ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?
பிரச்சார இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே,
டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ்நாடே தள்ளாடுகிறது. ஆண்களோ குடல்வெந்து சாகிறார்கள். பெண்களோ குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைக் காப்பாற்றவும் வழியில்லாமல் தினம், தினம் நொந்து சாகிறார்கள். இன்னொரு பக்கம் 3 வயது குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள் – பொள்ளாச்சியில் கத்தி முனையில் மிரட்டி 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். கரூரில் வேலைக்கு சென்று திரும்பிய 17 வயது இளம் பெண்ணை குதறிக் கொல்கிறார்கள். தமிழகமே சீரழிந்து கொண்டிருக்கிறது.
10,15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊருக்கு வெளியே முள்ளுத்தோப்பில் பதுங்கிப் பதுங்கி சாராயம் விற்றார்கள். குடிப்பவர்களும் யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்துகொண்டே தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டே போய்க் குடித்தார்கள். ஆனால் இன்றோ 12, 15 வயதிலேயே குடிக்கிறார்கள். பட்டப் பகலில் பஸ் ஸ்டாண்டில் நின்று பெருமையாக மடக் மடக்கெனக் குடிக்கிறார்கள். இதெல்லாம் தப்பில்லையா என்றால், “நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வலி தெரியாம இருக்கக் குடிக்கிறோம்” என குடிமகன்கள் நியாயம் பேசுகிறார்கள். 12,15 வயது பள்ளிகூடப் பையனெல்லாம் குவாட்டரை ராவாக அடிக்கிறானே, அவனுமா கஷ்டப்பட்டு உழைக்கிறான்?
“விக்கிற அரசாங்கமே வெக்கமில்லாம ஊருக்குள்ள விக்குது. காசு குடுத்து குடிக்கிற நாங்க ஏன் வெக்கப்படணும்?” என்பதே குடிமகன் கேள்வி. என்றைக்கு அரசு டாஸ்மாக் மூலம் சரக்கை விற்க ஆரம்பித்ததோ அன்றையில் இருந்தே மறைந்து மறைந்து குடிப்பதெல்லாம் மறைந்து விட்டது. ட்ரீட் என்ற பெயரில் குடிப்பதையே ஒரு ஃபேஷனாக்கி விட்டனர்.
ஒரு பக்கத்தில் குடித்துக் குடித்துக் குடல்வெந்து அரசு மருத்துவமனையில் கிடந்தே செத்துப்போகும் கணவன்மார்கள்- 2,3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் தாய்மார்கள், இன்னொரு பக்கத்தில், குடிபோதையில் தனது மகளிடமே தவறாக நடக்க முயன்ற தகப்பனை அடித்துக்கொன்ற தாய், குடிவெறியில் 13 வயது சிறுமி புனிதாவைப் பலாத்காரம் செய்து கொன்ற காமுகன்.”குடிச்சா பொண்டாட்டிக்கும் ,பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?” எனக் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இதற்கு குடிபோதை மட்டுமா காரணம்? இல்லை, குடிபோதையோடு மோசமான காமவெறியும்தான்.
குடிக்கு டாஸ்மாக் போல, காமவெறியைத் தூண்டுவதற்கு ஆபாச இணைய தளங்களும், மெமரி கார்டுகளும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் குடிப்பது மட்டுமின்றி, ஆபாசசெக்ஸ் படங்களையும் பார்ப்பவர்கள்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற ஆய்வுக்காக சென்ற நமது தோழர்களிடம், 15 வயது சிறுவன் சொன்ன தகவல் இது “நான் ஒரே நாள்ல 250 பிட்டு படம் டவுன்லோடு பண்ணியிருக்கேன். யாராலயும் முடியாது” என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இப்படி சிறிய வயதில் நாள் முழுக்க ஆபாசப் படத்தைப் பார்ப்பவனுக்கு அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் வரும். இதைத்தான் எதிர்க்க முடியாத பிஞ்சு குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், டாஸ்மாக்கின் போதைவெறியும், செக்ஸ் படத்தின் காமவெறியும் தலைக்கேறியவனுக்கு தாய்க்கும்- தாரத்திற்கும் – மகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?
