Friday, January 17, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ - இந்திய அரசின் மதச்சார்பின்மை

‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 3

(1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் வெளியான தொடர் கட்டுரையின் நூல் வடிவத்திலிருந்து)

பொது சிவில் சட்டத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? இக்கேள்விக்கு மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் பதில் சொல்லியிருக்கிறார்; “நீதிமன்றம் யார் மீதும் தேச பக்தியைத் திணிக்க முடியாது.” நீதிபதி குல்தீப்சிங்கிற்கு அமைச்சர் வழங்கிய பதிலடி இது. ஆனால் ஒரு காங்கிரசு அமைச்சர் என்ற முறையில் காசுமீர் மக்கள் மீது தேசபக்தியைத் திணிப்பது குறித்து அவர் வெட்கப்படவில்லை.

இரட்டை நாக்கு என்பது காங்கிரசுக்கு மட்டும் உரியதல்ல; பாரதீய ஜனதாவும் காங்கிரசின் உடன் பிறப்புதான். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதவாத அரசியல் கட்சிகளைத் தடை செய்வதாகக் கூறிக்கொண்டு அரசியல் சட்டத்தின் 35 – ஏ பிரிவிற்கு திருத்தம் ஒன்றை (80-வது அரசியல் சட்டத் திருத்தம்) நரசிம்மராவ் அரசு கொண்டு வந்தது. அதனைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியில் அங்கம் வகித்த பாரதீய ஜனதா தனது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது. “வெறும் சட்டத்தினால் ஒரு துடிப்பான தேசத்தை உருவாக்கிவிட முடியாது.”

சிவில் ஒருமைப்பாடும் கிரிமினல் ஒருமைப்பாடும்

அத்வானி
பொது கிரிமினல் சட்டங்களாலும், ‘தடா’ போன்ற ‘உயிர் துடிப்புள்ள ‘கிரிமினல் சட்டங்களாலும் கூட உருவாக்க முடியாத ஒருமைப்பாட்டையா ‘பொது சிவில் சட்டம் ‘உருவாக்கிவிடும்?” என்று நாம் திருப்பிக் கேட்டால் அந்தக் கணமே அத்வானி தனது இரண்டாவது நாக்கினால் பேசத் தொடங்குவார்.

உண்மைதான். பொது கிரிமினல் சட்டங்களாலும், ‘தடா’ போன்ற ‘உயிர் துடிப்புள்ள ‘கிரிமினல் சட்டங்களாலும் கூட உருவாக்க முடியாத ஒருமைப்பாட்டையா பொது சிவில் சட்டம் உருவாக்கிவிடும்?’ என்று நாம் திருப்பிக் கேட்டால் அந்தக் கணமே அத்வானி தனது இரண்டாவது நாக்கினால் பேசத் தொடங்குவார்.

“அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கின்ற சட்டம் இருக்கிறதை, அந்தச் சட்டம் மட்டும் தான் துடிப்பான தேசத்தை உருவாக்காது என்று நாங்கள் கூறினோம்” என்பார் அத்வானி. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிப்பதென்பது “வேரற்ற, ஒழுக்கமற்ற, ஒழுக்கக் கேடான இந்தியாவைத்தான் உருவாக்கும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்ட பாரதீய ஜனதா, “அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கும் முயற்சிகளை சட்டரீதியாக எதிர்த்துப் போராடுவோம்” என்றும் தனது அறிக்கையில் எச்சரித்தது.

அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்தால் தேசமே ஒழுக்கம் கெட்டுச் சீரழிந்து விடும் என்று கவலைப்படும் ஒரு கட்சி, குடும்பத்திலிருந்து மதத்தைப் பிரிக்கும் பொது சிவில் சட்டத்தைத் தீவிரமாகக் கோருவது ஏன் ? குடும்பத்தின் ஒழுக்கம் என்ன ஆவது ?

