Friday, September 25, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விழி பிதுங்கிய மின்வாரியம் - HRPC சமர் - முழு அறிக்கை

விழி பிதுங்கிய மின்வாரியம் – HRPC சமர் – முழு அறிக்கை

-

மின்கட்டண உயர்வு பற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பாக நெல்லையில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் HRPC-யின் தலையீடு குறித்து நேற்று (அக்டோபர் 30, 2014)  சுருக்கமான செய்தி  வெளியிட்டிருந்தோம். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உண்மையான நோக்கங்கள் அவர்களிடமிருந்தே வெளிப்பட்ட இந்தக் கூட்டம் பற்றிய விரிவான அறிக்கையை தருகிறோம்.

மிழகத்தில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தும்முன்பு நடத்தப்படும் கருத்துக்கேட்பு சடங்கை இம்முறை மொத்தம் மூன்றே இடங்களில் (சென்னை, நெல்லை, ஈரோடு) நடத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுத்திருந்தது.

திட்டமிட்டபடி நெல்லையில் கடந்த 27.10.2014 அன்று கூட்டம் நடந்தது. ஆனால் அதிகாரிகள் விரும்பியபடி வெற்றுச்சடங்காக நடத்தவோ, சுமுகமாக கூட்டத்தை முடிக்கவோ முடியவில்லை.

சுமார் 8 மாவட்டத்திற்கும் சேர்த்து நடத்தப்பட்ட இக்கூட்டம் நடக்கும் இடம், நேரம் பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் ஒரு நாள் முன்னதாகத்தான் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரு பெட்டிச் செய்தியாகத்தான். அதற்கேற்ப மொத்தம் 100 பேர் வந்தாலே அதிகம் என்று கருதி ஒரு சிறிய அரங்கையே ஏற்பாடு செய்திருந்தனர். கணக்குகாட்ட வசதியாக மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களையும், காண்ட்ராக்டர்கள் உள்ளிட்ட அடியாட்களையும் முன்கூட்டியே அமரவைத்திருந்தனர். அரங்கிற்கு உள்ளும் வெள்ளேயும் உளவுத்துறையினரும் விரவி இருந்தனர்.

மின்கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டம்

கருத்து சொல்பவர்களும், பார்வையாளர்களும் தனித்தனி இடத்தில் பதிவுசெய்த பின்னரே அரங்கிற்குள் அனுமதித்தனர். இந்த அச்சுறுத்தலையும் தாண்டி 57 பேர் கருத்து சொல்பவர்களாக பதிவு செய்தனர். மக்களின் கருத்தையும் கேட்டு பேசும் விதமாக 10 பேர் பேசியபின் ஒருவர் வீதம் என நான்கு பெயரை நம் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சார்பாக (அமைப்பு பெயரை குறிப்பிடாமல்) நாம் பதிவு செய்தோம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நம் கருத்தை முழுமையாக சொல்ல வாய்ப்பு தராமலும், கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமலும் போகக்க்கூடும் என்று எதிர்பார்த்தோம். எனவே நமது கருத்தை கேள்வி பதில் பாணியில் ஒரு பிரசுரமாக தயார்செய்து 150 பிரதிகளை கொண்டு சென்றோம். கூட்டம் தொடங்கியவுடன் கருத்து சொல்ல வந்த பொதுமக்களுக்கும், ஏற்கனவே அமர்ந்திருந்த மின்வாரியத்தினருக்கும் மற்றும் ஊடகத்தினருக்கும் பிரசுரத்தை பரவலாக வினியோகித்தோம்.

நாங்கள் விநியோகித்த பிரசுரம்;

மின்கட்டண உயர்வு யாருக்காக?  எதற்காக கருத்து கேட்பு நடக்கிறது?

தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி. அந்த தீயசக்தியின் பெயர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். தனியார் மின் உற்பத்தி முதலாளிகளிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு செலவழிக்க வேண்டிய சுமார் ரூ 18,000 கோடி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு வாங்கியதால் பட்ட கடனுக்கு வட்டி ரூ 2,000 கோடி கட்டுவதை உறுதி செய்வதற்குத்தான் இந்த ரூ 6,800 கோடி ரூபாய் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஆணையம். இதையெல்லாம் நம் நன்மைக்காக நம் ஒப்புதலுடன் செய்வதாக காட்டாவிட்டால் இது ஜனநாயகமாகாதல்லவா? அதற்க்குத்தான் கருத்துக் கேட்பு நாடகம் பெயரளவுக்கு மூன்றே ஊர்களில் நடத்தப்படுகிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உலக வங்கியின் ஆணைக்கேற்ப மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பாகும். கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியற்றை மாநில அரசிடமிருந்து பிடுங்கி இந்த அமைப்புக்குக் கொடுப்பதற்கான சட்டம் 1998 பா.ஜ.க அரசினாலேயே இயற்றப்பட்டு விட்டது.

