Friday, November 27, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !

புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !

-

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 2

10. அஞ்செட்டி

  • நவம்பர் 7: ரசியப் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்!
  • கம்யூனிச அகிலத்தின் 150-ம் ஆண்டில் சாதி, மதம், இனம், மொழி கடந்த பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமையை கட்டியமைப்போம்!
  • மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம்!

மேற்கண்ட முழக்கங்களின் கீழ் அஞ்செட்டி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அத்திமரத்தூர் கிளையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. தோழர்களும் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்க தோழர்களும் உள்ளூர் மக்களும் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. நாட்றாபாளையம் பேருந்து நிலையத்தில் விண்ணதிரும் முழக்கங்களும் எளிய கிராம விவசாயிகள், தொழிலாளர்கள் நடத்திய பேரணி அங்கிருக்கும் மக்களுக்கு புதிய நம்பிக்கையூட்டும் வண்ணம் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர்.சரவணன் கொடியேற்றினார். தோழர்கள் செவ்வணக்கம் செலுத்திய பின்னர், கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் முனியப்பன் ரசியப் புரட்சியின் முக்கியத்துவத்தையும் இதனைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைவிட நவம்பர் புரட்சி தான் உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய விழா என்பதை விளக்கி ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர்.ராமு உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கம்யூனிச அகிலம் என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு. முதலாம் கம்யூனிச அகிலத்தின் 150 ஆண்டை ஒட்டிய அவரது உரையில் சர்வதேச அளவில் மூன்று அகிலங்கள் இருந்ததையும் அவை ஒவ்வொன்றின் சாதனைகளையும் மக்களுக்கு விளக்கினார்.

இந்தியா போன்ற காலனி நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும் உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகமூட்டுவதற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை வீறுகொண்டெழச் செய்வதற்கும் ஜெர்மனியின் பாசிசத்தை வீழ்த்துவதற்கும் தோழர்கள் லெனின், டிமிட்ரோவ் தலைமையில் கம்யூனிச அகிலம் செய்த பணிகளையும் தோழர் ஸ்டாலினின் மகத்தான பங்களிப்பையும் விளக்கினார். இந்த வெற்றிக்கும் நவம்பர் புரட்சி தான் உத்வேகம் மூட்டியது என்பதையும் தோழர் விளக்கி பேசினார்.

தற்போது நமது நாட்டில் நடந்து வரும் மாற்றங்கள் மூலம் இந்த சமூக அமைப்பு உழைக்கும் மக்கள் வாழத்தகுதியற்றதாக மாறிவிட்டதையும், பெங்களூரில் தெருநாய்களிடம் கடிப்பட்டு சாகும் ஏழைகளின் குழந்தைகளை இந்த சமூகம் காப்பாற்ற முடியாமல் போனதிலிருந்தும், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளாக மாற்றப்பட்டுள்ளதையும் விளக்கினார்.

முகலிவாக்கம் கட்டிட விபத்தும் ஒசூரில் சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தை நவீன முறையில் ஓரிரு மாதங்களில் கட்டியதையும் குறிப்பட்டு, நாதியற்ற ஏழை கூலி விவசாயிகளுக்கு அடைக்கலமாக இருந்த கட்டிடத் தொழிலும் இனி நமக்கு கிடைக்காது என்பதை மக்களுக்கு உணர்த்தினார்.

தற்போதைய மோடி அரசு நேரடியாக பார்ப்பன பாசிசத்தைக் கொண்டுவந்துள்ளதை விளக்கினார். இந்துத்துவாவை எதிர்ப்பதாக கூறும் சி.பி.ஐ.யின் தளி எம். எல். ஏ. ஒரு தரகு முதலாளி என்பதை உழைக்கும் மக்களின் சொந்த அனுபவத்திலிருந்து விளக்கினார். ஓட்டுக் கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டதை உணர்த்தினார். அதனால், இவர்கள் பாசிசத்தின் கோடாரிக் காம்புகள் என்பதையும் உணர்த்தினார். பார்ப்பன பாசிஸ்ட் மோடி உழைக்கும் மக்கள் மீது திணித்துவரும் எண்ணற்ற அடக்குமுறைகள் சாதாரண ஏழைகள் வாழத் தகுதியற்ற நாடாக நமது நாடு மாறிவிட்டதை சுட்டுக்காட்டினார்.

தொகுப்பாக பார்க்கும் போது, கிராமங்கள் தோறும் உண்மையான ஜனநாயகத்திற்கான மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவதுதான் இன்று நம்முன் உள்ள கடமை என்பதை உணர்த்திப் பேசினார்.