இந்தக் கேள்விக்கு பாரதீய ஜனதா ஒருக்காலும் பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒரே சிவில் சட்டத்திற்கான பாரதீய ஜனதாவின் கோரிக்கை “பிற மதத்தினர் மீது இந்துச் சட்டத்தைத் திணிப்பதற்கான சதியே” என்று குற்றம் சாட்டும்போது மட்டும் அதை மறுத்து, தாங்கள் ஒரு சீரான சிவில் சட்டத்தை மட்டுமே கோருவதாக மழுப்புகிறது.

சரியான கேள்வி !

“மேலை நாடுகளில் பொது சிவில் சட்டத்தின் கீழ்தான் முசுலீம்களும் வாழ்கிறார்கள். அங்கே இல்லாத மத அடையாளம் குறித்த பிரச்சனை இந்தியாவில் மட்டும் எப்படி வந்தது ?” என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா.

காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான யாரும் பாரதீய ஜனதாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. ஆனால், இந்தக் கேள்வியை எழுப்பியதன் மூலம் அடிப்படையான பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்ள பாரதீய ஜனதா நமக்கு பெரிதும் உதவியுள்ளது.

பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் ஆகிய அனைவருமே அது ‘மதச்சார்பற்றது’ என்று பொருளில்தான் பெரும்பாலும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இச்சட்டம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் 44 – வது பிரிவு கூறவில்லை. ஒரு சீரான உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) நாடு முழுவதற்கும் கொண்டு வருவதை மட்டுமே அதில் சிபாரிசு செய்கிறது.

பொது சிவில் சட்டம் (Common Civil Code) என்பது மதச்சார்பற்ற சிவில் சட்டம் (Secular Civil Code) என்ற பொருளில்தான் மேலை நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் ‘பொது’ என்ற சொல்லையோ, ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லையோ பயன்படுத்தாமல், ‘ஒரு சீரான’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை தற்போதுள்ளது போலவே வைத்துக் கொண்டு அவற்றின் உள்ளடக்கத்தை மட்டும் ‘ஒரு சீராக’ இருக்கும்படி மாற்றியமைப்பது என்றும் இதற்குப் பொருள் கூற முடியும். அவ்வாறு கூறியும் வருகின்றனர்.

அரசியல் சட்ட மோசடி

அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நோக்கம் இதுவல்ல என்றால் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லைத் தெளிவாக அது குறிப்பிட்டிருக்கலாம். அவ்வாறு குறிப்பிடத் தவறியது கவனக்குறைவால் நடந்த பிழை அல்ல; கவனமாகச் செய்யப்பட்ட மோசடி.

1950 -ல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசு என்று கூறவில்லை. 1976-ல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத் திருத்தத்தையொட்டி இந்திய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் “இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதிபூணுவதாக”க் குறிப்பிடப்பட்டது.

மதச்சார்பின்மை – லட்சியம் மதவெறி – நிச்சயம் !

இந்திய அரசியலமைப்பு சபை
அரசியல் நிர்ணய சபை : மதச்சார்பின்மை – லட்சியம் மதவெறி – நிச்சயம் !

இது வெறும் “லட்சியம்” தானேயொழிய இதற்கு எந்தவிதச் சட்ட உத்திரவாதமும் கிடையாது. சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களின் பொருளை வரையறுப்பதற்கான முயற்சி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இன்று வரை இச்சொற்களுக்கான பொருள் சட்டமொழியில் விளக்கப்படவில்லை.

எனவே அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல நமது நாட்டில் மதச்சார்பின்மை நிலவுவது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்பவர்கள், சோசலிசம் நிலவுவதும் உண்மை என்பதை ஏற்க வேண்டியிருக்கும்.

இருப்பினும் ‘சர்வ தர்ம சம பாவ’ (அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல்) என்று காந்தி கூறி வந்த விளக்கத்தைத்தான் இந்திய மதசார்பின்மையின் விளக்கமாக அனைவரும் கூறி வருகின்றனர். இதன் அடிப்படையில்தான், அவ்வப்போது எழும் பிரச்சினைகளில் மதசார்பின்மைக்கான விளக்கத்தை உச்சநீதி மன்றம் கூறி வருகிறது. இதுதான் மதசார்பின்மைக்கான விளக்கம் என்றால், இதிலிருந்து மேலை நாடுகளில் உள்ளதைப் போன்ற மதசார்பற்ற சிவில் சட்டத்தை எங்ஙனம் உருவாக்க முடியும் ?