கட்டண உயர்வின் சுமையை அரசே ஏற்கும் என்று ‘அம்மா’ அறிவித்துள்ளார்களே?

ஏற்கனவே 2014-15 நிதி ஆண்டில் மின்கட்டண மானியம் வழங்க ரூ 10,575 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ்நாடு அரசு. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த மானியச் செலவும் அதிகரிக்கும். அந்தச் சுமையும் மறைமுக வரிகள் மூலம் மக்கள் தலையில் தான் விழும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் எப்பொழுதுமே நட்டத்திலா இயங்கிவந்துள்ளது?

இல்லை. காட் ஒப்பந்தம் கையெழுத்தாகும்வரை லாபத்தில்தான் இயங்கியது. 1994-95-ல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ 347 கோடி. 2007-08-ம் ஆண்டில் இது ரூ 3,512 கோடி பற்றாக்குறையாக மாறியது. அதாவது தனியார்மயக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நட்டமடைய வைத்தனர். மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04-ம் ஆண்டில் ரூ. 1,110 கோடியாகவும் 2008-09-ம் ஆண்டில் ரூ. 7,131 கோடியாகவும் அதிகரித்தது.

அப்படியானால் லாபமடைந்தது யார்?

தனியார் மின்னுற்பத்தி முதலாளிகள்தான். 1994-ல் தனது மின்சாரத் தேவையில் 0.4 % மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008-ல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது.

ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் சந்தையில் அன்றன்றைக்கு நிலவும் மின்சாரத் தேவையின் அடிப்படையில், மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து வணிக மின் உற்பத்தியாளர்கள் பகற்கொள்ளையடிக்கின்றனர். இவர்கள் விற்கும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 17 ரூபாய்க்கும் மேல் கூடப் போவதுண்டு. இதற்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.  இத்தகைய தனியார் பிணந்தின்னிகளிடம் மின்சாரம் வாங்கித்தான் தமிழக மின்வாரியம் திவாலாகி இருக்கிறது.

2009-10-ல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் வணிக மின் உற்பத்தி யாளர்களிடம் வாங்கியது வெறும் 19% மட்டுமே.   அதற்கு விலையாக கொடுத்ததோ தனது மொத்த வருவாயில் சரிபாதியை (49.45 %) . அதாவது புதிதாக வரும் கார்ப்பரேட் கம்பெனிக்கு தடையில்லாமல் மின்சாரம் தரவும், கார்ப்பரேட் மின் முதலாளிகள் கோடிகளை குவிக்கவும்தான் நம்மீது மின்கட்டண உயர்வு திணிக்கப்படுகிறது.

‘ஆணியே புடுங்காமல்’ ஆதாயமடைய முடியுமா?

அப்போலோ நிறுவனத்தால் முடியும். நம்மை கேட்காமல் யூனிட்டுக்கு ரூ 17.74 கொடுத்து மின்சாரம் வாங்குவதாக அப்போலோவின் PPN நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது மின்சார வாரியம். அநியாய விலைக்கு வாங்கி கட்டுப்படியாகவில்லை என ‘உன் மின்சாரமே வேண்டாம்’ என்று வாங்குவதை நிறுத்திக்கொண்டது. ஒப்பந்தப்படி மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06-ல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் ரூ 330 கோடி கொடுத்திருக்கிறது மின்வாரியம்.

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை என்ன?

நம் அணைகளின் மூலம் பெறப்படும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு வெறும் 21 காசு தான். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ 2.14 தான். இப்படி மலிவாக விற்கும் நமது நெய்வேலி NLC கோடிக்கணக்கில் நிகர லாபத்தையே தந்து வருகிறது. அப்படியிருக்க யூனிட் 17 ரூபாய் வரை விற்கும் தனியார் முதலாளிகளின் லாபம் எவ்வளவு இருக்கும்?