இதற்கு யார் காரணம்?
சாராயக் கடைகளைத் திறந்து வைத்து சரக்கை விற்று மக்களின் பணத்தைப் பறித்து கொண்டதோடு உடலையும் மனதையும் நாசமாக்கியது அரசுதானே. மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய பொங்கல், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் கூட 200 கோடி, 300 கோடி என “டார்கெட்” வைத்துக் கொள்ளையடிப்பது அரசுதானே?
இதே அரசுதானே செக்ஸ் பட இணைய தளங்களையும் அனுமதிக்கிறது. அரசு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும்? என்று கேட்கலாம். ஆனால் 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணையதளம் மூலமாக யாரும் இலவசமாகப் பார்த்து விடாமல் தடுக்க, 20 இணைய தளங்களை செயல்படவிடாமல் தடுத்தது அரசு. டி.வி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக இதை செய்ய முடியுமென்றால், மக்களின் நன்மைக்காக செக்ஸ் பட இணைய தளங்களை தடுக்க முடியாதா?
10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் வாத்தியார் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. அவசரத்துக்குப் போகக் கக்கூஸ் கூட இல்லை. இதெல்லாம் கொடுக்காத அரசு எதற்காக இலவச லேப்டாப் கொடுக்கிறது? வாத்தியாரே இல்லாமல் பையன் அதை எப்படி கற்றுக் கொள்வான்? வேண்டுமானால், 5 ரூபாய்க்கு இண்டர்நெட் கார்டு வாங்கி லேப்டாப்பில் போட்டு எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்க்கத் தொடங்கிக் கடைசியில் காஞ்சிபுரம் மாணவன் போல சீரழிவில் ‘சாதனையாளனாக’ மாறிவிடுகிறான். இப்படி மக்களை, மாணவர்களைக் கெடுத்து சீரழித்து, அதிலும் பணம் பார்க்கும் அயோக்கிய பேர்வழிகளான முதலாளிகள்தானே; இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசுதானே காரணம். உண்மை இப்படி இருக்கும் போது அரசு எப்படி மக்களுக்காக இருக்க முடியும்?
சாராய போதையும், ஆபாச படங்களும் மனிதனை இயல்பு நிலையில் வைத்திருப்பதில்லை. எந்த நேரமும் சீரழிந்த சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. எந்த அநியாயத்தையும் கண்டும் கோபம் கொள்ளாத மழுங்கிய நிலைக்குத் தள்ளுகின்றன. படிக்கும் படிப்பு முதல் குடிக்கும் தண்ணீர் வரை காசாகி விட்டதைக் கண்டோ, உரிமைகள் பறிக்கப் படுவதைக் கண்டோ, வெளிநாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டைக் கொள்ளையடிப்பது கண்டோ கோபமோ, ஆவேசமோ கொள்ளாமல் தடுக்கின்றன. இதைத்தான் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், நமது ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள்.
இதை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? சூடு, சொரணை இல்லாத சதைப் பிண்டங்களாக நமது பிள்ளைகளும், சகோதரர்களும் மாறுவதை அனுமதிக்க முடியுமா? இளம் வயதிலேயே பாலியல் குற்றவாளியாக நமது மகன் மாறுவதை அனுமதிக்க முடியுமா? 3 வயது, 4 வயது குழந்தைகளுடன் நமது சகோதரிகள் தாலியறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? முடியாது என்றால் என்ன செய்வது?
தீர்வு தான் என்ன?
அரசாங்கம் என்ன செய்யும்? குடிப்பவர்கள், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு என்று வசனம் பேசுவது நியாயமா? சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்? இந்தியக் குற்றவியல் சட்டமே என்ன சொல்கிறது? தப்பு செய்யத் தூண்டுபவன்தான் முதல் குற்றவாளி, அப்படி என்றால் அந்த சட்டம் அரசுக்குப் பொருந்தாதா? விற்பவனை உதைத்தால் குடிப்பவன் அடங்குவான் என்று அயோக்கியத் தனத்தைத் தோலுரிப்பதோடு, மக்களுக்கு உதவாத இந்த அரசை அப்புறப்படுத்துவோம். இதற்கு மக்களுக்கான அதிகார கமிட்டிகளைக் கட்டியமைப்போம். மக்களைக் கொல்லும் சாராயத்தையும், மக்களைச் சிதைக்கும் ஆபாசச் சீரழிவுகளையும் ஒழித்துக்கட்டுவோம்.
உழைக்கும் பெண்களே!
- குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும்.
லட்சக்கணக்கான மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.
எதிர்கால சந்ததிகள் குடிவெறிக்கு பலியாவதை தடுக்க வேண்டும்.
- வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் இல்லை!
குடிகெடுக்கும் சாராயக் கடைகளுக்கோ பஞ்சம் இல்லை!
அறிவைப் புகட்டும் கல்வி தனியார்மயம்!
புத்தியைக் கெடுக்கும் சாராயம் அரசுமயம்!
- ஆட்சியைப் பிடிப்பதில் ‘ஜெ’வும் ‘கருணா’வும் பங்காளிகள்!
ஊத்திக்கொடுத்து உருவிக்கொள்ளும் நம் உழைப்புப் பணத்தை சாராயக் கம்பெனி முதலாளிகளுக்கும் இலவசங்களுக்கும் படையல் வைப்பதில் கூட்டாளிகள்!
- குடிகெடுக்கும் மக்கள் விரோத பாசிச ‘ஜெ’ அரசை முறியடிப்போம்!
தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை இழுத்து மூட போராடுவோம்!
பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல்,
சென்னை-95
தொடர்பு எண் : 98416584457
புதிய ஜனநாயகம் படியுங்கள் புதிய கலாச்சாரம்
பெண்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் நியாயமானதே. பாராட்டுக்கள்.
மிகத் தேவையான முயற்ச்சி! இதைத் தமிழகம் முழுவதும் செய்தால் நல்ல விழிப்புணர்வு ஏற்படும்; மாற்றம் நிச்சயம் ஏற்படும். அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ஊழல் ‘போதை’ உச்சத்தில் தமிழகத்தின் “டாஸ்மாக்”!!
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-s-corrupt-cash-cow-tasmac-how-politics-liquor-came-to-form-potent-mix-218805.html
************************
அரசே மதுபானக் கடைகளை நடத்தும் என்று அறிவிக்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் 2002ல் மிடாஸ் மதுபான தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட போது யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் மீண்டும் 20% மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
பின்னர் சசிகலா சேர்த்துக் கொள்ளப்பட்டது போது விஜய் மல்லையாவின் யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் இருந்து மதுபானம் கொள்முதல் செய்வது குறைந்து போனது. இது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு கடும் பின்னடைவைத் தந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மதுபானங்களை அதிக அளவு அரசுக்கு கொடுத்து வந்த மோகன் பிரீவெரீஸ் நிறுவனம், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டது. 2011-ல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது இந்த நிறுவன கைதூக்கிவிடப்பட்டது, 2010 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கலைஞர் டிவி எம்.டியாக இருந்த சரத்குமார் டிரோபிகல் பிரிவெரீஸ் என்ற மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு உரிமம் பெற்றார். இதேபோல் தி.மு.க. ஆட்சியில் எஸ்.என்.ஜே., ஏ.எம். டிஸ்டில்லரீஸ் நிறுவனங்கள் உரிமம் பெற்றன. இதில் எஸ்.என்.ஜே. உரிமையாளர் ஜெயமுருகன், கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-s-corrupt-cash-cow-tasmac-how-politics-liquor-came-to-form-potent-mix-218805.html