தாயில்லாமல் பிள்ளையா ?

மதச்சார்பற்ற அரசு ஒன்று நிலவாமல் மதச்சார்பற்ற சிவில் சட்டம் மட்டும் எப்படிக் கொண்டு வரமுடியும் என்பதுதான் உயிராதாரமான கேள்வி.

மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், ஒழுக்கத்தை வரையறுக்கவும் மதம் பெற்றிருக்கின்ற அனைத்து சட்டபூர்வமான அதிகாரங்களையும் பறிப்பது; மதத்துடனான அனைத்து உறவுகளிலிருந்தும் அரசு தன்னைத் தூண்டித்துக் கொள்வது; மதம் என்பது ஒரு தனிநபரின் நம்பிக்கை சார்ந்த சொந்த விவகாரம் என்று வரையறுப்பது – ஆகியவை மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படைகள்.

இது மேற்கத்திய மதச்சார்பின்மைக் கோட்பாடு என்றும், நமது விசேடமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான் “அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்தல்” என்ற இந்திய மதசார்பின்மைக் கோட்பாடு என்றும் பாரதீய ஜனதா முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரை அனைவரும் வாதிடுகின்றனர்.

அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கும் மேற்கத்திய மதச்சார்பின்மையைக் காலனியச்சிந்தனை என்று சாடுகிறது பாரதீய ஜனதா.

‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’

மதச்சார்பின்மை
Secular என்றால் மதச்சார்பற்றது என்று பொருள் அல்ல – எல்லா மதங்களையும் ஒன்று போல் கருத வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்துப் பெரியார் கூறிய கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது;

“இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து, எந்த எந்த மொழியில் Secular, State என்று குறிப்பிட்டிருக்கிறார்களோ, அந்த நாட்டில் அந்த மொழியில் Secular என்பதற்கு என்ன பொருள் இருக்கிறதோ, அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தி இருக்கிறார்களோ, அந்தப் பொருளில் தானே நாமும் பயன்படுத்த வேண்டும் ? அதை விட்டு விட்டு, அந்தச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, Secular என்றால் மதச்சார்பற்றது என்று பொருள் அல்ல – எல்லா மதங்களையும் ஒன்று போல் கருத வேண்டும் என்பதுதான் பொருள் – என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்… .பத்தினி என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவன் போலக் கருதி நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பத்தினித்தன்மை என்று அர்த்தம் கொள்வது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ அதைவிட அயோக்கியத்தனமானதாகும், மதச் சார்பற்றது என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போல் கருதுவது என்பது” என்று கூறுகிறார்.

சிறுபான்மைத்தலைவர்கள் ஆதரிப்பது ஏன்?

அரசியல் சட்டத்தின் பிரிவு – 26 மத நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சொத்து வைத்துக் கொள்ளவும், புதிதாகச் சேர்க்கவும் உரிமை தருகிறது; எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் அரசு தனது பணத்தைச் செலவிடலாகாது என்று கூறுகிறது சட்டப்பிரிவு – 27; ஆனால் கேரளத்திலும் தமிழகத்திலும் உள்ள திருவிதாங்கூர் தேவாஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களுக்கு கேரள, தமிழக அரசுகள் ஆண்டுதோறும் சில லட்சம் ரூபாய்களை அளிக்க வேண்டுமென சட்டப்பிரிவு 290 – ஏ கட்டளையிடுகிறது. சட்டப் பிரிவு -28 (2) அரசு உதவியும், அங்கீகாரமும் பெறுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் மதபோதனை செய்வதை அனுமதிக்கிறது; சட்டப்பிரிவு – 48 (வழிகாட்டும் கோட்பாடு) பசுவதையைத் தடை செய்வதைத் தனது லட்சியமாகக் கூறுகிறது; சட்டப்பிரிவு – 30 சிறுபான்மை மதத்தினர் கல்வி நிறுவனம் நடத்திக் கொள்வதற்கான உரிமையை அளிக்கிறது. இதுதான் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தின் அழகு.