மின்சாரத்தை வைத்து சூதாடவும் முடியுமா?

முடியும். அக். 2008 முதல் ‘பவர் எக்ஸ்சேஞ்ஜ் ஆப் இந்தியா’ என்ற ஆன்லைன் சந்தை தொடங்கப்பட்டு, இதில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே 1,000 கோடி யூனிட்டுகளுக்கு மேற்பட்ட மின்சாரம் இந்தச் சந்தையில் சூதாடப்பட்டிருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

மின் கட்டண உயர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அதற்குக் காரணமான தனியார் மயத்தை ஒழிக்க வேண்டும். கார்ப்பரேட் மின் முதலாளிகளை கொழுக்க வைக்கவே அவதாரம் எடுத்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒழிக்க வேண்டும்.

இன்று நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே. வெற்றுச் சடங்காக அல்லாமல் உண்மையிலேயே மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் அரசுதான் நமக்கு தேவை. அதற்கு ஆட்சி அதிகாரம் உழைக்கும் மக்களிடமும் நாட்டுப்பற்று கொண்ட ஜனநாயக சக்திகளிடமும் வந்தாக வேண்டும்.

அக்டோபர் 2014.

மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள். 9443527613, 9442339260, 9486643116.

முதலில் பேசியவர்களில் ஒரு சிலர் தடையற்ற மின்சாரத்தை பெறுவதற்கு குறைந்த கட்டண உயர்வை அனுமதிக்கலாம் என்றும் கருத்துக்கூறினர். பெரும்பாலானவர்கள் கட்டண உயர்வை எதிர்த்தனர். எனினும் மின்கட்டண உயர்வுக்கான காரணம் என்ன என்பதையோ, மின்வாரியத்தின் வருவாய் இழப்பு, நட்டத்திற்கான காரணம் என்ன என்பதையோ கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அரசே விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சியை தந்துவிட்டு மின்கட்டணத்தை உயர்த்துவது எப்படி சரி என்று மென்மையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்க்குப்பிறகு நம் பெயரை அழைத்தனர். அங்கு மேடையின் நடுவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பாக மூவரும், பக்கவாட்டில் இக்கூட்டத்தை தலைமையேற்று நடத்திய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான அக்க்ஷய்குமாரும் அமர்ந்திருந்தனர். இவருக்கு எதிர்ப்புறமாக கருத்து சொல்பவர்கள் பேசுவதற்கு மைக் வைத்திருந்தனர்.

குளிர்பதன வசதியுடன் அரங்கு, மேடையில் நவநாகரீக உடையில் அமர்ந்திருந்த கனவான்கள், முன்வரிசைகளில் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு, கேமராக்களுடன் மீடியாவினர் என அன்னியப்பட்ட சூழலில் நடத்தப்பட்ட கூட்டம் ஒரு சாதாரண குடிமகன் தன் கருத்தை சொல்ல வாய்ப்பளிப்பதாக இல்லை. அதுவும் மைக்கில் பேசுவது அனுபவமற்றவர்களுக்கு பதட்டத்தை தருவதாக இருந்தது. இந்தச் சூழலில்தான் நாம் களமிறங்கினோம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

முதலில் நம் சார்பாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலரும் வழக்குரைஞருமான ராமச்சந்திரன் பேசினார்.

மின்பற்றாக்குறைக்கும், மின்வாரியத்தின் நட்டத்திற்கும் யார் காரணம்? என்பதையும் மின்சார வாரியத்தின் வரலாற்றிலிருந்து அது முன்னர் லாபகரமாக இயங்கியதை பதிவு செய்துவிட்டு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டது? என்பதையும் காட் ஒப்பந்தமும் காட்ஸ் ஒப்பந்தமும் திணித்துள்ள தனியார்மயமே அனைத்துக்கும் அடிப்படை என்பதையும் அம்பலப்படுத்தினார். லாபத்தில் இயங்கிய மின்வாரியத்தின் நட்டத்திற்கு மின்னுற்பத்தியில் களம் இறங்கியுள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையே காரணம் என்றார். தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தர வலியுறுத்தினார். இந்த கருத்துக்கேட்பு ஒரு நாடகமாக நடக்கிறது என்று பதிவு செய்தார்.