இறுதியாக, புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்.தீபன் நவம்பர் புரட்சிவிழா நடத்துவதாக உள்ளூர் மக்களிடம் தெரிவித்த போது பலரும் நிதி உதவி, இனிப்புகள் வழங்கி உதவினர் என்பதை நினைவு கூர்ந்து, வி.வி.மு.வின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக கருதுவதாக கூறி நன்றியுரையாற்றினார்.

மிகவும் பின்தங்கிய கிராமமான நாட்றாபாளையத்தின் உழைக்கும் மக்கள், வி.வி.மு. தோழர்கள் நடத்திய ஊர்வலம், தெருமுனைக் கூட்டம் புதிய நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். சூழ்ந்து இறுதிவரை ஆதரவு தந்த மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
அஞ்செட்டி

11. சென்னை – ஆவடி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி- அம்பத்தூர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக்குழு தோழர்கள் இணைந்து சென்னை பட்டாபிராம் பகுதியில் ” நவம்பர் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்! ” என்கிற தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் விழா நடத்தப்பட்டது.

7.11.2014 அன்று மாலை 6 மணியளவில் துவங்கிய இவ்விழாவில் இப்பகுதிகளுக்குட்பட்ட பு.ஜ.தொ.மு கிளை மற்றும் இணைப்பு சங்கத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சுமார் 400 பேர் வரை கலந்துக் கொண்டனர். தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மு.முகிலன் தலைமை தாங்கினார்.

தோழர்.முகிலன் (தலைமையுரை)
தோழர்.முகிலன் (தலைமையுரை)

தலைமையுரையில் இந்நிகழ்ச்சியின் அவசியத்தை உணர்த்தி பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட  தோழர் இராஜேந்திரன் “போலீஸ் இல்ல; பொறுக்கி” என்கிற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். போலீசின் உண்மை முகத்தை ஜனரஞ்சகமான முறையில் திரைகிழித்து, அனைவரும் போலீசை எள்ளி நகையாடும்படி செய்தார்.

இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

திரு.வெள்ளையன்
திரு.வெள்ளையன்

கோக் – பெப்சியை அமெரிக்க மூத்திரம் என்றும் பிரச்சாரம் செய்து மக்களை திரட்டியவை நமது அமைப்புகள் என்றும், தொழிலாளர்களை மட்டுமல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களை பாதிக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளிலும் தலையிட்டு போராடுகின்ற பாரம்பரியம் கொண்டவை என்றும் நமது போராட்டங்களை நினைவு கூர்ந்தார். இத்தகைய புரட்சிகர அமைப்புகள் நடத்துகின்ற “நவம்பர் புரட்சி நாள்” விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மார்க்சிய – பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் தமிழேந்தி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

திரு.தமிழேந்தி
திரு.தமிழேந்தி

தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டுள்ள இவ்விழாவில் அவரை வாழ்த்துரை வழங்க அழைத்தமைக்கு நன்றி தெரிவித்து, தொழிலாளர்களின் உரிமைப் பறிப்புகளுக்கெதிரான போராட்டத்தில் உங்களோடு இணைந்து போராட தயாராக உள்ளேன் என்றும், தூய்மை இந்தியா என்ற பெயரில் கையில் துடைப்பத்தை எடுத்துள்ள இந்து மதவெறி பயங்கரவாதி மோடியை விரட்டியடிக்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் துடைப்பத்தை கையிலெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர்.பா. விஜயகுமார் அவர்கள், பிற்போக்கும், மானக்கேடும் மிகுந்த பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற தீபாவளியை அம்பலப்படுத்தியதோடு ரசியப் புரட்சியை உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தார்.

தோழர் பா.விஜயகுமார் (சிறப்புரை)
தோழர் பா.விஜயகுமார் (சிறப்புரை)

ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சோசலிச அரசின் சாதனைகளை எடுத்துச் சொன்னார். நாட்டுப்பற்று, மனித சமூகத்தை நேசித்தல், சுரண்டல்-அடக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கம்யூனிசம் போதித்தது. முதலாளித்துவமோ சுரண்டல், சுயநலம், நுகர்பொருள் மோகம், போதை-பொறுக்கித்தனங்களையே போதித்து வருகிறது என சாடினார். லாபவெறி பிடித்து அலைகின்ற முதலாளித்துவத்துக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் பாதசேவை செய்கின்ற அதே தருணத்தில், மதவெறியூட்டுவதன் மூலம் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார். மறுகாலனியாக்கம், இந்து மதவெறி பாசிசம் ஆகிய இரண்டையும் முறியடிக்கும் வகையில் தொழிலாளி வர்க்கம் தனது இரு கரங்களிலும் போர் வாளை ஏந்திப் போராட வேண்டியுள்ளது என்கிற வரலாற்றுக் கடமையை நினைவூட்டியதுடன், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் அணித்திரளுமாறு அறைகூவல் விடுத்தார்.

நிகழ்ச்சிக்கு இடையிலும், இறுதியிலும் குழந்தைகள் பங்கேற்ற ஓவியப் போட்டி, பாடல்கள், மாறுவேடப் போட்டி, கவிதை வாசிப்பு, உரைவீச்சு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிளை சங்கத் தொழிலாளி ஒருவரது மனைவி தோழர் சாந்தி ”மாற்றம் தேவை” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

வீரமங்கை வேலு நாச்சியார் வேடமணிந்த 7 வயதான பூவரசி, சார்லி சாப்ளின் வேடமணிந்த 7 வயதான பிரபஞ்சன், ” நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு ”என்று மோடியின் முகத்தில் காறி உமிழ்ந்த 3 வயதான செயலினி போன்ற எண்ணற்ற குழந்தைகள் தங்களது திறமைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். இளம்தொழிலாளர்கள் பங்கேற்ற புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளராக இருந்த குழந்தைகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் – சிறுமியர்
போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் – சிறுமியர்

பு.ஜ.தொ.மு-வின் மூத்த தோழர்.எழில்மாறன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெயராமன், காஞ்சி மாவட்ட தலைவர் தோழர் நாச்சியப்பன் ஆகியோர் மேற்படி பரிசுகளை வழங்கினர். விழாவின் இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஆனந்தன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. கலந்துக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உணவருந்தி சென்றனர்.

பரிசளிப்பு - தோழர் எழில்மாறன்
பரிசளிப்பு

நவம்பர் புரட்சி தினத்தை தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் ஒரு நம்பிக்கையூட்டும் தினமாக மாற்றுவதற்கு இந்த விழா உதவிபுரிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்கள்

12. திருச்சி

நவம்பர்-7 ரசிய புரட்சி நாள் வெல்க!
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு!

னித நேயம், சேவை, உதவி, அன்பு, பாசம், உழைப்பு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தும், இன்று லாப நோக்கத்தோடும், வெறியோடும் பிரித்து மேயப்பட்டு வருகிறது. நாட்டின் வளங்கள்,காடு,மலை,கடல்,உயிரினம் முதல் பிணங்கள் வரை இன்று காசு பொறுக்கும் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. மக்களை பாதுகாக்க, சேவை செய்யவே பிறப்பெடுத்துள்ளதாக கூறிக்கொண்டுள்ள அரசும், அரசியல் கட்சிகளும் சுரண்டிய சுரண்டலில் 2G, நிலக்கரி,கிரானைட் துவங்கி பச்சிளம் குழந்தைகளின் உயிரின் ஆதாரமான ஆவின் பால் வரை கைவைத்துவிட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குள்ளான ஜெயலலிதா இன்னமும் நாட்டின் நிர்வாகத்தை நடத்துகிறார். IAS அதிகாரிகள் ஜெயாவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற்ற பிறகே டம்மி பீசான பன்னீர் செல்வத்திடம் ஒப்புக்கு கையெழுத்து பெற கோப்புகளை அனுப்புகின்றனர். ஊழலிலும், கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஊறிபோயுள்ள இந்த நபர்களே இன்று நாட்டின் அரசியல், பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். மோடி,லேடி, உள்ளிட்ட எல்லா கேடிகளும் தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்காக நாட்டை திறந்துவிட்டு வருகின்றனர்.

அரசியல்,பொருளாதாரம்,கல்வி,இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இவர்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கான கொள்கையை திணித்தும் சமூகத்தை சீரழித்தும் வருகின்றனர். இந்த பிணந்தின்னி கழுகுகள் கூட்டத்தை எதிர்கொள்வது எப்படி? மனிதனின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை தடுக்க முடியுமா? பண்டிகைகள், பிரார்த்னை, பரிகாரம் மூலம் இதனை சரி செய்ய முடியுமா? மூடத்தனங்கள் உலகை விடுவித்ததாக வரலாறு இல்லை, விஞ்ஞான பூர்வமான செயல்பாடுகளே விடிவைத் தரும்.

1917 நவம்பர் புரட்சி உணர்த்தும் பாடம் இதுதான், ரசிய மண்ணில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சிக் கெதிராகப் போராடிய புரட்சியாளர்களின் பின்னே துவக்கத்தில் மக்கள் செல்லவில்லை. மன்னனை நம்பினார்கள், புகழ்ந்தார்கள், மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டப் பிறகுதான் ஜாரின் கோர முகத்தை சோவியத் மக்கள் கண்டு கொண்டனர். இத்தகைய கொடுங்கோன்மையை முன்னமே உணர்ந்து அமைப்பாக திரட்டப்பட்டிருந்த புரட்சியாளர்கள் ஜாருக்கு எதிராக போராடி அதிகாரத்தை மீட்டெடுத்தனர்.

இப்படிப்பட்ட நவம்பர் புரட்சிக்கு இது 97ம் ஆண்டு, நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள நச்சு கிருமிகளான முதலாளித்துவ சுரண்டலையும், பழமைவாத நில உடைமை சிந்தாந்தத்தையும், ஆரிய பார்ப்பன சூழ்ச்சிகளையும், சாதிய கொடுமைகளையும் வீறுகொண்டு வீழ்த்தவும், முறியடிக்கவும், அறைகூவி அழைக்கிறது நவம்பர் புரட்சி.

புதிய வரலாற்றை படைப்போம்! – அதனை
இப்புவி முழுவதும் பரப்புவோம் வாரீர்!!

என பிரசுரமாக அச்சிடப்பட்டு உழைக்கும் மக்களிடம் நவம்பர் புரட்சி நாளின் அவசியத்தை வழியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.

BHEL

திருச்சி துவாகுடியை அடுத்துள்ள BHEL தொழிற்சாலை முன்பு உள்ள டிரைனிங் செண்டர் அருகில் காலை 7 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனை சேர்ந்த தோழர் திருஞானம் அவர்கள் தலைமை வகிக்க தோழர்.நாராயணசாமி அவர்கள் கொடியேற்றினார். பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில செயலாளர் தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தோழர்.பொன்னுசாமி நன்றியுரையாற்றினார்.

குட்செட்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்-தலைமையில் இயங்கும் சுமைப்பணித்தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் சார்பாக குட்செட் பகுதியில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நவம்பர்-7 தினத்தை ஒட்டி காலை 7.30 மணி அளவில் கொடியேற்றி, பட்டாசுவெடித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

சு.தொ.பா.ச வின் தோழர்.குத்புதீன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமைப்பணித்தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்பு தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான தோழர்.ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடன் வாழ்த்துரை வழங்கினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைகுழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி சிறப்பித்தனர். இறுதியில் சு.தொ.பா.ச வின் தோழர்.முத்துகருப்பன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தில்லைநகர், காந்திபுரம்

இதைதொடர்ந்து காலை 10 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ம.க.இ.க.மையக் கலைக்குழு தோழர்.சத்யா அவர்கள் கொடியேற்றி நவம்பர்-7 நாம் ஏன் கொண்டாட வேண்டும் என அதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய கலைக்குழு தோழர் கோவன் மோடி அரசின் தனியார்மய தாராளமய கொள்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் இந்து மதவெறி பாசிசத்தை பற்றியும் சீரழிவு கலாச்சாரத்தை பற்றியும் விளக்கி பேசினார். கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியில் பு.மா.இ.மு.மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா நன்றியுரையாற்றி இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். வெடி வெடித்து,இனிப்புகள் வழங்கி பகுதி மக்களுடன் நவம்பர்-7 தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.

அன்றைய தினத்தில் திருச்சி மாநகர் முழுவதும் பாலியல் சீரழிவு கலாச்சாரத்திற்க்கு எதிராக வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இக்கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கைதட்டி உற்சாகமூட்டி அனுப்பி வைத்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

உறையூர் கைத்தறி மண்டபம்

nov7-trichy-function-01

அன்று மாலை உறையூர் கைத்தரி மண்டபத்தில் நவம்பர் புரட்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தினை ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன் தலைமையேற்றி நடத்தி வைத்தார்.

ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன்
ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன்

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா பேசும்போது:

நாடு முன்னேறாமல் இருக்க காரணம் மக்கள் தொகை பெருக்கம் என மக்கள் மீது பழியை போடுகிறது நமது அரசு. ஆனால் தோழர் லெனின் குழந்தைகளை நாட்டின் செல்வம் என வர்னிக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது வெறும் வயிறும்,வாயுடன் பிறப்பதில்லை இரண்டு கைகளோடும் கால்களோடும்தான் பிறக்கிறது. சமூக உற்பத்தியில் பெரும் பங்காற்றுகிறார்கள். இன்று கல்வி என்பதே பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஆனால் சோவியத்தில் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்சி கல்வி வரை இலவசமாக தாய் மொழியில் கொடுத்தது மட்டுமல்ல விண்வெளிக்கு முதன் முதலாக பெண்ணை அனுப்பியது. சோசலிச புரட்சியே இதற்கு காரணம். ஆனால் இங்கே ஓட்டு போடும் உரிமை கூட இங்கே பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்தது. அனைத்து பொறுப்புகளும் மதிப்பிழந்தே உள்ளது. ஆனால் சோவியத்தில், சாதாரண பால் கறந்து விற்பனை செய்யும் சாதாரண பெண்ணை பாராளுமன்றத்திற்க்கு அனுப்பி மதிப்பளித்தது என இன்றைய நிலைமையையும் சோவியத் யூனியனில் நிலவிய நிலைமையையும் ஒப்பிட்டு பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா
பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா பேசும் போது:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா

இளைஞர்கள் ஊதாரியாக சுற்றுவதும் வருத்தப்படாத வாலிபர் சங்கமாக பொறுப்பற்று திரிவதுதான் பெருமையா?

உண்மையான மகிழ்ச்சி என்பது நம்முடைய அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து போராடுவது நம்முடைய கடமை என ஏன் உணர்வதில்லை. நவம்பர் 7 கமல் பிறந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி என இளைஞர்கள் கருதுகின்றனர் ஆனால் சமூக விடுதலைக்காக மாணவர்களும்,இளைஞர்களும் அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து போராடுவதை இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்வது என அறைகூவல் விடுத்தார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான் பேசும் போது:

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான்
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான்

மறுகாலனியாக்கத்தை விரைவாக அமுல்படுத்தும் நோக்கில் நாட்டின் போடி, லேடி, கேடிகள் ஆட்சி செயல்படுகின்றன. கல்வி,மருத்துவம்,ஆலைகள்,சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. சேவைதுறைகள் ஒழித்து கட்டப்படுகின்றன. தொழிலாளர்கள் சட்டங்கள் திருடப்பட்டு முதலாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.

மின்சாரம்,தண்ணீர்,பால் என அத்தியாவசிய பொருட்களை கடுமையாக விலையேற்றப்படுகின்றன. காரணம் கேட்டால் நட்டத்தில் இயங்குகின்றன என பொய்யை பரப்புகின்றனர். “மின்வாரியம் நட்டம் என்பது மோசடி அதனை தனியார்மயமாக்கவே இந்த வழிமுறைகள் எங்களுக்கு வேறு வழியில்லை” என மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையமே எமது தோழர்களிடம் சரணடைந்து ஒத்துக் கொண்டது உலகறிந்த விசயம். இப்படிப்பட்ட முதலாளித்துவ தாசர்களின் ஆட்சியை எதிர்த்து பல்வேறு மக்களும் போராடி வருகின்றனர். கூடங்குளம் மக்கள் கல்விக்கான போராட்டம்,மீனவர்கள் போராட்டம்,கலாச்சார சீரழிவுக்கு எதிரான போராட்டம் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இனி தனித் தனி போராட்டங்கள் தீர்வை தராது. ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து போராடும் போதே நிரந்தரமான தீர்வு கிடைக்கும். மாமேதை லெனின் பாதையில் ரசிய புரட்சியை போல நமது மண்ணிலும் மக்களை திரட்டி போராடுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பாரதிதாசன் கவிதையோடு தனது உரையை முடித்தார்.

பிறகு அன்று மாலை நடைபெற்ற பேச்சுபோட்டி, பாடல் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப்போட்டி என கலந்து கொண்டு வெற்றியடந்தவர்களுக்கு இவ்விழா மேடையில் பரிசுகள் கொடுக்கப்பட்டது.

சிறுவர் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு, பார்வையாளர்கள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறுவர்கள் கலை நிழச்சிகள், பெரியவர் கலைநிகழ்ச்சி மற்றும் ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள் அரங்கத்தில் வந்திருந்தவர்களை உற்சாகமூட்டினர்.

ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இடையில் இனிப்பு, காரம், தேநீர் என கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
திருச்சி கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க