ஆனால் சிறுபான்மை மதத்தினருக்கு அளிக்கப்படும் ‘சலுகை’ களை மட்டும் சுட்டிக் காட்டி அதன் காரணமாக இது போலி மதச்சார்பின்மை என்று பாரதீய ஜனதா வாதிடுகிறது. அவற்றை மட்டும் நீக்கிவிட்டால் உண்மையான மதச்சார்பின்மை நிலை நாட்டப்பட்டுவிடும் என்று கூறுகிறது.

பிறநாடுகளில்…….

ரசிய புரட்சி
முன்னாள் சோசலிச நாடுகளில் சமூக வாழ்க்கையின் அங்கம் என்ற தகுதியிலிருந்து மதம் சட்டபூர்வமாக நீக்கப்பட்டது.

பிற நாடுகள் சிலவற்றில் இக்கொள்கை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது.

  • சீனா, ரசியா மற்றும் பிற முன்னாள் சோசலிச நாடுகளில் சமூக வாழ்க்கையின் அங்கம் என்ற தகுதியிலிருந்து மதம் சட்டபூர்வமாக நீக்கப்பட்டது. அமெரிக்காவிலும் பிரான்சிலும் அரசு விவகாரங்களிலிருந்து மதம் தெளிவாக விலக்கி வைக்கப்படுள்ளது. கல்வித் துறையில் கிறித்தவ மதம் தலைகாட்டக் கூடாது என்ற கொள்கையைப் பிரான்சு கறாராகக் கடைப்பிடிக்கிறது.
  • மெக்சிகோ இன்னும் ஒருபடி மேலே சென்று மத குருமார்களுக்கு தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் ஓட்டுரிமையைச் கூட ரத்து செய்திருக்கிறது.
  • துருக்கி, எகிப்து, துனீசியா போன்ற முசுலீம்கள் அதிகம் வாழும் நாடுகள் இசுலாமை அரசு மதமாக் கொள்ளவில்லை என்பதுடன், அரசியலில் மதம் கலப்பதை மொராக்கோ தடை செய்துள்ளது.
  • இங்கிலாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற ‘ஜனநாயக’ நாடுகள் குடிமக்களிடையே மதப்பாகுபாடு காட்டவில்லையென்றாலும் அரசு மதம் என கிறித்துவத்தை அறிவித்துள்ளன.
  • வங்காள தேசத்தில் அரச மதமாக இசுலாம் உள்ள போதும், பிற மதத்தினருக்கு மத உரிமை தரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இசுலாமியர் தவிர்த்த பிற மதத்தினர்க்கு மத உரிமை கிடையாது.
  • மலேசியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், குவைத், பக்ரீன் போன்ற நாடுகளில் இசுலாமே அரசு மதம்.

மேற்கூறிய விவரங்களைப் பரிசீலிக்கும்போது கறாரான, இலக்கணப் பொருளிலான மதச்சார்பின்மைக் கோட்பாடு, முன்னாள் சோசலிச நாடிகளிலும், அமெரிக்கா, பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

மெக்சிகோ போன்ற பின் தங்கிய நாடுகளில் மதகுருமார்களின் வாக்குரிமையை ரத்து செய்யுமளவுக்குத் தீவிரமாகவும், இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட கிறித்தவம் அரசு மதமாக அங்கீகரிக்கப்பட்டுருப்பதும் ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுச் சூழலுக்கேற்ப நடைபெற்றுள்ளன.

பெரும்பான்மையான இசுலாமிய நாடுகளில் மதச்சார்பின்மைக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, இந்தியாவில் தற்போது கடைப்பிடிக்கப்படும் மதச்சார்பின்மையே முசுலீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் சலுகை என்று அவர்களை மிரட்டுகிறது பாரதீய ஜனதா. இந்தியர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை அந்நியர்கள் என்ற முறையில் பரிசீலித்துத் தீர்ப்பு கூறுகிறது.

