டுரையைப் படிச்சிட்டு தான் புன்னூட்டம் போடுறீங்களா?

      இராமன் சொல்லியது போல் அல்ல தோழர்களின் வழி. ஒட்டு மொத்த சமுதாய அமைப்பையே மாற்றுவதே தோழர்களின் குறிக்கோள். இரயில் வந்தவுடன் ஏறிக் கொள்ளலாம் என்பதல்ல, மாறாக குறிக்கோளை அடையும் வரை அவர்களால் முடிந்த மட்டும் சீர்திருத்ததிற்க்காகவும் போராடுகிறார்கள்.

      உண்மையில் நாட்டில் நடக்கும் அத்துனை அநியாயத்தையும் எதிர்க்க வேண்டும் என்பது இயல்பு தான். அப்படி தாங்கள் நினைத்தால் நியாயமானது தான் மற்றும் வரவேற்கதக்கது தான். ஒட்டு மொத்த அமைப்பும் நிலைகுலைந்து உள்ள போது,வினவுத் தோழர்கள் அவர்களால் முடிந்த மட்டும் மக்களுக்காக நேர்மையாக போராடுகிறார்கள் சிறை செல்கிறார்கள் துன்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். யாருக்காக இதை செய்கிறார்கள் என்பதை உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள்.

      நன்றி.

  10. உலகத்தில் நடப்பதெல்லாம் ஞானதிரிஷ்டியில் பாக்க முடியாதுன்னு சமாளிக்கிரீயலே – அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தப்போ இதே வினவு தான இந்தியாவுல ஊழல தவிர நிறைய பிரச்சனை இருக்கு அதுக்கு பதில் சொல்லலையேன்னு loosu தனமா சம்பந்தமில்லாம ஒளறி கொட்டிச்சு.

  11. ஆய்வாளர் பாஸ்கர் கொடுத்த அனுமதியை மறுத்ததோடு அல்லாமல் மீண்டும் அனுமதி கேட்டுச் சென்ற தோழர்களை கொஞ்சம்கூட மதிக்காமல் தான் அமைச்சர் கோகுல இந்திராவின் கொழுந்தன் என்று சொல்லி மிகக் கேவலமாகப் பேசியும் மிரட்டியும் சட்ட விரோதமாக காவலில் வைத்தும் அராஜகம் செய்துள்ளான்.அவன் யார் என்று அடையாளம் காட்டுவதற்கு இது போதாதா?ஒரு பிரச்சினையில் உரிய நேரத்தில் தான் தலையிட முடியும்.சும்மா சாலையில் போகும்போது இழுத்துப் போட்டு உதைக்க முடியுமா?மக்களின் எதிரிகளை ஒரு அமைப்பு எப்படி எதிகொள்ள வேண்டும் என்பது பற்றிய அனுபவமே இல்லாத ஒருவரின் கேள்விதான் நண்பர் வேலுமணி சரவணகுமாரின் கேள்வி. கட்டுரையில் இரண்டு இடங்களில் பிழை இருக்கிறது.1)செப்டம்பர் 30 என்பதற்குப் பதில் அக்டோபர் என்று இருக்கிறது.2)மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டி ம க இ க சுவரொட்டி என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

  12. இங்கே மக்களோடு மக்களாக வாழ்ந்துகொண்டு மக்களின் ரத்தத்தை நொடிக்குநொடி உறிஞ்சிக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துகொண்டிருப்பவர்களை பற்றி அவர்களை எதிர்த்து ஒரு பேச்சையும் காணோம்.
    சினிமாகாரர்களுக்கு பாடல் என்றால் வெளிநாடு,ஆத்திகர்களுக்கு கடவுள் என்றால் கைலாசம் என இருக்கும் இடத்தைதவிற மற்றவைதான் நினைவில்வருவதுபோல இங்கே சமூகப்பணி செய்ய கிளம்பி இருக்கும் பலருக்கும் தனது காலடியில் நடக்கும் எந்த அக்கிரமங்களும் கண்ணுக்கு தெரிவதில்லை.ஆவூன்னா அமெரிக்கா,ஆதிக்க சாதின்னு கிளம்பிரவேண்டியது.
    உதாரணத்திற்காக கேட்கிறேன்,பகல் கொள்ளையாய் பணமா பிடுங்கும் தனியார் பள்ளிகள் ,கல்லூரிபற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர்கள் அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஆட்டுமந்தைகள் போல அடைத்து சவாரி ஏற்றிசெல்லும் ஆட்டோ காரர்களை பற்றி அவர்களது அட்டுளுயங்கள் பற்றி ஏதாவது சொல்வார்களா?பெற்றோர்களிடம் அளவாக பிள்ளைகளை ஆட்டோவில் அனுப்பலாமே என கேட்டால் ஆட்டோ ஓட்டுனர் கேட்கும் வாடகையை இப்படி ஆட்டுமந்தைகல்போல பலரையும் சவாரி செய்யவைத்து பலருடனும் பங்கிட்டுகொண்டால்தான் தங்களுக்கு கட்டுபடியாகும் என பதிலளிக்கிறார்கள்.
    நீங்கள் சொல்லுவதுபோல சாமானிய மக்களோடு மக்களாக வாழும் அட்டோகாரகளுக்கு தனது சக மக்களின் துன்பம் புரியாதபோது வேறுயாரை சொல்லி என்ன பிரயோஜனம்?
    இங்கே வருமானத்திற்கு அதிகமாக வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு வாழ்பவர்கள் நீங்கள் சொல்லுவதுபோல அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள் மட்டுமல்ல.சாமானிய நம் சக மனிதர்களும் அடக்கம்.அவர்களின் கட்டுபாடற்ற திட்டமிடாத வாழ்க்கைக்கு பல குழந்தைகளின் வாழ்க்கை அடகுவைக்கப்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியவேயில்லை.
    கார்பரேட் முதலாளிகளின் அடக்குமுறை ஊழியர்களை வதைக்கும் கொடுமை என முழங்கும் பலருக்கும் தங்கள் பகுதிகளில் செயல்பட்டுவரும் தேநீர் கடைகளில் நடப்பதுகுட தெரியாமலிருப்பது ஆச்சரியமே.எந்த தேநீர் கடை முதலாளி தனது ஊழியருக்கு சரியான சம்பளம் ஓய்வு,இன்னபிற சலுகைகளை அளிக்கிறார் என தங்களால் சொல்லமுடியுமா?
    நான் ஏற்க்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல அரசு மருத்துவ மனைகளில் பெரும்பாலும் மக்கள் வதைக்கபடுவது கீழ்மட்ட ஊழியர்கலால்தான் என்பதை மறுக்க முடியுமா?
    நமது பகுதில் உள்ள மளிகைகடைகார்கள் செய்யாத வரி ஏய்ப்பா?
    கார்பரேட் சாமியார்களை விடுங்கள்,மரத்தடி சாமியார்களின் ஆட்டுளியங்கள்?
    எனக்கு இவர்களை குற்றம் சொல்வதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.ஆனால் நம்மோடு வாழும் சக தர மனிதர்களின் அநியாயத்தை பற்றி வாயே திறக்காமல் அதிகார ஆணவம்,ஆடம்பரம் ,வரி ஏய்ப்பு முதலிய நமக்கு சம்பந்தமிலாத தொலைவில்தான் நடைபெற்றுவருகின்றன எனும் ஒரு மாய தோற்றத்தைதான் இன்றைய சமுக நலப்பணியாளர்கள் ஏற்ப்படுத்தி இருக்கிறார்கள்.
    மக்களுக்கு தாங்கள் செய்யும் தவறுகள் பற்றி எவ்வித உணர்வு இருப்பதில்லை.
    மேலும் நான் குறிப்பிட்ட இவர்களைத்தான் அன்றாடம் சந்தித்துகொண்டிருக்கிறோம். எனவே தான் அவர்களது செயல்பாடுகள் நம்மை அனுதினமும் பாதிக்கின்றன என்பதால் சொல்கிறேன்.
    ஒரு ஆட்டோகாரர் ,ஒரு மளிகைகடைகாரர்,ஒரு அரசாங்க கடைநிலை ஊழியர் நேர்மையானவராக இருந்தால் அவருக்கு அவரின் மேலதிகாரியின் மீது பயம் இருக்காது .அவரின் சுளிவு நெளிவுகளுக்கு சலாம் வைக்கவேண்டி இருக்காது.அநீதிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள பயம் இருக்காது.
    தன்னை அனுதினமும் வதைக்கும் மூட்டைபூச்சி,அட்டைபூச்சி,கொசு முதலியவற்றை சிறிதும் கண்டுகொள்ளாமல் எப்போளுதுபார்தாலும் புலிவருது சிங்கம்வருது அங்கே வந்துச்சு இங்கே வந்துச்சுன்னு எப்ப பார் பயம் காண்பிச்சே மக்களுக்கு கொசு அட்டை,மூட்ட புச்சி எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதுபோல அவற்றிக்கு பலியாக பழக்கப்டுத்திகொள்ள வைத்துவிட்டார்கள். உங்களது சமூகப்பணிகளில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
    ஆனால் சமுகத்தை நீங்கள் பார்க்கும் கோணத்தில்தான் எனக்கு உடன்பாடில்லை.
    இந்த கட்டுரைக்கும் எனது இந்த பின்னுட்டதிர்க்கும் நேரடியான சம்பந்தம் இல்லை என்றாலும் எனது ஒட்டுமொத்த வேண்டுகோள் இதுவென்பதால் இதை பிரசுரிக்க வேண்டுகிறேன்.

  13. தனக்கு தெரியாததெல்லாம் தரணிக்கே தெரியவில்லை என்று சொல்ல வந்துட்டாரு ஒருத்தர் . வினவின் எத்தனைப் பதிவுகளைப் படித்தார் என்று தெரியவில்லை . முகப்பில் உள்ள கட்டுரைகள் மட்டுமல்லாது சேமிப்பில் உள்ள சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் போராட்ட பதிவுகளை படித்துப் பார்க்கவும். முதலில் மனிதாபிமானமுடம் செய்திகளைப் படிக்கவும் மறுபரிசீலனை செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள் ஒரு பிரச்சினை நமக்கோ நமைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்படும்போதுதான் நாம் அது குறித்து அறிந்துகொள்ளவும் மற்றும் கருத்து சொல்லவும் முடியும் . எந்தெந்த காவல் நிலையத்தில் எந்தெந்த காவலர் அல்லது அதிகாரி தப்பு செய்கிறார் என்று செய்தி போடுவதற்கு வினவு ஒன்றும் காவல் துறை கண்காணிப்பு பிரிவு அல்ல. ஆனால் வேலுமணி அவர்களின் விமர்சனத்தை பார்த்தால் அதில் பொது நோக்கத்தை விட வினவின் மீதான அல்லது நியாயத்துக்கெதிராக போராடும் அனைத்து போராளிகள் மீதான காழ்ப்புனர்ச்சியைத்தான் வெளிப்படுத்துகிறது .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க