தோழர் ராமச்சந்திரன்

இதன் பின் கருத்துக்கேட்பு கூட்டம் புதிய தன்மையை அடைந்தது. நம்மை பின்தொடர்ந்து பேசியவர்கள் ஆணையத்திடம் பணிந்து கோரிக்கை வைக்கும் தன்மையிலிருந்து விடுபட்டு கேள்வியை அழுத்தமாக பதிவு செய்யும் பாதையை தொடர்ந்தனர். ஒருவர் “எங்கள் கருத்தை கேட்டுவிட்டு, அதை மதிக்காமல் பெரும்பான்மைக்கு மாறாக முடிவெடுத்தீர்களானால் அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்” என்று பதிவு செய்தார்.

மீண்டும் நமது பெயரை அழைத்தனர். நமது ஆதரவாளரும் நெல்லையிலுள்ள வழக்குரைஞருமான கோபால் மேடையேறினார். இதுவரை கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து தமது கேள்விகளாக வலிமையாக முன்வைத்தார். அவர் மக்களிடம் நேரடியாக கேள்வியெழுப்பினார்.

“தேனியிலிருந்து எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? கையை உயர்த்துங்கள்! திண்டுக்கல்லிருந்து எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? யாரும் வரவில்லை இல்லையா? இந்த ஆணையம் ஏன் பரவலாக விளம்பரம் செய்யவில்லை? இது கண்துடைப்பா இல்லையா?” என்றார்.

ஆணையத்தின் சார்பாக நேரடியாக பதில் சொல்லாமல், நீண்ட மழுப்பலான விளக்கத்தை தந்தனர். அது சம்பந்தமின்றி திசைதிருப்பும் விதமாகவும் இருக்கவே “கேட்ட கேள்விக்கு பதில் சொல்” என்று நாமும் பார்வையாளர்களும் முழக்கமிட்டோம். உடனே “இது விவாத மேடை அல்ல” என்று நழுவினர்.

“எங்களின் கேள்வி, சந்தேகங்களுக்கு பதில் தரமுடியாது என்றால் பிறகு நீங்கள் எதற்க்காக இங்கு வந்துள்ளீர்கள்? ஒரு பதிவு செய்யும் ரெக்கார்டு மெசினை வைத்து நடத்தியிருக்கலாமே?” என்று பதில் தந்தவுடன் ஆணைய அதிகாரிகள் பின்வாங்கினர். பதில் தரும்படி மின்சார வாரிய அதிகாரியை மேடைக்கு அழைத்தனர்.

இவ்வாறு மின்வாரிய அதிகாரி மைக்கில் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினோம். முக்கியமாக எப்போதிருந்து வாரியம் நட்டமடையத் தொடங்கியது? எவ்வளவு நட்டத்தை கடந்த ஆண்டுகளில் சந்தித்துள்ளது? அதற்கான காரணம் என்ன? ஆகிய கேள்விகளை மீண்டும் வலியுறுத்தினோம்.

“என்னிடம் கணக்கு இல்லை” என்று மின்வாரிய நிதித்துறை இயக்குனர் அருள்சாமி கைவிரித்தார். ஆணைய உறுப்பினர்கள் தமது தலைவர் அக்‌ஷய்குமாரிடம் விளக்கம் கேட்டனர். ஆணையத்தின் செயலர் தன்னிடமும் கணக்கு விபரம் இல்லை என்று பதில் தந்தார்.

“எந்த விவரங்களும் இல்லாமல் ஒரு கூட்டத்திற்கு வருகிறீர்கள் என்றால் மக்களை என்ன முட்டாள்கள் என்றா நினைத்துள்ளீர்கள்?” என்று நாம் எதிர்ப்பு தெரிவிக்கவே, பொதுமக்களும் நம்முடன் சேர்ந்து கண்டனக் குரலை உயர்த்தினர். அவர்களுடன் மேடையை நோக்கி முன்னேறினோம்.

கருத்துக் கேட்புக் கூட்டம்
அதிகாரிகள் கூட்டிய கண்துடைப்புக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தின் தலைமை மக்களிடம் வந்தது.

“உங்களிடம் விவரம் இல்லையென்றால் அதைக் கொண்டுவரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். அதுவரை மேற்கொண்டு எதையும் கருத்தாக சொல்ல முடியாது” என்று மக்கள் சார்பாக அறிவித்தோம்.