அவ்வாறிருக்க, சிறுபான்மைத் தலைவர்கள் ஏன் இந்தப் போலி மதச்சார்பின்மையை ஆதரிக்க வேண்டும் ? கோடிக்கணக்கில் சொத்து வைத்துக் கொள்வதற்கும், கல்வி நிறுவனங்கள் நடத்திக் கொள்ளையடிப்பதற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 26 மற்றும் 30 ஆகியவை வகை செய்வதாலும், தத்தம் மதத்தைச் சேர்ந்த மக்களை அடிமைத்தனத்திலும் மடமையிலும் தொடர்ந்து இருத்தி வைத்துக் கொள்ள தனிநபர் சட்டங்கள் உதவுவதாலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும், பழமைவாதிகளும் இந்தப் போலி மதச்சார்பின்மையை முழுமனதாக ஆதரிக்கிறார்கள்.

மதச்சார்பின்மைக் கோட்பாடு அதன் சரியான பொருளில் அமல்படுத்தப்படவேண்டும் என்று புரட்சியாளர்களும், பகுத்தறிவாளர்களும் கோரினால், இந்தியாவின் விசேடமான சூழ்நிலைகளைக் கணக்கில் கொள்ளாத ‘வறட்டுத் தனம்’ என்று கூறி மதச் சீர்திருத்தவாதிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் நம்மை நிராகரிக்கிறார்கள். நிலவுகின்ற மோசடி மதச்சார்பின்மையை நியாயப்படுத்துவதில் இந்து மதவெறியர்களைக் காட்டிலும் இவர்களே முன் நிற்பதால் இப்போக்கினை அம்பல்ப்படுத்துவது அவசியமாகிறது.

சிவில் சட்டத்தின் வரலாறு

பொது சிவில் சட்ட வரலாறு
மன்னராட்சியை மட்டுமல்ல, மதகுருமார்களின் அதிகாரத்தையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பிரான்சில் தான் உலகிலேயே முதன்முறையாக மதத்திற்கு அப்பாற்பட்ட சிவில் சட்டத்தை நெப்போலியன் அறிமுகப்படுத்தினான்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஜரோப்பா முழுவதும் மன்னராட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை நிறுவுவதற்காக நடைபெற்ற புரட்சிகளில் தலையாயது பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியை மட்டுமல்ல, மதகுருமார்களின் அதிகாரத்தையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பிரான்சில் தான் உலகிலேயே முதன்முறையாக மதத்திற்கு அப்பாற்பட்ட சிவில் சட்டத்தை நெப்போலியன் அறிமுகப்படுத்தினான். அதுவரை எல்லா நாட்டு நீதிமன்றங்களிலும் கையில் பைபிளுடன் பாதிரியார்கள் அமர்ந்து ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருந்தனர்.

பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்ட மக்களின் தீவிரத்தைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய முதலாளி வர்க்கம், ‘நாளை நமக்கும் இதே கதிதான்‘ என்பதைப் புரிந்து கொண்டதால் பிரிட்டீஷ் அரியணையுடன் சமரசம் செய்து கொண்டது; மக்களைத் தார்மீகரீதியில் ஒடுக்கி வைக்கும் ஆற்றல் கொண்ட மதம், பிரான்சில் செயலிழந்து போனதைக் கண்டவுடன் ஆங்கிலேயத் திருச்சபையுடனும் சமரசம் செய்து கொண்டது. இங்கிலாந்தின் ‘விசேசமான’ இந்த சூழ்நிலையை ஏங்கெல்ஸ் விவரித்துள்ளார்.

