இனவெறியைத் தூண்டும் கேரள எம்.எல்.ஏ பிஜூ மோள் உருவபொம்மை எரிப்பு, சாலை மறியல் போராட்டம்
கேரள ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும், போலி கம்யூனிஸ்டுகளும் ஓட்டுப்பொறுக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து கேரள மக்களிடம் அணையைப் பற்றிய தவறான செய்தியை பரப்பி இருமாநில மக்களிடையே இனவெறியை தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் அடைய எத்தனிக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டிருக்கும் போலீசார், அணைப் பாதுகாப்பில் செலுத்தும் கவனத்தை விட தமிழக பொறியாளர்களை எந்தப் பணியும் செய்யவிடாமல் தடுப்பது, தேவையில்லாமல் தொல்லை கொடுப்பது, அவர்கள் பயப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளில் தான் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
நேற்று முன் தினம் (நவம்பர் 17, 2014) பீர்மேடு போலி கம்யூனிஸ்டு (சி.பி.ஐ) சட்ட மன்ற உறுப்பினர் பிஜூ மோள் சுமார் 50 பேருடன், பாதுகாக்கப்பட்ட அணைப் பகுதிக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தார். அங்கு இருந்த தமிழக பொதுப்பணித்துறை செயற் பொறியாளார் மாதவன் அவரிடம் விளக்கம் கேட்க, சட்ட மன்ற உறுப்பினரும் அவருடன் வந்த சி.பி.ஐ குண்டர்களும் மாதவனை தாக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு தடைசெய்யப்பட்ட அணைப்பகுதிக்குள் சென்று அணையின் கட்டுமானத்துக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இதை அனைத்தையும் அங்கிருந்த போலிசார் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். தமிழக அதிகாரிகளை கேரள ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் தொடர்ந்து தாக்குவது அந்தப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள ஓட்டுக்கட்சிகளைக் கண்டித்து தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு சார்பாக அனுமதியில்லாமல் சாலை மறியல், பிஜூ மோள் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் தலைமையில் பெருந்திரளான மக்கள் நேற்று (18/11/2014) மாலை 5.30 மணியளவில் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள கூடலூர் தேவர் சிலை அருகில் ஒன்று திரண்டனர்.
இதனால் அப்பகுதி பரபரப்பு அடைந்தது. இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொண்ட காவல்துறை பெரியகுளம், போடி காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 300-க்கும் மேற்ப்பட்ட போலீஸ் படையுடன் வஜ்ரா வாகனத்துடன் மக்களை அச்சுறுத்தும் நோக்கோடு சாலையில் அணிவகுத்து நின்றனர். இதற்கெல்லாம் அஞ்சாத மக்கள் பிஜூ மோளின் உருவபொம்மையுடனும், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய தட்டியுடனும் சத்தமாக முழக்கங்களை எழுப்பியவாறு, தமிழக – கேரள எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலையில் பேரணியாக சென்றனர்.
போலி கம்யூனிஸ்டு பிஜூ மோளின் உருவபொம்மை எரிக்கப்பட்டது, 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் செய்யப்பட்டது.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு குழு தோழர் மோகன் பேசியபோது
“கேரள இனவெறி அரசியல்வாதிகள் நிறைய பித்தலாட்டம் செய்து வந்தனர். ஆனால் இறுதியில் உண்மையும், நேர்மையும் தான் வென்றது. இந்தப் பகுதியில் இருக்கும் மக்களின் இடைவிடாத போராட்டம் தான் அணை நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கு காரணமாக இருந்துள்ளது.
இயற்கை நமக்கு கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் கண்டிராத வகையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கியுள்ளது, இப்போது அணையில் நீர்மட்டம் 142 அடியை எட்டியும் பலமாக உள்ளது.
ஆனால் கேரள ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் அணையைப் பற்றி பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். இனவெறி பிடித்த கேரளா அரசியல்வாதிகள் ‘அணையின் நீர்மட்டத்தை குறைத்து விடவேண்டும், அங்குவரக்கூடிய நீரை கடலில் கொண்டுபோய் வீணாக்கிவிட வேண்டும்’ என்ற கெட்ட நோக்கத்தோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றனர். ஓட்டுபொறுக்கி பிழைப்பு நடத்தும் கட்சிகள் அங்கு இருக்கும் மக்களிடம், ‘அணை பலவீனமாக உள்ளது’ என்றும், சைரன் ஒலி எழுப்பி, ‘மேட்டுப்பகுதிக்கு செல்லுங்கள்’ என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.
அணைப்பகுதியில் வசிக்கும் கேரள மக்கள் அணையின் உறுதித்தன்மையையும், முல்லைப் பெரியாறு அணையினால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அணை பலமாக உள்ளது என உறுதியாக நம்புகின்றனர். தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை பற்றி மத்திய அரசிடம் நாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை முறையிட்டு விட்டோம். ஆனால் அது கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது. மாநில அரசோ கையாலாகாமல் கிடக்கிறது. அதனால் மக்கள் நேரடியாக முல்லைப் பெரியாறு அணையையும் அங்கு இருக்கும் அதிகாரிகளையும் பாதுகாக்க போர்க்கோலம் பூண்டு வர வேண்டும், அனைத்து தடைகளையும் தகர்த்து முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
தகவல்
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு,
தேனி மாவட்டம்.
//போலி கம்யூனிஸ்டு பிஜூ மோளின் //””போலி “” கம்யுனிஸ்டு என்று சொல்வதை கண்டிக்கிறேன். அவர் பீர்மேடு தொகுதி வலது கம்யுனிஸ்டு MLA.
நமக்குப் பிடிக்காத அல்லது நமக்கு ஒத்துவராத கருத்து சொன்னால் அவர் போலி எவ்வாறு ஆவார்?
கம்யுனிஸ்டு கட்சி மாநிலக் கட்சி அல்ல; தேசியக் கட்சி என்று நாங்கள் பஜனை செய்து கொண்டு இருந்தாலும் பல சமயங்களில் சில விஷயங்களில் அது மாநிலப் பார்வையுடன் நிலை எடுக்கிறது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
போலி என்ற சொல்லை உபயோப்பதை அருவருப்பாக கருதுகிறீர்கள் என்றால் அவர்கள் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொள்வதை நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.
பேபி அனையை உடைத்த காவி பஜக க்கு கம்யுனிஸ்டு எவ்வளவே மேல்
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு குழு தோழர் மோகன் போன்றோரையும் அரசாங்கம் சிறை செய்து கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். பிஜு மோள் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது மாநில அரசு நீதி மன்றத்தை நாடியுள்ளது. இதுவே சரியான வழி. முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு என்ன சாதித்து விடும் என்று வினவில் மே 2014ல் வந்த கட்டுரையைப் படித்துப் பாருங்கள். மக்களை வினவு எப்படி தவறாக வழி நடத்த முயற்சிக்கிறது என்பது புரிந்து விடும். தேவையற்ற பதற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த முற்படுவதும் தவறே ஆகும். வினவு திருந்துமா?
பாபு சொல்வது மிகச் சரி. தீர்ப்பு வந்து பயன் இல்லை; இதனால் ஒன்றும் ஆகாது என்றே எழுதியது வினவு. குறைந்த பட்சம் நாம் அச்சமுற்றது போல் இல்லாமல் அணையின் உயரம் பற்றிய தீர்ப்பு வந்ததால் நன்மை இருக்கிறது; நீர் மட்டம் உயர்ந்து விட்டது என்று வினவு ஒப்புக்கொள்ள வேண்டும்.