நாம் ஒத்துழைக்காமல் அவர்களின் கருத்துக்கேட்பு சடங்கு முடியாது என்பதை உணர்ந்து விவரங்களை தர மற்றொரு மின்வாரிய அதிகாரியை உதவிக்கு அழைத்தனர்.

இவ்வாறு, அவர்கள் பிடியிலிருந்த கூட்டத் தலைமையின் அதிகாரம் மக்களின் கைக்கு வந்தது. மக்களின் சார்பாக நாம் களத்தில் முன்வரிசையில் நின்றோம். மின்சார ஒழுங்குமுறை ஆணயம் ஏதோ நாட்டாமையைப்போல் நடத்திய கூட்டம் மக்களின் பங்கேற்பால் தலைகீழ் மாற்றத்தை அடைந்தது.

அதிகாரி ஆண்டு வாரியாக லாப நட்டக் கணக்கை தந்தார். அவர் 2000-2001 ல் 387 கோடி லாபம் என்றும், 2001-2002 ல் 4,851 கோடி நட்டம் என்றும் விளக்கினார். பட்டியலை குறித்துக்கொண்ட நாம் மக்கள் சார்பாக எழுந்து நின்று ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

“லாபத்திலிருந்த வாரியம் ஒரே ஆண்டில் 4,851 கோடி நட்டமடைந்ததற்கு என்ன காரணம்?” என்று கன்னியாகுமரி மாவட்ட தோழர் சிவராச பூபதி கேள்வியெழுப்பியபடி மேடையை நெருங்கினார். “அது கணக்கீட்டில் ஏற்பட்ட தவறு. உண்மையில் அவ்வளவு நட்டம் இல்லை. அதுதான் அடுத்த ஆண்டில் குறைவான நட்டமாக காட்டியுள்ளோம்” என்று சாதாரண கூட்டல் தவறாக நியாயப்படுத்தினார்.

“கூட்டல் கணக்குகூட தெறியாமல்தான் அதிகாரிகளாக இருக்கிறீர்களா?” என்று பூபதி குரலை உயர்த்தி அதிகாரிகள் அறிவு நாணயம் இல்லாமல் தவறை நியாயப்படுத்துவதை கண்டித்தார்.

மக்களின் எதிர்வினை காரணமாக வேறு வழியின்றி நட்டம் வந்துள்ளது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டனர். இப்பொழுது மீண்டும் நாம் எதனால் நட்டம் என்ற மையமான கேள்வியை முன்வைத்தோம். மக்களும் எழுந்து வந்து மைக்கில் நம் கேள்வியை ஆமோதித்தனர்.

கருத்துக் கேட்பு கூட்டம்
“கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்”

பரிதாபமாக நின்ற மின்சார வாரிய நிதித்துறை இயக்குனரை காப்பாற்றும் நோக்கில் தாமாக பதில் தந்தது ஆணையம். “தனியாரிடமிருந்து வாங்கிய மின்சாரத்தால்தான் நட்டம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வாயிலிருந்தே வரவழைக்கப்பட்டது.

மீண்டும் மின்சார வாரியத்தை சந்திக்கு இழுத்தோம். “உங்களுக்கு வந்த நட்டத்திற்கு காரணம் தனியாரிடமிருந்து வாங்கியதுதான் என்று ஆணையம் சொல்கிறது. நீங்களும் அதை ஆமோதிக்கிறீர்களா?” என்றோம். நாக்கில் சனி விளையாடுவதை உணர்ந்த அதிகாரி விக்கித்து நின்றார். பதில் தந்தால் ஆணையம் சிக்கலில் மாட்டும். பதில்தராமல் ஒப்பேத்துவதை அனுமதிக்க நாமும் தயாரில்லை என்பதை அதிகாரிகள் அனைவரும் உணர்ந்தனர். என்ன பதில் என்று மக்கள் நெருக்கவே “நட்டத்திற்கு தனியாரிடம் வாங்கியது காரணம் அல்ல” என்று ஆணையத்தை காப்பாற்றுவதாக நினைத்து வாரியத்தை சிக்கலில் தள்ளினார்.

நாம் நட்டத்திற்கு காரணம் எது என்பதை உறுதியான முடிவாக அறிவிக்காதவரை ஆணையத்தையும், வாரியத்தையும் விடுவதாக இல்லை. A/C யிலும் வேர்த்துக்கொட்டியது அதிகாரிகளுக்கு. ஏற்கனவே உணவு இடைவேளை விடமுடியாதபடி நாம் கூட்டத்தை கொண்டுசென்று கொண்டிருந்தோம். மக்களும், “பதில் சொல்லாமல் இவனுகள விடக்கூடாது” என்று கொந்தளித்தனர். ஒரு வழியாக 1.30 க்கு உணவு இடைவேளை என்று அறிவித்து வெளியேறியது அதிகார வர்க்கம்.

நாம் கேட்ட கேள்விக்கு பதில்தர வக்கற்ற ஆணையத்தையும், அதன் சதிகளுக்கு துணைபோகும் மின்வாரிய தலைமையையும் முழுமையாக அம்பலப்படுத்திவிட்ட நிலையில் மேற்கொண்டு கருத்துகூற எதுவும் இல்லாமல் போனது. இதனால் பலரும் வீட்டிற்க்கு சென்றுவிட்டனர். ஆனால் நாம் அப்படி விடுவதாக இல்லை. 2.15-க்கு மீண்டும் அரங்கினுள் நுழைந்தோம். மின்வாரியத்தினர் மட்டுமே அமர்ந்திருந்தனர். மக்களின் சார்பாக எண்ணி 10 பேர்கூட களத்தில் இல்லை.

2.30-க்குமேல் கூட்டத்தை மீண்டும் ஆரம்பித்தது ஆணையம். சடங்குத்தனமாக மனுதருவதுபோல் சிலர் கருத்தை முன்வைத்தனர். மீண்டும் எங்கள் பெயர் அழைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் ராமர் தன் கூர்மையான விமர்சனங்கள் மூலம் மீண்டும் அதிகார வர்க்கத்தை அலைக்கழித்தார்.

“மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டதற்க்கு காரணமே மின்சாரத்தை தனியார்மயமாக்குவதுதான். இந்த ஆணையத்திடம் கருத்துக்கூற நான் வரவில்லை. இதைப்பற்றி மக்களிடம் எங்கள் கருத்தை பதியவைக்கவே இப்பொழுது பேசுகிறேன். கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பததைத்தவிர ஆணையத்திற்க்கு வேறு வேலை இல்லை. அப்போலா முதலாளியிடம் வாங்காத மின்சாரத்துக்கு நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் என்று 350 கோடி ரூபாயை வருடத்துக்கு தூக்கித்தர வைத்துள்ள இதை ஒழிக்காமல் நமக்கு விடிவும் இல்லை. இவர்கள் நடத்தும் கருத்துக்கேட்பு நாடகத்தை அம்பலப்படுத்தி முறியடிப்போம்” என்றார்.

கருத்துக்கேட்பு கூட்டம்
புதிய தன்மையை அடைந்த கருத்துக்கேட்பு கூட்டம்

வேறு யாரும் கருத்து சொல்ல முன்வராத நிலையில் நாம் எழுப்பியுள்ள கேள்விகளும், முன்வைத்துள்ள விமர்சனங்களும் அனைவரிமும் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. தன் மீதான கூர்மையான விமர்சனங்களை – ‘கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியே ஆணையம்’ என்ற கேள்வியை ஆணையம் எதிர் கொண்டிருந்தது. பதிலுக்காக காத்திருந்தனர் பத்திரிக்கையாளர்கள். நேரமும் மணிக்கணக்கில் எஞ்சியிருந்தது.

மிக நீண்ட விளக்கம் தருவதன்மூலம் அனைத்து விமர்சனங்களையும் ஊத்திமூட எத்தனித்தது அதிகார வர்க்கம். அதற்கும் நாம் சளைக்கவில்லை. மின்சார வாரியம் ஒளிமயமான எதிர்காலத்திற்குள் நுழையப்போவதாகவும், மின்னுற்பத்தியை பெருக்கி லாபத்தை குவிக்கப் போவதாகவும், இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்பதாகவும், புதிதாக மின்னுற்பத்தியை தொடங்கவுள்ள பவர் பிளாண்ட்களை வரிசைப்படுத்தி நம்பிக்கையூட்டினர்.

நாம் மீண்டும் எழுந்தோம். “மின்வாரியமோ ஒரு பிரச்சினையும் இல்லை என்கிறது. அதுவே தன் பிரச்சனைகளை சமாளித்து லாபமீட்டப் போகிறது எனும்போது ஆணையமே கட்டண உயர்வை அறிவித்தது ஏன்?” என்றோம்.

“நாங்களாகத்தான் அறிவித்தோம்” என்றது ஆணையம்.

“மின்வாரியமே கேட்காதபோது யாருக்காக இந்த உயர்வை அறிவித்துள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பினோம். “எங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளோ சட்டமன்றமோ பாராளுமன்றமோ உங்களின் முடிவில் தலையிட முடியுமா? மக்கள் பிரதிநிகளுக்கு கட்டுப்படாததாக உள்ள இந்த அமைப்பு இப்படி சர்வாதிகாரமாக கட்டண உயர்வை திணிப்பதை அனுமதிக்கக்கூடாது” என்று வாதிட்டனர் தோழர்கள்.

“இல்லை. மின்வாரியமே கட்டண உயர்வை முன்வைப்பதாக இருந்தது. அதுவும் கூடுதலாக அறிவிக்க விரும்பியது.” என்று மின்வாரிய இயக்குனர் ஆணையத்திடமிருந்து நம் பார்வையை திருப்பினார். மீடியாக்களும் கேமராவை அடிக்கடி திருப்ப நேர்வதால் ஸ்டேண்டிலிருந்து கழட்டி தோளில் வைத்தனர். 20/20 மேட்ச் போல கேமராக்கள் ஃபோகஸ் செய்தன.

நாம் “மின் வாரியமே கட்டண உயர்வை முன்வைக்கிற முடிவில் இருந்தது என்பது உண்மையானால் உங்களுக்கு பொறுப்பான தமிழக அரசின் முடிவும் அதுதானே! பின் அம்மா ஏன் இந்த கட்டண உயர்வு ஆணையத்தால் சுமத்தப்படுவதாக கூற வேண்டும். பெருந்தன்மையோடு மானியம் தருவதாக நடிக்க வேண்டும். ஆணையம், அரசு, வாரியம் அனைவரும் ஒன்றுதான். எங்களிடம் நடிக்கிறீர்களா?” – என்றோம்.

“தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் சராசரி விலை எவ்வளவு? அதிகபட்சம் என்ன விலைக்கு வாங்குகிறீர்கள்?” என்று கேட்டோம்.

“8 – 10 ரூபாய் வரை ஆகலாம்” என்றனர் வாரியத்தினர்.

ஆணையத்திடம், “என்ன விலைக்கு ஹூண்டாய், ஃபோர்டு, நோக்கியாவுக்கு – கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கிறீர்கள்?” என்றோம்.

“5 ரூபாய் வரை” என்று பதில் தந்தனர்.

“10 ரூபாய்க்கு வாங்கி 5 ரூபாய்க்கு விற்கவைப்பது எதனால்?” என்று மடக்கினோம்.

“ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது. சட்டம் அப்படி உள்ளது. மின்வாரிய அதிகாரிகளான நாங்கள் நாட்டுக்காக எப்படி உழைக்கிறோம் தெரியுமா? வேலை முடிந்து போகும்போது என் அலுவலக அறையின் A/C யை நானேதான் ஆஃப் செய்கிறேன்.” என்று நா தழுதழுக்க, நெஞ்சுருக தன்னிலை விளக்கமளித்தார் மின்வாரிய இயக்குனர்.

நாம் “நாங்கள் ஆணையத்தைத்தான் எதிர்க்கிறோம். மின்வாரியத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடந்தகால அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை நாங்கள் என்றுமே மதிக்கிறோம். உங்களின் உழைப்பையும், நாட்டு மக்களின் உழைப்பையும் சுரண்டிக்கொழுக்க வரும் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாளான ஆணையத்தையே ஒழிக்கவேண்டும். நாட்டுப்பற்றுள்ள வாரியத்தினரும் வாருங்கள்.” என்று அறைகூவினோம்.

மீண்டும் மையமான கேள்விக்கு – நட்டமடைய வைத்து மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க சதி செய்துவரும் ஆணையத்திடம் அதன் சர்வாதிகாரப்போக்கு குறித்து – பதில் கேட்டோம். பதில் வரும்வரை இந்த கண்துடைப்பு நாடகமான கருத்துக்கேட்பு கூட்டத்தை முடிக்க விடமாட்டோம் என்று மைக்கில் வலியுறுத்தினோம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை ஆஃப் செய்துவிட்டு தப்பியோட எழுந்தனர் ஆணையத்தினர்.

உடனே “பதில்சொல்! பதில் சொல்! ஒழுங்குமுறை ஆணையமே கேள்விகளுக்கு பதில் சொல்!” என்று முழக்கமிட்டோம்.

வெளியில் வந்தவுடன் பத்திரிகையாளர்கள், “மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறீர்களே இதுதான் பொறுப்பான தன்மையா?” என்று கேள்வி எழுப்பினர். ஆணையத்தினருடன் இருந்த காண்ட்ராக்டர் ரவுடிகளில் ஒருவன் கேள்விகேட்ட நிருபரை தாக்கவே அந்த இடமே கொந்தளித்தது. அனைத்து மீடியாவினரும் காருக்குள் ஏறிய ஆணைய அதிகாரிகளை காருடன் வழிமறித்து அடித்தவனை ஒப்படைக்க கோரினர்.

பத்திரிகையாளர் மறியல்
பத்திரிகையாளர் மறியல்

நேரம் போகப்போக அது முற்றுகையானது. காவல்துறையினர் கெஞ்சிக்கூத்தாடி கார் செல்ல வழி ஏற்படுத்தினர். 5.00 மணிவரை கருத்து கேட்பதாக நடக்க இருந்த நாடகம் இப்படி 4.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கூட்டத்தில் முன் வைத்த கருத்துக்களின் சாரம்

மக்களை மின்நுகர்வோர் என்று கூறாதீர்கள். தனியார் மயக் கொள்கையே மக்களை நுகர்வோராகக் கருதுவதற்கு பழக்கப்படுத்துகிறது. மின்சாரத்துறை சேவைத்துறை. மின்வாரியம் மக்களின் வரிப்பணத்தில் உருவான நிறுவனம். மின்சாரம் பெறுவது நாட்டின் குடிமக்களது உரிமை.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் அரசியல்வாதியின் கையில் இருந்தால் தேர்தல் போன்ற நேரங்களில் அவர்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க தயங்குவார்கள். அத்தகைய எவ்வித தடையும் இன்றி உயர்த்தவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ஆணையம் பாராளுமன்றம், சட்டமன்றம், மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் மக்களாட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் இல்லையா?

மின்சார ஒழுங்குமுறை ஆணையமே தனியார்மயத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையமே ஒழிக்கப்பட வேண்டியது. மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் பெருமுதலாளிகளின் இலாபத்தை உறுதி செய்து தடையின்றி வசூல் செய்து கொடுக்கவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக பெருமுதலாளிகளின் கைக்கூலிகளே அமர்த்தப்படுகிறார்கள். மக்களுக்கும், மின்வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்கும் நீதிபதிகள் போல் இங்கு அமர்ந்திருக்கும் ஆணைய அதிகாரிகள் முதலாளிகளின் கைக்கூலிகள். குற்றவாளியே இங்கு நீதிபதியாக அமர்ந்துள்ளான். இங்கு அமர்ந்திருக்கும் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இன்று நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே. வெற்றுச் சடங்காக அல்லாமல் உண்மையிலேயே மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் அரசுதான் நமக்கு தேவை. அதற்கு ஆட்சி அதிகாரம் உழைக்கும் மக்களிடமும் நாட்டுப்பற்று கொண்ட ஜனநாயக சக்திகளிடமும் வந்தாக வேண்டும்.—-அதிகாரம் வராதாவரை கார்ப்பரேட்டுகளின் ஆட்சியின் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்

  2. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத,மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்படாத,மக்களுக்கு பதில் சொல்லத் துப்பில்லாத,கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான ஒழுங்குமுறை ஆணையம்,ஆணையத்தை மீற முடியாத,மீற விரும்பாத மாநில அரசின் ஜனநாயக கபடவேடத்தைக் கலைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போராடத் தூண்டிய மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும்பல அமைப்புகளின் நடவடிக்கை பாராட்டுக்குரியவை.இப்படிப்பட்ட சட்ட விரோத ஆணையங்களை நாட்டிலிருந்து அடித்து விரட்டுவதற்காக அணிதிரட்டிப் போராட வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க