இந்த விசேசமான சூழ்நிலையின் விளைவாகத்தான், உலகிற்கே ‘நாகரிகத்தை’ அறிமுகப்படுத்திய பிரிட்டீஷ் அரசாங்கம், இன்னமும் தங்களது நாட்டில் ‘மன்னர் குடும்பம்’ என்றொரு அநாகரிகக் கும்பலுக்கு மக்களின் வரிப்பணத்தில் சோறு போட்டு வருகிறது; கிறித்துவை அவரது சிலுவையுடன் சேர்த்துத் தலையில் சுமந்து கொண்டிருக்கிறது.

பிரான்சில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதைக் கண்டவுடன், வரலாற்றின் விதியைப் புரிந்து கொண்டு, ஜனநாயக உரிமைகளைத் தத்தம் நாட்டு மக்களுக்கு முதலாளித்துவம் பெட்டியைத் திறந்து விநியோகித்து விடவில்லை. ஐரோப்பியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் கடுமையாகப் போராடித்தான் ஒவ்வொரு ஜனநாயக உரிமையையும் பெற்றார்கள்.

எனவே, ஒவ்வொரு நாட்டுன் விசேசமான வரலாற்றுச் சூழலைப் புரிந்து கொள்வது, அதை மாற்றியமைக்கத்தானே ஒழிய ஏற்று நடப்பதற்கு அல்ல.

ஈசுவர அல்லா தேரே நாம் – ஏமாந்தவனே இந்தியனாம் !

பாரத மாதா
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான கட்டபொம்மனோ, மருது சகோதரர்களோ கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கும், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் திலகர் வகையறாவால் உருவாக்கப்பட்ட பாரதமாதா வழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிறந்த இந்திய தேசியம், பனியா – தரகு முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ற, பார்ப்பன – இந்து தேசியமாகவே தோன்றியது. அதற்கு முந்தைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான கட்டபொம்மனோ, மருது சகோதரர்களோ கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கும், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் திலகர் வகையறாவால் உருவாக்கப்பட்ட பாரதமாதா வழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை. ‘காந்தி – இந்து மகாசபை பிராண்டு இந்து தேசியம்.’ இதை பிரிட்டீஷார் பயன்படுத்திக் கொண்டனர் என்பது வேறு விசயம்.

காங்கிரசின் இந்து தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு அஞ்சிய முசுலீம் மக்களுக்கு தம்மீது நம்பிக்கையை உருவாக்குவதற்காக காந்தி உருவாக்கிய ‘சுதேசி’ கோட்பாடுதான் ‘சர்வதர்ம சமபாவ’ அல்லது ‘ஈசுவர அல்லா தேரே நாம்’. அரசியல் சட்ட மொழியில் கூறினால் இந்திய மதச்சார்பின்மைக் கோட்பாடு !

இந்தக் கோட்பாடுதான் மதத் தனிநபர் சட்டங்களுக்கு அடிப்படையானது. இச்சட்டங்களோ நிலவுடைமை ஆதிக்கம், தந்தை வழி ஆணாதிக்கம், சாதி, மத ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்து ரீதியாகவும், சொத்துடைமை உறவுகளிலும் நிலைநாட்டுகின்றன. ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற பால், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், மொழி, இன உணர்வுகளையும் பின்னுக்குத் தள்ளி நாடு முழுவதும் அவர்களை மதத்தின் அடிப்படையில் மறுசேர்க்கை செய்கின்றன.

அரசியல் சட்டத்தின் முன்னுரையில் கண்டுள்ளபடியே கூறுவதென்றாலும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல; மதச் சார்பற்றதாக மாறும் லட்சியத்தைக் கொண்டுருக்கும் நாடு, அவ்வளவுதான்.

கறாராகச் சொன்னால், இந்த மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு ‘அடிப்படை உரிமை’ என்ற தகுதியோ, ‘வழிகாட்டும் கோட்பாடு’ என்ற கவுரவமோ கூடக் கிடையாது. அரசியல் நிர்ணயச் சட்ட நூலின் முதல் பக்கத்தில் வழுவழுப்பான தாளில் வண்ணத்தில் அச்சிடப்பட்டிருப்பதுதான் இந்தச் சொல்லுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகபட்ச மரியாதை!

முந்தைய பகுதிகள்

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது